Saturday, May 07, 2005

என்றும் இருப்பாய்

அன்புள்ள ஆயா,
அப்பாவின் அம்மாவாய் என்பதைவிட,
ஆசிரியையாகவே அதிகம் இருந்தாய்!

பள்ளிப்பக்கம் நீ சென்றதில்லை!
உன் பண்பும், பாங்கும்,
பத்து 'டிகிரி' வாங்கிய
பட்டதாரிக்கும் சாத்தியப்பாடுமா? சந்தேகமே!

பெரியப்பா, அப்பா, அத்தையுடன்
உன் நாத்தனார் விட்டுச்சென்ற...
நல்வாழையையும் வளர்த்தாய் நாட்டமுடன்!

வாழையும் பெரியப்பவை மணமுடித்து,
கன்றிரண்டை ஈன்றபின் பட்டுவிட்டது,
நீயிருக்கிறாய் என்ற நம்பிக்கையில்!

அண்ணன்கள் இருவர் மற்றும்
ஆடுமாடு, கிளி, கோழி,
அப்புறம் நாங்கள் நால்வரென,
பிள்ளைகள் வளர்ப்பதே பிழைப்பானதால்....,
இரவில் என்னேரம் அழைத்தலும்
'ம்'மென்பாய்... எப்போது உறங்குவாயோ?

'பிள்ளைகள் படிப்பு' பிசினஸென
பிரிந்து சென்ற உறவுகளை....
பாசங்காட்டி மோசம் செய்யாமல்,
அமைதியாய் அனுமதித்தாய் சுமைகளுடன்!

தீபாவளி, பொங்கல் அல்ல..
எங்களைச் சந்திக்கும் நாட்களே
உனக்கு திருவிழா நாட்கள்!
அரசியலும், அறிவியலும் நான்பேச...
ஆர்வத்துடன் கேட்ட தோழி...!
உன் நிறைவுகள் தெரியும்
நிறைவேறாதன புரியும் எனக்கு!

என் கூந்தலைக் குத்தகைக்கெடுத்து....
அன்பெனும் கூலியும் கொடுப்பாய்!
பதமாய் நல்லெண்ணைக் காய்ச்சித்தேய்த்து,
பாசமும் சீகைக்காயும் சீராய்த்தடவி,
இதமாய் சுடவைத்தணீர் ஊற்றிக்கழுவி,
ஈரம்போக்க 'சாம்பிராணி' புகைபோட்டு,
'புதைக்காடு மாதிரியில்ல இருக்கு?'
புன்னகைத்துக் கொள்வாய் பெருமிதமாய்!....

எங்கும் செல்வதில்லை நீ!
வளர்த்திட்ட உறவுகள் எல்லாம்
வந்து பார்க்கெட்டுமென்ற இறுமாப்பில்!

காலச்சுழலில் திருமணம், குடும்பமென
அமெரிக்கா வந்து ஆண்டுகள்போனது,
நான்குவருடங்கள்! ஓடித்தான் விட்டது
உன் குரல்கேட்காமல், முகம்பார்க்காமல்!
தொலைபேச தெம்பில்லை எனக்கு
உன் அழுகைக்கு பயந்து!
அனைத்தயும் மீறி இன்றுபேசினேன்...
பேசி முடிக்கும்போது சொன்னாய்
"நீ வரும்வரை இருப்பேன்!"

தெரியும் ! இருப்பாய் நீ!
உன்னைப்போல இனியொருவரைப் படைப்பது
அத்தனை சுலபமா அவனுக்கு?

உன் முகம்

இன்றிரவே துவங்கிவிட்டது...
எனது பகல்!
என்ன கேட்பாய்
நாளை மாலை?
அறிந்த அனைத்தையும்
அலசிப்பார்த்தது மூளை...

நேர்த்தியாய் அலங்கரித்து
நெட்டுயிர்த்து நிமிர்கையில்...
வாசலில் நீ!

சன்னலின் வழியே
விரைந்த மனதை...
பிடித்து சொருகினேன்.
படபடப்புடன் பணிய
மறுத்தது அது!

நேரமோ நின்றது!
சலித்து அதனுடன்
சண்டை பிடிக்க,
'காபி கொடுக்க'
அழைத்தது குரல்!

வெளியே வந்தும்
வெட்கத் திரையால்
நிழலாய் உன்முகம்!

மெதுவாய் சற்று
ஒதுங்கி நிற்கையில்...
பேசுகின்ற குரல்களும்
உன் பேசாக்குரலும்
உணர்த்துகின்றன உன்முகத்தை!

தலை நிமிர்த்தி,
உன்னைப் பார்க்கின்றேன்....
தரைபார்த்து நீ...!