Wednesday, December 28, 2005

**மாயமான்**எங்கள் இல்லத்தில் இரண்டு தாத்தாக்களின் ஃபோட்டோக்கள் மாட்டியிருக்கும். இரண்டுமே மிகப் பெரிய்ய்ய்ய படங்கள். இரண்டிலும் வெவ்வேறான தாத்தாக்கள். ஒரு தாத்தா படம் எப்போதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு கம்பீரமாக வீட்டின் வரவேறப்பரைத் திண்ணையில் தொங்கிக் கொண்டிருக்கும். இன்னொரு தாத்தாவின் படம்., இதற்கும் பூக்கள் உண்டு என்றாலும். அது மக்கள் அதிகம் புலங்காத பட்டாளை சுவற்றில் இருக்கும். முன்னவர் நல்ல தாத்தா போல அதனால் இங்க இருக்கிறார்., இன்னொருத்தர் ஏதோ குடும்பத்துக்கு ‘ஆகாத’ காரியம் பண்ணிவிட்டார் போலன்னு நினைச்சுக்குவேன். பட்டாளைப் படத்தை கடக்கும்போதெல்லாம் அந்தத் தாத்தாவில் கரிய விழிகள் என்னை பரிதாபமாகப் பார்ப்பது போல இருக்கும். நான் பெரிசான உடனே உன்னையும் திண்ணைச் சுவத்துல மாட்றேன் சரியா?ன்னு அவரோட பேசுவேன். வளர வளரத்தான் தெரிஞ்சுது. திண்ணைப் படத்துல இருக்கிறது அய்யா. காமராசர்ன்னும்., பட்டாளைப் படத்துல இருக்கிறது அறிஞர் அண்ணான்னும். இப்படி அரசியல் என்பது என் உறவுபோலத்தான் எனக்கு அறிமுகமானது. எங்க அப்பாவோட அப்பா தீவிர காங்கிரஸ்காரர். எங்கப்பா தீவிரமில்லையென்றாலும் தி.மு.க பற்றாளர்., ( அவரது திருமணத்தின் போது வந்த அன்பளிப்புதானாம் அண்ணா படம்).

எங்க மாமா ஒருவர் நல்ல வளமான விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். நான்கு பெண்களுடன் பிறந்த ஒரே ஆண். மிகவும் செல்லமாக வளர்க்கப் பட்டார். தனது 19 ஆவது வயதில் அப்போது தமிழகத்தில் பிரபலமாக இருந்த கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். தன் தோட்டத்தில் விளைகின்ற விளைச்சலின் பலன் அனைத்தையும் கட்சி நிதியாக்கி களித்தார். எப்போதும் தன்னைச் சுற்றி ஆட்கள்., கட்சியின் முக்கியமானவர்கள் தன்னை வந்து பார்ப்பது என பரபரப்பாகவே எப்போதும் இருப்பார். கட்சிக் கூட்டம் என்றால் ஒரு வாரம் முன்பே வீட்டிலிருந்து கிளம்பி விடுவார் அல்லது ஆட்கள் வந்து அழைத்துச் சொல்வார்கள்.

அரசியலே ஒரு போதைதான்., மெல்ல மெல்ல 'பாட்டில்' போதையும் பழக்கமாகியது. வீட்டில் ஏழரை ஆரம்பமானது. எப்போது பார்த்தாலும் கட்சி... தலைவர்தான்... வீடு என்ற ஒன்றே மறந்து போனது. எப்போதாவது வருவது... வந்தாலும் நடுநிசியில் தள்ளாடியபடி., விடிந்ததும் எழுந்து குளித்து விட்டு பளீரென வெள்ளைச் சட்டை, கரை வேட்டி கட்டிக்கொண்டு கிளம்பி விடுவது. இவரது செய்கை கண்டு கொதித்த நம்மாட்கள் (நம்ம பங்காளி வீட்டுப் அத்தையை மணந்திருக்கிறார்). பஞ்சாயத்துப் பண்ணியும் பலன் இல்லை. முன்பை விட அதிகமானது., பிறகென்ன? குடும்பம் சிதறியது... இவர் ஒரு பக்கம். பிள்ளைகளில் இருவர் மனைவின் வீட்டில், மனைவியும் கடைசி மகனும் வேறு ஒரு ஊரில் என மொத்தமும் மாறிப் போனது ஒரு நாள். அப்போதும் திருந்தவில்லை... அழகு தமிழில் கட்சி பற்றி பேசிக் கொண்டே... அருமைக் குடுப்பத்தை தொலைத்தார். ஊரின் நடுவில் சற்றுப் பெரிய வீடு அவருடையது. முன்புறம் மல்லிகைப் பந்தல் அமைத்து ரம்மியமாக இருக்கும். ஒரு முறை ஊருக்குப் போன போது அந்த வீட்டை பார்க்கலாம் எனப் போனேன். என் கண்கள் குளமாகியது., வீடெல்லாம் ஒரே, குப்பை கூளமாக ஒட்டடை படிந்து இங்கு மனிதர்கள் வாழ்கிறார்களா? எனும்படி இருந்தது. முன்புறம் உள்ள மல்லிகை கொடி மட்டும் வாடவில்லை.

பக்கத்தில் குடியிருந்தவர்களிடம் "அந்தாளு (கோபம்தான்!) வர்றதே இல்லையா?" எனக் கேட்டேன். அவர்கள் "ஏன் வாரதில்ல? இப்பத் தெனமும் வந்து இங்கதான் படுத்துகிறாரு" என்றார்கள். 'பக்'கென்று இருந்தது. இந்தக் குப்பையிலயா?., ஆட்கள் சூழ எப்போதும் சிரித்திருக்கும் அந்த வீடு, இப்போது அவரைப் போலவே ஆட்கள் அற்று ஒன்றையாய் நின்று கொண்டிருக்கிறது. என் தோழி ஒருத்தியை துணைக்கு அழைத்துக் கொண்டு அத்தனையும் துடைத்துப் பெருக்கி., பாத்திரங்களை அடுக்கி., தண்ணீர் பிடித்து வைத்துவிட்டு வந்தேன். (எங்காளுகளுக்கு தெரிஞ்சுது அவ்வளவுதான்.) பிறகு ஊருக்குப் போகும்போதெல்லாம் இது நடக்கும். அவர் வீடு சுத்தமாக இருந்தால்., நான் வந்திருக்கிறேன் எனத் தெரியும். எங்காளுக முணுமுணுக்க என்னை பார்க்க வருவார் "மாமன் நல்லவன்., உனக்குத் தெரியும்...." என்னன்னமோ உளறுவார். 'இவிங்கெல்லாம் புத்தி சொலியிருக்கலாம்ல...' எங்க வீட்டுப் பெருசுகள் மீது பாய்வார். அப்போதுதான் தூங்க ஆரம்பித்திருக்கும் ஒருவரை எழுப்பி., 'நான் நடு இராத்தியில கத்தணும்., நீ தூங்கணுமா? ., எந்திருச்சு உட்காரு., நான் போற வரை தூங்கக்கூடாதுன்னு ஆர்ப்பாட்டம் செய்வார்... சிறிது நேரம் மிக அமைதியாக அமர்ந்திருந்துவிட்டு., 'சரி... நீ போய் தூங்குன்னு' சொல்லிவிட்டு தள்ளாடியடி எழுந்து செல்வார். ஊரில் மதிக்கப்பட்ட ஒரு மனிதன்., 'கள்ளுத் தண்ணி மாமா' வாகவும் 'தண்ணி வண்டி' மாமாவாகவும் மறியது இப்படித்தான். சரி... இவ்வளவு இழந்து அவர் அரசியலில் பெற்றது என்ன?., 'வைஸ் பிரசிடெண்ட்' என்ற வெளியே அதிகம் தெரியாத பதவி. அதுவும் 'அந்தப் பேச்சாளர்'., அந்தக் கட்சியிலிருந்து விலகும்போது அவருடன் சென்றாதால்., போய்விட்டது. அரசியல் என்பது நல்ல உள்ளம் கொண்டவனுக்கு எப்போதுமே ஒரு புதை குழிதான். தன்பாட்டில் தான் உண்டு தன் வேலையுண்டு என இருப்பவனையும் அரசியல் உரசிப் பார்க்கத் தவறுவதில்லை. (ஒரே ஆள்.,) ஊரின் ஊராட்சி அளவில் ஒரு கட்சியின் செயலாளராகவும்., வட்ட அளவில் வேறொரு கட்சியின் பொருளாராகவும் இருப்பவனின் அரசியலே எடுபடும் அரசியல். அரசியல் என்பது ஒரு மாயமான்., அதை உணர்ந்தவன் அங்கு பல மாயங்கள் செய்து வெற்றி பெருகிறான்.. எப்போதுமே அடிமட்டத்தில் நடக்கும் அரசியல் வேறுபட்டது., எந்த ஊடகத்தாலும் எடுத்துக் காட்டப் படாதது. அவர் தனது 55 வயது வரை எவ்வித மாற்றமுமின்றி அப்படியே வாழ்ந்து 6 மாதம் முன்பு மறைந்தார். அவரைப் பார்த்து வளர்ந்த விடலைகள்தான் இன்றும் எங்கள் ஊரில் கரை வேட்டியுடன் கட்சிக் கொடியேற்றுகின்றன(!).


நம்மூரில்தான் சாமானியனின் சட்டைப் பையிக்குள்ளும் அரசியல் புகுந்து கொள்கிறது., காலம் செல்லச் செல்ல தற்காலிக முதல்வனாக்கி சிம்மாசனம் தருகிறது இல்லையெனில் தலைமறைவாக ஓட விட்டு தவிக்க வைக்கிறது. சகல சக்தி வாய்ந்த அந்த அரசியல் இல்லாமல்.. உப்புச் சப்பில்லாம மீன் குழம்பு சாப்பிடுற வாழ்க்கைதானாப்பா... இங்க!. மக்களுக்குத் தெரியாமல் அரசியலில் தப்பு நடக்கிறதென்பதெல்லாம் சும்மா... நம்மிடையே இருக்கும் ஒருத்தந்தானே அரசியலுக்குப் போகிறான். எம்.எல்.ஏக்களுக்கு 10% தரமல் எவனாவது ஒரு ஊரில் ஒரு காண்ட்ராக்ட் எடுக்க முடியுமா?(எந்தக் கட்சி ஆட்சியில இருந்தாலும்) ஆட்சியில் ஒரு கட்சி இருக்கிறது., எம்.எல்.ஏ எதிர்க் கட்சியா இருந்தாலும் அவருக்கு கொடுக்கணுமா இல்லயா?., பொட்’டீ’க்கடை வாங்க!., வந்து சொல்லுங்க! (பின்ன தனியாவா மாட்டிக்கச் சொல்றிங்க?:-))) . குடுத்துதான எடுக்குறோம்?. 20% கேட்டாலும் கொடுப்போம். தொழில விட்டுட்டு ஓடி வந்துர மாட்டோம். நல்லாப் யோசிச்சுப் பாருங்க, எந்த தொழில்ல அரசியல் தலையீடு இல்லாம இருக்கு?. இல்ல... மக்கள்ல எத்தன பேருக்கு இது தெரியாம இருக்கு?., எம்.பி களுக்குன்னு நிவாரணநிதி அரசு வழங்குது., அத எப்படி பயன்படுத்துறாங்க., மாஹாராஷ்ராவுல இருக்க ஒரு எம்.பி, இங்க அந்த நிதியப் பயன்படுத்தி நல்ல காரியம் செய்யலாம். ஆனா எல்லாரும் நிதிய உபயோகிச்சு ஆறு, குளங்களை 'தூர்தான்' வாருவாங்க., அது ‘ஏன்’னு படித்த ஆண்கள்(நன்றி. குஷ்பு!) உங்களில் எத்தனை பேருக்கு தெரியாது?. உனக்குத் தெரிஞ்சு என்ன பண்ணுனன்னு 'நச்'சின்னு சிலர் கேட்பிங்களே?., நானும் உங்கள மாதிரித்தான் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா' ந்னு போய்கிட்டேயிருக்கேன். பின்ன என்ன செய்யச் சொல்றிங்க?., அரசியலுக்கு வருகிற நடிகர் அவர் கைக் காசப் போட்டு வாறாருன்னு ‘சிரிக்காம’ பின்னூட்டம் போடுறிங்க., நீங்களாகவே கண்களை மூடிக்கொள்கிறீர்கள்., நானும் அதைப் போல் பாவனையாவது செய்கிறேன். நம்மைப் பார்த்து இன்னும் பலர் கண்மூடுவர். நம்மால் முடிந்தது அதுதான்.

16 comments:

துளசி கோபால் said...

அப்பாடா.....

அரசியலே ஒரு சாக்கடையாச்சுங்களே.

தலைவர், அவர் குடும்பம் கஷ்டப்படாது.
சாதாரண அடிமட்ட ஆட்கள் தான் அடுத்தவேளைக்குக் கஞ்சி இல்லேன்னாலும் தலைவரைத் தலையிலே தூக்கிக்கிட்டு ஆடுறது.

Pot"tea" kadai said...

யெக்கோவ் வந்துட்டேன்!
நீங்க நெனைக்கிற மாதிரி நான் "காண்டிராக்டர்" இல்லை ஆனால் "காண்டிராக்டர்"களோடு சம்பந்தப்பட்ட தொழில் தான்.என்னைப் பற்றி கொஞ்சம் தெரிஞ்சிக்க http://potteakadai.blogspot.com/2005/12/blog-post_27.html - க்கு போங்க
நண்பர் ஒருவருடன் ஒரு ரோடு காண்டிராக்ட்டுக்காக வேண்டி என்னுடைய வண்டியிலேயே 10 லட்சத்தி 50 ஆயிரம் ருபாய் ஒரு அமைச்சரிடம் கொடுத்த அனுபவம் என் வண்டிக்கு உண்டு.
15 நாளில் ஒரு தொகுதி எம் எல் ஏ அமைச்சரிடம் தானே கமிஷன் கொடுத்த...எனக்கு கொடுக்கலியே என்று நண்பரை தீவு மாதிரியான இடத்திற்கு கடத்திச் சென்று விட்டார். நண்பரின் மாமா தொழிலில் "பழம் தின்னு கொட்டை போட்டவர்" என்பதினால் விசயம் மீடியாவிற்கு தெரியாமல் ஒரு அமவுன்டை அந்த "பிச்சைக்காரனுக்கு" வெட்டி நண்பரை மீட்டு வந்தார்.எது எப்பிடியோ நம்ம பொழப்பு நடக்கனும்ல...

ஆனால் நீங்கள் கூறிய கதை என்னுடைய சித்தப்பாவை அப்படியே ஞாபகப்படுத்தியது. அவருக்கு குடிப் பழக்கம் கிடையாது. ஆனால் அரசியல் போதை உண்டு.யாருக்கோ எம் எல் ஏ விடம் சிபாரிசு வாங்க செல்லும் அவர் தன் குடும்பதிற்கென்று சிபாரிசிற்காக சென்றது கிடையாது. மேலும் என்ன தான் பிரச்சினை என்றாலும் எங்கள் குடும்பம் (தாத்தா, சித்தப்பாக்கள், அட்தைகள் உட்பட) பல நல்ல / கெட்ட காரியங்களுக்காக ஒன்றாகச் சேர்ந்தே முடிவெடுப்பார்கள். இதனால் சித்தப்பாவின் குடும்பம் இன்று ஓரளவு சிறப்பான நிலையிலேயே உள்ளது.

பட்டணத்து ராசா said...

நிசம்தான், கண்ண முடிக்கிட்டு சொல்றேன் :(

மணியன் said...

இவ்வளவு ஆழமாக வேரூன்றி இருக்கும் ஊழலை யாரால் களைய முடியும் ? அது ஒரு தனி இயக்கமானால் தான் சாத்தியம்.அது தேர்தல் சகதிகளில் சிக்காத இயக்கமாக இருக்க வேண்டும்.

சோழநாடன் said...

ஏங்க நம்பளுக்கு தஞ்சாவூர் பக்கமா?. உங்க எழுத்தில் அப்படியே நம்ம ஊர் வாடை வீசுது. முக்கியமா"அவிய்ங்க, இவிய்ங்க" போல.
நீங்க சொன்ன வெக்கிடையாட்டுக் கூட்டம்’
போல state விட்டு state தாவிகிட்டு இருக்கேன்.(3 நாள்ல 8 state torget). பின்பு நேரம் கிடைக்கும்போது உங்கள் பதிவுகளுக்கான பின்னூட்டத்தை எழுதுகிறேன்.

குழலி / Kuzhali said...

ம்... பெரு மூச்சு தான் வருது...

இப்போ பொழுது போக்கா வலைப்பதிவு எழுதற மாதிரி பொழுது போக்கா அரசியல்ல இருந்தாதான் பிழைக்க முடியும்

//யாருக்கோ எம் எல் ஏ விடம் சிபாரிசு வாங்க செல்லும் அவர் தன் குடும்பதிற்கென்று சிபாரிசிற்காக சென்றது கிடையாது
//
எல்லா குடும்பத்திலயும் இப்படி சிலர் இருக்காங்க போல...

agila said...

Hi maram,
I have sent an e-mail to your ceekee_c@hotmail.com.did you get it?
...agila

முகமூடி said...

(இது ஒரிஜினல்)

மரம்,

மேலே வந்த போலி பின்னூட்டம் குறித்த சில கருத்துக்களை இந்த பதிவில் எழுதியிருக்கிறேன்.

பதிவின் கருத்துக்கு சம்பந்தமில்லாததால் இதை என்ன செய்வது என்று முடிவெடுப்பது உங்கள் இஷ்டம்.

டிசே தமிழன் said...

மரம், பாரதிராஜாவின் 'என்னுயிர்த்தோழன்' படமும், நீங்கள் மேலே கூறியதைத்தான் சமூகத்துக்கு அடையாளப்படுத்த விரும்பியது என்று நினைக்கின்றேன்.

dondu(#4800161) said...

போலிப் பின்னூட்டங்களால் அதிகம் பாதிக்கப்பட்டவன் நான். அவற்றைப் பற்றி நான் போட்டப் பதிவுகளைப் பார்க்கவும்.
1)
2)

முகமூடி அவர்கள் கூறுவது நிஜம். போலி டோண்டு கொடுக்கும் (அவன்தான் எல்லா போலிப் பின்னூட்டங்களுக்கும் ஆதார ஊற்று) பிரச்சினையைப் புரிந்து கொள்ளவும். அவ்வளவுதான் கூற முடியும்.

என்னுடைய இந்தப் பின்னூட்டம் என்னுடைய தனிப்பதிவில் பின்னூட்டமாக நகலிடப்படும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அப்டிப்போடு... said...

//சாதாரண அடிமட்ட ஆட்கள் தான் அடுத்தவேளைக்குக் கஞ்சி இல்லேன்னாலும் தலைவரைத் தலையிலே தூக்கிக்கிட்டு ஆடுறது//
:-)

//15 நாளில் ஒரு தொகுதி எம் எல் ஏ அமைச்சரிடம் தானே கமிஷன் கொடுத்த...எனக்கு கொடுக்கலியே என்று நண்பரை தீவு மாதிரியான இடத்திற்கு கடத்திச் சென்று விட்டார்//

அமைச்சர் குடுத்தார் கடத்தல்., இதே அதிகாரிட்ட குடுத்து பில்லுப் பாசாயிருச்சுன்னு வைய்ங்க, அதிகாரி அம்புட்டுத்தான்.

//கண்ண முடிக்கிட்டு சொல்றேன் :(//

:-))

மணியன் தேர்தலில் நிற்கும் ஒரு இயக்கம் எந்த நாளும் ஊழல் செய்யாமல் இருக்க முடியாது. இப்ப, நான் ஒரு தனிக் கட்சி ஆரம்பிக்கிறேன்னு வையுங்க., 50 கோடியாவது இல்லாம 'டிஜிட்டல்' போர்டெல்லாம் வைத்து மாநாடு நடத்த முடியுமா?., அப்ப., எவனாவது நல்ல தொழிலதிபராப் பார்த்து சப்போர்ட் பண்ண சொல்லுவேன்., நான் பிரபலமா இருந்தா அவனே வந்து சப்போர்ட் பண்ணுவான்னு வையுங்க., என்ன டீல் இருக்கும் அவன் தொழில இங்க 'லான்ஞ்' பண்ணனும்பான்., நான் ஆட்சிக்கு வந்த உடனே., அவன் கைப் பாவையாக்கி ஆட்டி வைப்பான். புதுசா வந்திருக்கிறதால எனக்கும் தலைகால் புரியாது., நமக்குத் துணையா நின்னானேன்னு நானும் அவன் செய்யறத கண்டுக்க மாட்டேன்... இப்படித்தான் எல்லோரும். இதுல எங்க லஞ்சத்தை ஒழிக்கிறது?. காமராசர்ர உதாரணம் சொல்லாதிங்க., இது 'டிஜிட்டல்' யுகம். இருக்கும் நல்லவங்க எங்கையாவது வெளிய தெரியுறாங்களா?., தெரிஞ்சாலும் ஊடகங்களால் கேலி செய்யப்பட்டே வெளியே தெரிகிறார்கள்.

சோழநாடன்., இங்கேயிருக்கிற 'காண்ராக்ட்' மென்பொருளாளர்கள் எல்லோரும் 'வெக்கிடையாட்டு' கூட்டத்தை விட மோசமாத்தான் இருக்கிறோம்.

//இப்போ பொழுது போக்கா வலைப்பதிவு எழுதற மாதிரி பொழுது போக்கா அரசியல்ல இருந்தாதான் பிழைக்க முடியும்//

:-)))

அகிலா., ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு என்னை நீங்க பார்த்திருப்பிங்க., நான் பி.ஜி.டி.சி.ஏ வுக்கு 'கிளாஸ்' எடுத்ததையும் சேர்த்து., நீங்கள் அக்கல்லூரியில் இருந்தது வரை நானும் இருந்திருக்கிறேன். ஆனால் விடுதியில் அல்ல.

முகமூடி,
நன்றி.

டிசே., அட ஆமாம்., ஆனால் எத்தனை பேர் எத்துணை விதமாகச் சொன்னாலும் அந்த 'மாயமானை' நோக்கி ஓடாதவர் யார்? அமெரிக்காவில இருக்கும்போது கூட அங்கிருந்திருந்தா 'பந்தாவா' இருந்திருக்கலாமே என்றே தோன்றுகிறதப்போ... 'போதை'!!.

டோண்டு அவர்களே நன்றி..

பெத்த ராயுடு said...

மரம்,

இதைப் படித்தபோது, என்னுடன் பணிபுரிந்த நண்பரின் தந்தை நினைவுக்கு வந்தார்.

நண்பரின் பெற்றோர் US வந்திருந்தார்கள். அவிங்களுக்கு உங்க ஊருப்பக்கந்தான் (தேனி, போடி...).

நண்பரின் தந்தை அவ்வூரில் அடுமனை தொழில் செய்து வருபவர்.
பேசிக்கொண்டிருக்கும்போது அவர் அரசியலில் ஆர்வமாக (ஆர்வக் கோளாருடன் ?) இருப்பவர் என்று தெரிந்தது. இவரின் அரசியல் பணியினால் குடும்பத்திற்கு ஒரு பைசா பிரயோசனமில்லை என்பது நண்பரின் கருத்து.

நண்பரின் தந்தை நம்மகிட்ட இப்படி அடிச்சுவிட்டார்...

"மூப்பனார், தா.ம.க தொடங்கிய அன்னைக்கி, சத்தியமூர்த்தி பவன்ல மொத மால போட்டது யாரு? நாந்தேய்ன்..." என்றார் பெருமித்துடன்.

உங்க மாமாவுக்கு கழகங்கள் என்றால், இவருக்கு காங்கிரஸ்.

Other than that, he fits the description of your uncle like a 'T'.

dondu(#4800161) said...

அரசியல் வாதிகளையே குற்றம் சொல்ல முடியாது. அவர்கள் தெளிவாகவே இருக்கிறார்கள். அவர்களைப் பின்பற்றுவதில் தவறே இல்லை. இது பற்றி நான் போட்ட இப்பதிவு சம்பந்தப்பட்ட கட்சியின் ஆதரவாளர்களுக்கு பிடிக்கவில்லை.

பிறகு யோசித்துப் பார்த்து நாம் சொல்ல வந்ததை சரியாகச் சொல்லவில்லையோ என நினைத்து வெளிப்படையாகவே சம்பந்தப்பட்ட கட்சித்தலைவர் செய்தது சரியே அவரை இந்த விஷயத்தில் தொண்டர்கள் நிச்சயம் பின்பற்ற வேண்டும் என்று கூட பதிவு போட்டு பார்த்தேன். அதுவும் அக்கட்சியின் கொ.ப.செ.வுக்குப் பிடிக்கவில்லை. அக்கட்சியின் தலைவரை இந்த விஷயத்தில் பின்பற்றுங்கள் என்றுதானே அக்கட்சியின் தொண்டர்களைக் கேட்டுக் கொண்டேன். இதில் என்ன தவறு என்பதுதான் புரியவில்லை.

ஆனால் ஒன்று அப்பிடிப் போடு அவர்களே. இம்மாதிரி கட்சிக்கு தன் குடும்பத்தைப் புறக்கணித்து சேவை செய்கிறவர்கள்தான் அக்கட்சியின் தலைமைக்கு தேவை, அப்படிப்பட்டவர்களிடம் பணம் காசு அல்லது உடல் உழைப்பை ஈகக் கூடிய அளவுக்கு உடல் வலிமை இருக்கும் வரை. பிறகு அவர்கள் கறிவேப்பிலை ரேஞ்சில் தூக்கி எறியப்படுவார்கள். தேவையானால் தலைவர்கள் அவ்வப்போது முதலைக் கண்ணீர் வடிப்பார்கள். ஹிந்தியை எதிர்த்து தீக்குளித்தவர்கள் தியாகத்தில் பதவிக்கு வந்தவர்களெல்லாம் தங்கள் பேரன் ஹிந்தி படித்ததால் மத்திய மந்திரியாக முடிந்தது என்றெல்லாம் கூறி பெருமிதப்பட்டுக் கொள்வார்கள்.

ஆனால் யோசித்து பார்த்ததில் கொ.ப.செ. அவர்களையும் குறை கூறமுடியாது. அவர் மட்டில் அவர் தலைவரின் செயலை நான் கேட்டுக்கொண்டது போல பின்பற்றப் போவதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. அதே நேரத்தில் சாதாரணத் தொண்டர்களும் அதை செய்துவிடப் போகிறார்களே என்று பதறுவது கூட புரிந்து கொள்ள முடிகிறது, ஏனெனில் அவ்வாறு நடந்து விட்டால் கட்சிக்கு நல்லதில்லைதான்.

இப்பின்னூட்டம் வழக்கம்போல என்னுடைய இந்தத் தனிப்பதிவிலும் நகலிடப்படும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பெத்த ராயுடு said...

அமேரிக்காவிலிருந்து தாயகம் வந்து 80களில் 'மக்கள் சக்தி இயக்கம்' நடத்திய M.S. உதயமூர்த்தியை நினைத்துப் பாருங்கள். நல்ல அரசியல் நடத்த விழைந்ததால் மக்கள் அவரை கறிவேப்பிலையாக எண்ணி ஒதுக்கிவிட்டார்கள்.

குமரன் (Kumaran) said...

படித்தேன். + போட்டேன். அவ்வளவுதான். சொல்றதுக்கு ஒன்னுமில்லை. :-)

அப்டிப்போடு... said...

குமரன் நன்றி.