Tuesday, December 27, 2005

**இவர்கள்**

நினைத்தவுடன் எரியும் விளக்குகள்., எங்கு செல்ல வேண்டுமெனினும் நம் வசதிக்கு தக்கதாய் வாகனங்கள்., ஆரோக்கியம் காக்கும் அரை மைல் தொலைவு மருத்துவமனை., உலகம் தெரியக் கல்விக்கூடம், அறிவு தெளிய நூலகம். பார்த்து இரசிக்க சினிமா., பொழுதைப் போக்க தொலைக்காட்சி. இத்தனையிருந்தும் நாம் சில சமயம் சலிப்புடன் சொல்வது 'ச்சே என்ன வாழ்க்கை?'., இதை உண்மையாய்ச் சொல்ல வேண்டியவன் மேலே உக்கார்ந்து கொண்டிருக்கிறான். எங்க தெரியுமா?., நீலகிரி, கல்வராயன் பகுதியில் உள்ள காடடர்ந்த மலைகளில்.

நீலகிரியில் மட்டும் சுமார் 18 வெவ்வேறு இன மலை மக்கள் வாழ்கிறார்கள். படுகர்கள், தோடர்கள், குறும்பர்கள், கோடர்கள், இருளர்கள், பணியர்கள், முல்லுக் குறும்பர்கள் மற்றும் காட்டு நாயக்கர்கள். வெளியே தெரியும் (அல்லது எனக்குத் தெரிந்த) இனங்கள் இவ்வளவுதான்.

இதில் முன்னேறிய இனம் படுகர் இனம். இவர்கள் ஒரு காலத்தில் தம்மை 'Tribes' என வகைப்படுத்துவதையே மறுத்தவர்கள். பின்னாளில் சேர்க்கப்பட்டதாக கேள்வி., இப்போது எப்படியோ?. இவர்கள் பேசும் 'படுகு' மொழி வரிவடிவமில்லாதது., கன்னடத்தை சிறிது ஒத்திருக்கும் இவர்கள் விஜய நகர பேரரசின் போது மைசூர் நிலப் பகுதிகளில் இருந்து நீலகிரிக்குப் பெயர்ந்தார்கள். படுகர்களின் வழக்கங்கள், மொழி, வரலாறு செறிவானவை. இவர்களில் சிலர் பொருளாதாரத்தில் உயர்ந்தவர்கள். சொந்தமாக 'எஸ்டேட்' வைத்திருக்கக்கூடிய படுகர்கள் உண்டு. நன்கு கல்வி பெற்று மருத்துவர்களாகவும், பொறியியளாளர்களாகவும் வெளிநாடுகளிலும் வேலை பார்க்கின்றனர். ஒரு 10% இப்படியுள்ளனர். மற்றவர்கள் பிந்தங்கிய மற்றும் வறுமை கோட்டிற்கு கீழான நிலையில். இவர்களில் ஆறு உட்பிரிவுகளும்(இன) உண்டு.

தோடர்களின் முக்கிய தொழில் தோட்டம் செய்வது (டீ). பெரும்பாலும் குடிசைகளில் வாழ்கிறார்கள். இவர்களுடைய பூர்வீகம் எதுவெனத் தெரியவில்லை. எருமையை அருமையாக வளர்ப்பார்கள். அவர்களுடைய கடவுள் வழிபாட்டிற்கும் எருமைக்கும் தொடர்பு உள்ளது. என்னவென தெரிந்தவர்கள் சொல்லுங்கள். இவர்களும் வரியில்லா மொழியே பேசுகிறார்கள். இவர்களுடைய நாகரீகம் கிரேக்க, சுமேரிய நாகரிகத்துடன் தொடர்புடையது. மற்றுமொரு ஆச்சரியப் படுத்தும் விதயம், தோடர்களின் உணவு முறை. மலைவாழ் மக்களிலேயே எனக்குத் தெரிந்து தோடர்கள் மட்டும் 'சைவ' உணவு முறையை பின்பற்றுகின்றனர். பக்தியிலும் மற்றவர்களைக் காட்டிலும் கூடுதலாக விளங்குகின்றனர்.

கோத்தகிரியில் வசிக்கும் கோடர்கள் பெரும்பாலும் மரவேலை செய்பவர்கள். இவர்களில் சிலர் சொந்த நிலமும் நல்ல கல்வியும் பெற்றவர்கள்.

