Sunday, April 30, 2006

தேர்தல் அலசல் - 2006 - தேனி


யாருக்கு தேனி?
தேனி: மொத்தம் 5 தொகுதிகள்.

1.போடி நாயக்கனூர் 2. பெரியகுளம் 3. தேனி 4.ஆண்டிபட்டி 5. கம்பம்

1.போடி நாயக்கனூர் :
எஸ்.லட்சுமனன் (திமுக) - (கூட்டணி பலம், விவசாய சலுகை அறிவிப்புகள் +)
ஆர்.பார்த்திபன் (அதிமுக)

அதிமுக சிட்டிங் இராமராஜ் தற்போது நிற்கும் பார்த்திபனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார் அதிமுகவிற்கு இது பலமான தொகுதி. அவர்களது வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொண்டாலே போதும் ஆனால், திமுக வேட்பாளர் செட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர். அதிமுகவில் உள்ள செட்டியார்களே இவரை ஆதரிக்கிறார்கள். அருந்ததி சமுதாய மக்கள் இங்கு கணிசமாக உள்ளனர். அவர்கள் அதிமுகவிற்கு ஆதரவு தருவதாக உள்ளது. குரங்கனி - டாப்ஸ்டேசன் ரோடு, இலவம்பஞ்சு தொழிற்சாலை, 18ம்கால்வாய், பாதள சாக்கடைத் திட்டம் போன்றவற்றை நிறைவேற்றித் தருகிறோம் என வாக்கு கேட்கின்றன இரு கட்சிகளும். திமுக தேர்தல் அறிக்கை விவசாயிகளுக்கான சலுகைகள் பல அறிவித்து இருப்பதாலும், கூட்டணி பலத்தாலும் திமுகவிற்கு போடி கிடைக்கலாம்.


2. பெரியகுளம் :
எல்.மூக்கையா (திமுக)
ஓ. பன்னிர்செல்வம்(அதிமுக) - (அமைச்சர் பெதுப்பணித்துறை, நெடுஞ்சாலை...)-
(பணபலம், தொகுதியில் செல்வாக்கு +)

பெரியகுளத்தில் முன்னால் முதல்வர் (மாற்றாக குறைவான காலம் இருந்ததலும் இவர் முன்னால் முதல்வர்தானே?) இந்நாள் அமைச்சர் பன்னீர்செல்வம் போட்டியிடும் தொகுதி. அதிமுக மிக சுறுசுறுப்பாக களத்தில் இருக்கிறது. கிராமங்கள் வழக்கம் போல ரெட்டலைக்குத்தான் ஆதரவு தெரிவிக்கின்றன. தினமும் கூட்டங் கூட்டமாக வந்து அதிமுகாவில் இணைகிறார்களாம் சின்ன கட்சிகளில் உள்ளவர்கள். இத் தொகுதியில் பல சமூகங்கள் வாழ்ந்தாலும் சிறுபான்மை மக்களும், தலித் மக்களும்தான் வெற்றியை தீர்மானிப்பவர்கள். முஸ்லிம் ஓட்டுக்கள் மூக்கயையனுக்குத்தான். ஆதி மக்களிலிடையே செல்வாக்குள்ளவர் பரட்டையன் இவர் அதிமுகதான் ஆனால் இவர் தம்பி திமுக. நாடாளுமன்றத் தேர்தலின் போது முஸ்லிம்களுடன் முட்டிக் கொண்டது, அதிமுகவில் உள்ள பரட்டையனுடன் பகை கொண்டது, அத் தொகுதி மக்களின் தேவையான மாம்பழ தொழிற்சாலை அமைத்தல், அடுக்கம் வழியாக கொடைக்கானலில்லிருந்து பெரியகுளம் வரை சாலை (மலை மக்களுக்கு உதவும் வகையில்), வவ்வால் துறை அணை ஆகியவற்றைக் கிடப்பில் போட்டது போன்ற ஏகப்பட்ட பள்ளங்கள் இருந்தாலும், பணத்தைக் கொட்டி அப்பள்ளங்களை மூடிவிட்டு அதன்மேல் வெற்றிப் பயணம் செய்வார் பன்னிர்செல்வம்.

3. தேனி :
என்.டி.ஆர்.ராஜ்குமார்(காங்கிரஸ்) -(சொந்த பலமும், கூட்டணி பலமும்+) ஆர்.டி.கணேசன்(அதிமுக) - சிட்டிங்
சிட்டிங் எம்.எல்.ஏ கணேசனின் மீது தொகுதி மக்களுக்கு அதிருப்தி இருக்கிறது. இதைப்போக்க எம்.எல்.ஏ. கணேசனின் மனனவி, ஜெயலட்சுமி கிராமம், கிராமமாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார், நடிகர், நடிகைகளை கூட்டமாக கூட்டி வந்து நகர்களில் பிரச்சாரம் செய்கிறது தேனி மாவட்ட அதிமுக. தேனித் தொகுதியின் குடிநீர் தட்டுப்பாடு வெற்றி, தோல்வியை முடிவு செய்யும். தலித் மக்கள் பெரும்பான்மையாக உள்ள இத் தொகுதியில் புதிய தமிழகம் சின்னபாண்டி பகுஜன் சமாஜ் கட்சியில் போட்டியிடுகிற்றா. தலித் மக்கள் ஓட்டுக்களை இவர் பிரிப்பார். ஆனாலும் காங்கிரஸ் வேட்பாளரின் சொந்த பலமும் கூட்டணி பலமும் வெல்ல வைக்கும்.

4.ஆண்டிபட்டி:
ஜெ.ஜெயலலிதா (அதிமுக) - முதல் அமைச்சர் (நிறைய +++)
பா.சீமான் (திமுக)

முதல்வர் தொகுதி. அவரை எதிர்த்தி நிற்கும் இயக்குனர் சீமான் இராமநாதபுரத்தைச் சேர்ந்தவர். வெளியூர்காரார் இங்கு நிற்பது உடன்பிறப்புகளுக்கு வருத்தம்தான். ஆனால் போட்டி பெரிதே?. அதனால் சீமான் ஆளுங்கட்சி, காவல்துறை அனைத்தையும் சமாளித்து வாக்கு கேட்கிறார். பொன்முத்துராமலிங்கமும் (முன்னால் அமைச்சர்), மு.க.அழகரியும் தேர்தல் பிரச்சாரக் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலில் ஜெவுக்கு எதிராக தீவிர பிரச்சாரம் செய்தவர் அழகிரி எனவே ஆண்டிபட்டி அவரிடம் வழங்கப்பட்டு இருக்கிறது. கலைஞர், வாசன், தாயநிதி ஆகியோர் பிரச்சாரத்துடன் பொதுவுடமை கட்சிகளும் தெருமுனையில் மக்கள் பிரச்சனைகளை வைத்து கூட்டம் போட்டு பிரச்சாரம் செய்கின்றன. அந்தப் பக்கம்? கோடம்பாக்கமே திரண்டு வந்து பிரச்சாரம் செய்கிறது. ஜெயலலிதா ஜெயிப்பார்.

5. கம்பம்:
செல்வேந்திரன் (திமுக)-(காங்கிரஸ் பலம் +)
ராமகிருஷ்ணன் (மதிமுக)

காங்கிரஸ் ஓ.ஆர். ராமசந்திரன் 3 முறை வென்ற கம்பம் இப்போது திமுக வசம். கம்பம் மதிமுக வேட்பாளரை ஆதரித்து வைகோ, காங்கிரஸ் நெல்லைக்கண்ணன் மற்றும் சில நடிக நடிகைகள் விறு,விறு பிரச்சாரம் செய்தனர். அந்தப்பக்கமும் ஆர்.எம்.வீ, வெற்றி கொண்டான், நடிகர்கள் பிரச்சாரம் செய்தனர். அரசு ஊழியர்களின் ஓட்டுக்கள் திமுக பக்கம், டாஸ்மார்க் ஊழியர்கள் அதிமுக பக்கம். கம்பம் பள்ளத்தாக்கு விவாசயம் செழித்து நடக்குமிடம். விவசாயக் கடன் தள்ளுபடி நல்ல பலன் தரும் திமுகவிற்கு. இங்கு அதிக மகசூல் ஆகும் திராட்சை களுக்கு உரிய விலைகள் கிடைக்காது. ஒயின் தொழிற்சாலை அமைத்துத் தருகிறேன் எனக் கூறி வாக்கு கேட்கிறார் தேமுதிக சார்பில் நிற்கும் ஜெயநாத். கம்பம் செல்வேந்திரனுக்குத்தான் கம்பம்.
தேனி இயற்கை வளம் நிரம்பிய மாவட்டம். அநேக தெற்கத்திய மாவட்டங்கள் விவசாய பூமிதான் ஆனாலும் தேனி முழுக்க, முழுக்க ஒரு விவசாய மாவட்டம். பெரியகுளத்தில் மாம்பலம், தேனியில் கரும்பு, போடியில் ஏலக்காய், இலவம் பஞ்சு கம்பத்தில் திராட்சையென இயற்கை சிரிக்கும் மாவட்டம். ஆனால் இதைப் பயிர் செய்யும் விவசாயிகள் சிரிக்கிறார்களா?., அதற்குதான் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் போட்டி போட்டுக் கொண்டு விவசாயக் கடனை ரத்து செய்கின்றன. தேர்தல் அறிவிப்புக்கு முன்னும், பின்னும் சலுகைகள் அருவியாய் கொட்டிக்கொண்டிருக்கிறது. விவசாய சலுகைகள் அனைத்து மாவட்டங்களுக்கும் பொதுவனவைதான் என்றாலும் இம்மாவட்ட வெற்றியை கருத்தில் கொண்டே இரு பெரும் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும் உழவர்களைத் தாலாட்டுகின்றன. இத் தாலட்டுகள் மயங்கவைக்கலாம், ஓட்டுப் போடும் காலம் வரை உழவர்களை உறங்க வைக்கலாம். ஆனால் உழவர்களின் உண்மையான தேவை என்ன?. முல்லைப் பெரியாறு அணையில் 6 அடி நீரை அதிகம் தேக்க, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் கேரள அரசு கட்டுப்படவில்லை. எலியும், பூனையுமாக கடித்துக் கொண்டிருந்த காங்கிரஸூம் கம்யூனிச கட்சிகளும் ஒன்றாக கட்டிப்பிடித்துக் கொண்டு இத் தீர்ப்பை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள். 6 அடித் தண்ணீரால் கேரளாவிற்கு பாதிப்பில்லை இல்லை. ஆனால் தமிழகம் பயனடைந்துவிடக்கூடாதென பாய்கிறார்கள். இதற்கான முயற்சி ஆளுங்கட்சி எடுத்தது... ஆனால் அதன் 'ஜென்மப் பகைவர்களையும்' அரவணைத்துப் போராடி இருந்தால் இதற்கொரு முடிவு கிடைத்திருக்கும். மலையிலிருந்து பெரியகுளம் வந்து பொருட்களை விற்க மலைவாழ் மக்கள் படும் அவதி 35 மைல்கள் சுமையுடன் சுற்றி வரவேண்டும். இம்மாவட்டத்தின் ஒவ்வொரு தொகுதியிலும் இருக்கிறது இத்தகைய சாலைப் பிரச்சனைகள். அதை தீர்ப்பதாக கூறி ஆயிரம் சாலைத் திட்டங்களும் துவக்கப்பட்டது. எளிய மக்களை மனதில் கொண்டு எந்தக் கட்சி இயங்குகிறதிங்கு?. அரசு ஊழியர்களுக்காக போராட ஆயிரம் அமைப்புகள் உண்டு. வாழ்நாள் முழுதுவம், 'தான் தினமும் உழைத்தால் உணவு' என்றுள்ள மக்களை அரவணைக்க யார் இருக்கிறார்கள்?. தேனியில் கரும்பை விளைவித்து ஆலையில் (அதுவும் விவசாயிகள் செலவில்) கொட்டினாலும், அதற்கான காசுக்காய் காலமெல்லாம் காத்திருக்க வேண்டியுள்ளது. போடியில் இலவம்பஞ்சு தொழிற்சாலை இல்லை... இவ்வளவுகாலம் இதெல்லாம் இருந்த பிரச்சனைகள்தானே? அப்புறமென்ன தேர்ந்தெடுத்தால் நடக்கும் என்பது... சரி... அதிமுக சார்பில் ஜெயலலிதாவும், பன்னிர் செல்வமும் வெல்லும் வாய்ப்புள்ளது. முன்னால் அதிமுக எம்.பி கோபால் (எம்.எல்.ஏ வாகவும் இருந்திருக்கிறார்) திமுகவை ஆதரிக்கப் போகிறார். எனவே இப்பகுதியில் அதிகம் இருக்கும் ஒக்கலிக கவுட சமூக ஓட்டுகள் திமுகவிற்கு சாதகமாக அமையும்.
கடந்தமுறை இம்மாவட்டத்தில் உள்ள 5 இடங்களில் 4 களை அதிமுகவும், 1 இடத்தை கூட்டணி கட்சியான த.மா.கவும் களை அதிமுகவும், 1 இடத்தை கூட்டணி கட்சியான த.மா.கவும் கைப்பற்றின. இப்போது 3 இடங்கள் திமுக கூட்டணிக்கு உறுதியாக கிடைக்கலாம்.
திமுக - 2, காங்கிரஸ் - 1
அதிமுக - 2
வெல்வதற்கு வாய்ப்புள்ளவர்கள் :
செல்வேந்திரன் (திமுக)
எஸ்.லட்சுமனன் (திமுக)
என்.டி.ஆர்.ராஜ்குமார்(காங்கிரஸ்)
ஜெ.ஜெயலலிதா (அதிமுக)
ஓ. பன்னிர்செல்வம்(அதிமுக)
தேனி நண்பர்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.
கன்னியாகுமரி மாவட்ட கணிப்பு.
நெல்லை நிலவரம்.
தூத்துக்குடி மாவட்டம்
இராமநாதபுரம் மாவட்டம்
சிவகங்கை மாவட்டம்

தேர்தல் அலசல் - 2006 - மதுரை


முத்தா? மாணிக்கமா?

மதுரை : மொத்தம் 10 தொகுதிகள்.

