Monday, March 05, 2007

பகுத்தறிவுச் சுடர்

சுடர் என்றவுடனே நினைவில் உதிப்பது இதுதான். மனித குலம் என்றும் ஏந்திச் சென்று அடுத்த தலைமுறைகளின் கையில் அளிக்க வேண்டிய சுடரும் பகுத்தறிவுச் சுடர்தான். எனவேதான் இந்தத் தலைப்பு.

1. இப்போ பார்த்தீங்கன்னா, பெண்களுக்கு அரசியலில் ஆர்வம் அதிகமில்லைன்னு சொல்லிட்டிருக்காங்க. என்னைமாதிரி ஆசாமிகளெல்லாம் உலக அரசியல் அது இதுன்னு நீட்டி முழக்குவமே தவிர்த்து உள்ளூர் அரசியல்னா ததிங்கிணதோம்தான். உங்களுக்கு அரசியலில் இவ்வளவு தூரம் ஆர்வமும் விழிப்புணர்ச்சியும் இருப்பது எனக்கெல்லாம் பெருமையான வி்ஷயம். பாருங்களேன், எப்படி அசத்துறாங்கன்னு தமிழகத்தேர்தல் சமயத்தில் சொல்லிக்கிட்டிருப்பேன். இந்த ஆர்வம் எப்படி வந்தது? எந்த வயதில் ஆர்வம் செலுத்த ஆரம்பித்தீர்கள் என்று சொல்கிறீர்களா? உங்களின் அரசியற்செயற்பாடுகள் (இருந்தால்) பகிர்ந்துகொள்கிறீர்களா?.
பெண்களுக்கு அரசியலில் ஆர்வம் அதிகமில்லைன்னு சொல்லிகிட்டு இருக்காங்களா?. அது யாரு?. முதலில்., அரசியலில் தனித்த முத்திரை படைத்த தலைவர்கள்கூட தங்கள் வீட்டுப் பெண்கள் அரசியலுக்கு வருவதை முழுமனதுடன் ஊக்குவிப்பதில்லை.... இன்றைய அரசியலை பல இளைஞர்கள் " அது ஒரு சாக்கடை" என்று விலகிச் செல்லுகிறார்கள். அவர்களைத் தடுத்து நிறுத்தி "வட்டம்னா என்ன?., மாவட்டம்னா என்ன? , பொதுக்குழு ன்னா என்ன? செயற்குழுன்னா என்ன? என்ற கேள்விகளுக்கு விடை வாங்கிவிடுங்கள் பார்ப்போம். (இவையெல்லாம் தான் அரசியல் என்பதில்லை, இருந்தாலும்....) பலருக்கு ஒன்றும் தெரியாது., 24 மணி நேரமும் வெளியில் சுத்தும் (எங்க வீட்டுல அப்படித்தான்) இளைஞர்களுக்கே :) நிலைமை இப்படியெனில், சன்னலுக்கு பக்கத்தில் அதிக நேரம் நின்றாலே அர்ச்சனை பெரும் பல பெண்களின் அரசியல் அறிவு வீட்டுக்குவரும் வார இதழ்கள், கதை புத்தகம், டி.வியில் வரும் செய்திகளின் மட்டம் மட்டுமே. இருந்தும் இங்கு அரசியலில் இறங்கி மிகக் குறைவான காலத்தில் ஆண்களை விட அரசியலில் வளர்ந்த பெண்கள் அதிகம். உலக அரசியலை அறிந்து கொள்ளும் ஆர்வம் எனக்கு மிக அதிகம். அரேபிய நாடுகளின் அரசியலைப் பற்றி மணிக்கணக்கில் என்னால் பேச இயலும். உள்ளூர் அரசியல் பேச, அடிப்படைக் காரணம் என் குடும்பம். என் பாட்டனார் காங்கிரஸ் பற்றி கதை கதையாகச் சொல்வார்... மோதிலால் நேரு பற்றி... சீனப் போர் பற்றி அவர் கூறிய கதைகள் இன்றும் நினைவில் உள்ளது . மிகச் சிறிய வயதிலிருந்தே என்னை அரசியல் கூட்டங்களுக்கு வீட்டில் உள்ள பெரியவர்களின் எதிர்ப்பையும் மீறி அழைத்துச் செல்வார் என் அப்பா. திருச்சியில் உள்ள பி.என்.டி காலனியில் அன்பில் தர்மலிங்கம், வீரமணி போன்றோர் பங்குகொண்ட தேர்தல் பிரச்சாரக்கூட்டம் (ஆண்டெல்லாம் நினைவிலில்லை....) முதன் முதலில் விவரம் தெரிந்து கேட்ட கூட்டம். (கூட்ட நெரிசல் காரணமாக, அப்பா பல மணி நேரம் என்னை தூக்கி வைத்துக்கொண்டே நின்றிருந்தது நினைவிற்கு வருகிறது.... ) அதற்குப்பிறகு திருச்சியில் அதை சுற்றிய பகுதிகளில் நடக்கும் பெரிய தலைவர்களின் கூட்டங்களில் தவரவிட்டவை மிகச்சிலவே. "பெரியார் மணியம்மை" பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது பல தலைவர்களின் பேச்சைக் கேட்கும் வாய்ப்பிருந்தது....
