Monday, December 26, 2005

** தெளிவு கொள் **


மூளைக்குத் துன்பம் கொடுக்கும் ' ஆர்கானிக் கெமிஸ்ட்ரி' கிளாஸ் முடிந்தவுடன் நான் ஆவலுடன் கவனிக்கும் தமிழ் பாடம். வெள்ளையுடையில் எங்கள் தமிழ் சிஸ்டரை எதிர்பார்த்திருந்த வேலை., மூன்றாம் ஆண்டு படிக்கும் அக்கா போல் இருந்த நீங்கள் வந்து உங்களை அறிமுகப் படுத்திக் கொண்டீர்கள். ஏதோ அறிவிக்க வந்தீர்கள் என நினைத்தால்... நாந்தான் இனி உங்களுக்கு தமிழ் வகுப்பு எடுப்பேன்., சிஸ்டருக்கு உடல் நிலை சரியில்லாததால் எனக்கூறி நீங்கள் ஆரம்பித்தபோது எனக்கு ஒன்றும் அவ்வளவு உற்சாகமில்லைதான். ஆனால் அடுத்த நாள் பாடம் எடுக்க வந்த போது 'கலைஞரின் எழுத்துக்கள் என்னை கவர்ந்ததில்லை' எனக்கூறி என்னைப் பேச வைத்தீர்கள். பின்பு வந்த நாட்களிலும் 'கண்ணதாசன் கவிஞனா?" எனக் கேட்டு பதற வைத்தீர்கள். வகுப்புகள் பல வாக்குவாததிற்கே போனது. நமக்குள் வந்த முரண்பாடுகள் "இவருக்கு என்ன தெரியும் என எண்ண வைத்தது?"., எப்போதும் சிரித்து கொண்டு வகுப்பெடுக்கும் தன பாக்கியம் மிஸ்ஸூடனும்., வகுப்பிற்கு தாமதமாக வரும் மணவிகளைப் பார்த்து " அம்மா., உங்களைப் பார்த்து கோபம் வரவில்லை., ஒரு மலை அடிவாரத்தில் நடந்து கொண்டிருக்கும் போது கால்களில் குத்திவிடுமோ என்று பாதம் சுழித்து நடக்க வைக்கும் 'பரல்கற்களைப்' பார்க்கும் போது வரும் எரிச்சல் வருகிறது” என்று தன் எரிச்சலைக்கூட சுவையாய் கூறும் அருணா மிஸ்ஸூடனும் ஒப்பிட்டுப் பார்த்த நாட்கள் முடிவுக்கு வந்தது., "பாரதி கண்ணம்மா" என்ற புனைப் பெயரில் படைப்புகள் தருவது, நீங்கள்தான்! என்று தெரிந்த பின்னர். பிறகு வந்த நாட்கள் இனிமையானவை. அந்த சமெஸ்டர் நிறைவான போது முதலில் பாடம் எடுத்த சிஸ்டர் வந்து விட நீங்கள் விடை பெற்றீர்கள்.

அப்புறம் வருடங்கள் கழித்து ஒரு நாள், கல்லூரி அலுவலக வாசலில் உங்களைச் சந்தித்தேன். மிகுந்த மகிழ்வுடன் கைகளைப் பற்றிக் கொண்டீர்கள். எங்க?.. எப்பிடி இருக்கிறிங்க? கேட்டதும் ஒரு குழைந்தைக்குத் தாயாக இருக்கிறேன் என்று பூரிப்புடன் சொன்னீர்கள். உங்கள் உடலும் நம்ம **** மிஸ்தானா? என்று நினைக்கும் வண்ணம் பருத்திருந்தது. காதல் திருமணம் என்றும் மிகவும் சந்தோசமாக இருப்பதாகவும் கூறினீர்கள்.

அதற்குப் பிறகு ஒரு நாள் நான் எங்கோ சுற்றி விட்டு பேருந்திற்கு காத்திருக்கும் சமயம், நெடுநேரம் பேருந்து வராத காரணத்தை இருவர் பேசிக் கொண்டிருந்தனர்., "யாரோ ******** லெக்சரராம்பா... தற்கொலை பண்ணிக்குச்சாம்., அதக் கொலைன்னு சொல்லி, கல்லூரிப் பிள்ளைங்க ஊர்வலம் போராங்க அதுதான்'. ‘திக்’கென்று அதிர்ந்த மனதுடன் நம் கல்லூரி நோக்கி வந்த வழியில் தெரிந்தது அது நீங்களென்று. எத்தனையோ பேரிடம் பழகுகின்றோம் துக்க முகம் மறைத்து வாய் கொள்ளாச் சிரிப்பு முகம் காட்டி., ஏன் மறைக்கிறோம் பெண்கள் இப்படி?. ஏன் அமைதி காத்தீர்கள்., "அஞ்சுவது அஞ்சாமை பேதமை" என்று சொல்லிக் கொடுத்த உங்கள் வாய் அமிலத்தால் கழுவப்படும் வரை?. "ரொம்ப சந்தோசமா இருக்கம்பா...!" உங்கள் குரல் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது காதினில்.


அடுத்து., நீ! என்னுடன் ஒரே பள்ளியில் படித்தாய். நான் தமிழ் வழியும் நீ ஆங்கிலத்திலும். தமிழ் மற்றும் ஆங்கில வகுப்புக்கள் சேர்ந்தே நடக்கும். நாம் ஒரே வகுப்பரையில் தான் அமர்ந்திருப்போம். நீதான் வகுப்புத் தலைவி. ஆங்கில வழியில் படித்தாலும் உன் தமிழ் அறிவும், ஆர்வமும் வியக்கத்தக்கது. வகுப்புத் தலைவியாக நீ இருந்த சமயம் உன் கட்டளைக் குரலையும், ஒழுங்கு படுத்தும் திறனையும் கண்டு பலமுறை வியந்திருக்கிறேன். பள்ளி படிப்பு முடிந்ததும் நீ வேறு கல்லூரியிலும் நான் வேறு கல்லூரியிலும் சேர்ந்தோம். படிப்பு முடிந்ததும் உனக்கு மணமாகிவிட்டது. ஒரு கல்லூரி விரிவுரையாள நண்பர் ஒருவர் வீட்டிற்கு வரும் வழியில் உன்னை அப்படிப் பார்த்தேன். இருபுறமும் வீடுகள் இல்லா.. ஒற்றயடிப் பாதையில் யாரோ அழும் சத்தம்... சற்றுத் தயக்கத்துடன் விரைந்து வந்து பார்த்தால் நீதான் அழுது கொண்டு நடந்து வந்தாய் உனக்குப் பக்கத்தில் ஒரு பெரியவர் ஏதோ ஆறுதல் கூறியபடி வந்து கொண்டிருந்தார். பள்ளியில் பார்த்தபோது இருந்ததில் பாதி உருவமாய் மாறிவிட்டாய். அங்கங்கு நின்று கொண்டும்., பேசியபடி அழுது கொண்டும் வந்தாய்., என்னை கடந்த போது உன்னையே பார்த்துக் கொண்டு நின்ற என்னைப் பார்த்து, தடுமாறி புன்னகைத்து, நிற்க நினைத்து., சட்டென தலையை குனிந்து கொண்டு கடந்து விட்டாய். பின்னால் ஒரு தோழியின் மூலம் உன் வாழ்க்கையறிந்தேன். அன்று உனக்கு என்ன துக்கமடி? வெகு நாட்கள் கழித்துப் பார்த்தும் ஏன் சென்றாய் அப்படி?.

திருமணம் ஆனதும் நட்பை., ஆண்கள் இரண்டாம், மூன்றாம் இடத்திற்கு (இது சிலர்தான்!) தள்ளினால்... நாம் மூலையில் தள்ளி விடுகிறோம். நம் கவனம் பறிக்கவும், நம்மை கவலை கொள்ளச் செய்யவும் ஆயிரம் சொந்தங்கள் வரிசை கட்டி வருகின்றன. பல காலம் பழகிய, உறவினும் மனதிற்கு நெருக்கமாய் இருந்தவளை, எங்கோ பேருந்து நிலையத்திலும், காய்கறி மார்க்கெட்டிலும் பார்த்து விட்டு., இருக்கும் சிறிது நேரத்திலும் கணவனைப் பற்றி, பிள்ளைகளை பற்றி பேசி, அவள் வாழ்க்கைக்கு நம் வாழ்க்கை சற்றும் குறைந்ததில்லையென காட்டிவிட்டு கையசைத்து வந்துவிடுகிறோம். உண்மையாய் நமக்கு நேர்கின்ற துக்கங்களை எத்தனை பேர் பகிர்ந்து கொண்டிருப்போம்?. போபாலில் சிறையில் இருக்கும் நண்பனை மீட்க., பெங்களுரில் இருந்து விமானம் ஏற தோழமை உணர்வுள்ள ஒரு ஆணால் முடிகிறது (நம்ம இளவஞ்சி அவர்கள்தான்!). இப்படி பெண்களில் எத்தனை பேர் செய்வோம்?.

நாம் தேர்ந்தெடுத்தவன் தவறானவன் என்றால் நம் மனமே ஒத்துக் கொள்ள மறுக்கிறதே?. எத்தனை போராட்டங்கள், கண்டனங்கள், கேலிகள் தாங்குகிறோம்., ஒரு தகுதியற்றவனின் கைபற்ற? நம் மனம் மயங்கியிருந்த ஒரு காலத்தில் ஏற்பட்ட தோழமை... ஆழமாக நாம் நினைப்பதால்தான் அர்த்தம் பெறுகிறது. காலத்தின் ஓட்டத்தில் அவன் கயமை முகத்தை நாம் கண்டுகொண்டாலும் கண்ணை மூடிக் கொள்கிறோம், நாம் தேர்ந்தெடுத்தவன் என்றோ., நம் குழந்தைக்கு அப்பன் என்றோ, சமூகம் பழிக்குமென்றோ. அலுவலகத்தில் ஊழல் செய்து மாட்டிய கணவனை., 'அவர் தப்பே செய்யவில்லை' என பெற்றோரிடம் அழுத ஒருத்தியைப் பார்த்து பரிதாபமே தோன்றியது. கணவன் என்பவனின் சின்ன செய்கை ஏன் உன் தன்மானத்தை பாதிக்க வேண்டும்?. நீயா தவறு செய்தாய்?. தானும் அவனும் வேறல்ல என நினைக்கும் வெகுளிகளுக்கு ‘அவர்கள்’ அளிக்கும் பரிசு இதுதான். மனைவியை தன்னில் காண்பவன் தப்பு வழி எப்படி செல்வான்?.

அடாவடி ஆண் (எல்லோரும் அல்ல!) எப்போதும் அவனாகவே இருக்கிறான். அம்மா, அக்கா, தங்கைகளிடம் காட்டும் அடாவடிகளின் தொடர்ச்சி மனைவில் அதிகமாகிறது. அடங்கும் பெண் தந்தையிடம் வளைய ஆரம்பித்து... கணவனிடம் உடையும் நிலை. ஆண்கள் இல்லாத உலகம் சாத்தியமில்லை (அடப்பாவி., உன்னைய பேச விட்டா எங்களையெல்லாம் காலி பண்ணுருவ போலங்கிற கூக்குரல் கேட்கிறது!). ஆனால் அவனிடமிருந்து முழுவதுமாக நம்மை மீட்டெடுக்க நம்மால் முடியும். நம்மை நாம் உணர்தல் முக்கியம்.
***
பெண்ணின் சுதந்திரம் என்பதை வெறும் பாலியலில் அடைத்து விடக் கூடாது. சித்தாளுக்கு 50 ரூ கொத்தனாருக்கு 150ரூ வில் தொடங்கி நடிகனுக்கு கோடி நடிகைக்கு லட்சமென உழைப்புச் சுரண்டல்., ஒரு ஆண் பேசினால் செய்தி, அதே பெண் பேசினால் கேலி என உரிமைச் சுரண்டல் என ஆயிரம் சுரண்டல்கள் இருக்க., உணர்வு சுரண்டல்களைப் பற்றியே பேசுவதும் அது பற்றிய கருத்துக்கள் மட்டுமே முக்கியத்துவம் பெருவதும் ஏன்?. மற்றுமொன்று நம்ம நாட்டைவிட ஜப்பானில் பெண்ணடிமைத் தனமும், பெண்ணிற்கு இழைக்கப்படும் அநீதிகளும் மிகவும் அதிகமாம். அங்கிருப்பவர்கள் யாராவது இதைப் பற்றி பதிவு செய்தால் முழுமையாகத் தெரிந்து கொள்ளலாம் (மேற்கூரிய செய்தி ஒரு ஜப்பான் பெண்மணி., (இங்கு இருப்பவர்) சொன்னதுதான்).
***