1.மேலூர் 2. சோழவந்தான் 3. சமயநல்லூர் 4. மதுரை கிழக்கு 5. மதுரை மேற்கு 6. மதுரை சென்ட்ரல் 7.உசிலம்பட்டி 8.திருமங்கலம் 9. திருப்பறங்குன்றம் 10.சேடபட்டி

1.மேலூர்:
ரவிச்சந்திரன் (காங்கிரஸ்) -(கூட்ட்ணிபலம்+)
ஆர்.சாமி (அதிமுக) - சிட்டிங்

காங்கிரஸ், திமுக பலமாக உள்ள தொகுதி எனவே இத் தொகுதியை காங்கிரஸ்க்கு விட்டுக் கொடுத்திருக்கிறார்கள். சிட்டிங் ஆர்.சாமி மீண்டும் நிற்கிறார் அதிமுகவிற்காக. தெமுதிக சார்பில் ராமகிருஷ்ணன் நிற்கிறார். கிராமப்பகுதிகள் அனைத்தும் அதிமுகவிற்கு ஆதரவளிக்கின்றன. ஆனால் நகர்புற ஓட்டுக்கள் ரவிச்சந்திரனுக்குத்தான் சதகமாக உள்ளது. இத்துடன்கூட்டணி பலம், தேர்தல் அறிக்கையில் விவசாயிகள் நலன் அனைத்தும் சேர்த்து காங்கிரஸ் வெல்ல வாய்புண்டு." கை " வரும் மேலூர்.

2. சோழவந்தான் :
பி.மூர்த்தி (திமுக) -( கூட்டணிபலம் +)
ஐ.மகேந்திரன் (அதிமுக)

சிட்டிங் வீ.ஆர் ராஜாங்கத்திற்கு சீட்டில்ல. திமுகவில் நின்று தோற்ற மூர்த்திக்கு மீண்டும் இங்கு நிற்க வாய்ப்பு. திமுக எல்.சந்தானம் இடை விடாது பிர்ச்சாரம் செய்கிறார் திமுக வெட்பாளருக்காக. திமுக மூர்த்தியோ பொதுக்கூட்டங்கள், தெரு முனைப் பிரச்சாரம் என உற்சாகமாக வலம் வருகிறார் தொண்டர்படையுடன். தேமுதிக ராஜேந்திரன் முரசை ஒலித்தபடி வீடு வீடாக சென்று , தண்ணீர் பிடிப்பவர்களிடம் என பார்க்குமிடமெல்லாம் வாக்கு சேகரிக்கிறார். பார்வர்டு அவர் சத்துக்கு பிரச்சாரம் செய்து வருகிறார். திமுக மாசெ மூர்த்திக்கு உள்ளது வாய்ப்பு.

சமயநல்லூர்

ஏ.தமிழரசி ரவிக்குமார்(திமுக) -(கூட்டணி பலம்+)
பி.லட்சுமி (அதிமுக)

மதுரையிலேயே பெரிய தொகுதி. பெண்கள் மோதும் தொகுதி. சிட்டிங் பி.பொன்னம்பலத்திற்கு தொகுதியில் உள்ள நல்ல்ல்ல பெயர் (எப்ப அவர் ஓட்டுக்கேட்டு வருவார் என மக்கள் காத்திருக்கிறார்களாம்). அதிமுக வேட்பாளருக்கு பாதிப்பு. மாசெயின் முழு ஆதரவுடன் களத்தில் இருந்தாலும் அதிமுக கோஷ்டி குழப்பத்தால் தவிக்கிறார் லட்சுமி. குலமங்கலத்தில் இவர் பிரச்சாரம் செல்ல, இரண்டு கோஷ்டிகளுக்குள் நடந்த சண்டையில் எம்.எல்.ஏவை மீட்டு பாதுகாப்பாக அழைத்து வந்திருக்கிறார்கள். திமுக சார்பில் தமிழரசி நிற்கிறார். இத் தொகுதியில்(1996ல்) லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்று வென்ற திமுக சமயநல்லூர் செல்வராஜை ஓரங்கட்டிவிட்டு மா.செ .மூர்த்தியே பிரச்சாரத் திட்டங்கள் கொடுக்கிறார். கூட்டணி பலத்தால் திமுக வெல்லலாம்.

4. மதுரை கிழக்கு:
நன்மாறன் (சிபிஐ (எம்) - சிட்டிங்-(கூட்டணி பலம், சொந்த செல்வாக்கு, கட்சி பலம்++)
மூ.பூமிநாதன் (மதிமுக)

குறைந்த வாக்காளர்களைக் கொண்ட தொகுதியான மதுரைக்கிழக்குத் தொகுதியில்கம்யூனிஸ்ட் கட்சிகளின் குறிப்பாக ஐபிஐ (எம்) ன் செல்வாக்கு மிக்க தொகுதி. கடந்தமுறையும் சிபிஎம் நன்மாறன் தான் வென்றிருக்கிறார். எதிர்தரப்பும் இத் தொகுதியை கூட்டணி கட்சியான மதிமுகவிற்கு தந்துள்ளது மதிமுக பூமிநாதன் இங்கு நிற்கிறார். நன்மாறன் எளிமையாலும் தன் உழைப்பினாலும் மக்களை கவர்ந்தவர். பூமிநாதன் முக்குல ஓட்டுக்களைகள் வரும் என்ற நம்பிக்கையிலிருக்கிறார். ஃபார்வர்டு ப்ளக் வேட்பாளர் என். சுப்பையா அதிமுக ஓட்டுக்களை பிரிக்கக்கூடும். தொகுதி செல்வாக்கும், நல்லபெயரும், கூட்டணி பலமும் நன்மாறனை மீண்டும் தேர்ந்தெடுக்க வைக்கும்.

5. மதுரை மேற்கு:
என்.பெருமால்(காங்கிரஸ்) --(கூட்டணி பலம்+)
எஸ்.விசண்முகம்(அதிமுக).

பீ.டி.ஆர். பழனிவேல் ராஜன் தொகுதி கங்கிரஸ்க்கு சென்று விட்டது. சிட்டிங் வளர்மதி ஜெபராஜ். அதிமுக சண்முகம் முழுவீச்சில் பிரச்சாரம் செய்கிறார். காங்கிரஸ் தரப்பும் கூட்டணியுடன் களமிறங்கினாலும், கிராம புறங்கள் அதிமுகவிற்கு சாதகமாக இருக்கிறது. தேமுதிக மணிமாறனும் களத்தில் இருக்கிறார். கடினமான தொகுதிதான் என்றாலும் அழகிரியின் உழைப்பு, கூட்டணிகட்சிகளின் ஆதரவைக் கொண்டு பர்த்தால் பெருமால் வரலாம்.

6. மதுரை சென்ட்ரல்:
பி.டி.ஆர். பழனிவேல்ராஜன்(திமுக) - (கூட்டணி, சொந்த செல்வாக்கு, கட்சி பலம்++)
எஸ்.கே.டி.ஜக்கையன்(அதிமுக).

