Tuesday, November 29, 2005

வலைபதிவுகள்

டிசே தமிழன்.,
இத்தனை சிறிய வயதில் எத்தனை தெளிவு? என என்னை இவரது ஒவ்வொரு பதிவும் வியக்க வைக்கும். அம்பை, சாரு நிவேதிதா, பாமா, ப.சிங்காரம், ஜெய மோகன், சால்மா மற்றும் புலம் பெயர்ந்த எழுத்தாளர்கள் ஜேசுதாசன் உள்ளிட்டோர், ஈழ எழுத்தாளர்கள் ஷோபா சக்தி, சி.புஷ்பராஜா சுமதி ரூபன், காலஞ் சென்ற க்ஷ்தூரி, சிவரமணி போன்றவர்களைப் போல் இவரிடம் தன் படைப்பால் மாட்டிக் கொண்டவர்கள் ஏராளம். (நிறைய பேர்கள் விடுபட்டிருக்கலாம்., இவர் வாசித்தவர்களை எழுதினால் இந்தப் பதிவு பத்தாது). டி.சே ஒரு தேர்ந்த விமர்சகர், சிறந்த ரசிகர், நல்ல படிப்பாளி மற்றும் படைப்பாளி. இரண்டு வலைப் பதிவுகளில் டி.சேயின் எண்ணங்கள் வண்ணக்கோலங்களாய் வருகின்றன.

இவரது பரந்துபட்ட வாசிப்பனுபவம்., இசை இரசனை, திரைப் படத் திறனாய்வு போன்றவை முன்னதில் நிரம்பிக் கிடக்கின்றன. சில பதிவுகள் அவரைப் பற்றியும், ஈழ மண்ணில் கொண்ட நேசமும் அதன் நினைவுகளுமாய்.... எவ்விதப் பாசாங்குமின்றி தன் வயதுக்குரிய தேடலில் இருந்து அனைத்தையும் முன்வைக்கிறார். பின்னதில் படங்காட்டல்தான்., பயமுறுத்தலும் உண்டு "சுந்தர ராமசாமி -நினைவஞ்சலிக் கூட்டமும், தேவையில்லாச் சில குறிப்புக்களும்" இப்படி.
//பெண்ணுக்கு சமுகம் வழங்கும் மட்டுபடுத்தப்பட்ட சுதந்திரம், சாமர்த்திய வீடுகள், விதவைகள் வாழ்வு எனப்பல பெண்ணிய மனநிலையில் இருந்து ஒரு தசாப்பத்திற்கு முன் எழுப்பப்பட்ட கேள்விஅலைகள் இன்னமும் அதிர்ந்து கொண்டே இருப்பது நமது சமுகத்தின் சோகம்//
//உறவொன்று முகிழ்வதற்கு
காரணங்கள்
நூறு அரும்பவேண்டும்
ஒரேயொரு சறுக்கல் போதும்
நாம் யாரோ என்றுஎல்லாம் உதறிப் போவதற்கு.//
சி.புஸ்பராஜா எழுதிய, 'ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்'
//சி.புஸ்பராவாவின் இந்த நாவல், எமது போராட்டத்தின் பல சிடுக்குகளை இழைகளாகப் பிரித்துபோட்டிருக்கிறது. சுயவரலாற்று நாவல்கள் பலவற்றிற்கு உள்ள மிகப்பெரிய குறைபாடு என்னவென்றால், எழுதுபவர் தன்னை வரலாற்றில் நேர்மை உள்ளவராகக் காட்ட அதீதமாக முனைவதுதான். அந்தக்குறைபாடுடன் தான் இந்த நூலையும் வாசிக்கவேண்டியிருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.//
வரிகள் பேசின.... டிசேவைப் பற்றி...
icarus prakash
மூத்த வலைப்பதிவாளர்(சண்டைக்கு வரப் போகிறார்). ரொம்ப பெரிய ஆள்., பேட்டி எடுத்திருக்கிறார். இவருடைய கதைகள் கல்கில வந்திருக்கு., நெடுநாள் வலைபதிபவர்களுடன் நீடித்த தொடர்பு கலந்துரையாடல், அப்புறம் குறும்பட பட்டரை அப்படி, இப்படின்னு கலக்கிட்டு இருக்கிறார். இவருடைய பதிவுகள் இங்கே.
இவருடைய பதிவிலும் விமர்சனங்கள் கட்டுரை, கதை, கவிதை மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என விரிகின்றன.

//நம்முடைய வாழ்க்கையின் அடிப்படையை அசைத்துப் பார்க்கும் விஷயங்களைத் தவிர்த்து விட்டு, சும்மா சலனம் ஏற்படுத்தக் கூடிய விஷயங்களை மட்டுமே , தன்னுடைய பாணியில் விமர்சனம் செய்யும் கட்டுரைகள் அடங்கிய தொகுதி இது// - இப்படி கறரான விமர்சன பார்வை.
கலைஞர் கருணாநிதி பேட்டியொன்றில்.,
//கல்கி : உங்களுக்கு கார் ஓட்டத் தெரியுமா?
கலைஞர் : இல்லை. அந்த முயற்சியில் நான் ஈடுபடாமல் இருப்பது, மக்கள் மீது எனக்கு உள்ள அன்பைக் காட்டுகின்றது //- இப்படிப் பட்ட இரசனை.
//பாரதியும், செல்லம்மாவும் ஒன்றாக வாழ்ந்த அந்த காலகட்டத்துலே?
எல்லார் மாதிரியும் தரையில நடக்காம, இவர் மட்டும் ஏன் இப்படிவானத்துல பறக்கறார் ன்னு அவங்க செல்லம்மா நெனைச்சிருக்க துளி கூட வாய்ப்பே இல்லீங்களா?//
- இப்படி நகைச் சுவை.
//ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு திசையில் இருந்தார்கள். எலக்ட்ரானிக்ஸ் படித்தவன், தமிழ் நாடு போலீஸில் சப்.இன்ஸ்பெக்ட்டராக இருக்கிறான். பிஎச்டி செய்ய ஆசைப்பட்டவள், ஹோம் மேக்கராக இருக்கிறாள்.கம்ப்யூட்டரே வேணாம் என்று ஓடி, எம்பிஏ செய்தவன், ஸா•ட்வேர் கம்பனி வைத்திருக்கிறான். வருஷா வருஷம் முதல் மார்க்கு வாங்கும் தீனா, சூரியன் எ•ப்எம்மிலே ரேடியோ ஜாக்கி. இன்னொரு கேஸ், ஏபிஎன் ஆம்ரோவிலே எக்ஸிக்யூட்டிவ்,. என் கதையைக் கேக்கவே வேணாம் :-)// – இப்படி ஒரு நகைமுரண்.
//எந்த ஒரு விஷயத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றாலும், அதற்கு தகுந்த புத்தகம், ஆங்கிலத்தில் உண்டு. மோட்டார் சைக்கிள் மெக்கானிஸத்தில் இருந்து முதலாளித்துவத்த்தின் சாதகபாதகங்கள் வரை, புகைப்பட இயலில் இருந்து, புத்தப்பதிப்புக் கலை வரை, ஆர்னித்தாலஜியில் இருந்து அமெரிக்க கலாசாரம் வரை என்று பலதும் ஆங்கிலத்தில் உண்டு. தமிழில்?// – இப்படியொரு (என்னுடையதும் இது) ஆதங்கம்.
//இணையத்தில் எழுதத் துவங்கி, இணையத்தில் மட்டுமே எழுதிக் கொண்டிருக்கும் மற்ற நண்பர்களான பாஸ்டன் பாலாஜி, ஹரன்பிரசன்னா, பி.கே.சிவக்குமார், பத்ரி, மூக்கு சுந்தர், கே.வி.ராஜா, மஸ்கட் சுந்தர், மதி, மீனாக்ஸ், காசி, பவித்ரா, சுவடு ஷங்கர், போன்றவர்களும், இணையத்தில் எழுதுவதன் கூடவே, அச்சுப் பத்திரிக்கைகளில் எழுதி, தமிழ் இலக்கியத்தில் ஒரு புதிய தலைமுறை தோன்ற காரணமாக இருக்க வேணும் என்பது என் ஆவல்//. -இப்படியொரு நேச ஊக்குவிப்பு.

என இவர் பதிவில் எனக்குப் பிடித்ததை சொல்லிக் கொண்டே போகலாம்.
அறிமுகம்
'' வருமானம் போனாலும் தமிழ் மானம் போகக்கூடாது '' என்பதை உயிர்மூச்சாய் கொண்டு இயங்கும் இலட்சியக் கவிஞர் அறிவுமதி அவர்களுக்காக அவரது அபிமானத் தம்பிகளால் துவங்கப் பட்டிருக்கிறது இவ்வலை தளம். . அறிவுமதி பற்றிய திரைத் துறையினரின் கருத்துக்கள், அவரது 'நீலம்' குறும்படம் பற்றிய செய்தி, அவருடன் நேர்காணல், அவரே சாரல் நீர், காற்று, பூத்த நெருப்பு என அனைத்தும் அறிவுமதி பற்றிதான்.
நடிகர்களுக்கான வலைதளம் பார்த்திருக்கிறேன். இங்கு ஒரு கவிஞனுக்கு துவங்கியிருக்கிறார்கள். வரவேற்கிறேன்., அறிவுமதி அவர்களைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ளும் ஆர்வம் உள்ளதினால்.