Tuesday, September 27, 2005

பிறர் மனம் புகா....

தங்கர், குஷ்பு, கற்பு இதெல்லாம் பத்தி நம்ம கருத்து சொல்றதுக்கு என்னா இருக்கு?., அப்புறம் ஏன் இந்தப் பதிவுன்னு கேட்கிறிங்களா?., எனக்கு குஷ்பு சொன்னதவிட கடந்த 3 நாட்களாக நம்ம வலைப்பதிவு நண்பர்கள், தோழிகள் எழுதுவதுதான் பெருத்த அதிர்ச்சியாய் இருக்கிறது. பலர் குஷ்புவுக்கு ஆதரவாய் எழுதியிருந்தார்கள். தங்கர் பிரச்சனையில் குஷ்புவின் அதீத கொந்தளிப்பு... இப்படிப்பட்ட அரசியலில் முடிந்திருக்கின்றது. இதைப் பற்றிய கருத்தென்று ஒரு மண்ணும் எனக்குக் கிடையாது. ஆனால் குஷ்பு கூறியிருப்பதை மெய்ப்பிக்கும் விதம் பல சகோதரர்கள் 'கற்பென்ற' ஒன்றில்லை என எழுதியிருக்கிறீர்கள். கற்பை நான் கண்ணில் கண்டதில்லை கடவுளைப் போல... உங்களில் எத்தனை பேர் நீங்கள் கூறியதன் பொருள் புரிந்து உண்மையாக எழுதியிருக்கிறீர்கள்?. உங்கள் வாழ்க்கையென்று வரும் போது எத்தனை பேர் 'கற்பென்பதை' மனதால் ஒதுக்குவீர்கள்?.

பேருந்தில் ஏறிவிட்டாலே போய்விடுகிறது... காலத்தின் வளர்ச்சி... முற்போக்கு எண்ணம்...கண்ணகி., மாதவி... எல்லாம் சரிதான். நமது சமுகத்தில் சிறிய குழைந்தைக்குகூட வன்முறை நிகழ்கின்றது. எங்கில்லை அத்துமீறல்கள்? அச்சங்களில் ஆரம்பித்து... ஆண்டவன் மடாலயத்தில் கூட நடக்கின்றது. ஒரு பெண்ணை முடக்க குற்றமுள்ள ஆண்கள் கையிலெடுப்பது 'கற்பென்ற' ஒரு கல். இதை எறிந்தால் போதும் சுருண்டு விழாத பெண்ணே இல்லை. அதற்காக?. இதை போலியாக ஏன் பொதுமைப் படுத்துகிறீர்கள்?.

சென்னை 'டிஸ்கோ'களில் ஆடும் பெண்கள் என்ன அனைத்துப் பெண்களுக்குமான அடையாளமா?., குஷ்பு சொன்னதை ஆமோதிப்பவர்கள்., தவறு செய்பவர்களை அங்கிகரீக்கின்றீர்கள். படித்த ஆண்கள் கற்பை பொருட்படுத்தவில்லை என்பது உண்மையாகிவிட்டால் கள்ளப் பேச்சில் உள்ளம் மயக்கும் கயவர்களுக்கு சாதகமல்லவா செய்கின்றீர்கள்?. ஏற்கனவே நீங்கள் எல்லாம் கூறியது போல் கற்பை போலியாகப் போர்த்திக் கொண்டிருக்கும் சமூகத்திற்கு குளிர் விட்டல்லவா போய்விடும்?. தாயைப் போற்றிக் கொண்டிருக்கும்... ஒருபுறம் மனைவியை சந்தேகப் பேய்பிடித்து அடித்து கொண்டிருக்கும்., சமூகம் என்றால் நாலும் இருக்கும். நல்லதை பொதுமைப் படுத்துங்கள். வறுமைக்குத் தன்னைக் கொடுக்கும் சகோதரி., விபத்தில் சிக்கிய சகோதரிகள் குற்றவுணர்வு கொள்வது அவசியம் அல்ல. கயவனை கணவன் எனக் கொண்டவர்கள் மீண்டு வர கைகொடுங்கள் வணங்குவேன். தெரிந்தே சிக்கலில் மாட்டிக்கொண்டு... பெண்ணுரிமை பேசுவதால்... பெண்ணுரிமை புண்ணுரிமையாகிவிட்டது... பார்லிமெண்டில் இட ஒதுக்கீடு கேட்டால் கூட பெண்களுக்கு பரிகாசமே பரிசாகக் கிடைக்கிறது.


'பிறர் மனம் புகா கற்பு வேண்டும்' என்று மிகுந்த ஆணாதிக்கச் சிந்தணையுடன் சொன்னார்கள். அந்தப் பய ஒன்னையப் பார்த்தாலே போச்... எப்படி மிரட்டி வச்சுருந்தாங்க நம்மள?., அத்தனையும் தாண்டி இன்று முற்போக்கு சிந்தணையுடன் எல்லாத் துறைகளிலும் முன்னேறி வரும் பெண்களைப் பார்க்கச் சிலிர்க்கிறது உள்ளம். ஆனால் 'கீரீன் கார்டு'க்காகத்தான் திருமணம்., அது கிடைத்தவுடன் டாட்டா காட்டும் நமது பெண்களைப் பார்க்கிறேன். ஒரு சீனப் பொண்ணு இங்க யுனிவர்சிட்டில படிக்குது., அப் பெண்ணின் கணவருக்கு இங்கு வர விசா கிடைக்கவில்லை., விவாகரத்து பண்ணிவிட்டு வேறு ஒருவருடன் குடும்பம் நடத்துகிறது. அந்த பையன் பண்ணிய தவறென்ன என்று மனோகரா கண்ணாம்பா மாதிரி 2 நாளு நம்மாளப் போட்டு பிராண்டிக்கிட்டு இருந்தேன். நம்ம ஊரு பொண்ணு ஒரு கரீபீயனிடம் மாட்டிக் கொண்டு கதறியது., பார்ப்பாருமில்லாமல், கேட்பாருமில்லாமல். 3 வது பிரேக்கப் பார்ட்டி வைத்த நம் பெண் (தெரியாதவர்களுக்காக : ஆண் நண்பர்களைப் பிரிவதற்கு வைக்கும் பார்ட்டி பிரேக்கப் பார்ட்டி). ஒரு ஸ்பானிஷ் பொண்ணு இந்தியனை நண்பனாகக் கொண்டு., அவனின் தாய் திருமணத்திற்கு சம்மதிக்காததால் பிரிந்து, அவளை விட 9 வயது முதிர்ந்த ஒருவரைத் (அவரும் ஸ்பானிஷ்) திருமணம் செய்து கொண்டாள்., வெள்ளிக்கிழமைகளில் அவர் இவளுக்கு தொலைபேசி 'ஐ லவ் யூ' என்றாலே அழுது விடுவாள். ஏனென்றால் 'பார்ட்டி' அன்று இரவு வீட்டிற்கு வராது என்று அர்த்தம். எத்தனை ஏமாற்றங்கள்? ' Why you do this to me?' காயப்பட்ட மனிதிலிருந்து வரும் கண்ணீர் கேள்விகள். 'you cheat me for 2 years?' அதிர்ந்த மனதில் இருந்து இயலாமையும், ஆத்திரமுமாய் இணைந்து வெளிப்படும்.

அப்பன் பணத்துல ஆங்கிலப் படம் பார்த்துவிட்டோ., வெளிநாட்டைச் சுற்றி விட்டோ...வெளிநாட்டு மோகத்தில் 'டிஸ்கோ'., திருமணத்திற்கு முன் உறவு... சர்வேய சர்ப்போர்ட் பண்ணி, தப்பில்ல... நோய் வராம பாத்துக்க.... என்னா தத்துவமுத்து?... (தவறை சுட்டிக்காட்டினால் பண்ணாதவங்களக் காட்டுங்கன்னு எகத்தாளம்...) இதை வருடங்கள் கழித்து அவரது வாரிசிடம் சொல்லுமா அவரது வாய்?.