Friday, February 11, 2011

கீழிழுக்கும் நண்டுகள் - 2

முதல்பகுதி இங்கு…

எப்போதும் தன்னை சுயவிமர்சனம் செய்துகொள்ள தயங்காதவர் சீமான். சினிமாவால் எதையும் சாதிக்கமுடியாது! என சினிமாவில் இருந்துகொண்டு பேசியவர். ஆரம்ப காலங்களிலிருந்து அவரைப்பார்த்து வருபவர்களுக்கு தெரியும், அவர் மேடையில் பேசிக்கொண்டிருக்கும்போதுகூட தன் உணர்வு கேட்கும் மற்றவர்களுக்கு புரியவேண்டும் என்ற தவிப்புடன் பேசுவதுபோல் இருக்கும். தான் தவறானது என நினைக்கும் ஒன்றை உடனே எதிர்க்கவேண்டும் என நினைப்பவர். செயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டது கூட அப்படித்தான். அந்த தேர்தலில் அவர் திமுகவால் பயன்படுத்திக் கொள்ளப்பட்டார். அவசரமாக அரசியலில் எதையும் இனி செய்யக்கூடாதென்பதிலும் தெளிவாகவே இருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலின்போது அரசியல்வாதிகளின் உண்மை முகங்களை அருகில் இருந்து தெளிவாகப் பார்த்து உணர்ந்து கொண்டதால்தான் தமிழருக்கான அரசியல் வேண்டுமென களம் இறங்கினார். நாடுகடந்து அரசியல்சக்தியாக செயல்பட்ட சுபாச் சந்திர போசை நினைவுகூற வேண்டுமென்றால் (நாடுகடந்த தமிழீழ அரசுக்காக), தமிழ்நாட்டின் நேரம் அதில் முத்துராமலிங்கத்தையும் பேச‌வேண்டியிருக்கிறது. திராவிட கட்சிகள் ஒரு சாதியின் ஓட்டைப்பெற முன்னிலைபடுத்திய முத்துராமலிங்கம், அவரால் ஏற்பட்ட முதுகுலத்தோர் கலவரத்தின் பதிவுகளை சட்டமன்றம் தன்னிடத்தே கொண்டிருந்தும், தற்போது அவர் நினைவுநாள் அரசுவிழாவாக கொண்டாடும் அளவிற்கு உருவாக்கப்பட்டுள்ளார். முப்பது வருசமா பசும்பொன்னுக்குப் போய், ‘உள்ள(மனம்) வலிமை கொடு!’ன்னு வேண்டிகிட்டு வருவதாக வைகோ சொல்கிறார். செயல‌லிதா, சசிகலாவுக்காக முக்கியதுவம் கொடுத்த தேவர்செயந்தி, இப்போது அத்துணை அரசியல்வாதிகளும் அவர் சிலைக்கு மாலை போட்டே ஆக வேண்டுமென்ங்கிற நிலைக்கு வந்துவிட்டது. “அஞ்சாநெஞ்சன் என்றால் யாரு? தா.கிருட்டினன் எங்கள் இனம்!" எனப் பேசிய வழக்கறிஞர் வெள்ளைச்சாமியால் திகிலடைந்ததாலோ என்னமோ திமுகவிலிருந்து அத்தனை பேரும் மாலையும் கையுமாக சென்று, செயலலிதா போல் தேர்தல் நேரத்தில் மட்டும் வராமல், ஒவ்வொரு வருடமும் நாங்கள் வருகிறோம் என்கிறார் ச்டாலின். திருமாவளவனைக் கேட்கவே வேண்டாம். தேவரின் நூற்றாண்டு விழாவிற்கு விடுமுறை கேட்கமுடியும், ஆனால் அயோத்திதாசர் நடத்திய 'ஒரு பைசாத் தமிழன்' இதழுக்குதான் அவர்களால் அரசு சார்பில் நூற்றாண்டு விழா கேட்கமுடியும். பொதுவுடமை கட்சிக‌ள், காங்கிரசு, பாரதிய சனதா இவர்கள் அத்தனைபேரும் காந்தி செயந்திக்குகூட ஒண்ணா இருந்ததில்லை. மக்கள் பிரச்சனைக்காக ஒன்றாக இவர்கள் எப்போதும் நின்றதில்லை. ஆனால் இவர்களையெல்லாம் பெரிதாக யாரும் விமர்சித்ததில்லை. இவர்கள் இப்படித்தான் எனக் கடந்துவிடுகிறோம். சீமான் செல்வது இவ்வளவு கேள்விகளையும், மனவேதனைகளையும் எழுப்புகிறதென்றால் மக்கள் அவரை மாற்று அரசியல் சக்தியாக பார்ப்பதால்தான். பிரபாகரன் சுபாச் சந்திர போசை தன் வழிகாட்டியாக கொண்டவர். தமிழ்நாட்டில் பார்வர்டு பிளாக் கட்சியின் முகவரி முத்துராமலிங்கம். அதனால் அவர் பெயரையும் சொல்கிறோம் என்றால், அதை ‘சாதிக்கட்சி’ போல மக்களை நினைக்கவைத்தவரும் அவர்தான். அம்பேத்காரை பேசும் தமிழ்தேசியவாதிகள் இன்னொரு பிரிவினரை சமாதனப்படுத்த முத்திராமலிங்கத்தையும் சேர்த்துக்கொள்கிறார்கள் எனக்கொண்டாலும், ஆதிக்கத்தின் எதிர்குறியீடான அம்பேத்காரை சாதிய ஆதிக்கவாதியுடன் சேர்த்து குறிப்பிட்டால் அம்பேத்கார் அவர்களையும் குறிப்பிட்ட சாதினருக்கான சாதித்தலைவனாக மட்டுமே குறுக்கும் துரோகத்தை செய்கிறோம் என்பதை உணரவேண்டும். பிறரின் உணர்வறியாது செயலாற்றியதே முன்னால் தமிழ்தேசியவாதிகளின் ஒரே குறை. மக்கள்மீது அன்பிருந்தும் அதை வெளிக்காட்டும்முறை வேறுபட்டதால் அவர்கள் மக்களில் இருந்து தள்ளியிருந்தார்கள். இன்று ஒரு சாதிக்காக ஒருவரின் பெயரை உச்சரிப்போமானால் தமிழ்நாட்டில் எத்தனை சாதி இருக்கிறது, அத்தனை சாதித்தலைவர்கள் பேரையும் சொல்லமுடியுமா? அவர்களுக்கு பொங்க