Sunday, March 27, 2011

தமிழக தேர்தல் அலசல் 2011தமிழ்மக்கள் மனம் ஆறா வேதனையில் இருந்தபோது நடந்தது நாடாளுமன்றத்தேர்தல். மக்களைப் பற்றி கவலைகொள்ளாத, ஆனால் அக்கரையிருப்பதுபோல் கட்டிக்கொள்ளும் பெரியகட்சிகளில், திமுக நாடாளுமன்றத் தேர்தலை தன் இயலாமையையும், இன அழிப்பிற்கு துணைபோன துரோகத்தை மக்கள் மறக்க ஒரு சாக்கு என்ற நினைப்பில் சந்தித்தது. அதிமுக அத்தேர்தலில் அதிக இடம் பெற்றால் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைத்து மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்ற கணக்கில் இருந்தது. மக்களுக்காக கதறிகொண்டிருந்த சிறிய கட்சிகளோ திடிரென காட்சியை மாற்றி, தங்களது கட்சியின் அரசியல் வாழ்விற்கென பெரிய கட்சிகளை நோக்கி ஓடின. எதைப்பற்றியும் கவலைப்படாமல் நடந்தது தொகுதிப் பங்கீடுகள், பேரங்கள், தேர்தல் நாடகம், குடும்பத்தினர் பதவிபெற பவர் புரோக்கர்களுடன் தொலைபேசி கலந்துரையாடல்கள், பதிவியேற்புகள்!. எவ்வளவு கேடு கெட்டதாய் தமிழக அரசியல் மாறி இருக்கிறதென, நம் ஒவ்வொருவருக்கும் தெரிந்திருக்கிரது. ஆனால் இன்று தமிழ்நாட்டில் எவனுக்கும் பங்குவைக்காமல், தமிழனுக்குரிய இரண்டு இடங்களாய் சிறையும், அரசியலுமே உள்ளது. தேர்தல் அரசியல் என்பது இந்தியா என்ற அமைப்புக்குள் இருக்குவரை நம்மை தொடரப்போவது. தேர்தலால் மக்களுக்கு விளையும் நன்மைகளைவிட தீமைகளே அதிகம். உலகம் முழுவதிலும் அரசியல் கட்டமைப்புகள் மீது மக்கள் தங்கள் ஆவேசத்தைக் காட்டிவரும் நேரமிது. மக்களாட்சி என ஓதப்படும் ஒரு அமைப்பில் எவ்வளவு ஊழல் நடந்தாலும், ஒடுக்குமுறைகள் நடந்தாலும் என்ன மாற்றம் வருகிறது? மன்னராட்சி முறையைவிட, சர்வாதிகாரத்தைவிட, கொடியது இந்தத் தேர்தல் அரசியல். அதிலாவது மக்கள் போராடினால் சட்டென்று ஒரு மாற்றம் வந்து விடுகிறது. ஆனால் இதில் ஆட்சி மட்டுமே மாறுகிறது. மாற்று இல்லாதபோது இருப்பதைப்பற்றி விவாதித்து நம்மை மெல்லக் கொல்லும் விடத்தை தேர்ந்தெடுக்கத்தான் வேண்டியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழினம் மனதிற்குள் அழத் தேர்தலைக் கொண்டாடிய கட்சிகளில் ஒன்று இன்று வெறுப்பணி, அரசியலுக்காக கூட்டணியாகி சிபிஐ விசாரணையை மனதில் கொண்டு சந்திக்கிறது. திமுக வென்றால் ஆட்சியில் பங்கு கேட்க கனிமொழி கைது நடக்கும். தோற்றால் மற்ற மாநிலத் தேர்தல்களை மனதில் கொண்டு காங்கிரசு புனித பிம்பம் காட்ட கைது நடக்கும், எப்படியும் திமுகவிற்கு மனவேதனைதான். மற்றொரு கட்சி எதைசெய்தும் இம்முறை ஆட்சியில் அமர்ந்தே ஆகவேண்டும். மிச்சமிருக்கும் நிர்வாகிகள் கட்சிமாறி அதிமுக காணாமல் போவதை தடுத்தே ஆக வேண்டும் என்பதால் தன் பக்கம் திரும்பாத காங்கிரசை வெட்கம்விட்டு அழைத்துப்பார்த்தது. சுற்றியிருக்கும் சு, சோக்கள் ஓத மதிமுகவை கழட்டி விட்டது, நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளைக் கொண்டு, வாக்கு சதவிகிதத்தைக்கொண்டு (அடப்பாவமே!) அமைக்கிறது ஒரு பொருந்தாக்கூட்டணி!.

