Saturday, April 09, 2011

இராமநாதபுரம் மாவட்டம் -2011- தேர்தல் களநிலை


எம் இனத்தை அள்ளித்தின்ற டெல்லியின் நிரந்தர விருந்தாளி, தொடர்ந்து தின்று செரிக்கிறது எமது மீனவர்களை! கண்டும் காணாமலும் கண்மூடி தேர்தலில் புதைந்து கொள்கின்றன அரசியல் கட்சிகள்.


இராமநாதபுரம் மாவட்டம்:

1. திருவாடனை 2. பரமக்குடி 3. இராமநாதபுரம் 4. முதுகுளத்தூர்

தொகுதி மறுசீரமைப்பில் கடலாடித் தொகுதி நீக்கப்பட்டுள்ளது.


1. திருவாடனை:


சுப.தங்கவேலன்


முசிபுர் ரகுமான்


திமுக: சுப.தங்கவேலன்
தேமுதிக: முசிபுர் ரகுமான்

கடந்த 5 முறை இங்கு வென்ற சிட்டிங் காங்கிரசு எம்.எல்.ஏ. கே.ஆர். ராமசாமியின் கையிலிருந்து திமுகவிற்கு சென்றிருக்கிறது தொகுதி. (கே.ஆர். இராமசாமி காரைக்குடியில நிக்கிறாரு.) அமைச்சர் வென்ற கடலாடித்தொகுதி சீரமைப்பில் சிதறிவிட, திருவாடனையில் நிற்கிறார் சுப.தங்கவேலன். கடலாடித்தொகுதியின் பெரும்பகுதி முதுகுளத்தூர் தொகுதியுடன்தான் இணைந்துள்ளது. ஆனால் திருவாடனையில் நிற்கிறார் சுப.தங்கவேலன். தன் மகன் (மா.செ) த.சம்பத் இம்முறை இங்கு களமிறக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. காங்கிரசு கே.ஆர். ராமசாமி செய்த பல நல்லவைகள் இடியாய் அமைச்சர் தங்கவேலனின் தலையில் விழுகிறது. கடந்த 5 வருடம் தங்கள் தேவைகளை யாரும் நிறைவேற்றாததால், இத்தொகுதிக்குட்பட்ட பேராவூர் மக்கள் ஓட்டுப்போடபோவதில்லை எனத் தெரிவித்துள்ளனர். பிச்சன்குறிச்சி கிராம மக்கள் அடிப்படை வசதிகள் செய்துதரப்படவில்லையென சாலைமறியல் செய்துவருகின்றனர் (திடிரென அங்கு ரோடு போடப்பட்டதால் ஏற்பட்ட மோதலில், இவரது உறவினர் ரித்திசு எம்.பி கைதுசெய்யப்பட்டு இராமநாதபுரத்திற்குள் வர தடைசெய்யப்பட்டுள்ளது). இப்படிப்பட்ட ரணகளத்தில், முதன்முறை களம் காணும், தேமுதிக சார்பில் இங்கு நிற்கும் முசிபூர் ரகுமானைப் பற்றி என்ன சொல்வது? நூறுக்கும், சோறுக்கும் ஓட்டுப்போடாதீர்கள் என திருமதி விசயகாந்த் திருவாடனையில் பரப்புரை செய்யும்போது கூறியுள்ளார். கோடியில் நலத் திட்டங்களை தேர்தலுக்கு முன்பே இத்தொகுதியை மையப்படுத்தி செய்துள்ளதால் சுப.தங்கவேலனுக்கு கிடைக்கலாம் திருவாடனை.


2. பரமக்குடி:


டாக்டர் எசு. சுந்தர்ராசு


கே.வி.ஆர்.ராம்பிரபு
காங்கிரசு - கே.வி.ஆர்.ராம்பிரபு
அதிமுக - டாக்டர் எசு. சுந்தர்ராசு

அதிமுகவின் கோட்டையாக இருந்த பரமகுடியை 1996 ல் திமுக கைப்பற்றியது. அதன் பிறகு இங்கு தொடர்ந்து வென்று வருகிறார் கே.வி.ஆர். ராம்பிரபு. மூன்றாவது முறையாக மீண்டும் இத்தொகுதியில் நிற்கிறார். ஆதிமக்கள் வாக்குகளே இங்கு வெற்றியை முடிவுசெய்யும். அதிமுகவில் கடந்தமுறை ராம்பிரபுவிடம் தோற்ற டாக்டர் சுந்தராசு மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளார். 1991 ல் இங்கு எம்.எல்.ஏவாக இருந்தவர் சுந்தராசு. மக்கள் எளிதில் சந்திக்ககூடிய அளவில் எளிமையானவர். நெசவாளர் பிரச்சனை எப்போதும் உள்ள தொகுதி. அதிமுக இங்கு நெசவாளர் நலனுக்கு ஆர்ப்பாட்டங்கள் செய்திருக்கின்றது. ராசாவை கைது செய்யக்கோரி போராட்டம் இப்பகுதியில் நடத்தப்பட்டது. தொடர்ந்து இருமுறை இங்கு எம்.எல்.ஏவாக இருக்கும் ராம்பிரபுக்கு மாற்றை இம்முறை மக்கள் இங்கு விரும்புகிறார்கள். 20 வருடங்களுக்கு பின் டாக்டர் சுந்தராசுக்கு அரசியல் மறுவாழ்வு தரும் பரமகுடி.


