Monday, March 05, 2007

மக்கள் இசை விழாவும், சமரசச் சங்கமும்

கனிமொழி மற்றும் காஸ்பர் முயற்சியில் தமிழ் மையம் மற்றும் சுற்றாலா, பண்பாட்டித்துறை நடத்திய சங்கமம் இசை நிகழ்ச்சி தற்போது தமிழகமெங்கும் பேசப்பட்டு வருகிறது. அத்தனை இசையும் சங்கமித்த விழாவாம். 1300 கலைஞர்கள், 37 கலைவடிவங்கள் என பல அறிவிப்புகள் வந்தன. இணையத்திலும் இது ஒரு புரட்சியென பொறிக்கப்பட்டுவிட்டது.... நல்லதுதான்... தமிழே மக்கி மாறி விட்ட சென்னையில் நாட்டுப்புற கலைவடிவங்களை கொண்டு செல்வது... ஒரு நண்பர் கூறினார் ஐ.ஐ.டி வளாகத்தில் திராவிடத் தலைவர்களே வந்து பேச முடியாது இப்போது பறையொலிப்பது பெருமையல்லவா? என்று., ஏன் ஐ.ஐ.டி என்னா அப்படி பெருமை வாய்ந்த இடமா?. சீனப் பெருஞ் சுவரால் தடுக்கப்பட்டிருந்ததா அவ்வளாகம்?. கலைகள் எல்லாம் உழைக்கும் மக்களுக்காக; மக்கள் எங்கு உழைக்கிறார்களோ அங்கு அவர்களைத் தேடி வரவேண்டும் கலை. அகடமியில் அரங்கேறிக் கொண்டிருப்பவற்றை மக்கள் உழைக்கும் சேற்று நிலங்களுக்கு அழைத்து வந்து, நம் கலைகளுடன் சங்கமிக்கச் செய்தார்கள் என்றால் சொல்லலாம்.... அது புரட்சி.... பூங்கா வரைக்கும் கொண்டு வந்தாச்சே என்கிறீர்களா?., பூங்கா நாகரீக மக்கள் இளைப்பாற அமைக்கப்பட்டவை... அது உழைக்கும் மக்கள் ஓய்வெடுக்க அமைக்கப்பட்டவையல்ல. ஊட்டியைச் சுற்றியுள்ள பகுதியில் தேயிலைத் தோட்டத்தில் பல வருடங்களாக உழைக்கும் மக்களில் பலர்/ அவர்களது குழந்தைகள் ஊட்டியில் உள்ள பூங்காவை/ஏரியைப் பார்த்ததுகூட இல்லை.

ம.க.இ.க (மக்கள் கலை இலக்கிய கழகம்) என்றொரு அமைப்பை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஒரு நாளின் பெரும்பகுதியை உழைப்பில் கழிக்கும், மூன்று வேலை ஒழுங்காக உணவு உண்ண இயலா விளிம்பு நிலை மக்களுக்காக என்னேரமும் கவலை கொண்டு கரம் கொடுக்கும் மகஇக . அவர்களுக்காக இவர்கள் செய்யமுடிந்தவையெல்லாம் "போராட்டம்" விளிம்பு நிலை மக்களின் "விழிப்புணர்வைத் தூண்டுவது" "அவர்களது "துணிவை" அவர்களுக்கு உணர்த்துவது இப்படிப் பல... நாடு முழுவதும் நிரம்பி இருக்கும் பெரும்பான்மை மக்களுக்கு நாம் இப்படித்தான் உதவ முடியும் . அரசியல் கட்சிகள் எப்படி உதவுகின்றன? பல இலவசங்களைத் தந்து உழைக்கும் மக்களை பிச்சைக்காரர்களாக்கி இழிவு செய்கிறது. தேர்தல் அரசியலின் ஊழலால் பணக்காரர்கள் பெருகுகிறார்கள். அதைவிட 3 முறை அதிகமாக விளிம்பு நிலைக்குத் தள்ளப்படும் மக்கள் பெருகுகிறார்கள். இது அவர்கள் செய்யும் அரசியாலால் மட்டுமல்ல அவர்கள் ஆட்சியைத் தக்க வைக்க போடும் அத்தனை திட்டங்களும் பணமுடையவர்களுக்கே சாதகமாக உள்ளது . இப்போது பன்னாட்டு கம்பெனிகளை பாக்கு வைத்து அழைத்து உள்ளூர் சிறு தொழில்சாலைகள் முதற்கொண்டு விவசாயம், தண்ணீர் , மின்சாரம் அனைத்திலும் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்க கால்களை ஆழ ஊன்ற வைத்துவிட்டார்கள். தேயிலை , கடலை, பருத்தி போன்ற பணப்பயிர்களின் உற்பத்தி விலையை விடக் விற்பனை விலை குறைவு. நம் மக்கள் பலரின் வாழ்வு விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது (விளிம்பு நிலை மக்கள் என யாரும் எழுதாதீர்கள்; விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட மக்கள் என்பதே அவலத்தை உணர்த்தும் ). கோக்கால் கொள்ளை போகிறது தாமிரவருணி தண்ணீர்... ( தென்மாவட்ட மக்களின் தண்ணீர் தட்டுப்பாடு தெரிந்தோருக்குப் புரியும் இது எவ்வளவு பெரிய கொள்ளையென்று) ஒரு புறம் கர்நாடகத்துடனும், கேரளாவுடனும், ஆந்திராவுடனும் சிண்டைப் பிடித்துக்கொண்டிருக்கிறோம் தண்ணிருக்காக. இருக்கும் கொஞ்ச நஞ்ச தண்ணீரையும் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரைவார்க்கிறோம். கண்ணில் தெரியும் கங்கைகொண்ட சோழபுரத்தை "கோக்" காரனுக்கு கொடுத்துவிட்டு, தெலுங்கு -கங்கை என திட்டங்கள் போடுவோம். அரசு விரும்பிகிற அளவு தண்ணீரே, ஏதேனும் அற்புதம் நடந்து, நமக்குக் கிடைத்துவிட்டால் கூட அது விவசாயிகளுக்கும் , மக்களின் குடிநீருக்கும் மட்டும் தான் பயன்படுத்தப்படும் என்பதற்கு உத்திரவாதமில்லை.
தேர்தல் அரசியல் பாதை மக்களிடம் முன்பிருந்த நம்பிக்கையை இன்னும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறதா?. அரசியலில் கவுன்சிலராக நிற்க 70 ஆயிரம் கட்டணம் இந்த உள்ளாட்சித் தேர்தலில் கொடுக்க வேண்டி இருந்தது. பயங்கரப் போட்டி 70 ஆயிரம்கொடுத்து கவுன்சிலராக., எம்.எல்.ஏ வேட்பாளர் தேர்வில் முதலில் கேட்கப்படும் கேள்வி " எவ்வளவுய்யா செலவு செய்வ?" என்பது... அடுத்த கேள்வி " உன் தொகுதியில் என்ன சாதி அதிகம்; நீ எந்த சாதி என்பது" இடது கம்யுனிஸ்ட் போன்ற விளிம்பு நிலை :)) கட்சிகள் தவிர அனைத்துக் கட்சிகளும் இதைத்தான் கேட்கின்றன . தேர்தல் என்ற ஒன்றிருக்கும் வரை தமிழ்நாட்டில் சாதியளிப்பு சாத்தியமே அல்ல . பெருகி வரும் பெல்ட்டுகள் (தேவர் பெல்ட்; நாயக்கர் பெல்ட் ; நாடார் பெல்ட்; இப்ப திருச்சி பக்கம் முத்து ராஜாக்கள் பெல்ட்....) மட்டுமே சாத்தியம் . அதிகரித்து வரும் கட்சிகள்; நடிகர்கள் இறக்கி துணிவாக அனைத்துத் தொகுதியிலும் தனித்து நிற்பது ... ஆகியவையெல்லாம் இன்னும் தேர்தல் அரசியலுக்கு இருக்கும் மவுசுகளையே காட்டுகிறது. மக்கள் துணிந்து இறக்கினால் 5 ஆண்டுகளில் சாத்தியப்படும் வளர்ச்சிகள் எல்லாம் தேர்தல் அரசியலால் 15 ஆண்டுகள் தள்ளிப்போகிறது. இவ்வரசியல் உழைக்கும் மக்களை இலவசத்தால் மதிமயக்கி முடக்கிப்போடுகிறது... ஒரு சாமியார் கூட்டம் போட்டால் கூட; ஒரு சாதி சங்கம் கூட்டம் போட்டால் கூட போலீஸ் பாதுகாப்புத் தருகிறது ... ஆனால் உழைக்கும் மக்கள் விழிப்பு கொண்டு ஏற்படுத்தும் போராட்டங்களுக்கு தடியடி , கைதுகளேயே தீர்வாக நாம் பார்த்துவருகிறோம். மக்கள் போராட்டங்களுக்கு நியாயமான தீர்வை இதுவரை எந்த ஆட்சியும் தந்ததில்லை குமரி முதல் இமயம் வரை .... ஆனாலும் வாழ்ந்தாருக்கு மாறடிக்கும் விதமாக ஏதாவதொரு அரசியல் கட்சிகளை ஆதரிப்பதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை... கொள்ளைகளில் நம்மை அதிகம் வருத்தாத கொள்ளை இதுவென நம்மைக் கொள்ளையடிப்பவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது... ஏனெனில் சட்டங்கள் அனைத்தும் அவர்களால் போடப்படுகிறது. நயந்தேனும் மக்களுக்கான நல்லவைகளைப் பெற அவர்களை ஆதரிக்கத்தான் வேண்டியுள்ளது. தேர்தல் அரசியல் அழியும் மாற்று அரசியலில் விழி வைத்தாலும் இப்போது கைகுலுக்க வேண்டித்தான் இருக்கிறது அரசியல் கட்சிகளுடன். அனைத்தையும் பன்னாட்டு நிறுனங்களுக்கு தாரை வார்த்துவிட்டு , அனைத்தையும் தனியார் மயமாக்கிவிட்டு ஆட்சியாளர்கள் என்ன வேலை செய்கிறார்கள்?. அன்னாந்து "அகண்ட பாரத"க் கனவில் மிதக்க வேண்டியதுதான். அதுதான் காவலையும், இராணுவத்தையும் எந்த கம்பெனிக்காரனிடமும் கொடுக்காமப் பத்திரமாப் பாத்துகிறமில்ல?.
மறு காலனிய எதிர்ப்பு, போலி ஜனநாயகம் மற்றும் போலி கம்யுனிஸ எதிர்ப்பு , பார்ப்பனிய சனாதனங்குக்கு ஆப்பு, உழைக்கும் மக்களுக்கு தங்களால் இயன்றவரை விழிப்புத் தருதல் பெண்ணடிமைத் தனங்களைச் சாடல் ஆகியவற்றைக் நோக்கமாகக் கொண்டு இயங்கிவரும் ம.க.இ. க 94 ஆம் ஆண்டிலிருந்து தமிழ் மக்கள் இசை விழாவை பிப்ரவரி மாதத்தில் நடத்தி வருகிறார்கள். இதைப் பற்றி அசுரன் அவர்கள் ஏற்கனவே எழுதியுள்ளார். வருடந்தோறும் நடத்தும் விழா கடந்த இரு ஆண்டுகளாக இயற்கைச் சீற்றத்தால் நடைபெறவில்லையெனினும், விழா பற்றிய அறிவிப்பு முன்பே வெளியாகி விட்டது . ., ம.க.இ.க பிப் 24., சங்கமம் பிப் 20 திலிருந்து துவங்கியது (தமுஎச வும் அன்று ஒரு பட்டறை நடத்தியது). ஏன் சங்கமத்தை மார்ச் மாசம் வைத்திருந்தால் என்ன?. ச்சேச்சே.... கலகக்காரர்கள் விழாவும்., அரசுடன் சேர்ந்து நடத்தப்படும் விழாவும் ஒன்றா என்ன?., உழைக்கும் மக்களின் வேதனையில் ஓடிச் சென்று பங்குபெறுபவர்களும், சென்னை மக்களிடம் எல்லாம் இருக்கிறது அத்தனை இசையும் சங்கமிப்பதை அவர்கள் பார்த்ததில்லை என்று நல்ல மனம் படைத்தோறும் எப்படி ஒன்றாக முடியும்?. முடியாதுதான்., ஆனால் இரு விழாக்களிலும் விளிம்பு நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் கலைஞர்கள்தான் பங்கு பெறுகின்றனர். தள்ளி வைத்திருந்தால் அவர்கள் இரு விழாக்களிலும் பங்குபெற்றிருக்கலாம்.
காஸ்பர் மத மாச்சிரியமின்றி பரத நாட்டியகம், கர்நாடக குழுவை கனாடாவிற்கு அழைத்துச் சென்றார், அப்புறம் சிம்பொனி இப்போது சங்கமம். இதைப் பற்றி கருத்துச் சொல்ல எனக்கு ஏதுமில்லை.... அவரது ஈழ மக்களுக்காக ஈடுபாட்டுடன் உழைத்து வருவது பாராட்டத்தக்கது.
சரி ம.க.இ.க ஒளிக் கோப்புகளில் இருந்து, அசுரகானத்தில் ஒரு பாடல் இங்கு இணைக்கப்பட்டுள்ளது..... பழைய பாடல்தான்... இந்தப்பாடல்தான் இப்போது எனக்குக் கிடைத்தது.

12 comments:

மதி கந்தசாமி (Mathy) said...

இத இத இதத்தான் எதிர்பார்த்தேன்!!! வாங்க ஆத்தா வாங்க.

விரிவாகப் பிறகு.

-மதி

Prince Ennares Periyar.S said...

அப்படிப் போடுங்க! நல்லதொரு பதிவு!
அய்.அய்.டிக்குள்ள நுழைந்ததைக்கண்டு மகிழ்ந்தவன் நான்தான்! அது புனித இடம் என்பதற்காக அல்ல. சென்னையின் மத்தியில் தீவைப்போல தங்களை நினைத்துக்கொண்டவர்கள் இடத்தில் பறையோடு ஆடியது, அவர்களை பறை இசை பக்கம் இழுக்க வேண்டும் என்பத்ற்காக அல்ல. "ஆடாதடா! ரொம்ப... எங்க ஆட்டம் அதுக்கும் மேலன்னு சொல்லத்தான்." சென்னை சங்கமம் கூலி வாங்கும் உழைக்கும் மக்களை சென்று சேரவில்லை என்றாலும் கூட, சம்பளம் வாங்கும் நடுத்தர மக்களை சென்று சேர்ந்திருக்கிறது. அவர்களுக்கு தமிழர் கலைகளை நினைவு படுத்தியிருக்குறது. இனி, அந்த இடத்தை பயன்படுத்திக்கொண்டு நம் கருத்துகளை எப்படி சொல்வது என்பதில்தான் கவனம் செலுத்தவேண்டும். ஏனென்றால், நாம் நடத்தும் மக்கள் கலை இலக்கிய விழா போன்றவற்றிற்கு எளிதில் கால்வைக்க யோசிக்கும் அடுத்த தட்டு மக்களை, நம் பக்கம் கவனம் கொள்ளச்செய்ய நாம் சென்னை சங்கமம் போன்றவற்றை கையகப்படுத்தவேண்டும்.

OSAI Chella said...

aahaa... sudar pattaiya kiLapputhu! enga aanmiikaccidaraavee anainthuvidommnnu payantheen. erikkum sudaraakavee maRu jenmam etuththiruppathai ariwthu makizchchi!

OSAI Chella said...

asurakaanam super. olippeeza sutti tharamudiyumaa thozhiye?

பொன்ஸ்~~Poorna said...

பாட்டு நல்லா இருந்தது...

அசுரன் said...

///போராட்டம்" விளிம்பு நிலை மக்களின் "விழிப்புணர்வைத் தூண்டுவது" "அவர்களது "துணிவை" அவர்களுக்கு உணர்த்துவது இப்படிப் பல... நாடு முழுவதும் நிரம்பி இருக்கும் பெரும்பான்மை மக்களுக்கு நாம் இப்படித்தான் உதவ முடியும் . அரசியல் கட்சிகள் எப்படி உதவுகின்றன? பல இலவசங்களைத் தந்து உழைக்கும் மக்களை பிச்சைக்காரர்களாக்கி இழிவு செய்கிறது. தேர்தல் அரசியலின் ஊழலால் பணக்காரர்கள் பெருகுகிறார்கள். அதைவிட 3 முறை அதிகமாக விளிம்பு நிலைக்குத் தள்ளப்படும் மக்கள் பெருகுகிறார்கள். இது அவர்கள் செய்யும் அரசியாலால் மட்டுமல்ல அவர்கள் ஆட்சியைத் தக்க வைக்க போடும் அத்தனை திட்டங்களும் பணமுடையவர்களுக்கே சாதகமாக உள்ளது . ///

//இருக்கும் கொஞ்ச நஞ்ச தண்ணீரையும் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரைவார்க்கிறோம். கண்ணில் தெரியும் கங்கைகொண்ட சோழபுரத்தை "கோக்" காரனுக்கு கொடுத்துவிட்டு, தெலுங்கு -கங்கை என திட்டங்கள் போடுவோம். அரசு விரும்பிகிற அளவு தண்ணீரே, ஏதேனும் அற்புதம் நடந்து, நமக்குக் கிடைத்துவிட்டால் கூட அது விவசாயிகளுக்கும் , மக்களின் குடிநீருக்கும் மட்டும் தான் பயன்படுத்தப்படும் என்பதற்கு உத்திரவாதமில்லை.///

//. மக்கள் துணிந்து இறக்கினால் 5 ஆண்டுகளில் சாத்தியப்படும் வளர்ச்சிகள் எல்லாம் தேர்தல் அரசியலால் 15 ஆண்டுகள் தள்ளிப்போகிறது. இவ்வரசியல் உழைக்கும் மக்களை இலவசத்தால் மதிமயக்கி முடக்கிப்போடுகிறது... //

நல்ல பதிவு அப்படிப்போடு அவர்களே,

இந்த பதிவை கவனிக்காமல் எப்படி தவறவிட்டேன் என்று தெரியவில்லை.

URl for all MaKaEeKa Songs
http://tamilcircle.net/unicode/CASTE/caste.mainu.htm

அசுரன்

அப்டிப்போடு... said...

பின்னூட்டமிடுவதில் பிரச்சனை இருந்ததால் தமதமாகிவிட்டது....

நன்றி மதி...

பிரின்ஸ்...
//"ஆடாதடா! ரொம்ப... எங்க ஆட்டம் அதுக்கும் மேலன்னு சொல்லத்தான்."//
:)))).

//சம்பளம் வாங்கும் நடுத்தர மக்கள்.... //

எந்த நாட்டிலாவது ஏதாவது ஒரு மலர்ச்சியோ, மாற்றமோ இந்த நடுத்தர மக்களால் வந்துள்ளதா?. விளிம்பு நிலை மக்களிடமாவது எதிர்ப்புணர்வு என்பது தன்னைத்தாண்டி மற்றோருக்காகவும் காட்டமாகத் தற்போது வெளிப்பட்டு வருகிறது.... ஆனால் நம்மை போன்ற நடுத்தட்டு மக்களிடம் புரட்சி, போராட்டம் என்பதெல்லாம் "நம்ம சம்பளத்தில / போனஸ்ல அரசு கைவைக்குதா?" வரும்!! இல்லையென்றால்., சுற்றி உலகமே அடிச்சுகிட்டு கெடந்தாலும் நேராப் பார்த்து தனது பாதையில் நடக்கும் கூட்டம். ஒரு நாளைக்கு 'சன்' டிவிக்குப் பதில், சங்கமம் அவ்வளவுதான்.

//நம் பக்கம் கவனம் கொள்ளச்செய்ய நாம் சென்னை சங்கமம் போன்றவற்றை கையகப்படுத்தவேண்டும்//
பார்த்திங்களா? கையகப்படுத்தணும்!! இங்கையும்... பல இடங்களில் நிகழ்ச்சி நிரல் பட்டியலில் எந்த இசை முதன்மையாக இடம்பெற்றிருந்தது?.

அப்டிப்போடு... said...

நன்றி செல்லா.,

உங்க கேள்விக்கு என்ன பண்ணலாம்னு யோசித்துக் கொண்டிருந்த போது., அரசுன் நல்ல இணைப்பை தந்திருக்கிறார்., அத்தளத்தில் அனைத்துமிருக்கிறது.... கேட்டுப் பார்த்து மகிழுங்கள் எனச் சொல்வது பொருத்தமாகாது... இதுவரை உணராதவற்றை உணருங்கள்.

பொன்ஸ்...
//பாட்டு நல்லா இருந்தது... //
அப்போ... பதிவு நல்லா இல்ல?...ம்...

பொன்ஸ்... சங்கமம் இசை நிகழ்வைப்பற்றிய ஒளித் தயாரிப்பில் உங்கள் ஆர்வமும், உழைப்பும் போற்றத்தக்கது. மிக்க நன்றி.

அசுரன்
நன்றி தமிழ் சர்க்கிள் இணைப்பிற்கும்., நீங்கள் இப்பதிவை கண்ணுற்றதற்கும்.

செல்வநாயகி said...

///நம்மை போன்ற நடுத்தட்டு மக்களிடம் புரட்சி, போராட்டம் என்பதெல்லாம் "நம்ம சம்பளத்தில / போனஸ்ல அரசு கைவைக்குதா?" வரும்!! இல்லையென்றால்., சுற்றி உலகமே அடிச்சுகிட்டு கெடந்தாலும் நேராப் பார்த்து தனது பாதையில் நடக்கும் கூட்டம். ஒரு நாளைக்கு 'சன்' டிவிக்குப் பதில், சங்கமம் அவ்வளவுதான். ///

very true. Keep writing please.

அப்டிப்போடு... said...

நன்றிங்க செல்வா... நேரம் இருக்கும்போதெல்லாம் இனி எழுதுவதாகத்தான் எண்ணம்.

-L-L-D-a-s-u said...

நல்ல பதிவு.. நல்ல பாட்டு. அடிக்கடி வாரருங்கள்..

அப்படிப்போடுவை ஜோதிக்குள் இழுத்துவிட்ட மதிக்கு நன்றி.

அப்டிப்போடு... said...

நன்றி தாஸ்.