Saturday, December 24, 2005

நிசம்தானா....?

ஒரு 'ஹிட்' குடுத்துட்டு அடுத்தது ஒரு 'அட்டு'(படம்! இந்த வார்த்தை படத்தை மட்டும் குறிப்பிடாது., தெரியுமப்போவ்...) குடுக்கறது பெரிய ஹீரோக்களோட வழக்கம். ஆனா இப்பிடிக் குடுக்கிற தயாரிப்பாளர்கள் இருக்காங்களா?. துளசிங்கிற ஹிட்டுக்குப் பிறகு நம்ம மாதிரி அட்ட அதுவும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்கு துணிவா 'ரிலீஸ்' பண்றாங்கன்னா.... ஆண்டவந்தான் அவங்களையும் படிக்கப் போற உங்களையும் காப்பாத்தனும். மதி, காசி மற்றும் தமிழ்மண நிர்வாகிகளுக்கு நன்றி. மதியின் அழைப்பை யேல் பலகழைக்கழகம் வழங்கும் எட்டு டாக்டர் பட்டத்தை விட உயர்வானதாக கருதி :-))) ஆரம்பிக்கிறேன் இவ்வாரத்தை.

ஒரு விளக்கம். நான் என் பதிவுகளில் குறிப்பிடும் 'நம்ம' என்பது என்னைக் குறிக்கும். நம்ம பத்மா அவர்கள், ஒரு முறை இப்படி எழுதுனதப் படிச்சுட்டு., எல்லாரையும் சொல்றேன்னு நினச்சு 'டென்சன்' ஆகிட்டாங்க... இது ஒரு பழக்கம். "அறிஞர் அண்ணாவும், புரட்சித் தலைவர் எம்.ஜி.யார் அவர்களும் அருகருகே அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள் நான் வந்து கொண்டிருக்கிறேன்"னு மேடைப் பேச்சுல ‘பீதிய’க் கிளப்புற திராவிடத் தலைவர்கள் மாதிரி..., (கூட்டத்துல... நடுராத்திரியானப்புறம்தான் நம்ம தலைகள் பேசும்!., இந்தக் கூட்டம் மெரீனா பீச்சுல நடந்தா கேட்பவன் நிலமைய கொஞ்சம் நினைச்சுப் பாருங்க!, இது ஏன் என்றால்., ஒருவேளை நம்ம பேசிகிட்டு இருக்கும் போது யாருந்தூங்கிறக் கூடாதுங்கிற 'பாதுகாப்பு' உணர்வோ இல்லை தனியா பேச விட்டுட்டு தூங்கிறாதிங்கய்யாங்கிற 'பய' உணர்வோ... அதுவுமிலையெனில் அத்தலைவர்கள் மறைந்து விட்டதை ஒப்புக் கொள்ள முடியாத 'பாச' உணர்வாகவோ கூட இருக்கலாம்... அண்ணன்கள் கிண்டல் அடிக்கிரதுக்கு முன்னாடி அத்தனையும் சொல்லிப்புட்டன்ல? )

எங்க பக்கம் இப்படித்தான் பேசுவோம். எங்க பையன் ஒருத்தன் பேசும் போது பாத்திங்கன்னா..,

"ஏய் வந்து சாப்புடு"
"ம்... வருவோமில்ல?"
"வேலைக்குப் போகலியா?"
"போவமில்ல....? எப்பப் போகணும்னு எங்களுக்குத் தெரியும்., நீங்க, உங்க வேலையப் பாருங்க!"

எப்பவும் இப்பிடி கூட்டமா நிக்கிற மாதிரியும், எதிலயும் வீராப்பா இருக்குற மாதிரியும் தான் பேசுறது.. எல்லாம் ஒரு தெம்புக்குத்தான்.

டிரைவரா வேலை பாக்குறேன்னு பொய்யச் சொல்லி., பொண்ண கட்டிட்டு வந்திருவான். அவன் வீட்டிலேயே இருக்குறதப் பாத்து அந்தப் புள்ள கேட்கும் "என்னா டிரைவரா இருக்கேன்னிக., எப்ப பாரு இங்கயே இருக்கிக?"
"அதான் இப்ப உன்னைய ஓட்றமில்ல?" கிண்டலாகச் சொன்னாலும்., படக்குன்னு அந்தப் புள்ள பக்கத்துல வந்து,
"இந்தா புள்ள!., பொய்தான் சொன்னோம்!., எதுக்கு சொன்னோம்? உன்னைய கட்றதுக்குத்தான? இத மனசுல வச்சுகிட்டு ஏழைரையப் போட்டுறாதன்னு பத்து பேர் சேர்ந்து அந்தப் பொய்ய சொன்ன மாதிரியே பேசி, கவர் பண்ணி... அடுத்த வாரம் உண்மையாவே டிரைவர் வேலைக்குச் சேர்ந்து தெளிவா அவன் ரூட்ல போயிட்டே இருப்பான்.

ஒருபுறம் கிராமம்... மறுபுறம் நகரம் இரண்டையுமே எனக்கு வாழ்க்கை காட்டியது இன்று வெளிநாட்டையும். அடுத்தவரை பாதிக்காது எனக்கு வரும் அனுபங்களை நன்மையெனினும், தீமையெனினும் அனுபவிக்காது தள்ளியதில்லை. அனைத்து விதமான வாகனங்களிலும் நேர்ந்திருக்கிறது என் பயணங்கள். மாட்டு வண்டி.. முதல் விமானம் வரை. சந்தித்த மனித மனங்களும் அதிகமே. உண்மையில் நான் அதிகம் படித்தது மனிதர்களையே. மனதைக் கட்டிப் போடும் நகரத்தின் செழிப்பான இடங்களே எனது உறவுகள். பிரமிப்புதரும் செல்வ வளத்தையும் திடிரென சறுக்கிவிட்ட ஒரு 'இனிய' காலத்தில் (வாழ்க்கை அனுபவங்களை தலையில் அடித்து கற்றுத் தரும் காலங்கள் இனிய காலங்கள்தானே?) எல்லாம் இழந்து, வாழ்ந்து கெட்ட வீட்டில் வாழ்ந்திருக்கிறேன் அவ்வப்போது. உழைப்பென்ற என்ற வளத்தை மட்டும் (நிலமிருந்தாலும்., உழைப்பில்லா நிலத்தால் பயன் என்ன?) கைகொண்டு எத்தனை இடரிலும் சுற்றம் விடாது., சிரிப்பெனினும், அழுகையெனினும் ஓடி வந்து கூடி நிற்கும் மனிதர்களே நிரந்தர செல்வம் எனக் கொண்ட கிராமத்து மண்ணிற்கு துக்கமில்லை. இதை எனது களமாக அறிமுகப் படுத்திக் கொள்ளவே எப்போதும் விரும்புகிறேன். வளர்ந்த சூழல் நகரம்தான் எனினும் நான் வாழ்க்கையை வாழ்ந்த சூழல் கிராமம். நஞ்சும் உண்ணும் நனிநாகரீகம் இல்லை. கோபமோ, பாசமோ மனதை அப்படியே காட்டிவிட்டு கடந்து செல்லுமவன்., நுனி நாக்கு ஆங்கிலத்தில் உலகத்தையே புரட்டும் ஒருவனுக்கு ஒப்பானவனாக அல்ல உயரமானவனாகவே எனக்குத் தெரிகிறான்.

பள்ளி, கல்லூரி மற்றும் சுதந்திரமாக சுற்றிய (திருமணத்திற்கு முன்பு) நாட்களில் நிறைய எழுதியதுண்டு. அவை அனைத்தையும் சேர்த்து, "எந்தப் பத்திரிக்கை வாசலிலும், பிரசுரிப்பு பிச்சை கேட்டு என் கவிதைகள் இது வரை கையேந்தியதில்லை" என்று 'கெத்'தாக இரண்டு வரி குறிப்பெழுதி பரணில் போட்டுவிட்டு வந்தேன். இருக்கிறதோ இல்லை... கரையானுக்கு இரையாகி விட்டதோ?. எதையோ கூகுளில் தேடிய போது கிடைத்தது நம்ம அல்வா சிட்டி விஜயின் பதிவுகள். பிறகு அவரது சுட்டிகளுக்கு வாசிப்பு விரிந்து... மொளன வாசிப்பாகவே சில காலம் ஊர்ந்தது. நன்றாகத் தூங்கி எழுந்த ஒரு மலைப் பொழுதில் இங்கு எழுதினால் என்ன? என்று தோன்றிய எண்ணமே இன்று உங்களை சோதிக்கிறது. “ பொருந்துவன போமின் என்றால் போகா” அவ்வையின் வார்த்தைகளை நினைத்து ஆறுதல் கொள்ளுங்கள். என் எழுத்தையொரு பொருட்டா மதித்து முதல் பின்னூட்டம் இட்ட துளசி அக்காவிற்கு இந்த நேரத்தில் நன்றி கூறிக் கொள்கிறேன்.

நாங்கெல்லாம்... நீங்க... எங்க எழுத்த விரும்புற மாதிரி நடிச்சிங்கன்னா கூட விட்டுருவோம்., விரும்பலைன்னு தெரிஞ்சுது..... பட்டறையப் போட்டுருவோமில்ல?. எனவே எல்லாரும் விடுமுறைய நல்லா 'என்சாய்' பண்ணுங்க. ஆனால் இங்கு வந்து உங்கள் பொன்னான பின்னூட்டம் மற்றும் வாக்குகளை போட மட்டும் மறக்காதிங்க.

"ஒரு நாளில் மடியும் பூவிற்கு கூட வண்ணங்கள் கொடுத்து, மணம் கொடுத்து இரசித்துப் படைத்த இறைவன், மனிதர்களாகிய நம் வாழ்க்கையில் அக்கரை கொள்ள மாட்டாரா?" - இது நான் என்றோ படித்த., பைபிளில் வரும் ஒரு வசனத்தின் சாரம். அனைவருக்கும் என் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.