Monday, September 19, 2005

வந்து விட்டேன்

எங்கயோ தெலைஞ்சு போய்ட்டனோன்னு... கவலை கொண்டவர்களுக்கும்... மகிழ்கின்றவர்களுக்கும்.... இதோ.. வந்துவிட்டேன்.

இரண்டு வாரம் சிகாகோ போய்ட்டு வரலாம்னு குடும்பத்தோட கிளம்புனமா? (என்னா பெரிய குடும்பம்?., 2 முழு டிக்கட்டு 1 அரை டிக்கட்டு).... அது அங்க சுத்தி, இங்க சுத்தி மூணு வாரமாச்சா?...அப்புறம் வந்து... ஓய்வு ஒரு வாரம்.

இந்தப் பயணத்தில கணணிய தொடவே கூடாதுன்னு நம்மாளு அன்புக் கட்டளை (அதிகாரமாச் சொன்னா என்னாகும்னு அவருக்குத் தெரியும்...!). இருந்தாலும் கிடைத்த நேரத்தில் சில பதிவுகளை படிப்பதுடன் நிறுத்திக் கொண்டேன். அப்புறம் இந்த சிகாகோவுக்கும்... எனக்கும் முற்பிறவில என்ன ஏழரையோ தெரியல....இதுவரை மூன்று முறை அங்கு சென்று இருக்கிறேன். மூன்று முறையும்.. போகும்போது இருக்கும் மகிழ்ச்சி., திரும்பி வரும்போது இருக்காது.

இந்த முறை 'மகிழ்வுந்துல' (கார்ல) போலம்னு ஒரு நல்ல... முடிவ எடுத்தோம்... போகும்போது 'பிட்ஸ்பெர்க்' போய்ட்டு வெங்கிக்கு ஒரு 'வணக்கம்...(ஹாய்க்கு தமிழ்?) போட்டுட்டு, அப்பிடியே அங்க தங்கிட்டு, மறுநாள் கிளம்பி சிகாகோ... போகும்போது எல்லாம் நல்லத்தான் இருந்தது. அப்பிடியே சும்மா 90-95 ல கார ஓட்டிட்டு.... காத்துல போற மாதிரி போய்ட்டு இருந்தேன் (லோக்கல் ரோட்டுல மட்டும்தான் நம்மாளுகிட்ட கொடுக்கிறது... பாவம்... ஓய்வெடுக்கட்டும்னு). 'இண்டியானா' வந்ததும்.. சரி எதாச்சும் கொறிச்சுட்டுப் போகலாம்னு ஒரு 'ரெஸ்ட் ஏரியாவில' நிறுத்துனேன். சரியான ஏழரை., முன் பக்க 'டயர்' ஒண்ணு போச்.... அப்புறம் 'AAA' கூப்புட்டு., டயரை மாத்தி சிகாகோ போய்ச்சேர்ந்தோம். வேகத்தில 11/2 மணிநேரம் மிச்சமாச்சுன்னு நினைச்சா., இந்தப் பிரச்சனை 2 மணி நேரத்தை எடுத்துக்குச்சு.

அங்க போய் 'ஹாலிடே இன்ல' வாசம். போன உடனே 'டி.வி' யத் தட்டுனா.,குய்யோ., முறையோன்னு ஒரே சத்தம்., 'கத்திரீனா' ஆடுன ஆட்டத்துல சனங்க பரிதவிச்சதப் பார்த்து... மனது கனத்து விட்டது. 'விஸ்கான்சின்' சுத்தி பாக்கலாம்னு போட்ட திட்டமெல்லாம் கைவிட்டு, சிகாகோவ மட்டும் திரும்பத் திரும்பச் சுத்திட்டு திரும்பினோம்.

திரும்பும் போது முதல்ல மிதமான வேகத்துல வந்துட்டு இருந்தேன். அதே 'இண்டியானா' வந்திச்சு., கொஞ்சம் விரட்டலாமேன்னு நினைச்சு 87ல்ல (70 அனுமதிக்கப் பட்ட வேகம்) வந்தேன். இத்தனைக்கும் கண்ண நல்லா முழிச்சு நாலபுரமும் 'மாம்ஸ்' யாரும் இல்லைன்னு உறுதிப் படுத்திக்கிட்டுதான் மிதிச்சேன். நம்ம பின்னாடி அப்பிடியே ஜெக ஜோதியா வெளிச்சம். 'பிடிச்சுட்டாய்ங்கய்யா.... பிடிச்சுட்டாய்ங்கன்னு' நினைச்சுக்கிட்டே ஓரங்கட்டினேன். மாமா வந்தாரு., உள்ள ஒரு பார்வை பார்த்தாரு., உரிமத்தை ('லைசன்ஸ்')., வாங்கி பாசமா அவரு சட்டையில குத்திகிட்டு., 'Do you know the speed limit?' ந்னு கேட்டாரு., நம்ம ஊரா இருந்தா 'ம்.. 70 என்னா இப்ப?., யார சாய்ச்சோம்?னு எகிறி இருக்கலாம்., லைசன்ஸ்தான?., தாரளாமா வச்சுக்கங்க சார்' ந்னு இருக்கலாம். இல்லன்னா ஒரு '50' '100' ., இப்படி நினைச்சுக்கிட்டே '70'ன்னு சொன்னேன்., 'You drive...' அவர் முடிப்பதற்குள்ளேயே, '87' என்றேன்., என்னை ஆழமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, ' Careful.. ok...?' என்றார். நானும் தலைய ஆட்டினேன்., பின்பு அவரது வாகனத்துக்கு சென்று விட்டார். பக்கத்துல நம்மாளு அப்பிடியே மகிழ்ச்சித் தாண்டவமாட 'ரிலாக்ஸ்டா' ந்னு சொல்லிக்கிட்டு இருந்தாரு. (பின்ன அவர நா கொஞ்ச, நஞ்சமா வாரியிருக்கேன்?. இவ்வளவு காலம்., ஒரு பாயிண்ட் கூட இல்லன்னு பெருமை பேசியிருக்கிறேன்.. இந்த சம்பவம் நடக்கிறதுக்கு 1/2 மணி நேரம் முன்னாடி, ரொம்ப நேரமா ஓட்டுற 10 நிமிஷம் நின்னுட்டுப் போகலம்னு அவர் அக்கரைல சொன்னதுக்கு கூட சத்தாய்ப்பா.... "ம்..ஆமா... தம்முக்கு ஒரு சாக்குன்னு?" பாய்ஞ்சு... அமைதிப் படுத்தினேன். மகிழ்ச்சி இருக்காதா என்ன?. அப்புறம் காவலர் என்னுடைய உரிமத்துடன்., நான் கட்ட வேண்டிய தொகையை (fine) தெரியப்படுத்தும் படிவங்கள் சிலவற்றை என்னிடம் கொடுத்துவிட்டு சென்றார்., 130$., அக்டோபர் 12 ந்தேதிக்குள்ள கட்டணுமாம். 'பாயிண்ட்' இருந்தா 'காப்புத் தொகை' வேறு அதிகமாகிவிடும் என்று நினைக்கிறேன்.

இதுல என்னான்னா, போகும்போது 90ல யாரும் பிடிக்கவில்லை. எதுவாக இருந்தாலும், தவறு என்னுடையது. அதற்குப் பிறகு., நான் என்னா மிதிச்சாலும்., 65 த் தாண்டி கார் போக மறுத்தது. பட்டுத் திருந்துற ஆளுக நம்மெல்லாம் (எல்லாரையும் கூட்டு சேர்த்துக்கிட்டா தெம்பாத்தான் இருக்குது.). வந்தவுடன் எடுத்த முடிவு இனிமே கார்ல நெடும்பயணம் செல்வதில்லை என்பது. இவ்வளவு உறுதியாச் சொலறனே., எவ்வளவு காலத்துக்குன்னுதானே யோசிக்கிறிங்க...அனேகமா அடுத்த கோடை வரை.. அதுக்கப்புறம்தான் இதெல்லாம் மறந்து போயிருமே?. அதே ஊருக்கு மீண்டும் போனாலும் ஆச்சிரியப் படுவதற்கில்லை.