Tuesday, December 27, 2005

**மேன்மக்கள்...**

‘வெக்கிடையாட்டுக் கூட்டம்’ என்று (வாத்துக் கூட்டம் போல்) ஒன்றைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?. நிறைய ஆடுகளுடன் 5, 6 குடும்பங்கள் உள்ளதே வெக்கிடையாட்டுக் கூட்டம்.. அவர்கள் நிலையாக ஓரிடத்தில் இல்லாமல் நகர்ந்து கொண்டே இருப்பார்கள். இங்கு (அமெரிக்காவில்) 'காண்ட்ராக்ட்' முறையில் வேலை பார்க்கும் நம்மைப் போல!. ஒரு ஊருக்கு வந்து தம்மை ஆதரிக்கூடியவர்களின் தோட்டத்தில் இருந்து கொள்வார்கள். வெக்கிடையாடுகள் தோட்டம் செய்ய உதவுமோ என்னமோ., இப்படி ஒரு கூட்டம் எங்கள் தோட்டத்தில் இருந்தது. அதிகலையில் எழுந்து, தன்னை தயார் படுத்தி வேலை செய்ய ஆரம்பித்தார்கள் என்றால்... இடையில் மதிய உணவிற்குதான் நிறுத்துவது. அவங்க சும்மா நின்னே நான் பார்த்ததில்லை. நம்மோடு பேசிக் கொண்டிருக்கும் போது கூட வரப்பை சுத்தப் படுத்திக் கொண்டோ., வாசலை பெருக்கிக் கொண்டோ வேலை செய்து கொண்டே இருபார்கள். நம் தோட்டத்தின் விளைச்சலை கண் போல் காவல் காப்பார்கள். மாலையில் பெண்கள் எல்லாம் காட்டிலேயே தீ மூட்டி சமைப்பார்கள்., ஆண்கள் 'பாக்கெட்' ரோடியோவை வைத்து எதையோ கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

ஒருமுறை பொங்கல் வந்தது., நாங்கள் ஊரில்தான் பொங்கல் கொண்டாடுவது. எல்லா ஊர்லயும் பொங்கல் 3 நாளைக்கு கொண்டாடுவாங்களா?., ஆனா நம்மூர்ல 15 நாளைக்கு கொண்டாடுவாய்ங்க... வருசத்துல ஒரு முறைதான் வருதாம்... அதுனால கொண்டாடித் தள்ளிர்ரது. ஊரச் சுத்தி இருக்குற ஒவ்வொரு சாமிக்கும் பொங்கலப் போட்டு, அப்புறம் வீட்டுப் பொங்க, வாசப் பொங்க (சூரியன் பொங்கல் இல்ல.. இது தனியா), கட்டுப் பொங்க, தோட்டத்துப் பொங்கன்னு அவிய்ங்களால எம்புட்டு பொங்க வைக்க சத்து இருக்கோ அவ்வளவையும் வச்சிற்ரது. ஆன இப்படிப் பட்ட பொங்கலின் பெருமை தெரியாத எங்கள் கல்லூரி 3 நாட்கள் மட்டும்தானே விடுமுறை அளிக்கிறது?. அடுத்த நாள் எங்கள் கல்லூரியில் 'பிராக்டிகல்' டெஸ்ட்., எப்பவும் திரும்பி ஊருக்கு கிளம்புபோதுதான், அதுவும் இப்படி இக்கட்டான சூழ்நிலைலதான் எங்காளுக என் பி.பிய எகிற வச்சுப் பாசத்த காட்டுவாய்ங்க...

"எங்க கிளம்புற ?"

" நாளைக்கு பிரக்டிகல் டெஸ்ட்., லீவு போட முடியாது!"

"அடேயப்பா... லீவு போட முடியாத காலேஜ் எங்க இருக்கு?., யாருக்காவது உடம்பு சரியில்லைன்னு லீவு போடு., நீயில்லாமயா சாமி கும்பிடறது?" (சாமி கும்பிடும்போது நம்மளயெல்லாம் ஓரு ஓரமா தள்ளிவிட்டுட்டு., ஆண்களா நின்னு கும்பிடுவாங்க.....)

" அண்ணா., இது ரொம்ப முக்கியமான டெஸ்ட்., பெரிசுகள தூண்டிவிட்டுறாத கண்டிப்பா நான் போகணும்"

" சரி ... சரி... காலைல மொத பஸ்க்கு போகலாம்" (நம்மல்லாம் கலைல சீக்கரம் எழுந்திருச்சு., கிளம்பி., எங்க வீட்டுக்குப் போயி அப்புறம் இன்னொரு முறை கிளம்பி கலேஜ்க்குப் போயி இதெல்லாம் நடக்கிற காரியமா?).

"நீ கொண்டுபோய் விடுறியா., நானா போய்க்கவா?"

அப்புறம் வீட்டுல இருக்கறதுக எல்லாத்துக் கிட்டையும் தனித்தனியா சொன்னதயே திரும்ப, திரும்ப பத்து முறை சொல்லி., ஒரு வழியா கிளம்பிட்டேன்., முன்பே உங்களுக்கு மஞ்சள் பை இம்சையப் பத்தி சொல்லிருக்கேன் இல்லையா?. கிளம்பி முடிச்ச உடனே எங்க அண்ணன்., சிரிச்சுகிட்டே "கொஞ்சம் உக்காரு செல்வம் வந்திரட்டும்”னு சொல்ல...

(எங்க அண்ணன் ஒரு 'காண்ட்ராக்டர்'., இந்த வேலைகளுக்கு மணல் அடிக்கிறதுக்காக, அரை பாடி லாரி வச்சிறுக்குது., அந்த லாரி டிரைவர்தான் செல்வம்)
"செல்வமா....? என்னாத்துக்கு?"
"அவந்தான ஓட்டணும்?" (பெரிதாக ஒரு சிரிப்பு)
"அடப் பாவி.....!"
"இங்க பாரு., மணப்பாறைல லாரி டயர் மாத்தணும்., அங்க இறங்கி பஸ்ல போயிரலாம்"
"ஆளப்பாரு!... நீ ஆள விடு சாமி., நான் பொடி நடையா நடந்தே திருச்சி போய்ச் சேர்ந்துருவேன்".
அப்புறம் கொஞ்சம் வாக்குவாதம்... அழுகிற மாதிரி பாவனை (நெசமாத்தான் அழுதனோ என்னமோ?) க்குப் பிறகு., லாரில ஏறி முன்புறம் உக்கார்ந்தேன். அங்கிட்டு செல்வம், அதுக்கப்புறம் அண்ணன் அப்புறம் நான் ஏதோ யானை மேலே எறி உட்கார்ந்த மாதிரி உட்கார்ந்தா... இரண்டு பேரும் பேசாம உட்காந்து இருந்துச்சுக...

"எடுத்து தொலைங்கடா..." - எரிச்சலுடன் கத்த.,
"கொஞ்சம் பொறு... அவங்க வரட்டும்..."
"அவங்களா...?..."
கேட்டு முடியுமுன் சத்ததுடன் வந்தது நம்ம வெக்கிடையாட்டுக் கூட்டம். மடமட வென்று ஆடுகளையும், கூடாரங்களையும் பின்னால் ஏற்ற ஆரம்பித்தனர். நான் எங்க அண்ணனை ஒரு தீப் பார்வை பார்த்தேன்.

"அவங்க புதுக்கோட்டை போறாங்க.... நம்ம மணப்பாறைல...."
"டயர் மாத்தணும்ன?"
"அவய்ங்க நின்னு மாத்திட்டுப் போவாங்க நம்ம...."
"நான் உனக்கு என்னா துரோகம் பண்ணுனேன்...?" புலம்ப ஆரம்பித்தேன்...

வண்டிய மெதுவா எடுக்கும்போது "டே! பூ மாதரி ஓட்டணும்., எந்தங்கச்சி இருக்குதுன்னு சொல்லி... நல்லா ஒரு மிதி வாங்கி, பிறகு அமைதியாக சென்றது பயணம்., நமக்குத்தான் மனசுக்குள்ள எரிமலை.... சரி.. எல்லாம் மணப்பாறை வரைக்கும்ந்தானேன்னு பேசாம வந்தேன். மணப்பாறை வந்தது.... வண்டி வேகம் குறைந்தது போல வந்து சட்டுன்னு பிக்கப் பண்ணி பறந்தது.

"அதுதான் மணப்பாறை வரைக்கும் வந்துட்டமே.... இன்னும் கொஞ்ச தூரம்தானே?" என் கிள்ளை வாங்கிக் கொண்டே அண்ணன் சொல்ல... "

"அப்போ நம்மல திருச்சி வரைக்கும் இந்த வெக்கிடையாட்டுக் கூட்டத்தோட அரைப் பாடி லாரில ஏத்தி கொண்டு போகணும்னு முடிவு பண்ணி இறங்கிருக்க?"

மனதிற்குள் இப்போது பூகம்பம்.... பக்கத்து வீட்டு தோழி இந்தக்காட்சியப் பார்த்தா என்னாகும்? சும்மாவே...நமக்கு கிராமத்து சொந்தங்களும் இருக்கிறார்கள் எனத் தெரிந்து கொண்டு, ரோட்டில் யார் வேட்டி கட்டிப் போனாலும் "உங்க சொந்தக்காரரா இருக்கப் போறாருன்னு" கிண்டல் வரும். சட்டென எங்க அண்ணனைப் பார்த்துச் சொன்னேன். "இங்க பாரு உன்னைய உயிரோட விட்டர்றேன்... என்னைய வீட்டுக்கு கொஞ்ச முன்னாடி இறக்கி விடு., நான் நடந்து போயிக்கிறேன்". பயணம் முடிந்து அதுபடியே எங்கள் வீட்டிற்கு சிறிது தூரத்தில் வண்டி நிற்க... அதுவரை பின்னால் ஆடுகளுடனும்., தங்கள் பொருட்களுடனும் வந்தவர்கள் வரிசையாக கீழே இறங்கினார்கள். எங்க அண்ணன் "ஏய் எங்கப்பா இறங்குறிங்க... இது புதுக் கோட்டையில்ல...!" என்றதும்., "இல்ல... நம்ம பாப்பா... இவ்வளவு தூரம் நம்மகூட வந்தது...."என்று கூறி ஒரு அம்மா என் கைகளைப் பற்றிக் கொண்டு 'போயிட்டுவாரந்தாயி..." என்றார். பளாரென என்னை யாரோ அறைந்ததைப் போல் இருந்தது.

****
ஒரு நாள் மதியம் சாப்பிட்டுவிட்டு, வேடிக்கை பார்க்கலாம் என அலுவலகத்தின் முன்புறம் இருந்த ஒரு வழி கண்ணாடியின் முன் அமர்ந்தேன். அந்த அலுவலகத்தை கடந்து போகும் எவரும் ஒரு நிமிடம் அக் கண்ணாடியில் தன்னைப் பார்க்கத் தவறுவதில்லை. சிலர் தன் பாக்கெட்டிலிருக்கும் சீப்பை எடுத்து கண்ணாடி பார்த்து தலையைச் சீவுவதும் (சீப்புங்கிற வார்த்தையை எழுதிருக்கேன்., அத விட்டுட்டு படிக்காதிங்க) உண்டு. வெளியே நோட்டமிட்ட போது கண்ணில் பட்டது அக்காட்சி. ஒரு வித்தை காட்டும் கூட்டம். கீழே டோலாக்கு, கம்பி, வளையம் போன்ற வித்தை காட்டும் உபகரணங்கள் கிடந்தன. குரங்கொன்று அவர்களுடையதாகத் தான் இருக்க வேண்டும் குறுகுறு வெனப் பார்த்துக் கொண்டு அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தது. திரை போல் ஒரு துணியை இரு முனைகளிலும் பிடித்தபடி இரண்டு ஆண்கள். இதப் பாருடா., திரையில மறைச்சுகிட்டு என்ன வித்த காட்டுவாங்க?. ஒரு வேளை மேக்கப் போடுகிறார்களோ என நினைத்துக் கொண்டே எங்கள் அலுவலக வரவேற்பாளினி ஆங்கிலோ-இண்டியன் 'ஜாக்கி'யை (இது சத்தியமா அவ பேருதான்!!., ஜாக்குலினோட சுருக்கம்!!. என் கப்போர்டோட சாவி வேண்டுமென்றால்., 'ஜாக்கி' அந்த கீய எறி 'தூக்கி'ன்னு கலாய்க்கிறது உண்டு) 'ஒடி வா' என்று கூட்டு சேர்த்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது நடந்துங்க அந்த அதிசயம்., அந்த திரைக்குள்ளிருந்து ஒரு அம்மா ரோஸ் நிறத்தில் 'பொம்மை' போன்ற ஒரு குழந்தையை தன் கைகளில் ஏந்தி வந்தார். சட்டென தரையில் விரித்திருந்த துணியில் அந்த பச்சிளங் குழந்தையை படுக்கவைத்து விட்டு, மதிய நேரம் வெய்யில் எரிக்கிறது. பக்கத்திலிருந்த ஹோட்டலுக்கு ஓடி ஒரு சிறிய வாளியில் தண்ணீர் கொண்டு வந்து அந்த குழந்தையை எடுத்துக் குளிப்பாட்டி, துடைத்து மீண்டும் அந்த துணியிலேயே கிடத்திவிட்டு திரைக்குள் ஓடி பிள்ளை பெற்ற பெண்ணை கைதாங்களாகத் கூட்டிவந்து அமர வைத்தார். ஆண்களும் திரையை மடித்துவிட்டு ஆவலுடன் அந்தக் குழந்தையை நோக்கி வந்தனர். அப்படியே பேச்சு, மூச்சில்லாமல் இருவரும் இதைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.


ah! what is this? - என்றாள் ஜக்கி
ம்…? their life! - உளறினேன் நான்.

எங்க அம்மா நான் பொறந்தப்போ பட்ட கஷ்டத்த., நான் வேலைக்கு போக ஆரம்பித்த பின்பு கூட சொன்னதுண்டு. இங்கென்னவென்றால் மருத்துவரில்ல, செவிலியர் இல்ல, படுக்கை இல்ல... ஒரே ஒரு அம்மா! அதுவே டாக்டராகவும், செவிலியராகவும் மாறி... மாறி ஓடி மத்தியான வெயில்ல பிரசவம் பார்க்குது. எவ்வித ஆர்ப்பாட்டமுமில்லாமல் வந்தது ஒரு உயிர் சிறு பூ பூப்பதைப் போல. அப்படியே என் பைய எடுத்துகிட்டு அவங்களோடேயே போய் விடலாம் போல் இருந்தது. அப்பக்கூட இந்தப் பைய விடமுடியல பாருங்க. அப்புறம் யோசிச்சுப் பார்த்தேன்... நம்ம திங்கிற தீனிக்கு காசு வேணுமின்னா எத்தனை குட்டி கரணம் அடிக்கனும்னு., பேசாம என் மேசையில போய் உக்கார்ந்து வேலையப் பார்க்க ஆரம்பிச்சுட்டேன்.

இந்த மக்களிடம் இருக்கும் மனித நேயமும், பாசமும் ஏன் நம்மிடம் இல்லை?., எத்தனை பேர் நம் அக்கா, தங்கைகளின் பேறுகாலத்தின் போது அருகிருந்து உதவியிருப்போம்?. ஒரு மாதம் கூட்டமாக எங்களுடன் இருந்த, உழைத்த மக்கள்., இனி என்று பார்ப்போம் என தெரியாத போதும் அவர்களைப் பற்றி நினைக்காமல் என்னைப் பற்றியே சிந்தித்து...சே..!. இப்போது மனம் எவ்வளவோ மறுபட்டிருக்கிறது. நம்மைவிட எல்லா வகையிலும் உயர்ந்த அவர்களுகென எதையும் தராத இயற்கை... நல்ல குணங்களை உடைமையாக தந்திருக்கிறதா? அல்லது குணம் வாழ அவர்களது உடைமைகளைப் பறித்திருக்கிரதா?.

17 comments:

சன்னாசி said...

//(சீப்புங்கிற வார்த்தையை எழுதிருக்கேன்., அத விட்டுட்டு படிக்காதிங்க)//
லொள்ளு கொஞ்ச நஞ்சமில்ல போங்க!!

Senthilarasu said...

Dear,
I read your Menmakkal..really nice.....

Senthilarasu

பத்மா அர்விந்த் said...

உள்ளோர்க்கு செல்வங்கள் சொந்தம்-அது இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம்" அதிக மனித நேயத்தை நான் ஏழ்மையின் பிடியில் இருப்பவர்கலிடம் கண்டிருக்கிறேன். மற்றபடி எல்லோரிடமும் மனித நேயமும், அன்பும் உண்டு அது வெளிப்படுத்தும் முறையில் தான் மாற்றம் என்று நினைக்கிறேன்

Thangamani said...

//ஆன இப்படிப் பட்ட பொங்கலின் பெருமை தெரியாத எங்கள் கல்லூரி 3 நாட்கள் மட்டும்தானே விடுமுறை அளிக்கிறது?.//

:))

நல்லா வந்திருக்கு. சன்னாசி சொன்னதைத்தான் நானும் சொல்லோனும்.

அப்டிப்போடு... said...

//லொள்ளு கொஞ்ச நஞ்சமில்ல போங்க//
சன்னாசி, அதெல்லாம் கூடப் பொறந்தது... (வடிவேலு 'ஸ்டைலில்' படிக்கவும்).

செந்தில் அரசு நன்றி.

//எல்லோரிடமும் மனித நேயமும், அன்பும் உண்டு அது வெளிப்படுத்தும் முறையில் தான் மாற்றம் என்று நினைக்கிறேன்//

உண்மைதான் பத்மா., ஆனால் நம்மிடம் எதுவும் இல்லாத போதும், அல்லது குறையும் போதும் அடுத்தவர்களிடம் வரும் அன்பு மேன்மையானதுதானே?.

நன்றி தங்கமணி, சன்னாசிக்குச் சொன்னதைத்தான் உங்களுக்கும் சொல்லோனும். :-)

இளவஞ்சி said...

எலேய்.. இங்கன அக்கா பட்டறைய ஸ்ட்ராங்கா போட்டு பட்டய கெளப்புறாய்க்க... இத பிரிச்சு மேயரதெல்லாம் இன்னைக்கு ஆவறதில்லப்பு... அக்கா சொன்னாப்புல ஆராயாம அனுபவிக்கலாம்! :)

நல்லதொரு பதிவு மரம்! நாகரீகம் என்று கருதி நாம் இழந்த உண்மையான நாகரீகங்களை இப்படி நம் வட்டத்துல் இல்லாத மனிதர்கள் மூலம் அறியவரும்போது நீங்க சொன்னமாதிரி செருப்பால அடிச்சாப்பலதான் இருக்கு..

என் தோழி ஒருத்திக்கு கிடைத்த அனுபவத்தை நேரம் கிடைச்சா இங்க பாருங்க...

நாகரீகம் எனப்படுவது யாதெனில்...(http://ilavanji.blogspot.com/2005/02/blog-post_22.html)

ramachandranusha said...

கல்வியறிவும் அதனால் கிடைக்கும் மேம்பட்ட வாழ்க்கை முறையும் உயர உயர மனம் சிறுத்துப் போகிறது. படிப்பு ஏற, ஏற அகங்காரமும், சுயநலமுமே அதிகரிக்கிறது.

பெண்ணீயம் பற்றிய முந்திய பதிவில் சொல்ல மறந்தது, ஏன் படிப்பறிவில்லாத நம் பாட்டிகள் எடுத்த தெளிவான முடிவுகள், அவர்களின் தைரியம், மன உறுதி படித்த பெண்களிடம் காண முடிவதில்லையே?

அப்டிப்போடு... said...

//இங்கன அக்கா பட்டறைய ஸ்ட்ராங்கா//

அவங்கவங்களுக்கு வயசாகி போச்சுன்னா., 16 வயசல இருக்குற எங்களையெல்லாம்., அக்கான்னு கூப்பிடத்தான் தோணும்...:-))))., இளவஞ்சி, உங்கள் பதிவுன்னா நிச்சயம் படிச்சுருப்பேன். மீண்டும் படிக்கிறேன்.

//படிப்பறிவில்லாத நம் பாட்டிகள் எடுத்த தெளிவான முடிவுகள், அவர்களின் தைரியம், மன உறுதி படித்த பெண்களிடம் காண முடிவதில்லையே?//

சிந்திக்க வேண்டிய விதயம் உஷா., நம்மை எடுத்தால் எழுத எவ்வளவு வருகிறது பாருங்கள்?. நம்மை நாம் உணர வேண்டும். பத்மா அவர்களின் பதிவு பாருங்கள். நாம் மனம் திறந்து பேச வேண்டும். மாற்றம் நம்மிடம் வந்தால் எல்லாம் மாறும்.

கல்வெட்டு (எ) பலூன் மாமா said...

கல்வியும் பணமும் அதிகமாக அதிகமாக கனிவும் கருணையும் வளர வேண்டும். எத்தனைபேர் அப்படி இருக்கோம்? நாகரீகம் என்ற பெயரில் நாம் சாதாரண மக்களை உதாசீனப் படுத்துகிறோம். கண்ணையும் மனத்தையும் திறந்து வச்சாலே வாழ்க்கை சுவராசியமானதாக மனதுக்கு நிறைவானதாக இருக்கும். ஒரு சாதரண மஞ்சப்பை விசயத்தையே நாலெழுத்துப்படித்த நாம் கேவலமாகப் பார்க்கும் போது.....ம்ம்....சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

இப்பெல்லாம் நான் ஊருக்குப்போனா மஞ்சப்பையோடதான் டவுனுக்குப் போறது.ஊரு பஸ்டாண்டில் அப்படியே துண்டைவிரிச்சு தரையில் ஒக்காந்து சாதாரண மக்களுடன் பேசுவது,கொய்யாப்பழம் விக்கும் பாட்டிகிட்ட கொஞ்சம் பேசுவது, போன்றவை மனதுக்கு நிறைவாக இருக்கும்.

பரஸ்பர உதவி எல்லாரிடமும் இருந்தாலும் ஏழைகளிடம் அதிகமாகவே உள்ளது.

இங்கதான் யாரோ ஒருவர் தனது தாய்ப்பாலை கண்ணுக்கு மருந்தாக அனைவர் முன்னிலையிலும் எடுத்துக் கொடுத்த கிராமத்துப் பெண்ணைப் பற்றி எழுதியிருந்தார். அடிபட்டவன் காயத்தில் கட்டுவதற்காக கட்டியிருந்த சேலையின் ஒரு ஓரத்தை கிழித்துக் கொடுத்த ஒரு கிராமத்துப் பெண்ணை நான் நேரில் பார்த்து இருக்கிறேன்.

கீழ்மக்கள் என்னதான் படித்து பணம் சேர்த்தாலும் அவர்களின் கல்வி நாயிக்கு டைகட்டியது போன்றதே. பகட்டைத்தவிர அதில் ஒன்றும் இல்லை. அவர்களின் பணம் நாயின் கையில் கிடைத்த முழுத்தேங்காய் போலவே, யாருக்கும் பயன்கிடையாது.

( மிஸ்டர் நாய் என்னைய மன்னிச்சுருங்க நன்றியுள்ள உங்கள எங்களோட கம்பேர் பண்ணுனதுக்கு)

மேன்மக்களை கல்வியும் பணமும் வள்ளலாக்கும். மேன்மக்கள் மேன்மக்களே!!!!

அப்டிப்போடு... said...

கல்வெட்டு...!., அருமையாக உங்கள் ஆதங்கத்தை சொல்லியிருக்கிறீர்கள்.

//ஒரு சாதரண மஞ்சப்பை விசயத்தையே நாலெழுத்துப்படித்த நாம் கேவலமாகப் பார்க்கும் போது.....ம்ம்....சொல்வதற்கு ஒன்றும் இல்லை.//

இந்த இடத்துல கொஞ்சம் ஸ்டாப்., நானெல்லாம் படிக்காம இருந்திருந்தாலும் மஞ்சப் பையத் தூக்கக்கூடாதுன்னு நினைச்சா அதுதான்... ஆனாலும் நான் பதிவுல எழுதியிருக்கிற மாதிரி., இந்த வரிகள் என்னைய அறைந்த மாதிரிதான் இருக்கிறது. அதாவது கிராமத்தில் இருந்து நகரத்திற்கு பெயர்ந்தவர்கள்., இன்னும் கிராமங்களுடன் தொடர்புடையவர்கள் நிலையே காட்டியிருக்கிறேன். அதை ஒரு நகைச்சுவையாகத்தான் எழுதியிருக்கிறேன். மற்றபடி., என் அடையாளம் தொலைக்க நான் என்றும் விரும்புவதில்லை. அதற்குத் தேவையுமில்லை.

அடித்தட்டு மக்களிடம் எனக்கிருக்கும் அன்பை எப்படி சொலறதுன்னா., அங்க தேர்தல்ல நின்னா செயிச்சுருவேங்க!!!. அட., இத சும்மா எழுதுல.... தலைக்கனமாகவும் எழுதல., உண்மைதான்.. :-))).

//கீழ்மக்கள் என்னதான் படித்து பணம் சேர்த்தாலும் அவர்களின் கல்வி நாயிக்கு டைகட்டியது போன்றதே. பகட்டைத்தவிர அதில் ஒன்றும் இல்லை. அவர்களின் பணம் நாயின் கையில் கிடைத்த முழுத்தேங்காய் போலவே, யாருக்கும் பயன்கிடையாது//

போட்டுத் தாக்குங்க!! இத்துடன் உடன் படுகிறேன்.

கல்வெட்டு (எ) பலூன் மாமா said...

அட அட நான் "நாம்" என்று சொன்னது உங்கள நோக்கியது அல்ல ...ஒரு பொதுவான குறியீடு.... நீங்க மஞ்சப்பையை பற்றி சொன்னவுடன் எனக்கு ஞாபகம் வந்துருச்சு அவ்வளவுதான்.

பள்ளி கல்லூரிக் காலத்தில் எனது விடுதி அனுபவத்தில் பல அழுக்கு வேட்டி மற்றும் மஞ்சப்பை விசயத்தை நேரில் பார்த்து இருக்கிறேன்.

உதாரணத்திற்கு ...அழுக்குச் சட்டையுடன் வரும் சொந்த தந்தையையே விடுதிக்குள் வர வேண்டாம் என்று கூறிவிட்டு, வெளியில் உள்ள டீக்கடையில் வச்சு சந்தித்து அந்த அழுக்கு வேட்டி ஜீவன் கொண்டுவரும் பணத்தை மட்டும் வாங்கி "டீசண்டாக" வாழ்ந்த ஜென்மங்களைப் பார்த்து இருக்கிறேன்.

//அடித்தட்டு மக்களிடம் எனக்கிருக்கும் அன்பை எப்படி சொலறதுன்னா., அங்க தேர்தல்ல நின்னா செயிச்சுருவேங்க!!!. அட., இத சும்மா எழுதுல.... தலைக்கனமாகவும் எழுதல., உண்மைதான்.. :-))).//

அடித்தட்டு மக்களிடம் உங்களுக்கு இருக்கும் அன்பையெல்லம் நான் கேள்விப்படுத்தல.

தேர்தல்ல என்ற வோட்டே உங்களுக்குத்தான் அம்மிணி :-))))

துளசி கோபால் said...

பதிவுக்குப் பதிவு இப்படி சூப்பராப் போடறயேடி என் செல்லம்,
நல்லா இரும்மா! என் ஓட்டும் இருக்கு. போட்டுருவொம்லெ!

அப்டிப்போடு... said...

//உதாரணத்திற்கு ...அழுக்குச் சட்டையுடன் வரும் சொந்த தந்தையையே விடுதிக்குள் வர வேண்டாம் என்று கூறிவிட்டு, வெளியில் உள்ள டீக்கடையில் வச்சு சந்தித்து அந்த அழுக்கு வேட்டி ஜீவன் கொண்டுவரும் பணத்தை மட்டும் வாங்கி "டீசண்டாக" வாழ்ந்த ஜென்மங்களை//

அடப்பாவிகளா!!

//பதிவுக்குப் பதிவு இப்படி சூப்பராப் போடறயேடி//

எல்லாம் நீங்கள் கொடுத்த ஊக்கத்தினால்தன்.

பத்மா அர்விந்த் said...

நானும் தந்தையின் உடை மற்றும் பேச்சுக்காக வெட்கப்பட்டு அவரை வேலைக்காரர் என்று சொல்லி வெளியே சந்தித்த மாணவர்/விகளை பார்த்திருக்கிறேன்.
எதிர்பார்ப்பு இல்லாமலும், வறுமையான(கஷ்டமான) நிலையிலும் கிடைக்கிற அன்பிற்Kஉ இணையில்லை. நான் இதையும் அனுபவித்திருக்க்கிரேன். அதனாலோ என்னவோ அந்த அன்பை அதேபோல இல்லாதவரிடம் காட்ட மகிழ்ச்சியாய் இருக்கிறது.

அப்டிப்போடு... said...

//அதனாலோ என்னவோ அந்த அன்பை அதேபோல இல்லாதவரிடம் காட்ட மகிழ்ச்சியாய் இருக்கிறது//

நன்றாகச் சொன்னீர்கள்.

குமரன் (Kumaran) said...

அசத்திபுட்டீயளே அப்டிபோடு அக்காவும் கல்வெட்டு அண்ணாவும். விட்டா உடன்பிறவா சகோதர சகோதரின்னு கூட்டணி வச்சு தேர்தல்ல நிப்பீங்க போல இருக்கு. நல்லா இருங்க.

அக்கா ஜெயிக்கிறதுக்கு நம்ம ஓட்டு நிச்சயமா வேணும்ல. சும்மா விட்றுவோமா. வந்துட்டோம்ல. ஓட்டையும் போட்டாச்சுல்ல.

அப்டிப்போடு... said...

//அக்கா ஜெயிக்கிறதுக்கு நம்ம ஓட்டு நிச்சயமா வேணும்ல. சும்மா விட்றுவோமா. வந்துட்டோம்ல. ஓட்டையும் போட்டாச்சுல்ல.//

நன்றில்ல.,