சின்ன கட்சிகளில் ஒன்று நம் இனம் செத்துவிழுந்தபோது, தேர்தலை புறக்கணிக்கிறேன் என அறிவித்து இருந்தால், அக்கட்சியின் அரசியல் இடம் தமிழகத்தில் இன்று வேறாக இருந்திருக்கும். அப்போதுதான் தன்னிடம் வந்துசேர்ந்த ராமதாசுடன் பேச்சுவார்த்தை முடித்துவிட்டு, எப்போதும் உடனிருந்த தன்னை செயலலிதா தொகுதி பங்கீட்டிற்கு அழைத்தபோதேனும் வெளியே வந்திருக்கலாம் வைகோ. அப்படிசெய்யாமல் தன் பலத்தை நிருபிக்க தானே தேர்தலில் நின்று தோற்றதால் இன்னும் குறைந்து போனது அவரது செல்வாக்கு அம்மாவின் கூடாரத்தில். அப்போதேனும் பொதுவுடமை கட்சிகள், மனக்குறையில் இருக்கும் சங்கங்கள்(கள் இறக்குவோர், சாயபட்டறை, பால் உற்பத்தியாளர்கள், நகைதொழில் புரிவோர்..) மனிதநேய மக்கள் கட்சி, லட்சிய திமுக, சரத், கார்த்திக் கட்சிகள் மற்றும் தேமுதிகவுடன் கூட்டணியமைத்து பார்த்திருக்கலாம். கடைசிவரை வைகோவை காக்க வைத்து கழுத்தறுத்துவிட்டது அதிமுக. மனவேதனையில் மதிமுக ஒதுங்கி நிற்கிறது இத்தேர்தலில்!

சட்டமன்றத்தேர்தலுக்கு ஒரு கூட்டணி, நாடாளுமன்றத்தேர்தலுக்கு பிரிதொரு கூட்டணி என மாறும் மருத்துவர் இத்தேர்தலில் வெல்லும் வாய்ப்பு அதிமுகவிடம் இருக்கிறன என பத்திரிக்கைகள் இத்தனை அலறல் அலறியும் அணி மாறியது ஏன்? அன்புமணியின் மந்திரி பதவி ஒன்றுக்காகத்தான் என மக்கள் நம்புவார்கள். ஆனால் ஏன் என்பது மருத்துவர் கட்சிக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்!. அவர் கடந்தமுறை போல் முழுமனதுடன் இம்முறை இக்கூட்டணியில் இல்லை.

அன்று மட்டும் வைகோவும், ராமதாசும், திருமாவும் தேர்தலை புறக்கணித்து மக்களுடன் நின்றிருப்பார்களேயனால் வைகோ-ஒன்று ராமதாசு-சைபர் என்ற பரிதாபம் நிகழ்ந்திருக்காது. 2001 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அடிப்படையில் தொகுதி பங்கீடுகள் நிகழ்ந்திருக்கும். இம்முறை காங்கிரசால் பாமக தப்பித்தது, வைகோவை செயா இப்படித்தான் நடத்தியிருப்பார் என்றாலும் மக்கள் மனதில் வைகோ நின்றிருக்கலாம்.

தமிழக மக்கள் ஒரு ஆட்சியினால் பாதிக்கப்பட்டு அடுத்த தேர்தலில் வேறு கட்சிக்கு வாக்களிப்பார்கள் இது எதிர்ப்பரசியல் என்றெல்லாம் அரசியல் ஆய்வு செய்வோர் தொடர்ந்து எம்.சி.யார் முதல்வராக இங்கு இருக்கமுடிந்ததெப்படி? என்பதை சிந்திக்கவேண்டும். ஒவ்வொரு கட்சியும் உளவுத்துறை தரும் தகவல்களை கொண்டும், தேர்தல் நேரத்தில் கட்சி நிர்வாகிகள் டிக் அடித்து கொடுக்கும் வேட்பாளர்களையும், இல்லையெனில் மக்களுடன் கலந்து பழகாமல், அரசியல் தெரியாமல் மொட்டைத் தலையை தடவிக்கொண்டு, பத்திரிக்கைகளில் வரும் புள்ளிவிவரங்களைக் கொண்டு மட்டும் தமிழ்நாட்டு அரசியலை தீர்மானிக்கும் மேதாவிகளின் வாய்வார்த்தைகளில் இருந்தும் (இவர்களுக்கு கூட ஒரு காலம், ஒரு கட்சி வந்திருச்சு தமிழ்நாட்டுல! அதிகாரம் செய்ய!. தமிழந்தான் யாரோ தலைவனாக இருக்க செத்த தமிழர்களாகவே கும்பிடு போட்டுட்டு இருக்கிறோம்!, கூட்டணிக்கு அவுங்க காலில விழுந்துகிட்டு!!), பணம் எவ்வளவு செலவு செய்வார்கள் வேட்பாளர்கள் என்பதை கொண்டும், சாதி ஓட்டு அவருக்கு எவ்வளவு இருக்கிறதெனப் பார்த்தும் ஆட்களை நிறுத்துகிறது. மக்கள் பணி செய்ய தகுதியானவர் யார் என்பதை எந்தக்கட்சியும் பார்ப்பதில்லை. நமக்கான அரசியலை மக்களுக்குப் புரிய வைக்கவேண்டும்.

காங்கிரசு??? சுதந்திர இந்தியாவை நெடுங்காலம் ஆண்ட காங்கிரசு. மக்களுக்குச் செய்த நன்மைகளை விட துன்பங்களே அதிகம். சுதந்திர இந்தியாவின் தொடக்கத்தில் காங்கிரசு கதர் இந்திய பாகிசுதான் பிரிவினையால் இரத்தத்தில் நனைந்தது. பிறகு காசுமீர் இரத்தம், வடகிழக்கு இரத்தம், பஞ்சாபியர் இரத்தம், தெலங்கானா இரத்தம் எனத் தொடர்ந்தது... தமிழ் இனத்தின் மீதோ குரூரமாய் தாண்டவம் ஆடிக்களித்தது. பிறரில் இருந்து இரத்தம் பாய்ச்ச காங்கிரசிற்கு அரசியல் ஆதாயமும், பஞ்சாப்பிற்கு சிறிய பழிவாங்கலும் இருந்தது. ஆனால் நம் மீது கொடிய வன்மமும், இனப்பகையும் கொண்டியங்குகிறது காங்கிரசு. ஒரே ஒரு மரணதிற்காய் நிலத்திலும், நீரிலும் நம்மை வாழவிடாமல் துரத்திக் கொல்லும் காங்கிரசை நம்மால் தேர்தலில் மட்டுமே வீழ்த்த இயலும். அனைவரையும் இந்தியாவில் வஞ்சித்த காங்கிரசு நம்மை மட்டுமே எல்லை தாண்டியும் வஞ்சிக்கிறது. அரபுநாடுகளில் மக்களின் தன்னெழுச்சிகண்டு தலையிட்டு அமெரிக்கா போராடும் மக்களுக்கு ஆதரவாக படைகளை அனுப்பி தாக்குகிறது. பிரான்சு உள்ளிட்ட நாடுகளும் தலையிட ஆரம்பித்துவிட்டன.. ஆனால் நாம் கத்திய கத்துகளை எட்டவிடாமல் செய்துவிட்டார்கள் கொடும்பாவிகள். காலம் நெடுகிலும் தன் கையை இரத்தத்தில் நனைத்திருக்கிறது காங்கிரசு. காந்திக்கும் எளிமையை போதுத்தது எம் மண். ஊருக்கு தேசியமும், உலகிற்கு அகிம்சையும் படங்காட்டும் கொலைக்கரம் காங்கிரசு சின்னம். எவரை வேண்டுமானாலும் ஓட்டுப்போட்டு வெல்ல வைப்போம். உங்கள் ஊரில் உங்களுக்குத் தெரிந்தவர் சுயேட்சையாக நிற்கும் தோழரானாலும் சரிதான் ஆனால் காங்கிரசைத் தோற்கடித்து தமிழ் எல்லைக்கு அப்பால் நிறுத்துவோம்!.

80 களில் வந்த பெருஞ்சித்திரனாரின் இதழ்கள் கிடைத்தால் பாருங்கள், அதில் செய்தி எழுதும்போது "நம்முதல்வர்(?)" என எழுதியிருப்பார் அய்யா. கோபம், ஆற்றாமை, எள்ளல், பரிதாபம் என எல்லாம் தெரிகிறது ? ல். இந்த ? தான் இன்னும் தொங்கிக்கொண்டிருக்கிறது தமிழனின் அரசியல்.

நமக்கான காலம் வர காத்திருப்போம் இன்னும் 5 ஆண்டுகள். அதுவரை? கணிப்பெழுதிக்கொண்டிருக்க வேண்டியதுதான் வேறவழி?

மொத்தத் தொகுதிகள் : 234

திமுக கூட்டணி தொகுதிகள் :


திமுக : 119 இடங்கள்
காங்கிரசு : 63 இடங்கள்
பா.ம.க : 30 இடங்கள்
விசி : 10 இடங்கள்
கொங்கு நாடு முன்னேற்ற கழகம் : 7 இடங்கள்
இந்திய யூனியன் முசுலிம் லீக் : 3 இடங்கள்
மூவேந்தர் முன்னேற்ற கழகம் : 1 இடங்கள்
பெருந்தலைவர் மக்கள் கட்சி : 1 இடம்


அதிமுக கூட்டணி தொகுதிகள் :


அ.தி.மு.க. 160 இடங்கள்
தே.மு.தி.க. 41 இடங்கள்
பொதுவுடமை (மா) 12 இடங்கள்
பொதுவுடமை (இ) 10 இடங்கள்
மனிதநேய மக்கள் கட்சி 3 இடங்கள்
புதிய தமிழகம் கட்சி 2 இடங்கள்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி 2 இடங்கள்
அகில இந்திய மூவேந்தர் முன்னணிகழகம் 1 இடம்
இந்திய குடியரசு கட்சி 1 இடம்
அகில இந்திய பார்வர்டு பிளாக் 1 இடம்
கொங்கு இளைஞர் பேரவை 1 இடம்


திமுக பெரியவர்கள் பலரை ஓய்வில் இருக்க சொல்லிவிட்டது. சிலரது வாரிசுகளுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. வென்றால் முதல்வர் சுடாலிந்தான் என்பதை இது சொல்லுகிறது. அம்மா கட்சி அடிச்சு பிடிச்சு பழையவர்கள் சிலரை இழுத்துவந்திருக்கிறது, இவர்களுடன் போனமுறை வென்றவர்களும், கட்சி மாறியவர்கள் புண்ணியத்தால் போனமுறை தோற்றவர்கள் சிலரும், சில புதியவர்களும் உண்டு. காங்கிரசோ பழையவர்களுடன் இளைஞர் காங்கிரசையும் இணைத்திருக்கிறது. பமகவும், விசிக்களும் எப்போதும் போல் வய்ப்பளித்திருக்கிறது. தேமுதிக நாடாளுமன்றத் தேர்தலில் நின்ற பலரையும் மற்றும் புதியவர்களையும் நிறுத்தியுள்ளது. பொதுவுடமை கட்சிகளில் பலர் கடந்த சட்ட மன்றத் தேர்தலில் வென்ற முகங்கள்.

அலசலை குமரியில் இருந்து துவங்குவோம். தேர்தலுக்குள் முழுமையாக முடிக்க முடியுமா எனத் தெரியவில்லை... பார்க்கலாம்.

No comments: