Sunday, February 06, 2011

கீழிழுக்கும் நண்டுகள்தமிழ் பெருமை பேசி வந்த ந‌ம் பாட்டன்கள் தெளிந்தது "தமிழனுக்கு வரலாற்றுப் பெருமையெல்லாம் இருக்கு, அதை உணர்ந்தால் இருக்க வேண்டிய, தன்மானம் இருக்கா?" என கேட்ட பெரியாரால். பெரியாரைத் தள்ளி ஒரு அரசியல் அமைப்போ, சமுதாய அமைப்போ தமிழகத்தில் இயங்கினால் அதனால் மக்களுக்கு ஒரு பயனும் இல்லை. 'பெரியார்' என்பது அனைத்து வித ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான‌ஓர் அடையாளம். இதை உணர்ந்து பெரியார் திராவிட கழக மேடைகளில் பேசி வந்த சீமான் அவர்களுக்கு யாரும் இதைபோதிக்கத் தேவையில்லை.

பெரியாருக்குப் பிறகு அப்படியொரு தொடர்ந்தியங்கும் காத்திரமான தலைவன் தமிழ் மண்ணில் தோன்றவேயில்லை. தான் இறப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு கூட தமிழனம் மேம்பட மணிக்கணக்கில் மக்களிடையே பேசிய பெரியாரையும், ஓட்டுக்கட்சிகளின் சுயநலத்தையும் 'திராவிட எதிர்ப்பு' என்று ஒன்றாக வைப்பது இன அழிவு கண்டு துடித்து திமுகவை, காங்கிரசை எதிர்க்க வந்த சீமானையும், தன் கல்யாண மண்டபம் போச்சே என திமுகவை எதிர்க்க வந்த விச‌யகாந்தையும் ஒன்றுபோல் கருதுவதற்கு ஒப்பானது. தம்மிடையே மொழி, பண்பாடு, உடை, உணவு என எந்தவொன்றிலும் ஒன்றுபடாமல் தனியே இயங்கும் தேசிய இனங்களை பொருளாதரத்தை மட்டும் மையமாக கொண்டு கட்டிவைத்து, என்னசெய்தேனும் பொருளீட்டவல்ல முதலாளிகளை காக்கவே 'நாடு' என்னும் அமைப்பு கொண்ட இந்திய தேசியத்துடன் திராவிடத்தை ஒப்பிடலமா என்பதே ஒரு கேள்விதான். ஏனெனில் இந்திய தேசியம் மாதிரி திராவிட நாடுகள் ஒன்றாக கட்டிவைக்கப்படவில்லை. கட்டமுயன்றனர் முந்தைய தலைவர்கள் ஆனால் அது நடக்கவில்லை. அரசியல் தவிர, பொருளாதார அளவில் இந்திய தேசியத்தை காரணம் காட்டித்தான் மற்ற திரவிட இனங்களின் சுரண்டல், உரிமை பறிப்பு ஆகியன தமிழருக்கு நடந்தது, நடக்கிறது. திராவிடம் பேசி ஆட்சிக்குவந்தோரும் இந்தியதேசியத்தின் பெயரால்தான்(இந்திய இறையாண்மை!) நம்மை அடக்குகிறார்கள்.

திராவிட இனங்களுக்கு மட்டும் ஒரே மொழி, பண்பாடு, உடை, உணவா இருக்கிறது என்றால் அடிப்படையில் ஒன்றாகவே இருக்கிறது, கலப்புகளை அனுமதித்ததால் அங்காங்கே சில விதயங்கள் மாறுபட்டிருக்கிறது. திராவிடத்தின் மூத்தகுடியான தமிழ்குடிக்குள் ஊடுறுவிய ஆரியத்தால்தான் தமிழர் ஆட்சி முடிவுக்கு வந்தது. ஆரியம் உருவாக்கிய உட்பகையால் திராவிட இனங்கள் பிரிந்தது. ஒன்றாக இருந்த தமிழ்பேசிய‌திராவிடர்கள் பிற இன திராவிடனாரர்கள். ஆரிய சூழ்ச்சியால் நம்மை ஆண்டார்கள். மன்னர் காலத்திலிருந்து மக்களாட்சிவரை நம்மை ஆண்ட‌பிற இனத்தவருக்கு அணுக்கமாக இருப்பது ஆரியமே. சமுதாய நிலையில் கூட இவர்கள் ஒன்றுபட்டுவிடக்கூடாதென சதி செய்து சாதியால் பிரித்தனர். இன்றும் கூட தமிழ் தவிர்த்த பிற திராவிட இனங்களுக்கே எப்போதும் ஆதரவாக‌ஆரிய இந்திய அரசும், தமிழ்நாட்டில் இருக்கும் ஆரிய சக்திகளும் உள்ளன. இதன்படி பார்த்தால் இப்போது பலர் கூறும் 'கன்னடர்' ஆன‌பெரியாருக்கு ஆரியத்தை எதிர்க்கும் தேவை தமிழர் நிலைகண்டு ஏற்பட்டது. மொழி கலப்பிற்குட்பட்டது. கலப்புமிகின் அழியக்கூடியது. எனவேதான் திராவிட 'இனத்தை' முன் வைத்தார் பெரியார். திராவிடம் என்பது இனம். இந்திய 'தேசியம்' மாதிரி கருதுபொருள் இல்லை!. (ஒரு உதாரணம், ஆயிரம் ஆண்டுகளுக்குப்பிறகு இந்தியாவை சீனாக்காரன் பிடித்து ஒன்றிணைந்த சீனாவாக்கினால் சீன தேசியம் தான் இந்தியாவிற்கு. ஆனால் இனம் வேறுதானே?). எளிதில் அழியக்கூடிய மொழி, தேசியம் ஆகியவற்றை புறந்தள்ளி இனத்தை முன்னிறுத்தினார் பெரியார். ஆரியத்திற்கு மாற்றாக திராவிடம் என்று அவர் சொன்னபோது ஆரிய அடிமைத்தனத்தால் மொழி பேர‌ளவு சிதையாமல் (சிதைந்தயும் ஓரளவு மீட்டுவிட்டோம், இனி இணையத்தமிழில்தான் விழிப்புடன் இருக்கவேண்டும்), பண்பாடு சிதையாமல் திராவிடத்தில் எஞ்சியிருந்த ஒரே இனம் தமிழனம். எனவே பெரியார் கூறிய திராவிட இனமும் தமிழினமே. ஏதோ அண்ணா கூறியதை போகிற போக்கில் பெரியார் ஏற்றுக்கொண்டாற்போல் பெரியாரை சிலர் அவமதிப்பது கண்டனத்திற்குரியது. திராவிடர்கழகத்தின் முக்கிய‌காரணமே தீண்டாமை ஒழிப்புதான். காலகாலமாக, ஏன் சாவதற்கு சில நாள் முன்புகூட தீண்டாமையை ஒழித்துக்கட்டச் சொன்னவரை, ஆதிமக்களுக்காக அவர் குரல்கொடுக்கவில்லை, இடைநிலை உயர்சாதியினருக்கு மட்டும்தான் குரல்கொடுத்தார் என்று சொல்வது எவ்வளவு அயோக்கியத்தனம். அதிகம் தீண்டாமைகொடுமையை அனுபவித்த சாதி எதுவோ அதற்காகத்தானே பேசினார். வரும்காலங்களில் அவர் கூட்டங்களுக்கு வந்தவர்கள் அனைவரும் இடைநிலை உயர்சாதியினர்தான் என்பார்களோ என்னமோ?. மற்றொரு குற்றச்சாட்டு, பெரியார் மண் அல்லாத உத்தரபிரதேசத்தில் மாயாவதி முதல்வராக வரமுடிந்தது என்பது. அந்த மாயாவதியே யாருக்கு சிலை வைக்கமுயன்றார் என்பதும், உத்திர பிரதேச அரசு அலுவலகங்களில் யார் படம் மாட்டியிருந்தது என்பதும் அதற்கு பார்ப்பனர்கள் எப்படி முட்டுக்கட்டை போட்டார்கள் என்பதும் தலித் மக்களுக்கு தெரியாத ஒன்றல்ல. தமிழ் நாட்டில் முதல் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளைஞர் சட்டமன்றத்தில் நுழைந்தது பெரியாரால்தான். இன்று பத்திரிக்கைகள் பெரியாரை சரியாக அறியாத தற்குறிகளையே அரசியல் அரங்கில் முன்நிறுத்துகின்றன. வாழும்வரை விமர்சனதிற்கு அஞ்சா, தன் உழைப்பு முழுவதும் தந்து தமிழ் மக்களின் நலன் ஒன்றை மட்டுமே மையமாககொண்ட அந்தத்தலைவனை தலைகீழாக நின்றாலும் தமிழரிடம் இருந்து பிரித்துவிடமுடியாது. ஆக்கப்பூர்வமான எழுத்தாளர்கள்கூட பெரியாரைப் பற்றி மேலோட்டமாக ஏதாவது எழுதிவிட்டு செல்வதும். பிழைப்புவாத எழுத்தாளர்கள் அவர்கள் கதையில் வரும் நம்பூதிரி கிழவன்கள் மாதிரி ஒன்றும் ஆழமாக அறிந்துகொள்ளாமல் பிதற்றுவதும் ந‌ம்மண்ணில் மட்டுமே நடக்ககூடியவை.

