Thursday, May 11, 2006

பூடக ஊடகங்கள்

தமிழக தேர்தல் வரலாறு விரிவாக எழுதப் பட வேண்டியது. திராவிடம் கண் பெற்ற பிறகு, வந்த தேர்தல்கள் அனைத்திலும் மேடைப் பேச்சுக்களும், எழுச்சி மிக்க எழுத்துகளுமே தமிழகத்தை ஆள்வோரை நிர்ணயம் செய்து வந்தது. எம்.ஜி.யாருக்குப் பிறகு தோற்றம், நல்ல உருவாக்கம் (இமேஜ்) இவைகளும் சேர்ந்து கொண்டன. எம்.ஜி.யாரின் இரண்டாவது தேர்தல் அத்தியாயத்தில் வந்தது பணம்!!. ஊழல் செய்தோர் மக்களைச் சந்தித்து ஒட்டு கேட்கும்போது, கேள்வி கேட்கும் வாய்களை அடைக்கப் பயன்பட்டது பணம். (பணம் பயன்படா இடத்தில் அடக்குமுறை). அதுவே தொடர்ந்து, இப்போது தேர்தல் எனில் பணம் ஆறாகப் பாய்கிறது. சில மாதங்களுக்கு முன்னால் விவசாயிகள் எலிக்கறி சாப்பிட்ட மாநிலம் இது என்று தேர்தல் நேரத்தில் ஒரு வெளியூர்காரரிடம் சொல்லி இருந்தால் அவர் நம்பியிருப்பாரா?., இல்லை... பஞ்சம் தாளாமல் கஞ்சித்தொட்டி வைத்தோம் என்றால் என்ன பதில் கிடைத்திருக்கும்?. ஒரு தொகுதிக்கு ஒரு வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்படுகிறது, பிறகு ஓரிரு நாட்களுக்குள் அதை மாற்றி வேரொருவர் பெயரை அறிவிக்கிறார்கள். இரண்டு, மூன்று நாட்களுக்குள் 12 லட்சம் செலவு செய்தேன் என்கிறார் பாதிக்கப்பட்ட வேட்பாளர். இப்படி முதலீடுகளை அவசரமாக கொட்டும் தொழிலாய் ஆகிவிட்டது அரசியல் எனில், அதில் அரசியல்வாதிகள் எதிர்பார்க்கும் லாபம் எவ்வளவு?. வேறு எத்தேர்தலிலும் இல்லா அளவிற்கு பணம் என்ற பதம் இத்தேர்தலில் தான் அதிகம் புலங்கியது. இதற்கிடையிலும் வீதி நாடகம் போட்டு பிரச்சாரம் செய்த தோழர்களும் உண்டுதான். மும்முனைப் போட்டி, முப்பது முனைப் போட்டி என்றெல்லாம் எழுதின ஊடகங்கள். ஆனால் போட்டியென்னவோ இரு கழகங்களுக்குத்தான். நாம் நடிகர்களை கூட மூனா வச்சிருக்க மாட்டோம். இருவர்தான் எப்பவும் வெளிச்சத்துல., இதுல எங்க தேர்தல்ல மும்முனை?., எல்லாத்துலயும் மாதிரி உருவாக்குறது ஊடகங்கள்தானே?.., இல்லையென்றால் அவைகளுக்கு மதிப்பு?. பத்துப் கட்சி சேர்ந்து ஆட்சி அமைச்சு., அடிச்சுகிட்டு நாசமா போனா யாருக்கு பிழைப்பு?. இப்படியொரு மாயை வேண்டுமென்றே ஏன் உருவாக்கப்படுகிறது?., தேமுதிக ஐந்தாறு வருடங்களாவது அரசியல் செய்து, மக்களின் சுக, துக்கங்களில் பங்கு கொண்டிருந்தால் அல்லது ஃபார்வர்டு ப்ளாக் எப்போதேனும் கணிசமான தன் பிரதிநிதிகளை சட்ட மன்றம் அனுப்பியிருந்தால்., சொல்லிக் கொள்ளுங்கள் முப்பதுமுனைப் போட்டியென்று. ஒருவர் இப்போதுதான் அடி வைத்துப் பார்க்கிறார். இன்னொருவர் ஏற்கனவே இருக்கும் கட்சியில் இறங்கி பார்க்கிறார். இப்போது சொல்பவர்கள் மதிமுக தனித்து நிற்கும்போது ஏன் ஒன்றும் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் வைகோ வளர்ந்திருப்பார். என்னன்னமோ ஆகி, இப்ப கூட்டணியாச்சில வந்து நிக்குது. தேர்தல் வரை கூட்டணி கட்சிகள்!!. வென்றால்., அது தோழமை கட்சியாக இருந்து தோள் கொடுக்க