வைக்கிறாங்க, கெடவெட்டுறாங்கன்னு? முத்துராமலிங்கதேவருக்கு தெரிந்தது இந்திய தேசியம். தமிழ்தேசியத்துக்கும் அவருக்கும் இருந்த சம்பந்தம் சில தமிழ்தேசியவாதிகளின் முருகப்பற்றால் சாயவேட்டியும்!, காவடியும்!, நெற்றி முழுவதும் பட்டையுந்தான்!. தமிழகத்தில் இந்திய சுதந்திரத்திற்காக ஆள் அம்பு திரட்டியவர், சிறை சென்றவர் என்றாலும், உலகத்துலயே எந்த சுதந்திரபோராட்ட வீரருக்காவது, தேரு, மஞ்சத்தண்ணி, மொளப்பாரி, கொலவ, மொட்டை, பால்குடம், பொங்கல், கெடாவெட்டு, "செவ்வாயில் சீவராசி வசிக்கும்; அங்கும் தென்னாட்டு தேவராட்டம் நடக்கும்!!" னு பாட்டு என இந்த அநியாயம் உண்டா? உ.மு.தேவர் எனத்தமிழிலும், U.M.Devar என ஆங்கிலத்திலும் கையெழுத்துப்போட்ட முத்துராமலிங்கத்தின் வழிகாட்டல் இப்போது அச்சாதியில் 18 வயசு பையனைக் கூட தன் பெயருடன் தேவர் எனப்போட வைக்கிறதே? இவருக்கு முன் குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்தோர் பலர். இவரும் அதற்கெதிராக போராடியவராகவே இருந்தாலும், அச்சட்டத்தால் அவர் பாதிக்கப்பட்டதில்லை, எதிர்காலத்தில் பாதிக்கப்பட்டாலும் படுவோம் எனவே அச்சட்டத்தை எதிர்க்கிறேன் என்று அவரே பேசியிருக்கிறார். சி.பா.ஆதித்தனாரின் 'நாம் தமிழர்' என்ற இயக்கத்தை மீண்டும் எடுத்ததற்கே சீமானைப் பாராட்ட வேண்டும். ஆதித்தனாரின் தமிழ்தொண்டு நமக்குத் தெரிந்ததுதான், ஆனால் இன்று அவரையும், காமராசரையுமே சாதிக்குள்ள அடச்சிட்டாங்க!. இன்றைய சூழலில், எக்குலமும் வாழட்டும்; முக்குலமே ஆளாட்டும் என இவர்கள், முக்குலம் வாழட்டும் நாடார்குலம் நாட்டை ஆளாட்டும் என அவர்கள். இத்தகைய சாதி சங்கங்களால்தான், வெறும் 2000 பேர் படிக்கும் சட்டகல்லூரியில் கூட இளைஞர்கள் நிம்மதியாக தங்கள் படிப்பை மட்டும் பார்க்கமுடிவதில்லை. தற்போதைய தமிழ்நாட்டு அரசியலில் முத்துராமலிங்கத்திற்கு இருக்கும் இடம்(அவரு இருந்தபோது பாவம் இப்படியில்ல!) நிறைய சாதிகளை பொங்கல் வைக்கத்தூண்டி கொண்டிருக்கிறது என்ற உண்மையை அறிந்து செயலாற்றுதல் நலம்.