என் உறவினர்களில் முக்கால்வாசிப்பேர் எதாவது ஒரு வகையில் அரசியல் தொடர்புடையவர்கள்(என் நெருங்கிய சொந்தங்களின் பெயர்களைத் தவிர்த்து விடுகிறேன். அதேபோல் தற்போது பதவியில் இருப்பவர்களும் வேண்டாம்., தூரத்து சொந்தம் மற்றும் நண்பர்கள் முன்னால் கல்வி அமைச்சர் பொன்னுசாமி, முன்னால் எம்.எல்.ஏ பிரேம் குமார்...). தேர்தல் சமயத்தில் எங்கள் வீட்டிற்கு வராத தலைவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். இதையெல்லாம் விட என் அரசியல் ஆர்வத்திற்கு முக்கிய காரணம் ஒன்று உண்டு. "பருத்தி வீரன்" படத்தில் அந்த வீரனுக்கு ஒரு சித்தப்பா வருவாரே அவர மாதிரி நான் உருப்புடாமப் போறதுக்கு எங்க வீட்டிலயும் ஆட்கள் இருந்தனர்... என் அண்ணன்கள். பாக்கியராஜ் படத்தில் கூட வரும் காஜாஷெரீப் மாதிரி எப்பவும் அவர்களுடனே சுற்றிக்கொண்டிருந்ததால் என்னையும் பற்றிக்கொண்டது அரசியல் நெருப்பு... எங்கள் ஊர் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்களில் நாங்கள் ஆதரிப்பவர்கள் வென்று வருவதால்... தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பேசியதுண்டு... தெலுங்கு பேசும் மக்கள் உள்ள ஒரு ஊரில் முதலில் மேடையேறி (பள்ளி தாண்டி... ) "சூரியனைக் காட்டி" , "இக்கட கொட்டண்டி" என்று இரண்டு வார்த்தை மட்டுமே பேசிய நியாபகம்... மக்களும் "முந்து வெள்ளு" ன்னு சொல்லாம ஓட்டுப்போட்டாங்க.... தேர்தல் கூட்டங்களில் எல்லாம் எதுகை மோனையோடு ஒரே கவிதை மழைதான் போங்க... (இக்கவிதையின் முன்னே உள்ள பல வரிகள் மறந்துவிட்டது.... பெரிய்ய்ய கவிதை ..... "மக்கள் காய்ந்த வயிற்றோடு தள்ளாட்டம், ஆட்சி கட்டிலிலோ லஞ்சப் பேயாட்டம்; பெருகி வரும் வேலையில்லாத் திண்டாட்டம், தார் ரோடெல்லாம் குன்று, குழியாட்டம்; வரதட்சணை வாங்குபவன் பாடு கொண்டாட்டம், வசதியற்ற தந்தையின் கண்களில் நீரோட்டம்; கடும் சாதிக் கலவரங்களின் வெள்ளோட்டம்; கண்டு விட்டும் நிற்கிறோம் நாம் பாறைக் கல்லாட்டம், இவையனைத்தும் அழிவின் முன்னோட்டம், இங்கு அழைப்பிதழ் அளித்துவிட்டுத்தான் வருமா புரட்சிப் போராட்டம்?" என முழங்கியதுண்டு.... (இங்க எதுக்கு வரதட்சணை எல்லாம் வருதுன்னு கேட்கக்கூடாது...." ட்டம்னு" முடியுதா ? இல்லையா? ன்னு மட்டும்தான் பார்க்கணும்., பின்ன உளறலுக்கு என்ன விளக்கம் சொல்ல முடியும்? )., இவ்வளவும் பத்தாதுன்னு... குழந்தைகளுக்கு நான் பெயர் வைத்த கூத்துகள் எல்லாம் கூட நடந்திருக்கிறது....என் பள்ளி, கல்லூரி ஆட்டோகிராஃப் புத்தகத்தில்., என் தோழிகள் எல்லாம் மற்றவர்களுக்கு "நீ நல்லா படி..." "நீ விரும்பிய ஆளைத் திருமணம் செய்துக்கன்னு" எழுதிவிட்டு., எனக்கு மட்டும் "நீ திமுகவில் எம்.பியாகவோ; எம்.எல்.ஏவாகவோ வர வாழ்த்துக்கள்"ன்னு எழுதியிருப்பார்கள்.
தமிழகத்தில் ஒரு முக்கியத் தலைவர் மறைந்தபின் அரசியல் திரை மறைவில் ஆயிரம் காட்சிகள் அரங்கேறிய நேரம். எல்லாம் முடிந்து அம்மையார் கட்சி ஆட்சியைப் பிடிக்க ஆயத்தமான சமயம், எங்கள் தொகுதியில் பெண் வேட்பாளர் நிறுத்தப்படலாம் என்ற நிலை... அண்ணன்கள் அனைவரும் (சாத்தூர்காரர் அண்ணனின் நண்பர்) நான் கல்லூரி முடிக்காத சமயம் "நீ நின்னுட்டுப் போய் படி; நாங்க பார்த்துக்கிறோம்"னாங்க., "என்னாத்த பாப்பீக?., நான் எப்படி உள்ள போறேங்கிறதையா?; ஆள விடுங்கப்பா" ன்னு அரசியலில் நேரடியாக இறங்கும் சந்தர்பத்தை மறுத்தேன்( எனக்கு பிடிக்காத கட்சி சார்பில் நிற்கச் சொன்னதால்). இன்று வரை எங்கள் தொகுதியில் பெண் வேட்பாளர் என்ற பேச்சு வரும்போதெல்லாம் அவர்களின் வற்புறுத்தல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.... எனவே "நான் எப்ப வருவேன்; எப்படி வருவேன்னு தெரியாது.... ஆனா வர வேண்டிய நேரத்தில கரெக்டா வருவேன்" (இந்த வசனத்தை சொன்னா வரவே மாட்டன்னு அர்த்தம்!! அது உங்களுக்குத் தெரியும்தானே?). தேர்தல் அரசியலின் மேல் எனக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை....

