Wednesday, May 04, 2005

நகைச்சுவையும் படையுங்கள் பெண்களே!

அந்த நாட்களில் மதுரம், அங்கமுத்து, முத்துலட்சுமி, சரோஜா, மனோரமா (இன்று குணச்சித்திரமாயிட்டாரே!) போன்ற நல்ல நகைச்சுவை விருந்தளிக்கவல்ல பெண்மணிகள் திரையில் இருந்தார்கள். கோவை சரளாவிற்குப் பிறகு, தமிழ் திரையுலகில் பெண் நகைச்சுவை நடிகைகள் குறைந்து விட்டதாகவே படுகிறது. இதைப் பற்றி பிறகு பதிவு செய்கிறேன். மிகுதியாக, பெண்களிடம் இருந்து சீரியஸ் ஆன படைப்புகளே அது கதையாகட்டும், கட்டுரையாகட்டும், கவிதையாகட்டும், பட்டிமன்றமாகட்டும் (காந்திமதி மற்றும் சில இளம் பேச்சளர்கள் தவிர), வலைப்பதிவுகளாகட்டும் கிடைக்கிறது. நான் அறிந்தவரை, அன்றாட வாழ்க்கையில் பெண்களே நகையின் சுவையுடன் நகைச்சுவையும் அனுபவிப்பவர்கள் என்பேன். 50 வயதிற்கு மேற்பட்ட அப்பாக்கள் எல்லாம் சிரிக்கவே மறந்து விடுகிறர்கள் நமது ஊரில். ஆனால், 50 வயது பெண்மணிகளைப் பாருங்கள்! இள வயது ஆர்வம் சிறிதும் குறையாமல், உடல் முழுவதும் நகை அணிந்து, முகம் நிறைய புன்னகையோடு இருப்பார்கள். (சில விதிவிலக்குகள் இருக்கலாம் சாமிகளா!., கும்மிடிப்பூண்டி, காஞ்சிபுரத்தில நல்லா வேளை பாக்காம, இரத்ததின் இரத்தங்கள் அம்மாக்கிட்ட புன்னகைய எதிர்பார்த்தா கும்மாங்குத்துதான் கிடைக்கும்.! நம்ம என்னமோ நினைக்கிறோம், பாவம்! அமைச்சர், எம்.எல்.ஏக்களோட பிழைப்பு!). எங்கள் வீட்டில் ஏதேனும் விஷேசம் என்றால் பெண்கள் அடிக்கும் 'ஜோக்குகளில்' தான் வீடு ரெண்டுபடும் (பின்ன!, ஆண்கள் எல்லாம் பொறுப்பா வேலை செய்து கொண்டிருப்பார்களே!). ஒரு விஷேச தினத்தில், என் அக்கா பெண் (11 வயது) அவர்கள் வீட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றை விவரித்துக் கொண்டிருந்தாள், "எங்க அம்மாவும், அப்பாவும் கத்திப் பேசிட்டு இருக்கும்போது, எங்க பாட்டி(அவளுடைய அப்பாவின் அம்மா), இடையில பேச வந்தாங்களா?, அப்ப, அம்மா பாட்டியப் பிடிச்சுத் தள்ளி விட்டுட்டங்க...!" என்று சொல்லிக்கொண்டு இருந்தாள். அப்போது என் அண்ணனின் மகன் (12 வயது), திடுக்கிட்டு, "என்ன?, உங்க அம்மா பாட்டிய தள்ளி விட்டுட்டாங்களா?" என்று கேட்டான். அதற்கு அவள் மிக இயல்பாக, "பின்ன?, கோவத்தில ரெண்டு அடி அடிக்கறதுதான் அப்புறம் சேர்ந்துக்கறதுதான்... ஏன் உங்க அம்மா உங்க பாட்டிய அடிக்கவே மாட்டாங்களா?..." என்றாள், அவன் மறுப்பாகத் தலை அசைக்க, "நீ பாத்திருக்கமாட்ட..!" என்றாளே பார்க்கலாம்...! இது சீரியஸ் ஆன மேட்டரா, சிரிப்பான மேட்டரா என்பது ஆய்வுக்குரியது என்றாலும், அன்று முழுவதும் சிரித்து, சிரித்து வயிறு புண்ணானது. நானும், என் சித்தியும் (அம்மாவின் கடைசி சகோதரி) சேர்ந்தால்... எப்போதும் ஒரே கலாய்ப்புதான். ஒரு நாள் இப்படித்தான், என் அம்மாவின் பாட்டி (அம்மாவை வளர்த்தவர்), இறந்து விட்டார் என செய்தி வந்தது. இந்தப் பாட்டி எங்களுக்கு எல்லாம்.. "சிம்ம சொப்பனம்!", விடுமுறையில் அம்மா வீட்டிற்கு செல்லும்போதெல்லாம் வாராவாரம் கால் லிட்டர் நல்லெண்ணையை தலையில் கொட்டி, நல்ல காரமான (இத எப்பிடி சொல்றது?, நல்லா கண்ணு எரிய வைக்கிற) சீகைக்காயை தலையில் 'அப்பி', முடியெல்லாம் சேர்த்து பிடித்து உச்சந்தலையில் வைத்து பரபரவென்று தேய்த்து, வெந்நீரை பளீர், பளீரென்று முகத்தில் அடித்து குளித்து விடுவார். தலையை அவரிடம் கொடுத்துவிட்டு, கத்தக்கூட சக்தியின்றி குளித்து முடிப்போம். நானும், என் கடைசி சித்தியும் (பெயர் பூங்கோதை, என்னைவிட 2 வயதுதான் பெரியவர் என்பதால், வா, போ என்றுதான் அழைப்பது) நெருங்கிய தோழிகள், திருச்சியிலிருந்து கரூர் பக்கம்தானென்றாலும், வருட விடுமுறை அல்லது குடும்ப நிகழ்ச்சிகளில்தான் சந்திப்பது. எங்களுக்குள் ஒரு பழக்கம்! நங்கள் சந்திக்கும்பொழுது, கடந்தமுறை சந்தித்ததில் இருந்து, தற்போதைய சந்திப்பு வரை என்ன புதிதாக வாங்கியிருந்தலும் (நகைகள், புடவைகள், மேக்கப் அய்ட்டங்கள் ஏன் ஒரு சின்னப் பேனா கூட) ஒருவரிடம் ஒருவர் காட்டிக் (அழகாக இருந்தால் மனதில் 'கருவி'யும்)கொள்வோம். சரி, விஷயத்திற்கு வருகிறேன், பாட்டி இற்ந்த செய்தி கேட்டு சென்றபோது, வீடு நிறைய உறவினர்கள். பயணத்தின்போது ஒரளவு அமைதியாக வந்த அம்மா பாட்டியைப் பார்த்ததும் அழுது மயக்கம் போட, அவரை அப்படியே அவரது உறவினர்களிடம் தள்ளிவிட்டுக் கொண்டிருந்தபோது, பூங்கோதை ஓடி வந்து, வந்துட்டியா? அம்மாயைப் (இறந்த பாட்டி) பாத்தியா? என அழுது புலம்ப, எனக்கு சிரிப்புதான் வந்தது (பாட்டிக்கு வயது 80க்கும் மேல). சட்டென்று சமாளித்துக்கொண்டு, "சரி, வா... !" எனக்கூறி, விடு,விடு என்று அவளது அறைக்கு அழைத்து சென்று, பாதுகாப்பாக கதவைத் தழிட்டு, 'பீரோ'வை மெதுவாகத் திறந்து, புதிதாக வாங்கிய புடைவைகள் ஒவ்வொன்றாக எடுத்து காட்ட ஆரம்பிக்க, (பட்டு, தசார் சில்க், பேட்ச் ஒர்க் பொட்டிக் சாரீஸ் என mostly dry wash சாரீஸ்தான். (நம்ம வயித்தெரிச்சலை கொட்டிக்க அம்புட்டு அவசரம்). நானும் சகஜ நிலைக்கு திரும்பி பார்த்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் யாரோ கதவைத் தட்ட, கட்டில் மேல் இருந்த புடவைகளை அவசர , அவசரமாக ஒதுக்கி வைத்துவிட்டு, கதவைத் திறந்தால், என் அத்தை நின்று கொண்டு இருந்தார். எங்களை ஒரு பார்வை பார்த்துவிட்டு, நிதானமாக உள்ளே வாந்து, அவருக்கு தேவையான ஏதோ ஒன்றை எடுத்து கொண்டு வெளியே செல்லும்போது, "பூங்கோத!, அவ்வளவு சேலையையும் தொட்டிட்டியா?, அத்தினையும் துவைக்கனும்!" என்று சொல்லிவிட்டுப்போக, பிறகும் பூங்கோதை மாஞ்சு, மாஞ்சு அழுதது பாட்டிக்காக அல்ல!. இப்படி நம் வாழ்வில் நாள்தோறும் காண்கிறோம் நகைச்சுவையை. நம் மனதை மகிழ்ச்சியாய் வைக்க மட்டுமல்ல, மிகக் குழப்பமான மனநிலையில் இருக்கும்போழுதும், குழப்பத்தை (கஷ்டப்பட்டு) ஒதுக்கி வைத்துவிட்டு, வடிவேல் அல்லது விவேக் காமெடியப் போட்டு 15 நிமிஷம் சிரிச்சுட்டு, யோசிங்க! எப்பேர்ப்பட்ட குழப்பமும் பாதியாக குறைந்துவிடும் (மீதிய நீங்களாத்தான் சரி செய்யனும்). உங்களை எப்பவும், Heroவாக நினைக்காமல், காமெடியனாக நினையுங்கள்! நிஜ வாழ்வில் Hero ஆகிவிடுவீர்கள் (உங்களை சுற்றி எப்போதும் ஒரு கூட்டமிருக்கும்). எனவேதான், நமது முன்னோர்கள் 'நகைப்பை' 'சுவை' எனக் கூறி இருக்கிறார்கள். அறுசுவையும் அன்றாடம் படைக்கும் பெண்களுக்கு இயல்பாக வரும் இந்தச் சுவையை, பெண்கள் உங்கள் படைப்பிலும் காட்டுங்கள்!. அதனால் நீங்கள் சொல்ல வரும் செய்தியின் "கனம்" நிச்சயம் குறைந்துவிடாது.