Thursday, May 10, 2007

.யிர் பிளக்கும் வேலை...

2000 பேருக்கு, 2 பேர் கருத்து பினாமியா நாலு தப்படி முன்னாடி வந்து கருத்து சொல்வதை 2000 பேரின் கருத்தாக மாற்றித் தரும் கருத்துக் கணிப்புகளால் ஆக்கப்பூர்வமாக ஏதாவது நடந்திருக்கிறதா?., இவற்றால் நேரும் கெடு விளைவுகளே அதிகம் (குஸ்புவின் கருத்து மட்டும்தான் கலவரங்களுக்கூடேயும் தூங்கிக்கொண்டிருந்த பலரைப் பொடனில போட்டு எழுப்பி கட்டுரை எழுத வைத்தது...). இன்று 3 உயிர்களைப் பலிகொண்டிருக்கிறது இந்தக் கருத்துக் கணிப்பு. இதற்காக முதலில் தண்டிக்கப்பட வேண்டியது அப்பத்திரிக்கையே. பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கிற மாதிரி பொது இடத்துல எவனும் பேசுனாலே தப்பு., உடைக்கப்பட்ட பெரியார் சிலைக்கு முன்னால் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினால் தேசியப் பாதுகாப்பு சட்டம் பாயுது.... (சீரங்கத்துல ஒரு மூலைல ஆர்ப்பாட்டம் பண்ணுனா, தேசிய பாதுகாப்புக்கு ஊறாம்ல?...)., பன்னாட்டு நிறுவனங்களின் நுழைவை எதிர்த்து சுவரொட்டி ஒட்டினால் அது "ராஜ துரோக" குற்றமாம், (இன்னும் என்னா ராஜாங்கமா நடக்குது?., ஆட்சி மட்டும் மக்கள் ஆட்சி, சனநாயக ஆட்சி, ஆனா சட்டங்கள் என்னவோ ராஜாகளுக்கு ஆதரவாகத்தான்), ஆனா ஏசி ரூம்ல உக்கார்ந்துகிட்டு கருத்து கணிப்பு/திணிப்புன்னு கலவரத்த தூண்டலாமா?. இப்ப இந்தக் கருத்து கணிப்புகளுக்கு என்ன அவசியம்?. நம்பர் ஒன்னு, நம்பர் ஒன்னுன்னுதான் கூவிக் கூவி பத்திரிக்கைய வித்துகிட்டு இருக்கிங்களே., நம்பர் ஒன்னாத்தான இருக்கு அப்புறமென்ன?. சினிமாவக்காட்டி பொட்டிய ஓட்டுற மாதிரியே... மலிவு உத்திகளோடேதான் பத்திரிக்கையையும் நடத்தனுமா?.

எத்தனை ஆண்டுகள் அரசியல் அனுபவமுள்ள ப.சிதம்பரம், முந்தாநாள் அரசியலுக்கு வந்த தயாநிதிக்கு கீழயாம்., டி.ஆர்.பாலு சுத்தம்... அன்புமணி அதைவிட (அன்புமணியின் பேச்சுத்திறனை அமெரிக்காவில வந்து கேட்டுப்பாருங்க)....

ஸ்டாலினை கலைஞரின் அரசியல் வாரிசாக ஏற்றுக்கொண்டதால்தானே கொஞ்ச காலமாக சத்தமில்லாமல் இருந்தார் அழகிரி?. மொதல்ல இப்ப த.கி வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு ஜாமின்ல இருக்கக்கூடிய ஆளு என்ன நாளைக்கே இறங்கி கட்சியப் பிடிக்கவா போறாரு?., புடிச்சாலும் தேர்தல்ல நிக்க முடியுமா?. இதுவரை அவர் எத்தனை பதவில இருந்திருக்கிறார்?. என்ன கட்சிப்பொறுப்பில் இருந்திருக்கிறார்? தேர்தல் நேரத்த தவிர... மற்ற கலாங்களில் கட்சியை விட்டு எத்தனை முறை தள்ளிவைக்கப்பட்டார்? (தேர்தல் நேரத்தில் தள்ளி வைக்காததிற்கு கூட 2001 ல் திமுக மதுரையில் படித்த பாடம் காரணம்)., எத்தனை முறை அழகிரியுடன் யாரும் தொடர்பு கொள்ளக்கூடாதெனவே திமுக தலைமை அறிவித்திருக்கிறது?., மதுரையில் ரவுடிகளை கொண்டு அரசியல் செய்யாத கட்சிகளே இல்லை. இளைஞர்களைக் கவர்ந்து, தங்கள் செல்வாக்கால் அவர்களை 'கெத்தாக'ச் சுத்தவிட்டு, ரவுடிகளாக்குவது, ஏற்கனவே ரவுடிகளாக இருந்தவர்களை, உள்ளே இருந்தால் வெளியே வர உதவி, அவர்களை தங்களது அடியாளக்குவது என மதுரையின் இன்னொரு பக்கம் வெளிச்சத்திற்கு பயந்து பதுங்கியே உள்ளது. வேறு எந்த ஊர்களைக்காட்டிலும் மதுரையில்(/திண்டுக்கல்) தான் இளைஞர்கள் இந்த அரசியல்கட்சி "மயக்க மருந்தி"ற்கு அதிகம் அடிமையாவது.