குறும்பர்கள் தான் நாம் மலைசாதி என்றால் ஒரு 'டிபிக்கல்' உருவம் ஒன்று மனதில் வைத்திருப்போமில்ல அப்படி இருப்பார்கள். அடர்ந்த காடுகளில் தேனெடுப்பதும், மூலிகைகள் பறிப்பதும் செய்வார்கள். தினைமாவும், தேனும் உணவு (குற்றால குறவஞ்சி., வசந்த வள்ளி, பந்து எல்லாம் நினைவுக்கு வருதா?).குறும்பர்கள் பெரும்பாலும் படுகர், கோடர் போல் அல்லாது வறுமையில் உழல்பவர்கள்.

இருளர்களும் குறும்பர்களைப் போலவே டீ எஸ்டேட்டில் வேலை செய்கிறார்கள். இவர்களது உடைமையும் வறுமையே.

பணியர்கள் நிலை இன்னும் பரிதாபம். இவர்களில் பெரும்பாலோர் கொத்தடிமைகளாக வேலை செய்கின்றனர். தற்போது இவர்களுக்கென நலச் சங்கமும்., கூட்டுறவு சங்கள் உள்ளன.

இன்றும் வில்லில் விலங்கடித்து வேட்டையாடும் இனம் உண்டு என்றால், அது முல்லுக் குறும்பர்கள்தான். விவசாயம் தொழில் என்றாலும் அதிகம் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களே.


அதிகம் மலையேறாமல், மூலிகை பறித்து மருந்து தராமல், வேட்டையாடாமல், ‘மலை சாதி இனம்’ என்று பெயர் கொண்டுள்ளவர்கள் காட்டு நாய்க்கர்களே.
நல்ல கலர்களில் உடையணிந்து தாடி வச்சிகிட்டு குறி சொல்லும் குடுகுடுப்பைக் காரர்களாகவோ., சாமி மாட்டுடனோ வருவார்கள். தெலுங்கு மாதிரி தமிழ் பேசிகிட்டு போவாங்க. ஓவியம் வரைவதில் (மூலிகைகளைக்கொண்டு வண்ணம் தயாரிப்பார்கள்)., நாடகங்கள் நடிப்பதில் வல்லவர்கள். வேட்டை நாய்க்கர்கள் என்ற பெயரும் உண்டு.

**
இவர்களும் மலைவாழ் மக்களே. இந்திய 'ஜிப்ஸி'க்கள். இப்போதல்ல., ஒரு காலத்தில். நம் குறிஞ்சி நிலப் பகுதியில் இவர்கள் வாழ்ந்ததாக தமிழிலக்கியங்கள் சொல்கின்றன. ஊர் ஊராகச் சென்று ஊசி, பாசி மணி மாலையும், நரிக் கொம்பும்(??!!) விற்பதாகச் சொல்வார்கள். தமிழ் நாட்டில் நிறைய இடங்களில் இவர்கள் இருக்கிறார்கள் எனினும்., திருவெறும்பூருக்குப் பக்கத்தில் உள்ள தேவராயனேரி என்ற இடத்தில் வசிக்கும் நரிக்குறவர்கள் சற்று முன்னேறியவர்கள். இவர்களுக்கென ஒரு குடியிருப்பு உள்ளது. கலைஞர் காலத்தில், இந்தக் குடியிருப்புக்கள் ஏற்படுத்தப் பட்டன. இவர்களது வாரிசுகள் படிக்க விடுதியுடன் கூடிய பள்ளி இருக்கிறது. போபாலில் இருந்து இவர்களது தொழிலுக்கு வேண்டிய பொருட்களை வாங்கி, பாசி மணி மாலைகள் செய்து காசி, குருத்வார் போன்ற இடங்களில் நடக்கும் திருவிழாக்களில் விற்பார்கள். திருவிழாக்களில் இவர்களை உடனே அனுமதித்து விடமாட்டார்கள். இங்கிருந்து., தாங்கள் யார்? எத்தனை பேர் விழாவிற்கு வருகிறோம்? போன்ற விவரங்கள் கொண்ட கடிதம் ஒன்றை மாவட்ட ஆணையர் மூலம்., கலைக்டருக்கு அனுப்பி அவர் , இவர்களுக்கு விற்பனை செய்யவும், தங்கவும் இடம் தருமாறு கோரும் கடிதத்தை எங்கு செல்கிறார்களோ அங்கு அனுப்பி வைப்பார்கள். தற்போது இலங்கை, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கும் செல்கிறார்கள். எங்கும் செல்லாத சமயத்தில்., கூட்டுறவு சங்கத்தின் மூலம் விற்பனை செய்து கொள்ளலாம்.

சிலர் படித்து, Ashok layland போன்ற நிறுவனங்களில் வேலை செய்கின்றனர். இவர்களுக்கென நரிக்குறவர் முன்னேற்ற சங்கம் உள்ளது. அதன் மாநிலத் தலைவர் ரகுபதி என்பவர். அரசிற்கு இச்சங்கத்தின் மூலம் தங்களது தேவைகளைச் சொல்கிறார்கள். அடுத்து நீங்க நினைக்கிற விதயத்துக்குத்தான் வாரேன்...ம்... சங்கம் வச்சிருக்காங்களா?., அப்புறம் என்ன தேர்தல்லயும் (சேர்மன், கவுன்சிலர் மாதிரி...) நின்றார்கள். திருவெறும்பூர்லயே சேர்மன் சாமிநாதன் அய்யா அவர்களை எதிர்த்து, கோவிந்தராஜன் என்ற நரிக்குறவர் நின்று தோற்றார். தோற்பது முக்கியமல்ல., நிற்க வேண்டும்!. அதுதானே ஆரம்பம்?. மூலிகைகளை கொண்டு மருந்து செய்து விற்பதுண்டு. ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டத்தின் (IRDP) கீழ்., பாசி மாலை கட்ட கடனும் கிடைக்கிறது. அதில் 50% கடனாகவும் மீதி 50% அரசு மாணியமாகவும் வாங்கப்படும். அதாவது 10 ஆயிரம் கடன் வாங்குனாங்கன்னா 5 ஆயிரம் இவங்க கட்டுனா போதும் மீதியுள்ள 5 ஆயிரத்தை அரசே மாணியமாக வழங்கிவிடும்.

இவர்களது உடைகள் பெரும்பாலும் மாறிவிட்டது., ஆனால் உணவு அதே காடை, கவுதாரிதான். ஒரு முறை நான் ஒரு மருத்துவ மனைக்குச் சென்ற போது., ஒரு நரிக்குறவர் ஓட... பின்னாடியே நர்ஸும் கையில் ஊசியுடன் ஓட ஒரே கலவரம் என்னவென விசாரித்தால்., நர்ஸ் சலைன் ஏற்ற வந்திருக்கிறார்., ஊசி பயத்தில் நம்மாளு எந்திரிச்சி ஓட ஆரம்பிச்சுட்டாராம். ஊசி விக்கறவனுக்கே ஊசியான்னு கேட்க வேண்டியதுதானே?., மறுநாள் நாளிதழ்களில் இவர் ஓட, நர்ஸ் பிந்தொடர்ந்தோடும் படம் வந்திருந்தது. நரிக்குறவர்கள் பயப்படும் விதயம் மருத்துவமனை.

முன்பு மலைவாழ் மக்கள்., குடும்பத் தொழிலாக சாரயம் காய்ச்சுவதைக் கொண்டிருந்தார்கள்(மூலிகை சாராயமாம்). என் நண்பரொருவர் கல்வராயன் மலைப் பகுதியில் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை நடத்தி வந்தார். தற்போது மகளிர் சுய நிதிக் குழுக்கள் வந்த பிறகு மலை மகளிர்கு சிறிய வாசல் திறந்திருக்கிறது. தற்போது அவர்களே யூகாலிப்டஸ் எண்ணை, தேன் பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்கிறார்கள். கொடிய வறுமையிலும்., அதனினும் கொடிய அறியாமையிலும் வாழும் அம்மக்களை திசை மாற்ற மகளிர் குழுக்கள் நல்லதொரு ஆரம்பம். இங்கிருந்து ஓய்வுக்கெனவும், களிப்புக்கெனவும் மலைக்கு சென்ற புண்ணியவான்கள் சுரண்டியது மலை வளத்தை மட்டுமல்ல. மலையக மக்களின் உழைப்பையும்தான். இவர்களும் நம்மிடையேதான் வாழ்கிறார்கள்., தேள் கடித்தாலும், பாம்பு கடித்தாலும் பச்சிலையைக் கட்டிக் கொண்டு., நம்மைப் போல்தான் ஓட்டுப் போட்டு தமக்கான பிரதிநிதிகளைத் தெரிந்தெடுத்து கொண்டிருக்கிறார்கள். மலை இருட்டிருந்து வெளிச்சத்தை பார்க்கவே இவர்கள் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் சுதந்திரத்திற்கு பிறகு மற்ற இனங்களின் வளர்ச்சியைப் பாருங்கள். இவங்கள அப்பிடியே வச்சுருகாய்ங்கப்பா 'Anthropology' ஆராய்ச்சிக்கி.

**மேன்மக்கள்...**

‘வெக்கிடையாட்டுக் கூட்டம்’ என்று (வாத்துக் கூட்டம் போல்) ஒன்றைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?. நிறைய ஆடுகளுடன் 5, 6 குடும்பங்கள் உள்ளதே வெக்கிடையாட்டுக் கூட்டம்.. அவர்கள் நிலையாக ஓரிடத்தில் இல்லாமல் நகர்ந்து கொண்டே இருப்பார்கள். இங்கு (அமெரிக்காவில்) 'காண்ட்ராக்ட்' முறையில் வேலை பார்க்கும் நம்மைப் போல!. ஒரு ஊருக்கு வந்து தம்மை ஆதரிக்கூடியவர்களின் தோட்டத்தில் இருந்து கொள்வார்கள். வெக்கிடையாடுகள் தோட்டம் செய்ய உதவுமோ என்னமோ., இப்படி ஒரு கூட்டம் எங்கள் தோட்டத்தில் இருந்தது. அதிகலையில் எழுந்து, தன்னை தயார் படுத்தி வேலை செய்ய ஆரம்பித்தார்கள் என்றால்... இடையில் மதிய உணவிற்குதான் நிறுத்துவது. அவங்க சும்மா நின்னே நான் பார்த்ததில்லை. நம்மோடு பேசிக் கொண்டிருக்கும் போது கூட வரப்பை சுத்தப் படுத்திக் கொண்டோ., வாசலை பெருக்கிக் கொண்டோ வேலை செய்து கொண்டே இருபார்கள். நம் தோட்டத்தின் விளைச்சலை கண் போல் காவல் காப்பார்கள். மாலையில் பெண்கள் எல்லாம் காட்டிலேயே தீ மூட்டி சமைப்பார்கள்., ஆண்கள் 'பாக்கெட்' ரோடியோவை வைத்து எதையோ கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

ஒருமுறை பொங்கல் வந்தது., நாங்கள் ஊரில்தான் பொங்கல் கொண்டாடுவது. எல்லா ஊர்லயும் பொங்கல் 3 நாளைக்கு கொண்டாடுவாங்களா?., ஆனா நம்மூர்ல 15 நாளைக்கு கொண்டாடுவாய்ங்க... வருசத்துல ஒரு முறைதான் வருதாம்... அதுனால கொண்டாடித் தள்ளிர்ரது. ஊரச் சுத்தி இருக்குற ஒவ்வொரு சாமிக்கும் பொங்கலப் போட்டு, அப்புறம் வீட்டுப் பொங்க, வாசப் பொங்க (சூரியன் பொங்கல் இல்ல.. இது தனியா), கட்டுப் பொங்க, தோட்டத்துப் பொங்கன்னு அவிய்ங்களால எம்புட்டு பொங்க வைக்க சத்து இருக்கோ அவ்வளவையும் வச்சிற்ரது. ஆன இப்படிப் பட்ட பொங்கலின் பெருமை தெரியாத எங்கள் கல்லூரி 3 நாட்கள் மட்டும்தானே விடுமுறை அளிக்கிறது?. அடுத்த நாள் எங்கள் கல்லூரியில் 'பிராக்டிகல்' டெஸ்ட்., எப்பவும் திரும்பி ஊருக்கு கிளம்புபோதுதான், அதுவும் இப்படி இக்கட்டான சூழ்நிலைலதான் எங்காளுக என் பி.பிய எகிற வச்சுப் பாசத்த காட்டுவாய்ங்க...

