Sunday, October 02, 2005

பயம்

என் தாய் எனக்களித்த உணவில் பாதியைத் தான் தின்று, எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து என் உடன் வளர்ந்து வருகிறது பயம். சிறிய வயதில் பயத்தால் நான் படும் பாட்டைக் கண்டு என் தந்தை, பயம் வரும்போதெல்லாம் 'முருகா, ஞான பண்டிதா., வேலெடுத்து வீசிக்காட்டி வீரர் வழி தோற்றுவித்த வேலா...' எனப் பாடு!, பயம் போய்விடும் என்பார். முருகனென்ன., 'கல்வாரியின் கருணை இதோ...' என்றும் 'நீ இல்லாத இடமே இல்லை... நீதானே அன்பின் எல்லை...' என்றும் கூட சமய வித்தியாசமில்லாமல் பாடி... மனசுக்குள் ஒரு கச்சேரியே முடிந்து விடும். ஒரு கடவுள் தூங்கிவிட்டால்., மற்றொருன்று காப்பாற்றுமே என்று., ஆனால்., ‘வேலெடுத்து வீசி... ‘ என நினைத்தவுடனேயே அந்த வாரம் ‘ஜூனியர் விகடன்’ல் வெளிவந்த, யாராவது இரத்தத்தோட செத்து, வாயில ஈ மொய்க்க விழுந்து கிடக்கும் படம்தான் பட்டென்று...நினைவுக்கு வரும். சட்டென்று மனது சேனல 'கல்வாரியின்...' என்று மாற்றும் போதே 'கல்லறை' நினைவுக்கு வந்து படுத்தும் சரி... கடைசியா... அல்லாதான் நமக்கு எல்லாம்னு நினைச்சு முடிக்கிறதுக்குள்ளயே உள்ள ‘அங்கே கும்புடறதே மசூதியத் தானே?’ன்னு ஒரு குரல் கேட்கும். அடப் பயமேன்னு... பல்லைக் கடித்துக்கொண்டு 'அச்சம் என்பது மடைமையாடா!' வை நினைத்துக் கொண்டே தூங்கி விடுவேன்.

யாராவது இறந்த வீட்டிற்கு சென்றால்., பாசத்தால் அழுவதை விட பயத்தால் அழுவதே அதிகம். சரி, நமக்குத்தான் பயமாக இருக்கிறதே என்று இறந்தவர்களைப் பார்க்காமல் இருக்கமாட்டேன். நன்றாக உத்து, உத்து பார்த்துவிட்டு வந்து இரவில் ஒவ்வொன்றாக நினைத்து, நினைத்து பயப்படுவேன். அன்று என் பக்கத்தில் படுப்பவர்கள் எத்தனை பெரிய துணிச்சல் உள்ளவர்களாக இருந்தாலும் சரி., நான் கவனித்த காட்சிகளைச் சொல்லிச் சொல்லியே பயந்தாங்கொல்லிகளாக மாற்றிவிடுவேன். அதில் ஒரு விசேடம் என்னவென்றால்., நான் ஒரு ஊருக்குச் செல்லும் போதுதான் அந்த ஊரில் அதுவரை இழுத்துக்க... பரிச்சுக்கன்னு இருந்ததெல்லாம் மண்டையப் போடும்... விதிய நொந்துக்கிட்டு, வாயில துணிய பொத்திக்கிட்டு (அப்போதுதான் நாம் அழுகின்றோமா இல்லையா என்பது வெளியில் தெரியாது.) ஒரு ஓரமா நின்னுக்கிட்டு இருப்பேன். தெளிவாக என்னையத் தேடிக் கண்டுபிடிச்சு ஒரு பெரிசு வந்து சொல்லும், "நேத்துவரைக்கும் நல்லா கல கலன்னு பேசிட்டு இருந்தாரும்மா" என்று. "அதுசரி., என்னையப் பாத்திட்டுப் போலம்னு நினைச்சாரு போலன்னு" நினைச்சுக்கிட்டு "நீங்க உங்க உடம்ப ஒரு மாசத்துக்குப் பத்தரமா பாத்துக்கங்க" என்று சொல்லுவேன். அது என்ன ஒரு மாசம்?னு பெருசு என்னை ஒரு மாதிரிப் பார்த்து விட்டு தள்ளிப் போகும். "அந்தாளாவது எங்கூட பேசவில்லை.. என்னைத் தேடிக் கண்டுபிடிச்சு பேசிட்டு போற நீ போனின்னா... உன் குரல்ல இருந்து பாடி லாங்குவேஜ் வரை நினைவுக்கு வந்தில்ல பயமுறுத்தும்?., ஒரு மாசம் நிம்மதியா விடுமுறைய கொண்டாட முடியுதா?" அப்பிடி, இப்பிடி என்று மனதிற்குள் புலம்புவேன். பிறகு, மேல தாளத்தோட ஆள அனுப்பிவிட்டு வந்து படுக்கும்போது, 'அய்யோ ., ஒடுவந்தலைய தின்னுட்டாளே?ன்னு ஒரு அலறல் வரும். மனசுல நாலு ரயில் ஓடுற சத்தம் கேட்கும். கைகாலெல்லாம் நடுங்க வெளியே ஓடி வந்து பார்த்தால், சனமெல்லாம் ஒரு திசைய நோக்கி ஓடிகிட்டு இருப்பாங்க. அவங்களோட ஓடவும் முடியாது., என்னான்னு தெரிஞ்சுக்காம நிக்கவும் முடியாது., ஓடுனதுல ஒரு ரேடியோ திரும்பி வரும் அதைப் பார்த்து,

