Thursday, December 29, 2005

**திரை...**

என்தமிழர் படமெடுக்க ஆரம்பஞ் செய்தார்;
எடுத்தார்கள் ஒன்றிரண்டு பத்து நூறாக!
ஒன்றேனும் தமிழர்நடை யுடைபாவ னைகள்
உள்ளதுவாய் அமைக்கவில்லை, உயிர்உள்ள தில்லை!
------------------------------------------
------------------------------------------
பரமசிவன் அருள்புரிய வந்துவந்து போவார்!
பதிவிரதைக் கின்னல்வரும் பழையபடி தீரும்!
சிரமமொடு தாளமெண்ணிப் போட்டியிலே பாட்டுச்
சிலபாடி மிருதங்கம் ஆவர்த்தம் தந்து
வரும்காதல்! அவ்விதமே துன்பம்வரும், போகும்! - (தமிழ் சினிமா- பாரதிதாசன்)

ஹா!.. ஹா!!.. நம்ம பாட்டுப் பாட்டன் காலத்துலேயே., இப்பிடிப் புலம்புகிற மாதரி சினிமா எடுத்து மக்களைப் படுத்தியிருக்கங்க போல.. பேசாப் படத்தில் ஆரம்பித்து., பாகவதரின் பாட்டுக்(தொட்டதுக்கெல்லாம்) காலத்தில் வெளித்தெரிந்து பி.யு.சின்னப்பா, டி.ஆர். மாகாலிங்கம் காலத்தில் பாட்டும்., மணிப்பிவள நடை வசனமாகி., பாதி எம்.ஜி.ஆர் வரை இது நின்று., மீதி எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் நல்ல தமிழில் ஒரு நொடிக்கு நாலு பக்க வசனம் பேசி, கமல் ரசினி காலத்தில் மேல்நாட்டுத் தாக்கம் அதிகமாகி, என்னேரமும் காதல் என்றாகி பின்பு அதுவே நிலைத்து விக்கிரம், விஜய், அஜித்தில் காதலுடன் அதிரடியும் சேர்ந்து சிம்புவில் வெறும் அடிதடி மட்டுமே சினிமா என்றாகி விட்டது. (ஸ்ஸப்பா... இருங்க மூச்சு விட்டுக்கறேன்). ஒரு காலத்துல இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள் பெரிய சக்தியா இருந்தாங்க., இப்ப யாரு தெரியுமா? ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் தான்.

அதிரடியை அமர்களமாகத் துவக்கி வைத்தது யாரக வேண்டுமானாலும் இருந்திருக்கட்டும்., அதை அதிகம் செய்வது விக்ரம் மற்றும் சூர்யா. இப்ப எத எடுத்தாலும் அதிரடிதான். சினிமாப் படங்கள் எல்லாம் சிம்பிளான தியரிதானங்க?... அழுகைப் படம்னா அவார்டு படம்., அழுதுக்கிட்டே சிரிச்சா ஜனரஞ்சகம்., அழுது, சிரிச்சு, காதல் செஞ்சுகிட்டே அடிச்சா கமர்ஷியல் (மாஸ்) படம். நிறையா அடி, கொஞ்சமா காதல்ன்னா ஆக்ஷன் படம்.

இப்போ இருக்கிற இயக்குனர்கள் கொஞ்சமாவது எதார்த்ததோடு பொருந்திய வகையில் எடுக்கிறார்கள் (காதல், ஆட்டோகிராப்). (உறவுகளை கேலிக்குரியதாக்கி, சிக்கலாக்கி படம் இயக்கி நாட்டைக் கெடுக்காமலாவது இருக்கிறார்களே?) பாட்டு., சண்டைய விட்டுருங்க அது எப்பவுமே எதார்த்தமில்ல. அப்படிப் பார்த்தா பின்னனி இசை கூட நடைமுறையில் இல்லைதான். அதிரடின்னா., திரையுலகில் மியூசிக் அலற., அல்லது அது இல்லாமல் 'எட்றா வண்டிய'., ' போட்றா சிக்னல'., ந்னு பேசறதுதான்னு காட்றாங்களே?., நிஜ வாழ்க்கையில் என்னா மாதிரி அதிரடி சத்தமில்லாம நடக்குது தெரியுமா?.

சைக்கிள 'மாட்ட' நிறுத்துற மாதிரி 'ந்தா' ந்னு நிறுத்தறது. 50 வயசு ஆளு சின்னப் பசங்களோட கோலி விளையாடுறது., அவங்க மனைவி 'வந்து சாப்பிட்டு போயி விளையாடுங்கங்கிறது'. ஒருத்தர் வந்து அவங்க பையன வெளில கூட்டிட்டுப் போகும்போது., 'செல்லய்யா பயந்துக்காம., அப்பா பின்னாடியே வரணும் என்ன?'ன்னு எப்பவும் 'டயலாக்' அடிப்பாரு., ஆனா அந்தப் பய வாத்தியார் கையக் கடிச்சு வச்சுட்டு., ஸ்கூல விட்டு ஒருநாள் ஓடி வந்தவன். ஏன்னு கேட்டா., ஸ்கூல்ல அவனுக்கு 'போர்' அடிச்சுச்சாம்., அதுனால தண்டவளத் துண்டுல இருக்கிற மணிய அவனா எடுத்து அடிக்க மொத்த ஸ்கூலும் வெளிய வந்திருச்சு., ஏண்டா பண்ணுனன்னு வாத்தியார் கையப் புடுச்சு இருக்காரு., இவங் கட்டுப் போட வச்சுட்டான். உனக்கு என்னடா புடிக்கும்னு நம்ம கேட்டா துப்பாக்கி, கத்திம்பான் அவங்க அப்பா கேட்டா மிட்டாய்ம்பான். என் தோழியொருத்தியின் மகன் எப்போதும் விளையாடுவது அவளது தாலியில்., அவள் குடுடா.. தம்பின்னு பின்னாடியே ஓடுவா., அரைமணிநேரம் மியூஸிக் போடற சீன சத்தமில்லம பண்ணுறாங்க அம்மாவும் மகனும்.

பழனி மலையில ஒரு கல்யாணம்., ரெண்டு பேர் அதுக்கு போனாங்க., ஒருத்தனுக்கு அழைப்பிதல் அனுப்பியிருந்தாங்க., இன்னொருத்தனுக்கு அனுப்பல., நீ மாட்டும் போயிட்டு வா., எனக்கு பத்திரிக்கை குடுக்கல அதுனால நான் இந்தக் கடைக்கிட்ட நின்னுக்கிறேன் ஆனா நீ சீக்கிரம் போனமா., மொய் வச்சமான்னு வந்திரனும்., என்னய மறந்துராதன்னு சொல்லிட்டு அந்தக் கடைகிட்ட நின்னுகிட்டன். போனவன், மலை மேல போயி கல்யாணத்தப் பார்த்திட்டு., விருந்து சாப்டிட்டு., அப்படியே உலாத்தி பழனி மலை அடிவரத்திலிருக்கிற ஊர்கள லுக்கு விட்டுட்டு., அங்கேயிருக்கிற குரங்குகளோட சிறிது நேரம் விளையாண்டுட்டுன்னு இருக்க., கீழ நிக்கிறானே அவன அந்தக் கடைகாரர் 10 நிமிஷம் ஆன உடனே ஒரு மாதிரிப் பாக்க ஆரம்பிச்சுட்டரு. அரை மணி நேரம் ஆன உடனே அவன் பக்கத்துல வந்து ஒரு முறை முறைச்சுட்டுப் போனாரு., ஒரு மணி நேரம் ஆச்சு, அவன் பக்கத்துல நிறுத்தியிருந்த டி.வி.எஸ். 50 ய எடுத்து கொண்டு போய் பாதுகாப்பா தள்ளி நிறுத்தி வச்சாரு. ஒன்றை மணி நேரம் ஆச்சு , கடையில வேல செய்யுற பையனைத் திட்டது மாதிரி திட்டுனாரு. ரெண்டரை மணி நேரமாச்சு கடையில இருக்கிற ‘ஃபோன’ எடுத்து சுத்த ஆரம்பிச்சாரு.... அப்ப கரெக்டா மலையில இருந்து இறங்கி இவனப் பார்த்து வாரான் போன மகராசன். (அவன் அங்கிட்டுப் போயி நின்னுருக்கலாம்., ஆனா மேலேருந்து வந்தவன் வந்தா தேடிகிட்டுல்ல இருப்பான்னு நகரல)., அவன் வந்ததும் 'கடுப்போட வாடான்னு கூட்டிட்டு போயி அந்தக் கடையிலயே 'ரெண்டு கூல்டிரிங்ஸ்' வாங்கிட்டு., 100 ரூபயாக் குடுத்து மீதி சில்லறய நீங்களே வச்சுக்கங்கன்னு கோபமா சொல்லிட்டு வெளிய வந்துட்டான்., பிறகு இவனப் பார்த்து 'டே., உன்னால என்னைய அந்தாளு என்னா நினைசுட்டாரு தெரியுமா?ன்னு' நடந்தது அத்தனையும் சொன்னான்., இவன் மெதுவா எல்லாம் கேட்டுட்டுச் சொன்னான்., 'அட., கிருக்குப் பயலே., இப்ப வாங்குன கூல் டிரிங்ஸ அப்பவே வாங்கி., மீதிய வச்சுக்கச் சொல்லியிருந்தா., கடைக்காரரே உனக்கு சேர் குடுத்து உட்கார வச்சிருப்பாரில்ல?'.

இப்படி நிஜத்துல நடக்குற அட்டகாசம் நிறையங்க. வெத்து வீராப்பு காட்டுற ஒரு விதயத்த மட்டும் எடுத்துகிட்டு வடிவேல் எப்படி அசத்துராரு?. இன்னும் பல விதயங்கள் தொடப் படாமலேயே இருக்கு.

சரி., இளையராஜா., ரஹ்மானுக்குப் பிறகு இசையில் ஒரு தொய்வு., இப்போ மீண்டும் ஜே ஜேன்னு வந்துகிட்டு இருக்கு. பாட்டுக் குரல்கள் பெரும்பாலும் கேட்ட குரல்கள்தானே?., அதப்பத்தி சொல்ல ஒண்ணுமில்ல. பாட்டு வரிகள்?., கவிஞர்களின் ஒரு வார்த்தையின் ரூபாய் மதிப்பு ஆயிரங்களில்., ஆனால் 'பூவப் பூவப் பூவப் பூவேன்னும் 'ஊதா ஊதா ஊதாப்பூன்னும்' திரும்பத் திரும்ப ஒரே வார்த்தையப் போட்டு ஏமத்துறாங்க., பாட்டெழுத மட்டும் தமிழுக்கு பஞ்சம் வந்திரும் போல. பாட்டின் வார்த்தைகள் தமிழனைப் பொருத்தவரை என்றும் விலைமதிப்பில்லாதது., நல்ல விதயங்களைச் சொல்லலாம். அம்மாணை, தூது, பிள்ளைத் தமிழ், கலம்பகம்னு ஒவ்வொன்னுக்கும் ஒரு வகை வசிருந்தோம். இப்ப, வெறும் குத்துப் பாட்டுதான், பாட்டுன்னு ஆயிருச்சு., தமிழனின் செவிச்சுவையை மட்டுப்படுத்தியதில் பெரும்பங்கு திரையிசைப் பாடல்களுக்கு உண்டு

ஒளிப்பதிவு எங்கயோ போயிருச்சு., ஆட்டோகிராப்., இப்போ தவமாய் தவமிருந்து இரண்டிலும் காட்சிக்குத் தக்கதாய் தத்ரூபமான ஒளி. தொழில் நுட்பம் நன்றாக வளர்ந்திருக்கிறது. ஊடகங்கள் நல்ல படங்களுக்கு போதிய வரவேற்புக் கொடுத்தால் ஹிந்திக்கு அடுத்த படியாக உள்ள தமிழ்திரையுலகத் தரமுயரும்.. இடையில கொஞ்சம் கெட்டிருந்த சினிமா இப்ப மீண்டும் தலை தூக்கியிருக்கிறது. சினிமாவப் பத்தி எழுதனும்னா எல்லாருக்கும் தெரிஞ்சததான் திரும்பத் திரும்ப எழுதனும்.

கனவுத் தொழிற்சாலையோ இல்லயோ... இது ஒரு காதல் தொழிற்சாலை. இப்ப வன்முறைத் தொழிற்சாலையா மாறிகிட்டு இருக்கு. நமக்கு புடிக்குதோ இல்லையோ 5 முதல்வர்களை தந்திருக்கிறது. சினிமா சமுதாய சீர்கேட்டிற்கு வழிவகுக்கிறதா இல்லையான்னு பட்டிமன்றம் நடந்துகிட்டு
இருக்கு அது நம் பேரன்களின் காலத்திலும் தொடர்ந்து நடக்கும். இது எல்லாவற்றையு மீறி பல்லாயிரக்கணக்கானவங்களுக்கு சோறு போடுது., அதனால்தான் இதை கடுமையாக எதிர்ப்பவர்கள் கூட., வேண்டாம் எனச் சொல்லவதில்லை. நம் வாழ்வில் ஒன்றாகிப் போன சினிமா நம் வாழ்க்கையைச் சொல்லுகிறதா உலகுக்கு?. உலகத்திலேயே சிறந்த திரைப்படங்கள் இரானிய படங்களே., ஏன்? அதில் அவர்களது வாழ்க்கையிருக்கிறது.


நமது வீட்டில் நம்முடன் இருக்கும் தொலைகாட்சியிலாவது நம் வாழ்க்கையிருக்கிறதா என்றால்., தொலைக்காட்சித் தொடர்களின் இயக்குனர்களுக்கு தெய்வமே பெண்கள்தான். அத்துணை சீரியல்களிலும் தவறாமல் மாமியாராலோ, மற்றவர்களாலோ ஒரு பெண் துன்புறுத்தப் படுவதும். அப்பெண் ஒன்று பூமித்தாயை மிஞ்சும் விதம் பொறுமையாக இருப்பதாகவும் இல்லையென்றால் ஆணைப் பழிவாங்க ,நாம் கற்பனை செய்ய முடியாத' வழிகளை பின்பற்றுவதாயும் காட்டுகிறார்கள். தங்கள் பணப்பையை நிரப்பிக் கொள்ள எதை வேண்டுமானாலும் எடுக்கிறார்கள்.

அங்கு மட்டுமல்ல இங்கும்தான் கேணத்தணமான சிரிப்பு நிகழ்ச்சிகள்., இல்லையென்றால் ஒரு 'ஸ்பானிஷ்' பொண்ணு கண்ணில் ஆரம்பித்த கண்ணீர் பாதம் வரையோட பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கும். அந்தப் பொண்ணைப் பாதிப்புள்ளாக்கியவன் அப்போது அரங்கத்துள் வருவான்., அது படார்ன்னு எந்திருச்சுப் போயி நாலு அப்பு அப்பும், அவனும் அதை குனிந்து வாங்கிக்கொள்வான். அப்புறம் சில துப்பறியும் நிகழ்ச்சிகள் அல்லது 'கேம்' ஷோ என ஒரே மாதிரி நிகழ்ச்சிகள் தான். ஆனால் இங்கு யாரும் முழு நேர வேலையாக தொலைக்காட்சி பார்ப்பதை செய்வதில்லை.

குறும்படங்கள் இதிலிருந்தெல்லாம் மாறுபட்டு, மக்கள் குரலாய் ஒலிப்பது மகிழ்ச்சி தருகிறது.

**நாடகம் என்பது....**

நாடகம் என்பது? நடிப்பும் பாட்டும் மட்டுமல்ல அதனுடன் கூடிய இசையும் ஆகும். எங்கள் ஊரில் உள்ள சாமியை நாங்கள் எப்படிக் கும்பிடுவோம் தெரியுமா? அது கும்புடுவதல்ல, கொண்டாடுவது. நான் படித்தது 'பெரியார் மணியம்மை பெண்கள் பள்ளியில்'. நாம்தான் வாய் நிறையப் பேசுவோமா? காலையில் அனைவரும் கூடியிருக்கும் 'அசெம்ப்ளியில்' (?!) 'கடவுள் இல்லை., கடவுள் இல்லவேயில்லை '., 'கடவுளை மற... மனிதனை நினை' என அய்யாவின் பொன்மொழிகளை வாசிக்க (ஒலிப்பெருக்கியில்) சொல்வார்கள். மாலை வீட்டுக்கு வந்தால்... எங்காளு யாராவது மஞ்சப் பையோட மெதுவா வீட்டைத் தேடிக்கிட்டே வருவாரு., எதுக்கு வருவாரு தெரியுமா?., "ஊர்ல சாமி சாட்டியிருக்காக... சொல்லிட்டு வரச் சொன்னாக, எல்லாரும் பொறப்புட்டு வந்துருங்க!". ங்கிற இந்த ஒரு வரி செய்தியச் சொல்ல. நம் மண் சார்ந்த தெய்வங்கள் தெய்வங்களாக பர்ப்பதை விட., நம்மினும் மூத்த உறவாகப் பார்ப்பதே வழக்கம்.. அப்புறம் என்ன? கிளம்பிருவம்ல?. அடுத்த நாள் நாங்க சோடிச்சு, கீடுச்சு போய் இறங்குனா., ஊரே பளிச்சுன்னு இருக்கும்., சுண்ணாம்படிச்சு, வாசல்படிகளில் ஒரு முறை சுண்ணாம்பு பட்டை பிறகு செம்மண் பட்டை இப்படி மாறி, மாறி அடிச்சு பார்க்கவே ரொம்ப அழகா இருக்கும் ஊரு. வீட்டு முன்புறம் மாவிலை கட்டி., பூலாம் பூக்கள் (சிறிய வெள்ளை நிறப் பூக்கள்) சொருகிவைத்து அலங்கரித்து, வாசலில் கோலமிட்டு அதன் நடுவில் பூசணிப் பூ வைத்து கலக்கியிருப்பார்கள். நம் கிராமங்களின் வறுமையை மட்டுமே காட்டும் ஊடகங்கள் இது போன்ற பொழுதெல்லாம் தூங்கப் போயிரும் போல!). கோவிலில் பாட்டுச் சத்தம் கேட்டுக் கொண்டிருக்கும். எம்.எஸ். சுப்புலட்சுமியின் பாடல்கள் என நினைப்பீர்களேயானல் மன்னிச்சுக்கங்க! 'சித்தாட கட்டிகிட்டு.... சிங்காரம் பண்ணிகிட்டு... மத்தாப்பு...' ங்கிற பாட்டுதான் தவறாமல் கேட்கும். அப்புறம் நாமெல்லாம் கோவிலுக்குப் போகும்போது 'பொட்டு வைத்த ஒரு வட்ட நிலான்னு...' நல்ல பாட்டெல்லாம் போடுவாங்க....!
வீடே உறவினர்களால் நிறைந்திருக்கும். எனக்கு யாருன்னே தெரியாத பிள்ளைகல்லாம் கூட எங்க ஆயா மடியில படுத்திருக்குங்க. வீட்டு முன்னாடி முழவு(கொம்பு?), உருமி, தப்படித்துக் கொண்டிருப்பார்கள். வீட்டிற்குள் ஒருவர் பேசுவது இன்னொருவருக்குக் கேட்காது., கத்தி, கத்திதான் பேச வேண்டும். அந்த ரண களத்துலயும்., சிலபேர் போர்வைய மூடி படுத்திருக்குங்க!. நான் முன்பு பார்திராத ஒரு அம்மா காய் நறுக்கிக் கொண்டிருக்கும்., எங்க அண்ணிகள் ஒரு புறம் சாதம் வைத்து, வைக்கோல் போட்டு அதன் மேல் வெள்ளைத் துணி விரித்து (ஹாட்பேக்?), அதன் மேல் சாதத்தைக் கொட்டி கொண்டிருப்பார்கள். இதில் ஒரு விதயம் என்னவென்றால்., எங்க அண்ணிகளின் தம்பிகள் இந்த மாதிரி கொண்டாட்டங்களுக்கு தவறாமல் வந்துவிடுவார்கள்., அவர்களுடைய அக்காவிற்கு உதவி செய்ய. நம்ம இது எல்லாத்தையும் ஓரக் கண்ணால பார்த்துகிட்டு., வந்திருக்கிற பெருசுகளப் பார்த்து கும்பிடு போட்டுவிட்டு., அவங்க 'பெரிய பாப்பவா?., எத்தானாவது படிக்கிற?' ஏதோ கேட்கனுமேன்னு கேட்க... 'பதினாலாவதுன்னு' அவங்களுக்குப் புரியற மாதிரி கத்திச் சொல்லி., ஒரு புன்னகையப் போட்டுட்டு ரூம்குள்ள போனா., அங்க நாம எப்படா வருவம்னு உட்காந்திருக்குங்க என் அண்ணன் பிள்ளைங்க. அண்ணாச்சிகளுந்தான். காலையில் சாமி பெயரில் உள்ள பெரிய மலையை சுற்ற வேண்டும். சுற்றி களைத்து (இப்பிடிச் சொல்லக் கூடாது, சாமி கோவிச்சுக்கும்.) உக்கார்ந்திருப்பார்கள். அப்புறம் அரட்டைதான். போன முறை பார்த்ததிலிருந்து இந்த முறை பார்க்கும்வரை என்னென்ன நடந்துன்னு பேசிப்போம். அதற்குள் எல்லோரும் வேல் எடுக்க கிளம்பி விடுவார்கள். (வேல் எடுப்பது என்பது ஒரு வேண்டுதல்., இப்படி வேண்டிக்கொண்டவர்கள்., கூட்டமாகச் சென்று, ஒரு தோட்டத்தில் வேல்களுக்குப் பூசை செய்து வாத்தியங்கள் முழங்க அதை எடுத்துக் கொண்டு வந்து கோவிலில் நட்டு வைப்பார்கள்). வேலெடுத்து முடிந்தவுடன்., நட்டநடு மத்தியானத்தில் பெண்கள் அனைவரும் முன்புபோல் வாத்தியங்கள் முழங்க பொங்கல் தூக்குவார்கள். பொங்கலுக்கு வேண்டியவற்றை எடுத்துக் கொண்டு கோவிலுக்குச் சென்று., கோவிலுக்கு முன்புறம் அடுப்பு அமைத்து பொங்கல் செய்வார்கள். பொங்கிய பொங்கல் பானைகளை மஞ்சள் இலை கட்டி, பொட்டுவைத்து அலங்கரித்து கோவிலுக்குள் வைப்பார்கள். எல்லாப் பொங்கல் பானையிலிருந்தும் பொங்கல் எடுத்து சாமிக்குப் படைக்கப்படும். (இதில் எவ்வித பாகுபாடும் இல்லை). இது முடிந்தவுடன்., மஞ்சத் தண்ணி ஊற்றி..... விளையாட மாட்டோம்., ஆட்டுக்கு தெளித்து... பிறகுதான் என்ன பண்ணுவோம்னு உங்களுக்குத் தெரியுமே?. சாமி கும்பிட்டுட்டு., கொஞ்ச நேரம் அங்கிருப்பவர்களுடன் பேசிக் கொண்டிருந்தால், ஆட்டங்கள் ஆரம்பமாகும்.

காவடியாட்டம்’., கழுத்தில் காவடி வைத்து அதை சுழற்றி, சுழற்றி விழாமல் ஆடிக் கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு முன்னால் புலிவேட்மிட்டுக் கொண்டு கையில் சிலம்புடன் ஒருவரை ஒருவர் சிலம்பால் அடிப்பதும்., தன் மேல் அடிவிழாமல் தடுத்தும், சிலம்பு சுற்றியும் ஆடும் ‘சிலம்பாட்டம்’ ஆடிக் கொண்டு போவார்கள். மாலையானதும் விருந்து பரிமாறுவோம்., சுற்றி உள்ள கிரமங்களில் உள்ள தெரிந்தவர்களை எல்லாம் அழைத்திருப்போம்., நான் எனது கல்லூரித் தோழிகளையும் அழைத்துத் செல்வதுண்டு. எங்க வீட்டுல உள்ள நண்டு, சிண்டெல்லாம் பரிமாறிக் கொண்டிருக்கும்.

சிறிது இருட்டியவுடன் ‘கரகாட்டம்’., பொன்னமராவதிப் பார்ட்டி., சாமிக்கு முன்னால் சிறிய குடத்தில் நீர் நிரப்பி அதன் மேல் மஞ்சள் குங்குமத்தால் அலங்கரித்த தேங்காய் வைத்து, நையாண்டி, உருமி மேளம், தவில், நாதஸ்வரம் இசைக்க ஆடுவார்கள். இசை அதிகரிக்க, அதிகரிக்க அதிகமாக ஆடுவார்கள். ‘பொய்க்கால் குதிரை’ (புரவையாட்டம்) இராஜ ராணி போல் வேடமிட்டு நன்கு அலங்கரிக்கப்பட்ட பொய்கால் (இவர்களே கட்டையை காலில் கட்டியிருப்பார்கள்) குதிரையுடன் ஆடிக் கொண்டு வருவார்கள். இது தவிர 'தேவராட்டம்' தான் நிற்குமிடத்தை விட்டு நகராமல்., கையில் ஒரு துணியை வைத்து சுற்றிக் கொண்டு குனிந்து, நிமிர்ந்து ஆடிக்கொண்டிருப்பார்கள். மற்றும் 'கும்மி' சுற்றி நின்றோ., இப்புறமும் அப்புறமும் சரிசமமாக நின்று கொண்டு ஆடிக்கொண்டே வரும்போது இசைக்குத் தக்கவாரு தன் கைகளை தட்டுவார்கள். தேவராட்டமும்., கும்மியும் எப்போதாவது நடக்கும். பரமசிவன், பார்வதி, முருகன், பிள்ளையார் குடும்பம் ஒரு மாட்டு வண்டியில்., இராமர், லக்ஷ்மணர், சீதை அனுமார் ஒரு வண்டியில் என வேட மிட்டுக் கொண்டு வரும் வேடு பரி இதை பேச்சு வழக்கில் பாரி வேட்டை என்பார்கள். (எப்போவுமே ஆகாரத்தை சேர்த்துக்குவாங்க (நாங்களும்தான்... ஆகாரத்த சேர்த்துக்காம யாரவது இருப்பாங்களாங்கிறிங்களா?., அட இது வேறங்க) அதாவது ஆலம்பட்டி புதூர் என்பதை ஆலாம்பட்டி புதூர்ம்பாங்க., பரி வேட்டய பாரி வேட்டைம்பாங்க...). இந்த வேடுபரி நிறையக் கோவில்களில் நடக்கும்.

நன்றாக இருட்டிய உடன் நாடகம் ஆரம்பிக்கும். தோட்டம் செய்யும் 'தொட்டிய நாயக்கர்கள்' (காட்டு நாயக்கர்கள் எனவும் அழைப்பதுண்டு)., இதை ஒரு தொழிலாகச் செய்யாமல்., விவசாயமில்லா ஓய்வுக் காலங்களில் இந்த நாடகங்களை செய்கிறார்கள். 'வள்ளி திருமணம்'., 'பாசு பதக் கணை', 'அர்ஜூனன் தவசு', 'பொன்னர் சங்கர்' போன்ற நாடகங்கள் நடக்கும். வள்ளி திருமணம் நடக்கும்போது பாடும் 'மேயாத... மான்...' என இராகம் மாற்றி, மாற்றி ஒரு மணி நேரம் பாடுவது மிகப் பிரபலம். 'பொன்னர் சங்கர்' போன்ற நாடகங்கள் நடக்கும் போது., நடிப்பவர்கள் விரதமிருந்து நடிப்பார்கள். மாகாமுனி வேடமேற்று நடிப்பவர்கள் முதலில் மேடையில் தோன்றுபோதே அவர்களுக்கு அருள் வந்துவிடும் பின்பு ஒரு கோழியை கடித்து உணர்வு பெற்று நடிப்பார்கள். பெரியக் காண்டியம்மன் மூங்கில் மரத்தின் மேல் தவம் புரிவதை சொல்ல.. உண்மையிலேயே மூங்கிலின் உச்சிக்கு ஏறி நடிப்பார்கள். அந்த மரம் பின்பு ஏலம் விடப்படும். குழந்தைக்காய் காத்திருப்பவர்கள் ஏலத்தில் எடுப்பார்கள் அல்லது தற்போதுதான் மழலை கேட்பவர்கள் அம் மூங்கிலில் தொட்டில் கட்டி., குழந்தையை தூங்க வைப்பார்கள். சில சமயம் சமூக நாடகங்களும் நடப்பதுண்டு "அரியலூரு ரயிலு வண்டி கண்ணம்மா... என் அங்கமே பதறுதடி பொன்னம்மா..." என்று பாடி மக்களை அழ வைப்பதும் நடந்திருக்கிறது. நாடகம் முடிய காலையாகிவிடும். திருவிழாவும் நிறைவுறும். இதில் சில விதயங்களை விடப் பட்டிருக்கலாம் என்றாலும் இப்பதிவை நான் எழுத நினைத்தது வேறு காரணத்திற்காக....., இப்படி அருமையாக கொண்டாடப்பட்டன திருவிழாக்கள். சினிமா....வந்துச்சு. பஞ்சாயத்து டீ.வி வந்துச்சு., இப்போ கேபிள். ஏர் பூட்டி சேற்றில் உழன்ற கால்கள்., டிராக்டர் மேல் கம்பீரமாக அமர்ந்த போது கவலை கொள்ளவில்லை. ஆனால் என்னவோ வள்ளி திருமணமும்., அர்ஜூனன் தவசும்., 'நாட்டாமை'யாகவும்., 'எஜமானாகவும்' மாறும் போது மகிழமுடியவில்லை. எத்தனை கலைகள் நம்மிடையே?., பொறக்கும் போது தாலாட்டு... போகும் போது கூட ஒப்பாறி., 'ஒயிலாட்டம்'னு., பாட்டும்., ஆட்டமுமே தன் மகிழ்ச்சி மற்றும் துக்கத்தின் வெளிப்பாடாக கொண்டிருக்கிறோம் நாம். சின்னக் குழந்தை கையிலிருக்கிற பொம்மையை திருப்பி, திருப்பி பார்க்கிற மாதிரி., இதோ மீண்டும் சொல்றேன் பாருங்களேன்., தப்பாட்டம், காவடியாட்டம், சிலம்பாட்டம், கரகாட்டம் (இதில் பல வகையிருக்குது சட்டிக் கரகம், ஆட்டக் கரகம் இப்படி), தேவராட்டம், குரவையாட்டம், கும்மி, ஒயிலாட்டம் (மாடு, மயில் மாதிரி ஆடுவது., தப்புடன், கொம்பும் கலந்த இசை இதற்கு) இதில்லாம தமிழ் நாட்டோட பல பகுதிகளில் பொம்மலாட்டம்., கூத்து., வில்லுப் பாட்டு மற்றும் நாடகங்கள். எவ்வளவு செல்வங்கள்?., கேரளாவில் கூட அவர்களது பாரம்பரிய கலைகளான கதகளி, மோகினியாட்டம், ஒட்டந்துள்ளல், செண்டு மேளம், சாக்கியர் கூத்து, கோடியாட்டம், கும்மி(இங்குமுண்டு)., படயாணி, தேய்யம், திரா போன்றவை பல பயிற்சிப் பட்டறைகளாலும்., அம்மக்கள் தங்கள் கலைகளின்பாற் கொண்ட அன்பாலும் காப்பற்றப் பட்டு, வரும் தலைமுறைக்கு கற்றுக் கொடுக்கப் பட்டு வருகிறது. இங்கும் கூத்துப் பட்டறை., அறிவொளி இயக்கத்தின் அரசு திட்டத்தை விளக்கும் நாடகங்கள் (இப்போதும் உள்ளதா?)., பிரளயன் அவர்களின் வீதி நாடகங்கள் ஆகியன நாடகத்தின் தொய்வை சிறிது சரிசெய்கிறது., ஆனால் மற்ற கலைகள்?., சிலர் எங்கள் பக்கம் நடத்துகிறார்கள். திண்டுக்கல், வடமதுரைப் பக்கம் நாடகங்களையே பிழைப்பாக கொண்ட நாடக கம்பெனிகள் இருந்தன., தற்போது என்னவானதோ?.
இங்கு வெர்ஜினியாவில் ‘Willamsburg’ என்றொரு இடம் உண்டு., 200 வருடங்களுக்கு முன்னார்., எப்படி ஐரோப்பியர்கள் இங்கு வந்தார்கள்., என்னென்ன உபயோகித்தார்கள்?., அவர்கள் உபயோகப் படுத்திய துப்பாக்கிகளிலிருந்து... சோப்பு... சீப்பு வரை இங்கு வைத்திருக்கிறார்கள். கிணற்றுடன் கூடிய வீடுகள் அங்குண்டு., அங்கு வேலையில் இருப்பவர்கள்., 200 வருடங்களுக்கு முன்னால் இருந்த ஐரோப்பியர்கள் போல உடையணிந்திருப்பர். இப்படி அந்த ஊரை ஒரு நினைவிடமாகவே காப்பாற்றி வருகின்றனர். அவர்கள் வந்து இங்க பண்ணுனாங்க?., செவ்விந்தியர்களை விரட்டியும்., போர் புரிந்தும்., தான் ஒடும் வரை உள்ள நிலம் அனைத்தும் எங்களுக்கு சொந்தம் என்று கூறி செவ்விந்தியர்களை ஏமாற்றினார்கள். பாருங்கப்பா.... அடுத்தவன அடிச்சுப் புடுங்குனத., 200 வருடமா நினைவுல வச்சு கொண்டாடுறாங்க... நம்ம முன்னோர்களால்... நாம் மகிழ்ச்சியாக இருக்க ஏற்படுத்தப் பட்ட., இயற்கையோடு இயைந்த கலைகளை அறிவியல் பூதத்தின் வாய்க்குள் திணித்துவிட்டு.... எப்படியிருந்த நாம....இப்ப 'மன்மத ராசா'க்களை சகித்துக் கொண்டிருக்கிறோம்!!!.