Friday, April 01, 2011

திருநெல்வேலி மாவட்டம் 2011 -தேர்தல் களநிலை

நன்றி: படங்கள். இணைய தளங்களில் இருந்து.


வைகோ நேர்மையாளரா?, நம்பி வந்தோரை தூக்கிவிடும் நல்ல அரசியல்வாதியா? என்ற கேள்விகளுக்கெல்லாம் போகாமல், ஒவ்வொரு தேர்தலுக்கும் மேடையில் ஒலித்த அந்தக் குரல் இத்தேர்தலில் திட்டமிட்டு மொளனமாக்கப்பட்டது வருத்தம் தருகிறது. பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கிறதோ இல்லையோ மக்கள் பிரச்சனையை உணர்ந்த அரசியல்வாதி வைகோ. கடைசிவரை ஈழ எதிர்ப்பு கூட்டணியுடன் அவர் சேரவில்லை. தேர்தலில் வாக்குவங்கி மட்டும் வெற்றியை ஈட்டிவிடாது. எதிரணியின் குறைகளை எடுத்து வைக்கும் பரப்புரை பெரும்பங்கு வகிக்கும் என்பதை இம்மாவட்ட முடிவுகள் அதிமுகவிற்கு உணர்த்தும். (இக்குறை போக்க சீமான் அவர்களின் பரப்புரையை செ டிவியில் காட்டுகிறார்கள்.)

திருநெல்வேலி மாவட்டம் : மொத்தம் 10 தொகுதிகள்.

1. வாசுதேவநல்லூர் 2. சங்கரன் கோவில் 3. தென்காசி 4. கடையநல்லூர் 5. ஆலங்குளம் 6. திருநெல்வேலி 7. அம்பாசமுத்திரம் 8. பாளையங்கோட்டை 9. நாங்குனேரி 10. ராதாபுரம்.

2006ல் 11 தொகுதிகள் இருந்தது திருநெல்வேலி மாவட்டதிற்கு. தற்போது சீரமைப்பில் சேரன்மாகதேவி தொகுதி நீக்கப்பட்டுவிட்டது.

1. வாசுதேவநல்லூர் :


டாக்டர் எஸ். துரையப்பா


எசு கணேசன்






காங்கிரசு: எசு கணேசன்
அதிமுக : டாக்டர் எசு. துரையப்பா

காங்கிரசு ஆர்.ஈசுவரன் 6 முறை இத்தொகுதியில் போட்டியிட்டு 5 முறை வென்றிருக்கிறார். ஒரு முறை தமகா வென்றிருக்கிறது. காங்கிரசு பலமுள்ள தொகுதி. அதேபோல் கம்யூனிசுட்களுக்கும் ஓரளவு பலமுள்ள தொகுதி இது. ஆனால் கடந்தமுறை இவை எல்லாவற்றையும் மீறி மதிமுக கைப்பற்றி இருந்தது. கையை மக்கள் இவ்வூரில் கடந்த இரு தேர்தல்களில் மறந்திருந்தனர். தற்போது காங்கிரசு எசு கணேசன் நிறுத்தப்பட்டுள்ளார். முன்னால் மத்திய அமைச்சர் அருணாசலத்தின் உறவினர் கணேசன். தொகுதிக்கு புதுமுகம்!.

மதிமுகவின் தொகுதி. மக்களிடம் கலந்து பழகும் இயல்புடையவர் சிட்டிங் திருமலைக்குமார். இம்மாவட்டம் வைகோவின் மாவட்டம். செயாவின் மீதான மதிமுகவினரின் கோபம் நிச்சயம் இம்மாவட்டத்தில் எதிரொலிக்கும். அதிமுக, புளியங்குடி நகர் மன்றத் தலைவர் டாக்டர் எசு.துரையப்பாவை களமிறக்கியுள்ளது. கம்யூனிசுடுகளுக்கு கொடுத்திருந்தாலும் ஒருவேளை வெற்றிக்கிட்டலாம். மதிமுகவின் கோபம் கம்யூனிசுடுகளைப்பாதிக்காது. வார இதழ்களில் மதிமுகவால் பதிப்பில்லை என செய்திவரலாம் ஆனால் இம்மாவட்ட தேர்தல் முடிவுகள் அதிமுகவிற்கு ஒரு பாடமாக இருக்குமெனவே தோன்றுகிறது. களநிலை மீண்டும் இங்கு கை வந்துவிடும் சங்கை கணேசனால் எனச்சொல்கிறது.