"எங்க கிளம்புற ?"

" நாளைக்கு பிரக்டிகல் டெஸ்ட்., லீவு போட முடியாது!"

"அடேயப்பா... லீவு போட முடியாத காலேஜ் எங்க இருக்கு?., யாருக்காவது உடம்பு சரியில்லைன்னு லீவு போடு., நீயில்லாமயா சாமி கும்பிடறது?" (சாமி கும்பிடும்போது நம்மளயெல்லாம் ஓரு ஓரமா தள்ளிவிட்டுட்டு., ஆண்களா நின்னு கும்பிடுவாங்க.....)

" அண்ணா., இது ரொம்ப முக்கியமான டெஸ்ட்., பெரிசுகள தூண்டிவிட்டுறாத கண்டிப்பா நான் போகணும்"

" சரி ... சரி... காலைல மொத பஸ்க்கு போகலாம்" (நம்மல்லாம் கலைல சீக்கரம் எழுந்திருச்சு., கிளம்பி., எங்க வீட்டுக்குப் போயி அப்புறம் இன்னொரு முறை கிளம்பி கலேஜ்க்குப் போயி இதெல்லாம் நடக்கிற காரியமா?).

"நீ கொண்டுபோய் விடுறியா., நானா போய்க்கவா?"

அப்புறம் வீட்டுல இருக்கறதுக எல்லாத்துக் கிட்டையும் தனித்தனியா சொன்னதயே திரும்ப, திரும்ப பத்து முறை சொல்லி., ஒரு வழியா கிளம்பிட்டேன்., முன்பே உங்களுக்கு மஞ்சள் பை இம்சையப் பத்தி சொல்லிருக்கேன் இல்லையா?. கிளம்பி முடிச்ச உடனே எங்க அண்ணன்., சிரிச்சுகிட்டே "கொஞ்சம் உக்காரு செல்வம் வந்திரட்டும்”னு சொல்ல...

(எங்க அண்ணன் ஒரு 'காண்ட்ராக்டர்'., இந்த வேலைகளுக்கு மணல் அடிக்கிறதுக்காக, அரை பாடி லாரி வச்சிறுக்குது., அந்த லாரி டிரைவர்தான் செல்வம்)
"செல்வமா....? என்னாத்துக்கு?"
"அவந்தான ஓட்டணும்?" (பெரிதாக ஒரு சிரிப்பு)
"அடப் பாவி.....!"
"இங்க பாரு., மணப்பாறைல லாரி டயர் மாத்தணும்., அங்க இறங்கி பஸ்ல போயிரலாம்"
"ஆளப்பாரு!... நீ ஆள விடு சாமி., நான் பொடி நடையா நடந்தே திருச்சி போய்ச் சேர்ந்துருவேன்".
அப்புறம் கொஞ்சம் வாக்குவாதம்... அழுகிற மாதிரி பாவனை (நெசமாத்தான் அழுதனோ என்னமோ?) க்குப் பிறகு., லாரில ஏறி முன்புறம் உக்கார்ந்தேன். அங்கிட்டு செல்வம், அதுக்கப்புறம் அண்ணன் அப்புறம் நான் ஏதோ யானை மேலே எறி உட்கார்ந்த மாதிரி உட்கார்ந்தா... இரண்டு பேரும் பேசாம உட்காந்து இருந்துச்சுக...

"எடுத்து தொலைங்கடா..." - எரிச்சலுடன் கத்த.,
"கொஞ்சம் பொறு... அவங்க வரட்டும்..."
"அவங்களா...?..."
கேட்டு முடியுமுன் சத்ததுடன் வந்தது நம்ம வெக்கிடையாட்டுக் கூட்டம். மடமட வென்று ஆடுகளையும், கூடாரங்களையும் பின்னால் ஏற்ற ஆரம்பித்தனர். நான் எங்க அண்ணனை ஒரு தீப் பார்வை பார்த்தேன்.

"அவங்க புதுக்கோட்டை போறாங்க.... நம்ம மணப்பாறைல...."
"டயர் மாத்தணும்ன?"
"அவய்ங்க நின்னு மாத்திட்டுப் போவாங்க நம்ம...."
"நான் உனக்கு என்னா துரோகம் பண்ணுனேன்...?" புலம்ப ஆரம்பித்தேன்...

வண்டிய மெதுவா எடுக்கும்போது "டே! பூ மாதரி ஓட்டணும்., எந்தங்கச்சி இருக்குதுன்னு சொல்லி... நல்லா ஒரு மிதி வாங்கி, பிறகு அமைதியாக சென்றது பயணம்., நமக்குத்தான் மனசுக்குள்ள எரிமலை.... சரி.. எல்லாம் மணப்பாறை வரைக்கும்ந்தானேன்னு பேசாம வந்தேன். மணப்பாறை வந்தது.... வண்டி வேகம் குறைந்தது போல வந்து சட்டுன்னு பிக்கப் பண்ணி பறந்தது.

"அதுதான் மணப்பாறை வரைக்கும் வந்துட்டமே.... இன்னும் கொஞ்ச தூரம்தானே?" என் கிள்ளை வாங்கிக் கொண்டே அண்ணன் சொல்ல... "

"அப்போ நம்மல திருச்சி வரைக்கும் இந்த வெக்கிடையாட்டுக் கூட்டத்தோட அரைப் பாடி லாரில ஏத்தி கொண்டு போகணும்னு முடிவு பண்ணி இறங்கிருக்க?"

மனதிற்குள் இப்போது பூகம்பம்.... பக்கத்து வீட்டு தோழி இந்தக்காட்சியப் பார்த்தா என்னாகும்? சும்மாவே...நமக்கு கிராமத்து சொந்தங்களும் இருக்கிறார்கள் எனத் தெரிந்து கொண்டு, ரோட்டில் யார் வேட்டி கட்டிப் போனாலும் "உங்க சொந்தக்காரரா இருக்கப் போறாருன்னு" கிண்டல் வரும். சட்டென எங்க அண்ணனைப் பார்த்துச் சொன்னேன். "இங்க பாரு உன்னைய உயிரோட விட்டர்றேன்... என்னைய வீட்டுக்கு கொஞ்ச முன்னாடி இறக்கி விடு., நான் நடந்து போயிக்கிறேன்". பயணம் முடிந்து அதுபடியே எங்கள் வீட்டிற்கு சிறிது தூரத்தில் வண்டி நிற்க... அதுவரை பின்னால் ஆடுகளுடனும்., தங்கள் பொருட்களுடனும் வந்தவர்கள் வரிசையாக கீழே இறங்கினார்கள். எங்க அண்ணன் "ஏய் எங்கப்பா இறங்குறிங்க... இது புதுக் கோட்டையில்ல...!" என்றதும்., "இல்ல... நம்ம பாப்பா... இவ்வளவு தூரம் நம்மகூட வந்தது...."என்று கூறி ஒரு அம்மா என் கைகளைப் பற்றிக் கொண்டு 'போயிட்டுவாரந்தாயி..." என்றார். பளாரென என்னை யாரோ அறைந்ததைப் போல் இருந்தது.

****
ஒரு நாள் மதியம் சாப்பிட்டுவிட்டு, வேடிக்கை பார்க்கலாம் என அலுவலகத்தின் முன்புறம் இருந்த ஒரு வழி கண்ணாடியின் முன் அமர்ந்தேன். அந்த அலுவலகத்தை கடந்து போகும் எவரும் ஒரு நிமிடம் அக் கண்ணாடியில் தன்னைப் பார்க்கத் தவறுவதில்லை. சிலர் தன் பாக்கெட்டிலிருக்கும் சீப்பை எடுத்து கண்ணாடி பார்த்து தலையைச் சீவுவதும் (சீப்புங்கிற வார்த்தையை எழுதிருக்கேன்., அத விட்டுட்டு படிக்காதிங்க) உண்டு. வெளியே நோட்டமிட்ட போது கண்ணில் பட்டது அக்காட்சி. ஒரு வித்தை காட்டும் கூட்டம். கீழே டோலாக்கு, கம்பி, வளையம் போன்ற வித்தை காட்டும் உபகரணங்கள் கிடந்தன. குரங்கொன்று அவர்களுடையதாகத் தான் இருக்க வேண்டும் குறுகுறு வெனப் பார்த்துக் கொண்டு அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தது. திரை போல் ஒரு துணியை இரு முனைகளிலும் பிடித்தபடி இரண்டு ஆண்கள். இதப் பாருடா., திரையில மறைச்சுகிட்டு என்ன வித்த காட்டுவாங்க?. ஒரு வேளை மேக்கப் போடுகிறார்களோ என நினைத்துக் கொண்டே எங்கள் அலுவலக வரவேற்பாளினி ஆங்கிலோ-இண்டியன் 'ஜாக்கி'யை (இது சத்தியமா அவ பேருதான்!!., ஜாக்குலினோட சுருக்கம்!!. என் கப்போர்டோட சாவி வேண்டுமென்றால்., 'ஜாக்கி' அந்த கீய எறி 'தூக்கி'ன்னு கலாய்க்கிறது உண்டு) 'ஒடி வா' என்று கூட்டு சேர்த்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது நடந்துங்க அந்த அதிசயம்., அந்த திரைக்குள்ளிருந்து ஒரு அம்மா ரோஸ் நிறத்தில் 'பொம்மை' போன்ற ஒரு குழந்தையை தன் கைகளில் ஏந்தி வந்தார். சட்டென தரையில் விரித்திருந்த துணியில் அந்த பச்சிளங் குழந்தையை படுக்கவைத்து விட்டு, மதிய நேரம் வெய்யில் எரிக்கிறது. பக்கத்திலிருந்த ஹோட்டலுக்கு ஓடி ஒரு சிறிய வாளியில் தண்ணீர் கொண்டு வந்து அந்த குழந்தையை எடுத்துக் குளிப்பாட்டி, துடைத்து மீண்டும் அந்த துணியிலேயே கிடத்திவிட்டு திரைக்குள் ஓடி பிள்ளை பெற்ற பெண்ணை கைதாங்களாகத் கூட்டிவந்து அமர வைத்தார். ஆண்களும் திரையை மடித்துவிட்டு ஆவலுடன் அந்தக் குழந்தையை நோக்கி வந்தனர். அப்படியே பேச்சு, மூச்சில்லாமல் இருவரும் இதைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.


ah! what is this? - என்றாள் ஜக்கி
ம்…? their life! - உளறினேன் நான்.

எங்க அம்மா நான் பொறந்தப்போ பட்ட கஷ்டத்த., நான் வேலைக்கு போக ஆரம்பித்த பின்பு கூட சொன்னதுண்டு. இங்கென்னவென்றால் மருத்துவரில்ல, செவிலியர் இல்ல, படுக்கை இல்ல... ஒரே ஒரு அம்மா! அதுவே டாக்டராகவும், செவிலியராகவும் மாறி... மாறி ஓடி மத்தியான வெயில்ல பிரசவம் பார்க்குது. எவ்வித ஆர்ப்பாட்டமுமில்லாமல் வந்தது ஒரு உயிர் சிறு பூ பூப்பதைப் போல. அப்படியே என் பைய எடுத்துகிட்டு அவங்களோடேயே போய் விடலாம் போல் இருந்தது. அப்பக்கூட இந்தப் பைய விடமுடியல பாருங்க. அப்புறம் யோசிச்சுப் பார்த்தேன்... நம்ம திங்கிற தீனிக்கு காசு வேணுமின்னா எத்தனை குட்டி கரணம் அடிக்கனும்னு., பேசாம என் மேசையில போய் உக்கார்ந்து வேலையப் பார்க்க ஆரம்பிச்சுட்டேன்.

இந்த மக்களிடம் இருக்கும் மனித நேயமும், பாசமும் ஏன் நம்மிடம் இல்லை?., எத்தனை பேர் நம் அக்கா, தங்கைகளின் பேறுகாலத்தின் போது அருகிருந்து உதவியிருப்போம்?. ஒரு மாதம் கூட்டமாக எங்களுடன் இருந்த, உழைத்த மக்கள்., இனி என்று பார்ப்போம் என தெரியாத போதும் அவர்களைப் பற்றி நினைக்காமல் என்னைப் பற்றியே சிந்தித்து...சே..!. இப்போது மனம் எவ்வளவோ மறுபட்டிருக்கிறது. நம்மைவிட எல்லா வகையிலும் உயர்ந்த அவர்களுகென எதையும் தராத இயற்கை... நல்ல குணங்களை உடைமையாக தந்திருக்கிறதா? அல்லது குணம் வாழ அவர்களது உடைமைகளைப் பறித்திருக்கிரதா?.