Thursday, March 31, 2011

குமரி மாவட்டம் - 2011 - தேர்தல் களநிலை


மானமுள்ள காங்கிரசுகாரர் குமரி தமிழகத்துடன் இணையப் போராடிய ஐயா. மார்சல் நேசமணி. நன்றி: படம்: http://www.thengapattanam.net

குமரி மாவட்டம்: மொத்தம் 6 தொகுதிகள்.

1.கிள்ளியூர் 2.விளவன் கோடு 3.பத்மனாபபுரம் 4.குளச்சல் 5.நாகர்கோவில்
6.கன்னியாகுமரி.

குமரி மாவட்டத்தில் தொகுதி மறுசீரமைப்பில் திருவெட்டாறு (கம்யுனிசுடு கோட்டை, காங்கிரசு வாக்குவங்கியுள்ள இடம்) தொகுதி நீக்கப்பட்டுள்ளது.

1. கிள்ளியூர்:


சான் சேக்கப்


ஆர். சார்ச்

காங்கிரசு : சான் சேக்கப்
அதிமுக : ஆர். சார்ச்

காங்கிரசு சிட்டிங் எம்.எல்.ஏ, 'கூட்டணி ஆட்சி என்பதை முதலில் அறிவித்துவிட்டு தொகுதி பங்கீடு குறித்துப் பேசலாம்' என காங்கிரசுக்கு யோசனை சொன்னவர் சான் சேக்கப். காங்கிரசு மிகப்பலமாக உள்ள தொகுதி இது. இளைஞர் காங்கிரசு தேர்தலின் போது (கன்னியாகுமரி(கி) மாவட்டத்தலைவராக இருந்த) ஜெயபாலின் மருமகனை எதிர்த்து இவர் போட்டி வேட்பாளரை நிறுத்தி ஏற்படுத்திய குழப்பம் இவர் ஆதரிக்கும் வாசன் ஆதரவாளர்களிடமே கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. போனமுறை சித்தமருத்துவர் குமாரதாசு அதிமுக சார்பில் இல்லாமல், காங்கிரசு சார்பில் நின்றிருந்தால் நிச்சயம் வெற்றி பெற்று இருப்பார். இப்போது காங்கிரசில் அடைக்கலம் ஆகி இருக்கும் குமாரதாசு, சான் சேக்கப்பிற்கு எதிராக போட்டி வேட்பாளராக நிறுத்தப்படுவார். அப்படி நடந்தால் காங்கிரசு ஓட்டுக்கள் நிச்சயம் பிரியும். இவர் மட்டுமல்லாது இளைஞர் காங்கிரசின் கோபமும் சான் சேக்கபிற்கு தலைவலியாகவே இருக்கும்.

கிள்ளியூர் ஒ.செ. சார்ச் இங்கு நிற்கிறார். அதிமுகவிற்கு இங்கு வாக்குவங்கி மிக, மிகக் குறைவு! காங்கிரசின் சண்டைகள் மட்டுமே இவருக்கு சாதகமானது. தற்போதைய நிலவரப்படி களம் சான் சேக்கப்பிற்கு சாதகம்.


2. விளவன் கோடு:


லீமாரோசு


விசய தரணி


காங்கிரசு : விசய தரணி
கம்யூனிசுடு(மா) : லீமாரோசு

இரு பெண்கள் மோதும் தொகுதி விளவங்கோடு. விசயதரணி டெல்லி உயர்நீதி மனறத்தில் வழக்கறிங்கராக பணிபுரிபவர். கம்யூனிசுடு, காங்கிரசு கூட்டணியில் இருந்தபோது கம்யூனிசுடு வென்றது. இந்திய அளவில் பதவி வகித்தாலும், தொகுதிக்கு புதுமுகம் இந்த சட்டத்தரணி, விசய தரணி. மயிலாடி சேந்தன்புதூரில் பிறந்தவர், முதன்முறை களம் காண்கிறார். டெல்லியிடம் இருந்து, மணிசங்கரின் ஆதரவில், நேரடியாக போட்டியிடும் வாய்ப்பை பெற்றுவந்துவிட்டதால், சியாம் கிறிசுதுகுமாரை இங்கு போட்டி வேட்பளாராக களமிறக்குகிறது காங்கிரசு.

மார்க்சிய பொதுவுடமை கட்சி சிட்டிங் சான் சோசப்பிற்கு சீட்டில்ல!. அதனால் இவர் போட்டி வேட்பாளராக விண்ணப்பிக்க, கட்சியவிட்டே நீக்கிபுடிச்சு கட்டுப்பாட்டுக்கு பேர் போன மார்க்சிய கம்யூனிசுட்டு! திருவெட்டாரு தொகுதியில் கடந்தமுறை நின்ற லீமாரோசு விளவன்கோட்டில் நிற்கிறார். அப்போது அவர் புதுமுகம். இப்போது தொகுதி நன்கறிந்த முகமாகிவிட்டார் லீமாரோசு. சான் சோசப் தனித்து நின்றால் இவருக்கு வாக்குகள் பிரியும் நிலையுள்ளது. காங்கிரசு உட்பூசல் லீமாரோசை இங்கு உட்காரவைக்கும்.

3. பத்மனாபபுரம்:


எசு.ஆசுடின்


புஷ்பலீலா ஆல்பன்

திமுக: டாக்டர் புஷ்பலீலா ஆல்பன்
தேமுதிக: எசு.ஆசுடின்

சிட்டிங் தியோடர் ரெசினால்டுக்கு சீட்டில்லை. 1996ல் திருவெட்டாறில் திமுக சார்பாக வென்ற மறைந்த ஆல்பன் அவர்களின் மனைவி புஸ்பலீலா பத்மனாபபுரம் தொகுதியில் நிற்கிறார். இவர் திமுக துணை மாவட்டப் பொதுச்செயலாலருங்கூட.

எசு.ஆசுடின், அதிமுகவில் இருந்து பின்னர் எம்.சி.ஆர்.அதிமுக கட்சிக்கு சென்று, மீண்டும் அதிமுகவில் இணைந்து பின் நாகர்கோவிலில் சுயேட்டையாகவே நின்று ஒருமுறை வென்று, கடந்த சட்டமன்றத் தேர்தலில் சுயேட்சையாக நின்று தோற்று, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் (நாகர்கோவில்) தேமுதிக சார்பாக நின்று 68,472 வாக்குகள் பெற்றார். நாகர்கோவில் தொகுதியை இவருக்காக பெற்றுருக்கலாம் தேமுதிக. பாசக-பொன் ராதாகிருட்டினன் அங்கு நிற்பதைப் பார்த்து பயந்துவிட்டார்களோ?

தேமுதிக கடந்த தேர்தலில் இங்கு பெற்ற வாக்குகள் 3,360. அதிமுக 20,546 இந்த இருகட்சிகளின் வாக்கையும் கூட்டினால் உச்சாணியில் ஏறிவிடும் அதிமுக என்று கணித்தார்களே சிலர், இங்கு வெறும் 23,906 வாக்குகள் வருகிறது. கம்யூனிசுடு வாக்கு இருக்கிறதே அதிமுகவிற்கு என்றால், காங்கிரசு வாக்கு வங்கியுடன் திமுக சேர்ந்து பெற்ற வாக்குகள் 51612. ஆசுடின் அவர்களின் தனிப்பட்ட செல்வாக்கில் வென்றால்தான் உண்டு. பாசக ஓட்டைப்பிரிக்காமல் இருந்திருந்தால் இன்னும் கூடுதல் ஓட்டுகள் பெற்றிருக்கலாம். இந்தமுறையும் ஓட்டைப்பிரிக்க சுசித் என்பவரை நிறுத்துகிறது பாசக. தனிப்பட்ட செல்வாக்கு இங்கு ஆசுடினை அமர வைக்கலாம்.

4. குளச்சல்:

காங்கிரசு: செ.செ.பிரின்சு
அதிமுக: பி. லாரன்ஸ்

ராபர்ட் புரூசு அறிவிக்கப்பட்டு, இளைஞர் காங்கிரசு தங்கபாலுவிற்கு எதிராக நடத்திய கடும் போராட்டத்தால் தற்போது பிரின்சு வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். குளச்சலில் ஜெயபாலின் உறவினர்கள் யாரேனும் நிற்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. உட்கட்சி பூசலில் இங்கும் அசோகன் சாலமன் சுயேட்சையாக நிறுத்தப்படலாம். இருப்பினும் இப்போது வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளதால், இவரை வெல்ல வைக்க காங்கிரசு எல்லா வேலையையும் செய்யும்.

பி. லாரன்ஸ் புதுமுகம் நிற்கிறார். குளச்சலில் மீன்பிடி துறைமுகம் வருது என அடிக்கல் நாட்டினார்கள் இதோ வந்துவிட்டது என போக்குகாட்டிக்கொண்டிருந்தனர் தேர்தல் வந்துவிட்டது! போனமுறை இத்தொகுதியில் போட்டியிட்டு தோற்ற பச்சைமால் இம்முறை கன்னியாகுமரியில் நிற்கிறார். அதிமுக மாசெவே தோற்ற தொகுதி. பிரின்சுக்கு சாதகமாக தற்போதைய களநிலையுள்ளது.

5. நாகர்கோவில்


ஆர்.மகேசு


திமுக : ஆர்.மகேசு
அதிமுக: நாஞ்சில் ஏ. முருகேசன்

சிட்டிங் ஏ.ராசன் இல்லாமல் வழக்கறிஞர் ஆர்.மகேசு நிறுத்தப்பட்டுள்ளார். நாடார் வாக்குவங்கி வெற்றியைத் தீர்மானிக்கும் தொகுதி. கிருத்துவமக்கள் வாக்குவங்கியுள்ள இத்தொகுதியில் பரபரப்பாக தன் பரப்புரையையும் 'ஆயாரிடம் ஆசி' என ஓட்டை அள்ள ஆயத்தமும் செய்துவருகிறார் மகேசு. சிட்டிங் ராசன் தொகுதிக்கு செய்தவை இவருக்கு மிக சாதகம்.

கடந்த முறை மதிமுகவசம் இருந்த இத்தொகுதியில் இம்முறை அதிமுக நாஞ்சில் ஏ. முருகேசன் நிற்கிறார். மிகத்தீவிர வாக்குவேட்டையில் இருக்கிறார் முருகேசன். ஆனால் பாசக பொன் இராதாகிருட்டிணன் அதிமுக ஓட்டைப்பிரிக்க இத்தொகுதியில் நிற்கிறார். அதிமுகவிற்கு இங்கு மூன்றாவது இடம்தான் போட்டி திமுகவிற்கும் இராதாகிருட்டிண்னுக்கும்தான். அதிமுகவினரின் உற்சாக உழைப்பு, முருகேசனுக்கு மக்கள் வரவேற்பு அனைத்தும் வெகுவாக இருந்தாலும் இங்கு திமுகவினருக்கே களநிலை சாதமாக உள்ளது. ஆர்.மகேசு இங்கு வெல்ல வாய்ப்பதிகம்.6.கன்னியாகுமரி:


என்.சுரேசுராசன்


பச்சைமால்திமுக: என்.சுரேசுராசன்
அதிமுக: பச்சைமால்

அமைச்சர் தொகுதி. எப்போதும் தளவாய் சுந்தரமும் சுரேசுராசனும் மோதுவார்கள். ஆனால் கடந்தமுறை குளச்சலில் போட்டியிட்டுத் தோற்ற பச்சைமால் அதிமுகவில் நிற்கிறார். இரு முறை இங்கு வென்ற‌ சுரேசுராசன், இம்முறை வென்றால் மீண்டும் அமைச்சராகலாம். அழகிரியின் மகள் கயலால் பிரச்சனை, வருமானதிற்கு அதிகமாக இவர் சொத்து சேர்த்ததால் பிரச்சனை, தொகுதி மாறி நிற்பார் என என்னன்னமோ பத்திரிக்கைகள் எழுதின. அனைத்தையும் மீறி நிற்கிறார் இங்கு சுரேசுராசன்.

பாசக சார்பில் ஆர்.காந்தி நிறுத்தப்பட்டுள்ளார். இவர் அதிமுக ஓட்டை நன்றாக பிரிப்பார். பச்சைமால் தொகுதிமாறி நிற்பதால் வெற்றிவாய்ப்பு குறைவுதான். தளவாயின் ஆதரவாளர்களின் வாட்டமும் இவருக்கு மைனசு. தொகுதி மறுசீரமைப்பில் அதிமுகவிற்கே இத்தொகுதி வெல்ல வய்ப்புள்ள தொகுதி. தளவாய்சுந்தரம் நின்றிருந்தால் இத்தொகுதியின் வெற்றி உறுதி அதிமுகவிற்கு. 1 இடம் மாவட்டத்தில் கிடைத்திருக்கும். தற்போது காற்று சுரேசுராசன் பக்கம் அடிக்கிறது.

திமுக குமரியில் வழுவாக காலூன்றிவிட்டது. இத்தேர்தலில் அது எதிரொலிக்கும். இலவசத்திட்டங்கள்(மதி மயக்கும் விடம்!) பல முழுமையாக இம்மாவட்டதிற்கு போய் சேர்ந்திருக்கிறது. ஆறு தொகுதியின் எம்.எல்.ஏக்கள் திமுக மற்றும் அதன் கூட்டணியில் உள்ளோர். வரலாறுகாணத வகையில் எம்.பியும் திமுக எம்.பி. மாநாடெல்லாம் நடத்தி குமரியை குளிர‌வைத்தது திமுக.

தூத்துகுடியில் அதிமுகவில் பரவிய கட்சித்தாவல் என்ற மர்மக்காய்ச்சல், கன்னியாகுமரியில் மக்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டபோது ஆதரவாய் அதிமுகவை ஆர்ப்பாட்டம் செய்ய வைத்தது. உலக அதிசயமாய் தொடர்ந்து 2 வாரத்திற்குள் இருமுறை இங்கு வந்தார் செயலலிதா. ஆனால் என்ன பயன்? தளவாய் சுந்தரதிற்கு சீட் இல்ல. மா.செ பச்சைமால் இருக்கும்போது அமைப்பு செயலாலர், கடந்த தேர்தலில் தோற்ற தளவாய்க்கு கொடுக்கமுடியாதுதான். ஆனால் பச்சைமாலும் தோற்றவர்தானே?. பிற அதிமுக வேட்பாளர்களும் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

குமரிமாவட்டம் பொதுவாக காங்கிரசு, கம்யூனிசுடுகளின் கோட்டை! ஆனால் காங்கிரசின்
கோச்டி அரசியல் இம்மாவட்டத்தில் அதிகம். தங்கபாலுவை தலைவராக இம்மாவட்ட காங்கிரசு நிர்வாகிகள் நினைத்ததேயில்லை. அதேபோல தங்கபாலுவும் அதிகமுறை இம்மாவட்ட நிர்வாகிகளின் மேல் ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்கிறார்.
குமரி மாவட்டக் காங்கிரசுகாரர்களுக்கு வாசன்தான் தலைவர், எவர் தமிழ்நாடு காங்கிரசு தலைவராக இருந்தாலும். இளைஞர் காங்கிரசு தேர்தலின் போது மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரித்தொகுதி பறிபோனதால் இங்கு காங்கிரசார் ஏற்படுத்திய குழப்பங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நினைத்துப்பார்த்தால் கரைவேட்டிகளை மிஞ்சிவிட்டது காங்கிரசு!. கடந்த 5 வருடங்களில், காங்கிரசுகாரர்கள் மக்கள் பிரச்சனைக்காக போராட்டம் செய்ததைவிட, சத்தியமூர்த்திபவன் முன்னால்தான் அதிக ஆர்ப்பாட்டங்களைச் செய்தார்கள்.. இப்போதும் வேட்பாளர் தேர்வைக் கண்டித்து மாணவர் காங்கிரசு, இளைஞர் காங்கிரசில் உள்ளோர் தங்கபாலுவின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர் நாகர்கோவிலில். கைராட்டையைக் காட்டி நூல் திரிக்கும் காங்கிரசுக்கு நல்ல வழித்தோன்றல்கள்!! இம்முறை மார்க்சிய பொதுவுடமை அதிமுக கூட்டணியில் இருப்பதும், காங்கிரசு 5 ஆண்டுகள் கோச்டி அரசியலால் செய்த ஆர்ப்பாட்டங்களும், தொடர்ந்த பரப்புரைகளும் மாற்றத்தை தரலாம். காங்கிரசு வெல்லும் தொகுதி என இங்கு எழுதியிருப்பது களநிலைகொண்டே. ஆனால் காங்கிரசு தோற்கவேண்டும்!. பக்கத்து ஊர்ல பொதுவுடமை ஆட்சி இம்மாவட்டதில் கம்யுனிச கட்சி வேட்பாளர் போட்டியிடும் தொகுதியில் எதிரொலிக்கும். காங்கிரசு வெல்லும் வாய்ப்புள்ள தொகுதி என‌ மக்கள்மேல் அக்கரையுள்ளோர் அதிக பரப்புரைசெய்யவே இங்கு சொல்லப்பட்டுள்ளது.

போட்டியிடும் இடங்கள்:
திமுக கூட்டணி
காங்கிரசு 3 இடம்
திமுக 3 இடம்

அதிமுக கூட்டணி
அதிமுக 4 இடம்
பொதுவுடமை (மா) 1 இடம்
தேமுதிக 1 இடம்

திமுக கூட்டணி 4 இடமும், அதிமுக கூட்டணி 2 இடமும் வெல்லவே இம்மாவட்டத்தில் வாய்ப்பிருக்கிறது. காங்கிரசை மக்கள் ஒருகை பார்த்தால். அதிமுக கூட்டணி அதிக இடங்களை வெல்லலாம்.