முன்னால் சபாநாயகர் பி.டி.ஆர். போட்டியிடும் தொகுதி. மதுரையிலேயே சிறிய தொகுதி. கடந்த முறை அவர் மதுரை மேற்கில் நின்று, வளர்மதி ஜெபராஜிடம் 700 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். அழகிரி ஆதரவு அப்போது அவருக்கு இல்லாததாலேயே அது நடந்தது. இம்முறை தங்கம் தென்னரசு, தளபதிக்காக அருப்புக் கோட்டையிலும், சேடபட்டியிலும் அழகிரி முகாமிட்டு இருந்தாலும். பி.டி.ஆரும் தனக்காக பிரச்சாரம் செய்ய அழைத்திருக்கிறார். இத் தொகுதியில் கடந்த மூன்று முறை காங்கிரஸ் வென்று இருக்கிறது. மட்டுமில்லாமல், திமுக ஆட்சியில் பல சாதனைகளை மதுரை மக்களுக்காக செய்துள்ளார் பி.டி.ஆர். போனமுறை வளர்மதிதானே?ன்னு விளையாட்டா இருந்து கோட்டைவிட்ட மாதிரி, இம்முறை இருந்தால் கூட, பி.டி.ஆரின் சொந்த செல்வாக்கும், அழகிரியின் செல்வாக்கும், கூட்டணி கட்சிகளின் பலமும் சேர்ந்து இம்முறை வெற்றி நிச்சயம். இங்கு மத்திய தர மக்களின் வாக்கு வங்கி யாருக்கோ அவர் வெல்வார். அரசு ஊழியர்கள் நிறைந்த தொகுதியிது. வைகை 2 ஆவது குடிநீர்த்திட்டம், தேர்தல் அறிக்கை ஆகியவற்றை முன்னிலைப் படுத்தி பிரச்சாரம்செய்கிறது திமுக தரப்பு. மதுரை சென்ட்ரலின் அதிமுக வேட்பாளர் யாருப்பா? எஸ்கேடி ஜக்கையனா? பார்வர்டு கட்சியிலிருந்து பிரிந்து வந்த உசிலம்பட்டி. எல்.சந்தானம் இல்லையா?. அதிமுக வேட்பாளர் ஜக்கயனாக இருந்தால் அவரை மக்கள் எப்போது வேண்டுமானலும் சந்திக்கும் வகையில் எளிமையானவர். யார் எதிர்த்து நின்றாலும் சரி ., மதுரை சென்ட்ரல் பழனிவேல் ராஜனுக்கே.

7.உசிலம்பட்டி:
பி.வி.கதிரவன்(திமுக)
ஐ.மகேந்திரன் (அதிமுக) - (பணபலம் +)

பார்வர்டு பிளாக்கின் பலமானதொகுதி. கடந்த இரு முறையும் ஃபார்வர்டு ப்ளாக்தான் வென்றுள்ளது. பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி ஊராட்சிகள் இரண்டும் இத் தொகுதியில்தான் இருக்கிறது. முக்குலத்தோர் வாக்குகள் வெகுவாக வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கும். ஃபார்வர்டு ப்ளாக் நிச்சயம் இத்தொகுதியில் கணிசமான வாக்குகள் பெறும். திமுகவில் இருக்கும் அதிருப்தியாளர்களின் உள்குத்து வேலைகள் அனைத்தும் கதிரவனுக்கு சறுக்கல். பணபலமுள்ள நகர்மன்றச் செயலர் மகேந்திரன் என்பதால் இவருக்கு ஆதரவு அதிகமாகவேயுள்ளது. இவருக்கு வரும் முக்குல ஓட்டுக்களை பார்வர்டு பிளாக் பிரிக்கும், நாடார் ஓட்டுக்கள் அதிமுகவிற்கு அதிகம் விழ வாய்ப்பில்லை. அடுத்தபடியாக அதிகம் உள்ள தலித் சமூக ஓட்டுக்கள் யாருக்கென்பதும் குழப்பமே. இங்கதான் கலைஞர் ஏதோ கேட்கப் போக, அதை ஊதி சில பேர் அவர எரிச்சல் படுத்த, மீண்டும் வாய்திறந்தார். பற்றிக் கொண்டது. தேமுதிக ஏ.கே.டி. ராஜா என்ற வேட்பாளரை இங்கு நிறுத்தியுள்ளது. கதிரவனை பளீரூட்ட அழகரி களமிறங்குவார். இப்போதைக்கு உற்சாகமாக வலம் வருவது அதிமுக மகேந்திரந்தான்.

8.திருமங்கலம் :
வ.வேலுச்சாமி(திமுக) - (கூட்டணி பலம் + )
வீர.இளவரசன் (மதிமுக)
சிட்டிங் அதிமுக காளிமுத்து. இம்முறை இத் தொகுதியை மதிமுகவிற்கு விட்டுக் கொடுத்திருக்கின்றன ரரக்கள். மேலூர் பொடா இளவரசன் மதிமுக சார்பில் இங்கு நிறுத்தப்பட்டுள்ளார். இவரை எதிர்த்து திமுக மா.செ வேலுச்சாமி நிற்கிறார். போனமுறை காளிமுத்துவை எதிர்த்து நின்று தோற்ற திமுக ஒச்சாத் தேவர் இப்போது பா.ஜ.க சார்பில் இங்கு ஓட்டைப் பிரிப்பேன் என நிற்கிறார். கூட்டணி கட்சிகளுடன் பெரிய தலைகள் பிரச்சாரத்துடன் பொலிவாக நடை போட்டுக் கொண்டிருப்பது வேலுச்சாமிதான். திருமங்கலத்தில் வேலுச்சாமிக்கு வாய்ப்புள்ளது.


9. திருப்பறங்குன்றம் :
வெங்கடேசன் ( சிபிஐ (எம்))
ஏகே. போஸ் (அதிமுக) - (பிரச்சாரம் +)
சிட்டிங் எம்.எஸ் சீனிவேலுக்கு மறுக்கப்பட்டு ஏ.கே.போஸ்க்கு கிடைத்திருக்கிறது தொகுதி. அதிமுக உள்குத்து வேலைகளுக்கு மத்தியிலும் பிரகாசமாய் இருக்கிறார் போஸ். இத் தொகுதியில் 4 முறை நின்று இருமுறை வென்றிருக்கிறார். இருந்தும் தொகுதி சிபி எம்ற்கு சென்றுவிட்டது. இது காங்கிரஸ்க்கும், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் பலமில்லாத் தொகுதி. அதிமுக போஸ்க்கு தெரிகிறது வெற்றிமுகம்

10.சேடபட்டி:
கோ. தளபதி (திமுக) -(கூட்டணி + )
டி.துரைராஜ் (அதிமுக)

அதிமுகவின் பலமான தொகுதி. சேடப்பட்டி முத்தையா தொகுதி., அவர் 6 முறை இத்தொகுதியில் போட்டியிட்டு 4 முறை வென்றவர். அதிமுக சிட்டிங் துரைராஜ் (மாஜி அமைச்சரும் கூட) இப்போதும் போட்டியிடுகிறார். இவர் சேடபட்டியை செயல் வீரர்கள் கூட்டத்தில் குறைத்துப் பேசிவிட, அதைகேட்டு வெகுண்டெழுந்த முத்தையா அடுத்த நாளே திமுகவில் சேர்ந்துவிட்டார். இப்போது திமுக வேட்பாளர் தளபதிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார். இது அதிமுகவிற்கு பாதகம். இருந்தாலும் முக்குலத்தோர் வாக்குகள் தனக்கு கிடைக்குமென நினைக்கிறார் துரைராஜ், தொகுதி மக்களின் அதிருப்தியும் இவர் மேல் உள்ளது. நாயுடு சமுகத்தைச் சேர்ந்த தளபதிக்கோ தொகுதியில் நல்ல அறிமுகம் இருக்கிறது 1996ல் 48,899 வாக்குகள் பெற்று இத் தொகுதியில் வென்றார். இங்கு பார்வர்டு பிளாக் சார்பில் நிற்கும் ராமதுறை சிங்கத்த காருக்கு முன்னாடி உட்காரவச்சுகிட்டு தொகுதிய சுத்தி வாராராம்மில்ல? (சிங்கம் பொம்மைதான்). இம்முறையும் தளபதிக்கு சேடப்பட்டி வாய்ப்பு நல்குமெனவே தெரிகிறது.


கடந்தமுறை மதுரை மாவட்டத்தில் 6 தொகுதிகளில் போட்டியிட்டது திமுக. அதிமுக அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. மதுரை மாவட்டத் திமுக வளர்ச்சிக்கு அழகிரி மிக அவசியம். போன முறை அவர் தேர்தலில் ஆர்வம் காட்டியிருந்தால். அவ்வளவு இழப்பு திமுகவிற்கு இருந்திருக்காது என்பது உறுதி. படித்த மக்கள் வசிக்கும் மதுரை சென்ட்ரலிலாவது திமுக வென்றிருக்கும்.
திண்டுக்கல் நண்பர்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.
கன்னியாகுமரி மாவட்ட கணிப்பு.
நெல்லை நிலவரம்.
தூத்துக்குடி மாவட்டம்
இராமநாதபுரம் மாவட்டம்
சிவகங்கை மாவட்டம்
விருதுநகர் மாவட்டம்
தேனி மாவட்டம்
நாகை மாவட்டம்
புதுகை மாவட்டம்
திண்டுக்கல் மாவட்டம்

தேர்தல் அலசல் - 2006 - சிவகங்கைசிவகங்கை யாருக்கு?

சிவகங்கை : மொத்தம் 5 தொகுதிகள்.
1.திருப்பத்தூர் 2.இளையான்குடி 3.கரைக்குடி 4. மானா மதுரை 5.சிவகங்கை.

1.திருப்பத்தூர் :
கே.ஆர். பெரியகருப்பன் (திமுக) -(யாதவ சமுதாய ஓட்டுக்கள் மொத்தமாக கிடைப்பது, கூட்டணி பலம் +)
கே.கே. உமாதேவன்(அதிமுக)

இரண்டு கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மோதுகிறார்கள். திமுகவின் மா.செ பெரியகருப்பன் களத்தில். அழகிரி அதரவாளர் சிவராமனுக்கு சீட் மறுக்கப்பட்டதால் திமுகவினருக்கு வருத்தம். எம்.ஜி.ஆர் காலத்திலேயே அதிமுகவில் இணைந்து தற்போது அதிமுக மா.செவான சிட்டிங் கே.கே. உமாதேவனுக்கு மீண்டும் சீட் கிடைத்திருக்கிறது. இங்கு இருமுறை அதிமுகவில் வென்று அமைச்சராக இருந்த இராஜ கண்ணப்பன் கையிலிருந்து திருப்பத்தூரை. கே.கே உமாதேவனுக்கு மாற்றி விட்டது அதிமுக தலைமை. நெல்லைக் கண்ணன் போன்ற காங்கிரஸ் ஆட்களும் உமாதேவனுக்காக ஒட்டு கேட்கிறார்கள். யாதவ ஓட்டு வங்கியை தன் பாக்கெட்டில் வைத்திருக்கும் கண்ணப்பன் திமுகவில் இணைந்தது பெரிய கருப்பனுக்கே சாதகம். பெரியகருப்பனும் யாதவ இனம்தான். திருப்பத்தூர் திமுகவிற்கே.

2.இளையான்குடி:
ஆர்.எஸ். இராஜ கண்ணப்பன்(திமுக) - (யாதவ சமுதாய ஓட்டுக்கள் மொத்தமாக கிடைப்பது, கூட்டணி பலம் ++)
க. அய்யாசாமி (அதிமுக)
ஆர்.எஸ். இராஜ கண்ணப்பன்(திமுக)
மக்கள் தமிழ் தேசம் திமுகவுடன் இணைந்தவுடன் சீட்டு இந்த முன்னாள் அதிமுக அமைச்சருக்கு. வென்றவுடன் அமைச்சராகலாம். தாயமங்கலம் தலைவர் அய்யாசாமிய அல்லல் பட வைக்க கண்ணப்பனின் யாதவ சமூக ஓட்டுக்கள் பணபலம் மற்றும் அமைச்சராய் அவர் இருந்தபோது திருப்பதூரில் சாதித்தது எல்லாம் இருக்கிறது. கண்ணப்பனை சமாளிக்க வேண்டும் என யாதவ இனத்ததச் சேர்ந்த எம்.பி கோகுல இந்திரா அதிமுகவால் பணிக்கப்பட்டிருக்கிறார். யாதவ இனத்திற்காக ஆரம்பிக்கப் பட்ட மக்கள் தமிழ் தேசத்தை கலைத்துவிட்டு, திமுகவிற்கு ஓடிவிட்டார். மூன்று துறைகளை இவரிடம் கொடுத்து இவரை அமைச்சராக்கிய 'அம்மா' வை விட்டு ஓடி விட்டார் என சளைக்காமல் பிரச்சாரம் செய்கிறார் இந்திரா. யாதவ ஓட்டுக்களுக்கு அடுத்த ஓட்டு வங்கி உடையார் மக்களுடையது. அதுவும் கண்ணப்பனுக்கு சாதகமாகவே இருக்கும். இதையெல்லாம் விட சிட்டிங் என்.எல்.ஏ நடராஜன் தொகுதி மக்களிடம் எடுத்திருக்கும் பேர் அய்யாச்சாமிக்கு மிகுந்த சரிவைத் தரும். நடராஜனுக்கு இரண்டு முறை அம்மா அமைச்சர் பதவி கொடுத்து, இரு முறையும் அதை திருப்பிவாங்கி கொண்டுவிட்டார்கள் (?!).உசாராக பிரச்சாரக் கூட்டத்தில் எம்.எல்.ஏ இல்லாமல் பார்த்துக்கொண்டாலும், அதிமுகவிற்குள்லேயே உள்ள கோஷ்டி பிரச்சனை வேறு மற்றொரு பக்கம் அவரை நோகடிக்கிறது. புரட்சித் தலைவி பசுமைத் தாயகம் என்ற புதிய அமைப்பின் அமைப்பாளர் வி.என்.சுந்தராஜனுக்கு அதிமுகவில் சீட் கொடுத்திருக்கலாம் என நினைக்கிறது அதிருப்தி கோஷ்டி. கண்ணப்பனுக்கு கூட்டணியில் உள்ள அத்தனை கட்சிகளும் வேலைபார்க்க, தனியாளாய் தத்தளிக்கிறார் அய்யாசாமி. தேவர்கள் பக்கமாவது திரும்பலாம் என்றால் தேமுதிக வேட்பாளர் மணிமாறனும், பி.ஜே.பி வேட்பாளர் தேவேந்திரனும் முக்குலத்தைச் சேர்ந்தவர்கள். இத்தொகுதிக்கு அடுத்த 5 வருடம் ராஜா ராஜ கண்ணப்பந்தான்.

