Friday, March 17, 2006

எங்க தொகுதி...!!

டே எருமை..!, உன்ன யாரு சொன்னது? எவனச் சொன்னேன்னு... இரு...! ஹலோ.....

தம்பி., அக்கா பேசறேன்...என்னடா அங்க சலம்பிகிட்டு இருக்க?

அக்கா..., எப்படி இருக்கிங்க?., அது ஒண்ணுமில்ல....ஹி.,ஹி...

எப்டிடா., அப்பவே அவ்வளவு உறுதியாச் சொன்ன? நான் நம்ம நண்பர்களிடமும் சொன்னேன். ஆனா இன்னைக்குத்தான் பேப்பருலயே வருது... சூப்பர்...! இனி நம்ம ஜவுளிக்கடை செல்லையா கெதி?.,

என்னமோ அவரு பரம்பரை பரம்பரையா எம்.எல்.ஏவா இருந்த மாதிரி கேட்குறிங்க?. புயலே நிக்கும் போது....

டே... இன்னும் முடிவாகலல்ல?., ஆண்டிபட்டியும் பட்டியல்ல இருக்காட்டம்ல இருக்கு?., இருந்தாலும் இத எப்பவோ சொன்ன உனக்கு என்ன கொடுத்தாலும் தகும் சாமி... யாருக்கு வேல பாப்பிங்க?....

என்னக்கா தெரியாத மாதிரி ...

சரி...சரி... அய்யாகிட்ட குடு.,

வேற யார்கிட்டயும் பேசிறிங்களா? அய்யா கரூருக்கு போயிருக்காரு., ஒரு சொத்துப்...

ஆமா... நீங்களும் உங்க பிரச்சனையும்... சரி காலைல கூப்பிடறேன்னு சொல்லு. எல்லார்கிட்டயும் அப்பப் பேசிக்கிறேன். நிறையப் பேச வேண்டியிருக்கு!!.

******

தலையை பிய்த்துக் கொள்பவர்களுக்கு., இது 'அம்மா' நம்ம தொகுதில நிக்கப் போறாங்கன்னு வந்த செய்தியைப் பார்த்துவிட்டு., ஊருக்கு அழைத்தபோது நடந்த உரையாடல்.

Sunday, March 05, 2006

அழைக்கும் நால்வர்

போன பதிவில நான் விரும்பும் நாலு பதிவர்களை அழைக்க மறந்து போச்சே., சரி., தனிப் பதிவு போட்டே கூப்பிடலாம்.

சன்னாசி
சுந்திரவடிவேல்
மதி கந்தசாமி
தமிழ் சசி

எல்லோரும் இவ்வழைப்பை ஏற்றுக் கொண்டு எழுதுவீர்கள் என நம்புகிறேன். அதற்கு இப்போதே நன்றி.

Saturday, March 04, 2006

தொல்ல விட்டுச்சுப்பா....!

எல். கணேசன் சும்மா திண்ணையில படுத்திருக்க... ஓடி உழைச்சு பாராளுமன்றத்துல உக்கார வைச்சது தி.மு.க நேரு. எல்.ஜி! அதையெல்லாம் நினைச்சுப், கினைச்சுப் பார்த்து, திரும்ப, கிரும்ப ஓடி வந்துறாதிங்க ராசா.,. சொல்ல நினைக்கிறதெல்லாம் ஒண்ணுதான். தொல்ல விட்டுருச்சு., பந்தியப் 'பங்கீட' ஆரம்பிங்கப்பா.... மத்தியில என்னா செய்யப் போகுதோ மறுமலர்ச்சி?.

நால் வர்ணம் (கலரு!)


தன் ‘நாலு’ பதிவில் போற போக்குல எழுதுன ஒரு வரியில் (என் தந்தைக்கு நடந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு சிறுநீரகம் அளித்தது) மன அசைவை நெடுநேரம் நிறுத்திய இளவஞ்சியின் அழைப்பிற்காகவும்., எண்ணத்தைச் சற்றும் தயங்காமல் ‘நாலு’ எழுத்தில் தூக்கிப் போட்ட முத்துக்குமரன் அழைப்பிற்காகவும், அவர்களுக்கு நன்றி கூறி..

இவ்வுலகத்தையே எனக்கான நாலாகத்தான் நான் பார்க்கிறேன் (ஆரம்பிச்சாச்...). என்னை மகிழவைக்க, கோபப்படுத்த, சாந்தப்படுத்த, கொண்டாடவென இயங்குகிறது இவ்வுலகம் என நான் நினைத்துக்கொண்டால் யாருக்காவது மறுப்பு இருக்குமா?. நீங்களும் அப்படி நினைத்துக் கொண்டால் எனக்கு துக்கமில்லை. மாறாக என்னைப் போல் ஒருவர் என்ற மகிழ்ச்சியே. எனக்குப் பிறகும் (கண்ண மூடின பிறகு) உதிக்கும் சூரியன், காயும் நிலவு, வீசும் காற்று, விழும் மழை என்றால் நம்பத்தான் முடியவில்லை. ஆகா... கிளம்பிருச்சு...! அப்படியென்ன சாதித்துவிட்டாய் இப்படி இறுமாப்பு கொள்ள? எனக் கேட்டீர்களேயானால்... இப்பூமியை சாதனை செய்யவர்களுக்காய் பாட்டா போட்டுவிட்டு, அவர்கள் வருகைக்காய், கன்னத்தில் கை வைத்து காத்திருக்கவில்லை இயற்கை. தவிர, வண்ணம்தாங்கி, வாசம் தாங்கி, வந்து மேல் அமரும் வண்டு தாங்கி வாடிப்போகும் பூவின் அமைதி., சிற்றிறகுடன் சில்லெனப் பறந்து., பல நாட்கள் கழித்துப் பார்க்கும் தந்தையைச் சுற்றி நின்று பிடுங்கும் பிள்ளைகள் போல் வெளிச்சம் மோதி, ஆராய்ந்து அழிந்து போகும் ஈசலின் முடிவு., தன் சிறுவாயில் மண் சுமந்து புற்றெடுத்து, அதில் நாகங்கள் குடிபுக மடியும் கரையானின் சோகம்., கூட்டுப் புழுவாய் சிறைபட்டு, உரிய நேரம் வந்ததும் அதை பட்டென அறுத்துவிட்டுப் பறக்கும் பட்டாம் பூச்சியின் இருப்பு (என்னமோ இதை சாகடிக்க மனசு வரல!) அனைத்தும் தன்னளவில் தன் சாதனைகளை நிகழ்த்திக் கொண்டுதான் இருக்கிறது மிக இயல்பாய். இவற்றை மனம் வழி நோக்கினால்., பூவில் தெரியலாம் பூவை., ஈசலில் தெரியலாம் இனங்கள். கரையானில் தெரியலாம் நொந்த மனம். பட்டுப் பூச்சியில் தெரியலாம் வாழ்க்கை. நடைகள் பாதைகளில் விடும் சுவடுகள் போல எவ்வுயிரும் தன் இருப்பிற்கான தடையங்களை பதித்துக் கொண்டேதான் செல்லும். திட்டமிட்டுச் செய்யும் சாதனையைவிட, நிகழும் சாதனைகள் பயனில் நீடித்திருக்கும்.

சரி... இடங்களில் பிடித்தது எங்க ஊர், அட்டக்கட்டி, (கொடைக்கானல்) பேரிஜம், ஹவாய்.

இருந்த ஊர்கள் - கரூர், திருச்சி, சிங்கப்பூர், அமெரிக்கா (இப்பையும் இங்க தான்.)

பார்க்க விரும்பும் இடங்கள் - முட்டம், கீழ வெண்மணி, டோக்கியோ, லிமா (பெரு).

பிடித்த தலைவர்கள் - தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கார், கலைஞர் கருணாநிதி, அய்யா நல்லகண்ணு.

பிடித்த கலைஞர்கள் - கலைஞர் (பல பரிமாணக் கலைஞர் இவரை விட்டு கலையைப் பற்றி பேச முடியாது), சிவாஜி, விஜயலட்சுமி (நவநீதக் கிருஷ்ணன்), சேரன்.

பிடித்த உணவு - மழைக் கால தேனீர் (வறுத்த கடலை., வெல்லக்கட்டியுடன்)., கோழி(நாட்டுக் கோழி), மீன் (கேரள மத்திமீன், ஜப்பான் சுஷி (சமைக்காமல் சாப்பிடணும்., ஆனால் நான் சிறிதாக மசாலா சேர்த்து, 2 செகண்ட் வதக்கி.,....ம்..!...). அக்காரவடிசில்.

பிடிக்கும் நேரம் - சுள்ளென வெயில் அடிக்கும் மதிய நேரம்., என் அப்பாவுடன் பேசும் நேரங்கள் அனைத்தும், எங்கய்யாவின் பாச நேரம்., நண்பன் விசுவின் நேச நேரம்.

பிடித்த கணங்கள்:

கல்லூரியில்., மாறலுக்காக (கல்லுரிய விட்டு யாருந்தொரத்த மாறுனது இல்ல... இது Moral ப்பா... Morality!!) 'ராஜா அன்னம்மாள் மெமோரியல் அவார்டு' வாங்கிய கணம். (ஆனா... அந்த அன்னம்மா அவர்கள் யாருன்னு எனக்குத் தெரியாது!).

எம்.சி.ஏ வுல டிஸ்கிரீட் மேத்மேட்டிக்ஸ்னு ஒரு பூதமிருக்குது..., அதில நிச்சயம் கோட்டுதான்னு நெனைச்சு, நெனைச்சு மறுகிட்டு இருந்தப்ப... அட, நீயி 59 மார்க் கவலைப்படாதன்னு, பல்கலைக் கழகத்தில் வேலைபார்க்கும் பக்கதூட்டு அக்கா சொன்ன கணம் (அவங்கவுங்க.... தங்க மெடலு வாங்குனது., தண்ணியா மார்க் வாங்குனதுன்னு தட்டிகிட்டு (கீ-போர்ட!) இருக்கப்ப... நம்ம நிலைமை... இம்புட்டுதான்...! அதுவரைக்கும் கோட்டில்லாம ஓடிகிட்டு இருந்ததுனாலதான் கவலையும். நம்மெல்லாம் கல்யாணத்துக்கு பயந்துதான் காலேஜ் போனமே ஒழிய., படிச்சு உருப்புடறதுக்கா...போனோம்?. எங்காளு மட்டும் கண்ணுல மாட்டாம இருந்திருந்தா... இன்ன வரைக்கும் நான் கலேஜ்க்குப் போய்கிட்டு இருந்தாலும் ஆச்சிரியப் படுறதுக்கில்ல...!. இன்னும் ஒண்ணு., சுத்தமா எழுதாத பேப்பருக்கு எப்படித்தான் இம்புட்டு மார்க் போடுவாங்களோ?.இது தவிர டபுள் ப்ரொமோஷன்ல்ல மூணாவது சேர்ந்தது, பத்தாவதுல தமிழ்ல முதல் மார்க் (பள்ளியில) எடுத்தது., பிஜிடிசிஎ வுல 87% எடுத்தது இதெல்லாம் வேதனைன்னு ச்ச்.. சாதனைன்னு எடுத்துகிட்டிங்கன்னா சரிதான்., ஆனா இதுனாலயெல்லாம் இப்ப எனக்கு ஒரு பயனும் இல்லை என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.)

நம்மாளு... சிங்கப்பூரிலிருந்துகொண்டு எங்கள் காதலை தன் வீட்டில் சொல்லிவிட., இருபுறமும் பிராண்டல் வாங்கி, சமாளித்து நான் வெந்து, நொந்து கொண்டிருக்க... திருமணத்திற்கு நான்கு நாட்கள் முன்னர் ., ஹாயா வீட்டுக்கு வந்து ஒரு லுக்கு விட்டுச்சு பாருங்க.... வீச்சருவாகளுக்கு இடையில நான் நிக்கிறேன்., உனக்கு லுக்கா?ன்னு... பல்லைக் கடித்துக் கொண்டே., புன்னகைத்த கணம்.

என் பேசும் பொற் சித்திரம், ‘அத்த.....’ என முதல் வார்த்தை பேசிய கணம் (இப்பப் பார்த்தா... பாப்பா., கதவை சாத்திட்டு வா...! ந்னா ... அம்மா...you… go and lock before somebody comes in! ங்குது. யாரக் கேட்டு இத எடுத்த?ன்னு கொஞ்சம் கோபமா கேட்டா., Why?.,I asked my brain ன்னு வருது பதில். பதினாறடி பாயுது...!! பெருமைப் படறதா, துக்கப் படுறதான்னு தெரியாம ஒரு கலந்து கட்டுன உணர்வோட திரிஞ்சுகிட்டு இருக்கேன் அவ வாயத் திறந்தா.). (இதத்தான்... முதல்ல சொல்லணும்., ஒரு கோர்வையா இருக்கட்டும்னு கடைசில போட்டுட்டேன்.)

இன்னும் நிறைய நாலச் சொல்லியிருக்கலாம். சிறிது தாமதமும் ஆகிவிட்டது இளவஞ்சி, முத்துக்குமரன் பொறுத்துக் கொள்க