Thursday, April 27, 2006

தேர்தல் அலசல் - 2006 - இராமநாதபுரம்பூமியில் வரட்சி., ஆனால் மூளையில் எழுச்சி. இராமநாதபுரம் எக்கட்சிக்கு?

இராமநாதபுரம் :

1.திருவாடனை 2. பரமக்குடி 3.இராமநாதபுரம் 4.முதுகுளத்தூர் 5. கடலாடி.

1.திருவாடனை:
கே.ஆர். ராமசாமி(காங்கிரஸ்) (காங்கிரஸ் கட்சி பலம் +)
சி.ஆணிமுத்து (அதிமுக)

ஆணி அடிச்ச மாதிரி சொல்லலாம் திருவாடனை பலமான காங்கிரஸ் தொகுதி. கடந்த 4 முறைகள் இத் தொகுதியில் வென்ற காங்கிரஸ் சிட்டிங் எம்.எல்.ஏ கே.ஆர். ராமசாமி இம்முறையும் போட்டி இடுகிறார். ஆரவாரமில்லாமல் அமைதியாக நடக்கிறது தேர்தல் பிரச்சாரமும், பணிகளும் இங்கு. தமிழ்நாட்டிலேயே இந்த ஒரு இடத்தில்தான் வேட்பாளர்களுக்கு ஆரத்தி சுற்றாமல், பொட்டு வைக்காது மக்கள் வேட்பாளர்கள் வந்தால் அவர்கள் சொல்லுவதை கேட்டுவிட்டு வழியனுப்பி வைக்கின்றனர். ஆணிமுத்துவை விட ராமசாமிக்கு வாய்ப்பு அதிகம்.

2. பரமக்குடி(தனி):
கே.வி.ஆர்.ராம்பிரபு (காங்கிரஸ்) - சிட்டிங் -(காங்கிரஸ் கட்சி பலம் +)
எஸ்.சுந்தராஜன்(அதிமுக)

பழம்பெரும் காங்கிரஸ் தலைவர் கே.வி.ராக்கன் புதல்வர் கே.வி.ஆர். ராம்பிரபு மிண்டும் இத்தொகுதியில் போட்டியிடுகிறார். ஆதிதிராவிட மக்கள் அதிகம் வசிக்கும் தொகுதி இது. முக்குலத்தோர், யாதவர், செட்டியார் ஓட்டுக்களும் வெற்றியை முடிவு செய்யும். தொகுதி மக்களிடம் ராம்பிரபுவிற்கு உள்ள நல்ல பெயர், அவர் தொகுதிக்காற்றிய பணி, கூட்டணி பலம் அனைத்தும் கொண்டு காங்கிரஸ் வெல்லும் வாய்ப்புள்ள தொகுதி.

3.இராமநாதபுரம்:
ஹசன் அலி (காங்கிரஸ்) - (கூட்டணி, பண பலம் +)
கராத்தே பழனிச்சாமி(மதிமுக)

40 வருடங்களுக்குப் பிறகு இத்தொகுதியில் காங்கிரஸ் போட்டி இடுகிறது. அதிமுக தொழிலாளர் நலத்துரை அமைச்சர் அன்வர் ராஜாவுக்கு மறுக்கப்பட்டு மதிமுக பழனிச்சாமிக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதிமுக, திமுக மாறி, மாறி வென்ற தொகுதி. வள்ளல் சீதக்காதி குடும்பத்தைச் சேர்ந்தவர் ஹசன் அலி. வழக்கம்போல இவருக்கு சீட் கிடைத்ததை பொறுக்கமாட்டாத கங்கிரஸ் எதிர் கோஸ்டி இவர் தொழிற் நிமித்தம் வெளிநாடு சென்று வருவதை பயன்படுத்தி அவர் வெளிநாட்டுக்காரார் என பரப்பி வந்தனர். அதுவே பழனிச்சாமிக்கு மிக சாதகமான பிரச்சாரமாக இருந்தது. அங்கு மட்டுமென்ன?. அமைச்சர் அன்வர் ராஜாவுக்கு தொகுதி மறுக்கப்பட்டு கூட்டணி கட்சிக்குக்குப் போனதால் அதிமுகவினரும் சலிப்பான மனநிலையில் தான் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்தனர். அதிமுகவிற்குள் உள்ள கோஷ்டி பூசலை மறந்து தொகுதியை அதிமுகவிற்கு பெற்று தருவதற்காக சூழுரைத்து இறங்கியுள்ளன அன்வர் கோஷ்டியும். மா.செ. முருகேசன் கோஷ்டியும். பணபலமுள்ள செல்வந்தர் ஹசன் அலி. பழனிச்சாமிக்கு பணபலமில்லாவிட்டாலும்., தொகுதியில் நல்ல மனிதர் எனப் பெயரெடுத்தவர். எளிமையான மீனவ மக்கள் நிறைந்த தொகுதி என்பதால் மக்கள் பிரச்சனை புரிந்தவர். 2001 ஆம் ஆண்டுத் தேர்தலில் மதிமுக தனித்து நின்று பாட்ரிக் பெற்ற வக்குகள் 3399 வாக்குகள். அப்போது அன்வர் ராஜாவுக்கு கிடைத்த வாக்குகளும் கூட்டணி பலமாக இருந்ததால் கிடைத்தது. ஆனால் இப்போது?. கூட்டணி பலம், முகமதிய மக்கள் வாக்கு வங்கி எல்லாம் சேர்ந்து ஹசன் அலிக்குச் சாதகம்.

4.முதுகுளத்தூர்:
கே.முருகவேல்(திமுக) - (கூட்டணி பலம்+)
எஸ்.பி.காளிமுத்து(அதிமுக)
தனிக்கோடி (ஃபார்வார்டு ப்ளாக்)
சிவா(தேமுதிக)

முதுகுளத்தூரை முக்குலத்து மக்கள் 'அம்ம தொகுதிதேன்' அப்படின்னு தெளிவாகச் சொல்லிக் கொள்ளலாம் (தேர்தலில் வெற்றி பெறுவதற்கு மட்டும்!!). அடுத்ததாக யாதவ இன மக்கள். நாடார் இனம், தலித் மக்கள், முஸ்லீம் மக்களும் பெரும்பான்மையாக வசிக்கிறார்கள். இங்கு போட்டியிடும் திமுக, அதிமுக இரண்டு வேட்பாளர்களும் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். போன முறை அதிமுக சார்பாக போட்டியிட்ட பதினெட்டடம் படியானுக்கு முயன்றும் இம்முறை சீட் கிடைக்கவில்லை. வேட்புமனு தாக்கல் செய்யவே ஊரைக் கூட்டி திருவிழா வச்ச காளிமுத்துக்கு பாதிக்கப்பட்ட அதிமுக பதினெட்டாம் படியானால் கலக்கமும் உள்ளது. தவிர, அதிமுக ஒன்றியச் செயளாலருடைய தம்பிதான் இம்முறை திமுகவில் நிற்கும் முருகவேல். யாதவ ஓட்டுக்களை முருகவேலுக்கு அள்ளி வர காங்கிரஸ் புள்ளி மலேஷ்யா பாண்டியன் ரெடி. முருகவேல் தொகுதி மக்களுக்கு புதிய முகம்தான் (காளிமுத்து தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமாவனவர்.) என்றாலும் அனைத்து சமூக பிரமுகர்களளயும் அரவணைத்து பிரச்சாரம் செய்கிறார். பத்தாததிற்கு ஃபார்வர்டு ப்ளாக்கும் அக்கட்சியில் முன்னால் எம்.எல்.எவைக் களமிறக்கி தேவர் நினைவிடத்தில் இருந்து பிரச்சாரத்தை ஆரம்பித்து இருக்கிறார்கள், முக்குலத்தோர் ஓட்டை அதிமுகவிலிருந்து பிரிக்க தனிக்கோடி தயார். தலித் மக்கள் ஒட்டைக்குறிவைத்து தேமுதிக களத்தில். முருகவேல் வெற்றிவேல் என்பதுதான் அங்கு நிலவரம்.

5. கடலாடி.
சுப.தங்கவேலன்(திமுக) - (சிறுபான்மையினர் வாக்கு வங்கி, கூட்டணி பலம் +)
வ.சத்தியமூர்த்தி (அதிமுக)

கீழக் கரை முஸ்லிம் மக்கள் கொத்தா ஒருத்தருக்கு ஓட்டுப்போட்டு வெல்ல வைக்கிற தொகுதி இது. காங்கிரஸ் சீனியர் தல சோ.பாலகிருஷ்ணன் போட்டியிட்டு தொகுதி, வென்ற தொகுதி இவரிடம் சொற்ப வித்தியாசத்தில் கடந்தமுறை தோற்றுப் போனவர் வேறயாருமில்லை. இப்ப காங்கிரஸ் ஆதரவோடு இத் தொகுதியில் நிற்கிறாரே திமுக மா.செ. சுப. தங்கவேலன் அவர்தான். கூட்டணி பலம் திமுகவிற்கு வெற்றிக் கனியை பறித்துத் தரும்.


இராமநாதபுரத்தில் மொத்தம் 5 தொகுதிகள். திமுக - 2, காங்கிரஸ் - 3

அதிமுக - 4, மதிமுக - 1 என களத்தில் இறங்கும் இங்கு, சாதி ஓட்டுகளும், கூட்டணி கட்சிகளின் பலமும்தான் வெற்றியை உறுதிசெய்யும். முதுகுளத்தூரில் யார் வெல்கிறார்களோ அவர் கட்சிதான் தென்மாவட்டங்கள் முழுவதும் பெரும்பான்மை பெரும் என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். பணபலமுள்ளவர்கள் இருந்தாலும் இது பெரும்பான்மையாக எளிய பொருளாதர பின்னனியைக் கொண்ட மக்கள் நிறைந்த தொகுதி. கடந்த முறை காங்கிரஸ்(த.மா.கா) 3 இடங்களிலும், அதிமுக 2 இடங்களையும் இங்கு கைப்பற்றின. இம்முறை முஸ்லீம் மக்கள் நிறைந்த கடலாடி தொகுதியில், சிறுபான்மையினருக்கு தனியான இட ஒதுக்கீடு ஏற்படுத்துவதற்கு சட்டம் திருத்தம் கொண்டு வர மத்திய அரசிடம் கோரியிருந்தது நிறைவேற்றப்படும் எனவும், அதற்கான சட்டம் தமிழகத்தில் கொண்டுவரப்படும், என்றும் சொல்லி வாக்கு கேட்கிறது திமுக, இது எடுபடும். மீனவர்கள் நிறைந்த இராமநாதபுரம் தொகுதி இலங்கை கடற் படையினாரால் இவர்கள் அல்லலுக்கு உள்ளாகுவதை எக்கட்சி நிறுத்துமோ, அவர்களுக்கு வாக்களிப்பார். மீன்பிடி தொழில் சிறக்க மீன்பிடி துறைமுகங்களும் இவர்களது தேவை.
இம்மாவட்டம் முழுவது நிறைந்துள்ளனர் பனைத் தொழிளாலர்களுக்கென பனைத் தொழிலாளர் வாரியம் அமைக்கப்படும் எனவும். நெசவாளர்களுக்கென கைத்தறி நெசவாளர் வாரியம் அமைக்கப்படும் எனவும் கூறி வாக்கு கேட்கிறது இரண்டு கூட்டணியும்.. மாவட்டத்தில் பெரும்பான்மையாக உள்ள சிறு விவசாயிகளுக்கு அதிமுக தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் சலுகைகள் அறிவித்தது. திமுகவில் தேர்தல் அறிக்கையிலும் ஒரு பக்கம் முழுவதும் விவசாயிகளுக்கான சலுகைகள்தான். எத்தனை, எத்தனை அறிவிப்புகள்? நல வாரியம்னா அது நமக்கு என்னா செய்யும்னுகூடத் தெரியாம இத்தனை சலுகைகளும் மழையாகத் தூறினால் பரவாயில்லை., சுனாமியாக மாறி சுருட்டிக்கொண்டாலும் 5 வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே புன்னகை பூக்கும் அந்த ஞானிகளின் தீர்ப்பு யாருக்கு?., தெரிந்துவிடும் 8 ஆந் தேதி!! .

திமுக கூட்டணி - 5 இடங்கள்.
திமுக - 2 , காங்கிரஸ் - 3
வெல்லும் வாய்ப்புள்ளவர்கள் :
கே.முருகவேல்(திமுக)
சுப.தங்கவேலன்(திமுக)
கே.ஆர். ராமசாமி(காங்கிரஸ்)
கே.வி.ஆர்.ராம்பிரபு (காங்கிரஸ்)
ஹசன் அலி (காங்கிரஸ்)
இராமநாதபுரம் நண்பர்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.
கன்னியாகுமரி மாவட்ட கணிப்பு.
நெல்லை நிலவரம்.

1 comment:

மகேஸ் said...

ராமநாதபுரம் ஹசன் அலி மிகவும் வசதியானவர். ஒரு ஓட்டிற்கு 1000ரூபாய் வரை தருகிறார். இது என் வீட்டிலிருந்து வந்த உறுதிப்படுத்தப்பட்ட தகவல்.