Friday, December 30, 2005

**பெயர்வு**

பூமியே நகர்ந்து கொண்டுதான் இருக்கிறது. பூமியின் நடுபகுதி வெப்பத்தால் பூமியின் அடுக்குகள் நகர்ந்து கொண்டிருக்கின்றன என்ற 'பீதி' கிளம்பியிருக்கிறது. அப்புறம் மனிதன் இடம் பெயர்வைப் பற்றி கேட்பானேன்?. மனிதனின் இடப்பெயர்வு என்பது எப்போது துவங்கியது?. கற்காலத்திலேயே துவங்கிவிட்டது. மனிதனின் வளர்ச்சி துவங்கியது 'சக்கரம்' கண்டுபடிக்கப் பட்டபோது எனச் சொல்லலாம். ஆனால் அதற்கு முன்பே கல்நடையாகவும், மிருகங்கள் மூதும் துவங்கிவிட்டது மனிதனின் பயணங்கள். நம்ம சாமிகளைப் பாருங்க ஆளுக்கொரு வாகனத்த 'ரிசர்வ்' பண்ணி வச்சிருக்கும். முதலில் மனிதன் தோன்றியது நமக்குத் தெரியும் ஆப்பிரிக்காவில். அதே ஆப்பிரிக்காவிலிருந்துதான் முதல் புலப் பெயர்வும் ஐரோப்பாவை நோக்கி நிகழ்ந்திருக்கிறது. இதற்கான காரணம் அறுதியிட்டுகூறப்படவில்லை.

முதல் முதலில் புலம் பெயர்தல் நிகழ்ந்தது., அல்லது ஒரு நாடு நிகழ அனுமதித்து., வேலையாட்கள் பற்றாக்குறையால். இப்ப நம்மையெல்லாம் ஏன் இங்க அனுமதித்து இருக்கிறார்கள்?., வேலை செய்யத்தானே?. H1 விசாவுக்கு ஏன் 6 வருடம் என நிர்ணயித்து இருக்கிறார்கள்?., அடிமைகளை 6 வருட ஒப்பந்தத்தில் வைத்திருந்ததாக பைபிளில் ஒரு குறிப்புள்ளதாம். எது எப்படியோ., உலகம் முழுவதிலும் 90 களின் மத்தியில் 145 மில்லியன் மக்கள் தங்கள் சொந்த நாடுகளை விட்டு வேறு நாடுகளில் குடியேறி இருப்பதாக ஒரு புள்ளி விவரம் சொல்லுகிறது.

இடப் பெயர்வு இன்றைய காலகட்டத்தில் மிக அவசியமான ஒன்றாகப் போய்விட்டது. கிராமங்களில் இருப்பவன் நகரங்களுக்கும், நகரத்தில் இருப்பவன் வெளிநாட்டிற்குமென (வெளிநாட்டில் இருப்பவன் வேறு கிரகத்திற்கு போக துடிக்கிறான்) நகரும் எல்லைகள் விரிவாகவே செல்கிறது.

நம்ம கரைக்குடிப் பக்கம் போயிப் பாத்தம்னா., ஒரு பெரிய அரண்மனை மாதிரி உள்ள வீட்டுல ஒரே ஒரு வயசான நடக்கச் சத்தில்லாத பாட்டிய உக்கார வச்சிட்டு எல்லாரும் பர்மா., மலேயா., சிங்கப்பூர்ன்னு போயிருவாங்க. வீட்டுல அந்தப் பக்கம் யாருக்கும் தெரியாம திருடன் ஒருவன் தனியா சமைச்சு, சாப்பிட்டு குடும்பம் நடத்திகிட்டு இருப்பான். அந்தப் பாட்டி இந்தக் கோடியில இரண்டே இரண்டு 'ரூம்'ல கட்டுச் செட்டா கூட்ட, பெருக்க, சமைக்கன்னு இருப்பாங்க. எப்பயாவது பாட்டிக்கு நடக்க சத்து வந்து இந்தக் கோடிக்கு வந்தாத்தான் தெரியும் திருடன் இருக்கிறது. இது மாதிரி ஒரு குடும்பம் புலம் பெயர்ந்து வயதானவர்களை தனித்து விடுவது இப்போது எங்கும் நடக்கிறது.

புலம் பெயர்வுக்கான காரணங்கள் எத்தனையோ., இயற்கை சீற்றங்கள்., பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ள, மத, சாதி ரீதியான பிரச்சனைகளை எதிர்கொள்ள விரும்பாமல்., தற்போதுதான் இருக்கும் இடத்தின் நெருக்கடி காரணமாக அல்லது சும்மா ஒரு இடத்தின் (நாட்டின்) மீதுள்ள அபிமானத்தால். ஆனால் இது எல்லாவற்றையும் விட., மனிதன் தான் விரும்பாமல் ஒரிடத்தை விட்டு நகர்கிறான் என்றால் அது போரால்தான். இலங்கை., இஸ்ரேல், பாலஸ்தீன், ஆப்பிரிக்கா(சிவில் வாரின் போது) இப்படி பல நாடுகளில் இடப்பெயர்வு பெரும்பான்மையாக போரால் விழைந்தது. எல்லைகளை நிர்ணயித்துக் கொள்ளும் பொருட்டு அல்லது அரசியல் காரணங்களுக்காவும் (இந்தியாவிலிருந்து பாஹிஸ்தான், பங்களாதேசிற்கு பெயர்ந்தவர்கள் (கூட்டமாக பெயர்தல்) இவ்வகையினர்) இது நேர்கிறது.. இங்கு அமெரிக்காவில் 200 ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பாவிலிருந்து பெயர்ந்தவர்களும் அவர்களது வாரிசுகளுமே அதிகம். இந்நாட்டைச் சார்ந்த நேட்டிவ் அமெரிக்கன்ஸ் மிகக் குறைவு. முதன் முதலில் 1600ல் ஐரோப்பியர்கள் இங்கு வந்து குடியேறினர். நம் ஊரிலும் சங்க காலத்திலேயே பொருள் ஈட்டும் பொருட்டோ அல்லது போரின் பொருட்டோ பெயர்ந்திருப்பதை இலக்கியங்கள் கூறுகின்றன. புலம் பெயர்தல் என்ற வார்த்தையே நடைமுறையில் இருந்திருக்கிறது.

---- கொடுங் கோல் கோவலர்
ஏறுடை இன நிரை வேறு புலம் பரப்பி,
புலம் பெயர் புலம்பொடு கலங்கி, கோடல் - நக்கீரனார், நெடுநல் வாடை

இப்பப் பாருங்க உலகம் முழுவதும் நம்மாட்கள் நிரம்பி இருக்கிறார்கள். ஒரு காலத்துல சென்னையில 'போலீஸ்' வேலை கிடைச்ச மகன அனுப்புவதற்கு ஒரு அம்மா நாலு நாளா அழுதுகிட்டு இருந்துச்சு., அவனும் அழுகையப் பார்த்து பயந்து எங்கேயும் போகாம வீட்டுலேயே தண்டால் எடுக்கிறது., தாண்டிக் குதிக்கிறதுன்னு இருந்து இப்ப 40 வயசாகிப் போச்சு. இப்பவும் அவங்க அம்மா அழுகுறாங்க எங்கையாவது வேலை கிடைச்சுப் போக மாட்டானான்னு. ஆனா நேபளத்திலேயிருந்து கம்பளிப் போர்வைகளையும்., ஸ்வெட்டவர்களையும் சுமந்து வந்து எவ்வித தயக்கமுமில்லாமல் மொழி தெரியாத ஊரில் வியாபரம் செய்கிறார்கள் இல்லையா?. ஆனா இப்ப நம்மூரில் நிலைமை மாறி விட்டது., வீட்டுக்கு ஒருவர் வெளிநாட்டில் இருக்கிறார்கள். கிரமங்களிலிருந்து அருகில் உள்ள நகரங்களுக்குப் பெயர்தல் என்பது பின்பு நேராக 'சென்னை' என்றானது. இப்போது நேராக வெளிநாடுதான். புதுக்கோட்டை, பட்டுக் கோட்டை, அறந்தாங்கி, மைலாடுதுறை போன்ற ஊர்களில் இருந்து அதிகம் அரபு நாடுகளுக்கும், சிங்கப்பூருக்கும் பெயர்ந்திருக்கிறார்கள்.

புலம் பெயர்ந்தவர்கள் தங்களுடன் தன் நாகரீகம், பண்பாடு, கலை ஆகியவற்றை உடன் எடுத்துச் செல்கின்றனர். தங்களுடைய மொழியை., மதத்தை, பாரம்பரியத்தை அடுத்த நாட்டினர் அறியத் தருகின்றனர். பின்பு மெல்ல தான் இருக்குமிடத்து இயல்புகளை தன்னில் பதித்து வாழ்கின்றனர். ஆனால் இளைய தலைமுறை?. தன் அடையாளம் தெரியாமல் இரு வேறு கலாச்சாரங்களுக்கிடையில் சமன் செய்யமுடியாமல் தடுமாறுவதும்., பின்பு தன்னைக் கவர்ந்தவற்றை (பெரும்பாலும் அந்நியக் கலச்சாரம்) பின்பற்றியும் செல்கின்றனர். கொத்தடிமைகள் போல் அந்நிய நாட்டிற்கு குறைந்த ஊதியத்தில் உழைத்தல்., இருக்கும் இடம் ஒட்டாது தவித்தல், குடும்பத்தைப் பிரிதல் (சட்ட விரோத குடியேறியாக இருந்தால் தன் மனைவி, மக்களையே), நண்பர்கள் பிரிவு, செழிப்பானவர்களானாலும் தன் வாரிசுகள் நிலை கண்டு கலங்கல் என ஒவ்வொரு புலம்பெயர்ந்த உள்ளமும் ஏதாவது ஒரு சிறு சோகத்தை தன்னுள் சுமந்துதான் வாழ்கின்றது.

8 comments:

ENNAR said...

//திருடன் ஒருவன் தனியா சமைச்சு, சாப்பிட்டு குடும்பம் நடத்திகிட்டு இருப்பான்//

இதை நான் கேள்விப்பட்டிருக்கேன்

அப்டிப்போடு... said...

என்னார்., என் தோழி ஒருத்தியின் வீட்டில் நிகழ்ந்த சம்பவம் அது.

துளசி கோபால் said...

அப்படியே செவ்வாய்க்குப் போகலாமான்னு தான் இப்பப் ப்ளான் செஞ்சுக்கிட்டு இருக்கேன்.

குமரன் (Kumaran) said...
This comment has been removed by a blog administrator.
குமரன் (Kumaran) said...

//என்னார்., என் தோழி ஒருத்தியின் வீட்டில் நிகழ்ந்த சம்பவம் அது.

//

அது நிசமா? ஏதோ சோக்கடிக்கறீங்க நெனச்சேனே...

குமரன் (Kumaran) said...

அக்கா. அவ்வளவு தானா? இல்லை இன்னும் இருக்கா? எத்தனை விஷயத்தைத் தொட்டுப் போறீங்க. கலக்கறீங்க. நட்சத்திர வாரத்துக்கு அப்பறமும் எழுதணும்; கொஞ்சம் மிச்சம் வச்சுக்கோங்க. :-) என்ன நான் சொல்றது?

உஸ்....ஒரு வழியா அக்கா இந்த வாரத்துல எழுதுன எல்லாத்தையும் படிச்சாச்சு....நாளைக்கு எழுதுறதை நாளைக்கே படிச்சறலாம்.

Thangamani said...

புலம் பெயர்தல் சுயவிருப்பத்தோடு நடப்பதும், பலவந்தமாக, உயிர்பிழைக்க நடப்பதும் வெவ்வேறான சோகங்களைக் கொண்டது.

அப்டிப்போடு... said...

//நட்சத்திர வாரத்துக்கு அப்பறமும் எழுதணும்//
:-)))

நன்றி தங்கமணி