இனத்தில் கலப்பிருக்காதா? எனக் கேட்டால், அது இனவுணர்வு இருக்கும்போது அவ்வளவு எளிதானதல்ல. திட்டமிட்டு, அதிகாரத்தின் மீது மட்டுமே பெரிய அளவில் இனக்கலப்பு நிகழமுடியும். திராவிடத்தை கருதுபொருளாக மாற்ற ஆரியம் காலகாலமாக கொண்டிருந்த கனவை, இன்று தமிழர்களே முன்வந்து நிறைவேற்றுவதால் ஆர்ப்பரிக்கிறது பார்பனியம். தனித் தமிழ்நாடு என்ற நம் பாட்டன்களின் கனவை தமிழ் தீவிரவாதமாக சித்தரித்து, "இந்தியதேசிய"த்தை ஒவ்வொரு தமிழனுக்கும் காதழுக்கு போக போதித்தது தமிழ்நாட்டில் பார்ப்பன பத்திரிக்கைகள். நேருவிடம் கோள்சொல்லி தமிழ் நிலக் கனவை கருவில் அழித்தனர். அன்று தமிழீழம் என்ற சொல்லைக் கேட்டவுடன் சிங்களனைவிட துடித்தனர். இன்று புலம்பெயர் தமிழர்களால் கிடைக்கும் நலன் சில இதழ்களை நமக்கு ஆதரவாக எழுதவைக்கிறது. இது உண்மையில் தமிழனுக்கான ஆதரவா? திராவிடத்தை ஒரு கை பார்க்க கிடைத்த வாய்ப்பை நழுவவிடாத ஆர்ப்பரிப்பா?. மீண்டும் பார்ப்பன ஆட்சி வரவேண்டும் என்ற துடிப்பா? திராவிடத்தை நீக்கிவிட்டால் எஞ்சியிருப்பது சாதித்தமிழந்தானே, திராவிட சாயமில்லாத, ஆதிக்க மனோபாவதிற்கு அடிமையான தமிழனை ஏமாற்றுவது மிக, மிக எளிது என்பதால் ஏற்பட்ட மாற்றமா?. ஆனால் இன்னும் ஆங்கில நாளிதழ் மேதாவிகள் சிங்களனுக்கு பங்காளிகள்தான். எப்போதுமே ஆதரவாக‌சிலரும், எதிராக சிலரும் என மக்களை குழப்பி, ஒற்றுமை குன்றாமல் இருப்பது நாம் கற்றுக்கொள்ள வேண்டியது. பெரியாருக்குப்பிறகு, பத்து ஆண்டுகள் ஆரியம் திராவிடனை ஆண்டிருந்தாலும், இன்று இருக்கும் திராவிடத் தலைவனை சுற்றி இருப்பது அத்தனையும் ஆரியம் என்றாலும், அது ஓரினமாகத்தான் இருக்கிறது "ஆரியம் ஒரு கற்பிதம்" என அறிவிக்காமல்.
இவையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் தமிழர்களில் யார் எந்த இயக்கம் நடத்தினாலும், பாட்டன் ஆதித்த கரிகாலனின் முடிவை அடிக்கடி எண்ணிப்பார்த்துக்கொள்ளுதல் நலம்!!.