சத்தமில்லாமல் இருந்த ஒன்றில் வேண்டுமென்றே கல்லெறிந்ததைப்போலத்தான் இக்கருத்துக்கணிப்பு. ஒன்றுமறியா அப்பாவிகள் பாலியாக, காவல்துறை கலவரத்தை வேடிக்கை பார்த்த காட்சி... வெட்கக்கேடு... அன்று தர்மபுரி, இன்று மதுரை... திமுகவை வழிநடத்த யார் வரணும்னு திமுக தொண்டர்களிடம்/உறுப்பினர்களிடம் கேட்டால் முறை... நல்லாச் செயல்படுற எம்.பி யாருன்னு பாராளுமன்ற வளாகத்தில் எடுங்க கணிப்பை அங்க இருக்கிறவங்களுக்குத்தானே தெரியும் இங்க இருந்து போயி என்னா பண்றிங்கன்னு?., அதவிட்டுட்டு பொதுமக்கள பலியாடாக்கிறிங்க?., 30 வருடத்திற்கு மேல மதுரைல உக்கார்ந்து அரசியல் பண்ணிட்டு இருக்கிற ஆளுக்கு மதுரையிலேயே செல்வாக்கில்ல 6% மதுரை மக்கள்தான் உன்னைக் கூறி இருக்கிறார்கள் என வெறுப்பேத்தி., இப்ப 3 உயிர் போனதுதான் மிச்சம். 5% மக்கள் மதுரையில் கனிமொழியை காட்டியிருக்கிறார்களாம். பாவம் சமீபத்தில்தான் கனிமொழி ஸ்டாலின், அழகிரியுடன் சங்கமமாகியுள்ளார். மாற்றுக் கருத்து கொண்ட பத்திரிக்கைகள் கூட கலைஞர் கருணாநிதி என குறிப்பிடும்போது, தினகரனும், சன்னும் வெறும் கருணாநிதி எனவே விளிக்கும்.

நந்தவனத்தில் ஓர்ஆண்டி
நாலாறுமாதமாய் குயவனை வேண்டி
கொண்டுவந்தான் ஒரு தோண்டி...

வெறும் பணத்தால் மட்டும் தோண்டிகளைத் தக்க வைக்கமுடியாது.... செய்ய வேண்டியது மிக எளிமையானது... கூத்தாடாமல் இருந்தால் போதும்...

அழகிரி பதிவியில் இல்லை... கட்சிப் பொறுப்பில் இல்லை அப்படியிருந்தும் ஒரு கருத்துக் கணிப்பிற்காக இவ்வளவு கலவரமும் (பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தால் இப்பத்தான் கட்சி கப்பம் கட்ட வேண்டாமோ?) , உயிர்பலியும் தேவையா?. இவற்றால் சாத்தித்தது என்ன?., மக்கள் வெறுப்பைத் தவிர ஒன்றுமில்லை.... இதில் மாட்டிக்கொண்டு பதவியிலக்கப் போவது மேயர் தேன்மொழி மட்டும்தான்.

கருத்துக் கணிப்புகளை, அதாவது இத்தனை சதவீதம் என்ற புள்ளிவிவர கருத்து கணிப்புகள் பத்திரிகைகள் வெளியிடுவதை அரசு தடை செய்ய வேண்டும்... 2000 பேரின் குரலாக 2 பேர் குரல் ஒலிப்பது கேலிக்குறியது... இதுவே பாசிசம்தான். பத்திரிக்கை சுதந்திரத்திற்காக... இந்தப் பிளக்கும் வேலையை அனுமதிக்கலாமா?.

கார்குண்டு, கப்பல் என மக்கள் உயிரெடுக்க பலவடிவங்கள்... கலவரம்... கணிப்புன்னு தொடருது...

மதுரையே எரியுது, தூக்குல போடுங்கன்னு விஜயகாந்த்...கலைஞர் பதவி விலக வலியுறுத்தி ஜெயா, வைகோ... என சட்டமன்றப் பொன்விழா அவர் காண்பதற்குமுன் இவர்களுக்கு ஏற்பட்ட பொன்விழாவாக மதுரைக் கலவரத்தை கொண்டாடிக் கொண்டிருக்க... (இதுவரை எதற்கும் சலம்பாத வைகோ சொல்லலாம்., ஆனா ஜெயா?) ஆதிக்க ஏடுகள் அனைத்தும் அமைதியாக உள்ளனவே.... என்ன சங்கதி?