3.கரைக்குடி:
என். சுந்தரன் -(காங்கிரஸ்) (கூட்டணி பலம் +)
செல்லையா என்ற வெங்கடாசலம்(அதிமுக)
திமுக நல்ல எண்ணிக்ககயில் வாக்குகள் பெரும் தொகுதி. இம்முறை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வேட்பாளர் சுந்தரத்தின் மீது காங்கிரஸ் மக்களே திருப்தியாக இல்லை. ஆனால் எம்.பியும், மத்திய அமைச்சருமான பா.சிதம்பரத்தின் ஆதரவாளர். ஆனால் குழப்பம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காங்கிரஸ் தலைமை அறிவித்து உள்ளதால் குழப்பங்கங்கள் நீங்கும். சாக்கோட்டை ஒன்றிய செயலாளர் செல்லயா அதிமுக வேட்பாளராக களமிறக்கப் பட்டுள்ளார். காங்கிரஸ் வெல்ல வாய்ப்பிருக்கிறது.

4. மானா மதுரை(தனி) :
கே.பாரமலை (காங்கிரஸ்) - சிட்டிங் - (கூட்டணி பலம் +)
ம.குணசேகரன்(அதிமுக)

காங்கிரஸின் மாநில துணைத்தலைவரும், காமராஜர் காலத்தில் இருந்து கட்சியில் இருப்பவரும் ஆன காங்கிரசின் முக்கிய தலைவர்களில் ஒருவரான கே. பாரமலை எப்போதும் நிற்கும் தொகுதி. கடந்த முறையும் எம்.எல்.ஏ அவர்தான். சுயேட்சையாக கூட ஒரு முறை வென்றிருக்கிறார் இத்தொகுதியை. குணசேகரன் முன்பு ஒரு முறை இதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். ஜெ இங்கு வந்துவிட்டு போன பிறகு ர.ரக்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். தொகுதி மக்களின் அதிருப்தியை 'சாதித்து' இருக்கிறார் பாரமலை என்றாலும் கூட்டணி பலம், காங்கிரஸ்சை மீண்டும் வெல்ல வைக்கும்.

5.சிவகங்கை
எஸ்.குணசேகரன் (சிபிஐ)
புலவர்.சிவந்தியப்பன்(மதிமுக) (மதிமுகவின் கூட்டணிபலம், காங்கிரஸ் கோஷ்டி அரசியல் +)

சுப்ரமணியன் பழைய தல காங்கிரஸில் இருந்தவரை சிவகங்கை காங்கிரஸ் கங்கையாக இருந்திருக்கிறது., சுதர்சன நாச்சியப்பன் காங்கிரஸ் சார்பாக இத்தொகுதியில் பொட்டியிட்டு தோற்ற பிற்கு அதிமுக, திமுகன்னு சுத்தி போனமுறை அதிமுகவிற்கு கிடைத்தது. இம்முறை இத் தொகுதி மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. போனமுறை அதிமுக கூட்டணி பலத்தால் வென்றாலும் இம்முறை சந்தேகம்தான் என நினைத்தோ என்னவோ கூட்டணி கட்சிக்கு ஒதுக்கி விட்டார்கள். அதுவும் தா.கிருட்ணனோட ஊர் என்பதால் திமுகவின் மேல் உள்ள கோபத்தை அதிமுக நின்றால் முழுதாக அள்ளமுடியாது என்று மதிமுகவை களமிறக்கி இருக்கிறாக்கிறார்கள் (வைகோ வந்து பேசி, ஒரு சொட்டு கண்ணீர்விட்டா பத்தாது?) அந்தப்பக்கம் மட்டுமென்ன? திமுக வேட்பாளரை நிறுத்தி பறிசோதனை பண்ணாமல், சிபிஐ க்கு ஒதுக்கியுள்ளார்கள். காங்கிரஸ் ஓட்டுகளும் எப்போதும் கிடைப்பது கிடைக்கும். சிபிஐ கட்சிக்கும் சக்தி சர்க்கரை ஆலையில் இருந்து விவசாமிகளுக்கு கடன் தொகையை பெற்றுத்தந்தார்கள், நிலத்தடி நீரை குளிபானக் தொழிற்சாலை உறிஞ்சுவதை தடுத்தார்கள் என நல்ல பெயர்தான். மதிமுக புலவர் செவந்தியப்பன் கூட்டணி கட்சி பிரமுகர்கள் புடைசூழ வலம் வருகிறார். இத் தொகுதி எம்.எல்.ஏ சந்திரன் மேல் உள்ள அதிருப்தியும் கம்யுனிஸ்ட்டுகளுக்கு சாதகமானதுதான். தேமுதிக இத் தொகுதியில் சுறுசுறுப்பாக உள்ளது. தன் வெற்றியை காங்கிரஸ் (சுயேட்சை) ராஜசேகரன் பார்த்துக் கொள்வார் என பொடா செவந்தியும்., சிட்டிங் சந்திரனை பிரச்சாரத்துக்கு அழைத்துப் போனால் அவர் சாதனை(?!) நம்மை அமரவைத்துவிடும் என 'குணசேகரனும்' தெம்பாக உள்ளனர். ஆனால் எல்லாவற்றையும் கூட்டி, கழித்துப்பார்த்தால் பொடா வெடி வெடிக்கலாம். செவந்தியப்பனுக்கே சிவகங்கை.
மொத்தத் தொகுதிகள் - 5. திமுக - 2 , காங்கிரஸ் - 2, சிபிஐ - 1
அதிமுக - 4, மதிமுக - 1 என களத்தில். தனது மாவட்டத்தில் 5 தொகுதிகளையும் காங்கிரஸ் கூட்டணிக்கு பெற்றுத் தர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார் அமைச்சர் பா.சிதம்பரம். தா.கி மரணத்திற்கு பின்பு வரு சட்டமன்றத் தேர்தல். இம்மாவட்டத்தில் திமுக 2 இடங்களில்தான் போட்டியிடுகிறது. கடந்த முறை அதிமுக இங்கு 3 இடங்களில் வென்றது.
திமுக கூட்டணி - 4 அதிமுக கூட்டணி - 1
திமுக - 2 , காங்கிரஸ் - 2 வெல்லலாம்.

மதிமுக - 1 வெல்லலாம்.

வெல்வதற்கு வாய்ப்புள்ளவர்கள் :
கே.ஆர். பெரியகருப்பன் (திமுக)
எஸ். இராஜ கண்ணப்பன்(திமுக)
என். சுந்தரன் -(காங்கிரஸ்)
கே.பாரமலை (காங்கிரஸ்) - சிட்டிங்
புலவர்.சிவந்தியப்பன்(மதிமுக)
சிவகங்கை நண்பர்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.
கன்னியாகுமரி மாவட்ட கணிப்பு.
நெல்லை நிலவரம்.
தூத்துக்குடி மாவட்டம்
இராமநாதபுரம் மாவட்டம்

தேர்தல் அலசல் - 2006 - விருதுநகர்

சரவெடி யாருக்கு?

விருதுநகர் : மொத்தம் 6 தொகுதிகள்.

1. விருதுநகர் 2. அருப்புக் கோட்டை 3. ராஜபாளையம் 4. திருவில்லிப்புத்தூர் 5.சிவகாசி 6. சாத்தூர்

1. விருதுநகர்:
எஸ்.தாமோதரன்(காங்கிரஸ்) - சிட்டிங் (கட்சி பலம், கூட்டணிபலம் +)
இரா.வரதராஜன்(மதிமுக)

சிட்டிங் தாமோதரன் இம்முறையும் 'சீட்டிங்'. கடந்த 4 தேர்தல்களில் காங்கிரஸ் 3 முறை (தமாக 1), திமுக 1 முறை வென்றுள்ளன. நாடார், தேவர், கம்பலத்து நாய்க்கர், கம்மாள நாயுடு என பல இன மக்கள் நிறைந்துள்ள தொகுதி. தொகுதியில் நல்ல பெயர் இருக்கிறது தாமோதரனுக்கு. சென்ற தேர்தலில் 16,695 வாக்குகள் பெற்ற வரதராஜன் மதிமுக சார்பில் இம்முறையும் களத்தில். இவர் நாயுடு இனத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், அதிமுக உடனிருப்பதாலும் கணிசமாக வாக்குகள் பெறலாமென்றால், தேமுதிக சார்பில் சுப்புராஜ் போட்டியிடுகிறார். மதிமுகவின் ஓட்டுக்களை இவர் பிரிப்பார் மற்றும் தொகுதி கிடைக்கவில்லையே என்ற கடுப்பில் ரரஸ்... , வைகோ சிறையில் இருந்தபோது கட்சிப் பணியாற்றவில்லையே என உட்கட்சியிலேயே முனுமுனுப்பு. ஃபார்வர்டு ப்ளாக் வேட்பாளராக செல்வமும், புதிய தமிழகம் சார்பாக செல்வகுமாரன் என்பவர் நிற்கிறார். சிட்டிங் வெல்லவது சிரமம்தான் என்று தொகுதியில் நிலவும் அதிருப்தியை வைத்துச் சொன்னாலும்., கூட்டணி இருப்பதால் விருதுநகர், தமோதரனுக்கு விருது.

2. அருப்புக் கோட்டை:
தங்கம் தென்னரசு (திமுக)
க.முருகன்(அதிமுக) - (கூட்டணிபலம் +)

கடந்த 5 தேர்தல்களில் ஒருமுறை அதிமுக மறு முறை திமுக என மாறி, மாறி கைப்பற்றியிருக்கிறது அருப்புக் கோட்டையை. முன்னால் அமைச்சர். தங்கபாண்டியனின் வாரிசு தங்கம் தென்னரசுக்கு இம்முறையும் வாய்பளித்திருக்கிறது திமுக. சிட்டிங் எம்.எல்.ஏ சிவசாமிக்கு (உசாராக) மறுத்து , ஒன்றியச் செயலாளர் முருகனுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறது அதிமுக. கடந்தமுறையும் தங்கம் தென்னரசு இதே தொகுதியில் நின்று, அப்போதைய கூட்டணி பலமில்லா திமுகாவிற்கு 43,155 ஓட்டுக்கள் பெற்றார். இப்போது கூட்டணியும் இருக்கிறது, மதுரை திமுக அழகிரியும் உடனிருக்கிறார் . இருந்தும் அருப்புக் கோட்டையையெல்லாம் திமுக நம்பவே முடியாது. எல்லாம் இலைக்கு குத்திட்டு போயிருவாங்க. முருகனுக்கு அருப்புக்கோட்டை கிடக்கலாம்..

3. ராஜபாளையம்(தனி):
வி.பி. ராஜன் (திமுக) - (தொகுதியில் செல்வாக்கு, கூட்டணிபலம் +)
மு.சந்திரா(அதிமுக)

கடந்த 3 முறைகள் இத்தொகுதியில் போட்டியிட்ட வி.பி.ராஜன் இம்முறையும் களத்தில். 2 முறைகள் இத்தொகுதியிலேயே வென்று , கடந்த தேர்தலில் அதிமுக வேட்பாளரிடம் தோற்று தொகுதியை ஒப்படைத்திருக்கிறார். செல்வாக்குமிக்க ராஜபாளையம் சேர்மன் சுப்பராஜா வைகோவின் நண்பர் என்றாலும் திமுக ராஜனை ஆதரிக்கிறார். ராஜன் முன்பு இங்கு வென்ற போது வந்த சாதிக் கலவரத்தை ஒடுக்கியது முதற்கொண்டு நிறைய தொகுதிக்கு செய்துள்ளார். தொகுதியில் அதிகம் உள்ள ராஜூக்கள் சமூகம் சார்ந்தவர். அதிமுக வேட்பாளர் சந்திராவும் கூட்டணி கட்சிகளின் துணையோடு தெம்பாக வலம் வருகிறார். தேவேந்திரகுல வேளாளர்கள் இங்கு அதிகம். புதிய தமிழகமும் களிமுத்து, பார்வர்டு ப்ளாக் விஜயகுமரியும் ஓட்டுக்களை பிரிப்பர். தேமுதிகவும் அய்யனார் என்பவரை இத் தொகுதியில் நிறுத்தியிருக்கிறது... கூட்டிக்கழித்துப் பார்த்தால் ராஜ பாளையம் ராஜன் பாளையம்.

4. திருவில்லிப்புத்தூர்:
டி.ராமசாமி (சிபி ஐ) - (கூட்டணிபலம் ++)
இரா. விநாயக மூர்த்தி(அதிமுக)

திருவில்லிப்புத்தூர் தாமரைக்கனியின் கோட்டை. அவர் அவரது மகன் இன்பத்தமிழனிடமே இழந்த கோட்டை. இப்போது சிட்டிங் இன்பத்தமிழனும் இழந்த கோட்டை. கடந்த 7 தேர்தல்களை எடுத்துக் கொண்டால், 5 முறை தாமரைக் கனியும் (ஒரு முறை சுயேட்சையாக ) ஒரு முறை அவர் மகன் இன்பத் தமிழனும் வென்றிருக்கிறார்கள். ஒரே ஒரு முறை திமுக வேட்பாளர் வந்திருக்கிறார் 1989ல் (என்னா பாடு பட்டாரோ பாவம்..). 1991 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தாமரைகனி சுயேட்சையாக நின்று அதிமுக விநாயகமூர்த்தியை வென்றார். இப்போது அதே விநாயகமுர்த்திதான் திருவில்லிப்புத்தூரில் அதிமுக சார்பில் இப்போது தேர்தலில் நிற்கிறார். அம்மா எப்படி காய் நகர்த்துராங்க ?. எல்லோரும் சீட் கிடைக்கவில்லையென்றால், கொஞ்ச நாள் 'உம்முன்னு' இருந்துட்டு பிறகு பிரச்சாரத்துல ஐக்கியமாயிருவாங்க., ஆனா இன்பத்தமிழன் விநாயகமூர்த்திக்கு இன்னும் துன்பமாகத்தான் இருக்கிறார். இதைப் பயன்படுத்தி பிரச்சாரவேகம் கூட்டுது இந்திய கம்யுனிஸ்ட். இன்று திமுகவில் இணைந்து விட்டார் இன்பத்தமிழன் இது மாவட்டம் முழுவதும் திமுகவிற்கு வாக்குகளை உயர்த்தும். திருவில்லிப்புத்தூரில் திருவிழா சிபிஐக்குத்தான்.

5.சிவகாசி :
வி.தங்கராஜ்(திமுக) - (கூட்டணிபலம் +)
ஞானதாஸ் (மதிமுக)

காங்கிரஸ்க்கு சற்று செல்வாக்குள்ள தொகுதி. மதிமுகவின் செல்ல தொகுதி இது. இங்கு நாயக்கர் சமூக வாக்கு வங்கி பலமாக உள்ளது. மதிமுக ஞானதாஸ் இதே தொகுதியில் 1996ல் நின்று, 31,993 வாக்குகள் பெற்றார். தற்போது தேமுதிகவில் போட்டியிடும் ராஜேந்திரன் என்பவரும் நாயக்கர் சமுகத்தைச் சேர்ந்தவர்தான். புதிய தமிழகமும் களத்தில் உள்ளது. இத்தொகுதியில் திமுக வேட்பாளர் எப்படியும் வெல்ல ஏண்டும் என்பது தாயாநிதி மாறனின் விருப்பம். இது வைகோ தொகுதி என்பதால். முத்தொழில் வளமுள்ள ஜப்பான் சிவகாசியில குடிக்க குடி நீர் இல்லை. தாமிரபரணி, மானூர் கூட்டு குடிநீர்த் திட்டம், சிவகாசியின் கனவு திட்டமான பம்பை - அச்சன் கோவில்-வைப்பார் நதிநீர் இணைப்புத் திட்டம் போன்ற திட்டங்களைப் பற்றி யார் அக்கரை கொண்டு செயல்படுவார்களோ அவர்களுக்கே மக்கள் ஆதரவு. கூட்டணியை கணக்கில் கொண்டால் தங்கராஜீக்குத்தான் வாய்ப்பதிகம்.

6. சாத்தூர் :
கே.கே.எஸ்.ஏஸ்.ஆர். ராமச்சந்திரன்(திமுக) - சிட்டிங் (தொகுதியில் செல்வாக்கு ++)
சொக்கேஸ்வரன்(அதிமுக)
கே.கே.எஸ்.ஏஸ்.ஆர்

தமரைக்கனியின் உற்ற நண்பர் :))). அண்ணாச்சி கே.கே.எஸ்.எஸ் ஆரின் கோட்டை. கடந்த 7 தேர்தல்களில் 6 முறை இங்கு நின்றிருக்கிறார் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ஒரு முறை விளாத்திகுளம் அவருக்கு ஒதுக்கப்பட்டதால் இங்கு போட்டியிட வில்லை. 7 தேர்தல்களில் 5 முறை வென்றிருக்கிறார் இத்தொகுதியில் 1 முறை விளாத்திகுளத்தில் வென்றிருக்கிறார். போனமுறை மட்டும்தான் கடந்த 7 முறைகளில் எதிர்கட்சி எம்.எல்.ஏ. அவருடைய செல்வாக்கு நிறைந்திருக்கும் தொகுதி. அதுவே அவருக்கு ஒரு வகையில் சருக்கலும் கூட, இன்னும் அதிமுகலதான் இருக்காருன்னு நெனைச்சுகிட்டு இலைக்கு குத்துறது எத்தன பேரோ?. கிராமப்புறங்களில் அதிமுகவின் செல்வாக்கு கணிசமாக இருக்கிறது. அதிமுக சொக்கேஸ்வரன் புதுமுகம். அதனால் அவர் மீது ர.ர க்களுக்கு அவ்வளவு ஈர்ப்பில்லைதான். இவர் தேவாங்கார் செட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர் எனவே அச்சமுதாய ஓட்டுக்கள் சுலபமாக அதிமுகவிற்கு கிடைக்கும். நாடார் சமுக மக்களும் அதிக அளவில் உள்ளனர். அதிமுக வேட்பாளருக்கு கூட்டணி கட்சிகள் தோள் கொடுக்கின்றன. மதிமுக தனித்து நின்று இத் தொகுதியில் 19338 வாக்குகள் பெற்றது கடந்த முறை. நாயக்கர் சமுகத்தின் வாக்குகள் மதிமுகவிற்கு கணிசமான வாக்குகள் பெற்றுத்தரும். அனைத்து கட்சியிலும் தாவி கடைசியில் தேமுதிகவில் சீட்டுப் பெற்ற சங்கரலிங்கம் சாலியர் சமூக ஓட்டுக்களை பெறலாம். ஆனால் கே.கே.எஸ்.எஸ்.ஆருக்கு காங்கிரஸின் செல்வாக்கும் கை கொடுக்கும். ஃபார்வர்டு பிளாக், புதிய தமிழகம் கட்சிகளும் வேட்பாளர்களை இங்கு நிறுத்தியுள்ளது. எத்தனை பேர் நின்றாலும் சாத்தூர் சாத்தூராருக்கே என்பதே நிலவரம்.
மொத்தமுள்ள 6 தொகுதிகளில்
திமுக - 4, காங்கிரஸ் - 1, சிபிஐ - 1
அதிமுக - 4, மதிமுக - 2 என போட்டியிடும் விருதுநகரில். கடந்தமுறை 3 இடங்களில் அதிமுக, 2 இடங்களில் தமாக, 1 இடத்தில் திமுக (சாத்தூர்) வென்றது. இம்முறை அருப்புக்கோட்டையில் மட்டுமே வர வாய்ப்புள்ளது. விருதுநகர் மாவட்டத்தின் முக்கியப் பிரச்சனை தண்ணீர் ... குடிதண்ணீர் தட்டுப்பாடு!. தொழிற் நகரமான சிவகாசியில் அதிமுக என்ன வளத்தை மெம்படுத்தியிருக்கிறது என்பதும் வாக்குகளைத் தீர்வு செய்யும்.
திமுக - 3, காங்கிரஸ் - 1, சிபிஐ - 1
அதிமுக - 1
வெல்வதற்கு வாய்ப்புள்ளவர்கள் :
கே.கே.எஸ்.ஏஸ்.ஆர். ராமச்சந்திரன்(திமுக)
வி.தங்கராஜ்(திமுக)
டி.ராமசாமி (சிபி ஐ)
எஸ்.தாமோதரன்(காங்கிரஸ்)
க.முருகன்(அதிமுக)
விருதுநகர் நண்பர்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.
கன்னியாகுமரி மாவட்ட கணிப்பு.
நெல்லை நிலவரம்.
தூத்துக்குடி மாவட்டம்
இராமநாதபுரம் மாவட்டம்
சிவகங்கை மாவட்டம்
தேனி மாவட்டம்