2. பலரையும் ஊக்குவிக்கும் உங்களைக் கவர்ந்த ஒரு பெண்மணியைப்பற்றிச் சொல்லுங்களேன். பெண் அரசியல்வாதியாக இருந்தால் இன்னமும் நல்லது.
ஒரு பெண்மணி? இரண்டாச் சொல்றனே...., ஜானகி எம்.ஜி.யாரும் , பீகார் ராஃப்ரீ தேவி லல்லுவும். கிண்டல் எல்லாம் பண்ணலைங்க.... ஜானகியின் அரசியல் பயிற்சி எம்.ஜி.யார் பக்கத்தில் நின்று கையாட்டுவது மட்டும்தான் (அதுவும் கூட எம்.ஜி.யார் நோய்வாய்ப்பட்டிருந்த கொஞ்ச காலம்தான்) . ஆனா, எவ்வளவு துணிவா முதல்வர் பதவியை ஒத்துக் கொண்டார்கள்?. ராஃப்ரியின் பயிற்சி? லல்லுவுக்கு பால் காஃபி போட்டுக் கொடுத்தது மட்டும்தான். இவர்களின் துணிவு ஏன் உலக அரசியல் தெரியும் பல பெண்களுக்கு இருப்பதில்லை?.... அவர்களின் கணவர்கள் காரணம்தான்... இருந்தாலும் சட்ட மன்றம் போயி உக்கார்ந்து சமாளித்தது இவர்கள்தானே?. ஜெயலலிதாவை விட எனக்கு சமையலறையில் இருந்து ஸ்ரைட்டாக சட்ட மன்றம் சென்ற ராஃபிரியை நினைத்துதான் பிரமிப்பாக உள்ளது.
அரசியலில் சத்தமில்லாமல் சாதித்து வரும் பல பெண்களை எனக்குப் பிடிக்கும். உதாரணம் சுப்புலட்சுமி ஜெகதீசன், திண்டுக்கல் பாலபாரதி போன்றோரை வளர்மதி (இல்ல நண்பர்தான்) சிவகாமி வின்செண்ட் போன்றோரை ஒப்பு நோக்கும் போது மிகப் பிடிக்கும் .
அரசியல்தாண்டி மிக, மிகப்பிடித்த ஒரு பெண்மணி அன்னைத் தெரசா.

3. ஒரு லேசான கேள்வி. பிடித்த புத்தகம், எழுத்தாளர், திரைப்படம், நடிகர், நடிகை, இயக்குநர், இசையமைப்பாளர், பாடகர், பாடகி.
பிடித்த புத்தகம் - அரசியல் தத்துவம் தாண்டி, அரு.இராமநாதனின் - வீரபாண்டியன் மனைவி... (இதிலும் அரசியல் உள்ளதுதான் :). தமிழ் புத்தகம்தானே கேட்டீர்கள்?.
எழுத்தாளர் - பிடிக்காதவர்கள்னு கேட்டா ஒரு பட்டியலே சொல்ல முடியும். அ.மார்க்ஸ் பிடிக்கும். வளர்ந்து வரும் எழுத்தாளர்களில் தம்பி சுகுணா பிடிக்கும் :).
திரைப்படம் - இரானியப் படங்கள் பிடிக்கும். தமிழில் புதிதாக வந்ததென்றால் "பருத்தி வீரன்" அப்படியே... 3 மணி நேரம் எங்க ஊருக்குப் போயி உலாத்திட்டு வந்த மாதிரி இருந்துச்சு. சித்தப்பு பிச்சு உதறிருச்சு.... வீரன் - சித்தப்பு கலாசல்.... பழைய காலத்துக்கே போக வச்சிருச்சு.... ஒரு திருவிழாவில்... பெட்டி நிறைய இருந்த ஜவ்வரிசி ஐஸ் ஸ வச்சு வித்துகிட்டு இருந்தவர்கிட்ட "எங்க எனக்கொரு சாம்பிள் குடு; சாப்பிட்டு பார்த்து வாங்கிக்கிறேன்னு" ஆரம்பிச்சு... "இந்தா... இது எங்க மாமந்தான் இவருக்கு ஒரு சாம்பிள் குடு; என்னைவிட நல்லா டேஸ்ட் பார்ப்பாருன்னு" சொல்லி பிறகு "இவரு எங்க தாத்தா பல்லில்ல!! இருந்தாலும் டேஸ்ட் பார்ப்பாரு" குடுன்னு வெறுப்பேத்தி... "அண்ணே நீ வாங்கவே வேணான்னேன்னு " ஐஸ் காரப் பையன் அழுக, அழுக அரைப் பெட்டி ஐஸை சாம்பிள் வாங்கியே காலி பண்ணிவிட்டு..... திருவிழா முடிஞ்ச உடனே பண்டாரந் தட்டுல இருந்த காசப் பூராம் புடுங்கி ஐஸ் கடனை அடைச்ச ஒரு அடங்காப்பிடாரியையும் :), ஒரு கல்யாணத்திற்கு போகும் போது ஏற்பாடு செய்திருந்த அத்தனை வாகனங்களும் புறப்பட்டுவிட, 9 பேர் இடம் கிடைக்காமல், அவ்வழி வந்த ஒரு அரசுப் பேருந்தில் ஏறினர். இந்த மாமாவும் அதில் ஒருத்தர், கொஞ்சம்தான் போட்டிருந்தார்... :) வாடையே வரலை அதான் சொல்றேன்.... அப்படியும் நிதானமில்லாம, கல்யாணம்னா ஒரு கலகலப்பு வேணாமான்னு நினைச்சாரோ என்னமோ, உள்ள ஏறியவுடனே கண்டக்டரைப் பார்த்து "தம்பி ; உக்கார்ந்திருக்கிற எல்லாருக்கும் டிக்கட்டப் போடு"ன்னு சொன்னார். அவரு வெலவெலத்து "எல்லாருக்குமா?" ன்னு கேட்க, "அட, ஆமாய்யா; நாத்தான் சொல்றனுல்ல பஸ்ல இருக்க எல்லோருக்கும் போடு"ங்க... கூட வந்த 7 பேரும் இவரப்பத்தி புரிஞ்சுகிட்டு வெளிய குதிக்க வழி தேடினாங்க... முடியவில்லை... பஸ் போய்கிட்டு இருக்கு.... கண்டக்டர் " மொத்தம் 37 டிக்கடுக்கு" (நல்ல வேளை சிலர் டிக்கெட் எடுத்திருந்தனர்) பணம் கேட்டப்ப, மாமா சட்டைப் பையத் தேடிப் பார்த்திட்டு., ஆஹா... மணிப்பர்ச மறந்துட்டேன் போலருக்கு; "நான் சொன்னா; சொன்ன சொல்லுத் தவர மாட்டேன் இந்தா இந்த கெடியாரத்த (வாட்ச்) வச்சுக்க; அடுத்த தடவ எங்கூரு வழியா வரும்போது பணத்த வாங்கிக்க" ங்க என்று சொன்னபோது... அங்கே மூண்ட ஒரு அவசர யுத்தத்தையும் சித்ததுல வரவச்சிருச்சு பருத்தி வீரன். (சரி இதில போனது 9 பேரு, அப்புறம் பஸ்ஸப் பிராண்டுனது 7 பேருன்னு சொன்னேனில்ல? ஒரே ஒரு ஆளு மிஸ்ஸிங் அத கவனிச்சிங்களா? அது நாந்தான். எங்க மாமா கண்டக்டரப் பார்த்து "தம்பி... ன்னப்பவே இந்தக் கூட்டத்தில இருந்து நான் எழுந்திருச்சு முன்னாடி போயி உட்கார்ந்துகிட்டேன், டிக்கட் எடுத்தியான்னு கேட்கிறிங்களா? "அதுதான் எங்க மாமா எடுத்துட்டாரில்ல?".... ).
நடிகர் - சிவாஜி, வடிவேலு
நடிகை - அர்ச்சனா
இயக்குனர் - சேரன்
இசையமைப்பாளர் - யாருமில்லை - இளையராஜா (கொஞ்சம் பிடிக்கும்)
பாடகர் - கோவன் (மகஇக)
பாடகி - விஜலட்சுமி நவநீதக் கிருஷ்ணன் (அந்த குரலுக்காக)
4. சூடாக ஒரு இடுகை எழுதிட்டு அதோட இடுகையை இங்க குடுங்க. ப்ளீஸ். அப்படியே தொடர்ந்தும் எழுதணும் (இது வேண்டுகோள்).
சூடான இடுகையா?... சரி... இந்தாங்க....

மக்கள் இசை விழாவும், சமரசச் சங்கமும்

//தொடர்ந்து எழுதவேண்டும்...// அப்படியே ஆகட்டும் :). நேரம் இருக்கும்போதெல்லாம் எழுதுகிறேன்.

நன்றி, தாமததிற்கு மிகவும் வருந்துகிறேன். நிலா(மதி) தந்த சுடரை நான் தோழி. செல்வநாயகியின் பொற்கரங்களில் சமர்பிக்கின்றேன் :).
1. நீங்கள் சிறந்த பேச்சாளர் என்பது தெரியும். உங்களுடைய எழுத்துப் பணி மற்றும் மேடைப் பேச்சுகள் பற்றி பகிர்ந்துகொள்ள முடியுமா?. நீங்கள் பேசியவற்றில், நீங்கள் மிகவும் ஈடுபாட்டுடன் பேசிய ஒரு நிகழ்வு பற்றி சொல்லுங்களேன்.
2. கவிதை, கதை மற்றும் பதிவுகளில் இயல்பான, சீறான எழுத்தோட்டம், உங்களின் பரந்துபட்ட ரசனைகளை கவணமாக ஆவணப்படுத்தும் பாங்கென உங்களின் ஒவ்வொரு பதிவைப் படிக்கும்போதும் வியக்க வைக்கிறீர்கள். பிறரின் படைப்பில் உங்களைக் கவர்ந்த ஒன்று.
3. பெண்ணீயம் பற்றி நிறைய எழுதியுள்ளீர்கள்.... அனுபவங்களும் அதை வலியுறுத்தியே வந்துள்ளதென அறிவேன். பெண் - ஆண்., தலித் பெண் - தலித் ஆண், மேல் சாதி பெண் மற்றும் மேல் சாதி ஆண் என நசுக்கும் கரங்கள் விளிம்பு நிலை மக்களை நோக்கி வரும்போது அதிக அழுத்ததுடனும், பரவிய நிலையிலும் வருகிறது.... ஆனால் அவ்வளவு கொடுமைகளை அனுபவித்த பெண்கள் மிக இயல்பாக ஆர்ப்பாட்டமில்லாது தங்கள் எதிர்ப்புணர்வை ஏதேனும் ஒரு வடிவத்தில் காட்டிக்கொண்டிருக்கிறார்கள் (ஒரு புரிதலுக்காக கருக்கு பாமா போன்றோர்). இன்னும் ஒரு பிரிவோ அனைத்தையும் மாற்றிப்போட்டு பின் நவீனப்பார்வை கொண்டு உடலே முதலில் ஆண்களிடமிருந்து விடுவிக்கப்பட வேண்டியவை எனப் பேசுகிறது ( ஒரு புரிதலுக்காக சுகிர்தராணி போன்றோர்). இரண்டும் பெண் விடுதலையை நோக்கிய தளங்கள் என்றாலும்.... பாலியல் தொல்லைகள் மட்டுமேதான் முன்னிருத்தப்படுகிறது. பெண் விடுதலை என்பது வெறும் பாலியல் விடுதலை மட்டும்தானா?.
4. நீங்கள் விட்டு விடுதலையாக உணர்ந்த தருணம் ஒன்று பற்றிச் சொல்ல இயலுமா?. "கருப்பு கவுன்" செல்வநாயகியை மறந்துவிட்டீர்களா? :).

16 comments:

மதி கந்தசாமி (Mathy) said...

ரொம்ப சந்தோஷமாயிருக்கு. நல்ல ஆள்கிட்ட சுடரை மாத்திட்டேன். நீங்களும் அப்படியே செஞ்சுருக்கீங்க.

விரிவாகப் பிறகு..

-மதி

Radha Sriram said...

அப்பா மடை திறந்த வெள்ளம்மா இருக்குங்க உங்க எழுத்து.....

நீங்க திருச்சியா ?? நானும்தான்....

செல்வநாயகி said...

கற்பகம்,

உங்களைப் பற்றி, உங்களின் அரசியல் ஆர்வம் துளிர்விட்ட இடங்களைப் பற்றி அறியாத என் போன்றோருக்கு இந்த இடுகை சில அறிமுகங்களைத் தந்தது. அதற்காக நன்றி.

ஆனா இப்படிப் பழிவாங்கீட்டீங்களே:)) உங்களை மாட்டவெச்சதுக்காக மதி பதிவில் நான் துள்ளிக்குதித்ததற்குத் தண்டனையா:)) சுடரை வாங்கிக்கொள்கிறேன். ஆனால் கொஞ்சம் பொறுத்திருக்க வேண்டுகிறேன். முடிந்தவரை விரைவில் வர முயற்சிக்கிறேன்.

SK said...

முக்கொம்பு அருவிக்குப் போய் குளிச்சிட்டு வந்த ஒரு உணர்வு!

ரொம்ப நல்லா இருக்குங்க!

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

யேய்ய்ய்ய்ய்ய்.. ஆத்தா... எம்புட்டு எழுதி இருக்கீங்க.. அக்கா.. இது.. வந்து பார்த்தேன்னு சொல்லுறதுக்கு. படிச்சுட்டு பொறவு திரும்பவும் வாரேன்.

செல்வா.. சீக்கரம் வேலை ஆரம்பிச்சுட்டா நல்லது..? :)

G.Ragavan said...

நீங்கதான் இப்பச் சுடரா? வாழ்த்துகள்.

அரசியல்ல பெண்கள் வர்ரது ஆண்கள் பலருக்கே பிடிக்காது. ஏன்னா இருக்குற நெலமை அப்படி. ஜானகியும் ராபரியும் பாராட்டுக்கு உரியவர்கள்தான்...தங்கள் அளவுல அவங்க நின்னதுக்கு. அதுக்குப் பாராட்டியே ஆகனும். மொடக்குறிச்சி அக்கா...இப்ப சத்தமே இல்லையே!

பருத்தி வீரன் இன்னமும் பாக்கலைங்க. நானும் பாக்கனும். நல்லாருக்குன்னு கேள்வி.

எனக்கும் சிவாஜி பிடிக்கும். :-)

அப்டிப்போடு... said...

மதி மாட்டிவிட்டுட்டு, சந்தோசமா இருக்காது பின்ன?...

நன்றிங்க ராதா, நீங்களும் திருச்சிதானா, நிறைய பேர் திருச்சிகாரங்க இங்க இருக்காங்க....

நன்றிங்க செல்வநாயகி., பட்டயக் கிளப்பிறணும் :)). உங்களின் முதல் பின்னூட்டம் இங்கு இது.

நன்றிங்க எஸ்.கே. முக்கொம்பு வந்திருக்கிங்களா?.

வாங்க தம்பி... படிச்சிட்டு கருத்து சொல்லுங்க... எனக்கு கொஞ்சம் தாமதமாயிருச்சு எழுத., செல்வா சீக்கிரம் எழுதிருவாங்க...

✪சிந்தாநதி said...

சுவையான எழுத்து..

சுடர் தேன்கூட்டின் படைப்பு...தேன்கூட்டில் சுடர் பட்டியலில் இணைக்க வேண்டிய மதி ஏனோ இன்னும் இணைக்க வில்லை. தொடர்ந்து இதுவும் இணைக்கப் பட வேண்டும்...

செல்வநாயகிக்கு ஒன்று சொல்ல வேண்டும்...சுடர் அதிக பட்சம் இரண்டு நாட்களுக்குள் கைமாற வேண்டும்...ஒரு நாளில் வேகமாக இரண்டு கை கூட மாறலாம்.

இலக்கை எட்டும் போது நிறைய கைமாறி வேகமாக செல்ல வேண்டும் என்று நினைத்திருந்தார்கள். அதற்கேற்ப எழுத முயலுங்கள்..

வாழ்த்துக்கள்.

வரவனையான் said...

அக்கா, நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் பதிவு.

விடைகள் அனைத்தும் அருமை. வாழ்த்துக்கள் அக்கா

முத்துலெட்சுமி said...

மிக நன்றாக இருக்குது பகுத்தறிவு சுடர்.
என்னமா எழுதறீங்க..அரசியல் சினிமா நகைச்சுவை நடுவில் என்று கலந்து கட்டி ...செல்வா சொன்ன மாதிரி உங்களப் பற்றி தெரிந்து கொள்ளவும் வசதியா இருந்தது.

அப்டிப்போடு... said...

நன்றி இராகவன்.

சிந்தாநதி நன்றி. இணைப்பு தேன்கூட்டில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

நன்றிங்க தம்பி.

ஜோ / Joe said...

சூப்பர்

அப்டிப்போடு... said...

நன்றிங்க ஜோ.

மங்கை said...

கிராமப்புர பெண்களுக்கு அரசியலில் இருக்கும் நாட்டத்தை சென்ற வாரம் எங்களுடைய பயிறிசி முகாமில் தான் தெரிந்து கொண்டேன் கற்பகம்...
பானிபட் அருகில் இருக்கும் ஒரு சிறிய கிராமம்..வட மாநிலங்களில் இருக்கும் பெண்களின் நிலையை பற்றி நீங்கள் அறிவீர்கள்...ஆனால் அவர்களுக்குள் இருக்கும் வேகம் என்னை பிரமிக்க வைத்தது..முகாமில் ஒரு பெண், எழுந்து தான் முதன் அமைச்சர் ஆகவேண்டும் என்றும் அதற்கான காரணத்தையும்,அவர் செய்ய நினைப்பதையும் கூறி அனைவரையும் அசத்தி விட்டார்....

நல்லா இருக்குங்க கருத்துக்கள்

முத்துகுமரன் said...

அக்கா,
நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களை காண்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள். பதிவைப் பத்தி சொல்லலியேன்னு பாக்குறீங்களா? வழக்கம் போலத்த்ஹான். அருவாப் போடு :-)

அப்டிப்போடு... said...

//கிராமப்புர பெண்களுக்கு அரசியலில் இருக்கும் நாட்டத்தை சென்ற வாரம் எங்களுடைய பயிறிசி முகாமில் தான் தெரிந்து கொண்டேன்//

நன்றிங்க மங்கை... மகளிர் குழுக்கள் வந்ததிலிருந்து தமிழக கிராமங்களில் பெண்களிடையே அரசியல் ஆர்வம் அதிகரித்துள்ளது.

//முகாமில் ஒரு பெண், எழுந்து தான் முதன் அமைச்சர் ஆகவேண்டும்//

இதைப் பற்றி உங்கள் பதிவில் விரிவாகப் பகிர்ந்து கொள்ள முடியுமா மங்கை?. உங்களுக்கு நேரம் இருக்கும்போது...


//அருவாப் போடு//

:)). நன்றி தம்பி...