Thursday, April 27, 2006

தேர்தல் அலசல் - 2006 - இராமநாதபுரம்பூமியில் வரட்சி., ஆனால் மூளையில் எழுச்சி. இராமநாதபுரம் எக்கட்சிக்கு?

இராமநாதபுரம் :

1.திருவாடனை 2. பரமக்குடி 3.இராமநாதபுரம் 4.முதுகுளத்தூர் 5. கடலாடி.

1.திருவாடனை:
கே.ஆர். ராமசாமி(காங்கிரஸ்) (காங்கிரஸ் கட்சி பலம் +)
சி.ஆணிமுத்து (அதிமுக)

ஆணி அடிச்ச மாதிரி சொல்லலாம் திருவாடனை பலமான காங்கிரஸ் தொகுதி. கடந்த 4 முறைகள் இத் தொகுதியில் வென்ற காங்கிரஸ் சிட்டிங் எம்.எல்.ஏ கே.ஆர். ராமசாமி இம்முறையும் போட்டி இடுகிறார். ஆரவாரமில்லாமல் அமைதியாக நடக்கிறது தேர்தல் பிரச்சாரமும், பணிகளும் இங்கு. தமிழ்நாட்டிலேயே இந்த ஒரு இடத்தில்தான் வேட்பாளர்களுக்கு ஆரத்தி சுற்றாமல், பொட்டு வைக்காது மக்கள் வேட்பாளர்கள் வந்தால் அவர்கள் சொல்லுவதை கேட்டுவிட்டு வழியனுப்பி வைக்கின்றனர். ஆணிமுத்துவை விட ராமசாமிக்கு வாய்ப்பு அதிகம்.

2. பரமக்குடி(தனி):
கே.வி.ஆர்.ராம்பிரபு (காங்கிரஸ்) - சிட்டிங் -(காங்கிரஸ் கட்சி பலம் +)
எஸ்.சுந்தராஜன்(அதிமுக)

பழம்பெரும் காங்கிரஸ் தலைவர் கே.வி.ராக்கன் புதல்வர் கே.வி.ஆர். ராம்பிரபு மிண்டும் இத்தொகுதியில் போட்டியிடுகிறார். ஆதிதிராவிட மக்கள் அதிகம் வசிக்கும் தொகுதி இது. முக்குலத்தோர், யாதவர், செட்டியார் ஓட்டுக்களும் வெற்றியை முடிவு செய்யும். தொகுதி மக்களிடம் ராம்பிரபுவிற்கு உள்ள நல்ல பெயர், அவர் தொகுதிக்காற்றிய பணி, கூட்டணி பலம் அனைத்தும் கொண்டு காங்கிரஸ் வெல்லும் வாய்ப்புள்ள தொகுதி.

3.இராமநாதபுரம்:
ஹசன் அலி (காங்கிரஸ்) - (கூட்டணி, பண பலம் +)
கராத்தே பழனிச்சாமி(மதிமுக)

40 வருடங்களுக்குப் பிறகு இத்தொகுதியில் காங்கிரஸ் போட்டி இடுகிறது. அதிமுக தொழிலாளர் நலத்துரை அமைச்சர் அன்வர் ராஜாவுக்கு மறுக்கப்பட்டு மதிமுக பழனிச்சாமிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதிமுக, திமுக மாறி, மாறி வென்ற தொகுதி. வள்ளல் சீதக்காதி குடும்பத்தைச் சேர்ந்தவர் ஹசன் அலி. வழக்கம்போல இவருக்கு சீட் கிடைத்ததை பொறுக்கமாட்டாத கங்கிரஸ் எதிர் கோஸ்டி இவர் தொழிற் நிமித்தம் வெளிநாடு சென்று வருவதை பயன்படுத்தி அவர் வெளிநாட்டுக்காரார் என பரப்பி வந்தனர். அதுவே பழனிச்சாமிக்கு மிக சாதகமான பிரச்சாரமாக இருந்தது. அங்கு மட்டுமென்ன?. அமைச்சர் அன்வர் ராஜாவுக்கு தொகுதி மறுக்கப்பட்டு கூட்டணி கட்சிக்குக்குப் போனதால் அதிமுகவினரும் சலிப்பான மனநிலையில் தான் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்தனர். அதிமுகவிற்குள் உள்ள கோஷ்டி பூசலை மறந்து தொகுதியை அதிமுகவிற்கு பெற்று தருவதற்காக சூழுரைத்து இறங்கியுள்ளன அன்வர் கோஷ்டியும். மா.செ. முருகேசன் கோஷ்டியும். பணபலமுள்ள செல்வந்தர் ஹசன் அலி. பழனிச்சாமிக்கு பணபலமில்லாவிட்டாலும்., தொகுதியில் நல்ல மனிதர் எனப் பெயரெடுத்தவர். எளிமையான மீனவ மக்கள் நிறைந்த தொகுதி என்பதால் மக்கள் பிரச்சனை புரிந்தவர். 2001 ஆம் ஆண்டுத் தேர்தலில் மதிமுக தனித்து நின்று பாட்ரிக் பெற்ற வக்குகள் 3399 வாக்குகள். அப்போது அன்வர் ராஜாவுக்கு கிடைத்த வாக்குகளும் கூட்டணி பலமாக இருந்ததால் கிடைத்தது. ஆனால் இப்போது?. கூட்டணி பலம், முகமதிய மக்கள் வாக்கு வங்கி எல்லாம் சேர்ந்து ஹசன் அலிக்குச் சாதகம்.

4.முதுகுளத்தூர்:
கே.முருகவேல்(திமுக) - (கூட்டணி பலம்+)
எஸ்.பி.காளிமுத்து(அதிமுக)
தனிக்கோடி (ஃபார்வார்டு ப்ளாக்)
சிவா(தேமுதிக)

முதுகுளத்தூரை முக்குலத்து மக்கள் 'அம்ம தொகுதிதேன்' அப்படின்னு தெளிவாகச் சொல்லிக் கொள்ளலாம் (தேர்தலில் வெற்றி பெறுவதற்கு மட்டும்!!). அடுத்ததாக யாதவ இன மக்கள். நாடார் இனம், தலித் மக்கள், முஸ்லீம் மக்களும் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள். இங்கு போட்டியிடும் திமுக, அதிமுக இரண்டு வேட்பாளர்களும் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். போன முறை அதிமுக சார்பாக போட்டியிட்ட பதினெட்டடம் படியானுக்கு முயன்றும் இம்முறை சீட் கிடைக்கவில்லை. வேட்புமனு தாக்கல் செய்யவே ஊரைக் கூட்டி திருவிழா வச்ச காளிமுத்துக்கு பாதிக்கப்பட்ட அதிமுக பதினெட்டாம் படியானால் கலக்கமும் உள்ளது. தவிர, அதிமுக ஒன்றியச் செயளாலருடைய தம்பிதான் இம்முறை திமுகவில் நிற்கும் முருகவேல். யாதவ ஓட்டுக்களை முருகவேலுக்கு அள்ளி வர காங்கிரஸ் புள்ளி மலேஷ்யா பாண்டியன் ரெடி. முருகவேல் தொகுதி மக்களுக்கு புதிய முகம்தான் (காளிமுத்து தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமாவனவர்.) என்றாலும் அனைத்து சமூக பிரமுகர்களளயும் அரவணைத்து பிரச்சாரம் செய்கிறார். பத்தாததிற்கு ஃபார்வர்டு ப்ளாக்கும் அக்கட்சியில் முன்னால் எம்.எல்.எவைக் களமிறக்கி தேவர் நினைவிடத்தில் இருந்து பிரச்சாரத்தை ஆரம்பித்து இருக்கிறார்கள், முக்குலத்தோர் ஓட்டை அதிமுகவிலிருந்து பிரிக்க தனிக்கோடி தயார். தலித் மக்கள் ஒட்டைக்குறிவைத்து தேமுதிக களத்தில். முருகவேல் வெற்றிவேல் என்பதுதான் அங்கு நிலவரம்.

5. கடலாடி.
சுப.தங்கவேலன்(திமுக) - (சிறுபான்மையினர் வாக்கு வங்கி, கூட்டணி பலம் +)
வ.சத்தியமூர்த்தி (அதிமுக)

கீழக் கரை முஸ்லிம் மக்கள் கொத்தா ஒருத்தருக்கு ஓட்டுப்போட்டு வெல்ல வைக்கிற தொகுதி இது. காங்கிரஸ் சீனியர் தல சோ.பாலகிருஷ்ணன் போட்டியிட்டு தொகுதி, வென்ற தொகுதி இவரிடம் சொற்ப வித்தியாசத்தில் கடந்தமுறை தோற்றுப் போனவர் வேறயாருமில்லை. இப்ப காங்கிரஸ் ஆதரவோடு இத் தொகுதியில் நிற்கிறாரே திமுக மா.செ. சுப. தங்கவேலன் அவர்தான். கூட்டணி பலம் திமுகவிற்கு வெற்றிக் கனியை பறித்துத் தரும்.


இராமநாதபுரத்தில் மொத்தம் 5 தொகுதிகள். திமுக - 2, காங்கிரஸ் - 3

அதிமுக - 4, மதிமுக - 1 என களத்தில் இறங்கும் இங்கு, சாதி ஓட்டுகளும், கூட்டணி கட்சிகளின் பலமும்தான் வெற்றியை உறுதிசெய்யும். முதுகுளத்தூரில் யார் வெல்கிறார்களோ அவர் கட்சிதான் தென்மாவட்டங்கள் முழுவதும் பெரும்பான்மை பெரும் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். பணபலமுள்ளவர்கள் இருந்தாலும் இது பெரும்பான்மையாக எளிய பொருளாதர பின்னனியைக் கொண்ட மக்கள் நிறைந்த தொகுதி. கடந்த முறை காங்கிரஸ்(த.மா.கா) 3 இடங்களிலும், அதிமுக 2 இடங்களையும் இங்கு கைப்பற்றின. இம்முறை முஸ்லீம் மக்கள் நிறைந்த கடலாடி தொகுதியில், சிறுபான்மையினருக்கு தனியான இட ஒதுக்கீடு ஏற்படுத்துவதற்கு சட்டம் திருத்தம் கொண்டு வர மத்திய அரசிடம் கோரியிருந்தது நிறைவேற்றப்படும் எனவும், அதற்கான சட்டம் தமிழகத்தில் கொண்டுவரப்படும், என்றும் சொல்லி வாக்கு கேட்கிறது திமுக, இது எடுபடும். மீனவர்கள் நிறைந்த இராமநாதபுரம் தொகுதி இலங்கை கடற் படையினாரால் இவர்கள் அல்லலுக்கு உள்ளாகுவதை எக்கட்சி நிறுத்துமோ, அவர்களுக்கு வாக்களிப்பார். மீன்பிடி தொழில் சிறக்க மீன்பிடி துறைமுகங்களும் இவர்களது தேவை.
இம்மாவட்டம் முழுவது நிறைந்துள்ளனர் பனைத் தொழிளாலர்களுக்கென பனைத் தொழிலாளர் வாரியம் அமைக்கப்படும் எனவும். நெசவாளர்களுக்கென கைத்தறி நெசவாளர் வாரியம் அமைக்கப்படும் எனவும் கூறி வாக்கு கேட்கிறது இரண்டு கூட்டணியும்.. மாவட்டத்தில் பெரும்பான்மையாக உள்ள சிறு விவசாயிகளுக்கு அதிமுக தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் சலுகைகள் அறிவித்தது. திமுகவில் தேர்தல் அறிக்கையிலும் ஒரு பக்கம் முழுவதும் விவசாயிகளுக்கான சலுகைகள்தான். எத்தனை, எத்தனை அறிவிப்புகள்? நல வாரியம்னா அது நமக்கு என்னா செய்யும்னுகூடத் தெரியாம இத்தனை சலுகைகளும் மழையாகத் தூறினால் பரவாயில்லை., சுனாமியாக மாறி சுருட்டிக்கொண்டாலும் 5 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே புன்னகை பூக்கும் அந்த ஞானிகளின் தீர்ப்பு யாருக்கு?., தெரிந்துவிடும் 8 ஆந் தேதி!! .

திமுக கூட்டணி - 5 இடங்கள்.
திமுக - 2 , காங்கிரஸ் - 3
வெல்லும் வாய்ப்புள்ளவர்கள் :
கே.முருகவேல்(திமுக)
சுப.தங்கவேலன்(திமுக)
கே.ஆர். ராமசாமி(காங்கிரஸ்)
கே.வி.ஆர்.ராம்பிரபு (காங்கிரஸ்)
ஹசன் அலி (காங்கிரஸ்)
இராமநாதபுரம் நண்பர்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.
கன்னியாகுமரி மாவட்ட கணிப்பு.
நெல்லை நிலவரம்.

தேர்தல் அலசல் - 2006 - தூத்துக்குடி
கைநிறைய முத்தென்று நினைத்தீர்களா?. ம்...! இதுவும் முத்துதான் கரிப்பில் நிதமும் வெந்து இதை அள்ளுபவர்களுக்கு. சரி யாருக்கு தூத்துகுடி?.

தூத்துக்குடி : மொத்த தொகுதிகள் எண்ணிக்கை 7

1.விளாத்திகுளம் 2. கோவில்பட்டி 3. ஒட்டப்பிடாரம் 4. தூத்துகுடி 5.திருவைகுண்டம் 6. திருச்செந்தூர் 7. சாத்தான்குளம்.

1.விளாத்திகுளம்:

சி.ராஜராம்(திமுக)

பி.சின்னப்பன்(அதிமுக)

சி.பாலகிருஷ்ணன் (தேமுதிக)

அதிமுக, திமுக மாறி, மாறி வெல்லும் தொகுதி. மதிமுக கணிசமாக வாக்குகள் பெற்ற தொகுதி. சிட்டிங் பெருமாளுக்கு பதில் சின்னப்பன் நிறுத்தப்பட்டிருக்கிறார். ஃபார்வர்டு ப்ளாக் வேட்பாளர் முருகேச பாண்டியன் அதிமுகவில் இணணந்தார். தேமுதிக பிரித்தாலும் அதிமுகவிற்கு இருக்கிறது வாய்ப்பு.

2. கோவில்பட்டி:

எஸ். ராஜேந்திரன் (சிபிஐ) - சிட்டிங் (கட்சி செல்வாக்கு, கூட்டணி பலம் +)

எல்.இராதா கிருஷ்ணன்(அதிமுக)

டி.சீனிவாசராகவன்(தேமுதிக)

பலமுறை இத்தொகுதியில் வென்றிருக்கிறது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. தொழிற் சங்கங்களின் பலம், கூட்டணி பலம் என மிகத் தெம்போடு இருக்கிறது திமுக கூட்டணி. நாயக்கர் இன மக்களை நம்பி தான் நிறுத்தியிருக்கும் வேட்பாளர் ஓட்டுக்களை அதே இன வேட்பாளரை நிறுத்திருக்கும் தேமுதிகவும்,முக்குலத்தோர் வாக்குகளை ஃபார்வார்டு ப்ளாக்கும் பிரிக்கும் என்ற கவலையில் அதிமுக. ராஜேந்திரன் மீண்டும் அத்தொகுதி எம்.எல்.ஏ ஆகும் வாய்ப்பதிகம்.

3.ஓட்டப்பிடாரம்(தனி):

ராஜமன்னார்(திமுக)

மோகன்(அதிமுக)

டாக்டர். கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) (தொகுதியில் செல்வாக்கு ++)

சிட்டிங் சிவ பெருமாளின் கோபம் மட்டுமல்ல மோகனுக்கு சருக்கல்., முன்பு அதிமுகவில் இருந்த ராஜமன்னார் இப்போது திமுகவில் நிற்கிறார், அதிமுக நண்பர்கள் இன்றும் அவருக்கு ஆதரவு தருகிறார்கள். ஜான் பாண்டியன் ஆட்கள் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார்கள். புதிய தமிழகம் கட்சிக்கும் திமுகவிற்கும்தான் இங்கு போட்டியே. மாஞ்சோலையை மக்கள் எளிதில் மறக்கமாட்டார்கள் எனவே புதிய தமிழகத்திற்கு ஆதரவு நிச்சயம்.

4.தூத்துகுடி:

கீதா ஜீவன்(திமுக) - (கூட்டணி பலமும், பிரச்சாரமும் +)

டேனியல் ராஜ் (அதிமுக)

கடந்த முறை இங்கு அதிமுக வென்றது. 'கழகத்தூணின்' (பெரியசாமி) கோட்டை. 5ஆம் தேதி சோனியா தூத்துக்குடிக்கு வருகை தந்து நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் போட்டியிடும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வார். தூத்துக்குடி துறைமுக விரிவாக்கம், சேது சமுத்திர திட்டங்களால் நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்கள் பயனடையப் போகின்றது என்ற பிரச்சாரம் எடுபடும். பல வேட்பாளர்கள் ஓடி அனிதா இராதாகிருஷ்ணனிடத்தில் அடைக்கலம் ஆகிக் கொண்டிருக்கும், அது பெரிதாக விளம்பரப்படுத்தபடும் இந்த நேரத்தில் சோனியாவின் வருகை திமுகவிற்கும் தோழமை கட்சிகளுக்கும் எழுச்சிதரும். திமுக மாவட்ட செயலாளர் பெரியசாமி, நெல்லை எம்.பி தனுஷ்கோடி ஆதித்தன் (இவர் நெல்லையில் கலகம் செய்தாலும்) கீதாவிற்கு உறுதுணையாக இருக்கிறார்கள். இத்தொகுதியில் கூட்டணி பலமும், பிரச்சாரமும் திமுக விற்கு சாதகம் செய்யும்.

5.திரு வைகுண்டம்:

செல்வராஜ்(காங்கிரஸ்) - (கூட்டணி பலமும், பிரச்சாரமும் +)

சண்முகநாதன் (அதிமுக)- சிட்டிங்

ஊர் முழுதும் போஸ்டர் ஒட்டி, வீடு வீடாகச் சென்று ஓட்டு சேகரித்த முன்பு அறிவிக்கப்பட்ட காங்கிரஸ் விஜயசீலன் மாற்றப்பட்டு தனுஷ்கோடியின் செல்வாக்கால் செல்வராஜ் நிறுத்தப்பட்டார். அதனால் காங்கிரஸ், கூட்டணி கட்சிகள் குழப்பத்தில். கடந்த தேர்தலில் திமுக நின்றது., எதிர்த்து அதிமுக வென்றிருந்தாலும், எப்போதும் திமுகவும், காங்கிரஸ் பலமாக உள்ள தொகுதி. கூட்டணி பலத்தையும், சோனியா பிரச்சாரத்தையும் கணக்கில் கொண்டால் காங்கிரஸ்க்கு வாய்ப்பிருக்கிறது.

6.திருச்செந்தூர்:

ஜெயசீலன்(திமுக)

அனிதா ராதாகிருஷ்ணன்(அதிமுக)- அமைச்சர் (வீட்டு வசதி, நகர்புற வளர்ச்சி) - (பணபலம் +)

ஜெயசீலன்

திருச்செந்தூரில் அமைச்சர் அனிதா இராதாகிருஷ்ணனை எதிர்த்து திமுக ஜெயசீலன் போட்டியிடுகிறார். இத்தொகுதியில் இருமுறை ஜெனிபர் சந்திரன் திமுக சார்பில் போட்டியிட்டார். திமுக வேட்பாளர் ஜெயசீலனுக்கு எம்.பி. ராதிகா செல்வி துணை நிற்கிறார். தான்னை போல் ஜெயசீலனையும் நாடார் கிராமமான அடைக்காலபுரத்தில் வேட்பு மனு தக்கல் செய்ய வைத்தார். மணப்பாடு காங்கிரஸ் பிரமுகர் கயஸின் தம்பி அதிமுக பஞ்சாயத்து தலைவர், மைக்கேல் திமுகவில் இணைந்தார். மீனவ சமுதாய ஓட்டுக்கள் , நாடார் ஓட்டுக்களே இத் தொகுதியில் பெரும்பான்மையானவை. கடந்த முறை இது இரண்டும் கிடைத்தது அனிதா இராமச்சந்திரனுக்கு. ஆனால் இம்முறை நாடார் வாக்குகள் விழாது. வெங்கடேசப் பண்ணையாரின் தம்பி சுபாஸ் பண்ணையாரும் திமுகவை ஆதரிக்கிறார். இவையெல்லாம் முன்னால் எம்.பியும் இந்நாள் வேட்பாளருமான ஜெயசீலனுக்கு சாதகம்தான். ஆனால் சிறுபான்மை சமூகத்தின் ஓட்டுக்கள் மொத்தமாக யாருக்கு விழும் என்பதிலும் இருக்கிறது இத் தொகுதியின் வெற்றி, தோல்வி. இத்தொகுதியில் போட்டியிட்ட ஃபார்வர்டு பிளாக் வேட்பாளர் நல்லூர் பரிசமுத்து நேற்று அதிமுகவில் இணைந்து விட்டார். பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்ட குமார் என்பவரும் அனிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்துவிட்டார். நல்லூர்காரர் அதிமுகவில் இணைந்ததற்கு காரணம்தான் ஹலைட் முக்குல சமுதாய நலன் காக்கவாம் . அதிமுகவிற்கு/அனிதாவிற்கு வாய்ப்புள்ள தொகுதி.

7.சாத்தன்குளம்

ராணி வெங்கடேசன்(காங்கிரஸ்)

நாசரேத் துரை(மதிமுக)

காங்கிரஸ் வெல்லும் தொகுதி. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மத்திய அமைச்சர் ஜி.கே. வாசனின் ஆதரவாளர்கள்தான். ஆனால் ராணி வெங்கடேசன் இளங்கோவன் ஆதரவாளர். ராணிவெங்கடேசனை ஆதரித்து கடுமையான வெயிலிலும் பிரச்சாரம் செய்தார் வாசன். வைகோ இரண்டாம் கட்டமாக தூத்துக்குடி சென்றபோது நாசரேத்க்காக பிரச்சாரம் செய்தார். நாசரேத்தும் சாத்தான்குளத்தில் மருத்துவ கல்லூரி அமைப்பேன் எனக்கூறி வாக்கு சேகரித்து வருகிறார். இருந்தாலும் இது ஏற்கனவே காங்கிரஸின் பலமான தொகுதி, கூட்டணி பலமும் சேர்ந்துள்ளது ராணி வெங்கடேசன் நிம்மதியாக இருக்கலாம்.

மொத்தம் 7 இடங்கள். திமுக - 4 காங்கிரஸ் -2 சிபிஐ - 1 எதிர்முகாமில் அதிமுக - 6 மதிமுக - 1 என இறங்கியிருக்கின்றன கட்சிகள். தூத்துக்குடி மாவட்டத்தில் இன ஒட்டுக்களை நம்பி இறங்கியிருக்கின்றன கழகங்கள். திமுகவிற்கு ராதிகா செல்வியும், அதிமுகவிற்கு சரத்தும் என நாடார் சமூக மக்களை வளைக்க இரு கழகங்கலும் போட்டியிடுகின்றன. இத்தேர்தல் வெற்றியில்தான் சரத்குமார் தனக்கு 'சாதி' செல்வாக்கு இருப்பதாக கூறிக் கொள்வதற்கு விடை தெரியும். இவர்கள் தவிர வாசன், வைகோ, கலைஞர், சோனியா (5 ஆம் தேதி) போன்றோரின் பிரச்சாரத்தின் பலனும் தேர்தல் முடிவுகளில் எதிரொளிக்கும். பார்வர்டு பிளாக் வேட்பாளர்கள் தாவிக் கொண்டிருப்பதும் முடிவுகளை பாதிக்கும். 800 கோடி செலவில் துவங்கப்பட்ட தூத்துக்குடி துறைமுக விரிவாக்கத் திட்டம், சேது சமுத்திரத்திட்டம் போன்றவைகளை மக்கள் சாதியை தள்ளி வைத்து நினைத்துப் பார்த்தால் அத் திட்டங்கள் வர வழி செய்த திமுக, காங்கிரஸ் போன்றவை ( சேது சமுத்திரத்துல மதிமுகவுக்கும் பங்கிருக்கிருக்குது) நல்ல தேர்தல் முடிவுகள் காணும். தேயிலை விவசாய்களின் உற்பத்திக்கு உரிய விலை கிடைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம், மீன்பிடித் துறைமுகங்கள் அமைப்போம், தூத்துக்குடிக்கு மருத்துவ கல்லூரி கொண்டு வருவோம் என்ற வாக்குறுதிகளும் தூத்துக்குடி மக்கள் மே 8 ஆம் தேதி போடும் 8 ல் எதிரொலிக்கும்.

வெல்லும் வாய்ப்பு,

திமுக கூட்டணி - 4 திமுக - 1, காங்கிரஸ் - 2, சிபிஐ - 1.

அதிமுக கூட்டணி - 2

புதிய தமிழகம் - 1. என்ற நிலையில் உள்ளது.

வெல்லும் வாய்ப்புள்ளவர்கள்.,

கீதா ஜீவன்(திமுக)

விஜயசீலன்(காங்கிரஸ்)

ராணி வெங்கடேசன்(காங்கிரஸ்)

எஸ். ராஜேந்திரன் (சிபிஐ)

பி.சின்னப்பன்(அதிமுக)

அனிதா ராதாகிருஷ்ணன்(அதிமுக)

டாக்டர். கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்)

தூத்துக்குடியைச் சேர்ந்தவர்கள் கருத்துக்கள் சொல்லுங்கள்.

கன்னியாகுமரி மாவட்ட கணிப்பு.

நெல்லை நிலவரம்.

தேர்தல் அலசல் - 2006 - திருநெல்வேலி


யாருக்கு இது?


திருநெல்வேலி : மொத்தம் 11 தொகுதிகள்.

1.வாசுதேவநல்லூர் 2.சங்கரன் கோவில் 3.தென்காசி 4.கடையநல்லூர் 5.ஆலங்குளம் 6. திருநெல்வேலி 7.அம்பாசமுத்திரம் 8. பாளை 9.நாங்குனேரி 10.சேரன்மாதேவி 11.ராதாபுரம்.


1.வாசுதேவநல்லூர் (தனி):
ஆர்.கிருஷ்ணன் (சிபிஐ(எம்)) (சிபிஐ (எம்) பலம், கூட்டாணி பலம் ++)
சதன். திருமலைக்குமார்(மதிமுக)
பாபு (ஃபார்வர்டு ப்ளாக்)
எஸ்.பிச்சை (தேமுதிக)

வாசுதேவ நல்லூர் தனித் தொகுதியில் கடந்தமுறை தமாகா வென்றது. 1997 ல் தொகுதியை கைப்பற்றிய ஆர்.கிருஷ்ணன் சிபிஐ(எம்) கடந்தமுறை போட்டிடவில்லை ஆனாலும் பல முறை இதே தொகுதியில் போட்டியிட்டு 2 முறை (1997- 1980) வென்று தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பலமாக உள்ள தொகுதி. கடந்தமுறை புதிய தமிழகம் கட்சியும் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது இங்கு. காங்கிரஸ் பிரமுகரான ஆர். ஈஸ்வரன் 6 முறை போட்டியிட்டு 5 முறை வென்ற தொகுதி வாசதேவநல்லூர். அவர் ஒரு முறை தோற்றதும் ஆர்.கிருஷ்ணனிடம்தான் :). மதிமுக சார்பில் கடந்த முறை கணேஷ் குமார் போட்டியிட்டு 13 ஆயிரம் ஒட்டுகளுக்கு மேல் பெற்றார். ஆனால் இம்முறை மதிமுக சார்பில் திருமலைகுமார் (இவர் கடந்த முறை சங்கரன் கோவிலில் நின்றார்) . நிறுத்தப்பட்டிருக்கிறார். ஃபார்வர்டு ப்ளாக்ம் களத்தில். சுயேட்சையாக ஒருவர் போட்டியிடுகிறார். அசைக்க முடியாத காங்கிரஸ் பலம், சிபிஐ(எம்) ன் சுயபலம், எல்லாம் சேர்த்து சிபிஐ(எம்)மை இங்கு சிரிக்க வைக்கும்.

2.சங்கரன் கோவில்(தனி):
ச. தங்கவேலு (திமுக) - (கூட்டணி பலம் +)
சொ.கருப்பசாமி (அதிமுக) - சிட்டிங் அமைச்சர் (ஆதி திராவிடர் நலத்துறை)
சுப்புலட்சுமி (ஃபார்வேர்டு ப்ளாக்)

அதிமுகவின் பலமுள்ள தொகுதி. அதிமுக கருப்பசாமி கடந்த இரு முறை தொடர்ந்து வென்றுள்ளார். இம்முறையும் போட்டியிடுகிறார். தேவர், ஆதிதிராவிட வாக்குகள் சம அளவிலும், அதற்கு அடுத்த நிலையில் நாயக்கர் இன மக்கள் வாக்கு வங்கியும் உள்ளது சங்கரன் கோவில். எனவே மதிமுக கணிசமாக வாக்குகள் பெறும் தொகுதியும் கூட. மதிமுகவின் செல்லத் தொகுதி. வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியை கொண்ட தொகுதி. திமுகவுடன் பங்கீடு பேசும்போது (2001ல்) வைகோவால் விட்டுக்குடுக்க முடியாத இத் தொகுதியில் இம்முறை அதிமுக போட்டியிடுகிறது. 'பம்பரமாக' சுழன்று அதிமுகவிற்காக தீவீர பிரச்சாரம் செய்கிறார் வைகோ. கடந்தமுறை மதிமுக திருமலைக்குமார் (தற்பொது வாசுதேவ நல்லூரில் நிற்கிறார்). இத்தொகுதியில் போட்டியிட்டு 20,610 வாக்குகள் பெற்றார். இங்கு பலமுள்ள மற்றொரு கட்சியான புதிய தமிழகம் 42,738 வாக்குகள் பெற்றது. இல்லையெனில் இன்னும் அதிக வாக்குகளை மதிமுக பெற்றிருக்கும். ஃபார்வேர்டு ப்ளாக் சார்பில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த சுப்புலட்சுமி இத் தொகுதியில் போட்டியிடுகிறார். தேவரின கட்சியான ஃபார்வர்டு ப்ளாக் சுப்புலட்சுமி மூலம் ஆதிதிராவிடர் வாக்குகளையும் அள்ளகூடும், தேவரின வாக்குகளையும் பெறக்கூடும். பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதி கட்சி ஆகியவையும், ஒரு சுயேட்சை வேட்பாளரும் களத்தில் உள்ளனர். தேவர் பெல்ட் கிராமங்களில் பெரும்பான்மையான வாக்குகள் அதிமுகவிற்கு முன்பு கிடைத்தது இப்போது நன்றாக சிதறும். கருப்பசாமி இருமுறை வென்றது, மதிமுகவின் பலம் இரண்டையும் கணக்கிட்டால் கருப்பசாமிக்குதான் இந்தக் கெடா என்று சொல்லத்தோன்றினாலும். அமைச்சரின் சமூகமே அவருக்கு எதிராக இருப்பதும், தொகுதியில் அவர் மீது நிலவும் அதிருப்தியும் திமுக தங்கவேலுக்கே வெற்றியென காட்டுகிறது.

3.தென்காசி:
வீ. கருப்பசாமி பாண்டியன் (திமுக) (கூட்டணி பலம் +)
இராம உதய சூரியன் (மதிமுக)

முத்துராஜா (ஃபார்வர்டு ப்ளாக்)
கே.ஆர்.எச்.காமராஜ் (தேமுதிக)

போன முறை அதிமுக வென்ற தொகுதி. மதிமுக கணிசமாக கூட வாக்குகள் பெறாத தொகுதி. துணிஞ்சு ஜெயலலிதா மதிமுகவிற்கு கொடுத்துருக்காங்க. இல்ல முடிவு தெரிந்து குடுத்தாங்களோ?. திமுக சார்பில் போன முறை நின்ற கருப்பசாமி பாண்டியனே இம்முறையும் நிற்கிறார். காங்கிரஸ் பலமாக உள்ள தொகுதி தென்காசி. தென்காசி தொகுதியின் சிறுபான்மை மக்களின் வாக்கு வங்கி திமுகவிற்கு சாதகம் செய்யும். தென்காசி-செங்கோட்டை மக்களின் கனவு ஒருங்கிணைந்த ஜவுளிகள் பூங்கா. அதை அதிமுக செய்யவில்லை. கூட்டணி பலம், தலையின் பழைய செல்வாக்கு (அதிமுகவில் அவர் இருந்தபோது) எல்லாம் சேர்த்து கருப்பசாமி பாண்டியனை காப்பாற்றும்.

4.கடையநல்லூர்:
எஸ். பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்)
யு.ஹச். கமாலுதீன்(அதிமுக) (காங்கிரஸ் கோஷ்டி அரசியல் +)
ம. கணபதி இராமசுப்ரமணியம் (தேமுதிக)

அதிமுக கடந்த முறை வென்ற தொகுதி. ஆனால் சிட்டிங்குக்கு இந்தமுறை சீட்டில்ல. இரு கட்சிகளும் மாறி, மாறி வென்ற தொகுதி. மதிமுகவும் சொற்ப வாக்குகள் பெற்ற தொகுதி. முக்குலத்தோர் வாக்கு வங்கி கடையநல்லுர். காங்கிரஸ் சார்பில் 'சீனியர் தல' பிட்டர் அல்போன்ஸ் களமிறங்குகிறார். ஆனால் அவரது தொகுதி ஈடுபாட்டில் மெய் மறந்த (5 வருடமா பீட்டர் தொகுதி பக்கமே வந்ததில்லையாம்) காங்கிரஸின் முக்கியத் தலைகளே போட்டிக் கூட்டம் நடத்தி அவரை ஆதரிக்கக் கூடாது என அறிவித்தனர். அது மட்டும்மல்லாமல் பி.ஹெச். பாண்டியனின் சகோதரர் சாமுவேல் பாண்டியன், தொகுதி மக்கள் நன்கறிந்த காங்கிரஸ் பிரமுகர் என்பதால் அவரை சுயேட்சையாக களமிறக்குகின்றனர். காங்கிரஸ் ஓட்டுக்கள் பிரியும். பகுஜன் சமாஜ் கட்சி யும், பாஜகவும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. சிறுபான்மையினர் ஓட்டு பீட்டருக்கு சாதகமாகவே இருக்கும். கமாலுதீன் முஸ்லிம் என்றாலும், முஸ்லீம் ஓட்டுகள் அதிமுகவிற்கு சாதகமாக இருக்காது. கூட்டணியை வைத்துப் பார்த்தால் பீட்டர் சிரிக்கலாம். கட்சி செல்வாக்கை வைத்துப்பார்த்தால் கமாலுதீன் சிரிக்கலாம்.

5.ஆலங்குளம்:
பூங்கோதை ஆலடி ஆருணா (திமுக) (அனுதாபம், கூட்டணி பலம் +)
எம். பாண்டியராஜன்(அதிமுக)
கே.முத்துக்குமாரசாமி(தேமுதிக)

அதிமுக கடந்த முறை வென்ற தொகுதி. சிட்டிங் பி.ஜி இராஜேந்தரனுக்கு இம்முறை சீட்டில்ல. திமுக சார்பில் ஆலடி அருணாவின் மகள் பூங்கோதை நிற்கிறார். அவருக்கு பிரச்சாரம் செய்ய ராதிகா செல்வியை சமயம் பார்த்து அனுப்பியிருக்கிறது திமுக. தன் கணவர், பூங்கோதையின் அப்பா ஆலடி அருணா இருவரும் கொலைசெய்யப் பட்டது இந்த ஆட்சியில்தான். தமிழகமே கொலைக்களமாக மாறிவிட்டதென பிரச்சாரம் செய்கிறார் ராதிகா செல்வி. நாடார் மற்றும் தேவர் சமுதாய ஓட்டுக்கள் வெற்றியை நிர்ணயிக்கும். மதிமுக கொஞ்சம் அள்ளிய தொகுதிதான் ஆனாலும் தேமுதிக ஓட்டுகளை இப்போது பிரிக்கலாம். எல்லாத்துக்கும் மேல அனுதாபம் பூங்கோதை அவர்களுக்கு வாய்ப்பை நல்கும்.


6.திருநெல்வேலி:
என்.மாலைராஜா (திமுக)
நாயினார் நாகேந்திரன் (அதிமுக)- சிட்டிங். அமைச்சர் - தொழிலு! (தொழில்துறை)
(அமைச்சர், மக்கள் அறிந்த முகம் ++)
கிருஷ்ணகுமார் (தேமுதிக)
நாயினார் நாகேந்திரன்
மாவட்டத் தலைநகர் திருநெல்வேலி மாறி, மாறி கழகங்கள் ஆள வழிசெய்த தொகுதி. அமைச்சர் தொகுதி. கடந்தமுறை மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் திமுக ஏ.எல்.சுப்பரமணியத்தை வென்றார் அதிமுக அமைச்சர் நாயினார் நாகேந்திரன். பிள்ளைமார், யாதவ ஓட்டுக்கள் அதிகம் கொண்ட தொகுதி. திமுக சார்பில் புதுமுகம் மாலைராஜா போட்டியிடப் போகிறார். மாலைராஜா புதுமுகமென்றாலும் தேவரினத்தைச் சேர்ந்தவர். அதிமுகவில் இணைந்த சரவணபெருமாளை ஓரங்கட்டி வைத்ததால் இம்முறை பிள்ளைமார் ஓட்டுகளும் அப்படியே நாயினாருக்கு கிடைக்கும் என்று சொல்லமுடியாது. அடுத்து யாதவ மக்களின் ஓட்டுக்களை குறி வைத்து யாதவ பிரமுகர்கள் இவருக்காக யாதவ கிராமங்களில் வாக்கு சேகரித்து வருகின்றனர். எனினும் யாதவ ஓட்டுக்கள் 'இந்திய நீதிக் கட்சி' சார்பில் நிற்கும் யாதவ இனத்தை சேர்ந்த இன்பராஜ் (இக்கட்சியின் மாநில அமைப்பாளர் கிருஷ்ணகாந்தும் யாதவ இனம்தான்) கிடக்கவே வாய்ப்பதிகம். பத்தாததிற்கு யாதவ மக்களை தன்வசம் கொண்ட மக்கள் தமிழ் தேசம் கட்சியை துமுகவுடன் இணைதுள்ளார் ராஜ கண்ணப்பன். அடுத்து மிச்சமிருப்பது தலித் மக்களின் ஓட்டுக்கள் ஆனால் அவைகளை அப்படியே அள்ளிக் கொண்டு திமுகவில் போய் சேர்ந்துவிட்டார் முன்னால் அதிமுக எம்.எல்.ஏ. கோபால கிருஷ்ணன். இப்படி பல பக்கம் இடிதாங்கினாலும் நாயினார் முதல்வர், சரத்குமார் மற்றும் பல நடிகர்கள் துணையுடன் வாக்கு சேகரிக்கிறார். தொழிற்துரை அமைச்சராக 4 வருடம் இருந்த இவர் நாங்குனேரி தொழிற்நுட்பப் பூங்கா, ஒருங்கிணைந்த ஜவுளிகள் பூங்காக்கள் நெல்லை மாவட்டதிற்கு வர முயன்றிருந்தாலே போதும். இவ்வளவு சிரமம் இப்போது படத் தேவையிருந்திருக்காது. இதையெல்லாம் செய்யாததோடு, இருந்த பேட்டை கூட்டுறவு நூற்பாலைக்கும் பெரிய திண்டுக்கல் பூட்டு வாங்கிப் போட்டது மிகப் பெரிய மைனஸ் இவருக்கு. அந்தப் பூட்டை நான் திறப்பேன் எனக் கூறியே பிரகாசமான வரவேற்பு பெற்று வருகிறார் திமுக மாலைராஜா. இருந்தாலும் பண புலக்கம் அதிகமுள்ள தொகுதியென பயந்து, திமுக தலைகள் கலைஞரிலிருந்து, ஸ்டாலின், தயாநிதிமாறன் போன்றோர் பிரச்சாரம் செய்தனர். இவர்களுடன் கூட்டணித் தலைகள் வாசன், ஆர்.எம்.வீ ஆகியோரும் பிரச்சாரத்தில் குதிப்பர். தேவரின ஓட்டுக்களை ஃபார்வர்டு நம்பிராஜன் அதிகம் பிரிக்க வாய்ப்பில்லை. இவர்களுடன் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஜெயக்குமார், சமாஜ் வாடி சார்பில் செல்லத்துரை மா. கம்யூனிஸ்ட் (என்.எஸ்) சார்பில் ராஜமாணிக்கம் மற்றும் மூவர் சுயேட்சையாகவும் போட்டியிடுகின்றனர். கடுமையான போட்டி இல்லாமல் இருந்தும் போனமுறை வெறும் 722 வாக்கு வித்தியாசத்தில்தான் வென்றார் நாயினார். இம்முறை வி.ப தண்ணீராய் இரைப்பதால் நாயினாருக்கு மீண்டும் சொற்ப வித்தியாசத்தில் நலம் தரலாம் நெல்லை.


7.அம்பாசமுத்திரம்:
இரா. ஆவுடையப்பன்(திமுக) - (கூட்டணி பலம் +)
ஆர். முருகையா பாண்டியன்(அதிமுக)
அந்தோணிராஜ் (ஃபார்வர்டு ப்ளாக்)
எஸ். சையத் அலிபாத் (தேமுதிக)

சிட்டிங் சக்திவேல் முருகன் வீட்டில். ஆனால் முருகையா பாண்டியன் மூன்பே 3 முறை இதே தொகுதியில் நின்று ஒரு முறை வென்றவரும் கூட. அப்படிப் பார்த்தால் போனமுறை சக்திவேலுக்குத்தான் வாய்ப்பு திடீரென கிடைத்திருக்கிறது. முக்குலத்தோர் பெரும்பபன்மையாக வசிக்கும் தொகுதி. திமுகவை எடுத்துக் கொண்டால் கடந்தமுறையும் இதே தொகுதியில் போட்டியிட்டு 300 ஓட்டு வித்தியாசத்தில்தான் ஆவுடையப்பன் பிந்தங்கியிருக்கிறார். பகுஜன் சமாஜ் கட்சி, ஜனதா தள், ஃபார்வார்டு ப்ளாக், தேமுதிக, சுயேட்சை வேட்பாளர்களும் களமிறங்குகிறார்கள். அதிமுக ஓட்டுக்கள் பிரியும் வாய்ப்புகள் அதிகம். கூட்டணி பலத்தில் ஆவுடையப்பன் ஆளுடையப்பனாக அதிக வாய்ப்புள்ளது.

8. பாளையங்கோட்டை:
மைதீன்கான் (திமுக) - (கூட்டணி பலம் +)
நிஜாமுதின் (இதேலீக்)
கே.ஏ.கலீல் ரகுமான் (தேமுதிக)
பாலு (ஃபார்வர்டு ப்ளாக்)

முஸ்லிம்கள் செல்வாக்குள்ள தொகுதி., எல்லாக் கட்சியும் விவரமா முஸ்லீம் வேட்பாளர்களை இறக்கியுள்ளன. தான் வென்ற தொகுதியை கூட்டணிக்கு கொடுத்திருக்கிறது அதிமுக. பாஜக, பகுஜன் சமாஜ் கட்சி, ராஷ்ட்ரிய லோக் தள் மற்றும் பல சுயேட்சை வேட்பாளர்களும் களமிறங்குகின்றனர். சொற்ப வித்தியாசத்தில் கடந்த முறை கோட்டை விட்ட திமுக மைதீன்கான் இம்முறை பிடிக்கலாம்.


9.நாங்குநேரி:
வசந்தகுமார் (காங்கிரஸ்) - (கூட்டணி பலம் +)
சூரியகுமார் (அதிமுக)
சங்கர் (ஃபார்வர்டு ப்ளாக்)

சட்டென கணிக்க முடியாத ஒரு தொகுதி. அதிமுக கடந்த முறை வென்றிருந்தாலும், மதிமுக மிகச் சொற்ப ஓட்டுகளே பெற்றது. சிட்டிங் மாணிக்கராஜ் ஏமாந்தது, தேவரின மக்கள் அதிகம் உள்ள தொகுதியில் ஃபார்வர்டு ப்ளாக் போட்டியிடுவது, பத்தாததிற்கு தேமுதிகவும் அதிமுக ஓட்டைப் பிரிக்க காத்திருக்கிறார்கள். வசந்தகுமார் நாங்குனேரிக்கு ஹைடெக் பார்க், வாழைக்காய் பதப்படுத்தும் தொழிற்சாலை கொண்டு வருவேன் என வாக்குறுதிகளை கொடுத்து ஓட்டுக் கேட்கிறார் வசந்தகுமார். பாரம்பரியமான காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர், வசதி படைத்தவராயினும் எளிமையாக மக்களுடன் பழகும் இயல்புடையவர் நாங்குனேரி, சூரியகுமார்க்கு சுழி, இங்கு வசந்தகுமருக்கு வீசலாம் வசந்தம்.


10.சேரன்மாதேவி:
பி.வேல்துறை (காங்கிரஸ்) - (கூட்டணி பலம் +)
பி.எச்.மனோஜ் பாண்டியன் (அதிமுக) - சிட்டிங்.
ஆறுமுக நாயினார் (பாஜக)
ராஜேந்திரபிரசாத்(தெமுதிக)

1996 ல் வென்ற வேல்துறை இம்முறையும் நிற்கிறார். கடந்த முறை வென்ற மனோஜ் பாண்டியனும்தான். பாஜகவும் கணிசமாக ஓட்டுக்கள் பெற்ற தொகுதி. குழப்பமிருந்தாலும். பிரச்சார வேகமும், கூட்டணி பலமும் காங்கிரஸ்க்கே மாதேவியென காட்டுகிறது.

11.ராதாபுரம்:
எம். அப்பாவு (திமுக) - சிட்டிங் (தொகுதியில் செல்வாக்கு, கூட்டணி பலம் ++)
எல். ஞானபுனிதா (அதிமுக)
கேபிகே.செல்வராஜ் (சுயேட்சை)
எம். அப்பாவு

அப்பாவு அய்யா சுயேட்சையாவே நின்னு அள்ளி வென்ற தொகுதி. பாமக திமுகாவை விட போனமுறை 'அதிக' வாக்குகள் பெற்ற தொகுதி. திமுகவும் இருபதாயிரத்திற்கு மேல் போன முறை அள்ளிய தொகுதி. நாடார் இனத்தை சேர்ந்த காங்கிரஸ் செல்வராஜ் சுயேட்சியாக களமிறங்கி இருக்கிறார் (காங்கிரச் எம்.பி தனுஷ்கோடி ஆதித்தனின் ஆதரவில்). கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் எம்.பியே இப்படிச் செய்யலலமா என காதில் கனல் கக்குகின்றன உடன்பிறப்புகள், இருந்தாலும் சில மாதங்களுக்கு முன் திமுகவில் இணைந்து 'சீட்' டை கைப்பற்றிய அப்பாவுவைப் பார்த்தாலும் புகைவிடுகிறன. திமுக கூட்டணிக்கு வரும் நாடார் ஒட்டைப் பிரிப்பதற்காக செல்வராஜ் களமிறங்கி இருந்தாலும்., கரன்சியை வாரியிரைக்கும் சுயேட்சை செல்வராஜ் கண்டு கலங்கிப் போயிருக்கிறரது அதிமுக தரப்பும். செல்வராஜ் அதிமுகவின் 'நாடார்' இன ஓட்டையும் பிரிப்பாரில்ல?. அப்பாவு தொடர்ந்து கடந்த இருமுறை வென்ற தொகுதி, (1996ல் தமாகா சார்பாக நின்று வென்றிருக்கிறார்., எனவே காங்கிரஸ் ஓட்டை பிரித்தாலும் அவ்வளவு பாதிப்பிருக்காது). பாமக கணிசமாக செல்வாக்குப் பெற்றுள்ளது இங்கு (தெக்கப்பா...! கவனிங்க, அதிமுக உடனிருந்தது எனறாலும்). உறுதியாக இந்தத் தொகுதி திமுகவிற்கே என்பதென் அவதானம்.

மொத்தத் தொகுதிகள் - 11

திமுக - 7 , காங்கிரஸ் - 3, சிபிஎம் - 1

அதிமுக - 8, மதிமுக - 2, இதேலீக் - 1 எனப் போட்டியிடுகின்றன. பதினொன்று தொகுதிகளை தன்னில் கொண்ட திருநெல்வேலி மாவட்டம் மாறி, மாறி திராவிட கட்சிகளையே வெல்ல வைத்திருக்கிறது. போனமுறை அதிமுகவினருக்கு இம்மாவட்டத் தேர்தல் முடிவுகள் திருவிழாக் கொண்ட்டாட்டமாக அமைந்திருந்தது 11 தொகுதிகாளில் 10 தொகுதிகளை வென்றது அதிமுக. அப்போது அதிமுகவின் கூட்டணியில், திமுக கூட்டணியில் தற்போதுள்ள பெரிய கட்சிகள் எல்லாம் இருந்தது. எனவே கடந்த தேர்தலில் அதிமுகவிற்கு வந்த முடிவுகள் திமுகவிற்கு கிடைக்கும் இப்போது. மதிமுக கணிசமாக வாக்குகளைப் பெறக்கூடிய மாவட்டம் நெல்லை. ஆனால் 2 இடம்தான் மதிமுகவிற்கு தரப்பட்டுள்ளது. வைகோ சுறாவளியாக மாறி சுற்றியிருக்கிறார் இம்மாவட்டத்தை. நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிற்கு உழைத்ததைப்போல். 'டாட்டாவ மிரட்டுனாங்க, அறிவாலயத்தை அடகு வச்சாங்கன்னு' இவர் போடும் குண்டுகளால் கலகலத்தது நெல்லை. ஜெயலலிதா, வைகோ பிரச்சாரம் பலம் தருமா? அதிமுக குறிப்பிடத்தக்க செல்வாக்கு, மதிமுகவிற்கு கணிசமான செல்வாக்கு, சிறுத்தைகளுக்கு பலமில்லா மாவட்டம்.
மொத்தமுள்ள 11 தொகுதிகளில் 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது முக்குலத்து ஃபார்வர்டு ப்ளாக். தனித் தொகுதி இரண்டிலும் ஃபார்வர்டு ப்ளாக் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. வேட்பாளர்களை முதலில் அறிவித்து, பின்பு அதை மாற்றி அறிவித்து என குழப்பத்தில் தவித்து ஒரு வழியாக 11 இடங்களிலும் தேமுதிக தனது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. தொழில் வளத்தில் பின் தங்கிய மாவட்டம் நெல்லை. நாங்குனேரி தொழிற் நுட்பப் பூங்கா, ஒரிங்கிணைந்த ஜவுளி பூங்கா போன்ற திட்டங்கள் இம் மாவட்டத்தின் தொழிற் வளத்தை உயர்த்தும். தொழிற்துறை அமைச்சரை இம்மாவட்டம் தன்னிடம் வைத்திருந்தும் இத்திட்டங்கள் நிறைவேற்றப் படவில்லை.
திமுக கூட்டணிக்கு 9 இடங்கள் கிடைக்கலாம். 2 இடங்களில் அதிமுக கட்சிகள் வெல்லலாம். கூட்டணி பலம் நிச்சயம் 9 இடங்கள் திமுக கூட்டணிக்குப் பெற்றுத் தருமென நம்பலாம்.

திமுக கூட்டணி - 9
அதிமுக கூட்டணி - 2
திமுக - 6 , காங்கிரஸ் - 2, சிபிஐ(எம்) - 1 வெல்லலாம்.
அதிமுக - 2 வெல்லலாம்.
வெல்வதற்கு வாய்ப்புள்ளவர்கள் :
ச. தங்கவேலு (திமுக)
வீ. கருப்பசாமி பாண்டியன் (திமுக)
பூங்கோதை ஆலடி ஆருணா (திமுக)
இரா. ஆவுடையப்பன்(திமுக)
மைதீன்கான் (திமுக)
எம். அப்பாவு (திமுக)
வசந்தகுமார் (காங்கிரஸ்)
பி.வேல்துறை (காங்கிரஸ்)
ஆர்.கிருஷ்ணன் (சிபிஐ(எம்))
யு.ஹச். கமாலுதீன்(அதிமுக)
நாயினார் நாகேந்திரன்(அதிமுக)

சரிதானா? திருநெல்வேலி மக்கள் கருத்துகளைச் சொல்லுங்க!!.
கன்னியாகுமரி மாவட்ட நிலவரம் பாருங்க.

தேர்தல் அலசல் - 2006 - கன்னியாகுமரி


தலைகள் செல்வாக்கு, கட்சி செல்வாக்கு, கரன்சி செல்வாக்கு என பல செல்வங்களை மேற்பூசி தேர்தலால் கலை கட்டியிருக்கிறது தமிழகம். எப்போது தண்ணீர் வரும், மின் கட்டண உயர்வு வரும், பயணக் கட்டணங்கள் திருத்தப்படும்., எப்போது மறியல், எப்போது வந்துகொண்டிருக்கும் வண்டியைத் திருப்பிக் கொண்டு வேறு சாலையில் பயணித்து நொந்து நூலாகிய பயணம் என்று ஒவ்வொரு நாளும் எதற்காவது விடை தேடிக் கொண்டிருக்கும் மக்கள் முகம் பார்த்து, ஒரே ஒரு நாள் தலைவர்களின் துடிப்பு. நம்ம 5 வருடம் அனுபவிப்பதை ஒரே நாளில் அனுபவிக்கும் துடிப்பு. மே 8 !! எத்தனை பேருக்கு மக்கள் 'டிக்' அடிக்கப் போறங்க., எத்தனை பேரை 'ஷாக்' குடுத்து வீட்டுக்கு அனுப்பப் போறாங்கன்னு ஒரு அலசு அலசலாம். பார்த்துவிட்டு உங்கள் தொகுதி பற்றிய சரியான கணிப்புதானா எனச் சொல்லுங்கள். இடையிடையே., படிக்க ஆர்வமாக இருக்கவேண்டும் என்பதால் கொஞ்சம் வார்த்தைகள் நம்ம ஸ்டைலில் இருக்கும் :).

மொத்தத் தொகுதிகள் : 234

திமுக கூட்டணி தொகுதிகள் :

திமுக : 129 இடங்கள்
காங்கிரஸ் : 48 இடங்கள்
பா.ம.க : 31 இடங்கள்
சி.பி.ஐ(எம்) : 13 இடங்கள்
சி.பி.ஐ : 10 இடங்கள்
முஸ்லிம் லீக் : 3 இடங்கள்

அதிமுக கூட்டணி தொகுதிகள் :

அதிமுக : 182 இடங்கள்
மதிமுக : 35 இடங்கள்
விசி : 9 இடங்கள்
ஐ.என்.டி.யூசி : 2 இடங்கள்
இந்திய தேசிய லீக் : 2 இடங்கள்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் : 1 இடம்
மூவேந்தர் முன்னேற்ற கழகம் : 1 இடம்
அகில இந்திய ஃபார்வர்டு ப்ளாக் : 1 இடம்
மதச்சார்பற்ற ஜனதாதளம் :1 இடம்

மாவட்டவாரியான தொகுதி அலசல்

தெற்கிலிருந்துதான் இந்திய வரலாற்றையே ஆரம்பிக்க வேண்டும். ஆனால் இமயத்திலிருந்து தொடங்குகிறார்கள். தமிழக வரலாறும் அப்படித்தான். வட வேங்கடம் முதல் தென் குமரிவரை எனச் சொல்கிறார்கள். குமரியிலிருந்தல்லவா துவங்க வேண்டும்?. நம்மால் வரலாற்றை மாற்ற முடியுமா என்ன?. ஆனால் நம் அலசலை தெற்கிலிருந்து ஆரம்பிக்கலாம்.... தற்போதைய நிலவரப்படி வெல்லும் வாய்ப்புள்ளவர்கள் என என் அறிவுகெட்டியபடி கணக்கிட்டவர்களை சற்று அடர்த்தியாக (Bold) இங்கு காட்டியிருக்கிறேன். இரண்டு கூட்டணி கட்சிகள் நீங்கலாக உள்ள மற்ற தேமுதிக, ஃபார்வர்டு ப்ளாக், பாஜக போன்ற கட்சிகளால் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களால் சிறிதேனும் மாற்றம் (ஓட்டுகள் பிரியும் நிலை) இருக்கும் என கருதினால் மட்டுமே அவைகளை சேர்த்திருப்பேன்.
கன்னியாகுமரி:
அய்யன் ஆசி யாருக்கு?

கன்னியாகுமரி : மொத்தம் 7 தொகுதிகள்.

1. கிள்ளியூர் 2. திருவட்டார் 3. விளவன் கோடு 4. பத்மனாபபுரம் 5. குளச்சல் 6. நாகர்கோவில் 7. கன்னியாகுமரி.

1. கிள்ளியூர் :
ஜான் ஜேக்கப் (காங்கிரஸ்) (தன் கட்சி மற்றும் கூட்டணி ++)
டாக்டர் தே. குமாரதாஸ் (அதிமுக) - சிட்டிங் (த.மா.கா). (சிட்டிங், தொகுதியில் செல்வாக்கு +)
சந்திரக்குமார் (பாஜக)
குமாரதாஸ்

கடந்த இரு முறை த.மா.கா சார்பிலும் அதற்கு முன்பு ஒரு முறை ஜனதா தளம் சார்பிலும் நின்று வென்ற சித்த மருத்துவர் குமரதாஸ் இம்முறை அதிமுக சார்பில் போட்டியிருகிறார். தொடர்ந்து 3 முறை இவர் வென்றிருக்கிறார் ஆனால் அது ஒரு முறைகூட அதிமுக சார்பில் இல்லை. தமாக காங்கிரஸூடன் இணைந்ததால் அதிமுகவில் சேர்ந்த இவர் காங்கிரஸ் வேட்பாளராக நின்றிருந்தால் இம்முறையும் வெற்றி நிச்சயம்.
சிறப்பு சிற்றூராட்சியான கிள்ளியூர் காங்கிரஸ் பலமாக உள்ள தொகுதி என்பதனாலும், கூட்டணியாலும் ஜான் ஜேக்கபிற்கு அதிக வாய்ப்புள்ளது.


2. திருவட்டார் :
லீமா ரோஸ் (சிபிஐ (எம்) (கட்சியின் பலம் +)
திலக்குமார் (அதிமுக)
சுஜித் குமார் (பாஜக)

சிறப்பு சிற்றூராட்சியான திருவட்டாரில் கடந்த முறை சி.பி.எம் வென்றது. சி.பி.எம், திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளே அடுத்தடுத்து இங்கு வென்றுள்ளது. அத்தனையும் கூட்டணி போட்டு நிற்கும் இம்முறை 'கனி' லீமா ரோஸ்க்கு (அவர் புதுமுகமாக இருந்தாலும்) கிடைக்கவே அதிக வாய்ப்புள்ளது.

3. விளவன் கோடு
ஜான் ஜோசப் (சிபிஐ(எம்)) (கட்சியின் பலம், கூட்டணி +)
ஃபிராங்கிளின் (அதிமுக)
தேவதாஸ்(பாஜக)

சிபிஎம் உறுதியாக வெல்லும் தொகுதி விளவன் கோடு. அதற்கடுத்த நிலையில் காங்கிரஸ். எனவே ஜான் ஜோசபிற்கு வெற்றி நிச்சயம். இவரும் முதன் முறை களம் காண்கிறார்.

4. பத்மனாபபுரம்:
தியோடர் ரெஜினால்டு (திமுக)
கே.பி.ராஜேந்திரபிரசாத் (அதிமுக) - சிட்டிங் (சிட்டிங் +)
வேலாயுதம் (பாஜக)

அதிமுக, பாஜக அடுத்தடுத்து வென்றுள்ள தொகுதி. எனவே இம்முறையும் வாய்ப்பிருக்கலாம். தொகுதியில் நல்ல பெயர் எடுத்திருக்கிறார். சிட்டிங் தொகுதிய செழிப்பா வச்சிருந்தா சான்ஸ் அவருக்கு அதிகம்.

5. குளச்சல்:
ஜெயபால் (காங்கிரஸ்)
பச்சைமால் (அதிமுக) - சிட்டிங்

கடந்த முறை அதிமுக. அதற்கு முன்பு திமுக, அதற்கு முன்பு காங்கிரஸ்னு குளச்சல் குழப்புது. இருந்தாலும் பச்சைமால் முன்பு வென்றபோது காங்கிரஸ் உடன் இருந்தது. கூட்டணியை கணக்கில் கொண்டு பார்த்தால்... காங்கிரஸ் மலர்ச்சியாகிக்கலாம்.

6. நாகர்கோவில்
ராஜன் (திமுக) (கூட்டணி +)
ரத்தினராஜ் (மதிமுக)
ஆஸ்டின் (சுயேட்சை) - சிட்டிங். ( சிட்டிங், செல்வாக்கு மற்றும் கிருத்துவ அமைப்புகளின் அதரவு + )


இத் தொகுதியிலும் கலந்துகட்டியே கட்சிகள் வென்று வந்துள்ளன. சிட்டிங் எம்.எல்.ஏ ஆஸ்டின் செல்வாக்கு பெற்ற தொகுதி. அவரும் கிருத்துவ அமைப்புகள் ஆதரவுடன் சுயேட்சையாக நிற்கிறார். கடந்த முறை எம்.ஜி.ஆர்.அதிமுக வேட்பாளராக களமிறங்கி (அதற்கு முன் அதிமுகவில் இருந்தார்) வென்று, பின்பு மீண்டும் அதிமுகவில் இணைந்த இவரால் ஓட்டுகள் கணிசமாகப் பிரியும். முன்பு இத் தொகுதியில் தனித்து நின்ற மதிமுக ரத்தினராஜ் அதிமுக துணையுடன் மீண்டும் இறங்குகிறார். தனித்து நின்று அவர் பெற்ற வாக்குகள் 13,531. ஆனால் இம்முறையும் அதிமுக தலைகள் எல்லாம் தளவாய்யை பூஸ்ட் பண்ண கன்னியாகுமரி போய்விட வாடித் தெரிகிறார். கூட்டணியை கணக்கில் கொண்டால் திமுகவிற்கு வாய்ப்புள்ளது.

7. கன்னியாகுமரி.
சுரேஷ் ராஜன் (திமுக)
தளவாய்சுந்தரம்(அதிமுக)-சிட்டிங்.(அமைச்சர் - சுகதாரம்)
தளவாய்சுந்தரம்

கடந்த முறை அதிமுக அதற்கு முன் திமுக மாறி, மாறி வென்று வருகிறது. அமைச்சர் தொகுதி. ஜெ, சரத்குமார், வைகோ பிரச்சார கலக்கலில் சற்று தெம்பாகத்தான் தெரிகிறார் தளவாய். சுரேஷ்ராஜனும் போன முறைக்கு முந்திய முறை வென்றவர்தான். கடந்த முறையும் திமுக சார்பாக தளவாய் சுந்தரத்தை எதிர்த்துதான் பொட்டியிட்டார். தளவாய்க்கு சரியான போட்டி. வாக்குறுதிகளை அள்ளி விசாமல் தளவாய் வலம் வர, இவர் ரப்பர் பூங்கா, நாங்குனேரி தொழிற் நுட்ப பூங்கா, புத்தேரி ரயில்வே மேம்பாலம் அனைத்தும் அமைப்போம் என உறுதி கூறி வாக்கு கேட்கிறார். மேடைகளில் ஒருவரை ஒருவர் விலாசிக் கொள்கின்றனர். ஒரே மேடையில் இருவரும் சந்தித்து வரலாறு காணத சாதனைகள் படைத்து கலை கட்டியிருக்கிறது மாவட்டத் தலைநகர் குமரி. கடும் போட்டி. ஆனாலும் கூட்டணி பலம் உண்டு திமுகவிற்கு.
கன்னியாகுமரியில் மொத்தமுள்ள 7 இடங்களில்.
திமுக - 3, காங்கிரஸ் - 2, சிபிஎம் - 2.
அதிமுக - 6, மதிமுக - 1. எனப் போட்டியிடுகின்றன. குமரி மாவட்டம் பொதுவாக தேசியக் கட்சிகளின் கூடாரம். கழகங்களின் தொல்லை. 'பெருந்தேசியம்' காங்கிரஸ் தற்போது கூட்டணியில். திமுக கூட்டணியுளுள்ள வேட்பாளர்கள் அதிகம் கிருத்துவ மதத்தவர்கள். (விவரமா நிறுத்தப்பட்டுள்ளனர்). எனவே எப்படி இருந்தாலும் 6 இடங்கள் திமுக கூட்டணிக்கு கிடைக்கலாம்.
திமுக கூட்டணி - 6
அதிமுக - 1

திமுக - 2 , காங்கிரஸ் - 2, சிபிஐ(எம்) - 2 வெல்லலாம்.
அதிமுக - 1 வெல்லலாம்.

வெல்வதற்கு வாய்ப்புள்ளவர்கள் :
ராஜன் (திமுக)
சுரேஷ் ராஜன் (திமுக)
ஜான் ஜேக்கப் (காங்கிரஸ்)
ஜெயபால் (காங்கிரஸ்)
லீமா ரோஸ் (சிபிஐ(எம்))
ஜான் ஜோசப் (சிபிஐ(எம்))
கே.பி.ராஜேந்திரபிரசாத் (அதிமுக)
கன்னியாகுமரி மக்கள் கருத்துகளைச் சொல்லுங்க.