2. சங்கரன் கோவில்:


சொ. கருப்பசாமி


உமா மகேசுவரி








திமுக: உமா மகேசுவரி
அதிமுக: சொ. கருப்பசாமி

திமுக சார்பில் முன்னால் மேயர் உமா மகேசுவரி போட்டியிடுகிறார். தமிழ்நாடு முழுவதும் சொந்த கட்சியிலிருந்து நிற்பவருக்கு போட்டி வேட்பாளரை நிறுத்தும் காங்கிரசு, திமுக உமா மகேசுவரிக்கு போட்டி வேட்பாளராக மாரிமுத்து என்பவரை நிறுத்தியிருக்கிறது. திமுகவின் செல்வாக்கு குறைவாக உள்ள தொகுதி.

அதிமுக வாக்கு வங்கி பலமான தொகுதி சொ.கருப்பசாமியின் சங்கரன்கோவில். தொடர்ந்து 3 முறை இத்தொகுதியில் வென்று வருகிறார் கருப்பசாமி. போன தேர்தலில் இம்மாவட்டத்தில் அதிமுக வென்ற ஒரே தொகுதி இது. (கூட்டணி மதிமுக ஒரு இடம் ஆக 11 தொகுதியில் 2 இடத்தில் அதிமுக கூட்டணி வென்றிருந்தது) தென் மாவட்டங்களில் சீட்டு வாங்கிய ஒரே அதிமுக அமைப்பு செயலாலர் இவர். இம்முறை இங்கு கருப்பசாமி தோற்றால் வைகோவின் செல்வாக்கு பளிச்சென புரிந்துவிடும் செயலலிதாவிற்கு. கலிங்கப்பட்டியுள்ள இத்தொகுதியில் வாக்குகள் சரியும் அபாயம் அதிமுகவிற்கு இருந்தாலும், புதிய தமிழகம் கட்சி செல்வாக்குள்ள தொகுதி, அது சரிவைச் சரிக்கட்டும். கருப்பசாமிக்கு இந்த முறையும் கெடா (தொகுதி) கிடைக்கலாம்.

3. தென்காசி:


வீ.கருப்பசாமி பாண்டியன்



சரத்குமார்









திமுக : வீ.கருப்பசாமி பாண்டியன்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி : சரத்குமார்

தென்காசி அதிமுக பலமாக உள்ள தொகுதி. அரசியலில் நெடுநாள் அனுபவம் உள்ள (இருபெரும் கட்சிகளிலும்!) திமுக மா.செ. கருப்பசாமி பாண்டியன் சரத்குமாருடன் மோதுகிறார். தூத்துகுடி, நெல்லை ஆகிய‌ தென் மாவட்டங்களில் கட்சி மாறி வந்தவர்கள்தான் திமுகவில் மாவட்டச் செயலாளராக இருக்கின்றனர். வேட்பாளர்களில் முதன்மை இடமும் இவர்களுக்குத்தான். சொல்லி வைத்த மாதிரி இவர்கள் அனைவரும் ச்டாலினின் தீவிர ஆதரவாளர்கள் (கன்னியாகுமரி சுரேசுராசனும்தான்!). தென்காசியில் அதிசயமாக காங்கிரசு கருப்பசாமி பாண்டியனுக்கு ஆதரவாக இருக்கிறது. இவருக்கு ஆதரவாக பாக்கியராசிலிருந்து ச்டாலின் வரை வாக்குகேட்கிறார்கள். எதிர்முகாமில், வீடு வீடாகச் சென்று சரத்குமாரும் வாக்கு கேட்கிறார். அதிமுகவின் வாக்குவங்கியுள்ள தொகுதி. புதியதமிழகம் கட்சி செல்வாக்குள்ள தொகுதி. இசுலாமியர் வாக்குவங்கியும் உள்ள தொகுதி இது. இத்தொகுதியில்சிறுபான்மையினர் வாக்குகள் திமுகவிற்கே இதுவரை சாதகமாக இருந்துள்ளது. இம்முறை மனிதநேய மக்கள் கட்சி, அம்மாவுடன் கூட்டணியில் இருப்பதால் வாக்குகள் மாறிவிழலாம். தொகுதி மக்களுடன் தொடர்பில் இருப்பவர் கானா. இரட்டை இலைச் சின்னத்தில் சரத்குமார் நிற்பதும் இவருக்கு சரிவை ஏற்படுத்தும். எப்படியிருப்பினும் கருப்பசாமி பாண்டியனுக்கு வெற்றி இம்முறை சுலபமல்ல. மதிமுக வெல்ல சிறுதும் வாய்ப்பில்லாத இத்தொகுதியை மதிமுகவிற்கு ஒதுக்கினார் செயா கடந்தமுறை. மதிமுக தோற்றது. இப்போது சரத்குமாருக்கு ஒதுக்கி இருக்கிறார். நாடார் வாக்குவங்கியுள்ள ஆலங்குளத்தில் நின்றிருந்தால், சரத்திற்கு வெற்றி கிடைத்திருக்கும். சொற்ப வாக்கு வித்தியாசத்திலாவது கருப்புசாமி பாண்டியனுக்கு கிடைக்கும் தொகுதி.

