Sunday, April 30, 2006

தேர்தல் அலசல் - 2006 - தேனி


யாருக்கு தேனி?
தேனி: மொத்தம் 5 தொகுதிகள்.

1.போடி நாயக்கனூர் 2. பெரியகுளம் 3. தேனி 4.ஆண்டிபட்டி 5. கம்பம்

1.போடி நாயக்கனூர் :
எஸ்.லட்சுமனன் (திமுக) - (கூட்டணி பலம், விவசாய சலுகை அறிவிப்புகள் +)
ஆர்.பார்த்திபன் (அதிமுக)

அதிமுக சிட்டிங் இராமராஜ் தற்போது நிற்கும் பார்த்திபனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறார் அதிமுகவிற்கு இது பலமான தொகுதி. அவர்களது வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொண்டாலே போதும் ஆனால், திமுக வேட்பாளர் செட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர். அதிமுகவில் உள்ள செட்டியார்களே இவரை ஆதரிக்கிறார்கள். அருந்ததி சமுதாய மக்கள் இங்கு கணிசமாக உள்ளனர். அவர்கள் அதிமுகவிற்கு ஆதரவு தருவதாக உள்ளது. குரங்கனி - டாப்ஸ்டேசன் ரோடு, இலவம்பஞ்சு தொழிற்சாலை, 18ம்கால்வாய், பாதள சாக்கடைத் திட்டம் போன்றவற்றை நிறைவேற்றித் தருகிறோம் என வாக்கு கேட்கின்றன இரு கட்சிகளும். திமுக தேர்தல் அறிக்கை விவசாயிகளுக்கான சலுகைகள் பல அறிவித்து இருப்பதாலும், கூட்டணி பலத்தாலும் திமுகவிற்கு போடி கிடைக்கலாம்.


2. பெரியகுளம் :
எல்.மூக்கையா (திமுக)
ஓ. பன்னிர்செல்வம்(அதிமுக) - (அமைச்சர் பெதுப்பணித்துறை, நெடுஞ்சாலை...)-
(பணபலம், தொகுதியில் செல்வாக்கு +)

பெரியகுளத்தில் முன்னால் முதல்வர் (மாற்றாக குறைவான காலம் இருந்ததலும் இவர் முன்னால் முதல்வர்தானே?) இந்நாள் அமைச்சர் பன்னீர்செல்வம் போட்டியிடும் தொகுதி. அதிமுக மிக சுறுசுறுப்பாக களத்தில் இருக்கிறது. கிராமங்கள் வழக்கம் போல ரெட்டலைக்குத்தான் ஆதரவு தெரிவிக்கின்றன. தினமும் கூட்டங் கூட்டமாக வந்து அதிமுகாவில் இணைகிறார்களாம் சின்ன கட்சிகளில் உள்ளவர்கள். இத் தொகுதியில் பல சமூகங்கள் வாழ்ந்தாலும் சிறுபான்மை மக்களும், தலித் மக்களும்தான் வெற்றியை தீர்மானிப்பவர்கள். முஸ்லிம் ஓட்டுக்கள் மூக்கயையனுக்குத்தான். ஆதி மக்களிலிடையே செல்வாக்குள்ளவர் பரட்டையன் இவர் அதிமுகதான் ஆனால் இவர் தம்பி திமுக. நாடாளுமன்றத் தேர்தலின் போது முஸ்லிம்களுடன் முட்டிக் கொண்டது, அதிமுகவில் உள்ள பரட்டையனுடன் பகை கொண்டது, அத் தொகுதி மக்களின் தேவையான மாம்பழ தொழிற்சாலை அமைத்தல், அடுக்கம் வழியாக கொடைக்கானலில்லிருந்து பெரியகுளம் வரை சாலை (மலை மக்களுக்கு உதவும் வகையில்), வவ்வால் துறை அணை ஆகியவற்றைக் கிடப்பில் போட்டது போன்ற ஏகப்பட்ட பள்ளங்கள் இருந்தாலும், பணத்தைக் கொட்டி அப்பள்ளங்களை மூடிவிட்டு அதன்மேல் வெற்றிப் பயணம் செய்வார் பன்னிர்செல்வம்.

3. தேனி :
என்.டி.ஆர்.ராஜ்குமார்(காங்கிரஸ்) -(சொந்த பலமும், கூட்டணி பலமும்+) ஆர்.டி.கணேசன்(அதிமுக) - சிட்டிங்
சிட்டிங் எம்.எல்.ஏ கணேசனின் மீது தொகுதி மக்களுக்கு அதிருப்தி இருக்கிறது. இதைப்போக்க எம்.எல்.ஏ. கணேசனின் மனனவி, ஜெயலட்சுமி கிராமம், கிராமமாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார், நடிகர், நடிகைகளை கூட்டமாக கூட்டி வந்து நகர்களில் பிரச்சாரம் செய்கிறது தேனி மாவட்ட அதிமுக. தேனித் தொகுதியின் குடிநீர் தட்டுப்பாடு வெற்றி, தோல்வியை முடிவு செய்யும். தலித் மக்கள் பெரும்பான்மையாக உள்ள இத் தொகுதியில் புதிய தமிழகம் சின்னபாண்டி பகுஜன் சமாஜ் கட்சியில் போட்டியிடுகிற்றா. தலித் மக்கள் ஓட்டுக்களை இவர் பிரிப்பார். ஆனாலும் காங்கிரஸ் வேட்பாளரின் சொந்த பலமும் கூட்டணி பலமும் வெல்ல வைக்கும்.

4.ஆண்டிபட்டி:
ஜெ.ஜெயலலிதா (அதிமுக) - முதல் அமைச்சர் (நிறைய +++)
பா.சீமான் (திமுக)

முதல்வர் தொகுதி. அவரை எதிர்த்தி நிற்கும் இயக்குனர் சீமான் இராமநாதபுரத்தைச் சேர்ந்தவர். வெளியூர்காரார் இங்கு நிற்பது உடன்பிறப்புகளுக்கு வருத்தம்தான். ஆனால் போட்டி பெரிதே?. அதனால் சீமான் ஆளுங்கட்சி, காவல்துறை அனைத்தையும் சமாளித்து வாக்கு கேட்கிறார். பொன்முத்துராமலிங்கமும் (முன்னால் அமைச்சர்), மு.க.அழகரியும் தேர்தல் பிரச்சாரக் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலில் ஜெவுக்கு எதிராக தீவிர பிரச்சாரம் செய்தவர் அழகிரி எனவே ஆண்டிபட்டி அவரிடம் வழங்கப்பட்டு இருக்கிறது. கலைஞர், வாசன், தாயநிதி ஆகியோர் பிரச்சாரத்துடன் பொதுவுடமை கட்சிகளும் தெருமுனையில் மக்கள் பிரச்சனைகளை வைத்து கூட்டம் போட்டு பிரச்சாரம் செய்கின்றன. அந்தப் பக்கம்? கோடம்பாக்கமே திரண்டு வந்து பிரச்சாரம் செய்கிறது. ஜெயலலிதா ஜெயிப்பார்.

5. கம்பம்:
செல்வேந்திரன் (திமுக)-(காங்கிரஸ் பலம் +)
ராமகிருஷ்ணன் (மதிமுக)

காங்கிரஸ் ஓ.ஆர். ராமசந்திரன் 3 முறை வென்ற கம்பம் இப்போது திமுக வசம். கம்பம் மதிமுக வேட்பாளரை ஆதரித்து வைகோ, காங்கிரஸ் நெல்லைக்கண்ணன் மற்றும் சில நடிக நடிகைகள் விறு,விறு பிரச்சாரம் செய்தனர். அந்தப்பக்கமும் ஆர்.எம்.வீ, வெற்றி கொண்டான், நடிகர்கள் பிரச்சாரம் செய்தனர். அரசு ஊழியர்களின் ஓட்டுக்கள் திமுக பக்கம், டாஸ்மார்க் ஊழியர்கள் அதிமுக பக்கம். கம்பம் பள்ளத்தாக்கு விவாசயம் செழித்து நடக்குமிடம். விவசாயக் கடன் தள்ளுபடி நல்ல பலன் தரும் திமுகவிற்கு. இங்கு அதிக மகசூல் ஆகும் திராட்சை களுக்கு உரிய விலைகள் கிடைக்காது. ஒயின் தொழிற்சாலை அமைத்துத் தருகிறேன் எனக் கூறி வாக்கு கேட்கிறார் தேமுதிக சார்பில் நிற்கும் ஜெயநாத். கம்பம் செல்வேந்திரனுக்குத்தான் கம்பம்.
தேனி இயற்கை வளம் நிரம்பிய மாவட்டம். அநேக தெற்கத்திய மாவட்டங்கள் விவசாய பூமிதான் ஆனாலும் தேனி முழுக்க, முழுக்க ஒரு விவசாய மாவட்டம். பெரியகுளத்தில் மாம்பலம், தேனியில் கரும்பு, போடியில் ஏலக்காய், இலவம் பஞ்சு கம்பத்தில் திராட்சையென இயற்கை சிரிக்கும் மாவட்டம். ஆனால் இதைப் பயிர் செய்யும் விவசாயிகள் சிரிக்கிறார்களா?., அதற்குதான் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் போட்டி போட்டுக் கொண்டு விவசாயக் கடனை ரத்து செய்கின்றன. தேர்தல் அறிவிப்புக்கு முன்னும், பின்னும் சலுகைகள் அருவியாய் கொட்டிக்கொண்டிருக்கிறது. விவசாய சலுகைகள் அனைத்து மாவட்டங்களுக்கும் பொதுவனவைதான் என்றாலும் இம்மாவட்ட வெற்றியை கருத்தில் கொண்டே இரு பெரும் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும் உழவர்களைத் தாலாட்டுகின்றன. இத் தாலட்டுகள் மயங்கவைக்கலாம், ஓட்டுப் போடும் காலம் வரை உழவர்களை உறங்க வைக்கலாம். ஆனால் உழவர்களின் உண்மையான தேவை என்ன?. முல்லைப் பெரியாறு அணையில் 6 அடி நீரை அதிகம் தேக்க, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் கேரள அரசு கட்டுப்படவில்லை. எலியும், பூனையுமாக கடித்துக் கொண்டிருந்த காங்கிரஸூம் கம்யூனிச கட்சிகளும் ஒன்றாக கட்டிப்பிடித்துக் கொண்டு இத் தீர்ப்பை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள். 6 அடித் தண்ணீரால் கேரளாவிற்கு பாதிப்பில்லை இல்லை. ஆனால் தமிழகம் பயனடைந்துவிடக்கூடாதென பாய்கிறார்கள். இதற்கான முயற்சி ஆளுங்கட்சி எடுத்தது... ஆனால் அதன் 'ஜென்மப் பகைவர்களையும்' அரவணைத்துப் போராடி இருந்தால் இதற்கொரு முடிவு கிடைத்திருக்கும். மலையிலிருந்து பெரியகுளம் வந்து பொருட்களை விற்க மலைவாழ் மக்கள் படும் அவதி 35 மைல்கள் சுமையுடன் சுற்றி வரவேண்டும். இம்மாவட்டத்தின் ஒவ்வொரு தொகுதியிலும் இருக்கிறது இத்தகைய சாலைப் பிரச்சனைகள். அதை தீர்ப்பதாக கூறி ஆயிரம் சாலைத் திட்டங்களும் துவக்கப்பட்டது. எளிய மக்களை மனதில் கொண்டு எந்தக் கட்சி இயங்குகிறதிங்கு?. அரசு ஊழியர்களுக்காக போராட ஆயிரம் அமைப்புகள் உண்டு. வாழ்நாள் முழுதுவம், 'தான் தினமும் உழைத்தால் உணவு' என்றுள்ள மக்களை அரவணைக்க யார் இருக்கிறார்கள்?. தேனியில் கரும்பை விளைவித்து ஆலையில் (அதுவும் விவசாயிகள் செலவில்) கொட்டினாலும், அதற்கான காசுக்காய் காலமெல்லாம் காத்திருக்க வேண்டியுள்ளது. போடியில் இலவம்பஞ்சு தொழிற்சாலை இல்லை... இவ்வளவுகாலம் இதெல்லாம் இருந்த பிரச்சனைகள்தானே? அப்புறமென்ன தேர்ந்தெடுத்தால் நடக்கும் என்பது... சரி... அதிமுக சார்பில் ஜெயலலிதாவும், பன்னிர் செல்வமும் வெல்லும் வாய்ப்புள்ளது. முன்னால் அதிமுக எம்.பி கோபால் (எம்.எல்.ஏ வாகவும் இருந்திருக்கிறார்) திமுகவை ஆதரிக்கப் போகிறார். எனவே இப்பகுதியில் அதிகம் இருக்கும் ஒக்கலிக கவுட சமூக ஓட்டுகள் திமுகவிற்கு சாதகமாக அமையும்.
கடந்தமுறை இம்மாவட்டத்தில் உள்ள 5 இடங்களில் 4 களை அதிமுகவும், 1 இடத்தை கூட்டணி கட்சியான த.மா.கவும் களை அதிமுகவும், 1 இடத்தை கூட்டணி கட்சியான த.மா.கவும் கைப்பற்றின. இப்போது 3 இடங்கள் திமுக கூட்டணிக்கு உறுதியாக கிடைக்கலாம்.
திமுக - 2, காங்கிரஸ் - 1
அதிமுக - 2
வெல்வதற்கு வாய்ப்புள்ளவர்கள் :
செல்வேந்திரன் (திமுக)
எஸ்.லட்சுமனன் (திமுக)
என்.டி.ஆர்.ராஜ்குமார்(காங்கிரஸ்)
ஜெ.ஜெயலலிதா (அதிமுக)
ஓ. பன்னிர்செல்வம்(அதிமுக)
தேனி நண்பர்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.
கன்னியாகுமரி மாவட்ட கணிப்பு.
நெல்லை நிலவரம்.
தூத்துக்குடி மாவட்டம்
இராமநாதபுரம் மாவட்டம்
சிவகங்கை மாவட்டம்

No comments: