Thursday, June 02, 2005

அன்பில் அம்மா...!

இன்று காலை தொலைபேசி வழியே கேட்கிறேன்., நீங்கள் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதை., துடித்துப் பதறிய இதயத்தை இறுக்கிப் பிடித்து தெலை பேசினேன்., நீங்கள் அனுமதிக்கப் பட்டிருந்த மருத்துவ மனைக்கு., மருத்துவ மனையெங்கும் உறவினர் கூட்டம்., எப்போதும் சிரிப்புடன் எவரையும் வறவேற்கும் உங்கள் முகம் பார்த்து துடித்தபடி. துடித்தாலும் உங்கள் பக்கத்திலிருக்கும் பாக்கியசாலிகள். நண்பனின் அம்மா., என்பது மட்டுமே நமது உறவா?. முன்பே உங்களுக்கிருந்த உபாதைகள் தெரிந்திருந்தால்., ஓடி வந்து பார்த்திருப்பேனே?., எத்தனை சமாதானம் சொன்னாலும்., என் இதயமே எனக்கு விரோதியாகிறது. போன மாதம் பேசியபோது கூட., நன்றாக இருக்கிறேன் என்றுதானே ஏமாற்றிவிட்டீர்கள்?.

உங்களை முதலில் பார்த்த அந்த நாள்., இன்னும் பசுமை குறையாமலேயே என்னுள் இருக்கிறதே. பிறந்தது முதல் பார்த்துப் பழகிய உறவுகளை விட உயிரில் உரைந்துவிட்ட உயிரல்லவா நீங்கள்?. எங்கள் ஆயா இளம்வயதில் இப்படித்தான் இருந்திருப்பார்கள் என நான் உங்களைப் பார்க்கும்போதெல்லாம் எண்ணிக்கொள்வேன். எனக்கு நண்பன் என்ற தோள் கொடுத்த தெய்வம். சிறிய வயதில் உள்ள புகைப்படத்தில்., மருளும் விழிகளுடன் நீங்கள் அப்படியே கலைவாணி போலவே இருப்பீர்கள். இப்போது என் அழுகையை அதிகரித்தபடி என்கையில் உள்ள இத்தப் படமும் அதே அழகுடன். வெளிநாட்டு வாழ்க்கை இன்னும் எத்தனை பேரை வெறும் புகைப்படங்களாக்கி என் கைகளில் தரப்போகிறதோ?. நான் அன்பிலில் நமது வீட்டில் தங்கிய நாட்கள் திரைப்படமாய் நினைவில் விரிகிறது. "பொண்ணு பரவாயில்லம்மா... நீ ஒரு வார்த்தை தம்பிகிட்ட சொன்னீன்னா சரின்னு சொல்லிரும்". உங்கள் வார்த்தைகள் காதில் ஒலிக்கிறது. பெற்ற மகனை அவன், இவன் என நீங்கள் அழைத்து நான் பார்த்ததில்லை. "மருமக எப்படிம்மா?" "ம்.. அதுக்கென்னம்மா? சின்னப் பொன்ணுனாலும் எல்லாத்தையும் பாத்துக்குது". யாரடா இப்படி கேட்பார்கள் எனக் காத்திருந்து கதையளக்கும் உலகத்தில் தனிப்பிறவி!. புள்ளையப் பாத்துக்க! என்றது நீங்கள் கடந்த முறை என்னிடம் பேசியவார்த்தை. அதுவே கடைசி வார்த்தையாகிவிடுமா?., எல்லையில்லாப் பரம்பொருள் என்கிறார்களே., அதிசயம் நடக்கும் என்பது போல் நீங்கள் 'கோமா' விலிருந்து மீண்டு விடுவீர்களா?. 56 வயது ஒன்றும் அதிகமில்லை ஆண்டவனே.

நான் துவண்ட போதெல்லாம் தூக்கிவிட்ட நண்பனே!., இன்று என்னால் உன் அருகிருக்க முடியவில்லை. என்னை மன்னிப்பாயா?.

கொள்கையில்லாத கட்சி

செப்டம்பர் 14ந்தேதி கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்துள்ள விஜயகாந்த், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் என்னைக் கவர்ந்த பகுதிகளை உங்கள் பார்வைக்கும் இங்கே.

14ந் தேதியும் கட்சிப் பேர் அறிவிக்கப்பட போவதில்லை. கொள்கை என்ன எனக் கேட்டால். கொள்கைகளில் நம்பிக்கை இல்லையாம். (அப்டிப் போடு!!!). கொள்கை, கிள்கைன்னு ஏதாச்சும் சொன்னாவாவது செய்யிலைன்னா நாலு கேள்வி கேட்கலாம். கோடி பேர் திரட்டுவது (மாநாட்டிற்கு ) நோக்கமாம். மாநாட்டு நிதி? மன்றத்தினர் அவர்களால் முடிந்ததை(!) செய்கிறார்களாம். மீதி அவரது சொந்தப் பணமாம். டோண்டு (ராகவன்) அய்யா., என்னுடைய பதிவிற்கு பின்னுட்டம் இடும் போது, விஜயகாந்த் அவரது பணத்தைப் போட்டு அரசியலுக்கு வருகிறார் என்றார். என்னாது இது படிச்சவங்களே இப்பிடி அப்பாவியா இருக்காங்களேன்னு நினைச்சுக்கிட்டேன். இப்ப, இந்த விஜயகாந்த் போட்டிய எத்தன தலைகள் உண்மைன்னு நம்பப் போகுதோ?.

இதெல்லாம்விட பெரிய நகைச்சுவை., கட்சி பேர் இல்ல., கொள்கையில்ல ஆனா தேர்தல் எப்ப வந்தாலும் சந்திக்க தயாரா இருக்காங்களலாம். யோவ்... என்னாது இது? ஆள்ளாலுக்கு அடிச்சுப் பாருங்கையா ... விழுந்தாலும் விழுகும் தமிழனின் தலையெழுத்து!!.

மாமிசமா? சைவமா?

நான் விடுமுறைக்கு எங்கள் ஊருக்கு செல்லும் போது, வா! சாமி., நல்லாருக்கியா? இப்படி பல கேள்விகளோடு எங்க சனமெல்லாம் என்னைப் பார்த்த பரவசத்தில் ஓடிவரும் வேளையில், இந்த ஆடு, கோழி இதெல்லாம் இருக்கு பாருங்க... அதெல்லாம் நான் ஊருக்குள்ள கால வச்ச உடனே தெரிச்சு ஓடி, ஆடு அது பட்டியிலும், கோழி பஞ்சாரத்திலும் தானாப் போயி அடைஞ்சுக்கும். ஏன் தெரியுமா? நான் அம்புட்டு மாமிசப் பட்சினி. நானும் இதெல்லாம் பாவம்... ஏன் சாப்பிடனும்?. உயிர்க் கொலை புரியலாமா? இதுல உள்ள சத்து காய்கனில இல்லையா? அப்பிடி, இப்பிடின்னு ஆயிரம் கேள்வி கேட்டுக்குவேன். அதெல்லாம் கறிக்குழம்பு வாசம் என் மூக்கை துழைக்காதவரைதான். அதான் வச்சுட்டாங்கல்ல, நாம சாப்பிடுலைன்னா யாரும் சரியா சாப்பிடமாட்டங்கல்ல? அப்பிடின்னு மனச சமாதானப்படுத்திட்டு(!) ஒரு வெட்டு வெட்டிருவேன். இப்படி மாடு, பன்னி, பாம்பு, பல்லி, எலி, நாய் என்று சிலதைதவிர குறிப்பா பறவைகளில் காகம் தவிர அனைத்தையும் சாப்பிட்டு இருக்கிறேன் எனச் சொல்லலாம்.

வெள்ளையர் காலத்திலே துப்பாக்கி வைத்துக் கொள்ள என் பாட்டனார் அனுமதி பெற்றுருந்தார். வழிவழியாக இன்றும் அது தொடர்கிறது. எங்கள் ஊரைச் சுற்றி மலைகள் என்பதால்., எங்க அண்ணனுக்கெல்லாம் பொழுது போக்கு வேட்டையாடுதல். முயல்கள், கொக்கு, காடை (பறவைகளிலே மிக சுவையானது பச்சை காடைதான்), புறா என்று ஏதாவது வரும். பத்தாவது நான் தேறிவிட்டதற்கு (நம்ம மேல எவ்வளவு நம்பிக்கை பாருங்க! நீ புத்தகத்த தொட்டே நாங்கெல்லாம் பாத்ததில்ல.... தேறிருவியா?.,) எனக்கு அண்ணன் தந்த பரிசு 3 புறாக்கள். தலையில் கைவிளக்கு (டார்ச் லைட் ) கட்டிக்கொண்டு நண்பர்களுடன் ஏதோ போருக்கு போவது போலப்போய்... ஒன்றும் இல்லாமல் திரும்பி வரும் காலமும் உண்டு.

எங்கள் ஊருக்குப் பக்கத்தில் கருப்ப கோவில் என்ற ஒன்றுண்டு., அதில் ஆண்கள் மட்டுமே பூஜையிலிருந்து, பொங்கள் வரை செய்ய வேண்டும். அப்போது ஆடு, கோழி என எல்லாவற்றையும் கலந்து மிகச் சுவையாக சமைப்பார்களாம். பெண்களுக்குத் தாடா என்பதால் சுவைத்ததில்லை. திண்டுக்கல் மாவட்டத்திற்குட்பட்ட ஒரு ஊரில் கனி உண்ணும் 'வவ்வால்கள்' வேட்டையாடுவது மிகவும் பிரசித்தமானது. டாட்டா சுமோக்களும், சபாரிகளும் தவம்கிடக்கும் 'வவ்வாள்'களுக்காக. ஏனெனில் அது மிகவும் சுவையாக இருக்குமாம். எங்க பெரியம்மா கோழி, புறா சமைச்சா தேவாமிருதம்னு இதத்தான் சொல்லியிருப்பாங்க போலன்னு நினைச்சிக்குவேன். பொன்னியின் செல்வனில் ஏறத்தாழ, 2000 வருடங்களுக்கு முன் தமிழர்கள் பெரும்பாலும் மாமிசம் உண்ணுபவர்களாகவே இருந்திருக்கின்றனர் என வாசித்திருக்கிறேன்.

அமெரிக்கா வருவதற்குமுன் சிறிது காலம் சிங்கப்பூரில் வசித்திருக்கிறேன். அப்பொழுதெல்லாம் சமைக்கத் தெரியாதென்பதால், தேக்காவில் இருக்கும் சுதாஸ், சிதாரா அப்புறம் 'சோச்சுகாங்' முருகன் கோவில் அருகில் உள்ள 'வாழையிலை' போன்றவைதான் அன்னையாக இருந்து அமுதூட்டின (மாமிச அமுதுதான்). சிராங்கூனுக்குச் சற்று தள்ளியுள்ள ஒரு ஆந்திரா உணவகம்., அங்கும் நன்றாக இருக்கும். சிங்கப்பூர் போன புதுதில், அங்கிருந்து நம்ம வீட்டுக்குத் தொலைபேசும்போது (ஞாயிற்றுக்கிழைமைகளில்) என்ன சாப்பாடு? எனக் கேட்டால்., நீயில்லயா? அதச் செஞ்சாலே சாப்பிட மனசு வரமாட்டேங்குது... அப்புறம் கொஞ்ச நாள் கழித்து இன்னைக்குத்தான் மீன் வாங்கி ஏதோ செஞ்சேன்.... அப்புறம் கொஞ்ச நாள் கழித்து இங்க மட்டன் கொழம்பு, மட்டன் வருவல்... அங்க எல்லாம் கிடைக்குதுதான, வாங்கி நல்லா செஞ்சு சாப்புடுசாமி...! எங்க செய்யிறது? நமக்கு வந்து வாய்ச்சது சுத்த சைவம்!!. ஆனால் பறவை, மிருகங்கள் மேல் எனக்கிருக்கும் பாசத்தைப் பார்த்துவிட்டு ஒன்றும் சொல்லமுடியாத நிலை. இங்கு 'இண்டியா பேலஸ்'., 'டச் ஆஃப் ஏசியா' போன்ற உணவகங்கள் பரவாயில்லை. இப்போது நானிருக்கும் ஊரில் 'செட்டி நாடு' உணவகமே இருக்கிறது. 'மெக்டொனால்ஸ்' 'பர்கர்கிங்' தாண்டி செல்லும்போது., அடச்சே... இத என்னத்த சாப்புடறது? உப்புச்சப்பில்லாம? அப்பிடின்னு நினச்சாலும், இது என்ன உன் போக்குக்கே விரோதமால்ல இருக்கு? மிளகையும், உப்பையும் கலந்து அடிக்கவேண்டியதுதான? அப்பிடின்னு நம்ம மனசு 'பளிச்' 'பளிச்' ன்னு கேள்வி கேக்கும். மனசாட்சியத் தாண்டி நடக்க முடியுமா?.

மேனகா காந்தி ஏதும் இக் கட்டுரையைப் படிச்சுட்டு , உள்ள தள்ளிரப் போறாங்க!. எனக்கு எப்போதுமே ஒரு குழப்பம்!!. மாமிசம் உண்பது தவறா?., நான் கேக்கறது எனக்கே சிரிப்பா இருந்தாலும்., நாலு பேரு எதாவது சொன்னிங்கன்னா விட்டுடமுடியுமான்னு பார்க்கிறேன். (தலைப்பு கொஞ்சம் விவகாரமா இருக்கட்டுமேன்னுதான்...)