Wednesday, December 28, 2005

**சக்கரம்**

இதோ இங்க சைக்கிள்ல வேகமா ஒரு ஆளு போறாரு நல்லாப் பார்த்துக்கங்க... அடடா., அது ஆளில்ல 25 வயசு பையன்., 25 வயசெல்லாம் பையன்னு சொல்லலாமா?., ஆளு பாக்க சின்னப் பையனாத்தான் இருக்கான். அதுசரி எங்க அவ்வளவு வேகமாப் போறான்?., சைக்கிள் பின்னாடி ஒரு சின்னப் புள்ள வேற உட்கார்ந்திருக்குது... பாருங்க. நேரா நம்ம 'பகவதியம்மன்' கோவிலப் பார்த்து போறாப்பிடி இருக்குது?. ஆமாம்., சரி., சட்டுன்னு அந்த புதர்க்கு பின்னாடி ஓளிஞ்சுக்கங்க. அட, என்னமோ ‘சாமி’ முன்னாடி பூப் போட்டுப் பாக்குறான்., அந்தச் சின்னப் புள்ள ஒரு சீட்ட எடுத்து குடுக்குது. அதப் படிச்சிட்டு, முகமல்லாம் சிரிப்பா திரும்புறான். அட., எங்க பக்கத்து வீட்டுப் பையங்க. எனக்கு இப்பத்தாங்க ஞாபகம் வருது., இந்தப் பயல நேத்து இவுங்க அப்பா திட்டோ, திட்டுன்னு திட்டிக்கிட்டு இருந்தாரு., "ஏண்டா., கல்யாணம் ஆயிருச்சு, இன்னும் கலைல பத்து மணி வரைக்கும் தூங்குற., வேலை, கீலைக்குப் போகுலைன்னா விவசாயத்தையாவது பாருன்னாரு., இவன் அதெல்லாம் முடியாது நான் எதோ 'காண்ட்ராக்டர்'., அதுதான் ஏதோ மணலு, சல்லிலேயே கிடக்குற வேலையாமே அது., அத எடுக்கப் போறேன்னு பேசிகிட்டு இருந்தான். ஒருவேளை அதுக்குத்தான் சீட்டுப் போட்டு பார்த்தானோ என்னமோ?. அந்த சின்னப் புள்ளைக்கு மிட்டாயக் குடுத்து கேட்டா சொல்லப் போகுது. நீங்க வாங்க என்னோட... அவன் சைக்கிள் ஓட்டத்துக்கு ஓடி வரணும் என்ன?., கொஞ்சத்துரந்தான் வீடு. அடடா., அந்தப் பய, புள்ளைய இறக்கிவிட்டுட்டு எங்கேயோ போறானே?., சரி அவங்க அம்மாவக் கேட்போம்...

அம்மா செல்லம்., தம்பி என்னாத்துக்கு இம்புட்டு வேகமா போகுது.?. கொஞ்ச முன்னதான் தம்பியக் கொயிலுல பார்த்தோம்.

அவன்... இந்த ரோடு போடுற வேலையெடுக்க ' யூனியன் ஆபிஸ்க்குப் போறான். இவங்கெல்லாம் யாரு?.,

ம்... என் சொந்தக் காரங்கதான்., இப்பத்தான் வந்தாங்க நான் வாரேன்.

வாங்க போகலாம்., பாத்திங்களா, நான் சொன்னது சரியாப் போச்சா?., ஆனாப் பாருங்க 'காண்ட்ராக்டு' வேலைய எடுக்க எல்லாரும் காரு, சீப்புன்னு போவாக., நாங்கூட யூனியன் ஆபிஸ்ல ஒரு மனுக் குடுக்கப் போனப்ப பார்த்தேன்., வரிச கட்டி நிக்குது காரு., என்னான்னு கேட்டா 'டெண்டர்'ன்னு அங்கேருக்குற பியூன் சொன்னாரு., இந்தப் பய சைக்கிள்ல போயி... என்ன பண்ணுவான் பாவம்., சரி போனவன் வந்துதான ஆகணும். வீட்டிக்குள்ள வாங்க., அவன் வந்ததும் பார்க்கலாம்.

***
அப்பா., கொஞ்சம் கண்ணசந்துட்டேன்., பொழுதாகிப் போச்சே., நீங்களும் தூங்கிட்டிகளோ?., அவுங்க வீட்டுல சிரிப்புச் சத்தம் கேட்குது?. அவனுக்கு வேல கிடைச்சுருச்சாட்டம் இருக்கு. சும்மா சொல்லக் கூடாதுங்க கெட்டிக்காரப் பய. நீங்க எங்க கிளம்புறிங்க?. கொஞ்ச நாளைக்கு இருந்துட்டுப் போங்களேன். சரி உங்ளுக்கு வேலையிருக்குதுன்னாப் போயிட்டு வாங்க. நான் அப்பப்ப கடுதாசி எழுதுறேன் சரியா?.

***

எல்லாரும் நல்லாருக்கிங்களா., இம்புட்டு சீக்கிரம் உங்களுக்கு கடுதாசி எழுதுவேன்னு நினைக்கவே இல்லைங்க... நம்ம பய இப்ப ஆளு நல்லாத் தெளிஞ்சு இருக்காங்க., ஏதோ 'புல்லட்'டாமே? தேராட்டாம் நிக்குது., அதுலதான் போறான்... வாறான். திரும்பவும் நேத்துப் பாருங்க அவங்க வீட்டுல சண்டை இப்ப அவுக அப்பங்கூட இல்ல சித்தப்பனோட., அவர் ஏதோ ஏண்டா என்கிட்ட சொல்லங்கிறாரு., உன்னால அவமானப் பட்டேங்கிறாரு. என்னான்னு பாத்தா... இந்தப் பயலுக்கு யூனியன் ஆபிஸ்ல கூப்பிட்டு வேல குடுத்துருக்காக... இவன் என்னா சொல்லிருக்கான் தெரியுமா?., வேற யாருக்காவது குடுங்க நான் இப்ப வேலை செய்யறதுல்லன்னு சொல்லிருக்கான். அந்த வேலைய குடுக்கச்சொல்லி ஒரு பெரிய மனுசன்கிட்ட சிபாரிசு பண்ணுனது அவன் சித்தப்பு. நம்ம பயலுக்கு என்ன ஆச்சு?., இதுவரைக்கும் யூனியன் ஆபிஸ்க்கு அலையா அலைஞ்சு வேல எடுத்தவன் ஏன் வேண்டாம்னு சொல்றான்னு எனக்கு கொஞ்சம் வெசனந்தாங்க. நாம் பாக்க வளர்ந்த பயன்னு மனசு அடிச்சுக்குச்சு. அப்புறந்தான் தெரிஞ்சுது. இவன் இப்போ பெரிய 'காண்ராக்டராம்'. ரோடு, பாலம்னு பெரிய வேலையாத்தான் எடுப்பானாம். யூனியன் ஆபிஸ்ல குடுக்குகிற சின்ன வேலையெல்லாம் செய்ய மாட்டானாம். அப்பிடிப்போடுன்னு நினைச்சுகிட்டங்க. சரி., அத வீட்டுல சொல்ல வேண்டியதுதானே? இப்பிடித்தாங்க இந்தப் பயலுவ கொஞ்சம் விஷயந் தெரிஞ்சாப் போதும்., எல்லாத்தையும் பெத்தவுககிட்டருந்து மறைக்கிறது. சரி., அங்க மழையெல்லாம் எப்படி இருக்கு?. வேற விஷயமில்ல. இருந்தா அப்புறம் கடுதாசி எழுதறேன்.

***
என்னங்க எல்லாரும் நல்லா இருப்பிகன்னு நினைக்கிறேன். கொள்ள நாள் ஆகிப்போச்சு உங்களோட பேசி., கடுதாசிலதான். அப்புறம் நம்ம பயலப் பத்தி கேட்கவேயில்லயே?., இப்ப ரொம்ப பெரியாளாய்ட்டாங்க. பிளசரு காருலதான் எங்கையும் போறான். அவங்க வீட்டுக்கு யார்., யாரோ வாராக... பாத் தா எல்லாரும் பெரிய மனுசங்களாட்டந்தான் இருக்கு. தெக்கயிருக்குற ஒரு மந்திரியோட நம்ம பய ரொம்ப நெருக்கமா இருக்கானாம். அவருதான் தெய்வங்கிறான். என்னமோ நல்லாயிருந்தா சரிதான் என்னாங்கிறிக?. நெறையா ஊர்ல வேலையெடுத்து நிக்க நேரமில்லாம அலையுறான். ஒரு காலத்துல எந்நேரமும் தூ ங்கிக்கிட்டு இருப்பான். அவன் பண்ற ஒரே வேலை சாயந்திரம் எழுத்திருச்சு மெதுவா பவுடரப் பூசிகிட்டு அவன் சோட்டுப் பயகலோட போயிப் பந்தடிக்கிறது மட்டும்தான். கல்யாணமாகிக் கூட கொஞ்ச நாள் அப்பிடித்தான் இருந்தான். இப்ப இராத்தூக்கங்கூட இல்லாம அலையுறான். என்னையக் கேட்டா 23 வயசுலயிருந்து 45 வயது வரைக்கும் பயலுக நிக்க நேரமில்லாமத்தான் அலையணும். சரிங்க., அப்புறம் நிதானமா உங்களுக்கு எழுதுறேன்....

***

ஆர்வந்தாங்காம நீங்க போட்ட கடுதாசி கிடைச்சுது. நம்ம பய இப்பக் கூட ஏதோ பெரிய பாலம் எடுக்கப் போறதா டி.விலயெல்லாம் கூட சொன்னாக., ரொம்ப பெரிய்ய்ய வேலையாம் அது. வேற ஊர்ல வேலங்கிறதால 'காச' தண்ணியா செலவழிச்சுகிட்டு இருக்கான். இடையில ரெண்டு , மூணு லாரி கூட வாங்கியிருக்கான். அந்தூர்ல கூலி அதிகமா குடுக்கனுங்கிறதுக்காக சித்தாளு, கொத்தனாரு எல்லாரையும் இங்கிருந்து கூட்டிகிட்டுப் போறான். அவங்களுக்கு அங்க தங்குரதுக்கு இடம்., சாப்பாடு எல்லாம் ஏற்பாடு பண்ணிகிட்டு ஓய்வில்லாம அலையுறான். இரண்டு மணி நேரந்தான் தூங்குறானாம்., அவங்க அம்மா சொல்லிச்சு. இன்னொன்னையும் அவங்கம்மா சொல்லிச்சுங்க., இப்பல்லாம் அவன் அவுங்க அப்பாவ மதிக்கறதே இல்லையாம். வேலைல இருக்குற சித்தப்பனையும் நீ வட்டத்துக்குள்ளதான் சதுரம் போட முடியும்(மாசச் சம்பளம் வாங்குறதச் சொல்றான் போல) நான் எங்கவேணுமின்னாலும் போடலாம்னு எகத்தாளம் பேசுறானாம். அது ஒன்னுதாங்க அவங்கிட்ட., நம்ம பாக்க அவன் மொத வேலை எடுத்தான் தெரியுமா? அப்ப அவுங்க குடும்பம் முழுக்க 'சொத்த' அவன் பேர்ல 'பவரு' எழுதிக்குடுதுதான் எடுத்தானாம். இப்ப அவங்களையே இப்படிப் பேசலாமா?. சரிங்க எவ்வளவு நாள் ஆச்சு உங்களையெல்லாம் பாத்து., ஒரு எட்டு இங்க வந்திட்டுப் போங்க. தை மாசம் வேற வரப் போகுது காடெல்லாம் பூ பூத்து 'கொல்'லுன்னு கிடக்கு. நீங்க பாக்க வேணாமா?.

