Tuesday, May 10, 2005

மஞ்சள் பை

ஒரு நூதனமான அனுபவம்!, உங்களில் யாருக்காவது இது ஏற்பட்டிருக்கவும் கூடும். என் அப்பா ஊர் திண்டுக்கல் பக்கத்தில் உள்ள ஒரு கிராமம். அப்பாவிற்கு திருச்சி கலைக்டர் அலுவலகத்தில் வேளை என்பதால், நாங்கள் திருச்சியில்!. விடுமுறை அல்லது குடும்ப விழாக்களுக்குத்தான் ஊருக்குச் செல்வது. அதற்குள் 10 முறை 'புள்ள கனவுல வந்திச்சு (நாந்தான்!) பாக்கனும்னு ஓடி வந்தேன்னு' பெரியப்பா (ஐய்யான்னு சொல்லுவோம்!) வந்து விடுவார்!. வரும்போது, அரிசிமூட்டை, தேங்காய், கடலை, மாம்பழம் காய்கறிகள் என்று அப்போது தோட்டத்தில் எது விளைகின்றதோ அதைக் கொண்டு வாருவார். இதுல ஒரு பாயிண்ட் என்னன்னா, ஊர்ல அவர் நாட்டாமை (தீர்ப்ப மாத்தி சொல்லுன்னு கலாய்ப்பதுண்டு) என்பதால், திண்டுக்கல் to திருச்சி highway ல போற எல்லா பஸ் கண்டக்டரும், டிரைவரும் பழக்கம் (பின்ன எப்ப எது தோட்டத்தில விளைஞ்சாலும், இவர்களுக்கு ஒரு 'மஞ்சள் பை' கட்டயம் உண்டு.) அதானால் யாரும் இவரிடம் டிக்கெட்டுக்கு பணம் கேட்பதில்லை!. எனவே, அங்கிருத்து இலவசமாக வந்துவிட்டு, திருச்சி பஸ்டாண்டில் இருந்து E.B காலனி வர ( 3 மைல்) 25 ரூபாய் கொடுத்துவருவார். இதுவல்ல நான் சொல்ல வந்தது, திண்டுகல்லில் இருந்து திருச்சி வரை 'மஞ்சள் பை' புண்ணியத்தில் ராஜ உபச்சாரம்!... ஆனால் ஆட்டோவில் ஏறியவுடன் (ஆட்டோ ஓட்டுனருக்கு இவர் 'நாட்டமையா இருந்தா என்ன?, இல்ல 'எஜமானா' இருந்தா என்ன?) "யோவ் பெரிசு மூட்டைய நல்லா ஏத்து"ன்னு அருமையான மரியாதையா இருக்கும். "டவுனுகாரன்களுக்கு மரியாதையே தெரியாதப்பா.."ன்னு அலுத்து கொண்டுதான் வருவார். ஓவ்வொரு ஆண்டும் எப்போதடா தேர்வுகள் முடியுமென்று காத்திட்டு இருந்து ஓடிப்போயிருவேன் ஊருக்கு!. அங்குதான் என்னமோ சுதந்திரக் காற்றையே சுவாசிப்பது போல் இருக்கும். நம்ம சத்தாய்ப்பா... பஸ்ச விட்டு இறங்கின உடனே (நமக்காக மட்டும்தான் அந்த ஊர்ல பஸ்சே நிக்கும், மத்தவங்க அடுத்த ஊரில் இறங்கி நடந்து வர வேண்டும்!), சூட்கேஸ் தூக்க நாலு பேர் ஓடிவருவாங்க (மாமா மகனுக தான்!). அப்ப ஆரம்பிக்கிற கவனிப்பு விடுமுறை முடியும் வரைத் தொடரும். நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம், ஊர் சுற்றல் என பொழுது போகும். நல்ல சாப்பாடுன்னு பேருக்கு சொல்லவில்லை!. காலைல அப்பக் கறந்து சூடா இருக்கிற பால்ல அப்பிடியே ' ப்ரூ ' தூள், சர்க்கரைப் போட்டு, அடிக்க வேண்டியதுதான்!. எங்க அண்ணன் ஒரு கோழிப்பண்ணை வச்சிருந்தனால, நின்னாகோழி, நடந்தா கோழி.... படுத்தா கோழி குருமாதான்!. இதுதவிர பத்தும் பத்தாததுக்கு தோட்டத்தில் காய்க்கின்ற இளநீர், மாம்பழம்...இங்க அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு உறவினர்களை நினைத்து அழுவதைவிட, கோழி, இளநீரை நினைச்சுத்தான் நிறைய அழுவது. பம்பு செட்டில் தோழிகளுடன் (நல்ல தோழிகள் இன்றும் அங்கு உண்டு என் அண்ணிகளுடன் சேர்த்து) நீராட்டம். மதியம் எங்க ஐயா கயிற்றுகட்டிலை நான்கு போர்வைகளைப் போட்டு மெத்தென்று ஆக்கித்தருவார். அதில், 'காட்டன் டவலை' தண்ணிரில் நனைத்து பிழிந்து முகத்தில் போட்டுக்கொண்டு (மே மாச வெய்யில் பிச்சுரும் இல்ல). மாமரத்து நிழலில் படுத்தால் பொழுது சாயும் காலம் தான் மீண்டும் இந்த உலகத்திற்கு வருவது ... எந்திருச்சு திரும்ப ஒரு இளநீரோ, பதனீரோ அடித்துவிட்டு... வீட்டுக்குச் செல்வது.... இப்படி சுகம்ம்ம்ம்ம்ம்மா.... நாட்கள் போய்ட்டு இருக்கிறப்பதான் ... அந்தக் கொடுமையான நாள் வரும்!. ஆமா, திரும்பி திருச்சிக்கு போகனும் இல்ல?. இந்தப் படிப்புன்னு ஓன்ன எவந்தான் கண்டுபிடிச்சானோ?...ஊருக்கு கிளம்புகிற நாள் காலையில் இருந்து ரொம்ப சோகமா ஆகி நம்ம முகம் தன்னால 'உம்' என்று ஆயிரும்! "அதான் மூணு மாசத்துல "ஊர்ச்சாமி" கும்புட வருவில்ல சாமி!" சுற்றங்களின் சமாதானம் இன்னும் சோகத்தையும், கோபத்தையும் ஏற்றும். சரின்னு மனச சமாதனப் படுத்திகிட்டு, சூப்பரா சுடிதார மாட்டிட்டு, பக்காவா தலை சீவி, என்ன மேக்கப் போட முடியுமோ, அம்புட்டும் போட்டு(திருச்சில நமக்காக ஒரு மாசமா கத்திட்டு இருக்கிற ஜொல்லன்களை ஏமத்தக்கூடாதில்ல?) 'பாட்டா' (அப்பாவோட அப்பா) படத்துக்கு சாமி கும்பிட்டு விட்டு, எல்லாப் பெரிசுக கிட்டயும் திருநீறு வாங்கிப் பூசிட்டு பந்தாவா செருப்ப போட்டுத் திரும்பும்போதுதான் அந்த அதிர்ச்சி நடக்கும்! எங்க ஆயா நாலைந்து 'மஞ்சள் பை'களை கொண்டு வந்து கொடுப்பாங்க! 'என்னாது இது?' நான் பாய்வேன்!. "கோவிச்சுக்காதப்பா!, கொஞ்சம் கடல , துவர, தேங்காதான் சாமி, நீ தூக்க வேண்டாம், அண்ணன் தூக்கிக்குவான்!" (திருச்சிக்கு அண்ணன் தான் கொண்டுபோய்விடும்!) . அதுவும்தான் டிப்டாப்பா டிரஸ் பண்ணிட்டு வரும்! பஸ் வரைக்கும் தூக்கிற மாதிரி நடிச்சுட்டு, என்கிட்ட தள்ளிரும்! சுடிதார், செண்ட், லைட்டா லிப்ஸ்டிக் எல்லாம் போட்டுட்டு மஞ்சப் பையத்தூக்கிட்டு திருச்சி வந்து சேர்வேன்!. நானவது பரவயில்ல!., ஒரு தடவ என் தம்பி, எங்க அத்தை ஊருக்குப் போன போழுது(அத்தை பொண்ணு திருமணமோ என்னமோ), ஒரு மூட்டை காய்ஞ்ச மிளகாய பாசமா அவன் தலைல கட்டி விட்டுட்டங்க! எங்க அப்பா ஊருக்குப் போகும்போது வள்ளல் மாதிரி வாரி வழங்குவார் என்றாலும், அத சிக்கனமா செலவழிச்சுட்டு (அதாவது, ஆட்டோவில் வாராமல் டவுன் பஸ்சில் வருவது, ஊர்ல திருநீர் பூசறப்ப பெரிசுககிட்ட இருந்து வேற வல்லிசாத் தேறும்!, அதெல்லாம் பாக்கெட் மணியாக்கி பட்டாசு வெடிக்கணும்ல?).அவன் மிளகாய் மூட்டையத் தூக்கி டவுன் பஸ்( மாலை கூட்டத்தில்) கண்டக்டர் பின் புறப் படிக்கிட்ட போராடிக்கிட்டு இருக்கும் போது, முன்புறம் ஏத்தி, முன்புறப் படிக்கருகில் இருக்கிற சீட்டுக்கடியில் தள்ளிவிட்டுட்டான். அவன்போய் நல்லா பஸ் நடுவில் நின்னுக்கிட்டான், கொஞ்ச நேரத்தில டிரைவர்ல ஆரம்பிச்சு எல்லாரும் வரிசையாத் தும்ம ஆரம்பிச்சுட்டங்க!. கண்டக்டர் யாருது மூட்டை?ன்னு கத்தும்போது, பேசாம அப்பிடியே ஜன்னலுக்கு வெளிய பாத்து சமாளிச்சிட்டு, எங்க காலனி வந்தவுடன், மிளகா மூட்டையை இழுத்திட்டு ஓடிவந்திட்டான்!. அதற்குப்பிறகு யாராவது அத்த வீட்டுக்கு...ன்னு... சொன்னாப்போதும்...அவங்களுக்கு கும்மாங்குத்துதான். எங்க பெரிய அண்ணன் மகன் இதிலெல்லாம் ரொம்பத் தெளிவு! திருச்சிக்கு சேர்ந்து வரும்போது "அக்கா பையக்குடு! நான் வச்சுக்கிறேன்னு" வங்கிக்குவான்! ஆனா திண்டுக்கல் (அவன் ஊர்) போனா "இந்தாக்கா வச்சுக்க!"ன்னு நம்மகிட்ட தந்திருவான்.