வேண்டும், ஆட்சியில் தானும் இருந்தால்... (இருக்கக் கூடாது எனச் சொல்லவில்லை) அதை தக்க வைக்கப் போராடுமே தவிர, மக்கள் பிரச்சனைகளை எப்படி பார்க்க முடியும்?., அனைத்து தோழமை கட்சிகளுக்களும் நிபந்தனையற்ற ஆதரவளித்து., ஒரு கட்சி உட்கார வேண்டும் என்பதே என் ஆவல் (நிறைய பேருக்கு இவ்வரி வருத்தம் தரும் :)))., இருந்தாலும் கூட்டணியாச்சி என்ற கூட்டு கும்மி தமிழகத்திற்கு வேண்டாம். எதிர் அணியில் மதிமுகவைத் தவிர எதிர்கட்சியாக இருந்து செயல்பட கட்சியில்லை. அதிமுக ஆட்சியில் இருந்த போதே சட்ட மன்றத்தில் அதிகம் பேசியது அம்மாதான், இப்போது சட்ட மன்றம் வருவாரா?. சரி... இத் தேர்தலில் திமுக கூட்டணி வெல்ல, எல்லாவற்றினும் மேலாக இருந்தது பாட்டாளிகளின் வியர்வை, ஏழை மக்கள் கண்ணீர் துடைக்கும் திமுக தேர்தல் அறிக்கை. வைகோவாலும், சரத்குமார் மற்றும் பல நடிகர்களாலும் மட்டுமல்ல., இதெல்லாம் சாத்தியமா? என கேட்டு, கேட்டு எழுதிய திமுக ஆட்சியில் அமர்ந்துவிடுமோ என அதிமுகவை விட அதிகம் பயந்த சில பத்திரிக்கைகளாலும், இவ்வளவு தூரம் மக்களை சென்றடைந்தது. ஒரு கூட்டணி கட்சியைப் போல் நின்று ஒட்டு வாங்கிக் கொடுத்தது திமுக தேர்தல் அறிக்கை.
அதிமுகவிற்கு இருந்த பிரச்சார வேகம், ஊடக ஒத்துழைப்பு(இதழ்கள்), பண பலம் இருந்திருந்தால் திமுக கூட்டணி இன்னும் அதிக இடங்களை கைப்பற்றி இருக்கலாம்தான். எங்காவது ஒரு வேட்பாளரை 'நம்பி' நிறுத்துவார்களா அதிமுகவில்?., அவர்கள் நம்புவதெல்லாம் சின்னம், பணம், பிரச்சாரம். அதனால்தான் எந்த ஒரு புதியமுகமும் வெல்லுகிறது அதிமுகவில். ஆனாலும் இந்தத் தேர்தலில் அம்மா பழைய முகங்கள் அத்தனையையும் மீண்டும் அழைத்துவிட்டார் பிரச்சாரத்திற்கு (செங்கோட்டையன், பொன்னுசாமி இன்னும் பலர்). ஆனால் இத்தேர்தலில் ஆட்சியில் ஊழலே இல்லை, ஊழலை முன்னிருத்தாத தேர்தல் இதுவென மனசாட்சியை அடகு வைத்து எழுதுகின்றன பத்திரிக்கைகள். மிடாஸ் பணம்தான தண்ணியா ஓடுச்சு...தேர்தல் நேரத்தில்?. ஐந்தாண்டுகள் ஊழலே இல்லாத நல்லாட்சின்னு எழுதுகிற பத்திரிக்கைகள், பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்ட சமயத்தில் எப்படி எழுதியிருக்கும் என எடுத்துப் பார்க்க முடியவில்லை. தோல்வியில் பாடம் கற்கும் (கற்றது போல் நடிக்கும்) முதல் ஆள் ஜெயலலிதா என்பதில் யாருக்கும் எவ்வித ஐயமும் இருக்காது. அவரது மன மாற்றங்களை மக்களுக்கு உணர வைப்பதும், அதை அதிமுகவிற்கான அலையாக்கவும் நன்கு தெரிந்தவர். அவரைப் பார்த்து இவ்வளவு ஆடம்பரமா? என்றன, வெகு இதழ்கள் ஒரு காலத்தில்., அடுத்த வாய்ப்பு வந்த போது எளிமையின் மறு உருவாய் நின்று பதவி ஏற்று விட்டு., மறுபக்கம் பத்திரிக்கையாளர்களுக்கு 'அம்மா என்றால் அன்பு' எனக் காட்டி மெய் மறக்கச் செய்தார். ஆனாலும் விடாமல் இன்றும் சாதகமாகத்தான் வாலை ஆட்டுகின்றன வெகு சனப் பத்திரிக்கைகள். கோவையை நினைத்து குமுறிக் கொண்டிருந்த சிறுபான்மை மக்களிடம் நம்பிக்கையூட்டி நாடாளுமன்றத் தேர்தலில் கைகோர்த்து, சட்ட மன்ற தேர்தலில் பாஜகவுடன் உறவு வைத்து விசுவாசம் காட்டினார். இப்போதும்தான் 'பரம்பரை பகையை' நினைவு கொண்டு, நியாபகப்படுத்தி அழைத்து பார்த்தார் ஆனால் அவர்களுக்கு வந்து சேர நேரம் அமையவில்லை. அதற்குள் வந்துவிட்டது தேர்தல். ஒன்று இவ்வோரம் அல்லது மறு ஓரம் 'மத்தி' என்ற ஒன்றை என்றுமே கணக்கில் கொள்ளாத அரசியல்வாதி. ஒருவரைப் பிடித்தால் பதவி, இல்லையென்றால் வழக்கு. எந்த அரசியல்வாதியும் செய்யாத எத்தனையோ அதிரடிகள். 2001 தேர்தலின் போது அரசு அதிகாரிகளின் மதிரியாதையை உயர்த்துவோம் என கூறி, ஆட்சிக்கு வந்ததும் ஒன்றல்ல, இரண்டல்ல 1,70,000 அரசு ஊழியர்களின் மரியாதையை, நள்ளிரவில் அவர்கள் வீடு புகுந்து, அதே அரசு ஊழிய இனமான காவலர்களை வைத்து உணர்ந்தினார். வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் நிலை அறவே இல்லையென தேர்தல் நேரத்தில் கூறிவிட்டு., ஒருநேரம் உணவருந்திக் கொண்டிருந்த சாலைப் பணியாளர்களின் தலையில் கல்லைப்போட்டு வளமை செய்தார். நள்ளிரவு கைதுகள், ஒன்று மட்டுமல்ல!! தான் ஊழல் செய்து உள்ளிருந்தால், பகையுணர்ச்சியில் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து தலைகளின் மீது வழக்கு, கைது. சாமன்யர்கள் மட்டும் என்ன கஞ்சா...கைது, என்கவுண்டர் இப்படி எத்தனையோ. ஆனால் இவர் ஆட்சியை தமிழகத்தின் பொற்காலம் போல் வர்ணித்தன பொது இதழ்கள். 2004 நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் பயம் கண்டு, பறித்ததை மீண்டும் துக்கி எறிந்தார் சலுகை என்ற பெயரில் அதை பெரிதாக விளம்பரப்படுத்தின பத்திரிக்கைகள். மத்திய அரசின் நலத்திட்டமெல்லாம் தான் கொண்டு வந்ததாக விளம்பரப்படுத்தினாலும் (விளம்பரப் படுத்த முடியாத திட்டங்களுக்கு முட்டுக்கட்டை அல்லது அத்திட்டமே சரியில்லை என மெத்தனம் காட்டுவது), சட்ட மன்றத்தில் அவரே தமிழகம் முதல் மாநிலமாகிவிட்டதென அறிவித்தாலும் கேட்க ஆளில்லை. ஆட்சியும், ஏவி விட காவல்துறையும் கையிலிருக்கிறதென்ற அசட்டுத் துணிச்சலில் அவர் செய்தது அனைத்தையும் 'தைரிய லட்சுமியாய்' காட்டிக் கொண்டாடின, எதிர்க் கட்சி போல் இருக்க வேண்டிய பத்திரிக்கைகள். ஊடக மாற்றமே உண்மையான சமூக மாற்றத்திற்கு வழி.
ஆளுங்கட்சிகளின் அடுத்த தேர்தல் பிரச்சாரம் அவர்களது நலத்திட்டங்களாகத் தான் இருக்க வேண்டும். நாடாளு மன்றத் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகள் முட்டுக்கட்டை இல்லாத தொலைதொடர்பு, இரவில்வே போன்ற துறைகளில் நிறைய செயல்படுத்தப் பட்டு இருக்கின்றன. இரண்டாண்டுகள் மத்திய அரசுடன் தோழமை போக்குடைய மாநில அரசு இல்லை. இப்போதேனும் தமிழக மக்களின் நலனை முதன்மையாக எடுத்துக் கொண்ட அரசாக திமுக அரசிருக்க வேண்டும். தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட எளிய மக்களுக்கான அத்தனை வாக்குறுதிகளும் முதலில் நிறைவேற்றப் பட வேண்டும். அனைத்து நல வாரியங்களிலும் கட்சிக்கு அப்பாற்பட்டவர்கள் அதிகம் இருக்கவேண்டும். அரசின் சாதனைகளை எப்படி வீர பாண்டி ஆறுமுகம் தேர்தல் அறிக்கையை இளைஞர்கள் குழு ஏற்படுத்தி வீடுவீடாக விளக்கச் செய்தாரோ., அதே போல் நலத்திட்டங்களை இளைஞர் குழுக்கள் ஏற்படுத்தி விளக்கச்செய்து அதன் பயன்பாடறிய வேண்டும் (டாஸ்மார்க் ஊழியர்களை இதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்). திமுக ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட மகளிர் குழுக்களுக்களால் அதிகம் பயன் அடைந்தது அதிமுக. மகளிர் குழுக்கள் தொடர்ந்து நடத்தப் பட வேண்டும். ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் குழு அமைத்து அவர்கள் பதவியில் இருந்த போது என்னன்ன திட்டங்கள் அந்தந்த மாவட்டங்களில் கிடப்பில் போடப்பட்டனவோ அதை மக்களுக்கு நலம் பயப்பதாயின் மீண்டும் கொண்டுவர ஆவன செய்யவேண்டும். மக்களுடன் இணைந்து பயணம் செய்யும் அரசாக இது இருக்கவேண்டும். ஈழத்தமிழர்கள் அமைதி நிறைந்த நல் வாழ்விற்கு வழிகாண முயற்சி எடுக்கப்படும் என அறிக்கையில் சொல்லியிருப்பது உண்மையில் நடக்கவேண்டும். தேர்தல் அறிக்கையில் சொல்லியிருப்பது அனைத்தும் செயலில் இருந்தாலே போதும் தமிழகம் உயரும்.
கடைசியாக, நக்கீரன் இணையதளத்தில் கூட்டணி கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு தருவதாகவும், மே 13 ந் தேதி கலைஞர் தலைமையில் ஆட்சி அமையப் பொகதாகவும் கூறுகிறது. அமைச்சர்கள் பட்டியலையும் அறிவித்து இருக்கிறது.
கலைஞர் - பொது நிர்வாகம், இந்திய ஆட்சி, காவல் மற்றும் ஏனைய அனைத்து இந்தியப் பணிகள். உள்துறை மற்றும் தொழிற்துறை.
பேராசிரியர் - நிதி, திட்டமிடல்
ஆற்காடு வீராச்சாமி - மின்சாரம், சிறுதொழில் துறை
முக.ஸ்டாலின் - உள்ளாட்சித்துறை (அப்ப கோசி?)
கோசி.மணி - கூட்டுறவுதுறை
வீரபாண்டி ஆறுமுகம் - வேளாண்மைத் துறை
துறைமுருகன் - பொதுப் பணித்துறை
பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் - அறநிலையத்துறை :))
பொன்முடி - உயர் கல்வித்துறை
கே.என். நேரு - போக்குவரத்துதுறை (ஆஹா.. :)))
எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் - பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நலத்துறை.
எஸ்.சுரேஷ்ராஜன் - சுற்றுலாத்துறை
பரிதி இளம்வழுதி - செய்தி மக்கள் தொடர்பு துறை
வேலு - உணவுத் துறை
சுப.தங்கவேலன் - வீட்டு வசதித் துறை
கே.கே.எஸ்.எஸ்.ஆர் - சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை :)
த.மோ.அன்பரசன் - தொழிலாளர் நலத்துறை
தங்கம் தென்னரசு - பள்ளி, கல்வித்துறை
உபயத்துல்லா - வணிகவரித் துறை
மைதீன்கான் - சுற்றுச் சூழல்
எஸ்.செல்வராஜ் - வனத்துறை
வெள்ளக் கோயில் சாமிநாதன் - நெடுஞ்சாலைத் துறை
டாக்டர். பூங்கோதை - மகளிர் மற்றும் சமூக நலத்துறை
கீதாஜீவன் - கால்நடைத்துறை
தமிழரசி - ஆதி திராவிடர் நலத்துறை.
கே.பி.பி.சாமி - மீன் வளம்
மதிவாணன் - பால்வளம்
கே.ராமச்சந்திரன் - கைத்தறி

இப் பட்டியலில் பெரிய கருப்பணும் அவர்களும் , என்.கே.கே.பி ராஜா அவர்களும் உள்ளனர் துறைகள் தெரியவில்லை. அனைவருக்கும் வாழ்த்துக்கள். நன்றி நக்கீரனுக்கு.

2 comments:

குழலி / Kuzhali said...

//அனைத்து தோழமை கட்சிகளுக்களும் நிபந்தனையற்ற ஆதரவளித்து., ஒரு கட்சி உட்கார வேண்டும் என்பதே என் ஆவல்
//
திமுகவுடன் கூட்டணி ஆட்சி என்பது நிச்சயம் என்னை பொறுத்தவரை ஆதரிக்க தகுந்தது அல்ல, திமுக அரசாங்கம் சுய கட்டுப்பாடு உள்ள அரசாங்கம், எந்த பிரச்சினையையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என செயல்படமாட்டார்கள் எனவே அவர்களுக்கு தனிப்பெரும்பான்மை கிடைத்திருக்க வேண்டும், ஆனால் அதிமுக ஆட்சியிருந்தால் அது கூட்டணி ஆட்சியாக இருந்திருக்க வேண்டும், சுயகட்டுப்பாடு இல்லாமல் பிரச்சினைகளை அனுகும் ஜெயலலிதாவின் எத்தேச்சாதிகார போக்கை கூட்டணிகளின் தயவில் இருக்கும் ஜெயலலிதா ஆட்சிக்கு வேகத்தடையாக இருந்திருக்கும், அடுத்த 5 ஆண்டுகளுக்குள் கூட்டணி மாற்றம் ஆட்சி மாற்ற கூத்துகள் நடைபெற வாய்ப்பில்லை, ஏனெனில் திமுக ஆட்சிக்கு மொத்தம் 21 சட்டமன்ற உறுப்பினர்களே கூடுதலாக தேவை ஆனால் அதிமுகவிற்கு 56 உறுப்பினர்கள் தேவை, காங்கிரஸ்,பாமக,கம்யூனிஸ்ட் என மொத்தமாக அந்த பக்கம் சாய்ந்தால் தான் உண்டு அது அவ்வளவு எளிதாக நடைபெறும் என நினைக்கவில்லை....

மக்கள் யாரையும் முழுதாக நம்பத் தயாராக இல்லை என்பதே தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.

குழலி / Kuzhali said...

http://tamilkudumbam.blogspot.com/2006/05/blog-post_11.html

//அனைத்து தோழமை கட்சிகளுக்களும் நிபந்தனையற்ற ஆதரவளித்து., ஒரு கட்சி உட்கார வேண்டும் என்பதே என் ஆவல் (நிறைய பேருக்கு இவ்வரி வருத்தம் தரும் :))).,
//
திமுகவுடன் கூட்டணி ஆட்சி என்பது நிச்சயம் என்னை பொறுத்தவரை ஆதரிக்க தகுந்தது அல்ல, திமுக அரசாங்கம் சுய கட்டுப்பாடு உள்ள அரசாங்கம், எந்த பிரச்சினையையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என செயல்படமாட்டார்கள் எனவே அவர்களுக்கு தனிப்பெரும்பான்மை கிடைத்திருக்க வேண்டும், ஆனால் அதிமுக ஆட்சியிருந்தால் அது கூட்டணி ஆட்சியாக இருந்திருக்க வேண்டும், சுயகட்டுப்பாடு இல்லாமல் பிரச்சினைகளை அனுகும் ஜெயலலிதாவின் எத்தேச்சாதிகார போக்கை கூட்டணிகளின் தயவில் இருக்கும் ஜெயலலிதா ஆட்சிக்கு வேகத்தடையாக இருந்திருக்கும், அடுத்த 5 ஆண்டுகளுக்குள் கூட்டணி மாற்றம் ஆட்சி மாற்ற கூத்துகள் நடைபெற வாய்ப்பில்லை, ஏனெனில் திமுக ஆட்சிக்கு மொத்தம் 21 சட்டமன்ற உறுப்பினர்களே கூடுதலாக தேவை ஆனால் அதிமுகவிற்கு 56 உறுப்பினர்கள் தேவை, காங்கிரஸ்,பாமக,கம்யூனிஸ்ட் என மொத்தமாக அந்த பக்கம் சாய்ந்தால் தான் உண்டு அது அவ்வளவு எளிதாக நடைபெறும் என நினைக்கவில்லை....

மக்கள் யாரையும் முழுதாக நம்பத் தயாராக இல்லை என்பதே தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.