Wednesday, April 26, 2006

மூன்று சிறிய ஓநாய்களும், பெரிய கெட்ட பன்றியும்.

நீங்கள் ஒன்றை அவதனித்து இருக்கிறீர்களா?. நம் குழந்தைகளுக்கு ஆயிரம் கதைகள் மனிதர்களைப் பற்றி சொன்னாலும் அவர்கள் பன்றிகளைப் பற்றியே அதிகம் தெரிந்துகொள்ள ஆசைப் படுகின்றனர். The Three Little Wolves And The Big Bad Pig என்றொரு கதை நாடகம் (பாட்டும் உண்டு) சிறு பிள்ளைகள் இரசித்துக் கேட்பார்கள். நீங்களும் படியுங்கள் இங்கு.பன்றிகளால் மூளைக் காய்ச்சல் பரவும். சாதாரணமாக மிக சாதுவாகவே இருக்கும். அதனுடைய இடம் எதுவென புரியாமல் நாம் வெளியே சென்றால் வாலை ஆட்டி வாசம் தெளித்துப்போகும் இயல்பு கொண்டது. பாவமான பிராணி. அதுவும் வயதாகி விட்டதென்றால் மிகப் பாவம். இப்படித்தான் நாம் அறிந்திருக்கிறோம். அவைகளின் பல பரிமானங்கள் காட்டும் Old Pig என்ற மற்றொரு புத்தகமும் படிக்கச் சுவையானது. வேண்டுவோர் புத்தகங்களைப் பற்றி இங் கிங் கும் இங்கும் தெரிந்து கொள்ளலாம்.
பன்றிக்காகவெல்லாம் ஒரு பதிவான்னு கேட்கிறிங்களா?. அதுவும் சரிதான்.

கேளுங்கள்...


இயக்குனர் சீமன் அவர்களின் 'தென்னவன் கலை மன்றம்' நடத்திய தேர்தல் பிரச்சார கூட்டத்தில்., பேராசிரியர். சுப.வீ மற்றும் இயக்குனர் சீமன் அவர்கள் ஆற்றிய உரையின் ஒளிக் கோப்பு., இவ்வார நக்கீரன் (படத்திற்கு நன்றி) பத்திரிக்கை இணைய தளத்தில் வெளிவந்துள்ளது. உரையை அச்சில் பலர் பார்த்திருப்பீர்கள். நாட்டுல நடக்குற நாடகங்களையும்தான். ஊருக்கு ஒரு வேலையா தொலைபேசினா ஒருத்தரையும் புடிக்க முடியலை.. எல்லாரும் தான் "நிக்கிற" (தேர்தல்ல) மாதிரியே பரபரன்னு திறிஞ்சுகிட்டு இருக்காங்க... நம்ம பய ஒருத்தன் எப்பப்பாரு வெட்டியா உட்கார்ந்துகிட்டு இருப்பான்., நடுராத்திரி 3 மணிக்கு பேசினாக்கூட அப்பத்தான் வந்து கடற்கரையில படுத்துகிட்டு காத்துவாங்கிட்டு இருக்கறவன் மாதிரி மகா உற்சாகமா 'ஹலோ' ம்பான். அவன் எங்கேன்னு கேட்டா தொகுதி நிலவரத்தை தெரிஞ்சுக்க போயிருக்கானாய்ங்க... எனக்கு ஒரே கலவரமாத்தான் போச்சு... அவனுக்கு இன்னும் ஓட்டுப் போடற வயசே ஆகலியேன்னேன்... ம்... வயசானத்தான் ஓட்டுப் போடணுமா? இல்ல ஓட்டுப்போடாட்டி நிலவரத்தை தெரிஞ்சுக்க கூடாதா? ன்னு நல்லு நறுக்குனு வருது கேள்வி... நம்ம ஆளுகளுக்கு கேட்கவா சொல்லித்தரணும்?. ஆனா கேட்கவேண்டியதை கேட்கவே மாட்டாங்க:). மொத்தம் நிக்கறது பதினைஞ்சு பேரு (நாமினிகளோட சேர்த்து), பூராம் துவரங்குறிச்சி, பண்ணங்கொம்பு ஆளுகதான்., சால்மா(சல்மா)க்கா அருமையா பிரச்சாரம் பண்ணுராங்க., சால்மாக்கா கூட பிரச்சாரம் போகாம சொனங்ககுனதுனால செங்குட்டுவனையும், அவர் மகன் மா.செ வையும் ஸ்டாலின் தாளிச்சுட்டாரு பாவம்... போன முறைக்கு முந்துன முறை கம்பத்துல கொடி கட்டுர பிரச்சனையில காலு போன கனகராசு இப்ப நல்லா குதிச்சு., தன் காலக் காட்டி, காட்டியே எந்த எதிர்புமில்லாம ஊர் ஊரா கொடி கட்டுறார். டாக்சி ஸாண்ட்ல "அன்னைக்கு" ஆளுகள கூட்டிட்டு வர 'பிளசரை' களுவி அழகு படுத்தறாங்க... ஆட்களை ஆள்ளிக்கொண்டு வருகின்றன அரைப்பாடி லாரிகள்... 'பூத்' பக்கத்துல நிக்க "சூரியன்" சேலைய 'அயர்ண்' பண்ணிருச்சு அத்த... கருப்பு, வெள்ளை, சிவப்பு கரை வேட்டிய துவைக்கப் போட்டுட்டாரு மாமன்னு மக்கள் திருவிழா கொண்டாட ரெடியாய்ட்டாங்க... இவிங்களும் நம்மப் போலத்தான் வெடியா... வெகுளியான்னு பகுத்தறிய முடியாது... ஒரு வீட்டுல உள்ள ஆளுகளே 5 கட்சிக்கு பிரச்சாரம் பண்ணுவங்க... ஒருமுறை ஓட்டுப் போட்டு விட்டு வந்த பெரியம்மாவிடம் "யாருக்கு குத்துன?" ன்னு கேட்டப்ப., என் மகன் சூரியனுக்கு போடச் சொன்னான்., வீட்டுக்காரரு அதிமுகவுக்குப் போடச் சொன்னாரு, ஆதி காலத்துலயிருந்து எங்க மாமனாரு காங்கிரஸூ ...
அய்யய அந்தக் கதையெல்லாம் விடு... இப்ப யாருக்கு போட்ட? ன்னா அவங்க சொன்னாங்க பாருங்க பதில்
"வஞ்சகமில்லாம எல்லாத்துலயும்தான் குத்துனேன்!" னு. வஞ்சகமில்லாம செல்லாத ஓட்டப் போட்டு குடும்பம் முழுவதுக்கும் வஞ்சகம் செஞ்சிருச்சு பெரியம்மா...! முதல் நாள் ராத்திரி முழுவதும் கண்ணு முழிச்சு அவங்களுக்கு ஓட்டுப் போட சொல்லிக் குடுத்த கேசுக எல்லாம் அப்புறம் கூடி கும்மி கும்மியடிச்சாய்ங்க பெரியம்மாவ....
சரத்குமார் போனது...
இராஜேந்தர் வந்தது...
கார்த்திக் கொஞ்ச நேரம் காணமப் போனது... (ஒரு வேட்பாளரையும், ஒரு தொகுதியையும் பறி கொடுத்துட்டாராமே :(
விஜயகாந்த் பைபிள், குரான், கீதை தாறேன்னது...
வைகோ காற்றில் சொற்களை அலையவிட்டது...
அதை கையில் பிடித்து தயா தூக்கி ஏறிந்தது
கலைஞர் அப்படிச் சொன்னது, அம்மா இப்படிச் சொன்னது...
இதற்கிடையேயும் (இவ்வளவு காலம் தமிழக அரசியல் கண்டும்) " தோழர்கள்" தங்கள் பாரம்பரியம் மாறாமல் செஞ்சொற்கள் பேசிக்கொண்டிருப்பது...
இது மட்டுமா தேர்தல்? இவ்வளவையும் கேட்டு (பைத்தியம், கியித்தியம் புடிக்காம!!), 5 வருடத்திற்கொருமுறை கிடைக்கும் கவுரவத்தில்., ஒரு நாள் கூத்துக்கென்று தெரிந்தாலும் ., கலந்து கட்டுன உணர்வோட எங்க பொறோம்? என்னா செய்யிறோம்னு ஒண்ணும் புரியாமத் திறிஞ்சுகிட்டு இருக்கிற இந்த சக்தியைப் புறந்தள்ளியொரு தேர்தல் இல்லை. இச்சக்தியை ஒருங்கிணைக்க., உண்மைகளை உணர வைக்க., அன்றெலுந்த ஒரு எழுச்சி இன்று வீழ்ந்து எதிலும் சமரசமாகி., சமாதியாவதை சுட்டிக்காட்ட ஒரு ஆளுமில்லை. தப்பிதவறி அப்படியொரு ஆளிலிருந்தாலும்., பேச அனுமதியில்லை!!. அனுமதி பெற்று ஒரு குறிஞ்சிப் பூ பேசுகிறது. தம்பிகள் கேட்டு வையுங்கள். எவ்வளவு கேட்டிருப்போம்?. கியூபா.. பொலிவியா... இன்னும் எங்கெங்கு நடந்தன புரட்சிகள்... அத்தனையும் நமக்கு அத்துப்படி. நமது நாட்டிலும் புரட்சிகள் உண்டு., புரட்சிப் பட்டங்கள் இன்றும் உண்டு தலைகளுக்கு. உண்மையில் புரட்சி மக்கள் மனதில் வர வேண்டும். புரட்சி என்றால் டங்கு, டங்குன்னு இடிச்சுகிட்டு விழுகுறது இல்ல... அமைதிப் புரட்சி... மக்கள் ஆளுமையில் புரட்சி... தாழ்வுணர்வு தன்னுடமை (உடமையென்றால் பொருள் மட்டுமல்ல) அறியாதவருக்கு வரும். தான் யாரென்பதை புரிந்துகொண்டால் எல்லாம் மாறும். நம்மிடையே இன்று இருப்பவர்தான் நாளைய தலை., ஆளுமையுடைய சமூகத்திற்கு இத்தலையே விதை.
இன்னும் நாலைஞ்சு நாள்தான்., வந்துருவோமில்ல... ! இந்த நேரத்துல வெளியூரு போனா கட்சியவிட்டு காணமப் போன மாதிரியாருவோம்னு தெரிஞ்சதுதான் ஆனாலும் துரவறமே பூண்டாலும் கூட்டி வந்து கொ.ப.செ ஆக்கற ஆளுகல்ல நம்ம., அந்த தைரியத்துலதான் விடுமுறை எடுத்தேன் :)). ஆசிப் மீரான் அவர்களின் நட்சத்திர வாரத்தை தவற விட்டுவிட்டேன் போல. வருத்தமா இருக்கு. நம்ம கில்லிகளின் பதிவுகளும் பல விட்டுப்போய்விட்டது :). படிக்க வேண்டும். கூட்டம் கொஞ்சம் அதிகமாயிட்ட மாதிரி இருக்கு... இல்ல... தேர்தல் நேரங்கிரதுனால எனக்கு அப்படித் தெரியுதா? 'உண்மையிலேயே' புதிதாக எழுத வந்துள்ள புதிய வலைப்பதிவர்களுக்கு வாழ்த்துக்கள். இவ்வளவு பேசுற நீ யாருன்னு புதிதாக வந்தவர்கள் கேட்டீர்களேயானால்... தமிழ் மணத்தில் கொஞ்சம் உட்புகுந்து பார்த்தால் 'நஞ்சு மரம்', 'உலர்ந்த மரம்' ' ஆலமரம்... பாலமரம்'னு ஏகப்பட்ட விளம்பரம் மரத்திற்கு உண்டு. மரத்தைப் பிடித்து ஆடிப்பார்க்க பார்க்க பெண்களுக்கு கூட ஆசையிருக்குதுங்க :))))). இருக்க வேண்டியதுதானே?., இது ஒரு நியாயமான அசைதான்.... மரம் மேலே விழுகும் வரை 'எல்லோரும்' ஆடிப் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்.., ம்...! என்னா சொல்றிங்க??.