Saturday, December 31, 2005

**அக்காலம்**

என்றுமே தூங்கி வடியும் எரிச்சல் பொழுதுகள், அக்காலம் என்னவோ ஆனந்தமாய் தோன்றும். எப்போதும் உதிக்கும் சூரியன் அந்நாட்கள் மட்டும் கதிர் கை கொண்டு தோள்தொட்டுப் பேசும். தினமும் மலரும் மலர்களைக் கூட சருகெனப் பார்க்கும் கண்கள் அச்சமயம் சருகையும் மலர்போல் மென்மையாய் பார்க்கும். சுற்றி சுழித்தடிக்கும் காற்று எதிர்காலத்தைதான் கட்டுகிறதோ என்னவோ., அவன் நினைவுகள் நம்மை சுற்றுவதாய் மனம் எண்ணிக்கொள்ளும்., ஆடி நடந்தே பழக்கப் பட்ட கால்கள்., அவன் எதிர்வரும் போது மட்டும் நடை பழகும். எவரையும் எடுத்தவுடன் பெயர் சொல்லி அழைக்கும் நாக்கு அவன் பெயரை நினைக்கும்போதே எழ மறுத்துப் படுக்கும். எத்தனை உறவுகள் சூழ்ந்திருந்தாலும் அவன் விலகினால் பூமி வெறுமை பெரும், அருகில் வர, உயிர்க்கும். தோற்றாலும் காதலில் வெற்றியுண்டு. ஒரு மனதை வென்ற மகிழ்ச்சியுண்டு.

நல்லா பேசி, சிரிச்சு விளையாண்டுட்டு இருக்கிற புள்ளைங்கள ஒரு காலத்தில் பார்த்தோம்னா., எதப் பார்த்தாலும் எரிஞ்சு விழுகுங்க. அப்பத்தான் வாய்திறக்கிற அவங்க அம்மாவ 'ச்சே., என்னாத்துக்கு எப்பப் பாரு... தொணத் தொணங்கிற?' ந்னு கடிச்சு துப்பிட்டு நகர்ந்து போகுங்க. சாப்பிடுமான்னா "ஆமா., அது ஒன்னுதான் இப்ப., நீயே சாப்பிட்டுக்க' ந்னு நாலு தேளு காலக் கடிச்ச மாதிரி 'சுள்'ளுன்னு இருக்குங்க., அப்படின்னா அந்தப் பய இன்னும் தன் காதலைச் சொல்லவில்லை என்று அர்த்தம். அவன் சொல்லிட்டான்னு வையுங்க., அங்க 'இந்த வேளையெல்லாம் எங்கிட்ட வச்சுக்காதன்னு' (எங்க போயிரப் போறான்னு நம்பிக்கைதான்) பட்டுன்னு சொல்லிட்டு வீட்டுக்கு வந்து உண்மையாவே தொணதொணக்கிற அவங்க பாட்டியப் பிடிச்சு கொஞ்சிட்டுப் போகுங்க. காதல்!. இது பல சாம்ராஜ்ஜியங்களைக் கட்டியிருக்கிறது., சிலவற்றைப் புரட்டி போட்டு அழித்திருக்கிறது. உலகம் தோன்றிய நாளிலிருந்தே காதல் தோன்றியிருக்க வேண்டும்., ஆனால் இன்றும் புதிதாகவே பூக்கிறது. ஆதி நாள் முதல் தோன்றும் நிலவைப் போலவே சலிப்பதில்லை காதலும்.

என் நண்பன் காதல் கொண்டான் ஒரு பெண்ணின் மீது., உருகி உருகி காதலித்து விட்டு ஒரு நாள் போய்விட்டாள்., பிறகு அவளை அவன் பார்த்தது வண்ணத்திரையில். அழுகையிலும், வெறுப்பிலும் ஆண்டுகள் பல கடத்தி., வேலையெனும் மதுவையுண்டு மீண்டெழுந்தான். அவள் மீதான கோபம் அவனை கணணி வல்லுனன் ஆக்கியது.

ஒருவர் காதலித்தார்., காதலி செல்லுமிடமெல்லாம் அவரும் சென்றார். அவள் வாய் சொன்ன வார்த்தைகளை மெய்ப்பித்து கண்ணெதிரே காட்டினார். ஆனால் காதலை மட்டும் சொல்லவில்லை., புரிந்து கொள்வாள் என நினைத்தாராம். உன்னால் என்ன முடியும் என்று அவள் பார்வை கேட்டதை உணர்ந்து கொண்டு., தன் உழைப்பால் ஒரு நிறுவனமே அமைத்துக் காட்டினார். வறுமையின் கொடுமை தாண்டி., நினைத்தை வென்றார். ஆனால் வென்று நிமிர்ந்தால்., பெண் வெளிநாடு சென்று விட்டது. என்ன ஆனாள்?., எங்கிருக்கிறாள் என்றறியாவிட்டாலும் காத்திருக்கிறார்., இப்போது அவருக்கு வயது 48. உரிய வயதில் அவருக்கும் தெரிந்திருக்கும் காத்திருத்தல் வீண் என்று. ஆனால் காதல் மனம்., பெற்ற மனதை விட இளகியதல்லவா?. நம்மை மதிக்கும் இதயங்களை நாம் மிதிக்கவே செய்கிறோம். அது துன்புறும் அளவு நம்மேல் கொண்ட பாசத்தின் அளவு. ஆனால் எதுவுமே அளவுக்கு மிஞ்சினால், அர்த்தம் பெறாது அச்சத்தையே தரும்.

காதலில் தோற்கும் மனம் எப்போதும் காதலைத் தன்னுள்ளே தக்கவைத்திருக்கும். வென்ற மனம்?., முதலில் காதல் மலர்ச்சியுடந்தானிருக்கும்... மெல்ல பல பிரச்சனைகள் மொய்க்க., மலர் இருக்கும். மணமில்லாமல்.

மனதில் நின்ற காதலியே
மனைவியாக வரும் போது
சேகம் கூட சுகமாகும்
வாழ்க்கை இன்ப வாரமாகும்.

நீங்கதான் எல்லாச் சோகத்தையும் எங்க மேல சுமத்தி விட்டு விடுகிறீர்களே? பின்ன., உங்களுக்கு வாழ்க்கை வரமாகாமலா இருக்கும்?.

4 comments:

துளசி கோபால் said...

அதென்ன அப்படி?

நாங்களே காதல் கல்யாணம்தான். முப்பத்தி ஒன்னரை வருஷமாச்சு. இப்பத்தான் ஒரு அரைமணிக்கு முன்னாலே புதுவருசத்தை 'மொதல்லே' கொண்டாடிட்டு வந்தோம்.

எல்லாம் ஸ்டடியாத்தான் போகுது. ( டச் வுட்)

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ENNAR said...

என்னம்மா உனது பதிவு fire fox ல் சரியா தெரியவில்லையே

அப்டிப்போடு... said...

//நாங்களே காதல் கல்யாணம்தான். முப்பத்தி ஒன்னரை வருஷமாச்சு//

//எல்லாம் ஸ்டடியாத்தான் போகுது. //

அக்கா., நீங்க பேச அண்ணன் கேட்டுகிட்டு இருக்காருன்னு நினைக்கிறேன் :-))). இங்க நாங்க இரண்டு பேரும் பேசி ஆளுக்குகொரு முடிவெடுத்து... அப்பப்ப போர்ன்னுதான் (நீங்க போடுற நாளுக்கு மூணு மாதிரி ச்சின்ன சண்டையில்ல!) ஓடுது போங்க.

Pot"tea" kadai said...

//காதலில் தோற்கும் மனம் எப்போதும் காதலைத் தன்னுள்ளே தக்கவைத்திருக்கும்//

சின்ன திருத்தம்!
காதலில் ஏது தோல்வி? ஒருவரிடம் (பெண்/ஆண்) தான் தோல்வியொழிய, காதலிலோ/அன்பிலோ அல்ல...தோல்வியடைந்தவனுக்கு தான் அன்பின் ஆழம் அதிகம் தெரியும். ;)