Thursday, May 26, 2005

நடிகன் நாடாளலாமா?

இந்தக் கேள்விய வெற்றி கொண்டான் அய்யாகிட்ட கேட்டா, அருமையா தூய தமிழ்ல பதில் கிடைக்கும். யாருக்கு? நம்ம சினிமா அண்ணன்களுக்குத்தான். ஆனா அய்யா கட்சி சார்புடையவர் என்பதால்...நான் பேசறேன். அண்ணா! நம்ம சிகரெட்ட தூக்கிப்போட்டா, தமிழ்நாட்டுல இலட்சம் பேர் தூக்கி போடறான்., நம்ம 'பபிள்கம்' மென்னமுன்னா இங்க கோடி பேர் சேர்ந்து மெல்லுறான். உண்மைதாண்ணே!. ஆனா அவங்களுக்கு முன்மாதிரியா ஏதாவது செஞ்சு காட்டிருக்கிங்களாண்ணே?.,. அதாவது 'பொண்ணுங்கிறவ தலை குனிஞ்சுதான் நடக்கனும், ஆம்பளை தலை நிமிர்ந்து நடக்கனும்" என்று ஆயிரம் பண்ணிருக்கிங்க., நான் அதச் சொல்லல. நண்டு, சிண்டுடெல்லாம் நம்மளப் பார்த்து சலம்புதுக இது உங்க சாதனைதாண்ணே, ஆனால் விஜயகாந்த் பாவம்... உண்மையாவே இறங்கிட்டாரு பார்திங்களா?! தமிழ்நாடு அம்புட்டு இளக்காரமா போயிருச்சு., சினிமாவுல ஆடி, பாட முடியல்லனா தயார இருக்கு தமிழ் நாட்டு முதல்வர் பதவி?!. ஏன் ஆடி, ஓடி நாட்டுக்கு நல்லது பண்ற வயசுல இறங்க வேண்டியதுதான?. கூட்டம் சேருது, பத்திரிக்கை எழுதுதுன்னெல்லாம் அரசியலுக்கு வரமுடியுமா?. கழைக்கூத்தாடுபவர்கள் வித்தை காட்ட எங்கூருக்கு வந்தா, சுத்துப் பட்டுல இருக்கிற 18 பட்டியும் கூடிரும்!. கை தட்டப் பாத்திங்கன்னா... காது செவிடாயிரும்!. பத்திரிக்கைகாரங்க ... நம்மூரு முன்னேறாமப் பாத்துக்கறதுல அரசியல்வாதிகளுக்கு அடுத்த இடத்துல இவங்கதான்!. எம்.ஜி.ஆர் அவர்கள் மறைந்த போது டி.விப் பெட்டியில் ஜெயலலிதாவப் பார்த்தவங்கதான்...1987 ல ஆரம்பிச்சு 1991 முடிய அம்மா படத்தப்போட்டு காசு பார்த்து, அவங்கள உக்காரவச்சுட்டுத்தான மூச்சுவிட்டாங்க?. அப்புறம் அம்மாவத் தாக்கி எழுதுனாங்க... ஆனா உங்கள? ஒரே ஒரு 'தோல்வி'., ஒதுக்கிப்புட்டாங்கல்ல?. இப்ப நீங்க ஆன்மீக பயணம் போறதெல்லாம் (உங்க பையை நீங்களே தூக்குறிங்களாம்!!.. எதைப் புகழ்றதுன்னு...?!) போடறாங்க, சந்திரமுகி தந்த மீட்புன்னு உங்களுக்குத் தெரியாதா என்ன? உங்கள எப்படி நினைச்சுட்டு இருக்காங்க பாருங்க?.

எம்.ஜி.யாரப் பார்த்து எல்லாரும் அரசியலுக்கு வந்திங்கன்னா, அவரோட உழைப்பை பாத்தீங்களா?. 1936 ல நடிக்க வந்தார். (முன்பும் நாடகங்களில் நடித்தார்). 1953 ல .தி.மு.க உறுப்பினராகி (அதுக்கும் முன்பே அவர் படங்களில் திராவிடம் பரப்பினார்). 1962ல் சீனப் போருக்கு முதன்முதலில் ரூபாய் 75,000/- வழங்கினார். எந்த இயற்கைச் சீற்றங்கள் வந்தாலும், அள்ளித்தார நீளும் கைகளில் முதல் கை அவருடையது. அவருடைய ஆட்சி பற்றி, மிகக் கடுமையான மாற்றுக் கருத்து எனக்குண்டு, ஆனல் அவரது வள்ளல்தன்மை பற்றி அவரது எதிரிக்கும் மாற்றுக் கருத்திருக்காது. 1962 ல் சட்ட மன்ற உறுப்பினராகி, 1967 ல் முதன்முதலில் தமிழ் நாடு சட்ட மன்ற பேரவை உறுப்பினரானார். 14 ஆண்டுகள் கழித்தே அவருக்கு பதவி கிடைத்தது. 1972 ல் தனிக் கட்சித் தொடங்கி, 1977ல் முதல்வரனார். 1953ல் நேரடி அரசியலுக்கு வந்து 24 ஆண்டுகள் கழித்தே முதல்வர் பதவி அவருக்குச் சாத்தியமானது. ஜெயலலிதாவும் கூட 1981ல் அ.தி.மு.கவில் சேர்ந்து, 1984ல் ராஜ்யசபா உறுப்பினராகி, 1989ல் தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டு, 1991ல் முதல்வர் ஆனார். 10 வருட அனுபவம்!!. ஆனா இது எதுவுமே இல்லாம நாலு அரசியல்வதி நம்மைத் தேடிவந்து பாக்குறாங்கங்றத மட்டுமே மக்கள் பணியின் தகுதியாகக் கொள்ளமுடியுமா? நம்ம நாட்டுக்கு சுதந்திரம் வாங்கித் தந்த தலைவர்கள் கூட இப்பிடி பெருமையா வசனம் பேசுனது கிடையாது. நீங்களெல்லாம் பின்பற்றும் எம்.ஜி.யார் அவர்கள் கூட "இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்னு" பாட்டெழுதுறவங்க, 'அவங்க ஆசையை' எழுதி தரப் பாடுவார். வசனம் "என்னைக் களங்கப் படுத்தி மகிழாதீர்கள்னு" பணிவாகத்தான் இருக்கும். சந்திரமுகில சமத்தா நடிச்ச உங்களப் போட்டு வாங்குறேன்னு நினைக்காதிங்க., உங்களுக்குச் சொன்னா உங்க கூட்டத்துக்கு சொன்ன மாதிரி., அது தவிர சந்திரமுகி வெற்றி ஏதும், உங்கள திரும்பி தட்டிவிட்டுரப் போவுது!!.


ஆந்திராவில் 1987ல் என்.டி ராமாராவ் அவர்கள் அரசியலுக்கு வரும்போது, நம்ம விஜயகாந்த் மாதிரி 'பழைய சோறும், வெங்காயமும் போதும்' என்றுதான் வந்தார். சொத்துக்களை நாட்டுக்கு அர்பணிக்கவும் செய்தார். ஆனால் அவருடைய ஆட்சியில் தான் ஊழல் பெருகி வளர்ந்தது என்பதை ஆந்திர மக்கள் மறுக்க முடியாது. 'ராமாராவ்காரு' 'சிரஞ்சீவிகாரு!" என நடிகர்களை அவ்வளவு மரியாதையாக அழைக்கும் ஊரில்., அவருக்குப் பிறகு எந்த நடிகனும் முதல்வர் ஆகவில்லை. ஆனால் இங்கே?. எம்.ஜி.யார் ஆட்சியில் அவரே கட்டுப்படுத்த முடியமல் பெருகியது ஊழல். மாற்றம் வேண்டும், மாற்றம் வேண்டும், எல்லாம் மாறணும்! ங்கிறிங்க நடிகர்கள் எல்லோரும்., 20 ஆண்டுகள் நடிகர்கள்தானே ஆண்டும், ஆண்டு கொண்டும் இருக்கிறீர்கள் என்ன மாற்றம் வந்தது?!!., விஜயகாந்த் கேட்கிறார் அன்புமணிக்கு என்ன தகுதி, தாயாநிதி மறானுக்கு என்ன தகுதி?., அரசியல்வாதியின் மகனாகப் பிறந்து, வளர்ந்ததே தகுதி!!!. என் தந்தை ஒரு அரசு அலுவளர். ஒரு அரசு அலுவலகத்தின் சுவர்கள் என்ன போசிக் கொள்ளும் என்று கூட நான் சொல்லுவேன்!!. அவர்கள் வந்தது நியாயம் எனச் சொல்லவில்லை. அதனால் நான் வருவேன் என்று நீங்கள் சொல்வது வேடிக்கையாயிருக்கிறது. வெள்ளந்தியான ஜானகி அம்மாவிடம் ஒரு ஆண்டு பழகியதையே உங்கள் அரசியல் தகுதி என பறைசாற்றும் நீங்கள் கேட்கிறீர்கள் தயாநிதி, அன்புமணி பற்றி !!. சரி அரசியலுக்கு வருவதற்குரிய கொள்கை ஏதாவது இருக்கிறதா?. பிரேமாவுக்குப் பிடித்தமாக இருத்தல் என சொல்லி விடாதீர்கள். மனைவியை எப்போதும் முன்னிருத்துவதால் உங்களை ஒழுங்கானவர் என மக்கள் நினைப்பார்களா? இல்லை அவரது ஆதிக்கம் என நினப்பார்களா?. உங்கள் இரண்டாவது மகனை சினிமாவில் களமிருக்க பயிற்சி கொடுக்கிறீர்கள். ஆனால் தாயநிதி, அன்புமணி அரசியலுக்கு வரக் கூடாது.

சரி!, அது ஏன் நடிகர்கள் அரசியலுக்கு வரத் துடிக்கிறீர்கள். மக்கள் சேவையே நோக்கம் என்றால் கேரளாவில் மம்மூட்டி 'கேன்சர் மறுவாழ்வு மையம்' அமைத்து அளப்பரிய சேவை ஆற்றுவதுபோல் நீங்கள் செய்யமுடியாதா?. வட இந்தியாவில் நடிகர்கள் அரசியலில் இருக்கிறார்கள் என்றால் அம்பானிகளையும், டாட்டாவையும், பிர்லாவையும் கொண்ட பூமி அது. எனவே தாங்கும்!!!. ஆன இங்க பாவப்பட்ட தமிழ் செம்மங்கையா... விட்டுருங்க. பத்திரிக்கை தூக்குதேன்னு இன்னம் ரெண்டு பேர் இறங்குனிங்கன்னா அம்புட்டுத்தான் தமிழ்நாடு!!. அய்யா நெடுமாறன், அய்யா நல்லகண்ணு மாதிரி நாட்டில் மழை பொழியக் காரணமாக இருக்கிற சில நல்ல தலைவர்களும் இங்கு இருக்கிறார்கள். நீங்கள் உண்மையில் மாற்றத்தை விரும்பினால், அவர்களைப் போன்றோரை ஆதரித்து மாற்றம் காட்டுங்கள்!. கோடிகளில் புரள்கின்ற நீங்கள் விளையாட ஏழைத் தமிழனின் அடிவயிறுதானா அகப்பட்டது?. விளையாட்டை காட்டுங்கள் வேறிடம்!!!.