Wednesday, May 03, 2006

தேர்தல் அலசல் - 2006 - திண்டுக்கல்


ஓட்டா? பூட்டா?

திண்டுக்கல் : மொத்தம் 7 தொகுதிகள்.

1.ஆத்தூர் 2. வேடசந்தூர் 3. பழனி 4. திண்டுக்கல் 5. ஒட்டஞ்சத்திரம் 6. நிலக்கோட்டை 7.நத்தம்.

1.ஆத்தூர் :
ஐ.பெரியசாமி (திமுக) - (போட்டி கடுமையெனினும் கூட்டணி கட்சிகளின் பலம் +)
திண்டுக்கல் சீனிவாசன்(அதிமுக)

ஆத்தூர் ஐ.பி 3 முறை நின்று 2 முறை வென்ற தொகுதி. தொகுதியில்நடந்தாலும் ஐ.பி இல்லாமல் நடக்கது. அவர் மகன் செந்தில் குமார் மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலாளர். பசங்க பூராம் திமுகவிற்காக பம்பரமா சுத்துறங்களாம். பக்கத்துல மொகத்துல சுணக்கத்தோடு அடுத்த கட்சியை சேர்ந்த யார் நின்னாலும், பேசி "வாங்க! நாங்க இருக்கம்ல"ன்னு அவங்கள எதுவும் சொல்லவிடாம, கூட்டிட்டு வந்து திமுகவில் ஐக்கியப்படுத்துகிறது இந்த வாரிசு. இப்படிப் பேசி பேசியே செட்டியபட்டி ஐய்யம்பாளையம் அதிமுக, மதிமுக முக்கிய நிர்வாகிகள் பலரை திமுகவில் இணைய வைத்திருக்கிறது திண்டுக்கல் திமுகவின் வருங்கலாம். கலைஞர் ஆட்சியில் இருந்தபோது மக்களுக்கு இலவசமாக கொடுத்த காஸ் சிலிண்டரைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தார்கள் இவ்வாட்சியில். அதை எடுத்துக் கொண்டு போன அந்த அதிகாரிகளையே மீண்டும் கொண்டு வந்து தர வைப்பேன்னு இன்னொரு பக்கம் ஐ.பெரியசாமியும் கலக்கிகொண்டிருக்கிறார். ஆறு மாதத்திற்கு முன்பிருந்தே தொகுதி நமக்குத்தான் என்று தேர்தல் வேலை செய்ய ஆரம்பித்தவர் ஐ.பி. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணக்கமாய் வேலைசெய்கின்றன. இவர் வென்றால் மாவட்டத்திற்கு ஒரு அமைச்சர் மீண்டும் கிடைப்பார் என நம்பிக்கையாய் சொல்லிக் கொண்டிருக்கிறது உடன்பிறப்பு. அந்தப்பக்கம் மட்டுமென்ன? அமைச்சராகப் போகும் அண்ணனை ஆதரியுங்கள் என்று கூறித்தான் திண்டுக்கல்.சீனிவாசனுக்கு (இவர் அதிமுக மாநில பொருளாலர்) ஓட்டே கேட்கிறார்களாம் ரரக்கள். தொகுதி பக்கமே வராமல் இருந்த எம்.பி, இப்போது வந்து பிக்கப்பண்ணி ஸ்டடியா போய்க் கொண்டிருக்கிறது பிரச்சாரம். இவருக்கும் இவர் மகன்களில் ஒரு மகன் காரோட்ட, இன்னொரு மகன் ராஜ்மோகந்தான் உறுதுணையாய் இருக்கிறார். அவரது அண்ணன் மகன்கள்தான் தேர்தல் வரவு செலவுகளை கவனிக்கிறார்கள். வாரிசு அரசியல்னு திமுகவை கிண்டல் பண்ணி பிரச்சாரமும் பண்ணிக் கொண்டிருக்கிறார். முன்னால் திண்டுக்கல் எம்.எல்.ஏ பிரேம்குமார் இவருக்காக ஓடி, ஓடி உழைக்கிறார். ஆனால் சிட்டிங் நடராஜன் மேல் சனங்க ரொம்ம்பப் பாசம் வச்சிறுக்கிறது இவரைப் பாதிக்கிறது, இருந்தாலும் 'எதுக்கு அவர பேசிறிய, அவர் செய்து தராமல் விட்டதை செய்யத்தான் நான் வந்திருக்கன்ல?'ன்னு இவர் பேசுவதை கேட்டு 'ம்க்கும்'ன்னு கழுத்தை திருப்பிக் கொள்கிறது பொது சனம். இவ்விரு மலைகளுக்கிடையே சாதி பலத்தையும், ரசிகர்கள் பலத்தையும் நம்பி மெல்லிய சல சலப்புடன் ஒடிக்கொண்டிருக்கிறது தேமுதிகவின் ராகேஷ் பெருமாள் என்ற ஆறு. இங்கு வெல்லப்போவது ராஜ்குமரா?, செந்திலா? பின்ன ஐ.பெரியசாமியா, சீனிவாசனான்னா கேட்க முடியும். வென்றால் அவர்கள் சென்னையில் உள்ளுரில் பட்டாசு வெடிக்கப்போவது பசங்கதானே?. கூட்டணிபலம், மக்கள் செல்வாக்கு எல்லாம் வைத்து பார்த்தால் வெல்லப் போவது ஐ.பி.

2. வேடசந்தூர்:
எம். தண்டபாணி(கங்கிரஸ்) - (தொகுதியில் செல்வாக்கு, கூட்டணி பலம் +)
பழனிச்சாமி(அதிமுக)
அதிமுகவின் பலமான தொகுதி. சிட்டிங் ஆண்டிவேலுக்கு இல்லை. அதிமுக பழனிச்சாமிக்கு வழங்கப்பட்டிருக்கிறது தொகுதி. இங்கு தொகுதி செல்வாக்குள்ளவர் முன்னால் துணை சபாநாயகர் காந்திவேல்ராஜன் காங்கிரஸ். இவர் பிரச்சாரத்தில் இல்லை. காங்கிரஸ் சார்பில் தண்டபாணி போட்டியிடுகிறார். கூட்டணி துணையோடு செறிவாக உள்ளது காங்கிரஸ். வேடசந்தூர் தண்டபாணிக்கு.

3. பழனி(தனி) :
எம்.அன்பழகன் (திமுக) -(அதிமுக குழப்பம், கூட்டணி பலம்++)
எஸ்.பிரேமா(அதிமுக)
இத்தொகுதியில் முன்பு வேட்பாளாராக அறிவிக்கப்பட்டவர் தமிழரசி. சிட்டிங் சின்னச்சாமி மீது மக்கள் வைத்திருக்கும் அபிமானத்தின் பலன் எல்லாம் வீடு, வீடாக ஓட்டுக்கேட்டு போன தமிழரசியைத் தாக்கினாலும் பல கிரமங்களில் புகுந்து புறப்பட்ட இவரை அதிரடியாக நீக்கி, பால சமுத்திரம் கவுன்சிலர் பிரேமாவை ஓர் நாளில் தயார் படுத்தி வேட்புமனு தாக்கல் செய்ய வைத்திருக்கிறது அதிமுக. சிட்டிங் சின்னச்சாமி கோஷ்டி சிரிப்புடனும், தமிழரசியை தன்னால் மாற்ற முடிந்தது என்று மாசெ செல்லச்சாமி பெருமையுடனும், திடீரென வந்த வாய்ப்பே என பிரேமா திகைப்பிலும் சுற்றி வர, 12 லட்சத்தை தொலைத்து, மாற்றி விட்ட அவமானத்துடன் தமிழரசி என பழனி அதிமுக பல்வேறு உணர்வு கொந்தளிப்பில் இருக்கிறது. மாசெ கோஷ்டி பிரேமலாதவுக்காக சுறுசுறுப்பாக வேலை செய்கிறது. ஆனால் பழைய எம்.பி. குமாரசாமி க்ரூப் அப்செட்டாம். அதிமுகவின் இந்நிலையும், கம்யுனிச கட்சிகளின் செல்வாக்குள்ள இடம் (நில மீட்புப் போராட்டம் பழனி மக்களின் மனதில் என்றும் இருக்கும்) என்பதாலும், எல்.ஐ.சி முகவர்களின் தனிப்பட்ட பிரச்சாரத்தாலும் (வேட்பாளரும் எல்.ஐ.சி ஏஜெண்ட்தான்), கூட்டணி மக்களின் நல் உழைப்பாலும் சிரிப்பு முகம் காட்டுகிறது உதிக்கும் கதிரவன். இதற்கிடையில் நான் ஆயக்குடிகாரன் என தேமுதிக சுந்தரும் குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறார். அன்பழகனுக்கு பழனி.

4. திண்டுக்கல்:
பால பாரதி (சிபிஐ (எம்)) - (கட்சிப் பலம், கூட்டணி பலம் ++)
என்.செல்வராகவன்(மதிமுக)
பால பாரதி
திண்டுக்கல் சிபிஐ(எம்)ன் பலமான தொகுதிகளில் ஒன்று. சிட்டிங் எ.எல்.ஏ.நாகலட்சுமி சிபிஎம் ய்ச் சேர்ந்தவர்தான். பல்வேறு நலப்பணிகள் செய்து தொகுதியில் மிகுந்த செல்வாக்குப் பெற்றுள்ளவர் திமுக சேர்மன் பஷீர் அகமது. இவரது செல்வாக்கும், பிரச்சாரமும் பாலபாரதிக்கு வெகுவாக பயன்படும். மதிமுக சார்பில் பாலபாரதியை எதிர்த்து நிற்பவர் மதிமுக செல்வராகவன். திண்டுக்கல் மாசெ மருதராஜ் சகிதம் வலம் வந்து ஓட்டுக்கள் கேட்டாலும் பாதி அதிமுகவினர் நத்தத்திற்கும், ஆத்தூருக்கும் சென்று அமைச்சர் விஸ்வநாதனுக்கும், திண்டுக்கல். சீனிவாசனுக்கும் வேலை செய்வதால் கூட்டணி பலம் கொஞ்சம் மந்தம்தான். இங்குதான் இப்படியென்றால் பாலபாரதிக்கும் பாமக ஒத்துழைப்பு சரியாகயில்லை. ஆனாலும் சிபிஎம்ன் பலமும், திமுகவின் பலமும் சேர்ந்து தெம்பாகவே இருக்கிறாராம் பாலபாரதி.

5. ஒட்டஞ்சத்திரம் :
ஆர. சக்கரபாணி(திமுக) - சிட்டிங் - (தொகுதியில் செல்வாக்கு, கூட்டணி பலம் +)
கே.பி.நல்லசாமி (அதிமுக)

திமுக ஆர.சக்கரபாணி இத்தொகுதியில் இரு முறை நின்று, 2 முறையும் வென்று இப்போதும் நிற்கிறார். கடந்தமுறை திண்டுக்கல்லில் திமுகவிற்கு கிடைத்த ஒரே இடம் இந்த ஒட்டன்சத்திரம்தான். அதிமுக சார்பில் கே.பி.நல்ல சாமி நிற்கிறார். தேமுதிகவிற்காக பாலசுப்ரமணியம், பாஜக கருப்பசாமி ஆகியோர் நிற்கின்றனர். தொகுதி செல்வாக்கு, கூட்டணி கட்சிகள் செல்வாக்கு இரண்டும் மீண்டும் சக்கரபாணியை உட்காரவைக்கும்.

6. நிலக்கோட்டை(தனி):
கே.செந்தில்வேல் (காங்கிரஸ்)
எஸ்.தேன்மொழி (அதிமுக) - (தொகுதியில் செல்வாக்கு, கூட்டணி பலம் +)
நிலக்கோட்டை காங்கிரஸ் ஏ. எஸ். பொன்னம்மாள் தொடர்ந்து 3 முறை வென்ற தொகுதி, கடந்த தேர்தலில் சிட்டிங் ஜி.அன்பழகன் வென்றிருக்கிறார். காங்கிரஸின் செல்வாக்கும்தான் இதற்கு காரணம். எனவே இத் தொகுதியை காங்கிரஸ்க்கு கொடுத்திருக்கின்றன உபிக்கள். இவரை பரிந்துறை செய்து சீட் வாங்கி கொடுத்தவர் திண்டுக்கல் எம்.பி. சித்தன். அவர் சீட் வாங்கிக் கொடுத்துவிட்டு திண்டுகல்லுக்குப் போய்விட, நிலக்கோட்டை கதர்சட்டைகள் காதில் புகை விட்டுக் கொண்டு வேலை செய்ய மறுக்கின்றனராம். சேர்மன் நாகரஜனின் செல்வாக்கும், பணபலமும் உள்ள அதிமுக வேட்பாளர் தேன்மொழி சுறு, சுறுவென பிரச்சாரம் செய்கிறார். தேமுதிகவில் நிற்கும் நித்யா தொகுதி முழுவதும் மிக பணிவாக ஒட்டுக்கேட்டு கொண்டிருக்கிறார். திமுக செல்வாக்கில்லாத தொகுதி இது. எனவே இத் தொகுதி அதிமுகவிற்கு.

7.நத்தம்:
எம்.எ. ஆண்டி அம்பலம் (திமுக) - (தொகுதியில் செல்வாக்கு, கூட்டணி பலம் +)
இரா.விஸ்வநாதன் (அதிமுக) - அமைச்சர் - போக்குவரத்து துறை
விஸ்வநாதன்
காங்கிரஸ்க்கு பலமான தொகுதி. இத் தொகுதியை திமுகாவிற்கு கொடுத்துவிட்டு, நிலக்கோட்டையிலும், வேடசந்தூரிலும் நிற்கிறது. இத் தொகுதியில் காங்கிரஸில் செல்வாக்குள்ள ஆண்டிஅம்பலம் கடந்த 7 களில் 6 தேர்தல்களில் போட்டியிட்டு, அத்தனை தேர்தல்களிலும் வென்றுள்ளார். கடந்த தேர்தலில் இத்தொகுதி கூட்டணிகட்சியான அதிமுகவிற்கு சென்றதால் வென்றார் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன். அவரே மீண்டும் போட்டியிடுகிறார் அதிமுக சார்பில். ஆண்டி அம்பலத்தின் மகன் எம்.எ ஆண்டி அம்பலம் திமுக சார்பில் போட்டியிடுகிறார். சுற்றுப் பட்டில் உள்ள அத்தனை ரரக்களும் இத்தொகுதியில் தான் அமைச்சருக்காக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவரும் ஆஸ்பத்திரி கட்டிகுடுத்தேன், பாலம் போட்டுக் குடுத்தேன், கல்லூரி வச்சேன், பாக்ட்ரி வைச்சேன், நீர் தேக்கம் அமைச்சேன், போக்குவரத்து வசதி பண்ணுனேன்னு தன் சாதனைகளை சொல்லி ஓட்டுக்கேட்டு கொண்டிருகிறாராம் (இதெல்லாம் எப்ப?ன்னு ஜனங்க தனியா யோசிக்கிறதா கேள்விப்பட்டேன்). ஏன்னா இல்லாத இதையெல்லாம் வரும்காலத்தில் வென்றால் நான் செய்வேன் என்றுதான் ஆண்டிஅம்பலம் ஓட்டுக்கேட்கிறார்., காந்தன் மலை மலையூர், பெரிய மலையூர், வலசை, அணவாய்ப்பட்டி ஆகிய மலை கிரமங்களுக்கு பஸ் வசதி, சுகாதார வசதி செய்துதரப் படும், அஞ்சுகிழிப் பட்டி சங்லியான் கோவில்தேக்கம், நொச்சியோடைப்பட்டி நீர்த்தேக்கம், கோணப்பட்டி அய்யனார் அணைக்கட்டு செந்துறை பஞ்சம் தாங்கி அணைக்கட்டு போன்றவை செய்யப்படும், திண்டுக்கல்லில் இருந்து முளையூருக்கும், இடையபட்டிக்கும் பஸ் வசதி செய்து தரப்படும் என்று கூறி வாக்கு கேட்கிறார் ஆண்டி அம்பலம். இதையெல்லாம் செய்துவிட்டேன் என வாக்கு கேட்கிறார் விஸ்வநாதன். இவர்களுக்கிடையில் தேமுதிக சார்பில் கணேசனும் களத்தில் இருக்கிறார். பணபலம் விஸ்வநாதனுக்கு., செல்வாக்கு ஆண்டி அம்பலத்திற்கு. தொகுதியும் ஆண்டி ஆம்பலத்திற்கே கிடைக்கலாம்.
மொத்தம் 7 தொகுதிகள். திமுக - 4, காங்கிரஸ் - 2, சிபி ஐ(எம்) - 1
அதிமுக - 6 மதிமுக -1 என நிற்கும் திண்டுக்கல்லில் முதன் முதலில் எம்ஜியார் அதிமுக சார்பாக முதன்முதலில் போட்டியிட்டு வென்றார். ஒரு காலத்தில் இது அதிமுகவின் இடமாக இருந்தது. இங்கு சாதி ஓட்டுக்கள் சிறிதளவே பயன்கொடுக்கும் ஏனெனில் பலதரப்பட்ட சமூக மக்கள் உள்ள மாவட்டம். விவசாயம், நூற்பாலை, தோல் பதனிடுதல் போன்ற தொழில்கள் செய்யப்படுகின்றன. எனவே விவசாய சலுகைகள், நெசவாளர் மற்றும் சிறு தொழில் புரிவோருக்கு வசதிகள் செய்யும் கட்சி வெல்லும்.

2001 ல் அதிமுக 5 தொகுதியிலும் அதன் கூட்டணி கட்சி சிபிஐ (எம்) - 1 என வென்றது. இம்முறை திமுக கூட்டணிக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும்.
திமுக -4 காங்கிரஸ் - 1 சிபிஐ -1
அதிமுக - 1
வெல்லலாம்
வெல்வதற்கு வாய்ப்புள்ளவர்கள் :
எம்.எ. ஆண்டி அம்பலம் (திமுக)
ஆர. சக்கரபாணி(திமுக)
எம்.அன்பழகன் (திமுக)
ஐ.பெரியசாமி (திமுக)
எம். தண்டபாணி(கங்கிரஸ்)
பால பாரதி (சிபிஐ (எம்))
தேன்மொழி(அதிமுக)
திண்டுக்கல் நண்பர்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.
கன்னியாகுமரி மாவட்ட கணிப்பு.
நெல்லை நிலவரம்.
தூத்துக்குடி மாவட்டம்
இராமநாதபுரம் மாவட்டம்
சிவகங்கை மாவட்டம்
விருதுநகர் மாவட்டம்
தேனி மாவட்டம்
நாகை மாவட்டம்
புதுகை மாவட்டம்

6 comments:

வரவனையான் said...

உங்கள் அலசல் உள்ளங்கை நெல்லியென்றால் அது மிகையில்லை.நல்ல பதிவு.

அப்டிப்போடு... said...

செந்தில் மிக்க நன்றி. நம்மூரு...!. இங்க காலசுலன்னா, அலசல் பதிவு எழுதற்துல அர்த்தமே இல்ல. யாருக்கு ஓட்டுப் போட்டிங்க ஐபிக்குத்தானே?.

வரவனையான் said...

ஆமாம் ! இ.பெ. செந்தில் என்னோட நெருங்கிய நண்பன்.மற்றபடி வழக்கம்போல் திமுக விற்குத்தான் ஓட்டு

ஞானவெட்டியான் said...

நானும் அங்கேதான் உள்ளேன். ஆக,அதுவும் நம்ம ஊரு தான்.

அப்டிப்போடு... said...

நன்றிங்க செந்தில்., இந்த நன்றி உங்கள் கடைசி வரிக்காக.


ஞானவெட்டியார்., அய்யா., முதல் முறை வந்திருக்கிறீர்கள். வருக. தெரியும் நீங்கள் அங்கிருப்பது. அவ்வூர்ப்பக்கம் உள்ள பரம்சிவம் என்பவரும் இணையத்தில் பல சாதனைகள் செய்வதாய்க் கேள்வி., உங்களுக்கு அவரைத் தெரியுமா?

அப்டிப்போடு... said...

செந்தில் மற்றுமொன்று., முன்னால் எம்.எல்.ஏ.பிரேம் குமார் என் அண்ணனின் நண்பர். தூரத்து சொந்தமும் கூட என நினைக்கிறேன்.