***
அடடே வாங்க., வாங்க எப்பப் பார்த்ததுங்க., 6 வருசம் இருக்குமா?., உட்காருங்க. என் கடுதாசியெல்லாம் கிடைச்சுதா?. என்னங்க பக்கதூட்டப் பாக்குறிங்க?., அது ஒரு பெரிய கதைங்க. அந்தப் பாலம் சொன்னல்லங்க... அது கட்சித் தலைவர் ஒருத்தர் இறந்ததுனால நம்ம பயலுக்கு கிடைக்கிலைங்க...ஆட்சியும் மாறிப் போச்சுங்க. அவன் செலவழிச்ச காசு அம்புட்டும் போச்சுங்க. அவங்கிட்ட இருக்கறது எல்லாத்தையும் வித்துட்டாங்க. வீட்டுக்குத் தெரியாம., வேலையெடுக்க நிறையாக் கடன வேற வாங்கி வச்சுட்டாங்க...இப்ப அவங்க வீட்டுல இருக்குரவங்கதாங்க அவனுக்கு ஆறுதல் சொல்றாங்க. "டேய் பணம்தானடா போச்சு... நாங்க இல்ல?ன்னு' அவங்கப்பாதாங்க நெதமும் ஆறுதல் சொல்லிட்டு இருக்காரு. நம்ம பய சருக்கீட்டாந்தாங்க., ஆன எந்திருச்சுருவான்னு எனக்கு நம்பிக்கையிருக்குங்க... எப்படிங்கிறிங்களா?., அங்க பாருங்க!., மாசம் 8 ஆயிரம் ரூபா வட்டி மட்டுமே கட்டுனாலும்., எதப் பத்தியும் கவலை படாம., குழம்பு வைக்கிறதுக்கு கோழிய புடுச்சுகிட்டு இருக்கானா?. துணிச்சலாவனுங்கோ.

8 comments:

துளசி கோபால் said...

என்னாங்கோ, தினந்தினம் இப்படிக் கலக்கி அடிச்சுக்கிட்டு இருக்கீங்கங்கோ!

நல்லா இருங்கோ....

தை மாசம் அந்தாக்குலெ வந்துர்ரறேன்.

மணியன் said...

கதை சொன்னவிதம் அருமை.

Pot"tea" kadai said...

யெக்கோவ்...
உங்க இரத்தத்துல RBCக்கு பதிலா மணலும், செங்கல்லும், ஜல்லியும் தான் போல...
ஒரு பதிவுல(ஒரு நாளில்) ஒரு மொரயாவது "காண்டிராக்டர்" தொழில் பத்தி பேசலன்னா தூக்கமே வராது போல.
விழுந்தவன் எழுந்துர்வான் சொல்லத் தான் கேட்டிருக்கம்.ஆனா எனக்குத் தெரிஞ்சு "காண்டிராக்டர்" தொழில் பண்ரவனுக்கு மத்த எல்லாரயும் விட கொஞ்சம் ரவுசும், தன்னம்பிக்கையும் அதிகம்ன்றது நான் அனுபவத்துல பாத்தது.

"இது கதையல்ல நிஜம்" ;-)கடைசி பாரா சூப்பர்!

Pot"tea" kadai said...

கடைசி பாரா சூப்பர்!
"இது கதையல்ல நிஜம்" ;-)

என்று படிக்கவும்!

அப்டிப்போடு... said...

//கதை சொன்னவிதம் அருமை//
நன்றி, மணியன்.

//மொரயாவது "காண்டிராக்டர்" தொழில் பத்தி பேசலன்னா தூக்கமே வராது போல//
ஹிஹி!!.

//இது கதையல்ல நிஜம்//
இந்தப் பதிவும்தானப்பு.

குமரன் (Kumaran) said...

படித்தேன். + போட்டேன். நல்லா இருக்கு. அவ்வளவுதான். :-)

அப்டிப்போடு... said...

//அவ்வளவுதான். :-)//

அப்படின்னா ஏதோ சொல்ல இருக்கு.

விஜயன் said...

நல்லா கதை சொன்னீங்க.

இன்னும் கொஞ்சம் மெருகேத்தினா நல்லா இருக்கும் போலன்னு தோணுது.

நடை கொஞ்சம் செயற்கையா இருக்கு.

இப்படியே போங்க.

வாழ்த்துக்கள்
விஜயன்