Wednesday, November 16, 2005

அது ஒரு கனாக் காலம்

அது ஒரு கணணி பயிற்றுவிக்கும் ஒரு பயிற்சி நிறுவனம்., ஒரு புகழ் பெற்ற(?!) நிறுவனத்தின் franchise (இதுக்குத் தமிழ் உண்மையாவே தெரியலை!) எடுக்கப் பட்டது. திடீரென ஒரு நாள் சென்னையிலுள்ள மண்டல அலுவலகத்திலிருந்து ஒரு சந்திப்பு (மீட்டிங்) ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. மேலாளர் என்ற முறையில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டுமென்று எனக்கு கடிதம் வந்திருந்தது. சென்னையில் மூன்று இடங்களில் உள்ள அலுவலகங்கள், திருச்சி(நாங்கள்), மதுரை மற்றும் சில ஊர்களில் உள்ளவர்களும் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் அப்பொழுது பார்த்துதான் எங்கள் அலுவலகத்தில் உள்ள எல்லோரும் பெங்களூர் டூர் செல்வதாக இருந்தோம். ச்சே., எல்லாரும் பெங்களுர் போகும்போது நம்ம மட்டும் சென்னைக்குப் போகணுமேன்னு 'உம்'ன்னு இருந்தேன். எங்கள் நிறுவன உரிமையாளர் கூறினார்., " எங்களோட வந்திட்டு அப்படியே சென்னைக்குப் போயி மீட்டிங் அட்டன் பண்ணிட்டு வா!". அப்பாடா!ன்னு எங்க மக்களோட பெங்களுருக்கு போயிட்டு., இரண்டு நாள் கழிச்சு எல்லாரும் இஞ்சி தின்ன நம்ம தாத்தா மாதிரி முகத்த வச்சிகிட்டு கிளம்ப...(எல்லாரும் அடுத்த நாள்ல இருந்து ஆபீஸ் போகனுமில்ல?) நானும் என்னுடன் சென்னை வரும் அலுவலகத் தோழியும், எல்லாருக்கும் மகிழ்ச்சியான முகத்தோட டாட்டா சொல்லிட்டு, அல்சூரில் உள்ள ஒரு நண்பர் வீட்டில் தங்கினோம்.
அன்று இரவு KPNனில் நெல்லூர், சித்தூர் வழியாக ஆந்திராவையும் 'டச்' பண்ணி ( சரி.. சரி... இளவஞ்சி, ராகவன் போன்றவர்கள் கிண்டல் செய்யாதீர்கள்!., அப்படித்தான் சென்னைக்கு வர முடியும்!) சென்னைக்கு பயணமானோம். வெள்ளிக் கிழமையாதலால் சனி, ஞாயிறு இரண்டு நாட்கள்., சென்னையிலிருக்கும் நம்ம வா..... கூட்டங்களை சந்திக்கணும்., யார் தலையில 'லன்ஞ்' செலவக் கட்டணும்னு வேடிக்கையா நினைச்சு சிரிச்சுக்கிட்டே போனேன்... அங்க ஒரு ஏழரை எனக்காக கைகொட்டி சிரிச்சு காத்துகிட்டு இருக்கிறது தெரியாம....
பூந்த மல்லி ஹை வேல இருக்கிறது அலுவலகம்., எப்பவும்... நாங்க தங்குறது எங்க தெரியுமா? போரூர்ல.... (அந்த மாதிரி அலும்பெல்லாம்... இனி ஜென்மத்துக்கும் பண்ண முடியாது...). மீட்டிங்ன்னா.... யாராவது ஒருத்தர் பேசுவாரு., எல்லாரும் உக்கார்ந்து கேட்டுட்டு... எழுந்திருச்சு வந்திரலாம்னு நினைச்சுகிட்டு போனேன். போனனா?... உள்ள போனவுடன் திருச்சி....ன்னு இழுத்தவுடனே. சரி...இங்க உக்காருங்கன்னு வரவேற்பெல்லாம் பலமாத்தான் இருந்துது. அப்புறம் கூப்பிட்டு அனுப்பினாரு நம்ம ரீஜினல் மேனேஜர்., என் முன் ஒரு பில்லக் காமிச்சு இது என்ன?ன்னு கேட்டார். நாங்க இந்த நிறுவனத்தின் franchise நிறுவனம்தான் என்றாலும்., எங்களிடம் பயிற்சிக்காக வருபவர்கள் கட்டணத்தைப் பார்த்து மிரண்டு., பின்னங்கால் பிடரியில் பட ஓடுகிறார்கள் என்பதால் (லோக்கலா உள்ள) எங்கள் கம்பெனியில் சேர்த்துக் கொள்வோம்... கொஞ்சம் கூடக் குறைய வகுப்புகள் எடுத்து... எங்கள் நிறுவனத்தின் பெயரிலேயே பில்., சர்டிபிகேட் எல்லாம் தந்திருவோம். அதாவது நம்மிடம் கணணி பயிற்சிக்காக வருபவர்களை வெளியில் (வேறு நிறுவனத்திற்கு) விட்டுவிடக்கூடாது என்பதாலும்.(திருச்சில... டீக்கடைய விட கணணி பயிற்சி நிறுவனங்கள் அதிகம். என்னத்துக்குத்தான் ஆரம்பிப்பாங்களோ?...) franchise நிறுவனத்து பயிற்சிக் கட்டணங்கள் மிக அதிகம் என்பதாலும் அப்படிச் செய்தோம். அப்படி எங்களிடம் படித்த ஒரு புத்திசாலி ., நீட்டா நாங்க குடுத்த லோக்கல் சென்டர் பில்ல இங்க அனுப்பி வச்சு.... விளாண்டு இருக்கு. மூச்சு நின்னு போச்சு எனக்கு... பேசாம பார்த்துகிட்டு இருந்தேன். Are you a manager?., you must be ashamed...… you know this is a breach of our agreement...… and how dare you allow this….... அவர் பாட்டுக்கு பேசிக் கொண்டே போனார்... இதில் கொடுமை என்னன்னா அந்த பில்லை நான் தரவில்லை எனக்கு முன்னால இருந்த மானேஜர் தந்திருக்கிறார். இருந்தாலும் என்னால் ஒன்றும் பேச முடியவில்லை... பேசவும் கூடாதல்லவா?., சமாளித்துக் கொண்டு "இது ஏன் நடக்கிறதென்று பாருங்கள். உங்கள் கட்டணம் மிக அதிகம்., திருச்சி போன்ற சிறு நகரங்களில் வசிக்கும் மாணவனுக்கு கூடுதலானது., வேலை உத்திரவாதத்துடன் நடக்கும் கோர்ஸ் கூட இதை விட கட்டணம் குறைவுதான். அதே போல் நீங்கள் ஒழுங்காக நோட்ஸ் அனுப்புவதில்லை. முடித்தவர்களுக்கு உடனே சான்றிதழ் அளிப்பதில்லை. என நானும் என் பங்கிற்கு குறைகளை அடுக்கிவிட்டு... வந்துவிட்டேன்...
பிறகுதான் கவனித்தேன்., நான் சொன்ன அனைத்திலும் உண்மையிருப்பதை. எங்கோ பூனாவிலும், மும்பையிலும் அமர்ந்து கொண்டு கோர்ஸ் செட் பண்ணுகிறார்கள். நாம் எப்படி திருச்சியில் பிசினஸ் பண்ண வேண்டுமென்று அங்கிருந்து அறிவுருத்துகிறார்கள். ஒரு விளம்பரம் கூட அங்கிருந்து வர வேண்டும் (கொடுமை... எத்தனை சதுர அடி ஹோர்டிங் வைக்க வேண்டும் என்று கூட சில சமயம் வரும்). ஒரு அதிகாரி நம்ம சென்டருக்கு விசிட் பண்ணுகிறார் என்றால்... அவருக்கு டிக்கெட்டிலிருந்து... ஹோட்டல் ரூம் வரை நாங்கள் புக் பண்ண வேண்டி வரும். (சில பேர் நம்ம இடத்திலிருந்து வட நாட்டிலிருக்கும் அல்லது ஆந்திரா, கேரளாவில் இருக்கும் அவரது சொந்தங்களுக்கு எஸ்.டி.டி பண்ணி பேசுவர்). உள்ளுரில் எங்கு செல்ல வேண்டுமென்றாலும் 'கார்' கொடுக்க வேண்டும் இப்படி பல இம்சைகள். சரி இதெல்லாம் செய்து, நாம் என்ன பிஸினஸ் பண்ணி இருக்கிறோம் என்று பார்த்தால் ஒன்றுமில்லை.
அடுத்து ஆரம்பித்தேன் நம்ம இன்னிங்ஸ., அவர்கள் கொடுத்த விளம்பர யுத்திகளைத் தூக்கி குப்பையில் போட்டுவிட்டு., நிறுவன விளம்பரத்துடன் கூடிய பாக்கெட் டைரி அடித்து அத்தனை காலேஜ்க்கும் வினியோகித்தோம். வெறும் 1000 ரூ. செலவழித்து., 5000 ரூ செலவழித்து ஹோர்டிங் வைத்ததை விட அதிக மாணவர்களைப் பெற்றுத் தந்தது. ஹோர்டிங்ஸ் பதிலா துணி பேனர் கட்டி விட்டோம். ஒரே ஒரு இடத்தில் (இந்த இடத்துக்கு நாய் படாத பாடு படணும்) வைக்கும் ஹோர்டிங்கை.. விட 10 இடத்தில் கட்டி வைத்த இந்த துணி பேனர் நிறைய ஆட்களை அள்ளி வந்தது. நோட்டிஸ் அடித்து நாளிதழ்களில் வைத்தோம். அவர்கள் 'செட்' செய்த கோர்ஸை கண்மூடித் தனமாக கற்பிக்காமல்., ஒவ்வொரு நிறுவனங்களுக்கு ஏற்றார் போல் மாற்றினோம்... அதாவது வங்கி ஊழியர்களுக்கு அவர்களது வேலையுடன் சம்பந்தப் பட்ட மாதிரி... இப்படி... ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் சென்று உதாரணம் இரயில்வே., இராணுவ முகாம், துப்பாக்கித் தொழிசாலை போன்று... அங்கு என்ன செய்கிறார்கள் என்று பார்த்து., அதற்கேற்றார் போல் கோர்ஸ் செட் பண்ணி., டெமோ.. அது ..இது என்று படங்காட்டினோம். கல்லூரிகளில் வளாகத் தேர்வு(கேம்பஸ் இன்டர்வியூ) வைத்தோம் (வேலை கொடுக்கிறோமோ இல்லையோ இது நல்ல ஒரு விளம்பர உத்தி., யாரும் திட்ட வராதீர்கள்., நாங்கள் வேலையும் கொடுத்தோம்). எங்களுடைய விளம்பர உத்திகளை அந்த நிறுவனத்திற்கு அனுப்பச் செய்தோம்., (காங்கிரஸ் கட்சி மாதிரி இருக்கமா இருக்காதிங்க... சுய ஆட்சி குடுங்கய்யான்னு சொல்லத்தான்). இதெல்லாத்தையும் விட நம்ம கிட்ட படிக்கிற புண்ணியவான்களுக்கு மண்டல அலுவலகம் மற்றும் முதன்மை அலுவலக முவகரி தெரியாமப் பார்த்துக்கிட்டோம். இப்ப வலை பரவலாயிருச்சு.... பாவம் எத்தன பேர் எதிர்காலத்துல இதே பதிவப் போடுவாங்களோ?....