Friday, December 30, 2005

**இளங்கன்று**மனிதனின் மொத்த வாழ்க்கையிலும்., அவன் அவனைத் தீர்மானிக்கும் இடம் அவனது பதின்ம வயது. ஒரு இளைஞனோ, இளைய பெண்ணோ தன்னையுணர்ந்து கொள்வதும், வழி மாறி தடுமாறுவதும் இப்பருவத்தில்தான். உறவைத் தள்ளி நட்பை அருகிழுத்து ஒரு உலகம் செய்து, அதனுள் அழுவதும், சிரிப்பதும், குதிப்பதும், கொதிப்பதுமான பருவம். இப்பயெல்லாம் சொல்லியடிக்கிற 'கில்லி' க பெருகிப் போச்சுக. நம்மெல்லாம் மெதுவாப் படிச்சு, முடிச்சு 22 வயசில வேலைக்குப் போகலாமா இல்ல யாரையாவது திருமணம் செய்து வேலை வாங்கலாமா என யோசித்துக் கொண்டிருந்தோம் அப்போது., இப்ப முடிச்சவுடனே ஏதாவது ஒரு நட்டின் தூதரக வாசல்லதான் நிக்குதுக., மேற்படிப்புக்காகவோ., வேலை பார்க்கவோ. +2 படிக்கும் சமயந்தான் எனக்கெல்லாம் +2 ல நல்ல மார்க் எடுத்தா பொறியியலும் மருத்துவமும் படிக்கலாம் என்பது தெரியும்., இப்ப நாலாவது படிக்கிற பையன் சொல்றான் 12 ஆவது வரைக்கும் எனக்கு படிப்புதான் முதலில் என்று. தன் நோக்கத்தில் தெளிவு., அதன் பாதையில் உறுதியான பயணம் என திகைக்க வைக்கிறார்கள் சிலர்.

இவர்களை நெருங்கிப் பார்த்தால் அவர்களின் சோகமும் கண்ணிற்குத் தெரிகிறதுதான். கிரமத்திலிருந்து கல்லூரியில் சேர வரும் இளைஞன் ஒருவன் 'ஆங்கில வழி பள்ளிக் கல்வி' நம்மால் பெறமுடியவில்லையே என நினைக்கிறான். அம்மா, அப்பாவின் ஊக்குவிப்பில்லாமல் கல்வியில் நினைத்த இடத்தை அடைய முடியாத இளைஞர்கள் ஏராளம். எத்தனை இளஞர்களை கல்லூரியில் சேர்க்க அவர்களது பொற்றோர்கள் உடன் வருகின்றனர்?. பெண்களின் கதை வேறு. ஒரு டி.எஸ்.பியின் மகன் தனக்கு வேண்டிய கோர்ஸ்ஸை எடுக்க ((அவனுடைய மதிப்பெண்ணிற்கு கிடைத்தது 'தாவரவியல்'., அவனுக்கோ பொறியியல் படிக்க வேண்டுமென்பதே ஆசை) தன் அப்பாவை கல்லூரிக்கு அழைத்தான்., வாசல் வரை வந்தவர் பின்பு என்ன நினைத்தாரோ "போயி எதுலயாவது சேர்ந்து படிடா!"ன்னு சொல்லிவிட்டுப் போய்விட்டார். அந்தப் பையன் பின்பு 'காவல்துறை குடியிருப்பில்' குடியிருக்கும் அவனது அப்பாவிற்கு கீழே வேலைசெய்யும் 'இன்ஸ்பெக்டரிடம்' வரமுடியுமா? எனக் கேட்க., "அவர்., அட என்னா தம்பி., வா நான் சொல்றேன்னு கூப்பிட்டுப் போய் கல்லூரியில் சேர்த்து விட்டார்.


வீட்டிற்கு வரும் தன் மகனின் நண்பர்களை எத்தனை பெற்றோர் அன்புடன் உபசரிப்பர்?., சி.பி.ஐ விசாரணை மாதிரி "நீ யாரு?"., "அவனோட எத்தனை வருசம் சேர்ந்து படிக்கிற?"., "சரி...இப்ப எதுக்கு வந்திருக்க" கேள்வி கேட்டு காயப்படுத்துபவர்களும் இருக்கிறார்கள்தானே?. நம்மூர்ல இளைஞன்னாலே அவன எதிரியாப் பாக்கிற அப்பாக்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள். என் பையன்னு பெருமையாக மற்றவர்கள் முன் சொன்னாலும்., "அய்யா., எங்க சுத்திட்டு வற்ரிக"ன்னு தனியே இருக்கும் போது எகத்தாளம்தான். குடும்பத்தின் ஆறுதல் எந்த வயதிலும் ஒருவனுக்குத் தேவை. அது நிறைய சிக்கல்களிலிருந்து அவனை மீட்டெடுக்கும். நம் இளைஞர்களுக்கு படிப்பென்பதைத் தாண்டி உலகம் கற்பிக்கப் படுவதில்லை. இங்கு வேலை செய்யும் பையன் ஒருவனிடம் தி.காவைப் பற்றி பேசினால்., அது என்ன? என்றான். குதிரைக்குக் கடிவாளம் போட்டதைப் போல் படிப்பென்ற ஒன்றைத் தவிர எதுவும் அவனுக்கு தேவையில்லை என்ற மனோபாவம் உள்ளது. அனுபவங்கள் அதுவாக வந்து மேலே மோதினால் மட்டுமே திரும்பிப் பார்க்கிறான்., இவனாக அதைத் தேடிச் செல்வதில்லை. இளைஞர்களை குறி வைத்து குட்டிச் சுவராக்க அரசியல், சினிமா, மதம் ('மத' கேன்வாஸே கல்லூரி மாணவர்களிடம்தான நடக்குது?), சாதி என ஆயிரம் உண்டு. இவை எல்லாவற்றையும் தாண்டி கெட்டாலும் கெட்டு, பட வேண்டியவற்றைப் பட்டு., வந்தவைகளை எடுத்து கொண்டு சத்தமில்லாமல் சாதிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.. கால் சதவீகித இளைஞர்களுக்கே குடும்பத்தின் ஊக்கம் கிடைக்கிறது. பெண்களுக்கோ கேட்கவே வேண்டியதில்லை. தவமாய்த் தவமிருந்து பெற்று ஆளாக்கும் பெற்றோர் எனக்கென்னவோ குறைவான அளவினராகவே தோன்றுகின்றனர். அதாவது தன் மகள், மகன் என்ற அடிப்படைப் பாசம் யாவர்க்குமிருக்கும். ஆனால் முழுமையாக தன் கவனம் முழுதும் பிள்ளைகள்பாற் திருப்பி அவனை வளர்க்கும் பெற்றோர்களைச் சொல்லுகிறேன். ஒரு அப்பா, அம்மா நினைத்தால் களிமண்ணைக் கூட சிலையாக்கிவிட முடியும். எனக்குத் தெரிந்த ஒருவர் அவர் நினைவு முழுவதும் பிள்ளைகள்தான். நான்கு பிள்ளைகள். நால்வரும் 'பொறியியல்' மற்றும் 'மருத்துவம்' தான் படித்தனர். நன்றாக படிக்காத பிள்ளைகளைக் கூட அவர்கள் மதிப்பெண்ணிற்கு பொறியியல் சேர்க்குமிடம் எதுவெனப் பார்த்து 'பெங்களூரில்' சேர்த்தார். மிகக்குறைந்த மதிப்பெண் எடுத்த மகனை ரஷ்யாவில் மருத்துவம் படிக்க வைத்தார். அவருடைய ஈடுபாடு அவரது பிள்ளைகளை எட்டாத உயரத்தில் உட்கார வைத்திருக்கிறது. படிப்பு மட்டும் முக்கியமல்ல., பெற்றோரின் ஈடுபாடு முக்கியம். அதேபோல் பெற்றோரால் ஒடுக்கி உக்கார வைக்கப்பட்டவர்களும் இருக்கிறார்கள்.

தன்முயற்சியால் முன்னேறிய இளைஞர்களே கவனிக்கப் பட வேண்டியவர்கள். எடுத்துக் காட்டுகளாக எடுத்துக் கொள்ளப் பட வேண்டியவர்கள். இதற்கு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால் சொல்லிக் கொண்டே இருக்கலாம். காதலில் சிக்கி, எஸ்.எம்.எஸில் வாழ்ந்து, தொலை பேசியில் மட்டுமே பேசி., தோல்வியில் அழுது குடித்து குட்டிச்சுவராகி ஒருநாள் எல்லாவற்றையும் தட்டி விட்டு பீனிக்ஸ் போல் உயர பறக்கும் சில இளைஞர்களைப் பார்க்குப் போது வியப்படக்க முடியவில்லை. எங்கள் அலுவலகத்தில்., ஒரு வேலைக்காய் வெளியே சென்று துன்பம் சந்தித்தவன் தொலை பேசி பிரச்சனையை சொல்ல ஆரம்பித்தால்., நான் சொல்லுவேன் 'ஏ., கடலுக்குப் போனேன்., புயல் அடிச்சுச்சு, கப்பல் கவுந்துச்சுன்னு சொல்லாதா... இப்ப கரையில இருக்கியா அத மட்டும்ஞ் சொல்லு'. இளைஞர்களின் கழிவிரக்கம் என்னால் சகிக்க முடியாத ஒன்று (பின்பு அவர்களுக்கு ஆறுதல் கூறினாலும்).

இளைய தலைமுறை யாரும் எப்படி வேண்டுமானாலும் வளைக்கத்தக்கதாய் இருக்கக்கூடாது. திரையொளியில் தலைவனைத் தேடுதல் தவறு :-)))). பெரியார் சொன்னதைப் போல், கண்ணில் காண்பதையெல்லாம் பற்றி., அது மறைந்தவுடன் கைவிடுதல் கூடாது. அறிவிற்கும், அனுபவத்திற்கும் கிடைக்கும் சந்தர்பத்தை ஆய்ந்து பார்த்து, பகுத்துணர்ந்து ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில் நல்ல இளைஞன் ஒருவனால் வீடுயரும். வீடுயற நாடுயரும்.

6 comments:

டிசே தமிழன் said...

பதிவு பிடித்திருந்தது. தேவையில்லாததை தூசென உதறித்தள்ளிவிட்டும், அவசியமானதில் உறுதியாகிக்கொண்டும் போகவேண்டும் என்பது பிந்தித்தான் என்றாலும் ஒருபொழுதில் புரிந்தது.

Thangamani said...

இளைஞர்களை தட்டி, தேய்த்து, ஒடுக்கி, நீட்டி வெறும் நுகர்வோராக மாற்றுவதன்றி இன்றைய கல்வி வேறெதுவும் செய்வதாய்த் தெரியவில்லை.

துளசி கோபால் said...

நல்ல பதிவு. ஏகதேசம் 50% இளைஞர்கள் ஒரு குறிக்கோளுடந்தான் படிக்கிறார்கள்.

குமரன் (Kumaran) said...

நாங்க எல்லாம் கால் போன போக்குல போயி படிச்சு எப்படியோ இந்த நிலைமைக்கு வந்து நிக்கிறோம். நல்ல நெலமையா இல்லையான்னு சொல்லத் தெரியலை. சோகங்களைவிட சுகங்கள் தற்போதைக்கு அதிகமா இருக்கு. அதுவே நெலச்சா நல்லா இருக்கும்.

இந்தக் கால பசங்க நம்மள மாதிரி ஆளுங்களப் பாத்துத் தான் என்ன செய்யணும்னு ஒரு முடிவோட படிக்கிறாங்க. அண்ணன் மாதிரி வரணும்ன்னு சொல்லியே மாமா பசங்க (பொண்ணுங்களும்), அத்தைப் பசங்க, சித்தப்பா சித்திப் பசங்கள எல்லாம் சொந்தக் காரங்க படிக்க வக்கிறாங்க. ஊருக்கு போனா எட்டாவது படிக்கற பையன்ல இருந்து எல்லாப் பசங்களும் சுத்தி வந்து நின்னுகிட்டு என்ன படிக்கலாம்னு கேக்கறானுக. நீங்க சொன்ன மாதிரி நானெல்லாம் இதான் படிக்கணும்ன்னு ஒரு குறிக்கோள் எல்லாம் இல்லாம படிச்சவன் தான்.

அப்டிப்போடு... said...

நன்றி டி.சே,

//இளைஞர்களை தட்டி, தேய்த்து, ஒடுக்கி, நீட்டி வெறும் நுகர்வோராக மாற்றுவதன்றி இன்றைய கல்வி வேறெதுவும் செய்வதாய்த் தெரியவில்லை//
ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது.

//50% இளைஞர்கள் ஒரு குறிக்கோளுடந்தான் படிக்கிறார்கள்//
தெளிவா இருக்குறாங்க.

//நீங்க சொன்ன மாதிரி நானெல்லாம் இதான் படிக்கணும்ன்னு ஒரு குறிக்கோள் எல்லாம் இல்லாம படிச்சவன் தான்.//
நாங்க மட்டும் என்ன? அதேதான்.

குமரன் (Kumaran) said...

////நீங்க சொன்ன மாதிரி நானெல்லாம் இதான் படிக்கணும்ன்னு ஒரு குறிக்கோள் எல்லாம் இல்லாம படிச்சவன் தான்.//
நாங்க மட்டும் என்ன? அதேதான்.
//

அக்கா. நான் சொல்லவந்தது இது. 'நீங்க சொன்னது மாதிரி, நானும் இதான் படிக்கணும்னு ஒரு குறிக்கோள் எல்லாம் இல்லாம படிச்சவன் தான்'. :-)