4. கடையநல்லூர் :


பி. செந்தூர்பாண்டியன்


பீட்டர் அல்போன்சு








காங்கிரசு : பீட்டர் அல்போன்சு
அதிமுக : பி. செந்தூர்பாண்டியன்

கடந்த ஆட்சியில், காங்கிரசு இளங்கோவன் திமுகவிற்கு தலைவலியென்றால் (இப்பத்தான் கால்ல விழுந்தாச்சே??!!), கடயநல்லூர் சிட்டிங் எம்.எல்.ஏ பீட்டர் அல்போன்சு திமுகவிற்கு அருமருந்து. இவருடைய செயல்பாடுகள் அனைத்தும் திமுககாரர்களுடந்தான். காங்கிரசின் பரப்புரை பீரங்கி, கெடக்கறதெல்லாம் கிடக்கட்டும், நவோதையா பள்ளிகள் தமிழகத்தில் வரவேண்டுமெனவும், சென்னை பொதுமருத்துவமனைக்கு ராசீவ் பெயர் இட வேண்டுமெனவும் குரல் கொடுத்த அல்போன்சு, தனக்கு சொந்தமாக ஒரு கலைக்கல்லூரியும், பொறியியல் கல்லூரியும் வைத்திருக்கிறார். ஆளுங்கட்சியின் அரவணைப்பில் பல நன்மைகளையும் செய்திருக்கிறார் என்றாலும் தொகுதிக்கு நலம் பயக்கும் பாதாள சாக்கடைத்திட்டம் நடைபெறாதது, மிகப்பெரிய பிரச்சனையான குடிநீர் தட்டுப்பாடு, குடிநீர் சாக்கடையோடு கலந்து கடந்த வருடம் பலர் இங்கு மாண்டது என பல பிரச்சனைகளும் உள்ளன. காங்கிரசின் உட்குழப்பங்களும் இவருக்கு அதிகம். தென்காசியில் இருமுறை நின்று வென்றவர். இம்முறையும் (கருப்பசாமி பாண்டியனுக்கு ஆப்பு வைத்து) அங்குதான் நிற்பதாக எதிர்பார்க்கப்பட்டது. தென்காசித் தொகுதியில் இவரது வீடு இருக்கும்போதே அங்கு எம்.எல்.ஏவான இவர் தொகுதிப்பக்கம் வந்ததேயில்லையென குறை கூறப்பட்டது. கடையநல்லூரில் எம்.எல்.ஏவாக இருக்கும்போது தென்காசியை விட்டுவெளியே அரசுவிழாவில் கலந்துகொள்ள மட்டும் வருகிறாராம். பின்ன 2 கல்லூரி, ச்பின்னிங் மில்லு எல்லாத்தையும் பாத்துக்கவேணாமா? இத்தொகுதியில் அதிகம் உள்ள இசுலாமிய மக்களுக்கு அரசு கல்லூரி வர வழிசெய்வேன் என போனமுறை கூறிவிட்டு அதைச் செய்யவில்லை. இந்த முறை இவரது வெற்றிவாய்ப்பு மதில்மேல் பூனை நிலைதான்.

இசுலாமியர்கள் அதிகம் கொண்டதொகுதியில் போனமுறை கமாலூதினை களமிறக்கித்தோற்ற அதிமுக இம்முறை பி.செந்தூர்பாண்டியனை நிறுத்தியிருக்கிறது. இவரும் பல ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டு மக்களுக்கு அறிமுகமாகியுள்ளார். சிறுபான்மையினர் ஓட்டுகள் பீட்டர் அல்போன்சுக்கே சாதகமாக இருக்கும். முக்குலத்தோர் வாக்குவங்கியுள்ள தொகுதி இது எனவே அதிமுகவிற்கு இது நலம்பயக்கும். ஆனால் மதிமுக சிறிதளவு செல்வாக்குப்பெற்ற தொகுதியும்கூட. தற்போதைய களநிலையில் பீட்டரின் செயலின்மை அதிமுகவிற்கு சாதகமாக இருந்தாலும், இசுலாமியர்களின் ஓட்டை கொத்தாக அள்ள சோசியல் டெமாக்ரெட்டிக் பார்டி ஆஃப் இந்தியா (எசு.டி.பி.ஐ), நெல்லை முபாரக்கை களம் இறக்குகிறது. மமக (மனிதநேய மக்கள் கட்சி) அதிமுகவுடன் இருந்தாலும், எசு.டி.பி.ஐ தனித்து நிற்பதால் இரு பெரும் கட்சியும் இங்கு வெல்லத் திணறுவது உறுதி. இதுவரை இங்கு நடந்த தேர்தல்களில் இரு பெரும் கட்சி சார்பிலும் போட்டியிட்ட இசுலாமிய வேட்பாளர்கள் தோல்வியையே தழுவியுள்ளனர். எனவே முபாரக் இங்கு வெல்வது கடினம் எனவே தொன்றுகிறது. ஆனால் இவர் தோற்றால் ஓட்டை நன்றாக பிரிப்பார். மக்கள் மாற்றத்தை விரும்பினால் முபாரக் வெல்லவும் வாய்ப்புண்டு.


5. ஆலங்குளம்:


பி.சி. ராசேந்திரன்


பூங்கோதை







திமுக : பூங்கோதை ஆலடி அருணா
அதிமுக: பி.சி. ராசேந்திரன்

அமைச்சர் தொகுதி. பல வருடங்கள் லண்டனில் வசித்த, கடந்தமுறை முதன்முதலாக தேர்தலில் நின்ற மருத்துவர்.பூங்கோதையை அவரது தந்தை ஆலடி அருணாவின் கொலையால் ஏற்பட்ட அனுதாப அலை வெல்ல வைத்து அமைச்சராகவும் ஆக்கியது. அமைச்சராக இருந்த 5 வருடங்களில் பல சோதனைகள் இவரைச் சுற்றிவந்தது. தொலைபேசி இவருக்குதான் உண்மையிலேயே தொல்லைபேசி. மீண்டும் இவருக்கு சீட் கிடைக்காதென்றே பலரும் கூறினார்கள். ஆனால் இவரின் நட்பிடம் (உறவிடம்?) மிகவும் சக்திவாய்ந்தது. மீண்டும் நிற்கிறார் இங்கு. தொகுதிக்கும், மாவட்டத்தில் கட்சிக்கும் இவரால் நன்மையேதுமில்லை என்கிறார்கள் மக்கள். நாடார் வாக்குவங்கி மட்டுமே பூங்கோதைக்கு சாதகமானது.


2001 ல் இங்கு வென்ற பி.சி.ராசேந்திரனை மீண்டும் களமிறக்குகிறது அதிமுக. பி.சி.ராசேந்திரன் பூங்கோதையின் அப்பாவையே இங்கு தோற்கடித்தவர். அதுவுமில்லாமல் தேமுதிக போனமுறை வாக்குகளைப் பிரித்தது அதிமுக தோற்க காரணமாய் இருந்தது. இம்முறை அதிமுக சுறுசுறுப்பாக இருக்கிறது இங்கு. பி.சி.ராசேந்திரன் மீண்டும் பிசியாகலாம்.

6. திருநெல்வேலி:


நயினார் நாகேந்திரன்



ஏ.எல்.எசு.லெட்சுமணன்









திமுக: ஏ.எல்.எசு.லெட்சுமணன்
அதிமுக: நயினார் நாகேந்திரன்

நெல்லை இருபெரும் கழகத்தையும் மாறி, மாறி ஆதரிக்கும் ஊர். சிட்டிங் மாலைராசா போட்டியிடவில்லை. மக்களுடன் சேர்ந்து தொகுதிக்காக திமுக அரசை கண்டித்து போராடும் ஆள், அழகிரியின் ஆதரவாளர் மாலைராசா, எப்படி கிடைக்கும் சீட்டு? மேயர் சுப்ரமணியன் நினைத்தபடி தன் மகன் ஏ.எல்.எசு.லெட்சுமணனுக்கு இத்தொகுதியில் சீட் வாங்கிவிட்டார். கட்சிமாறி வந்தவர்களுக்கே வாய்ப்புள்ள தென் மாவட்டங்களில் (மதுரை தவிர), மகனுக்கு கட்சிப்பதவி, தேர்தலில் இடமும் வாங்கிவிட்ட திமுககாரர், மேயர்!. லேட்சுமணனை வெல்லவைக்க திமுக பம்பரமாக சுழலும்!. முதல் முறையிலேயே கடும் போட்டி இவருக்கு.

முக்கால்வாசி அதிமுக அமைப்பு செயலாலர்கள் சீட் இல்லாமல் நொந்துகிடக்க, தென்மாவட்டங்கள் பலவற்றில் செ பேரவைச் செயலாலர்களுக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது. அதிமுக அமைப்பு செயலாலர் பொறுப்புனாலே அமைதியா 5 வருடதிற்கு வீட்டில இருன்னு அர்த்தம்போல!. நாயினாருக்கு சீட்டு கிடைத்த உடனேயே கூட்டமாக அதிமுகவில் மக்கள் இணைகிறார் என்ற படங்காட்டலும் ஆரம்பமாகிவிட்டது (கட்சியில் மீண்டும் மாவட்டச் செயலாலர் ஆக ஆயத்தமோ?). இவர் மீதும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு போடப்பட்டது. அனிதா, செல்வகணபதி போல் திமுகவை நாடும் மனநிலையில்தான் இருந்தார் நாயினார். மாநிலத்தில் அதிமுக தோற்றால், நாயினார் வென்றாலும், தோற்றாலும் திமுகவிற்கு கட்சிமாறுவார். கட்சியை நெல்லையில் பலப்படுத்த பாப்புலர் முத்தையாவையும் (சீட்டில்ல இவருக்கு??!!) தூத்துகுடியில் நாயினாரையும் நம்பியிருக்கிறார் செ. ஆனால் ஆளுங்கட்சி மற்றும் லெட்சுமணனின் சுறுசுறுப்பு. நெல்லையில் உள்ள பிள்ளைமார் வாக்குவங்கி எல்லாம் லெட்சுமணனுக்கு சாதகமாகவே உள்ளது.

7. அம்பாசமுத்திரம்:


இரா.ஆவுடையப்பன்


இசக்கி சுப்பையா








திமுக : இரா.ஆவுடையப்பன்
அதிமுக: இசக்கி சுப்பையா

சபாநாயகர் தொகுதி. ஆவுடையப்பன் இம்முறை தன் வாரிசை களமிறக்குவார் என்ற எதிர்பார்ப்பிருந்தது. ஆனால், அவரே மீண்டும் 4 வது முறையாக போட்டியிருகிறார். 2முறை இத்தொகுதியில் வெற்றி பெற்றவர். ஒருமுறை தோற்றதும் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான்.

அதிமுக செ பேரவை இணைச்செயலர் இசக்கி பாண்டியனை நிறுத்தியுள்ளது. முதன்முறை களம் காண்கிறார் இசக்கி. முக்குலத்தோர் வாக்குவங்கியுள்ள தொகுதியில் இரு கழகங்களும் வாக்குகளை அள்ளும் வகையில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இங்கு உண்மை போட்டி அமைச்சர் ஆவுடையப்பனின் மகன் பிரபாகரனுக்கும், இசக்கி பாண்டியனுக்கும்தான். ஆவுடையப்பனுக்கே மீண்டும் அம்பாசமுத்திரம் என்கிறது களநிலை.

8. பாளையங்கோட்டை:

டி.பி.எம்.மைதீன்கான்



பழனி








திமுக : டி.பி.எம்.மைதீன்கான்
கம்யூனிசுடு (மா) : பழனி

பாளயங்கோட்டை, இசுலாமிய மக்களின் கோட்டை. அமைச்சர் மைதீன்கானின் தொகுதி. மக்களுடன் எளிமையாகப் பழகுபவர் மைதீன்கான். கடந்தமுறை முசுலீம் லீக்கின்(அவர்கள் வேட்பாளரை தேர்வு செய்ய இயலாலததால்) தயவில் இவர் இங்கு எம்.எல்.ஏ ஆகவும், தொகுதியை தனக்கு தக்க வைக்க திமுக இவரை அமைச்சராக்கியது. இம்முறை பாளையில் ச்டாலின் நின்றாலும் நிற்பார். முசுலீம் லீக் விட்டுத்தாரவே தராது என்று மனம் கலங்கி கிடந்தார் அமைச்சர். எல்லாவற்றையும் மீறி திமுக இவரை நிறுத்தியுள்ளது. முதல் முறை இங்கு மார்க்சிய பொதுவுடமை கட்சி களம் காணுகிறது. பொதுவுடமை வாக்குவங்கி குறைவாக உள்ளதொகுதி. அதிமுக போனமுறையும் இத்தொகுதியை கூட்டணிக்கு விட்டுக்கொடுத்திருந்தது. இம்முறையும் மைதீன்கான் வெல்லும் வகையில் மார்க்சிய பொதுவுடமை கட்சிக்கு கொடுத்திருக்கிறது. பழனி வெல்வது இங்கு கடினமே. அன் அப்போசுடாக வென்ற மாதிரி வெல்வார் மைதீன். பாளை மீளும் மைதீன்கானுக்கு .

9. நாங்குநேரி :


எர்ணாவூர் நாராயணன்


வசந்தகுமார்











காங்கிரசு : வசந்தகுமார்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி: எர்ணாவூர் நாராயணன்

சிட்டிங் எம்.எல்.ஏ தொழில் அதிபர் வசந்தகுமார் இலவசமாக மாணவர்களுக்கு மாலை நேர பயிற்சி வகுப்புகள், போட்டிகள் வைத்து தன் உருவம் பொறித்த பரிசுகள், காலண்டர்கள் வழங்கல், சோனியாவின் பிறந்த நாளுக்கு காங்கிரசுக்காரர்களுக்கே கதர் துண்டு கொடுத்தல் என இலவசத்தால் மதிமயக்கும் காங்கிரசுகாரர் இவர். போன தேர்தலில் இவர் சொன்னது எதையுமே செய்யவில்லை. வாழைக்காய் பதப்படுத்தும் தொழிற்சாலையும், தகவல் தொழிற் நுட்ப பூங்காவும் இவர் போன தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள். தேர்தல் பிரச்சாரதிற்கு மட்டும் தொகுதிப்பக்கம், தப்பித்தவறி வென்றுவிட்டால் டெல்லி, சென்னை என இருக்கும் காங்கிரசுகாரர்களின் வழக்கதிலிருந்து சிறிதும் மாறாத ஆளு வசந்தம். ஓட்டுப்போட்டவன் எக்கேடு கெட்டா என்ன? நாம எம்.பியாகி டெல்லிக்குச் சென்று விடலாம் என பலவகையில் முயற்சித்தார். ஆனால் அது நடக்கவில்லை. எம்.பி ஆயிருந்தா நாங்குநேரிக்கு இடைத்தேர்தல் வந்திருக்கும் (நாடு, நாட்டுப்பற்றுன்னு நடித்து இருப்பவனையெல்லாம் கொடியேற்றி முட்டாயி திங்கவச்சிட்டு, இவர்கள் வியாபரம் பெருக்கிகொள்ள தேர்ந்தெடுத்த மக்களைப் புறக்கணித்து டெல்லி செல்வார்களாம்! நாட்டுப்பற்று புகழ் கதர்சட்டைகள் தொகுதிப்பற்றுடன் கூட இருப்பதில்லை!!) வென்றதிலிருந்து தொலைக்காட்சி வசந்த் அன் கோ விளம்பரங்களில் மட்டும்தான் நாங்குநேரி வீடுகளுக்கு வருகிறார். வசந்த் டிவி (கலைஞர் டிவி மாதிரி!) தனக்கென வைத்துக்கொண்டதுதான் இந்த ஆட்சியில் இவர் செய்த சாதனை. 'என் சுயநலத்தில் பொதுநலமும் கலந்திருக்கிறது' என்ற வசனத்தைப்போல, வசந்தகுமார் சட்டசபையில் எழுப்பிய கோரிக்கை "வியாபாரிகளை விற்பனை வரி அதிகாரிகள் துன்புறுத்தக்கூடாது" என்பதுதான்.

மாணிக்கராசு, சூர்யகுமாரு போன்ற அதிமுகவினர் கலங்க, இத்தொகுதியை சரத்குமார் கட்சிக்கு கொடுத்திருக்கிறது அதிமுக. அதிமுகவினர் கண்டிப்பாக இவ்வேட்பாளருக்கு ஆதரவாக வேலைசெய்ய மாட்டார்கள். முக்குலத்தோர் வாக்குவங்கியுள்ள ஊர். நாடாளுமன்றத்தொகுதியில்தான் நாடார் வாக்குவங்கியுள்ளது. அதிமுக, தேமுதிக கூட்டணி இருப்பதால் அதிமுகவின் அடிப்படை (முக்குலத்தோர்) ஓட்டுகள் பிரியவாய்பில்லை, அதிமுகவினர் இங்கு நின்றிருந்தால் இம்முறை கண்டிப்பாக வென்றிருக்கலாம். அடுத்த மாவட்டத்திலயே காங்கிரசு வேட்பாளருக்கு குழப்பம் உண்டு செய்யும் பழக்கத்தை உடையவரு நெல்லையைச் சேர்ந்த காங்கிரசு தனுக்கோடி ஆதித்தன். இவருக்கு எம்.பி சீட்டை மறுத்துவிட்டது காங்கிரசு தலைமை! அப்போது எம்.பி.சீட் கேட்டு குழப்பம் விளைவித்த வசந்தகுமாரை சும்மாவிடமாட்டாரு தனுக்கோடி. இது நாராயணனுக்குச் சாதகமாக அமையும். நடிகர் அசீத் "கலைஞர் மேடையில்" பேசிய பிரச்சனையில், நாராயணன் சவுண்டு விட்டதில் அனைவருக்கும் தெரிந்தமுகமாகிவிட்டார். சரத்குமார், விசயகாந்த் இரு நட்சத்திரங்களும் இணைந்து பரப்புரை செய்தால் வசந்தகுமாரின் குறைகள் எர்ணாவூர் நாராயணனனை வெல்லவைக்கலாம்.

10. ராதாபுரம்:


மைக்கேல் எஸ்.ராயப்பன்


வேல்துரை









காங்கிரசு : வேல்துரை
தேமுதிக:மைக்கேல் எஸ்.ராயப்பன்

வேல்துரை தொடர்ந்து இருமுறை சேரன்மாதேவி எம்.எல்.ஏவாக இருந்தவர், அத்தொகுதி மறுசீரமைப்பில் பறிபோனதால் ராதாபுரத்தில் எப்போதும் நிற்கும் அப்பாவுவிற்கு ஆப்படிக்கப்பட்டுவிட்டது. காங்கிரசிலேயே இருந்திருக்கலாமே, கலைஞரின் பெற்றோருக்கு சிலை வச்சும் பயனில்லையே என நொந்து போயிருப்பார் (சிலைவைத்தபோது கண்டிப்புதான் இவருக்கு பரிசாக கிடைத்தது). இந்தத் தொகுதி வேறு ஒரு கட்சிக்குப்போனால் கூட்டணியில் இருந்தாலும் சுயேட்சையாக ஆட்களை நிற்க வைக்கும் காங்ரகிரசு. கடந்தமுறை செல்வராஜ் என்பவர் இப்படி நின்றார். இம்முறை காங்கிரசிடம் தொகுதி இருக்கிறது. தனுக்கோடி ஆதித்தனின் ஆதரவாளர்கள் இங்கு காங்கிரசுக்கு உழைப்பார்கள். ஏன், பழைய காங்கிரசுகாரரான‌ அப்பாவுவின் ஆதரவாளர்கள் உழைத்தாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை. போனமுறை சேரன்மாதேவியில் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் வேல்துறை வென்றார். ஆனால் பல நலத்திட்டங்களை அங்கு செய்திருக்கிறார். எப்படியோ அதிமுக பி.எச். பாண்டியனின் பகையில் இருந்து தப்பி ராதாபுரத்தில் நிற்கும் இவர் இத்தொகுதிக்கு புதுமுகம் மாதிரிதான். மணல் கொள்ளை அதிமுக ஆட்சியில் தொடங்கி திமுக ஆட்சியில் தொடர்ந்த இழிகேடு! இந்த எம்.எல்.ஏவின் கையும் அதிலிருப்பதை மறுக்கமுடியாது. ஆனால் ராதாபுரத்தில் இதை பரப்புரை செய்தால் மட்டுமே மக்களுக்குத் தெரியும்.

