Tuesday, February 22, 2011

கீழிழுக்கும் நண்டுகள் - 3

முந்தைய பதிவுகள் பகுதி 1 பகுதி 2

இந்தியாவில் சீனாக்காரன் ஊடுறுவியபோது, தன் சொந்த ஊரு காசுமீருக்கு 'உடம்பு சரியில்ல!'ன்னு மாசக்கணக்குல ஓய்வெடுக்கப்போன‌ நேரு, வெள்ளைக்காரனால் பிறநாடுகளுக்கு தொழிலாளர்களாக அழைத்துச் செல்லப்பட்ட மக்களை திருப்பி ஏற்றுக்கொள்ளாமல் தமிழர்களை அந்தரத்தில் தொங்கவிட்டதால் வந்த இலங்கை குடியுரிமைசட்டம்(1948-1949 -சேனநாயக) பல லட்சம் பேரை நாட்டற்றவர்கள் ஆக்கியது. நேரு நம்மக்களின் மதிப்பை அன்று காப்பாற்றியிருந்தால் (பாகிசுதானில் இருந்து வந்த‌ இந்துக்களை உடனே ஏற்றுக்கொண்ட மாதிரி) ஒருவேளை தலைநிமிர்வுடன் தமிழர்கள் இருந்திருக்கலாம். இந்தியத்தமிழர்களின் குடியுரிமை பற்றி பொன்னம்பலத்துடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால், இலங்கை தமிழ் காங்கிரசில் இருந்து பிரிந்து தந்தை செல்வா தமிழரசு கட்சியை 1950ல் துவக்குகிறார். அங்காங்கே ஈழத்தமிழர்களுக்கெதிரான வன்முறைகளும் தலைதூக்க ஆரம்பித்தன. செல்வாவும் பண்டாரநாயகவும் செய்திருந்த ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டு, 1956ல் (பண்டாரநாயக) சிங்களம் மட்டும் ஆட்சிமொழி என சட்டம் செய்தனர். (தமிழகத்தில், இதற்கு முன்பு ராச‌கோபாலச்சாரியின் குலக்கல்வித்திட்டம் 1954 லேயே வந்தென்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்!). இதை எதிர்த்து தமிழரசுக் கட்சியினர் 1956, ஜூன் 5 ஆம் நாள் கொழும்பு, இலங்கை நாடாளுமன்றத்தின் முன் அமைதியான முறையில் போராடத் தொடங்கினர். ஈழத்தமிழருக்கெதிரான கலவரம் (கல்லோயாக் கலவரம்) துவங்கியது. தொடர்ந்து 5 நாட்கள் 150 திற்கும் மேலான‌ ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டனர். 1958 கலவரத்தில் 300 பேர் கொல்லப்பட்டனர். பெரும்பான்மையோர் தமிழர்கள். 1958 சூன் மாதம் நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டும் கலவரம் அடங்கவில்லை.

1959ல் பண்டாரநாயக கொல்லப்பட, 1960ல் சிறிமா பதவிக்கு வந்தவுடன் தன் கணவனின் சிங்களம் ஆட்சிமொழி சட்டத்தை நடைமுறைபடுத்துவதில் தீவீரம் காட்டினார். 1961ல் தமிழரசு கட்சி, இதை எதிர்த்து சத்தியாகிரகப் போராட்டத்தை ஈழத்தமிழ் பகுதிகளில் முன்னெடுத்தது. அரசு அலுவல‌கங்கள் முன் நின்று அமைதிப்போராட்டம் செய்தனர். கண்மூடித்தனமான தாக்குதலில் ஒரு மாணவர் கொல்லப்பட்டார். அதுவரை அமைதியாக போராடிக் கொண்டிருந்தவர்கள் சட்டமறுப்பு போராட்டம் செய்தனர். இதனால் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு, தமிழ் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். தமிழ்பள்ளிகள் நாட்டுமையாக்கப்பட்டது. சிங்களப் பகுதிகளில் இருந்த பல பள்ளிகள் மூடப்பட்டன. இந்தக்கால கட்டத்தில் இந்திய மலையக தமிழருக்கும், ஈழத் தமிழருக்குமிடையே திட்டமிட்ட பகைமூட்டல்கள் உண்டாக்கப்பட்டன. 1964ல் ஐந்து இலக்கம்பேர் சிறிமா-சாத்திரி ஒப்பந்ததத்தால் அகதிகளாய் ஓடிவந்தனர். வடமாகாணத்தில் சிங்கள இராணுவ முகாம்கள், இந்தியாவில் இருந்துவரும் தமிழர்கள் கள்ளத்தனமாக குடியேறுவதைத் தவிர்க்க/ கண்காணிக்க எனக்கூறி அமைக்கப்பட்டன. இராணுவ ஆக்கிரமிப்பு முதன்முதலில் ஈழத்தமிழ் பகுதிகளில் நிகழ்ந்தது. இதைச் செய்தது சிங்கள பௌத்த தீவிரவாதி, சிறிமாவின் அமைச்சரைவையில் நிரந்தர பாதுகாப்பு மற்றும் வெளியுறவு துறைக்கு பொருப்பேற்றிருந்த‌ என்.கியூ.டயசு.

சாத்திரிக்கு அடுத்து இந்தியாவில் வந்தார் அன்னை இந்திரா, ஆ,ஊன்னா இராணுவத்தை பயன்படுத்திய அப்பாவுக்கு தப்பாத பெண்ணாக. நேருவும், சாத்திரியும் சீனாவோடும், பாகிஸ்தானோடும் மல்லுக்கட்டியே மறைந்தனர். ஈழப்போராட்டத்தின் இந்திய காவல் தெய்வமாக மேடைகள்தோறும் வருணிக்கப்படும் இந்திரா காந்தி அவர்களின் அன்றைய அரசியல் சூழ்நிலையையும், அவரது வெளியுறவுகொள்கையும் ஒருமுறை திரும்பிப்பார்க்கத்தான் வேண்டும். இந்திராகந்தி முதலில் 1966ல் இருந்து 1977 வரை ஆகிய பன்னிரெண்டு வருடங்களில், முதல் ஐந்தாண்டுகள், இலங்கையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத நிலையிலும் உலகிலேயே முதல் பெண் பிரதமர் என்று சிங்களவர்களால் கொண்டாடப்பட்ட, 'weeping widow' சிறிமாவோ பதவி போயி டட்லி ஆண்டுகொண்டிருந்தார். ஏற்கனவே குடியுரிமை விதயத்தில் தமிழருக்கு எதிராக நடந்துகொண்ட இவர் தமிழரசுக்கட்சியின் ஆதரவுடன் ஆட்சியில் இருந்தாலும் தந்தை செல்வாவிற்கு கொடுத்த ஒப்பந்த வாக்குறுதிப்படி தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க‌ மாவட்டசபைகளை அமைக்கமுயலவில்லை. சே.ஆர்.செயவர்த்தனே போன்றவர்கள் இலங்கையின் தலமைப்பதவிக்கு ஆசைப்பட்டு ஒப்பந்ததிற்கு எதிர்ப்புத்தெரிவிக்க‌, இவர் பதவிவிலகுவது தவிர்க்கப்பட்டு தமிழரசு கட்சி தொடர்ந்து ஆதரவை நல்கியது, ஆனால் தமிழரசுகட்சியின் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவிதுறந்தார். நேரு இறந்தவுடன், சாத்திரியின் அமைச்சரவையில் தகவல் தொழிற்நுட்ப அமைச்சராக இருந்த இந்திரா கந்தி, காங்கிரசில் பலரின் எதிர்புடன், காமராசரின் ஆதரவில் பதவிக்கு வந்தார். (இலங்கையில் தமிழரசுகட்சி (பிற 6 கட்சிகளுடன்) ஆதரவில் ஆட்சி, இந்தியாவில் காமராசரால் இந்திராவின் ஆட்சி).பிரதமராக பதவியேற்ற முதல் வருடத்திலேயே அமெரிக்காவிற்கும், ரசியாவிற்கும் சென்றார் இந்திரா. அதுவரை எந்த வல்லரசுடன் சேர்வது எனத் தள்ளாடிக்கொண்டிருந்த இந்தியா, இரசிய ஆதரவு என்ற தெளிவான நிலைப்பாட்டை எடுத்தது. உள்நாட்டில் 1967 ல் நக்சல்பாரி கிராமத்தில் எழுச்சிப்போராட்டம் நடந்தது. நேரு தனக்கும் அணு ஆயுதங்களுக்கும் ஆகாவே ஆகாது என அணு ஆயுத எதிர்ப்பு பிரச்சாரம் பண்ணிக்கொண்டே அணு ஆராய்ச்சிக்கு 1948 லேயே வழிவகுத்தார். நேரு இருக்கும்போதே 1954 CIRUS (Canada India Research U.ஸ்.) அணு உலை ஆராய்சி ஆரம்பிக்கப்பட்டது. இதனால் பாகிசுதானிலும் அணு ஆரய்ச்சி மையம் ஏற்படுத்தப்பட்டது. இந்தியாவின் முதல் அணுகுண்டு 1967 ன் கடைசியில் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வடிவமைக்கப்பட்டது. 1969 ல் இந்தியாவின் முதல் அணுவாயுத சோதனை இரசியாவில் நிகழ்த்தப்பட்டது. இதே காலகட்டத்தில் இந்திராவிற்கு காங்கிரசு கட்சியில் பலத்த எதிர்ப்பு ஏற்பட்டு, கட்சி இரண்டாக‌ உடைந்தது. மொராசி தேசாய் சனதா கட்சியின் தலைவரானார். 1970ல் இலங்கையில் சிறிமா மீண்டும் ஆட்சிக்குவந்தார்.

1970ல் பாகிசுதானில் மேற்கு மற்றும் கிழக்கு பாகிசுதானுக்கு நிதி ஒதுக்கீட்டில் பெருமளவு வேறுபாடு இருந்ததால் பிரச்சனை வெடித்தது. 1970 ல் நடைபெற்ற தேர்தலில், அவாமி லீக் கட்சி பெரும்பான்மை பெற்றிருந்தும் ஆட்சியமைக்க பாகிசுதான் விடவில்லை. இந்தியாவின் ஒரு மாநிலம் போல் அமைந்துள்ள கிழக்குப்பாகிசுதானை, இந்திய உளவுத்துறையான ரா பாகிசுதானிடம் இருந்து பிரிக்கும் வேலையில் இறங்கியது. இதனால் கிழக்குப் பாகிசுதானில் முக்தி பாகினி என்ற இராணுவ இயக்கம் உண்டாகி, அதற்கு ரா இராணுவப்பயிற்சி அளித்தது. 1971ல் உள்நாட்டுப் போர் ஏற்பட்டது. இப்போருக்கு இந்தியா கிழக்குபாகிசுதான் படைகளுக்கு தனது முழு ஆதரவை கொடுத்தது, இந்தியாவும், இரசியாவும் நிதி உதவி செய்தன. மேற்கு பாகிசுதானுக்கு அமெரிக்காவும், சீனாவும் உதவின. மக்கள் அகதிகளாக இந்தியாவிற்கு வந்தனர். இவர்கள் இந்தியாவின் (வட கிழக்குப்பகுதிகள்) நாகலாந்து, மணிப்பூர், அசாம், அருணாச்சலபிரதேசம் பகுதிகளில் குடியமர்த்தப்பட்டனர். 1971ல் பாகிசுதான் படைகள் இந்தியாவிற்குள் ஊடுருவ, ராவினால் முன்பே தெளிவாகத் திட்டமிடப்பட்டதால், இந்திய இராணுவம் முக்தி பாகினி படைகளோடு சேர்ந்து போரிட்டு வென்றது. பாகிசுதான் படைகள் சரணடைந்தன. இதற்கு ஒரு மாததிற்குமுன் அமெரிக்காவில் இந்தியா பாகிசுதான் மீது படையெடுக்காது என அமெரிக்க அதிபர் நிக்சனிடம் கூறியிருந்தார் இந்திரா!. இந்தியப்படைகளைப் பின்வாங்கி போர் நிறுத்தம் செய்ய‌ அமெரிக்கா இந்தியகடலில் கடற்படையை அனுப்பும் என அச்சுருத்தினார் நிக்சன். எப்படியோ இந்தியாவும், இரசியாவும் அங்கிகரிக்க வங்கதேசம் பிறந்தது. அமெரிக்காவும், சீனா, பிரிட்டன் போன்ற நாடுகள் வங்கதேசத்தை அப்போது ஆதரிக்கவில்லை. இதே ஆண்டு இமாச்சலப் பிரதேசம் இந்தியவின் மாநிலமாகியது.

இப்போது எங்கே போனதோ தெரியவில்லை ஆனால் அப்போது,

இந்தியக்கடற்படை கிழக்கில்

இந்தியக்கடற்படை மேற்கில்

பகிசுதான் படை சரண்


இதேநேரம் இலங்கையில் (1971ல்) தமிழ்மாணவர் தரப்படுத்தல் சட்டம்போட்டு, வழக்கம்போல் தமிழர்களை துன்புறுத்திக்கொண்டிருந்தது சிறிமா. சீனாவோடு இலங்கைக்கு உறவு பன்னெடுங்காலமாக இருந்தாலும், இலங்கை சுதந்திரத்திற்கு பிறகு 1951ல் ஏற்பட்ட ரப்பர்-அரிசி உடன்படிக்கையும் அதற்கு பின் பண்டாரநாயக அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி பல்வேறு தளங்களில் சீனாவுடன் நட்புடன் இருந்ததும், சீனா-இலங்கை உறவை வலுப்படுத்தின. ஐக்கியநாடுகள் சபையில் சீனா குறிப்பிட்ட இடம்பெற இலங்கை முக்கியகாரணம் என சூஎன்லாய் குறிப்பிட்டார். சிறிமா 2 தடவ(1963&1972) சீனாவுக்கும், சூஎன்லாய் இரண்டுதடவ இலங்கைக்கும் (1957 & 1964) சென்று வந்தார்கள். இந்திய கடலை அமைதி பகுதியாக்க வேண்டும் எனப் பேசிக்கொண்டார்கள். (இப்போது இருவரில் எவன் எம் மீனவர்களை சுடுகிறான் எனத்தெரியவில்லை!). 1970-1973 ல் சீனா, பண்டாரநாயக நினைவு பன்னாட்டு மாநாட்டு கூடம் அமைக்க‌ (BMICH) 35 மில்லியன் நிதியளித்தது. சிறிமா பண்டாரநாயக நினைவு அருங்காட்சி மையம் (SBMEC) அமைக்க நிதிகொடுத்தது. பின்பு செயவர்த்தனே அதிபராக இருந்தபோது உயர்நீதி மன்ற வளாகம் அமைக்க நிதிகொடுத்தது. சுனாமிநிவாரணம் என சீன கப்பல் இலங்கைக்கு வந்தது. தற்போது எம் மக்களை கொன்றுகுவிக்க உதவி, மீள் கட்டுமான உதவி எனவும் மிகப்பலமான உறவாக சீன-இலங்கை உறவு தொடர்கிறது.

தொடரும்...