Saturday, January 29, 2011

முத்து!சாக்காட்டை தழுவிக்கொண்டிர்கள் பொறுத்துப் பொறுத்து பார்த்து மனம் பொறாமல் நீங்கள் எல்லோரும், உம்முட‌னே வந்திருந்தால் அள்ளியள்ளி எடுத்துச்சென்ற பிணக்கூட்டத்தை, மே மாத முள்ளிவாய்க்காலை, அந்த‌ வீர வேங்கைகள் நிர்வாணமாக்கப்பட்டு கைகள் கட்டப்பட்டு மண்டியிடவைக்கப்பட்டு மண்டையில் சுடப்பட்ட அவலத்தை, முகத்தில் இரத்தக் கோட்டுடன் அனைத்து தமிழச்சிகளின் அடையாளமாய் அங்கே விழுந்து கிடத்தவர்களை, தினம் தினம் செத்துவிழும் மீனவர்களை பார்க்காமலே போயிருக்கலாம். ஒன்றும் செய்யமுடியவில்லை. குறைந்தபட்சம் போர் போர்குற்றவாளிதான் என எல்லா நாடுகளையும் அறிதியிட்டு உண்மையை சொல்லவைக்ககூட‌ முடியவில்லை. வெள்ளையனை எதிர்த்து கப்பல் விட்டவன் போயே போய்விட்டான் தமிழ்கூட்டத்தைவிட்டு. அவன் இன்று எதற்கெடுத்தாலும் பயத்துடன், வெளிநாடுகளில் கோட்டு சூட்டுடன் வேறு யாரவது ஆர்ப்பாட்டம் செய்தால் மெல்ல வந்து அதில் கலந்துகொண்டு கோசம் போடுகிறான் (அமைதியாகத்தான்!), இவர்களுக்கு இந்தியா கிரிக்கெட்டில் தோற்றாலும் 'டிராஜிடி'தான், இனம் செத்துவிழுந்தாலும் 'டிராஜிடி' தான். தமிழைச் சொல்லி மாநாடு வைத்துவிட்டால் எல்லா ட'டிராஜிடி'யும் மறந்துபோகுது. தமிழகத்திலோ, இந்தியை வரும்முன் அடித்துவிரட்டியவனை இன்று இனகொலையை கண்டிக்ககூட கூவிக்கூவி அழைக்க வேண்டிருக்கிறது. எப்போதும் எல்லா இடங்களிலும் உணர்வாளர்கள் போராடுகிறார்கள், சிறை செல்கிறார்கள் அரசுகளின் கொலைத்திட்டதிற்கு இலக்காகிறார்கள்.
***

***ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப்புலிகள் மட்டும் குற்றம்சாட்டப்படவில்லை. தமிழக மக்களையும் குற்றவாளிகள் என்று குற்றம்சாட்டியது ஜெயின் கமிஷன் அறிக்கை. அப்படியானால் நீங்களும் ராஜீவ்காந்தியைக் கொலை செய்த கொலைகாரர்கள்தானா?

***இவர்கள்தான் உங்கள் தலைவர்களா? பணம், அடியாள் பலம் ஆகியவற்றைக் கொண்டு மிரட்டல் அரசியல் நடத்தி வரும் இவர்கள் நாளை நம்மீதே பாய மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? அப்படி பாய்ந்தால் யார் நம் பக்கம் இருக்கிறார்கள்?

***தமிழீழம் என்பது தமீழத்தின் தேவை மட்டுமே அல்ல, அது தமிழகத்தின் தேவையும் கூட காரணம், இராமேஸ்வரம் மீனவர்கள், உலகில் ஆடு, மாடுகளைப் பாதுகாப்பதற்குக் கூட சட்டமும், அமைப்புகளும் இருக்கின்றன. இராமேஸ்வரம் தமிழனும், ஈழத்தமிழனும் மாட்டைவிட, ஆட்டைவிடக் கேவலமானவர்கள்? எல்லை தாண்டி போகும் மீனவர்கள், புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டு வருவதாக இந்திய மீடியா திட்டமிட்டு பிரச்சாரம் செய்து வருகிறது. இவர்களெல்லாம் செய்தித்தாளே படிப்பதில்லையா? சென்னையின் கடற்கரைகளில் அடிக்கடி தைவான் நாட்டை சேர்ந்த மீனவர்கள் வழிதெரியாமல் வந்த்வர்கள் என்று கைது செய்யப்படுகிறார்கள். பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரத்திலிருக்கும் தைவான் மீனவன் வழிதவற முடியுமென்றா, வெறும் பன்னிரெண்டு மைல் தூரத்திற்குள் இராமேஸ்வரம் தமிழன் வழிதவறுவது நம்புவது மாதிரியில்லையாமா?
--முத்துகுமார்

Monday, January 24, 2011

ஜெயசூர்யாவிற்கு கண்டனம் தெரிவிப்போம்ஹிட்லரையும் மிஞ்சிய கொடும் போர் குற்றவாளி ராஜபக்ச, நம் மக்களை முள்வேலிக்குள் அடைத்துவிட்டு, சொகுசாக‌ இந்திய கோவில்களில் விழுந்து எந்திரித்து... இந்தியாவின் விருந்தினராக சிவப்புகம்பள ஆடம்பர வரவேற்பில் உச்சி குளிர்ந்து, ஊர் ஊராக திரிந்து, லண்டனில் செருப்படிபட்டபின்னும் அடங்காமல் இப்போது அமெரிக்காவிற்கும் வந்துள்ளது. இருப்பிடத்தை மறைத்து பம்மி இருக்கிறது இங்கு. இது என்ன இந்தியாவா விசிலாட்டமா சிவப்புகம்பளத்தில் நடந்து வர?. இக்கொடுங்கோலனின் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் கிரிக்கெட் ஆட்டக்காரர் ஜெயசூர்யா முன்பே கிரிக்கெட் மைதானத்தில் தமிழர்களை நோக்கி சுடுவதுபோல் சைகை காண்பித்தவர். தற்போது சூப்பர் சிக்ஸ் போட்டியில் விளையாட சென்னை வந்திருக்கும் இவரை கண்டிப்பது மனித உணர்வுள்ள ஒவ்வொருவரின் கடமை. தமிழ் இனத்தை கொடூரமாக கொன்றொழித்துவிட்டு, புலிகளை அழித்துவிட்டோம் என வெற்றி மிதப்பில் பால்சோறு தின்றுவிட்டு, எந்த தாகம் தீர‌ தினம் ஒரு மீனவர் இரத்தத்தை குடிக்கிறார்கள்? புலிகள் இல்லா நாட்டில் யாருக்கு உளவு சொல்ல எம்மீனவர் எல்லை தாண்டி போகப் போகின்றார்கள்?. கடல்புறமென்ன கொழும்பா இவர்கள் ஆட்டம் போட?. முறைப்படி இலங்கைக்கு கடவுசீட்டுப் பெற்று, அனுமதி வாங்கி சென்றவர்களை திமிர் தனத்துடன் கைது செய்வது, அகதிமுகாமில் எடுத்த படத்தில் ஆயுதமா தயாரித்துவிட முடியும்?. இப்படி திமிருடன் நடந்துகொள்ளும் இலங்கையை ஒன்றும் செய்ய இயலாக் கையறு நிலைமையில் இருக்கிறோம். தமிழக அரசு இப்போட்டிகளைத் தடைசெய்யவேண்டும். ஏற்கனவே தமிழகத்தில் நடக்கும் கொண்டாட்டங்களால் மூச்சடைத்துக் கிடக்கிறோம். ஜெயசூர்யா ஏற்கனவே இங்கு வந்தபோது, சென்னை விமானநிலையத்துல ஆர்ப்பாட்டம் நடந்ததே அதற்குள்ளாகவா மறந்துவிட்டது? போர் குற்றத்தை பிரிட்டன் விசாரிக்க வேண்டும் என்றவுடன், கோமாளி அதிபன் "You have no business here" ங்கிறான். இவர்களுக்கு மட்டும் மத்த நாட்டுல என்ன வேலை?. ஜெயசூர்யாவிற்கு நமது கடும் கண்டனத்தை தெரிவிப்போம்.

Sunday, January 23, 2011

தொடரும் மீனவர் கொலைகள்....
சிங்கள இனவெறி கடற்படையால் கொடூரமாக கொல்லப்பட்ட 539-வது தமிழக மீனவர் ஜெயகுமார்.

தமிழ் மீனவர்களைக் கொல்வதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். இலங்கை சுட்டுக்கொல்ல, பிணத்துடன் இலட்சங்களை கொடுப்பதற்கு மட்டுமா தமிழக அரசு?. மீனவரும் தமிழகத்தின் ஆட்சியதிகாரத்தை நிர்ணயிக்கும் சக்திதான், அவர்களை காப்பாற்றும் பொறுப்பு மாநில அரசுக்கு, மத்திய அரசைக்காட்டிலும் இருக்கவேண்டும். ஏதேனும் இயற்கை அசம்பாவிதம் ஏற்பட்டால், இழப்பீடு வழங்குவார்கள். தனது கையாளாகத்தனத்தை மறைக்க, மீனவர்கள் கடலுக்கு படகெடுக்கும் போதே, இங்கு இழப்பீட்டுக்காக இலட்சங்களை கையில் எடுத்துவைத்துக்கொள்ளும் அவல நிலையை என்னவென்று சொல்வது. அரசு சார்பு ஊடகங்களில் மீனவர்கள் இறந்த செய்தி வருவதற்கு முன்னரே இழப்பீடு அளிக்கப்படும் என்று செய்தி வருகிறதே??!!. இந்திய கடற்படை; கடலோற காவல்படை இன்னும் ஆயிரம் ஆயிரம் படை வைத்தாலும் அது ஒன்று கூட தமிழனை காக்காது. உலகின் முதற் கடற்படை கட்டியவன் தமிழன் ஆனால் இந்தியாவில் இன்று, கடற்படையின் ஆணை பிரிவுகள் மும்பாயிலும், கிழக்கு கடற்கரை ஆணை பிரிவு விசாகபட்டினத்திலும், தெற்கு பிரிவு கொச்சியிலும் உள்ளது. இதுவரை இலங்கை கடற்படையை இந்திய கடற்படை திருப்பி தாக்கியதாக ஒரு செய்தி இல்லை. ஆனால் கடற்படை விமானங்களை பாதுகாப்பாக தமிழகத்தில் நிறுத்தி இருக்கிறார்கள். மீனவர்கள் துயரம் பற்றி பேசினால் தடை, மீனவர் துயரம் பற்றி குறும்படம் எடுத்தால் அதற்கும் தடை. ஆனால் மீனவர் கொலைகளுக்கு மட்டும் எந்த தடையும் போட முடியவில்லையென்பது வெட்ககேடு.

தடை போட போடத்தான் பிற நாடுகளில் பயப்படுகிறார்கள், ஆபத்தின் முன்னுரை தடை என்றுணர்ந்ததால்தான் மக்கள் தன்னெழுச்சியாக ஒன்றிணைகின்றனர். துனிசியாவில் ஒரு மனிதனின் மரணம்தான் சர்வாதிகார, ஆணவ‌ அதிபரை நாட்டை விட்டு ஓட, ஓட விரட்டி பிற நாடுகளில் தஞ்சம் கோர வைத்திருக்கிறது. இன்று துனிசியாவை சுற்றியுள்ள அனைத்து அரபு நாடுகளிலும் இதன் எதிரொலி கேட்கிறது. ஏன் இங்கு அமெரிக்காவே ஒருவித அச்சத்தில், சிவில் போர்களை நினைத்துக்கொள்கிறது.

மீண்டும் சொல்கிறேன் நாடாளுமன்றத் தேர்தல் நேரம் நம் இனத்தின் கொடு நேரமாய் ஆனது. சட்டமன்ற தேர்தல் நேரத்தில் மீனவர்களுக்கு என்ன நேருமோ தெரியாது. மீனவர்களுக்கு தற்காப்பு ஆயுதங்களை தமிழக அரசே அளிக்க வேண்டும். கிட்டத்தட்ட ஆயிரம் மீனவர்களை இழந்துவிட்டோம். மீனவர்கள் இறந்தபின் கொடுக்கும் இலட்சங்களில் கொஞ்சத்தை கொடுத்து அவர்களது உயிரைக் காப்பாற்றுங்கள். ஊடகத்தில் உள்ளோர் அவர்களுடன் சென்று என்ன நேர்கிறது என்று அறிந்து வெளிப்படுத்த வேண்டும். இது பற்றி செய்தியை அதிக அளவில் வெளியிட்டு உயிர் காக்கவேண்டும். இவ்வளவு இழப்பிற்கு பின்னும் இந்திய அரசின் வாய்பார்த்திருந்தால்.... எண்ணிக்கொண்டே இருப்போம் நாம் பிணங்களை!!.

Saturday, January 15, 2011

நெய்(பக்த)பிசேகம் சாமிக்கு...

ஆம். எதற்கு இவ்வொலியை நாம் பயன்படுத்தவேண்டும்?
(இப்படித்தானே கத்துகிறார்கள் என தலைப்புவைத்துவிட்டேன்) சமக்கிரத எழுத்தை தலைப்பில் இருந்து விலக்கிவிட்டேன்.
தமிழ் நாட்டின் ரோட்டோர சிறுதொழில்களான டீக்கடை, வேட்டி கடை முதல் பெருந்தொழில்களான... நிதி நிறுவனங்கள், அடகு கடை வரையும், கல்வித்துறையில் கிருத்துவத்தை காரணங்காட்டி கல்லூரி, பள்ளி வேலைவாய்ப்பிலும், பொழுது போக்கான திரைத்துறை (நடிப்பு, தொழிற்நுட்பம், பாட்டுபாடல், ஆட்டத்தில் டான்ஸ் மாஸ்டர்) மற்றும் தொலைகாட்சியில் உச்சபட்ச வேலைகளிலும், விளையாட்டுத்துறையிலோ என்றுமே தமிழகத்தின் சார்பில் ஓட, தாண்டவும், டிராவல்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களிலும்... (மிகுதியாக அரபு நாடுகளுக்கு செல்லும் விமான சேவை புரியும் நிறுவனங்கள்) அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில்(வங்கி, தொலைபேசி பேன்ற இந்திய நிறுவனங்கள்) பார்ப்பனர் அல்லாதவர் இடத்தில் முன்னுரிமையும் (அவர்கள் கிடைக்கவில்லையென்றால்தான் தமிழன்) மற்றொரு பொதுத்துறையான இரயில்வேயில் (தமிழகத்தில், தமிழரைவிட) அதிகளவிலும் பத்தும் பத்தாதிற்கு தொண்டு நிறுவனம் என்ற பெயரில் சில மலையாளப் பள்ளிகளை ஏற்படுத்தியும்(அப்பள்ளிகளில் மலையாளம் தான் பயிற்று மொழி!), போடி, கம்பம் மற்றும் கோயம்புத்தூர் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் தமிழக ஆண்களுக்கு, (திருமண வயது தாண்டிக்கொண்டிருந்தால் திருமணமோ, மறுமணமோ) கேரளாவில் வசதியில்லாத பெண்களை மணமுடித்து தருவதும் (காரைக்குடி வரை நடக்குது இது!) என இப்படி தனக்கு உரிமையுள்ள அத்தனையும் தண்ணியிலிருந்து... ரேசன் அரிசி வரை மலையாளிகளுக்கு தாரை வார்த்துவிட்டு, வருடா, வருடம் கேரளாவிற்கே சென்று மரக ஜோதி, ஐயப்பன் என அள்ளிக்கொடுக்கும் தமிழர்களை என்னதான் சொல்வது?.

திருப்பதியும், ஐய்யப்ப‌னும் (இன்னொன்னு வச்சிருக்காய்ங்க குருவாயூர்னு!) அவர்கள் மாநில பொருளாதாரத்தை நட்டமின்றி உயர்த்தும் சிறந்த தொழிலதிபர்கள். மிஸ்டர் ஐயப்பன் இவ்வருடம் 133 கோடி 15 நாட்களில் ஈட்டித்தந்திருக்கிறார். இதுல பாதி தமிழன் காசாத்தான் இருக்கும். இடுக்கி, பாண்டிய மன்னர்கள் ஆண்ட பகுதி. மூனாரு, பீர்மேடு தேக்கடியெல்லாம் யாருக்குச் சொந்தமென்பது காமராசருக்குத்தான் வெளிச்சம். புல்மேடு விபத்தில் செத்தது முக்காவாசி பேர் தமிழகத்தை சேர்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள், தினமலர் பத்திரிக்கை ஆந்திராவில் 25 பேர், கருநாடகாவில் 19 பேர் எனத் தெளிவாக போட்டுவிட்டு, தமிழர்கள், மலையாளிகள் பெயர்பட்டியல் போட்டு இருக்கிறது (அதிலேயே 35 தமிழர்கள், 3 மலையாளிகள்) ஏன் எண்ணித் தெரிந்து கொள்ளத் தெரியாதா? செத்தவர்கள் எண்ணிக்கை வைத்துப் பார்த்தால் தமிழர்கள்தான் அதிகம். அதைத்தானே முதலில் போடவேண்டும் தமிழன் காசில் பிழைப்பவர்கள்?. தினமலர் ஒவ்வொரு வருடமும் இந்த ஐயப்பன் மகரஜோதி விழாவை, நடைய தொறந்துட்டாங்க, தீபாரதனை காட்டிட்டாங்க, காட்டுன‌வன் கால் கழுவினான், திரு ஆபாரணம் வந்திருச்சு, நடைய சாத்தியாச்சுன்னு தேர்தல் நேரம் மாதிரி செய்தி போடுவாய்ங்க.... கேரளாவில் உள்ள அத்தனை தனியார் தொலைக்காட்சிகளும் செய்தில இத காட்டுவாய்ங்க... இதுல சூர்யா டி.விதான் அதிகம் காட்டும். தினமலர் பத்திரிக்கைகாரர்களின் பங்காளிகள் அங்க தீவாரதனை காட்டுகிறார்கள் அதினால தினமும் செய்தியே இல்லன்னாகூட நடைய சாத்தியாச்சின்னு செய்தி போடுகிறார்கள். சூர்யா டிவி? போடலைன்னா அங்க பொட்டியோட்ட முடியாது!!. ஈழப் போர் பற்றியோ, இராமேஸ்வர மீனவர்கள் பற்றியோ செய்தி காட்டாட்டியும் தமிழன் 'டிடிஸ்'க்கு சந்தா கட்டுவான். பிற மாநிலங்களில் இருந்து மக்கள் செல்லும் பாதையில் இருந்த பராமரிப்பு குறைபாடே இதற்கு காரணம். கடவுள் பக்தி பக்தர்களுக்கு அவர்கள் வேண்டுவதை தருகிறதோ இல்லையோ அதிதமாக சில கோவில்களுக்கு / கடவுள்களுக்கு ஊடகங்கள் தரும் முக்கியத்துவத்தால் பிரபலமாகி நெரிசலையும், உயிர்பலிகளையும் தொடர்ந்து தந்துகொண்டுதான் இருக்கிறது.

பேசாம தன் வீட்டில் நிம்மதியா பொங்கலக் கொண்டாடுவதை விட்டுட்டு இப்படிப் போய் சாகிறார்களே?. கடவுள் மறுப்பு எவ்வளவு சரியானதென இப்பக்கூட ஒத்துக்க மாட்டாங்க. சிலபேரு, ஐயப்ப விரதத்தை ஒழுங்கா க‌டைபிடிக்கலன்னா இப்படி அசம்பாவிதம் வரும்னு கொடூரமா பேசுறாய்ங்க... திருப்பதி போகும் வழியில் மலையிலேயே தூக்குபோட்டு ஒரு குடும்பமே செத்தது சில வருடங்களுக்கு முன்னால். சந்தரபாபு நாயுடுவை அவருடைய பாதுக்காப்புபடைதான் திருப்பதியில் காப்பாற்ற முடிந்த‌து. இவ்விபத்துகூட இக்கோவிலுக்கு மூன்றாவது முறை நடக்கிறது. பல நாட்கள் உடலை அதிகமாக வருத்திக்கொள்ளாமல் இருந்துவிட்டு, திடிரென மலை, காடு வழியே பயணப்படுவதால் சிலருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. போன வருடம் என் அண்ணனின் நண்பர் இதே மகரஜோதி பார்க்கப் போய் உயிரிழந்தார். இந்த மண்டல பூசைய தமிழ் நாட்டுல இருக்கிற ஐயப்பன் கோவில்ல ஏதும் நடத்தமுடியாதா? மகரஜோதிய பார்த்தே ஆகணும்னு அடம்பிடிப்பவர்கள், உள்ளூர்ல பார்க்கட்டுமே? அவ்வளவு சிறிய இடத்தில் மில்லியன் கணக்கில் மக்கள் கூடுகிறார்கள் என்ற செய்தி கூட இவர்களை தடுத்து நிறுத்துவதில்லை. இவ்வளவு கலவரத்திலையும் மலையாளிகள் சில பேர்தான் செத்தனர் என அவங்கூரு அமைச்சர் பேட்டிகொடுத்திருக்கிறார்.

படங்கள்: தினதந்தி, தமிழ்மீடியா

Thursday, January 13, 2011

உரவுக் கடல்உழந்த மீனவர்


இன்னுமொரு மீனவர் பலி. இருவர் படுகாயங்களுடன் புதுகோட்டை அரசு மருத்துவ மனையில் உள்ளனர். பல கோடி ஊழலை செய்துவிட்டு அசராமல் விழாக்களில் பதிவிசாக‌ கலந்துகொள்ளும் கனிமொழியின் சங்கமம் விழாவில் உரையாற்றி களைத்த கருணாநிதியை, உட்கார விடமாட்டேன் என்கிறான் சிங்களன். நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் சங்கமத்துல இருந்திருக்கிறார்கள் (உத்தரவு அப்படி!). வானம்/வாக்குகள் (ஓட்டுத்தான்!) வசப்பாடா விட்டாலும்; மானம் வசப்பட வேண்டுமாம்!!" (ஒரு காலத்தில் இனிமையாக‌ இருந்த இந்தப் பேச்சு, இன்று கொலைவாளாக நம்மை கொத்துகிறது!!). வேட்டி, சட்டை அதன் மேல் ஆறு அடி (மஞ்சள்) நீளத்துண்டு அதற்கு மேல் அவ்வப்போது பொன்னாடை என்ன குறைவு வந்துவிட்டது மானத்துக்கு?. ஆனால் த‌ம் மானம் நிச்சயம் சிங்களனால் போகும் எனத் தெரிந்தும், பிள்ளை குட்டிகளை காப்பாற்ற வழியறியாது கடலுக்குச் செல்பவன் மானமில்லாமல் கூட திரும்பி வர முடியவில்லையே... பிணமாகத்தானே வரமுடிகிறது?. உத்தரவு போட்டால் திமுக சட்டமன்ற/ நாடாளுமன்ற‌ உறுப்பினர்கள் ஒருவர் தவறாது விழாக்களுக்கு வருகிறார்கள். உத்தரவு போட்டால்தானே நாடாளுமன்ற‌ உறுப்பினர்கள் மீனவர்கள் பிரச்சனையைப் பற்றி பேசுவார்கள்?. உத்தரவில்லாமல் அவர்களால் பேச முடியாதே?.

ஈழத்தில்தான் முடித்தாகி விட்டது.... பேசாமல் இருந்து பொற்றுக்கெண்டது இரண்டு அமைச்சர்களை, கருணாநிதி "காக்கலாம் அனைவரும் வாருங்கள்" என சங்கமத்தில் அழைத்த, திராவிட இயக்கம் (குடும்பம் அல்ல!). இங்கிருக்கும் தமிழனுக்காகவும் பேச முடியாதென்றால்....மலையாளி, தெலுங்கன், கன்னடன் மற்றும் பிற வந்தேறிகளை காக்க மட்டுமா திராவிட இயக்கம்?. தமிழக மீனவர்களை காக்கவேண்டும் எனச் சொன்னாலுமா சோனியாகாந்திக்கு பிடிக்காது?. மீனவர்கள் விதயத்தில் மிகுந்த அலட்சியமும், செத்தால் 3, 4 லட்சங்களை கொடுத்துவிடலாம் என்பதே நிலையாய் இருக்கிறதே?. இவர்களால் ஒன்றும் செய்ய இயலாது என முடிவுகட்டியே நம் மீனவர்களை வதைக்கிறான். தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் மீனவர்களையே குறைகூறி கொண்டிருந்தார்கள். சிதம்பரம் சிறிது காலத்திற்கு முன் இப்போது யாரும் சுடுவதில்லை (பரவாயில்லை.... அசிங்கந்தான் படுத்துறாய்ங்க!) நம்ம மீனவர்கள் எல்லை தாண்டி போய்விடுகிறார்கள் என்றார் . சில நாட்களுக்கு முன் கிருஷ்ணா 'தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி சென்றால் இந்திய அரசு பாதுகாப்பு தர முடியாது' என தமிழ்நாடு ஜப்பானில் இருப்பதைப் போல பேசினார். இன்று 'இந்திய மீனவர்கள்' கொலை பற்றி இலங்கை அரசை கண்டித்திருக்கிறார்களாம். இது தொடராது என்பதற்கு எந்த உத்திரவாதமுமில்லை. ஏனெனில் மீனவர்களை இலங்கை கடற்படை சுடவில்லை என அறிவித்து இருக்கிறது. அடிக்கடி இப்படி துப்பாக்கிச்சூடு நடத்தி அங்கு என்ன நடப்பதை மறைக்கிறார்களோ?.

இங்கேயும் பாருங்க...
http://kaattchi.blogspot.com/2010/04/blog-post_15.html
http://kaattchi.blogspot.com/2010/03/blog-post_6952.html

"குடியிருப்புகள்தோறும் கோலப் போட்டிகள், வீரவிளையாட்டுகள், கிராமப்புற நடனங்கள், கும்மி கோலாட் டங்கள் இதர கலைநிகழ்ச்சிகள் எல்லாம் ஏற்பாடு செய்திடுவீர்! விருதுகளும் பரிசுகளும் வழங்கி ஊக்கமளித்து மகிழ்ந்திடு வீர்!
வீடுகளின் முகப்பு களில் மாலையில் வரிசை வரிசையாய் விளக்குகள் ஏற்றி, வீதியெங்கும் ஒளிக் கதிர் பாய்ச்சிடுவீர்! அதுமட்டு மல்லாமல், அரசுக் கட்ட டங்கள், பூங்காக்கள், பாலங்கள் போன்ற பொது விடங்கள் அனைத்தும் பொலிவு பெற வண்ண வண்ணமாய்ச் சரவிளக் குகள் அமைத்து அணி செய் திடுவீர்! " - அய்யாவின் பொங்கல் வாழ்த்து...

ஏன் தமிழக மக்கள் ஒவ்வொருவருக்குமா 1 லட்சத்தி எழுபதாயிரம் கோடி கிடைச்சுருக்கு?, ஒரு கோணிப்பையில இலவசமா பொங்க வைக்க அரிசி, வெல்லம் தானே கிடைக்கப்போகுது?. தேர்தல்ல தோத்த சமயத்துல இதயத்த தேத்த கதை வசனம் எழுதி திருப்பின மாதிரி விழா வச்சிட்டாப்போதும் தமிழன் எல்லாத்தயும் மறந்திருவான்னு... என்ன ஒரு நம்பிக்கை. மறந்துதான்... மாநாடு வச்சா ஓடுறாங்க பல பேரு!. ஆந்திராவில நேத்து அரசியலுக்கு வந்த சின்ன பையன், 50 வருட அரசியல் பாரம்பரியமெல்லாம் இல்லை அவருக்கு... அவங்கப்பா வளர்த்த ஆந்திர காங்கிரச‌யும், சோனியாவையும் கால்ல போட்டு மிதித்து நிற்கிறான். 'ராஜண்ணா ராஜ்ஜியம்' முதுகு வளைந்த தமிழக ராஜாக்கள், உத்தரவு வந்தால்தான் பேசுவேன் என்றிருக்கும் திமுக மன்ற உறுப்பினர்கள், கொஞ்சம் அத்திசை நோக்கி பார்த்து உணரவும்.

பொங்கலுக்கு அப்புறம் எல்லாரும் கூட்டணியமைக்க ஓடிப்போயிருவாங்க... அதுக்கப்புறம் தேர்தல் திருவிழா... மீனவர்களை பார்க்க இவர்களுக்கு எங்க நேரமிருக்கப்போகிறது. நாடாளுமன்ற தேர்தல் நேரம்... நம் இனத்தின் கொடு நேரமாய் போனது... மீனவர்களுக்கு தற்காப்பு பயிற்சி தற்போது மிக‌ அவசியம்.

படங்கள் : இணையதளங்களில் இருந்து எடுக்கப்பட்டவை.