நடார் வாக்குவங்கியுள்ள தொகுதி இது. சரத்கட்சிக்கு இவ்விடத்தைக் கொடுத்திருக்கலாம். மீனவர் ஓட்டுகள் இம்முறை ஆளுங்கட்சிக்கும், காங்கிரசுக்கும் சாதகமாக இருக்காது. நாம் தமிழர் தோழர்கள் பரப்புரை செய்தபோது இங்குள்ள உவரியைச் சேர்ந்தோர் காங்கிரசுக்கு ஓட்டுப்போடுவதில்லையென உறுதிசெய்துள்ளனர். "ராதாபுரம் தொகுதியில் மக்கள் விருப்பமான இடத்தில் காமராஜர், கக்கன் சிலைகளை எனது சொந்த செலவில் அமைப்பேன்" என காங்கிரசு ஓட்டை கவரும்வகையில் பிரச்சாரம் செய்கிறார் மைக்கேல் எஸ்.ராயப்பன். கில்லாடிதான்!. இப்படி இங்கு நிற்கும் காங்கிரசு வேல்துரை கூட சொல்லவில்லை. நெல்லை நாடாளுமன்றத்தொகுதியில் போட்டியிட்டு 94,000 வாக்குகள் பெற்றவர் மைக்கல். ஆனால் இவரது தொழில், தொடர்புகள் எல்லாம் மும்பையில்!. திரைத்துறை சார்ந்தவர். தாமிரபரணி நதியை பாதுகாக்க நடைபயணம் செய்து மக்கள் பிரச்சனையில் அக்கரை இருப்பதாக இம்மாவட்டதில் தேமுதிக காட்டியுள்ளது. ஆனால் இத்தொகுதி மக்கள் காங்கிரசுக்கும், திமுகவிற்கும் ஓட்டுப்போட்டு பழகிவிட்டார்கள். வேறு ஒருவர் இங்கு வந்தால் அது நிச்சயம் சாதனைதான். தொகுதி தற்போது வேல்துறைக்கு சாதகம்.

நெல்லையில் கடந்தமுறை அதிமுக ஒரு இடத்தில் (சங்கரன் கோவில்! சொ.கருப்பசாமியால் என்றாலும், வைகோவின் சொந்த ஊர் கலிங்கப்பட்டியுள்ள தொகுதி இது. மதிமுகவின் வாக்கும் சேர்ந்துதான் இந்த ஒரு இடத்தை அதிமுகவிற்கு பெற்றுத்தந்தது.)மட்டுமே வென்றது. இன்னொரு இடம் வாசுதேவ நல்லூர் அதில் அப்போதைய கூட்டணிகட்சியான மதிமுக வென்றது. 2001 தேர்தலில் 11 இடங்களில் போட்டியிட்டு 10 இடத்தில் வென்றது அதிமுக. ஆனால் 2006 ல் 2 இடம் மட்டுமே அதிமுக கூட்டணிக்கு. அதேபோல் திமுக 2001ல் இங்கு காணாமல் போயிருந்தது, 2006 ல் 9 இடங்களைப் பெற்றது திமுக கூட்டணி. 2001 ஆ? 2006 ஆ? என‌ இருகழகங்களும் திணறி நிற்கிறது நெல்லைமாவட்டத்தில். 2 (4 இடத்தில் போட்டியிடுகிறது) இடம் காங்கிரசுக்கு இம்மாவட்டத்தில் கிட்டும் என களநிலை கூறுகிறது. காங்கிரசை கடும் பரப்புரை மட்டுமே இங்கு வீழ்த்த இயலும்.

அதிமுக தேர்தலுக்கு சற்றுமுன்னர் நிர்வாகிகளின் பொறுப்புகளை மாற்றியதும், மதிமுக கூட்டணியில் இல்லாததும் நிச்சயம் இங்கு அதிமுகவிற்கு பாதிப்புகளை உண்டாக்கும். நெல்லையில் நாயினார் வென்றால் மகிழ்ச்சியே, ஆனால் அவர் தோற்க வேண்டும் என்பதற்கே திமுக மா.செ களமிறக்கப்பட்டுள்ளார். மைதீன்கான் அவர்களுக்கு எதிராக வேண்டுமென்றே பொதுவுடமை வேட்பாளர் (நிச்சயம் தோற்பார் எனத் தெரிந்து) நிறுத்தப்பட்டுள்ளார். ராதாபுரம் பலமான காங்கிரசு தொகுதி இங்கு மாற்றத்தை மக்கள் விரும்பினால் தேமுதிக வெல்லலாம். தற்போதைய நிலையின்படி, இம்மாவட்டம் திமுக கூட்டணிக்கு சாதகமாக இருக்கிறதென்பதே களநிலை.


வெல்லும் வாய்ப்பு

திமுக கூட்டணி - 6 இடங்கள்
அதிமுக கூட்டணி - 3 இடங்கள்
மற்றவை ‍- 1 இடம்

No comments: