Wednesday, December 28, 2005

என்று மடியும் இந்த தீவிரவாதம்?

ஒவ்வொரு முறை புத்தாண்டு வருவதற்கு முன்னும் ஏதும் நடந்திரக் கூடாதுன்னு உயிரக் கையில பிடிச்சுகிட்டு இருக்க வேண்டியதா இருக்கு. இப்பப் பாருங்க வெள்ளம் போயி முடியுறதுக்குள்ள என்னன்னமோ வந்திருச்சு. இப்பப் பார்த்தா IISc ல தீவிரவாதம். நம்ம நாட்டில் லஞ்சம், ஊழல் போலவே தீவிரவாதமும் தவிர்க்கமுடியாத விதயமாயிருமோன்னு பயமா இருக்குங்க. ஒரு மாநிலத்த அது 'எங்க' இருக்குன்னு வரைபடத்துல தெரிஞ்சுக்கறதுக்கு முன்னாடி, அந்த ஊர்ல இருக்கிற தீவிரவாத குழுக்கள் பேரு தெரிஞ்சு போகுது நம்ம பிள்ளைகளுக்கு..

எத்தனையோ இன, மொழி, பண்பாடு மாறுபாடு கொண்ட ஒரு தேசம். அதை ஒன்றாக இணைப்பதற்கு ஒரு பெரியவர் பட்டபாடு., அந்த இரும்பு மனிதனின் உழைப்பால் விழைந்த கட்டிடத்தை எலிகள் ஓட்டையிட பார்க்கின்றன. எலிகளின் பற்கள் ஓட்டையிட ஏதுவாக இருப்பதுதான் கொடுமை.

அஸ்ஸாம்ன்னா உல்ஃபா., பிகார், ஒரிசா ந்னா மாவோயிஸ்ட்., நாகாலந்துன்னா நேசனல் சோஷியலிஸ்ட் கவுன்சில் ஆஃப் நாகாலாந்து., திரிபுரான்னா திரிபுரா டிரைபல் எரியா அட்டானமஸ் டிஸ்டிரிக் கவுன்சில்., மணிப்பூர்ன்னா பீப்புள் லிபரேஷன் ஆர்மி, மிசோரம்னா மிசோ நேசனல் ஃப்ரண்ட், பிகார்ல ராஜ்திர் வேற, பஞ்சப்ல உங்களுக்குத் தெரியும் ஆப்பரேஷன் ப்ளூ ஸ்டார மறந்திருக்க மாட்டோம்., உத்திரப் பிரதேசம் - கேக்கவே வேண்டாம், ஆந்திரான்னா நக்சலைட், ஜம்முன்னா... அட, அத ஏன் நான் சொல்லிகிட்டு?. தீவிரவாதத்தின் வேர் எங்கு ஆரம்பிக்கின்றது. அது சுதந்திரம் கிடைத்ததிலிருந்தே வேர்விட ஆரம்பித்து விட்டது. அதற்கான காரணங்கள்... முக்கால்வாசி தனியான சுதந்திரத்தை கோரித்தான்.

ஒரு குறிப்பிட்ட தனியான கலாச்சாரம்(ethnic) உடைய மக்கள் ஒன்றாக இருக்கும் போது வேறு ஒருவரின் ஊடுருவலைத் தவிர்க்க., தற்போது பங்களாதேஷ் மக்களின் எல்லைப் புற ஊடுருவலைத் தவிர்க்க அஸ்ஸாமில் இத்தைய கும்பல்கள் உருவாகின. மணிப்பூர், நாகலாந்து இரு மாநிலங்களுக்கிடையேயான எல்லை பிரச்சனையும் தீவிரவாதிகளை உருவாக்கின., மணிபூரில் மட்டும் 19 தீவிரவாதக் குழுக்கள் உள்ளனவாம். உள்நாட்டு எல்லைப் பிரச்சனையை கட்டுக்குள் வைக்க முடியும். நிலவுடமை சக்திகளின் ஆதிக்கம்., வேலையில்லாத் திண்டாட்டம் மற்றம் சமுதாய ஏற்றத்தாழ்வு போன்றவை மாவோயிஸ்ட்., ராஜ்திர்(பிகார்) போன்றவை தோன்ற காரணமாகச் சொல்லப் படுகின்றன.