"என்னடா ஆச்சு?"., - நான்

"அட ... நம்ம சரோசாக்கா..." -ரேடியோ

"சீக்கிரம் சொல்லித்தொலை... சரோஜாவுக்கு என்ன?" - நான்

"அவங்க புருசன் திட்டுனாருன்னு....." -ரேடியோ

"திட்டுனாருன்னு..." -நான்

"ஒடுவந்தலைய அரச்சு... குடிச்சுருச்சு...!" - ரேடியோ சொல்லிக் கொண்டிருக்கும் போழுதே சரோஜா வாயில் நுரை தள்ள... நாலு பேரு தூக்கி வர... கண்கள் சொக்கி நம்மைப் பார்த்து (பிரமையா?) கடந்து போக., அடுத்து வருகிற நாட்கள்... எனக்கு கொடுமையின் உச்சம்.

'ஆஸ்பத்திரில பேச்சு, மூச்சே இல்லாமக் கெடக்குது...'

'ஒவ்வொருத்தரையா பாக்கணும்னு கேட்குது...'

'வடை வாங்கித்தாங்க சாப்பிடனும்ங்குது...'

'ஒரு புள்ள இருந்திருந்தா இப்பிடி செஞ்சுருக்க மாட்டேன்னுச்சு'

'அவங்க வீட்டுக்காரரப் பார்த்து மன்னிச்சிருங்கன்னு அழுதுச்சு...' - இப்பிடிப் பல குரல்கலிருந்து வரும் வித,விதமான ரன்னிங் கமெண்ரியில் சரோஜா உயிர் போனதோ இல்லையோ., என் உயிர் தவணை முறையில போய்க் கொண்டிருக்கும். எல்லாவற்றிக்கும் மேலாக... சரோஜா உயிருடன் இருக்கும்போதே... ஒப்பாரி வைத்து., ஆர்ப்பாட்டம் ஆரம்பித்து விடும். இது தாங்காதுடா சாமின்னு., எங்க அம்மா ஊருக்காவது போயிரலாம்னு தொலை பேசியில் எங்க அம்மாட்சி வீட்டைத் தொடர்பு கொள்ளுவேன். எங்க மாமா எடுத்து .,

'அடடே.. எப்பிடிடா இருக்க?., என்னா அதிசயம்... லீவுன்னா... உங்க அப்பா ஊரு தான உனக்கு கண்ணுக்குத் தெரியும்., எங்க இருந்து பேசுர?'.
'ஊர்ல இருந்துதான் மாமா பேசுறேன்., அம்மாச்சி எங்க?'
'அம்மாச்சி, சித்திய மந்திரிக்க கூட்டிட்டுப் போயிருக்காங்க....'
'மந்திரிக்கவா?..."

"ஆமா ! நம்ம வீட்டுக்கு எதிர்த்தாப்ல இருக்க ரயில்வே தண்டவாளத்துல... நேத்து ஒரு அம்மா......" "சரி., சரி நான் அப்புறம் பேசுறேன்" இணைப்பை துண்டித்து விட்டு... சத்தமில்லாமல் கிளம்வேன் எங்கள் வீட்டிற்கு..

அடுத்து, பேய் என்கிற சொல்லைக் கேட்டாலே மூளை சிதறிவிடும் எனக்குப் பயத்தில். எங்கள் வீட்டில், உறவினர் மத்தியில் என் பயம் பிரசித்தம். பகலில் நான் செய்யும் அதிகாரத்தைப் பார்த்து., 'எங்க முடிஞ்சா ராத்திரி 12 மணிக்கு பேசு பார்க்கலாம்' என அனைவரும் கேலி புரிவதுண்டு. ஒரு முறை ஊருக்குப் போனபோது, நம்ம லூஸ் மோகன் மாதிரி இருந்த ஒருவரின் படம் போட்டு, 'இமயம் சரிந்ததது' எனக் கொட்டை எழுத்தில் ஒரு விளம்பரம் ஒட்டப் பட்டிருந்தது, 'அடங்க மாட்டாய்ங்களே' என எண்ணிக் கொண்டு வீட்டை அடைந்து, என் அண்ணன் மகனிடம் "யாரது?" வினவினேன்., 'அது பக்கத்தூர்காரர், ஒவ்வொரு வீட்டுக்கா வந்து சொல்றதுக்குப் பதிலா., இப்ப இப்படித்தான்., நாலு போஸ்டர் அடிச்சு ஒட்டுனா எல்லாருக்கும் தெரியுமில்ல' என்றான். இது நடந்து நான்கு நாட்கள் கழித்து ஒரு நாள் இரவு 8 மணியிருக்கும்., இரவு உணவை முடித்துவிட்டு., கை கழுவதற்காக எங்கள் வீட்டின் முன்புறமுள்ள வாழை மரங்களை நோக்கி நடந்தேன். கைகழுவிக் கொண்டிருக்கும்போது வாழை மரங்களுக்கு இடையில் பார்த்தேன், வீதி விளக்கில், போஸ்டரில் பார்த்த அதே உருவம் வந்து கொண்டிருப்பதைப் போன்ற ஒரு பிரமை., ச்சே! ஏந்தான் இப்பிடி பயந்து சாகுறியோ? என்னை நானே திட்டிக் கொண்டு திரும்பியபோது 'இந்தாம்மா!' என்று ஒரு குரல். ஒரு மணித்துளிதான் திரும்பிப் பார்த்தேன் இமயம் என் பின்னால் பளீர் புன்னகையுடன். அப்போது என் நிலைமையைச் சொல்லவும் வேண்டுமோ?., பின்புதான் தெரிந்தது, அவர்கள் இரட்டைப் பிறவி என்றும்., எங்க பெரியப்பாவைப் பார்க்க வந்தவர் என்னை என் அண்ணி என எண்ணிக்கொண்டதும்.

எங்கள் வீட்டில் புரட்டாசி மாதம், வீட்டில் 'இறைச்சி' உண்ணத் தடை. எனவே ஊருக்கு ஒதுக்குப் புறமுள்ள எங்கள் கோழிப் பண்ணையில், ஒரு பெண்ணைச் சமைக்கச் சொல்லி வீட்டில் பெரியவர்களுக்குத் தெரியாமல் நான், என் அண்ணன்கள் மற்றும் எங்கள் மாமா மகன்கள் அனைவரும் அந்தக் கோழிப் பண்ணை நாற்றத்தில் சாப்பிட்டுவிட்டு., (சாப்பிடுவது முக்கியமல்ல.... பெரியவர்களை ஏமாற்றுவதுதான் முக்கியம். ) இருட்டி விட்டதால்., என் மாமா மகனை, என்னை வீட்டில் விடுமாறு என் அண்ணன் பணிக்க, இருவரும் கிளம்பினோம். கோழிப் பண்ணையிலிருந்து வீடு சிறிது தூரம்... வர, வர நன்றாக இருட்டி விட்டது. வழியோ காடு...

என்னுடன் வந்தவன் கேட்டான் 'உனக்குப் பேயின்னா ரொம்ப பயமா?'

'இத நல்ல நேரம் பார்த்து கேட்கிற... வாய மூடிட்டு வா...' ஆத்திரத்துடன் சொன்னேன். அவனோ விடாமல் 'நான் எல்லாம் இரத்திரில சுடுகாட்டுக்கு கூட போவேன்... வெள்ளைச் சேலை கட்டி, மல்லிகை வச்சு., நம்மள வா...வான்னு பேய் கூப்பிடும்., ஆனா நம அதையெல்லாம் கண்டுக்காம வந்திரணும்' -ஏதேதோ அளந்து கொண்டு வந்தான்., எனக்கு கோபம் தலைக் கேறினாலும்., அமைதியாக ஆனால் விரைவாக நடந்தேன். பயந்து கத்துவேன் என நினைத்தவன் நான் அமைதியாக வரவும் அதைச் சொன்னான் 'இதோ இப்பக் கூட இந்தக் காட்டுல நிறையப் பேர எனக்குத் தெரிஞ்சு புதைச்சு...'ன்னு சொல்லிக் கொண்டே வந்தவன் பேச்சைக் காணவில்லை. என் உயிரே என்னிடம் இல்லை. திரும்பிப் பார்க்காமல் ஒரே ஓட்டம். எப்படி வீடு வந்து சேர்ந்தேன் என்றே நினைவில்லை. மறுநாள் நல்ல காய்ச்சல் எனக்கு... வீட்டில் சரமாரித் திட்டு., இனிமே 5 மணிக்கு மேல எங்கயாவது போன?ன்னு ஆளாளுக்குப் பாய்ச்சல். என் அண்ணன் இருக்கிற துணிவில் அப்படி சென்றதுகூட அதுதான் முதன்முறை. மெதுவாகக் கேட்டேன் அந்தப் பையைன் என்ன ஆனான்?., அந்தப் படுபாவி உன்னைய பயமுறுத்துவதற்காக பனை மரத்திற்கு பின்புறம் மறைந்து கொண்டான். அவனுக்கு ஒண்ணுமில்ல' என்று கூறினார்கள்.

கிரமத்தில் பிளவளுவாமை ஷ்பெசலிஸ்ட்கள்.,பேய் ஓட்டுபவர்களைக் கட்டால்., பேயைப் பார்ப்பதை விடப் பயம். 'சந்தனம் பத்தலயா... சவ்வாது பத்தலயா' என்று அவர்கள் கர்ண கொடூரக் குரலில் கத்திப் பாடும்போது., நன்றாக இருப்பவர்களுக்கு கூட பேய் பிடித்துவிடும். 'உங்கிட்ட எந்தப் பேயி வந்துய்யா சந்தனம் ஆர்டர் பண்ணுச்சுன்னு., ' மனதிற்குள் திட்டுவேன்., அவரிடம் நேராக கேள்வி கேட்டால் பேய அடியாளா அனுப்பிருவாரோன்னு பயம்தான். நம்மளப் பயப் படுத்துறதையே... பாவம்.. தொழிலா அவர் பரம்பரையே பண்ணிகிட்டு இருக்குது.

ஒரு மனிதனின் மரணம் நம்மைக் கவலை கொள்ளச் செய்யவேண்டும். அவர் வாழும் போது செய்த நல்லவைகளை நினைவு படுத்த வேண்டும். முக்கியமாக நமக்கும் இதுதானே என்ற நினைப்பு, நம் ஆணவம் அகற்ற வேண்டும். நம்மை நல்வழிப் படுத்த வேண்டும். நம் சுயநலமகற்றிப் பண்படுத்த வேண்டும். ஆனால் உண்மையில் மரணம் நமக்குள் இத்தகைய மாற்றங்களைத்தான் தருகின்றதா?., ஒரு தலைவனின் மரணம்., அமைதிக்குப் பதிலாக கலவரத்தை தருகின்றது., தாய், தந்தையர் மரணம் சோகத்திற்குப் பதிலாக சொத்துப் பிரச்சனையைத் தருகின்றது. சக மனிதனின் மரணமோ நடக்கும் ஆர்ப்பாட்டங்களால் பாசத்தைவிட பயத்தையே தருகின்றது.

இவை தவிர தேர்தல் நேரத்து அரசியல்வாதிகளின் அறிக்கைகள், கணக்கு டீச்சர், பேருந்தில் எனக்கு முன்னால் அமர்ந்திருக்கும் வெற்றிலை வாய்., பக்கத்தில் தூக்கத்தில் சாய்ந்து கொள்ள தோள் தேடும் எண்ணைத் தலை, எப்பொழுதும் ஒழுகும் ஒரு குழந்தையின் மூக்கு, எதிர்பார்க்காப் பொழுதில் தலையில் விழும் மேல் வீட்டுக் குப்பை மற்றும் என் வீட்டுப் பல்லி. என நான் பயப்படும் விதயங்கள் அப்போது ஒரு 'தெனாலி'ப் பட்டியல். இதெல்லாம் ஒரு 10, 15 வருடங்களுக்கு முன்னால். கல்லூரியில் கால்வைத்ததும் பயம் ஓடிவிட்டது.

இப்பதிவு மரணத்தை கிண்டல் செய்வதற்காய் எழுதப் பட்டதல்ல. என் பயத்தை கேலி செய்வதற்காய் எழுதப் பட்டது. ஊரில் இருந்தவரை ஒவ்வொரு தலைவரின் மறைவுக்கும் ஒரு நாள் பட்டினி கிடப்பேன். நான் விமர்சனம் செய்பவர்களுக்கும்தான். (இது தேவையில்லாத 'நடிப்பென்பாள்' என் தங்கை., இருந்த போது அவர்களை விமர்சித்துவிட்டு, இப்போது விரதமிருப்பதால் )., என்னைப் பொறுத்தவரை அவர்களது மக்கள் உழைப்பிற்கு., நான் செலுத்தும் நன்றி..