Thursday, June 09, 2005

கலைஞர் கருணாநிதி - என் அறிவில்

ஜூன் 3 ஆம் நாள், கலைஞரின் பிறந்த நாள் அன்று அவரது வாழ்க்கை வரலாற்றை பதிவிட எண்ணியிருந்தேன். எதிர்பாராத சில நிகழ்வுகளால், அதை செய்ய முடியவில்லை. எனவே இந்தப் பதிவு.

கிட்டத்தட்ட 60 ஆண்டுகாலம் கட்சித்தலைவர், எதிர்கட்சித்தலைவர் மற்றும் முதல்வர் என அரசியலிலும் தவிர இலக்கியவாதியாக, பத்திரிக்கையாளராக, திரைக்கதை வசனகர்த்தாவாக, பாடலாசிரியராக என பன்முகம் கொண்டவர் கலைஞர். தமிழ் ஆர்வமுள்ள எவரும் அண்ணாவிற்கு அடுத்தபடியாக, கலைஞரின் பேச்சுக்களை ரசிக்காமல் இருந்திருக்கமுடியாது. அரசியலுக்கு கலைஞர் வராமலிருந்திருந்தால், ஒரு நல்ல திரைக்கதாசிரியர், பாடலாசியர் குறிப்பாக, நல்ல எழுத்தாளர் நமக்கு கிடைத்திருப்பார். மந்திரிகுமாரி, மலைக்கள்ளன், பராசக்தி, மனோகரா போன்ற படங்கள் என்றும் அவர் பெயர் சொல்லும் திரையுலகில். அவர் எழுதிய பாடல்களில், கா,கா,கா (பராசக்தி), காகித ஓடம் கடலலைமீது (மறக்க முடியுமா), இதயவீணை தூங்கும்போது (இருவர் உள்ளம்), வாழ்க்கையெனும் ஓடம் (பூம்புகார்) போன்றவை கேட்கத் திகட்டாதவை. அவர் வசனமோ, பாடல்களோ வந்த காலகட்டத்தில் உள்ள பிற படங்களை கவனித்தோமானால், மிகவும் வேறுபட்டிருப்பதைக் காணலாம். "கல்லைத்தான், மண்ணைத்தான் காய்ச்சித்தான், குடிக்கத்தான் கற்பித்தானா" எனத் திருமூலரையும், "ஓடப்பாராயிருக்கும் ஏழையப்பர்" என்ற பாராதிதாசனையும் ஓரே காட்சியில் சிந்தித்திருப்பார். "கிருஸ்ணா, முகுந்தா..." எனப்பாடி பழக்கப் பட்ட அந்தக் கால தமிழ் திரையில், "அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள்?" என எழுத எவ்வளவு உரம் வேண்டும்?. ஒரு இரவு நேரத்தில் " இதய வீணை" பாட்டை கேட்டுப்பாருங்கள், தவறு செய்யும் ஆண்கள் திருந்திவிடுவீர்கள். அவர் எழுதிய நூல்களில் என்னைக் கவர்ந்தது "பொன்னர் சங்கர்". பொன்னர், சங்கர் தெய்வமாக வணங்கப் படுபவர்கள் அவர்களைப் பற்றி எந்த சமரசமும் இன்றி அவர் எழுதியிருக்கிறார். வேறு எந்த திராவிடத் தலைவரும் துணிந்து தெய்வமாக வணங்கப் படுபவர்களைப் பற்றி விமர்சனத்திற்கு அப்பாற்பட்டு எழுதியிருப்பார்களா என்பது சந்தேகமே.
"தண்டவாளத்திலே தலை வைத்துப் படு என்றாலும், ஆட்சி பொறுப்பை ஏற்றிடு என்றாலும் இரண்டையும் ஒன்றெனக் கருதுபவன் என் தம்பி" என அண்ணா புலாங்கிதப் பட்ட அன்புத்தம்பி. "முகத்தை காட்டு தம்பி போதும்" என்று அண்ணா எம்.ஜி.யார் அவர்களைப் பார்த்தும் சொன்னார். கூட்டம் சேர்க்க எம்.ஜி.யார், சேர்த்த கூட்டத்தை பேச்சால் கட்டிப் போட கலைஞர் (அவரே தலைசிறந்த பேச்சாளர் எனினும்) என இருவர் இருந்தனர் அண்ணாவிற்கு, ஆனால் எம்.ஜி.யார் பிரிந்தபின் இரண்டுமாக தி.மு.கா விற்கு இருக்கிறார் கருணாநிதி. (வைகோ, வெற்றிகொண்டான் என தி.மு.காவில் பேச்சாளர்களுக்கு பஞ்சமில்லை என்றாலும், நட்சத்திரப் பேச்சாளர் கலைஞர்தானே?, வைகோ சிறந்த பேச்சாளர்., இளம் உள்ளங்களை எழுச்சிபெற வைக்கக்கூடிய பேச்சாளர்., இழந்தது தி.மு.காவின் போதாக் காலம்!.).
மேடையில் பேசும்போது "என் உயிரினும் மேலான அன்பு......" எனக் கூறி கைதட்டலுக்காக ஒரு கோணல் புன்சிரிப்புடன் பேச்சில் இடைவெளி தந்து "உடன்பிறப்பே!" எனக்கூறி முடிக்கும் காட்சி, அவர் மேடைப் பேச்சுக்களை நினைக்குந்தோறும் என் மனக்கண்முன் எழும். ஒரு முறை தி.மு.க மாநாடு திருச்சியில் நடந்தபோது, அவரது பேச்சைக் கேட்க கணக்கிலடங்கா கூட்டம்., அக் கூட்டத்திற்கு மன்னை நாராயணசாமியின் மகன்களும் வந்திருந்தனர். சில மாதங்களுக்கு முன்புதான் நாராயணசாமி இறந்திருந்தார். கலைஞர் பேச்சிடையே கூறினார் "இக்கூட்டத்திற்கு மன்னையாரின் மக்கள் வந்திருக்கிறார்கள், பார்த்தேன், அவர்களைக் கூர்ந்து நோக்கவில்லை கண்கள் குளமாகிவிடும் என்ற காரணத்தினால்". அப்போது அவரது குரலில் இருந்த நெகிழ்வு., தாய் தன் குழந்தையிடம் காட்டுவது. தா.கிருட்டினன் இறந்தபோது அவர் காட்டிய அமைதி.,தந்தை தன் மகனிடம் காட்டிய பரிவு., குற்றமுடைத்து!!!. திருச்சி மாநாட்டில்தான் ஸ்டாலின் அவர்களின் 'கன்னிப் பேச்சு'ம் (முதன்முதல் மேடைப் பேச்சு சாமிகளா!) இடம் பெற்றது. "கட்டிய நாய்களல்ல நாம் எட்டியமட்டும் பாய்வதற்கு" என்று துவங்கி நன்றாகவே பேசினார். கலைஞரின் பேச்சுகளிலே மிகச் சிறந்தது பூம்புகார் வடிவமைக்கப் பட்டு, திறக்கப்பட்டபோது அமைந்த கடற்கரை பேச்சுதான் என என் அப்பா கூறக் கேட்டிருக்கிறேன். ஒருமுறை காரைக்குடியில் நடந்த கம்பன் விழாவில் கலந்து கொண்டபோது, அவரது இருக்கை, அவர் அப்போதைய முதல்வர் என்பதால் குடையுடன் வடிவமைகப்பட்டது. கலைஞர் அமர்ந்தவுடன் அக்குடை ஆடியது, அதை ஆ.சா.ஞனசம்பந்தம் அய்யா (கம்பன் கழக நிறுவனர்)., சுட்டிக்காட்ட, அடுத்துப் பேச ஆரம்பித்த கலைஞர், அப்போது மதுரை முத்து போன்றவர்களால் தி..மு.க ஆட்சி ஆட்டம் கண்டிருந்த நேரம். "குடை ஆடுகிறதென்பது எனக்கும் தெரிகின்றது., கவனமாக இருப்பேன்!", என சிலேடையாகக் கூறி கைதட்டல் அள்ளினார், என கம்பன் கழகத்திற்கு வருடா வருடம் தவறாது செல்லும் என் 70 வயது தோழர் சொல்லக் கேட்டிருக்கிறேன். இராம காதையை மறுக்கும் திராவிடம், இலக்கிய சுவையுணர கம்பன் கழக விழாவில் கலந்து கொண்டது. கூட்டணிக் கட்சிகளுக்கும், தனது கட்சியினருக்கு தேர்தலில் வாய்பளிக்கும்போதும்., (வேட்பாளர் பட்டியல் வெளியிடும்போது) "இவர்களுக்கெல்லாம் தொகுதியில் இடம், ஏனையோர்க்கெல்லாம் என் இதயத்தில் இடம்" என்பது அவரது பிரபலமான வசனம். தமிழ்நாட்டில் தமிழுணர்வு தூண்டியதில் திராவிடக் கட்சிகளுக்கு பெரும்பங்கென்றால்... அதை நிலைநிறுத்தியதில் தனிப் பங்கு கலைஞருக்குண்டு. தனித்தமிழ் வாரியம், தமிழுக்கு தமிழ்குடிமகன் அனைத்தும் தந்தவர் அவர். பூம்புகார், வள்ளுவர் கோட்டம் அவர் தமிழுக்கு தந்த சீர்கள். எவ்வளவோ பேர் முன் முயன்றும் (1952 லிருந்து என நினைக்கிறேன்), கலைஞரால் தான் தமிழ் செம்மொழியானது.
தி.மு.க தோன்றும் போதே அண்ணாவுடன் இருந்தவர் கலைஞர்., இருந்தாலும் நாவலர் நெடுஞ்செழுயன், பேராசிரியர் அன்பழகன், சொல்லின் செல்வர் சம்பத் என கட்சியில் மூத்தோர் இருந்தபோதும்., எம்.ஜி.யார் உள்ளிட்ட பலரது ஆதரவோடு, கட்சியிலுள்ள பெரும்பான்மையோரால் தேர்ந்தெடுக்கப்பட்டு தலைவரானார். தலைமைப் பதவிக்குத்தக்கவாரு இன்றும் ஆளுமையோடு திகழ்வது அவர் சிறப்பு. யார் வந்தாலும். விட்டுப் போனாலும் தமிழ்நாட்டில் தனித்த பெரும் கட்சி தி.மு.க தான். கழகத்தூண் பெரியசாமியைச் சரிகட்டி தூத்துக்குடியை ராதிகா செல்விக்குத் தந்த போது தெரிந்த அவரது அரசியல் முதிர்ச்சி, மாறன் மேல் உள்ள பாசத்தால் தாயாநிதியை கொண்டுவந்த போது தெரியவில்லை, குறையுடைத்து!!!. அறுபதுகளில் தமிழ்நாட்டில் பரவி வந்த எழுச்சி, இந்தியாவின் எந்த மாநிலமும் கண்டிராத எழுச்சி. இன்று திராவிடக் கருத்துக்கள் மங்கி வரும் வேளை, வருங்கால இளைஞர்களுக்கு திராவிடக் கருத்துக்களை கொண்டு செல்ல கலைஞரைப் போன்ற ஒருவரால்தான் இயலும்.
எல்லாத் தலைவர்களும் செய்கின்ற தவறு, தனக்குப் பின் ஒருவரை கைகாட்டாததே பெரியார், அண்ணா, எம்.ஜி.யார் அனைவரும் செய்த தவறிது. கலைஞர் அந்தத் தவறை செய்யாமல் புது வழி காட்டுவார் என்றே தோன்றுகிறது. தகுதியானவரைக் காட்டுவதிலேதான் கட்சியின் வளர்ச்சியையும், வீழ்ச்சியும் உள்ளதென்பது அரசியல் நுண்ணறிவு மிக்க அவருக்கு தெரியாத ஒன்றல்ல!.
"வாலிபம் என்பது கலைகின்ற வேடம்" என்பதை நன்கு உணர்ந்ததாலோ என்னமோ., இளம் பருவத்திலேயே தன்னை ஒரு இயக்கத்தில் இணைத்துக் கொண்டு, இன்றும் சுறுசுறுப்புடன் அயராது ஓடிக்கொண்டிருக்கிறார். இதில் சந்தேகமில்லாமல் அவர் ஒரு உதாரணம்தான்., அவரை மறுப்பவர்களுக்கும்!.