பெரியாரின் திராவிடகழகங்கள் தங்களுக்குள் ஒருவரையொருவர் தாக்கிகொண்டதில் கொண்ட கவனம் பெரியாரியல் பரப்பி, பெருகிவரும் சாதி அமைப்புகளை தடுப்பதிலும் இருந்திருக்கலாம். ஒடுக்கப்பட்டோர் தங்கள் உள்ளக்குமுறலை காட்ட ஒன்றிணைதலுக்கும் ஆதிக்கசாதிகள் பேரவைகள் வைத்து அடித்துக்கொள்வதற்கும் வேறுபாடு உண்டு. பாகுபாடற்ற, தமிழர்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் அரசியல் இயக்கமே இன்றைய தேவை.

எம்.சி.யார், செயலலிதாவின் இலங்கை நிலைப்பாட்டை பார்க்கும்முன், இந்தியாவின் வெளியுறவு கொள்கை பற்றி கொஞ்சம் பார்த்துவிடுவோம். இந்தப் பொராணம், இதிகாசமெல்லாம் இப்ப எதற்கு என எனக்கும் கேள்விவருகிறதுதான்!. ஆனால் காங்கிரசின் தமிழ்மக்கள் மீதான பேரன்பை, ஆதிக்காலம்தொட்டு அது தமிழனுக்கு செய்துவரும் நன்மைகளை சொல்லாமல் எப்படி விடுவது?இந்தியா சுதந்திரம் அடைந்ததும் சுமார் 17 வருடங்கள் இந்தியாவை ஆண்ட நேருவிடம் உருப்படியாக இருந்த 2 கொள்கைகள் தலையிடாக் கொள்கை, அணு ஆயுத எதிர்ப்புக்கொள்கை. இந்த தலையிடாக்கொள்கை எவ்வளவு போலித்தனமானது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். இந்திய-பாகிசுதான் பிரிவினையின் போது, முசுலீம்கள் அதிகம் வாழும் கசுமீரம் க‌ரிசிங் என்ற இந்து மன்னனால் ஆளப்பட்டுவந்தது. மன்னன் அப்போது இந்தியா, பாகிசுதான் இரண்டு நாட்டிடமும் சேராது தனியான நாடாக கசுமீரம் இருப்பதையே விரும்பினான். பிரிவினையினால் இந்தியாவில் இந்து, முசுலீம் , சீக்கீயர் இடையே ஏற்பட்ட இனக்கலவரம் கசுமீர் பகுதியிலும் முசுலீம் மக்களுக்கு எதிராக எதிரொலித்தது. கசுமீரத்தின் மேற்கு பகுதியில் அதிக அளவில் இருந்த முசுலீம் மக்கள் மன்னருக்கு எதிராக கிளர்ந்தனர். மக்களின் விருப்பம் சுதந்திர தனி கசுமீரம். மன்னர் படை அங்குள்ள கிராமங்களை எரித்தது, இனக்கொலை நடத்தியது. இதை சாக்காக வைத்து பதான் பழங்குடியினர் ஆயுதம் தாங்கி மன்னருக்கு எதிராக போரிடத் துவங்கினர். மன்னர் இந்தியாவின் உதவியை நாட, நேரு, "ம்கூம் நாங்க தலையிடமாட்டோம்" என்று கூறவில்லை. இந்தியாவுடனோ, பாகிசுதா னுடனோ மற்ற ஆட்சிகளை இணைத்தது போல கசுமீரப்பகுதிகளையும் இணைக்க ஒத்துக்கொண்டு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டால், போர் உதவி செய்கிறோம் என்றார். நேருவின் நெருங்கிய நண்பரான சேக் அப்துல்லா(இவர் பின்னாளில் நேருவால் கைதுசெய்யப்பட்டு நம்மூர் சிறையில் இருந்தார்) ஒப்புதல் தர, இந்தியா விடுதலை பெற்று மூன்றே மாதங்களில் இந்திய இராணுவம் சிரிநகரில் குவிக்கப்பட்டது.

இந்திய இராணுவம் சிரிநகரில்


இதனால் ஆத்திரம் அடைந்த பாகிசுதான் சிறிது, சிறிதாக தன் படைகளையும் அனுப்ப, அப்படை, பதான் பழங்குடி படையுடன் சேர்ந்து கசுமீரின் ஒரு பகுதியை முற்றுகையிட்டு அசாத் கசுமீர் ஆக்கியது. நேரு ஐக்கிய நாடுகள் சபையில் முறையிட்டார். பிரச்சனை தீர பதான் படைகளை விலகிக் கொள்ளவும், போரை நிறுத்தவும், பொதுவாக்கெடுப்பு நடத்துமாறும் ஐநா சபை அறிவுறுத்தியது. இதைச் செய்திருந்தால் இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த மேலும் இரண்டு போர்களைத் தவிர்திருக்கலாம். ஆனால் நேரு அதைச்செய்யவில்லை. தொடர்ந்து ஐநாவின் அலோசனைகளை செயல்படுத்தாமல் இருப்பதயே செய்துவந்தார். இதை பற்றி விரிவாக எழுதலாம் பிறகு.

இந்திய-சீன ஒப்பந்தம், 1954 பஞ்சசீலக்கொள்கைகளைக் கொண்டு (Panchsheel என்பது 'இந்தி'வார்த்தை!, ஒப்பந்தம் பெய்சிங்கில் கையெழுத்தானது!!)
ஒப்பந்தம் போடப்பட்டது. இது இருநாடுகளுக்கிடையே ஆன வணிக உடன்படிக்கை. திபெத்தில் வாணிகம் செய்ய, இந்தியாவும் சீனாவும் உடன்படிக்கை போட்டுக்கொள்கிறார்கள்!!.

ஒப்பந்தம் பற்றிய தகவல்கள் இங்கு

“…..At least that was how Jawaharlal Nehru repeatedly explained it to his people. In terms of its concessions, it meant that for the first time, India recognized China’s complete control over Tibet. In this agreement India voluntarily gave up its military, communication and postal and other rights which New Delhi had inherited from the British in accordance with the Anglo-Tibetan Treaty of 1904.”

(ஆங்கிலோ-திபெத்திய உடன்படிக்கை (Anglo-Tibetan treaty) பிரிட்டன் ஆண்ட இந்தியாவிற்காக திபெத்திய எல்லைகள் திறக்கப்பட்டு ஆங்கிலேய மற்றும் இந்திய வணிகர்கள் எளிதாக திபெத்திற்குள் வர அனுமதியளித்தது. இந்தியா பிரிட்டனிடம் இருந்து பெற்ற திபெத்தின் மீதான மரபுரிமைகளை விட்டுக்கொடுக்கும் என கையெழுத்திட்டது.)

நேரு, எதிலும் தலையிட மாட்டோம், திபெத்தின் மீதான சீனாவின் உரிமையை புரிந்து ஏற்றுகொள்கிறோம்னு சொல்லிவிட்டு (இவர்கள் வணிகம் புரிய திபெத்து உன்னோடுதான்னு சீனாக்காரன்கிட்ட சொல்றாய்ங்க!, ஒப்பந்தம் சீனாவோடல்ல போடறாங்க, ஈழத்தமிழருக்காக இந்தியாவும், இலங்கையும் ஒப்பந்தம் போட்டுகிட்டமாதிரி!!) , சீன எல்லையில் எப்போதும் இந்திய தொல்லையைத் தொடர்ந்தும்(படையரண் அமைத்து!), தலாய்லாமாவை இந்தியாவில் தங்க அனுமதித்தும் சீனாவின் கோபத்தை கிளறினார். (இப்ப இத்துனூண்டு இலங்கையோட கோபத்துக்கு பயப்படறாங்களாம்!!). 1911ல் தன்னை சீனாவின் பிடியிலிருந்து சுதந்திர நாடாக அறிவித்துகொண்ட திபெத்தை உலகநாடுகள் அங்கிக‌ரிக்கவில்லை, 1951ல் சீனா மீண்டும் திபெத்தை தன்னுடன் இணைத்துக்கொண்டது. தலாய்லாமா தப்பி இந்தியாவிற்கு வந்தார். ஒருபக்கம் சீனாவிடம் ஒப்பந்தம் போட்டு திபெத்து உனக்கு உரிமையானதுதான்னு சொல்லிட்டு, மறுபக்கம் ஓடி வந்த தலாய்லாமாவ வசதியா தங்கவச்சிகிட்டாங்க. கோபமடைந்த ‌சீனா, 1962ல் திபெத்துக்கு அருகில் உள்ள காசுமீரத்தின் ஒரு பகுதியை கைப்பற்றியது. இன்னொருபுரம் அசாம் வரை வந்துவிட்டது. விளைவு இந்திய-சீனப்போர் மற்றும் பகிசுதான்-சீனா உறவு!. இந்தியாவின் முதல் வெளியுறவுத்துறை அமைச்சரும் நேருதான். இப்படிபட்ட இரட்டை அணுகுமுறைதான் தலையிடாக்கொள்கை (நேரடியா தலையிட மாட்டோம், மறைமுகமா தலையிட்டு மரண அடி கொடுப்போம்!). சீனா இந்தியாவிற்குள் படையெடுத்து வராது என நேரு நம்பிக்கொண்டிருந்தபோது, சீனா இந்தியாவின் வடகிழக்கில் சில பகுதிகளை கைப்பற்றிவிட்டது. இந்தியா அமெரிக்காவின் வான்படை உதவியை கோரியதைத்தொடர்ந்து, சீனா நவம்பர் 20 1962ல் போர் நிறுத்தம் அறிவித்ததால் இப்போர் முடிந்தது.

எதற்கெடுத்தாலும் அடுத்த நாட்டோட ஒப்பந்தம், உடன்படிக்கை போடுற நேரு, உள்நாட்டில் இருக்கும் கோவாவை போர்த்துகீசியரிடம் இருந்து இராணுவத்தை அனுப்பி கவர்ந்தார்

அன்றைய வல்லரசுகளிடமும் நேரு தலையை ஒரு நாட்டிடமும், வாலை இன்னொரு நாட்டிடமும்தான் காட்டிக்கொண்டிருந்தார். தமிழர்களிடம் நேருவின் அணுகுமுறை எப்படி இருந்தது?. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் அவர்வர் இங்கு போராடி தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டிருந்த போது, நேரு உதிர்த்த வார்த்தை 'நான்சென்ஸ்'. கசுமீரத்தில் நான்சென்ஸ் ஆக மக்களாட்சியின் ஆரம்பத்தில் தேர்தலையே கேலிக்கூத்தாக்கிய நேரு, இந்தியாவின் எந்தப் பிரச்சனையிலும் ஆழமான புரிதலோ, நிலையான தீர்வு காணும் எண்ணமோ இல்லாமல் இருந்தவர் என்பதற்கு இன்றுவரை அம்மக்களை துன்புறுத்திகொண்டிருக்கும் கசுமீரும், இந்தியாவுடன் உதட்டில் புன்னகையும், நெஞ்சில் வன்மமும் கொண்டிருக்கும் சீனாவும் சாட்சிகள்.

முதன்முதலில் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு 1939 ல், இந்தியவம்சாவளி வியாபாரிகளை இலங்கையிலிருந்து வெளியேற்ற முயற்சி நடந்தது. இப்பிரச்சனைகளை பற்றி பேச இலங்கை சென்ற நேரு, பேச்சு வார்த்தை தோல்வி அடைய, அங்குள்ள இந்தியர்களிடம் உங்களுக்கென ஒரு காங்கிரசு அமைத்துக்கொள்ளுங்கள் எனக்கூற, அமைக்கப்பட்டது இலங்கை இந்திய காங்கிரசு. இவ்வமைப்பு தந்த பயம்தான் தொடர்ந்துவந்த சிங்களமயமாக்கலுக்கு முக்கிய காரணம். இலங்கை, மலேயா, பிஜி இன்னும் பலநாடுகளுக்கு வெள்ளையரால் உழைப்பதற்கு குடியமர்த்தப்பட்ட மக்களை திருப்பி இந்தியாவில் சேர்த்துகொள்ளக்கூடாதென்பதில் உறுதியாக இருந்தார் நேரு. (எல்லாரும் தென்மாநிலங்களில் இருந்துல்ல போயிருக்காங்க?, டெல்லில, அலகாபாத்ல இருந்தா பிறநாட்டுக்கு உழைக்கப் போனாங்க?.. அங்கிருந்தவங்க எல்லாம் 'பாரிஸ்ட்டர்' பட்டம்வாங்க போனாங்க! நம்மாளுகதான் உழைக்கபோனங்க.) இலங்கையில் டி.எஸ்.சேனநாயகவோடே இந்த பிரச்சனையை நேரு நினைத்திருந்தால் முடித்திருக்கலாம். ஆனால் நேரு எவ்வளவு தாய்மை உள்ளத்தோடு நடந்துகொண்டார் என்பதை பாருங்கள்.

Nehru's global perspective was a serious impediment to the resolution of the Citizenship status of Indian Tamils in Sri Lanka. Statements by Nehru such as "So far as we are concerned, strictly, legally and constitutionally it is not our problem. They (Indian Tamils) are not our nationals" (Sahadevan," India and Overseas Indians", 1995, p. 67), are hollow in the light of V.K. Krishna Menon words to the effect "Nehru knew the burdens that we would have to carry (their absorption into Indian economy)..." (Ibid, p.150). The Indian Tamils in Sri Lanka and elsewhere became other people's problems because India made it difficult for them to return as Indian nationals through the mechanism of Articles 5 and 8 of the Indian Constitution.

சுதந்திரதிற்கு முன்பே 1939, 1940 மற்றும் 1941 டி.எஸ். சேனநாயகவோடு நடந்த பேச்சுவார்த்தைகளின் தோல்வியைத்தொடர்ந்து, 1947 லும் ஒரு தீர்வில்லாமல் போகிறது. இதுவே இலங்கை குடியுரிமைசட்டம்(1948-1949) வரக்காரணம் ஆகியது. இதன்பிறகு, சேனநாயக மறைய, டட்லி சேனநாயகவும், நேரும் திரும்பவும் பேசுகிறார்கள்.

Once more, as in 1947, there was agreement, in principle, on the formula of three categories, but once more the talks collapsed in regard to the details in implementation. W T Jayasinghe points out how the problem acquired a new dimension in April 1953 when "India resiled from its position that these immigrants were Indian nationals... They had to apply for, and obtain registration as Indian nationals. The Indo [Sri Lanka] problem then became intractable and defied the attempts of successive governments to reach a solution. The Dudley Senanayake-Nehru discussions in 1953; the discussions between Sir John Kotelawala and Nehru in January and October 1954 in New Delhi failed to reach an agreement."

ஆக, 1953, 1954 ல் இலங்கை அரசாங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன. (பிப்ரவரி 1954 ல் கசுமீரத்துல தேர்தல் நடத்துறதுல இந்தியா மும்மூரமா இருந்தது. பின்பு இந்தத் தேர்தல் முடிவையே பொதுவாக்கெடுப்பு முடிவுபோல் எடுத்துகொள்வதாக அறிவித்தது தனிக்கதை!!)

இந்த நேரம் தமிழ் நாட்டில் என்ன பண்ணிக்கொண்டிருந்தார்கள்? நேருவின் "இலங்கை சென்ற இந்தியத் தமிழர்களுக்கு இலங்கைதான் பொறுப்பு" என்ற பொறுப்பான அறிக்கைக்கு, ராசாசி முழுசம்மதம் தெரிவித்தார். பக்தவச்சலம், காமராசர் ஆகியோர் அமைதியாக இருந்தார்கள்.

நேருவிற்குபின் உண்மையான நேர்மையாள‌ர் லால் பகதூர் சாத்திரி பிரதமராக வந்தார். இவர் பதவியேற்று 2 ஆண்டுகளுக்குள் இறந்துபோனாலும், தமிழருக்கு சிலவற்றை செய்துவிட்டுத்தான் சென்றார், இலங்கையில் டட்லி போய், பண்டாரநாயக வந்து, அவரும் கொல்லப்பட்டு, அவர் மனைவி சிறிமாவோ பதவிக்கு வர, 1964 ல் சிறிமாவோ- சாத்திரி ஒப்பந்தம் போடப்பட்டது. முதன்முதலில் மலையக மக்களில் 5 லட்சத்து இருபத்தி ஐயாயிரம் பேரை, தமிழ்நாடு நோக்கி, வீடு வாசலை விட்டுவிட்டு அகதிகளாய் ஓடிவர வைத்தது, பலரை நாடற்றவர்கள் ஆக்கியது இவ்வொப்பந்தம். இவ்வளவு பேரை திருப்பி அனுப்ப, 3 லட்சம் பேரை இலங்கையில் இருக்க ஒத்துக்கொள்கிறோம் என்று பேசினார்கள் ஆனால் இலங்கையில் இருக்கும் அவர்களது உடமை பற்றியோ, இவ்வளவு காலம் இலங்கையில் அவர்கள் உழைத்தற்கான பயனோ, இந்தியாவிற்கு வந்தபின் அவர்களது வாழ்வாதாரம் பற்றிய அக்கரையோ எவருக்கும் இல்லை. இப்பேச்சு வார்த்தையில் கலந்துகொண்ட தமிழ்நாட்டை சேர்ந்த அமைச்சர் இராமையா ஒரு வார்த்தைகூட இலங்கையில் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதைப்பற்றிய கருத்தோ, ஆலோசனையோ எதையும் அவர் தெரிவிக்கவில்லை. நேரு மறைந்த உடனே, இலங்கையில ஆரம்பிருச்சிருச்சு சிறிமாவோ, பாகிஸ்தான்ல இருந்து வந்தாய்ங்க 10 மில்லியன் பேரு, வச்சுகிட்டில்ல, இந்தா இங்க இருந்தும் அனுப்புறோம் வச்சுக்க! என்று அன்று தமிழர்த‌ம் உடமை பறித்து ஓடவிட்டார்கள்... இன்று அது ஈழத்தமிழர்களையும் எப்போது வேண்டுமென்றாலும் உடமைபறித்து துரத்திவிடலாம் என்ற துணிவை இலங்கை காட்டரசுகளுக்கு நெடுக கொடுத்துவருகிறது. சீனாவிடம் வந்துபாரு! மோதிப்பார்க்கலாம், இந்தியா எதிர்நின்று போராடும்! என கர்சித்த சாத்திரி, சிறிமா சொன்னதெயெல்லாம் ஏத்துகிட்டு கையெழுத்துப்போட்டது ஏன் என்றால், இந்திய-சீனப்போரினால் இந்தியாவை ஒரு மாதிரி பார்த்த உலக நாடுகளிடம், நாங்க இன்னும் நல்லவங்கன்னு காட்டிக்கத்தான்.

1965 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது, போராட்டத்தை அடக்க, துணை இராணுவத்தை தமிழகத்திற்கு அனுப்பினார். பக்தவச்சலத்திடம் மனுக்கொடுக்க மாணவர்கள் ஊர்வலமாக சென்றபோது, இராணுவம் தாக்கியதால் 100 பேர்வரை கொல்லப்பட்டனர்.

தாச்கண்ட் ஒப்பந்தம்.

(சாத்திரி முன்பு நேருவின் அமைச்சரவையில் இரயில்வே மந்திரியாக இருந்தபோது தென்மாநிலங்களில் இரண்டு பெரிய இரயில் விபத்துக்கள் நடந்தன. ஒன்று ஆந்திராவில், மற்றது நம்ம அரியலூர்ல. இதானால் அவர் மந்திரிபதவியிலிருந்து விலகவேண்டிவந்தது.) கசுமீரப்பிரச்சனையில் சோவியத்யூனியன் ஐ.நா.மன்றத்தில் இந்தியாவிற்கு தொடர்ந்து ஆதரவளித்து வந்தது. 1965 ல் மீண்டும் இந்திய பாகிசுதான் போர் தொடங்கியது. கடுமையாக நடந்தபோரில் பல நாடுகளின் தலையீட்டால் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, வெற்றி தோல்வியின்றி இரு நாடுகளுக்குமிடையே ரசியாவில் உள்ள தாச்கண்டில், தாச்கண்ட் ஒப்பந்தம் கையெழுத்தாகியது. இதற்கு மறுநாள் திடிரென சாத்திரி இறந்தார்.

அடுத்து அன்னை இந்திரா, நமது எம்.சி.யார், செல்வி.செயலலிதா.......தொடரும்

2 comments:

வரவனையான் said...

தேவையான நேரத்தில் வெளிபட்டிருக்கும் கருத்து, ரெண்டு பார்ட்டா போட்டிருக்கலாம். "உண்மையண்ணாச்சி" ஜாடை

(பாதி இன்னும் படிக்கல, மொபைல படிக்க கண்ணுவலிக்குது )

அப்டிப்போடு... said...

தம்பி, இதை எப்படி பிரிக்கறதுன்னு தெரியலை. மண்டைகாயுது. அடுத்தமுறை சின்னப்பதிவாக இருக்கும்படி பார்த்துக்கொள்கிறேன்.