மானமும் அறிவும் மனிதருக்கு அழகு என, அரசியலில் நாம் அடுத்த கட்டதிற்கு வந்துவிட்டோம். கொத்துகொத்தாக எம் மக்கள் மடிந்து விழுந்தபோது குரல்கொடுக்காதவனை, இங்கு நமது வாழ்வாதரங்களை கொள்ளைகொண்டும், ஈழத்தில் எதிரிக்கு துணைபோன அண்டையூரானை எப்படி இன்னும் இனம் காணாமலிருப்பது?. ஒவ்வொருவனும் ஒரு காரணமும்மில்லாமல் எங்களை எதிரியாய் பாவிக்கும்போது, தென் மாநிலங்கள் இணைந்து மீண்டுமொரு சக்தியாய் எழவே முடியாது எனத்தெரிந்தும் மாநில உட்குழப்பங்களையும், மாநிலங்களுக்கிடையே உள்ள பகைகளையும் முடிவின்றி பார்த்துக்கொள்ளும் வட சூழ்ச்சியறியாது பகைபாராட்டுபவனை கடந்துவந்து, தமிழனாய் நம் உண்மை சொந்தங்களை ஒன்றிணைத்து கொள்வது மட்டுமே முடிவானதாக இருக்கமுடியும். 'நாம் தமிழர்' என்பது மட்டும்தான் தற்போது இவ்வளவு இழப்பிற்கு பின் தமிழனத்தின் உணர்வாக இருக்கிறது. “அறிவில் அய்யாவையும் ஆற்றலில் அண்ணனை’யும் வழியாககொண்டு ஒரு இயக்கம், பாகுபாடில்லா தமிழர் நலன் என்ற ஒரே நோக்கில் செயல்படும் இயக்கமும் அதன் அரசியல் அதிகாரமுமே நம் இலக்கு.

இங்கு எடுத்திருப்பது மக்களுக்கு மிகப் புதுமையான அரசியல் தத்துவம் அல்ல. ஏற்கனவே இருந்த தமிழ் தேசியம்தான். தமிழகத்தில் தமிழ்தேசியத்தை, அதன் மீதான விமர்சனங்களை உள்வாங்கிக்கொள்ளாமல் அலட்சியப்படுத்தமுடியாது.
தமிழ் தேசியவாதிகள் மீது சிலர் (தமிழகத்தில்) வைக்கும் குற்றச்சாட்டுகளை ஏன் தமிழ் தேசியத்தின் மீது பயம் கொண்டோரின் வாதங்களை ஏற்றுக்கொள்ளவே வேண்டும். சாதியாதிக்கம், பெண்ணடிமைத்தனம் அனைத்தும் ஆரம்பகால தமிழ் தேசியத்தில் இருந்ததுதான். கீழ் மக்கள் என்ற சொற் பயன்பாடு நம் இலக்கியங்களிலும், தையல் சொல் கேளீர், துடியாப் பெண்டீர் மடியில் நெருப்பு என்றெல்லாம் நம்ம தமிழ் கிழவியே எழுதி வைத்ததுதான். பெண்ணைப்பற்றி எழுதிய அவ்வையையே உருவாக்கியது தமிழ்சமூகம்தானே? ஆழ்ந்துபார்த்தோமானால், இன்று சமுதாயத்தில் நிலவி வருவது வேறு அவர்கள் சொல்லிச் சென்றது வேறாகத்தான் உள்ளது. ஒவ்வொரு நிலத்திலும் (ஐவகை நிலங்கள்) இன்று சமுதாயத்தில் உயர்வாக உள்ள சாதிகள் (தொழில்கள்) கீழாக இருப்பதை காணலாம். பழந்தமிழ் சமூகம் தொழிற் அடிப்படையிலானது. சாதியவாத தமிழனைக் கொண்டும், ஆதிக்க உணர்வுடைய சிலர் தனித் தமிழ் பற்றாளராக இருந்தது கொண்டும், தனித் தமிழ் பேசிக்கொண்டு காங்கிரசுக்கு ஒத்து ஊதியவ‌ர்களைக் கொண்டும், இன்று காங்கிரசு, நாளை திராவிடக்கட்சிகள் அதற்கடுத்த நாள் தமிழ்தேசியவாதி என உருமாறியவர்களை கண்டும், தமிழ் தேசியவாதிகளைப் பற்றிய வெகுசன ஊடக கட்டமைப்புகளை கொண்டும் அவர்களை அணுகுவதே இத்தகைய அச்சங்களுக்கு காரணம். தமிழ்தேசியவாதிகளுக்கும் திண்ணியத்தில் கொடுமை செய்த சாதிவெறியனுக்கும் என்ன தொடர்பு? பாப்பாபட்டி கீரிப்பட்டியில் தமிழ்தேசியம் பற்றித் தெரிந்த ஆதிக்கசாதியினர் எத்தனை பேர்? முன்பொரு காலத்தில் பக்தியும், சாதியுணர்வையும் கொண்டவர்கள் தமிழ்பற்றாளாராக இருந்ததை நான் மறுக்கவில்லை (இன்னைக்கும் இருக்காங்கதான் நெல்லை கண்ணன்கள், இவர்களுக்காக தமிழ்தேசியமே குற்றமாகிவிடுமா?). வீரமும், அன்புமே பண்புகளாக கொண்ட சமூகத்தில், மொழியில் பக்தியும், சாதியும் வந்ததற்கு காரணமானவர்கள் யார்? சுயமரியாதை இயக்கம் துவங்கியதற்கு பின், மக்களுக்காக உழைத்த, எவ்வித பயனையும் தமிழை முன்னிறுத்தி அடையாத தூய தமிழ் தேசியவாதிகளையும் ஆதிக்கவாதிகளுடன் சேர்க்கமுடியுமா என்பதை சிந்திக்கவேண்டும்.

'ஓய்ந்திடல் இல்லை என் உள்ளமும் உணர்வும், உயிர்செறிவும்
தேய்ந்திடல் இல்லை என் விரல்களும் தாளும்! திரிந்தலைந்து சாய்ந்திடல் இல்லை என் உடலும், எனவே சலிப்பிலனாய் மாய்ந்திடல்வரையும் உழைப்பேன், உரைப்பேன் மக்களுக்கே!'

என தன்னை கேட்கும் காதுகள் குறைவுதானென்றாலும் உழைத்துக்கொண்டிருந்த அவர்களின் குன்றா மக்கள்பற்றை மறுக்கமுடியாது. சாதியில்லா ஒருதமிழ்குடியே அவர்கள் கனவாக இருந்தது. தமிழ் நில மீட்பும், தமிழ் இன மீட்சியும், தமிழ‌ர் ஆட்சியுமே கொள்கைகளாக இருந்தன. திராவிட ஓட்டு அரசியல் கட்சிகள் சாதியத்தை சார்ந்தே இயங்குகின்றன என்பதையும் இங்கு சொல்லவேண்டும். ஈழத்தை வைத்து அரசியல் கட்சிகள் சித்துவிளையாட்டு நடத்தியபோது எப்போதும் ஈழமக்களை கருத்தில்கொண்டு எழுதிவந்தவை தமிழ் தேசிய தாளிகைகள்தான். ஆனாலும் அப்படி விடாப்பிடி தமிழ்பற்றாளர்கள் காலத்தில் தான் தெலுங்கு மலையாளம், கன்னடம் எல்லாம் தமிழனை ஆண்டது. நாம் பிளவுபட்டு நின்றதால் தமிழரின் ஆட்சியதிகாரம் பற்றிய கனவுகளுடன் நம்மை உணர்வுபடுத்தல் மட்டுமே அவர்களால் இயன்றது. இந்தி திணிப்பு தமிழ் (தேசிய) ஒருங்கிணைப்பை சாதித்தது. ஈழப்போர் அதை மாற்றுருவாக்கம் செய்திருக்கிறது. தொடர்ந்து போராட்டங்கள், தமிழருக்கெதிரான எவற்றையும் கூர்மையாக உணர்ந்து எதிர்கிறார்கள் இன்று தமிழுணர்வாளர்கள். யாரோ பிழைக்க கட்சியின் பின்னால் ஓடிக்கொண்டிருந்த நம்மை நிறுத்தி சிந்திக்கச்செய்திருக்கிறது ஈழப்போரில் நம் கையறுநிலையும், துரோகத்தின் அமைதியும். கொல்லப்படும் மீனவர்களையும், ஆளுங்கட்சியின் அறிக்கை, தீர்மான நாடகங்களைப் பார்க்கும்போது ஆடுகள‌ம் படத்தில் அந்த பையன் கடைசியில் கேட்பானே, "எம்மேல அவ்வளவு வெறுப்பாண்ணே உங்களுக்கு?" அப்படித்தான் கேட்கத்தோன்றுகிறது.

எம்.ஜி.யார், செயலலிதா ஈழப்பங்களிப்புகள் அடுத்து தொடரும்...