3. ராமநாதபுரம்:


பேராசிரியர். சவாகிருல்லா


அசன் அலிகாங்கிரசு - அசன் அலி
மனித நேய மக்கள் கட்சி: பேராசிரியர். சவாகிருல்லா

40 வருடங்களுக்கு பிறகு கடந்தமுறைதான் இங்கு காங்கிரசு போட்டியிட்டது. போர்குற்றவாளி, ரசாபக்சேவின் கையாள் கீழக்கரை அசன் அலி மீண்டும் இங்கு போட்டியிடுகிறார். கமராசருக்கு மாலை போட மறுத்த காங்கிரசுகாரர் இவர். சிலர், மாதிரி அமைச்சரவை (இப்படி உசுப்பேத்திதான் காங்கிரசு இந்தநிலையில் வந்து நிக்கிதா? ஆட்சியில பங்கு! கல்லூரிகளில், தொழில்களில் வரும் வருமானத்தை விட ஆட்சியில் பங்கென்றால் வரும் வருமானம் அதிகம் போல!) அமைத்து ஊருக்கு உழைத்தார் என்கிறார்கள். காங்கிரசு வழக்கப்படி போட்டி வேட்பாளராக அசன் மவுலானா (பெரியகுளம் எம்.பியின் மகன்)வும் நிற்கிறார். அசன் அலி வீட்டுல திருட்டுப்போனபோது ஈழத்தில் தமிழர் தம் உடமை திருடும் இனக்கொலையாளன் இராசபக்சே ஆறுதல் தெரிவித்ததாம்...விழுப்புரம் தண்டவாளத் தகப்பிற்கும் இவருக்கும் தொடர்பிருப்பதாய் வழக்குப்பதிவிருந்தும் காங்கிரசு மீண்டும் உட்காரவைக்கிறதென்றால், மக்கள் உணர்வு அவ்வளவு கிள்ளுக்கீரை காங்கிரசுக்கு. பணபலமுள்ள செல்வந்தர் அசன் அலி, போனமுறை தேர்தலின்போது ஓட்டுக்கு 1000 ரூ கொடுத்ததாக தோழர் மகேசு நம் பதிவில் தெரிவித்திருந்தார். இம்முறையும் மக்களை விலைக்குவாங்க இவர் முயற்சி செய்வார். தொகுதி பக்கம் திரும்பிப் பார்க்காமல் நுங்கபாக்கம், டெல்லி, இலங்கை என்றே இருந்துவிட்டதால் இந்து முன்னனி 'எம்.எல்.ஏ வைக் காணவில்லை' என சுவரொட்டியது. இராமேசுவரத்திலும், அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தும் 539 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டபோதும் அதைப்பற்றி இவர் சாட்டமன்றத்தில் எத்தனைமுறை கவலையோடு விவாதித்தார் என்பதை இங்கு ஓட்டுப்போடும் மக்கள் சிந்திக்கவேண்டும். மக்களின் உயிர் போக்கும் பிரச்சனைகளை விட்டுவிட்டு, மாதிரி மந்திரி சபையாம், மாதிரி மந்திரிசபை!!. அசன் அலி சொன்னதை எல்லாம் செஞ்ருந்தா பாவம்... வறட்சி பூமி இராமநாதபுரம் அவர் கூறியது போல் சொர்க்க பூமி சிங்கப்பூரால்ல இருந்திருக்கும்? சிங்கப்பூர்ல இருக்கவன் இராமநாதபுரத்துக்கு ரோடுபோட விசா எடுத்து வந்திருப்பானே?! அசன் அலி கொடுத்த உறுதி எல்லாம் வீணாப்போச்சுன்னு மீண்டும் 5 வருடம் கேட்கிறார்.

இரத்தம் கொடுத்து மத நல்லிணக்கத்தை வளர்க்கும் கட்சி மனிதநேய மக்கள் கட்சி. மக்களிடையே இவர்கள் பணியாற்றுகிறார்கள். இசுலாமிய சகோதரர்களுக்கு 3.5% இட ஒதுக்கீடு, டாசுமாக் கடைகளுக்கு எதிர்ப்பு போராட்டம், பெட்ரோல் விலை உயர்வை திரும்பப் பெறக்கோரிப் போராட்டம், எளியவருக்கு கல்வி உதவி, மருத்துவ உதவி, அவசரஆம்புலன்சு உதவி (திமுக இந் நல் உதவியை தங்கள் அரசின் நலத் திட்டமாகவே அறிவித்துவிட்டது! ஆனால் இதற்காகும் செலவை செய்வது மாநில அரசு இல்லை என்கிறார்கள்??!!) என மக்களுடன் கலந்திருக்கிறார்கள் மமகவினர். “முசுலீம் மக்கள்தொகை அங்க பெருகிருச்சு, இங்க பெருகிருச்சு, இது ராமன் பொறந்த இடம், அது சீதை வளர்ந்த இடம்” என்பது மாதிரி பேசி கலவரம் தூண்டாமல் அப்படி பேசியவர்கள் அடிபட்டாலும் இரத்தம் கொடுக்கிறார்கள் மனித நேயத் தோழர்கள். வீட்டை விட்டு வெளிவராத, வீட்டிற்குள்ளும் ஒரு தடுப்பிற்குள் இருக்கும் பெண்களையும் அரசியல்மயப் படுத்தியிருக்கிறார்கள். சாதி ஆணவம் மிக்க கூட்டம் மாவட்ட வாரியாக கட்சி ஆரம்பித்தால் வளர்த்துவிடும் வஞ்சக அரசியல்வாதிகள், இவர்களை வளர்க்கத் துணிவதில்லை. பேராசிரியராக பணியாற்றியவரும், தமுமுகவின் ஆரம்பகால நிர்வாகிகளில் ஒருவருமான சவாகிருல்லா மனிதநேய மக்கள் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர். இவர் இத்தொகுதியில் காங்கிரசை எதிர்த்து போட்டியிடுகிறார். பல்லாண்டுகாலம் தன்னுடன் இருந்துவரும் முசுலீம் லீக்கிற்கு கருணாநிதி கொடுத்தது 3 இடம். அதையும் காங்கிரசிற்கு 1 இடம் விட்டுக்கொடுக்கும் நிலையிருந்தது. இவர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் வாங்கிய ஓட்டுகள் 3 தொகுதிகளை அதிமுக கூட்டணியில் பெற்றுத்தந்திருக்கிறது. இவரது ஓட்டை பிரிக்க எசுடிபிஐயும் அப்துல் அமீது என்பவரை நிறுத்துகிறது. இங்கு முனைவர் சவாகிருல்லா வெல்வார்.


4. முதுகுளத்தூர்:


முருகன்


சத்தியமூர்த்திதிமுக: சத்தியமூர்த்தி
அதிமுக : முருகன்

நெருப்பில்லாமலேயே எப்போது வேண்டுமானாலும் பற்றிக்கொள்ளும் பகுதி முதுகுளத்தூரில் சிட்டிங் (திமுக)முருகவேல் மருக, 2001ல் கடலாடியில் போட்டியிட்டு வென்ற, கடந்த முறை கடலாடியில் அதிமுக சார்பில் போட்டியிட்டுத்தோற்ற முன்னால் அதிமுக அமைச்சர் (முன்னால் மா.செவும் கூட) சத்தியமூர்த்தி, தற்போது திமுகவிற்கு மாறிவிட்டதால், அவர் திமுக சார்பில் முதுகுளத்தூரில் இம்முறை நிறுத்தப்பட்டுள்ளார்.
முதுகுளத்தூர் தொகுதியில் தேவேந்திர குல ஓட்டைப் பிரிக்க தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஜான்பாண்டியனும் இத்தொகுதியில் நிற்கிறார் (இவர் நிலக்கோட்டை தொகுதியிலும் நிற்கிறார்). இது திமுகவை பாதிக்கும். இசுலாமியமக்களின் ஓட்டுக்களை பிரிக்க யாரும் நிற்கவில்லை. அதிமுக சார்பில் முருகன் நிறுத்தப்பட்டுள்ளார். மா.செ ஆணிமுத்து முருகனுக்கு பக்கபலமாக இருக்கிறார். எசு.பி.காளிமுத்து எங்கப்பா? முக்குலத்து வாக்குவங்கி இவருக்கு சாதகம். சத்தியமூர்த்தியின் பணபலம் அவரை இங்கு வெல்லவைக்கும்.


கடந்த தேர்தலில் இராமநாதபுரம் மாவட்டத்தின் அத்தனை இடங்களையும் திமுக கூட்டணி வென்றிருந்தது. ராமதாநபுரம் மாவட்டத்தில் கடந்த தேர்தலில் திருவாடனை, பரமக்குடி மற்றும் இராமநாதபுரம் மூன்றிலும் காங்கிரசு வென்றிருந்தது. இம்முறை இரண்டு இடத்தில் நிற்கிறது. இரண்டிலும் தோற்கும் நிலையுள்ளது.

மொத்த தொகுதிகள் நான்கில் வெல்ல வாய்புள்ளவை

திமுக கூட்டணி - 2 இடங்கள்
அதிமுக கூட்டணி - 2 இடங்கள்

No comments: