Tuesday, December 27, 2005

**இவர்கள்**

நினைத்தவுடன் எரியும் விளக்குகள்., எங்கு செல்ல வேண்டுமெனினும் நம் வசதிக்கு தக்கதாய் வாகனங்கள்., ஆரோக்கியம் காக்கும் அரை மைல் தொலைவு மருத்துவமனை., உலகம் தெரியக் கல்விக்கூடம், அறிவு தெளிய நூலகம். பார்த்து இரசிக்க சினிமா., பொழுதைப் போக்க தொலைக்காட்சி. இத்தனையிருந்தும் நாம் சில சமயம் சலிப்புடன் சொல்வது 'ச்சே என்ன வாழ்க்கை?'., இதை உண்மையாய்ச் சொல்ல வேண்டியவன் மேலே உக்கார்ந்து கொண்டிருக்கிறான். எங்க தெரியுமா?., நீலகிரி, கல்வராயன் பகுதியில் உள்ள காடடர்ந்த மலைகளில்.

நீலகிரியில் மட்டும் சுமார் 18 வெவ்வேறு இன மலை மக்கள் வாழ்கிறார்கள். படுகர்கள், தோடர்கள், குறும்பர்கள், கோடர்கள், இருளர்கள், பணியர்கள், முல்லுக் குறும்பர்கள் மற்றும் காட்டு நாயக்கர்கள். வெளியே தெரியும் (அல்லது எனக்குத் தெரிந்த) இனங்கள் இவ்வளவுதான்.

இதில் முன்னேறிய இனம் படுகர் இனம். இவர்கள் ஒரு காலத்தில் தம்மை 'Tribes' என வகைப்படுத்துவதையே மறுத்தவர்கள். பின்னாளில் சேர்க்கப்பட்டதாக கேள்வி., இப்போது எப்படியோ?. இவர்கள் பேசும் 'படுகு' மொழி வரிவடிவமில்லாதது., கன்னடத்தை சிறிது ஒத்திருக்கும் இவர்கள் விஜய நகர பேரரசின் போது மைசூர் நிலப் பகுதிகளில் இருந்து நீலகிரிக்குப் பெயர்ந்தார்கள். படுகர்களின் வழக்கங்கள், மொழி, வரலாறு செறிவானவை. இவர்களில் சிலர் பொருளாதாரத்தில் உயர்ந்தவர்கள். சொந்தமாக 'எஸ்டேட்' வைத்திருக்கக்கூடிய படுகர்கள் உண்டு. நன்கு கல்வி பெற்று மருத்துவர்களாகவும், பொறியியளாளர்களாகவும் வெளிநாடுகளிலும் வேலை பார்க்கின்றனர். ஒரு 10% இப்படியுள்ளனர். மற்றவர்கள் பிந்தங்கிய மற்றும் வறுமை கோட்டிற்கு கீழான நிலையில். இவர்களில் ஆறு உட்பிரிவுகளும்(இன) உண்டு.

தோடர்களின் முக்கிய தொழில் தோட்டம் செய்வது (டீ). பெரும்பாலும் குடிசைகளில் வாழ்கிறார்கள். இவர்களுடைய பூர்வீகம் எதுவெனத் தெரியவில்லை. எருமையை அருமையாக வளர்ப்பார்கள். அவர்களுடைய கடவுள் வழிபாட்டிற்கும் எருமைக்கும் தொடர்பு உள்ளது. என்னவென தெரிந்தவர்கள் சொல்லுங்கள். இவர்களும் வரியில்லா மொழியே பேசுகிறார்கள். இவர்களுடைய நாகரீகம் கிரேக்க, சுமேரிய நாகரிகத்துடன் தொடர்புடையது. மற்றுமொரு ஆச்சரியப் படுத்தும் விதயம், தோடர்களின் உணவு முறை. மலைவாழ் மக்களிலேயே எனக்குத் தெரிந்து தோடர்கள் மட்டும் 'சைவ' உணவு முறையை பின்பற்றுகின்றனர். பக்தியிலும் மற்றவர்களைக் காட்டிலும் கூடுதலாக விளங்குகின்றனர்.

கோத்தகிரியில் வசிக்கும் கோடர்கள் பெரும்பாலும் மரவேலை செய்பவர்கள். இவர்களில் சிலர் சொந்த நிலமும் நல்ல கல்வியும் பெற்றவர்கள்.

குறும்பர்கள் தான் நாம் மலைசாதி என்றால் ஒரு 'டிபிக்கல்' உருவம் ஒன்று மனதில் வைத்திருப்போமில்ல அப்படி இருப்பார்கள். அடர்ந்த காடுகளில் தேனெடுப்பதும், மூலிகைகள் பறிப்பதும் செய்வார்கள். தினைமாவும், தேனும் உணவு (குற்றால குறவஞ்சி., வசந்த வள்ளி, பந்து எல்லாம் நினைவுக்கு வருதா?).குறும்பர்கள் பெரும்பாலும் படுகர், கோடர் போல் அல்லாது வறுமையில் உழல்பவர்கள்.

இருளர்களும் குறும்பர்களைப் போலவே டீ எஸ்டேட்டில் வேலை செய்கிறார்கள். இவர்களது உடைமையும் வறுமையே.

பணியர்கள் நிலை இன்னும் பரிதாபம். இவர்களில் பெரும்பாலோர் கொத்தடிமைகளாக வேலை செய்கின்றனர். தற்போது இவர்களுக்கென நலச் சங்கமும்., கூட்டுறவு சங்கள் உள்ளன.

இன்றும் வில்லில் விலங்கடித்து வேட்டையாடும் இனம் உண்டு என்றால், அது முல்லுக் குறும்பர்கள்தான். விவசாயம் தொழில் என்றாலும் அதிகம் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களே.


அதிகம் மலையேறாமல், மூலிகை பறித்து மருந்து தராமல், வேட்டையாடாமல், ‘மலை சாதி இனம்’ என்று பெயர் கொண்டுள்ளவர்கள் காட்டு நாய்க்கர்களே.
நல்ல கலர்களில் உடையணிந்து தாடி வச்சிகிட்டு குறி சொல்லும் குடுகுடுப்பைக் காரர்களாகவோ., சாமி மாட்டுடனோ வருவார்கள். தெலுங்கு மாதிரி தமிழ் பேசிகிட்டு போவாங்க. ஓவியம் வரைவதில் (மூலிகைகளைக்கொண்டு வண்ணம் தயாரிப்பார்கள்)., நாடகங்கள் நடிப்பதில் வல்லவர்கள். வேட்டை நாய்க்கர்கள் என்ற பெயரும் உண்டு.

**
இவர்களும் மலைவாழ் மக்களே. இந்திய 'ஜிப்ஸி'க்கள். இப்போதல்ல., ஒரு காலத்தில். நம் குறிஞ்சி நிலப் பகுதியில் இவர்கள் வாழ்ந்ததாக தமிழிலக்கியங்கள் சொல்கின்றன. ஊர் ஊராகச் சென்று ஊசி, பாசி மணி மாலையும், நரிக் கொம்பும்(??!!) விற்பதாகச் சொல்வார்கள். தமிழ் நாட்டில் நிறைய இடங்களில் இவர்கள் இருக்கிறார்கள் எனினும்., திருவெறும்பூருக்குப் பக்கத்தில் உள்ள தேவராயனேரி என்ற இடத்தில் வசிக்கும் நரிக்குறவர்கள் சற்று முன்னேறியவர்கள். இவர்களுக்கென ஒரு குடியிருப்பு உள்ளது. கலைஞர் காலத்தில், இந்தக் குடியிருப்புக்கள் ஏற்படுத்தப் பட்டன. இவர்களது வாரிசுகள் படிக்க விடுதியுடன் கூடிய பள்ளி இருக்கிறது. போபாலில் இருந்து இவர்களது தொழிலுக்கு வேண்டிய பொருட்களை வாங்கி, பாசி மணி மாலைகள் செய்து காசி, குருத்வார் போன்ற இடங்களில் நடக்கும் திருவிழாக்களில் விற்பார்கள். திருவிழாக்களில் இவர்களை உடனே அனுமதித்து விடமாட்டார்கள். இங்கிருந்து., தாங்கள் யார்? எத்தனை பேர் விழாவிற்கு வருகிறோம்? போன்ற விவரங்கள் கொண்ட கடிதம் ஒன்றை மாவட்ட ஆணையர் மூலம்., கலைக்டருக்கு அனுப்பி அவர் , இவர்களுக்கு விற்பனை செய்யவும், தங்கவும் இடம் தருமாறு கோரும் கடிதத்தை எங்கு செல்கிறார்களோ அங்கு அனுப்பி வைப்பார்கள். தற்போது இலங்கை, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கும் செல்கிறார்கள். எங்கும் செல்லாத சமயத்தில்., கூட்டுறவு சங்கத்தின் மூலம் விற்பனை செய்து கொள்ளலாம்.

சிலர் படித்து, Ashok layland போன்ற நிறுவனங்களில் வேலை செய்கின்றனர். இவர்களுக்கென நரிக்குறவர் முன்னேற்ற சங்கம் உள்ளது. அதன் மாநிலத் தலைவர் ரகுபதி என்பவர். அரசிற்கு இச்சங்கத்தின் மூலம் தங்களது தேவைகளைச் சொல்கிறார்கள். அடுத்து நீங்க நினைக்கிற விதயத்துக்குத்தான் வாரேன்...ம்... சங்கம் வச்சிருக்காங்களா?., அப்புறம் என்ன தேர்தல்லயும் (சேர்மன், கவுன்சிலர் மாதிரி...) நின்றார்கள். திருவெறும்பூர்லயே சேர்மன் சாமிநாதன் அய்யா அவர்களை எதிர்த்து, கோவிந்தராஜன் என்ற நரிக்குறவர் நின்று தோற்றார். தோற்பது முக்கியமல்ல., நிற்க வேண்டும்!. அதுதானே ஆரம்பம்?. மூலிகைகளை கொண்டு மருந்து செய்து விற்பதுண்டு. ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டத்தின் (IRDP) கீழ்., பாசி மாலை கட்ட கடனும் கிடைக்கிறது. அதில் 50% கடனாகவும் மீதி 50% அரசு மாணியமாகவும் வாங்கப்படும். அதாவது 10 ஆயிரம் கடன் வாங்குனாங்கன்னா 5 ஆயிரம் இவங்க கட்டுனா போதும் மீதியுள்ள 5 ஆயிரத்தை அரசே மாணியமாக வழங்கிவிடும்.

இவர்களது உடைகள் பெரும்பாலும் மாறிவிட்டது., ஆனால் உணவு அதே காடை, கவுதாரிதான். ஒரு முறை நான் ஒரு மருத்துவ மனைக்குச் சென்ற போது., ஒரு நரிக்குறவர் ஓட... பின்னாடியே நர்ஸும் கையில் ஊசியுடன் ஓட ஒரே கலவரம் என்னவென விசாரித்தால்., நர்ஸ் சலைன் ஏற்ற வந்திருக்கிறார்., ஊசி பயத்தில் நம்மாளு எந்திரிச்சி ஓட ஆரம்பிச்சுட்டாராம். ஊசி விக்கறவனுக்கே ஊசியான்னு கேட்க வேண்டியதுதானே?., மறுநாள் நாளிதழ்களில் இவர் ஓட, நர்ஸ் பிந்தொடர்ந்தோடும் படம் வந்திருந்தது. நரிக்குறவர்கள் பயப்படும் விதயம் மருத்துவமனை.

முன்பு மலைவாழ் மக்கள்., குடும்பத் தொழிலாக சாரயம் காய்ச்சுவதைக் கொண்டிருந்தார்கள்(மூலிகை சாராயமாம்). என் நண்பரொருவர் கல்வராயன் மலைப் பகுதியில் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை நடத்தி வந்தார். தற்போது மகளிர் சுய நிதிக் குழுக்கள் வந்த பிறகு மலை மகளிர்கு சிறிய வாசல் திறந்திருக்கிறது. தற்போது அவர்களே யூகாலிப்டஸ் எண்ணை, தேன் பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்கிறார்கள். கொடிய வறுமையிலும்., அதனினும் கொடிய அறியாமையிலும் வாழும் அம்மக்களை திசை மாற்ற மகளிர் குழுக்கள் நல்லதொரு ஆரம்பம். இங்கிருந்து ஓய்வுக்கெனவும், களிப்புக்கெனவும் மலைக்கு சென்ற புண்ணியவான்கள் சுரண்டியது மலை வளத்தை மட்டுமல்ல. மலையக மக்களின் உழைப்பையும்தான். இவர்களும் நம்மிடையேதான் வாழ்கிறார்கள்., தேள் கடித்தாலும், பாம்பு கடித்தாலும் பச்சிலையைக் கட்டிக் கொண்டு., நம்மைப் போல்தான் ஓட்டுப் போட்டு தமக்கான பிரதிநிதிகளைத் தெரிந்தெடுத்து கொண்டிருக்கிறார்கள். மலை இருட்டிருந்து வெளிச்சத்தை பார்க்கவே இவர்கள் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் சுதந்திரத்திற்கு பிறகு மற்ற இனங்களின் வளர்ச்சியைப் பாருங்கள். இவங்கள அப்பிடியே வச்சுருகாய்ங்கப்பா 'Anthropology' ஆராய்ச்சிக்கி.

12 comments:

வசந்தன்(Vasanthan) said...

நிறையத் தகவல்கள் தெரிந்துகொண்ட கட்டுரை.

துளசி கோபால் said...

ரகுபதியின் மகள் 'சென்னையில் ஸ்பென்சர் ப்ளாசா'வில்
பாசிமணிகளுக்கென்று ஒரு கடை நடத்திவருவருவதாகக் கேள்விப்பட்டேன்.

நான் இங்கே வந்த புதுசுலே, வெள்ளைக்காரகளின் அணிகள் விற்கும் கடையைப் பாத்துட்டு, நம்ம ஊரு நரிக்குறவர்கள் வந்தால் ஒரே மாசத்துலெயே இங்கே மில்லியனாரா ஆகுற வாய்ப்பு இருக்குன்னு சொல்லிக்கிட்டு இருந்தேன். அவ்வளோ பாசிமணி நாகரிகம் இங்கே!

பத்மா அர்விந்த் said...

நான் நிறைய தெரிந்து கொண்டேன். தகவல்கள் நிறைந்த நல்ல பதிவு. நன்றி

அப்டிப்போடு... said...

//நிறையத் தகவல்கள் தெரிந்துகொண்ட கட்டுரை//
கட்டுரை?., அப்பிடித்தான் போயிருச்சு., கொஞ்சம் சீரியஸா எழுதுலாம்னு பார்த்தேன். நன்றி.

//நம்ம ஊரு நரிக்குறவர்கள் வந்தால் ஒரே மாசத்துலெயே இங்கே மில்லியனாரா ஆகுற வாய்ப்பு இருக்குன்னு //
அக்கா சொல்லிவிட்டுட்டா போச்சு தேவராயனேரிக்கு.

//தகவல்கள் நிறைந்த நல்ல பதிவு//
நன்றி பத்மா.

குழலி / Kuzhali said...

காட்டு நாயக்கர்கள் என்று கடலூரில் பழங்குடியினர் இருக்கின்றனர், இவர்களின் தொழில் பன்றி வளர்ப்பாக இருந்தது (இப்போதும் இருக்கின்றது), இவர்களுக்கு பெரிய பிரச்சினையாக இருப்பது இவர்களுக்கு சாதி சான்றிதழ் அளிப்பதில் உள்ள பிரச்சினை, இவர்களுக்கு ST சான்றிதழ் தர மறுக்கப்படுகின்றது, ST சான்றிதழ் வழங்க மாவட்ட ஆட்சி தலைவர் கையொப்பமிட வேண்டும், சாதி சான்றிதழ் கிடைக்காததால் பல வாய்ப்புகளை இழக்கின்றனர், பல போராட்டங்கள் நடத்தியும் ம்.... ஒன்றும் நடக்கவில்லை...

Dharumi said...

குழலி,
இத இதத்தான் அந்தப் பதிவில கூறியிருந்தேன். இன்னும் பலருக்கு இந்தப் பிரச்சனையின் தீவிரம் புரியவில்லை. ஏதோ, இந்த மக்களுக்கு அரசாங்கம் அள்ளி அள்ளிக் கொடுத்திருப்பதுபோல, கொடுத்துக்கொண்டே இருப்பது போல...

அப்டிப்போடு... said...

//சாதி சான்றிதழ் கிடைக்காததால் //
குழலி,
எங்க பக்கம் உள்ள காட்டு நாய்க்கர்கள் விவசாயம் செய்கிறார்கள்., எனவே இவ்விதயம் குறித்து அதிக சலம்பல்கள் இல்லை போலும். விசாரித்து எழுதுகிறேன்.

அப்டிப்போடு... said...

//இந்த மக்களுக்கு அரசாங்கம் அள்ளி அள்ளிக் கொடுத்திருப்பதுபோல//

இதெல்லாம் வேதனை சாமி.

மணியன் said...

பழங்குடி மக்களைப் பற்றிய அருமையான பயனுள்ள தொகுப்பு.நிறைய விதயங்களைத் தெரிந்து
கொண்டேன்.

அப்டிப்போடு... said...

நன்றி மணியன்.

குமரன் (Kumaran) said...

நல்லா எழுதுறீங்க அக்கா. நிறைய விஷயம் தெரிஞ்சுகிட்டேன்.

கன்னடர்களை வடுகர் என்று சொல்வது தமிழ்மரபு. வகரம் பகரமாய் திரிந்து படுகர் ஆகிவிட்டார்களோ?

தோட்டத்தில் வேலை பார்ப்பவர்கள் தோடர்களோ?

கோடு என்றால் மலை என்றும் ஒரு பொருள். மலையில் வசிப்பதால் இவர்கள் கோடர்களோ?

குறும்பு என்றால் சிறிய உருவம் என்றும் ஒரு பொருள். குறும்பர்கள் குட்டையாய் இருப்பார்களா?

இருளில் இருப்பதால் இருளர்களோ?

பணியாளர்களாய் இருப்பதால் பணியர்களோ?

காட்டில் வாழ்ந்து தெலுங்கு பேசினால் காட்டு நாயக்கர்களோ?

இருக்கலாம்.

அப்டிப்போடு... said...

//குறும்பு என்றால் சிறிய உருவம் என்றும் ஒரு பொருள். குறும்பர்கள் குட்டையாய் இருப்பார்களா? இருளில் இருப்பதால் இருளர்களோ?//

இது இரண்டும் தெரியவில்லை. ஆனால் மற்றவைகளுக்கு நீங்கள் சொன்னது சரி. அவர்களுடைய கடவுள்களுடன் தொடர்புடையது அவர்கள் பெயர்கள் என நினைக்கிறேன். சரியாகத் தெரியவில்லை.