தாங்கள் பகுதி மக்கள் வஞ்சிக்கப்டுவதாக சொல்லி உருவாகின நக்சலைட் அமைப்புகள். மதக்காரணங்களுக்காக உருவான அமைப்புகள்தான் பஞ்சாபிலும், காஸ்மீரிலும். எல்லாவற்றிலும், அதிக உயிர் குடிப்பது மத தீவிரவாதம்தான். உலகம் முழுவதும் தன் கோரக்கரங்களை விரித்திருப்பதும் இதுதான். நிதமும் நம் எல்லைப் பகுதிகளில் நம் சகோதரனொருவன் செத்துக் கொண்டுதான் இருக்கிறான். எல்லைப்புற கிரமங்களில் கூட்டமாக மக்கள் கொல்லப் படுவதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

சுதந்திரமான ஐந்து வருடங்களிலேயே இத்தைய கும்பல்களை கூட்டி பேச்சு வார்த்தை நடத்திய நம் மத்திய அரசு., இன்றும் பேசிக் கொண்டுதானிருக்கிறது. வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள்., ஒவ்வொரு மாநில தீவிரவாத அமைப்புகளுடனும்., பேச்சு வார்த்தை நடத்தப் பட்டு ஏதேனும் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கும். எல்லா நாடுகளிலும்தான் தீவிரவாதம் இருக்கின்றது. ஆனால் நம்நாட்டில் மழை, வெள்ளத்தைப் போல் மக்கள் சாதரணமாக எடுத்துக் கொள்ள வேண்டிய நிலை. தினம்தினம் துக்கப்பட முடியுமா?. பார்லிமெண்ட்டில்., பேசும் கூட்டங்களில் கூட நாம் தீவிரவாததை நினைத்து அச்சச்பட வேண்டிய நிலைமை. இம்மாதிரியான நிகழ்வுகள் நடக்கும்போதெல்லாம் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோரின் அதிர்ச்சி அறிக்கையுடன் எல்லாம் முடிந்து விடுகிறது. இஸ்ரேலில் என்ன நடக்கிறது ., பாலஸ்தீனத்தில் என்ன நடக்கிறது என்பது உலகம் முழுவதும் தெரிகிறது. என்னத்த சொல்றது போங்க.

**சக்கரம்**

இதோ இங்க சைக்கிள்ல வேகமா ஒரு ஆளு போறாரு நல்லாப் பார்த்துக்கங்க... அடடா., அது ஆளில்ல 25 வயசு பையன்., 25 வயசெல்லாம் பையன்னு சொல்லலாமா?., ஆளு பாக்க சின்னப் பையனாத்தான் இருக்கான். அதுசரி எங்க அவ்வளவு வேகமாப் போறான்?., சைக்கிள் பின்னாடி ஒரு சின்னப் புள்ள வேற உட்கார்ந்திருக்குது... பாருங்க. நேரா நம்ம 'பகவதியம்மன்' கோவிலப் பார்த்து போறாப்பிடி இருக்குது?. ஆமாம்., சரி., சட்டுன்னு அந்த புதர்க்கு பின்னாடி ஓளிஞ்சுக்கங்க. அட, என்னமோ ‘சாமி’ முன்னாடி பூப் போட்டுப் பாக்குறான்., அந்தச் சின்னப் புள்ள ஒரு சீட்ட எடுத்து குடுக்குது. அதப் படிச்சிட்டு, முகமல்லாம் சிரிப்பா திரும்புறான். அட., எங்க பக்கத்து வீட்டுப் பையங்க. எனக்கு இப்பத்தாங்க ஞாபகம் வருது., இந்தப் பயல நேத்து இவுங்க அப்பா திட்டோ, திட்டுன்னு திட்டிக்கிட்டு இருந்தாரு., "ஏண்டா., கல்யாணம் ஆயிருச்சு, இன்னும் கலைல பத்து மணி வரைக்கும் தூங்குற., வேலை, கீலைக்குப் போகுலைன்னா விவசாயத்தையாவது பாருன்னாரு., இவன் அதெல்லாம் முடியாது நான் எதோ 'காண்ட்ராக்டர்'., அதுதான் ஏதோ மணலு, சல்லிலேயே கிடக்குற வேலையாமே அது., அத எடுக்கப் போறேன்னு பேசிகிட்டு இருந்தான். ஒருவேளை அதுக்குத்தான் சீட்டுப் போட்டு பார்த்தானோ என்னமோ?. அந்த சின்னப் புள்ளைக்கு மிட்டாயக் குடுத்து கேட்டா சொல்லப் போகுது. நீங்க வாங்க என்னோட... அவன் சைக்கிள் ஓட்டத்துக்கு ஓடி வரணும் என்ன?., கொஞ்சத்துரந்தான் வீடு. அடடா., அந்தப் பய, புள்ளைய இறக்கிவிட்டுட்டு எங்கேயோ போறானே?., சரி அவங்க அம்மாவக் கேட்போம்...

அம்மா செல்லம்., தம்பி என்னாத்துக்கு இம்புட்டு வேகமா போகுது.?. கொஞ்ச முன்னதான் தம்பியக் கொயிலுல பார்த்தோம்.

அவன்... இந்த ரோடு போடுற வேலையெடுக்க ' யூனியன் ஆபிஸ்க்குப் போறான். இவங்கெல்லாம் யாரு?.,

ம்... என் சொந்தக் காரங்கதான்., இப்பத்தான் வந்தாங்க நான் வாரேன்.

வாங்க போகலாம்., பாத்திங்களா, நான் சொன்னது சரியாப் போச்சா?., ஆனாப் பாருங்க 'காண்ட்ராக்டு' வேலைய எடுக்க எல்லாரும் காரு, சீப்புன்னு போவாக., நாங்கூட யூனியன் ஆபிஸ்ல ஒரு மனுக் குடுக்கப் போனப்ப பார்த்தேன்., வரிச கட்டி நிக்குது காரு., என்னான்னு கேட்டா 'டெண்டர்'ன்னு அங்கேருக்குற பியூன் சொன்னாரு., இந்தப் பய சைக்கிள்ல போயி... என்ன பண்ணுவான் பாவம்., சரி போனவன் வந்துதான ஆகணும். வீட்டிக்குள்ள வாங்க., அவன் வந்ததும் பார்க்கலாம்.

***
அப்பா., கொஞ்சம் கண்ணசந்துட்டேன்., பொழுதாகிப் போச்சே., நீங்களும் தூங்கிட்டிகளோ?., அவுங்க வீட்டுல சிரிப்புச் சத்தம் கேட்குது?. அவனுக்கு வேல கிடைச்சுருச்சாட்டம் இருக்கு. சும்மா சொல்லக் கூடாதுங்க கெட்டிக்காரப் பய. நீங்க எங்க கிளம்புறிங்க?. கொஞ்ச நாளைக்கு இருந்துட்டுப் போங்களேன். சரி உங்ளுக்கு வேலையிருக்குதுன்னாப் போயிட்டு வாங்க. நான் அப்பப்ப கடுதாசி எழுதுறேன் சரியா?.

***

எல்லாரும் நல்லாருக்கிங்களா., இம்புட்டு சீக்கிரம் உங்களுக்கு கடுதாசி எழுதுவேன்னு நினைக்கவே இல்லைங்க... நம்ம பய இப்ப ஆளு நல்லாத் தெளிஞ்சு இருக்காங்க., ஏதோ 'புல்லட்'டாமே? தேராட்டாம் நிக்குது., அதுலதான் போறான்... வாறான். திரும்பவும் நேத்துப் பாருங்க அவங்க வீட்டுல சண்டை இப்ப அவுக அப்பங்கூட இல்ல சித்தப்பனோட., அவர் ஏதோ ஏண்டா என்கிட்ட சொல்லங்கிறாரு., உன்னால அவமானப் பட்டேங்கிறாரு. என்னான்னு பாத்தா... இந்தப் பயலுக்கு யூனியன் ஆபிஸ்ல கூப்பிட்டு வேல குடுத்துருக்காக... இவன் என்னா சொல்லிருக்கான் தெரியுமா?., வேற யாருக்காவது குடுங்க நான் இப்ப வேலை செய்யறதுல்லன்னு சொல்லிருக்கான். அந்த வேலைய குடுக்கச்சொல்லி ஒரு பெரிய மனுசன்கிட்ட சிபாரிசு பண்ணுனது அவன் சித்தப்பு. நம்ம பயலுக்கு என்ன ஆச்சு?., இதுவரைக்கும் யூனியன் ஆபிஸ்க்கு அலையா அலைஞ்சு வேல எடுத்தவன் ஏன் வேண்டாம்னு சொல்றான்னு எனக்கு கொஞ்சம் வெசனந்தாங்க. நாம் பாக்க வளர்ந்த பயன்னு மனசு அடிச்சுக்குச்சு. அப்புறந்தான் தெரிஞ்சுது. இவன் இப்போ பெரிய 'காண்ராக்டராம்'. ரோடு, பாலம்னு பெரிய வேலையாத்தான் எடுப்பானாம். யூனியன் ஆபிஸ்ல குடுக்குகிற சின்ன வேலையெல்லாம் செய்ய மாட்டானாம். அப்பிடிப்போடுன்னு நினைச்சுகிட்டங்க. சரி., அத வீட்டுல சொல்ல வேண்டியதுதானே? இப்பிடித்தாங்க இந்தப் பயலுவ கொஞ்சம் விஷயந் தெரிஞ்சாப் போதும்., எல்லாத்தையும் பெத்தவுககிட்டருந்து மறைக்கிறது. சரி., அங்க மழையெல்லாம் எப்படி இருக்கு?. வேற விஷயமில்ல. இருந்தா அப்புறம் கடுதாசி எழுதறேன்.

***
என்னங்க எல்லாரும் நல்லா இருப்பிகன்னு நினைக்கிறேன். கொள்ள நாள் ஆகிப்போச்சு உங்களோட பேசி., கடுதாசிலதான். அப்புறம் நம்ம பயலப் பத்தி கேட்கவேயில்லயே?., இப்ப ரொம்ப பெரியாளாய்ட்டாங்க. பிளசரு காருலதான் எங்கையும் போறான். அவங்க வீட்டுக்கு யார்., யாரோ வாராக... பாத் தா எல்லாரும் பெரிய மனுசங்களாட்டந்தான் இருக்கு. தெக்கயிருக்குற ஒரு மந்திரியோட நம்ம பய ரொம்ப நெருக்கமா இருக்கானாம். அவருதான் தெய்வங்கிறான். என்னமோ நல்லாயிருந்தா சரிதான் என்னாங்கிறிக?. நெறையா ஊர்ல வேலையெடுத்து நிக்க நேரமில்லாம அலையுறான். ஒரு காலத்துல எந்நேரமும் தூ ங்கிக்கிட்டு இருப்பான். அவன் பண்ற ஒரே வேலை சாயந்திரம் எழுத்திருச்சு மெதுவா பவுடரப் பூசிகிட்டு அவன் சோட்டுப் பயகலோட போயிப் பந்தடிக்கிறது மட்டும்தான். கல்யாணமாகிக் கூட கொஞ்ச நாள் அப்பிடித்தான் இருந்தான். இப்ப இராத்தூக்கங்கூட இல்லாம அலையுறான். என்னையக் கேட்டா 23 வயசுலயிருந்து 45 வயது வரைக்கும் பயலுக நிக்க நேரமில்லாமத்தான் அலையணும். சரிங்க., அப்புறம் நிதானமா உங்களுக்கு எழுதுறேன்....

***

ஆர்வந்தாங்காம நீங்க போட்ட கடுதாசி கிடைச்சுது. நம்ம பய இப்பக் கூட ஏதோ பெரிய பாலம் எடுக்கப் போறதா டி.விலயெல்லாம் கூட சொன்னாக., ரொம்ப பெரிய்ய்ய வேலையாம் அது. வேற ஊர்ல வேலங்கிறதால 'காச' தண்ணியா செலவழிச்சுகிட்டு இருக்கான். இடையில ரெண்டு , மூணு லாரி கூட வாங்கியிருக்கான். அந்தூர்ல கூலி அதிகமா குடுக்கனுங்கிறதுக்காக சித்தாளு, கொத்தனாரு எல்லாரையும் இங்கிருந்து கூட்டிகிட்டுப் போறான். அவங்களுக்கு அங்க தங்குரதுக்கு இடம்., சாப்பாடு எல்லாம் ஏற்பாடு பண்ணிகிட்டு ஓய்வில்லாம அலையுறான். இரண்டு மணி நேரந்தான் தூங்குறானாம்., அவங்க அம்மா சொல்லிச்சு. இன்னொன்னையும் அவங்கம்மா சொல்லிச்சுங்க., இப்பல்லாம் அவன் அவுங்க அப்பாவ மதிக்கறதே இல்லையாம். வேலைல இருக்குற சித்தப்பனையும் நீ வட்டத்துக்குள்ளதான் சதுரம் போட முடியும்(மாசச் சம்பளம் வாங்குறதச் சொல்றான் போல) நான் எங்கவேணுமின்னாலும் போடலாம்னு எகத்தாளம் பேசுறானாம். அது ஒன்னுதாங்க அவங்கிட்ட., நம்ம பாக்க அவன் மொத வேலை எடுத்தான் தெரியுமா? அப்ப அவுங்க குடும்பம் முழுக்க 'சொத்த' அவன் பேர்ல 'பவரு' எழுதிக்குடுதுதான் எடுத்தானாம். இப்ப அவங்களையே இப்படிப் பேசலாமா?. சரிங்க எவ்வளவு நாள் ஆச்சு உங்களையெல்லாம் பாத்து., ஒரு எட்டு இங்க வந்திட்டுப் போங்க. தை மாசம் வேற வரப் போகுது காடெல்லாம் பூ பூத்து 'கொல்'லுன்னு கிடக்கு. நீங்க பாக்க வேணாமா?.

***
அடடே வாங்க., வாங்க எப்பப் பார்த்ததுங்க., 6 வருசம் இருக்குமா?., உட்காருங்க. என் கடுதாசியெல்லாம் கிடைச்சுதா?. என்னங்க பக்கதூட்டப் பாக்குறிங்க?., அது ஒரு பெரிய கதைங்க. அந்தப் பாலம் சொன்னல்லங்க... அது கட்சித் தலைவர் ஒருத்தர் இறந்ததுனால நம்ம பயலுக்கு கிடைக்கிலைங்க...ஆட்சியும் மாறிப் போச்சுங்க. அவன் செலவழிச்ச காசு அம்புட்டும் போச்சுங்க. அவங்கிட்ட இருக்கறது எல்லாத்தையும் வித்துட்டாங்க. வீட்டுக்குத் தெரியாம., வேலையெடுக்க நிறையாக் கடன வேற வாங்கி வச்சுட்டாங்க...இப்ப அவங்க வீட்டுல இருக்குரவங்கதாங்க அவனுக்கு ஆறுதல் சொல்றாங்க. "டேய் பணம்தானடா போச்சு... நாங்க இல்ல?ன்னு' அவங்கப்பாதாங்க நெதமும் ஆறுதல் சொல்லிட்டு இருக்காரு. நம்ம பய சருக்கீட்டாந்தாங்க., ஆன எந்திருச்சுருவான்னு எனக்கு நம்பிக்கையிருக்குங்க... எப்படிங்கிறிங்களா?., அங்க பாருங்க!., மாசம் 8 ஆயிரம் ரூபா வட்டி மட்டுமே கட்டுனாலும்., எதப் பத்தியும் கவலை படாம., குழம்பு வைக்கிறதுக்கு கோழிய புடுச்சுகிட்டு இருக்கானா?. துணிச்சலாவனுங்கோ.

**மாயமான்**எங்கள் இல்லத்தில் இரண்டு தாத்தாக்களின் ஃபோட்டோக்கள் மாட்டியிருக்கும். இரண்டுமே மிகப் பெரிய்ய்ய்ய படங்கள். இரண்டிலும் வெவ்வேறான தாத்தாக்கள். ஒரு தாத்தா படம் எப்போதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு கம்பீரமாக வீட்டின் வரவேறப்பரைத் திண்ணையில் தொங்கிக் கொண்டிருக்கும். இன்னொரு தாத்தாவின் படம்., இதற்கும் பூக்கள் உண்டு என்றாலும். அது மக்கள் அதிகம் புலங்காத பட்டாளை சுவற்றில் இருக்கும். முன்னவர் நல்ல தாத்தா போல அதனால் இங்க இருக்கிறார்., இன்னொருத்தர் ஏதோ குடும்பத்துக்கு ‘ஆகாத’ காரியம் பண்ணிவிட்டார் போலன்னு நினைச்சுக்குவேன். பட்டாளைப் படத்தை கடக்கும்போதெல்லாம் அந்தத் தாத்தாவில் கரிய விழிகள் என்னை பரிதாபமாகப் பார்ப்பது போல இருக்கும். நான் பெரிசான உடனே உன்னையும் திண்ணைச் சுவத்துல மாட்றேன் சரியா?ன்னு அவரோட பேசுவேன். வளர வளரத்தான் தெரிஞ்சுது. திண்ணைப் படத்துல இருக்கிறது அய்யா. காமராசர்ன்னும்., பட்டாளைப் படத்துல இருக்கிறது அறிஞர் அண்ணான்னும். இப்படி அரசியல் என்பது என் உறவுபோலத்தான் எனக்கு அறிமுகமானது. எங்க அப்பாவோட அப்பா தீவிர காங்கிரஸ்காரர். எங்கப்பா தீவிரமில்லையென்றாலும் தி.மு.க பற்றாளர்., ( அவரது திருமணத்தின் போது வந்த அன்பளிப்புதானாம் அண்ணா படம்).

எங்க மாமா ஒருவர் நல்ல வளமான விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். நான்கு பெண்களுடன் பிறந்த ஒரே ஆண். மிகவும் செல்லமாக வளர்க்கப் பட்டார். தனது 19 ஆவது வயதில் அப்போது தமிழகத்தில் பிரபலமாக இருந்த கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். தன் தோட்டத்தில் விளைகின்ற விளைச்சலின் பலன் அனைத்தையும் கட்சி நிதியாக்கி களித்தார். எப்போதும் தன்னைச் சுற்றி ஆட்கள்., கட்சியின் முக்கியமானவர்கள் தன்னை வந்து பார்ப்பது என பரபரப்பாகவே எப்போதும் இருப்பார். கட்சிக் கூட்டம் என்றால் ஒரு வாரம் முன்பே வீட்டிலிருந்து கிளம்பி விடுவார் அல்லது ஆட்கள் வந்து அழைத்துச் சொல்வார்கள்.

அரசியலே ஒரு போதைதான்., மெல்ல மெல்ல 'பாட்டில்' போதையும் பழக்கமாகியது. வீட்டில் ஏழரை ஆரம்பமானது. எப்போது பார்த்தாலும் கட்சி... தலைவர்தான்... வீடு என்ற ஒன்றே மறந்து போனது. எப்போதாவது வருவது... வந்தாலும் நடுநிசியில் தள்ளாடியபடி., விடிந்ததும் எழுந்து குளித்து விட்டு பளீரென வெள்ளைச் சட்டை, கரை வேட்டி கட்டிக்கொண்டு கிளம்பி விடுவது. இவரது செய்கை கண்டு கொதித்த நம்மாட்கள் (நம்ம பங்காளி வீட்டுப் அத்தையை மணந்திருக்கிறார்). பஞ்சாயத்துப் பண்ணியும் பலன் இல்லை. முன்பை விட அதிகமானது., பிறகென்ன? குடும்பம் சிதறியது... இவர் ஒரு பக்கம். பிள்ளைகளில் இருவர் மனைவின் வீட்டில், மனைவியும் கடைசி மகனும் வேறு ஒரு ஊரில் என மொத்தமும் மாறிப் போனது ஒரு நாள். அப்போதும் திருந்தவில்லை... அழகு தமிழில் கட்சி பற்றி பேசிக் கொண்டே... அருமைக் குடுப்பத்தை தொலைத்தார். ஊரின் நடுவில் சற்றுப் பெரிய வீடு அவருடையது. முன்புறம் மல்லிகைப் பந்தல் அமைத்து ரம்மியமாக இருக்கும். ஒரு முறை ஊருக்குப் போன போது அந்த வீட்டை பார்க்கலாம் எனப் போனேன். என் கண்கள் குளமாகியது., வீடெல்லாம் ஒரே, குப்பை கூளமாக ஒட்டடை படிந்து இங்கு மனிதர்கள் வாழ்கிறார்களா? எனும்படி இருந்தது. முன்புறம் உள்ள மல்லிகை கொடி மட்டும் வாடவில்லை.

பக்கத்தில் குடியிருந்தவர்களிடம் "அந்தாளு (கோபம்தான்!) வர்றதே இல்லையா?" எனக் கேட்டேன். அவர்கள் "ஏன் வாரதில்ல? இப்பத் தெனமும் வந்து இங்கதான் படுத்துகிறாரு" என்றார்கள். 'பக்'கென்று இருந்தது. இந்தக் குப்பையிலயா?., ஆட்கள் சூழ எப்போதும் சிரித்திருக்கும் அந்த வீடு, இப்போது அவரைப் போலவே ஆட்கள் அற்று ஒன்றையாய் நின்று கொண்டிருக்கிறது. என் தோழி ஒருத்தியை துணைக்கு அழைத்துக் கொண்டு அத்தனையும் துடைத்துப் பெருக்கி., பாத்திரங்களை அடுக்கி., தண்ணீர் பிடித்து வைத்துவிட்டு வந்தேன். (எங்காளுகளுக்கு தெரிஞ்சுது அவ்வளவுதான்.) பிறகு ஊருக்குப் போகும்போதெல்லாம் இது நடக்கும். அவர் வீடு சுத்தமாக இருந்தால்., நான் வந்திருக்கிறேன் எனத் தெரியும். எங்காளுக முணுமுணுக்க என்னை பார்க்க வருவார் "மாமன் நல்லவன்., உனக்குத் தெரியும்...." என்னன்னமோ உளறுவார். 'இவிங்கெல்லாம் புத்தி சொலியிருக்கலாம்ல...' எங்க வீட்டுப் பெருசுகள் மீது பாய்வார். அப்போதுதான் தூங்க ஆரம்பித்திருக்கும் ஒருவரை எழுப்பி., 'நான் நடு இராத்தியில கத்தணும்., நீ தூங்கணுமா? ., எந்திருச்சு உட்காரு., நான் போற வரை தூங்கக்கூடாதுன்னு ஆர்ப்பாட்டம் செய்வார்... சிறிது நேரம் மிக அமைதியாக அமர்ந்திருந்துவிட்டு., 'சரி... நீ போய் தூங்குன்னு' சொல்லிவிட்டு தள்ளாடியடி எழுந்து செல்வார். ஊரில் மதிக்கப்பட்ட ஒரு மனிதன்., 'கள்ளுத் தண்ணி மாமா' வாகவும் 'தண்ணி வண்டி' மாமாவாகவும் மறியது இப்படித்தான். சரி... இவ்வளவு இழந்து அவர் அரசியலில் பெற்றது என்ன?., 'வைஸ் பிரசிடெண்ட்' என்ற வெளியே அதிகம் தெரியாத பதவி. அதுவும் 'அந்தப் பேச்சாளர்'., அந்தக் கட்சியிலிருந்து விலகும்போது அவருடன் சென்றாதால்., போய்விட்டது. அரசியல் என்பது நல்ல உள்ளம் கொண்டவனுக்கு எப்போதுமே ஒரு புதை குழிதான். தன்பாட்டில் தான் உண்டு தன் வேலையுண்டு என இருப்பவனையும் அரசியல் உரசிப் பார்க்கத் தவறுவதில்லை. (ஒரே ஆள்.,) ஊரின் ஊராட்சி அளவில் ஒரு கட்சியின் செயலாளராகவும்., வட்ட அளவில் வேறொரு கட்சியின் பொருளாராகவும் இருப்பவனின் அரசியலே எடுபடும் அரசியல். அரசியல் என்பது ஒரு மாயமான்., அதை உணர்ந்தவன் அங்கு பல மாயங்கள் செய்து வெற்றி பெருகிறான்.. எப்போதுமே அடிமட்டத்தில் நடக்கும் அரசியல் வேறுபட்டது., எந்த ஊடகத்தாலும் எடுத்துக் காட்டப் படாதது. அவர் தனது 55 வயது வரை எவ்வித மாற்றமுமின்றி அப்படியே வாழ்ந்து 6 மாதம் முன்பு மறைந்தார். அவரைப் பார்த்து வளர்ந்த விடலைகள்தான் இன்றும் எங்கள் ஊரில் கரை வேட்டியுடன் கட்சிக் கொடியேற்றுகின்றன(!).


நம்மூரில்தான் சாமானியனின் சட்டைப் பையிக்குள்ளும் அரசியல் புகுந்து கொள்கிறது., காலம் செல்லச் செல்ல தற்காலிக முதல்வனாக்கி சிம்மாசனம் தருகிறது இல்லையெனில் தலைமறைவாக ஓட விட்டு தவிக்க வைக்கிறது. சகல சக்தி வாய்ந்த அந்த அரசியல் இல்லாமல்.. உப்புச் சப்பில்லாம மீன் குழம்பு சாப்பிடுற வாழ்க்கைதானாப்பா... இங்க!. மக்களுக்குத் தெரியாமல் அரசியலில் தப்பு நடக்கிறதென்பதெல்லாம் சும்மா... நம்மிடையே இருக்கும் ஒருத்தந்தானே அரசியலுக்குப் போகிறான். எம்.எல்.ஏக்களுக்கு 10% தரமல் எவனாவது ஒரு ஊரில் ஒரு காண்ட்ராக்ட் எடுக்க முடியுமா?(எந்தக் கட்சி ஆட்சியில இருந்தாலும்) ஆட்சியில் ஒரு கட்சி இருக்கிறது., எம்.எல்.ஏ எதிர்க் கட்சியா இருந்தாலும் அவருக்கு கொடுக்கணுமா இல்லயா?., பொட்’டீ’க்கடை வாங்க!., வந்து சொல்லுங்க! (பின்ன தனியாவா மாட்டிக்கச் சொல்றிங்க?:-))) . குடுத்துதான எடுக்குறோம்?. 20% கேட்டாலும் கொடுப்போம். தொழில விட்டுட்டு ஓடி வந்துர மாட்டோம். நல்லாப் யோசிச்சுப் பாருங்க, எந்த தொழில்ல அரசியல் தலையீடு இல்லாம இருக்கு?. இல்ல... மக்கள்ல எத்தன பேருக்கு இது தெரியாம இருக்கு?., எம்.பி களுக்குன்னு நிவாரணநிதி அரசு வழங்குது., அத எப்படி பயன்படுத்துறாங்க., மாஹாராஷ்ராவுல இருக்க ஒரு எம்.பி, இங்க அந்த நிதியப் பயன்படுத்தி நல்ல காரியம் செய்யலாம். ஆனா எல்லாரும் நிதிய உபயோகிச்சு ஆறு, குளங்களை 'தூர்தான்' வாருவாங்க., அது ‘ஏன்’னு படித்த ஆண்கள்(நன்றி. குஷ்பு!) உங்களில் எத்தனை பேருக்கு தெரியாது?. உனக்குத் தெரிஞ்சு என்ன பண்ணுனன்னு 'நச்'சின்னு சிலர் கேட்பிங்களே?., நானும் உங்கள மாதிரித்தான் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா' ந்னு போய்கிட்டேயிருக்கேன். பின்ன என்ன செய்யச் சொல்றிங்க?., அரசியலுக்கு வருகிற நடிகர் அவர் கைக் காசப் போட்டு வாறாருன்னு ‘சிரிக்காம’ பின்னூட்டம் போடுறிங்க., நீங்களாகவே கண்களை மூடிக்கொள்கிறீர்கள்., நானும் அதைப் போல் பாவனையாவது செய்கிறேன். நம்மைப் பார்த்து இன்னும் பலர் கண்மூடுவர். நம்மால் முடிந்தது அதுதான்.