Thursday, April 27, 2006

தேர்தல் அலசல் - 2006 - கன்னியாகுமரி


தலைகள் செல்வாக்கு, கட்சி செல்வாக்கு, கரன்சி செல்வாக்கு என பல செல்வங்களை மேற்பூசி தேர்தலால் கலை கட்டியிருக்கிறது தமிழகம். எப்போது தண்ணீர் வரும், மின் கட்டண உயர்வு வரும், பயணக் கட்டணங்கள் திருத்தப்படும்., எப்போது மறியல், எப்போது வந்துகொண்டிருக்கும் வண்டியைத் திருப்பிக் கொண்டு வேறு சாலையில் பயணித்து நொந்து நூலாகிய பயணம் என்று ஒவ்வொரு நாளும் எதற்காவது விடை தேடிக் கொண்டிருக்கும் மக்கள் முகம் பார்த்து, ஒரே ஒரு நாள் தலைவர்களின் துடிப்பு. நம்ம 5 வருடம் அனுபவிப்பதை ஒரே நாளில் அனுபவிக்கும் துடிப்பு. மே 8 !! எத்தனை பேருக்கு மக்கள் 'டிக்' அடிக்கப் போறங்க., எத்தனை பேரை 'ஷாக்' குடுத்து வீட்டுக்கு அனுப்பப் போறாங்கன்னு ஒரு அலசு அலசலாம். பார்த்துவிட்டு உங்கள் தொகுதி பற்றிய சரியான கணிப்புதானா எனச் சொல்லுங்கள். இடையிடையே., படிக்க ஆர்வமாக இருக்கவேண்டும் என்பதால் கொஞ்சம் வார்த்தைகள் நம்ம ஸ்டைலில் இருக்கும் :).

மொத்தத் தொகுதிகள் : 234

திமுக கூட்டணி தொகுதிகள் :

திமுக : 129 இடங்கள்
காங்கிரஸ் : 48 இடங்கள்
பா.ம.க : 31 இடங்கள்
சி.பி.ஐ(எம்) : 13 இடங்கள்
சி.பி.ஐ : 10 இடங்கள்
முஸ்லிம் லீக் : 3 இடங்கள்

அதிமுக கூட்டணி தொகுதிகள் :

அதிமுக : 182 இடங்கள்
மதிமுக : 35 இடங்கள்
விசி : 9 இடங்கள்
ஐ.என்.டி.யூசி : 2 இடங்கள்
இந்திய தேசிய லீக் : 2 இடங்கள்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் : 1 இடம்
மூவேந்தர் முன்னேற்ற கழகம் : 1 இடம்
அகில இந்திய ஃபார்வர்டு ப்ளாக் : 1 இடம்
மதச்சார்பற்ற ஜனதாதளம் :1 இடம்

மாவட்டவாரியான தொகுதி அலசல்

தெற்கிலிருந்துதான் இந்திய வரலாற்றையே ஆரம்பிக்க வேண்டும். ஆனால் இமயத்திலிருந்து தொடங்குகிறார்கள். தமிழக வரலாறும் அப்படித்தான். வட வேங்கடம் முதல் தென் குமரிவரை எனச் சொல்கிறார்கள். குமரியிலிருந்தல்லவா துவங்க வேண்டும்?. நம்மால் வரலாற்றை மாற்ற முடியுமா என்ன?. ஆனால் நம் அலசலை தெற்கிலிருந்து ஆரம்பிக்கலாம்.... தற்போதைய நிலவரப்படி வெல்லும் வாய்ப்புள்ளவர்கள் என என் அறிவுகெட்டியபடி கணக்கிட்டவர்களை சற்று அடர்த்தியாக (Bold) இங்கு காட்டியிருக்கிறேன். இரண்டு கூட்டணி கட்சிகள் நீங்கலாக உள்ள மற்ற தேமுதிக, ஃபார்வர்டு ப்ளாக், பாஜக போன்ற கட்சிகளால் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களால் சிறிதேனும் மாற்றம் (ஓட்டுகள் பிரியும் நிலை) இருக்கும் என கருதினால் மட்டுமே அவைகளை சேர்த்திருப்பேன்.
கன்னியாகுமரி:
அய்யன் ஆசி யாருக்கு?

கன்னியாகுமரி : மொத்தம் 7 தொகுதிகள்.

1. கிள்ளியூர் 2. திருவட்டார் 3. விளவன் கோடு 4. பத்மனாபபுரம் 5. குளச்சல் 6. நாகர்கோவில் 7. கன்னியாகுமரி.

1. கிள்ளியூர் :
ஜான் ஜேக்கப் (காங்கிரஸ்) (தன் கட்சி மற்றும் கூட்டணி ++)
டாக்டர் தே. குமாரதாஸ் (அதிமுக) - சிட்டிங் (த.மா.கா). (சிட்டிங், தொகுதியில் செல்வாக்கு +)
சந்திரக்குமார் (பாஜக)
குமாரதாஸ்

கடந்த இரு முறை த.மா.கா சார்பிலும் அதற்கு முன்பு ஒரு முறை ஜனதா தளம் சார்பிலும் நின்று வென்ற சித்த மருத்துவர் குமரதாஸ் இம்முறை அதிமுக சார்பில் போட்டியிருகிறார். தொடர்ந்து 3 முறை இவர் வென்றிருக்கிறார் ஆனால் அது ஒரு முறைகூட அதிமுக சார்பில் இல்லை. தமாக காங்கிரஸூடன் இணைந்ததால் அதிமுகவில் சேர்ந்த இவர் காங்கிரஸ் வேட்பாளராக நின்றிருந்தால் இம்முறையும் வெற்றி நிச்சயம்.
சிறப்பு சிற்றூராட்சியான கிள்ளியூர் காங்கிரஸ் பலமாக உள்ள தொகுதி என்பதனாலும், கூட்டணியாலும் ஜான் ஜேக்கபிற்கு அதிக வாய்ப்புள்ளது.


2. திருவட்டார் :
லீமா ரோஸ் (சிபிஐ (எம்) (கட்சியின் பலம் +)
திலக்குமார் (அதிமுக)
சுஜித் குமார் (பாஜக)

சிறப்பு சிற்றூராட்சியான திருவட்டாரில் கடந்த முறை சி.பி.எம் வென்றது. சி.பி.எம், திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளே அடுத்தடுத்து இங்கு வென்றுள்ளது. அத்தனையும் கூட்டணி போட்டு நிற்கும் இம்முறை 'கனி' லீமா ரோஸ்க்கு (அவர் புதுமுகமாக இருந்தாலும்) கிடைக்கவே அதிக வாய்ப்புள்ளது.

3. விளவன் கோடு
ஜான் ஜோசப் (சிபிஐ(எம்)) (கட்சியின் பலம், கூட்டணி +)
ஃபிராங்கிளின் (அதிமுக)
தேவதாஸ்(பாஜக)

சிபிஎம் உறுதியாக வெல்லும் தொகுதி விளவன் கோடு. அதற்கடுத்த நிலையில் காங்கிரஸ். எனவே ஜான் ஜோசபிற்கு வெற்றி நிச்சயம். இவரும் முதன் முறை களம் காண்கிறார்.

4. பத்மனாபபுரம்:
தியோடர் ரெஜினால்டு (திமுக)
கே.பி.ராஜேந்திரபிரசாத் (அதிமுக) - சிட்டிங் (சிட்டிங் +)
வேலாயுதம் (பாஜக)

அதிமுக, பாஜக அடுத்தடுத்து வென்றுள்ள தொகுதி. எனவே இம்முறையும் வாய்ப்பிருக்கலாம். தொகுதியில் நல்ல பெயர் எடுத்திருக்கிறார். சிட்டிங் தொகுதிய செழிப்பா வச்சிருந்தா சான்ஸ் அவருக்கு அதிகம்.

5. குளச்சல்:
ஜெயபால் (காங்கிரஸ்)
பச்சைமால் (அதிமுக) - சிட்டிங்

கடந்த முறை அதிமுக. அதற்கு முன்பு திமுக, அதற்கு முன்பு காங்கிரஸ்னு குளச்சல் குழப்புது. இருந்தாலும் பச்சைமால் முன்பு வென்றபோது காங்கிரஸ் உடன் இருந்தது. கூட்டணியை கணக்கில் கொண்டு பார்த்தால்... காங்கிரஸ் மலர்ச்சியாகிக்கலாம்.

6. நாகர்கோவில்
ராஜன் (திமுக) (கூட்டணி +)
ரத்தினராஜ் (மதிமுக)
ஆஸ்டின் (சுயேட்சை) - சிட்டிங். ( சிட்டிங், செல்வாக்கு மற்றும் கிருத்துவ அமைப்புகளின் அதரவு + )


இத் தொகுதியிலும் கலந்துகட்டியே கட்சிகள் வென்று வந்துள்ளன. சிட்டிங் எம்.எல்.ஏ ஆஸ்டின் செல்வாக்கு பெற்ற தொகுதி. அவரும் கிருத்துவ அமைப்புகள் ஆதரவுடன் சுயேட்சையாக நிற்கிறார். கடந்த முறை எம்.ஜி.ஆர்.அதிமுக வேட்பாளராக களமிறங்கி (அதற்கு முன் அதிமுகவில் இருந்தார்) வென்று, பின்பு மீண்டும் அதிமுகவில் இணைந்த இவரால் ஓட்டுகள் கணிசமாகப் பிரியும். முன்பு இத் தொகுதியில் தனித்து நின்ற மதிமுக ரத்தினராஜ் அதிமுக துணையுடன் மீண்டும் இறங்குகிறார். தனித்து நின்று அவர் பெற்ற வாக்குகள் 13,531. ஆனால் இம்முறையும் அதிமுக தலைகள் எல்லாம் தளவாய்யை பூஸ்ட் பண்ண கன்னியாகுமரி போய்விட வாடித் தெரிகிறார். கூட்டணியை கணக்கில் கொண்டால் திமுகவிற்கு வாய்ப்புள்ளது.

7. கன்னியாகுமரி.
சுரேஷ் ராஜன் (திமுக)
தளவாய்சுந்தரம்(அதிமுக)-சிட்டிங்.(அமைச்சர் - சுகதாரம்)
தளவாய்சுந்தரம்

கடந்த முறை அதிமுக அதற்கு முன் திமுக மாறி, மாறி வென்று வருகிறது. அமைச்சர் தொகுதி. ஜெ, சரத்குமார், வைகோ பிரச்சார கலக்கலில் சற்று தெம்பாகத்தான் தெரிகிறார் தளவாய். சுரேஷ்ராஜனும் போன முறைக்கு முந்திய முறை வென்றவர்தான். கடந்த முறையும் திமுக சார்பாக தளவாய் சுந்தரத்தை எதிர்த்துதான் பொட்டியிட்டார். தளவாய்க்கு சரியான போட்டி. வாக்குறுதிகளை அள்ளி விசாமல் தளவாய் வலம் வர, இவர் ரப்பர் பூங்கா, நாங்குனேரி தொழிற் நுட்ப பூங்கா, புத்தேரி ரயில்வே மேம்பாலம் அனைத்தும் அமைப்போம் என உறுதி கூறி வாக்கு கேட்கிறார். மேடைகளில் ஒருவரை ஒருவர் விலாசிக் கொள்கின்றனர். ஒரே மேடையில் இருவரும் சந்தித்து வரலாறு காணத சாதனைகள் படைத்து கலை கட்டியிருக்கிறது மாவட்டத் தலைநகர் குமரி. கடும் போட்டி. ஆனாலும் கூட்டணி பலம் உண்டு திமுகவிற்கு.
கன்னியாகுமரியில் மொத்தமுள்ள 7 இடங்களில்.
திமுக - 3, காங்கிரஸ் - 2, சிபிஎம் - 2.
அதிமுக - 6, மதிமுக - 1. எனப் போட்டியிடுகின்றன. குமரி மாவட்டம் பொதுவாக தேசியக் கட்சிகளின் கூடாரம். கழகங்களின் தொல்லை. 'பெருந்தேசியம்' காங்கிரஸ் தற்போது கூட்டணியில். திமுக கூட்டணியுளுள்ள வேட்பாளர்கள் அதிகம் கிருத்துவ மதத்தவர்கள். (விவரமா நிறுத்தப்பட்டுள்ளனர்). எனவே எப்படி இருந்தாலும் 6 இடங்கள் திமுக கூட்டணிக்கு கிடைக்கலாம்.
திமுக கூட்டணி - 6
அதிமுக - 1

திமுக - 2 , காங்கிரஸ் - 2, சிபிஐ(எம்) - 2 வெல்லலாம்.
அதிமுக - 1 வெல்லலாம்.

வெல்வதற்கு வாய்ப்புள்ளவர்கள் :
ராஜன் (திமுக)
சுரேஷ் ராஜன் (திமுக)
ஜான் ஜேக்கப் (காங்கிரஸ்)
ஜெயபால் (காங்கிரஸ்)
லீமா ரோஸ் (சிபிஐ(எம்))
ஜான் ஜோசப் (சிபிஐ(எம்))
கே.பி.ராஜேந்திரபிரசாத் (அதிமுக)
கன்னியாகுமரி மக்கள் கருத்துகளைச் சொல்லுங்க.

13 comments:

செந்தழல் ரவி said...

அப்படியே குங்குமம் படிச்சா மாதிரியே இருக்கு...

ஜோ / Joe said...

அப்படிப்போடு,
எடுத்தவுடனே எங்க ஊருல இருந்து ஆரம்பிச்சிருக்கீங்க.நன்றி!

உங்கள் கணிப்புகள் ஓரளவு சரியென்றே சொல்ல வேண்டும் .என் கணக்குப்படி கன்னியாகுமரி மற்றும் குளச்சல் தொகுதிகளில் கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன்.

கன்னியாகுமரியில் சுரேஷ்ராஜன் ,தளவாய் இருவருமே தொகுதியில் செல்வாக்கு மிக்கவர்கள் .அமைச்சராக இருந்தவர்கள் .எனவே இங்கு அனல் பறக்கும் போட்டி.

குளச்சலைப் பொறுத்தவரை பி.ஜே.பி பிரிக்கும் ஓட்டுக்கள் யாருக்கு சாதகம் என்று தெரியவில்லை.அதனால் சற்று குழப்பம்.

பொதுவாக குமரி மாவட்ட மக்கள் கட்சி விசுவாசம் குறைவானவர்கள் (கன்னியாகுமரி தொகுதி தவிர) .வேட்பாளர் தகுதியும் ,பெயரும் முக்கியம் .ஆனாலும் மாவட்டம் முழுதும் நிறைந்திருக்கும் காங்கிரஸ் வாக்கு வங்கியும் ,கேரள எல்லைபுற தொகுதிகளிலுள்ள கம்யூனிஸ்ட் ஓட்டி வங்கியும் தி.மு.க கூட்டணிக்கு பலம்.

newsintamil said...

விளவங்கோடு தொகுதி நிலவரம் நீங்க சொன்ன மாதிரியே தான் இருந்தது ஆரம்பத்துல. ஆனா இப்போ தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் விஜயராகவன் (பத்ரகாளி பட நடிகை ராணிசந்திரா இறந்த அதே விமான விபத்தில் இறந்த பழைய காங்கிரஸ் தலைவர் பொன்னப்பநாடார் மகன்.) கம்யூனிஸ்ட் வேட்பாளரை கலக்கிட்டு இருக்கார். கேரள எல்லைங்கறதால் ஏற்கனவே ஒதுங்கிப்போன காங்கிரஸ் நிர்வாகிகள் பகிரங்கமா விஜயராகவனை ஆதரிக்கிறதா கேள்வி. அவர் தரப்பு பிரச்சாரம் தான் தூள் பரத்துகிறது. விஜயராகவன் ஜெயிக்கிறாரோ இல்லையோ ஓட்டை நல்லாவே பிரிப்பார்னு தோணுது.

அது சரி கன்னியாகுமரி நிலவரமெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியுது?

அப்டிப்போடு... said...

ரவி வருகைக்கு நன்றி. பின்ன இருக்காது?. அது என் கணிப்பு. என்ன ஆகும் என்று பார்க்கலாம் :)

அப்டிப்போடு... said...

ஜோ என்ன ஓரளவு சரின்னு சொலியிருக்கிங்க?. கன்னியாகுமரியிலும், நாகர்கோவிலிலும் அல்லவா கடுமையான போட்டியிருக்கும்?. குளச்சலில் என்ன?. கூட்டணி பலம் அங்கு நிச்சயம் நிரூபிக்கப்படும் என நினைக்கிறேன். பார்க்கலாம். எந்த இழுபறி இருந்தாலும் 5 க்கு குறையாது திமுக கூட்டணிக்கு.

அப்டிப்போடு... said...

ஜோ., பத்மனாபபுரம் த்தானே பிஜேபி சற்று பலமுள்ள தொகுதி? அது அதிமுகவிற்கு கிடைக்கும்.

அப்டிப்போடு... said...

பிஜேபியின் பலமான மாவட்டம்தான் குமரி. ஆனால் இம்முறை தனித்து நிற்பதால் அது பாதிப்பேற்படுத்த (ஓட்டுகளை பிரித்தாலும்) முடியாதெனவே நினைக்கிறேன். சரியா ஜோ?

அப்டிப்போடு... said...

வலைஞன் வருகைக்கு நன்றி.

//விஜயராகவன் ஜெயிக்கிறாரோ இல்லையோ ஓட்டை நல்லாவே பிரிப்பார்னு தோணுது. //

இது வேண்டுமானால் நடக்கலாம். கம்யூனிஸ்ட்காரர் புதுமுகம் வேற. மற்றபடி அத் தொகுதி திமுக கூட்டணிக்குத்தான். பார்க்கலாம் :).

//அது சரி கன்னியாகுமரி நிலவரமெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியுது? //
ஏன் தெரிந்தாலென்ன? :))).

newsintamil said...

கம்யூனிஸ்ட்காரர் புதுமுகம் என்றாலும் வீடுவீடாக நேரடியாகப்போய் ஓட்டுக்கேட்கிறார். அதுதான் அவருக்கு சாதகமான அம்சம்.

//பொதுவாக குமரி மாவட்ட மக்கள் கட்சி விசுவாசம் குறைவானவர்கள் (கன்னியாகுமரி தொகுதி தவிர) .வேட்பாளர் தகுதியும் ,பெயரும் முக்கியம்.//

இதுதான் விஜயராகவனுக்குள்ள பெரும்பலம். பெருசுங்க ஓட்டெல்லாம் அவருக்குத்தான். விஜயராகவன் என்றதும் கட்சி விசுவாசமெல்லாம் மறந்து பின்னால் போகும் பலரைப் பார்க்க முடிகிறது. 11 ஆண்டுகளாக கிள்ளியூர் தொகுதிக்கு காத்திருந்தவர் அவர். முன்பொருமுறை தன் சிஷ்யர் குமாரதாசுக்காக விட்டுக்கொடுத்தவர் இதுவரை அங்கு மறுபடி சீட்பெறவே முடியவில்லை. அதனால்தான் ஆவேசமாக தன் தந்தையின் தொகுதியில் களமிறங்கியிருக்கிறார்.

//ஏன் தெரிந்தாலென்ன???//
நல்லதே! எப்படி? என்பதே கேள்வி!!

newsintamil said...

கன்னியாகுமரி மாவட்ட மீனவ மக்கள் தங்கள் இன வேட்பாளர் ஒருவர் வேண்டும் என்று எல்லா அரசியல் கட்சிகளுக்கும் கோரிக்கை விடுத்தனர். அதிமுக மட்டும் விளவங்கோடு தொகுதியில் இச்சமூக வேட்பாளரை நிறுத்தியுள்ளது. இதனால் கட்சி சார்பின்றி இங்கு மீனவ வாக்குகளை அதிமுக வேட்பாளர் பெற வாய்ப்புள்ளது. இதனால் இத்தொகுதியின் நிலவரம் இப்போதைக்கு அரசியல் ரீதியாக கணிக்கக் கூடியதாக இல்லை.

அப்புறம் திருவட்டார் தொகுதி கம்யூனிஸ்ட் வேட்பாளர் லீமாரோஸ் ஒரு கவிஞரும் கூட என்பது தெரியுமோ?

Pot"tea" kadai said...

//கன்னியாகுமரி மக்கள் கருத்துகளைச் சொல்லுங்க.//

நான் வேடிக்கை மட்டுமே பார்க்க வந்தேன்!!!:-))

அது சரி எப்போ வடக்க வருவீங்க? தேர்தல் முடிஞ்சப்புறமா???:-))

செந்தழல் ரவி said...

நான் குங்குமம் படிச்ச மாதிரி இருந்தது அப்படின்னு சொன்னது வஞ்ச புகழ்ச்சி அணியாக்கும்...

அப்டிப்போடு... said...

வலைஞன் தேர்தலே முடிந்துவிட்டது. இடையில் நேரப்பற்றாக்குறை காரணமாக பதிலிட முடியவில்லை. மன்னிக்கவும். கன்னியாகுமரி நண்பர்கள் மூலம் அறிந்து கொள்வதுதான். அதுவும் தவிர இந்த கணிப்புகளுக்கு மெட்ராஸ்ல இருந்து ஒரு மீசை அண்ணன் ஆபிஸ் மக்கள் பெரிதும் உதவினார்கள். அவர் பெயர் உங்களுக்கெல்லாம் தெரிந்ததுதான். இங்கு வேண்டாம்.


தம்பி, நீங்கள் கூறிய மாதிரியே வடக்கே வருவதற்குள் தேர்தல் வந்திருச்சு.

ரவி, எனக்குப் புரிந்ததே நீங்கள் வஞ்சப் புகழ்சியாகத்தான் கூறினீர்கள் என்பது...