Monday, December 26, 2005

** தெளிவு கொள் **


மூளைக்குத் துன்பம் கொடுக்கும் ' ஆர்கானிக் கெமிஸ்ட்ரி' கிளாஸ் முடிந்தவுடன் நான் ஆவலுடன் கவனிக்கும் தமிழ் பாடம். வெள்ளையுடையில் எங்கள் தமிழ் சிஸ்டரை எதிர்பார்த்திருந்த வேலை., மூன்றாம் ஆண்டு படிக்கும் அக்கா போல் இருந்த நீங்கள் வந்து உங்களை அறிமுகப் படுத்திக் கொண்டீர்கள். ஏதோ அறிவிக்க வந்தீர்கள் என நினைத்தால்... நாந்தான் இனி உங்களுக்கு தமிழ் வகுப்பு எடுப்பேன்., சிஸ்டருக்கு உடல் நிலை சரியில்லாததால் எனக்கூறி நீங்கள் ஆரம்பித்தபோது எனக்கு ஒன்றும் அவ்வளவு உற்சாகமில்லைதான். ஆனால் அடுத்த நாள் பாடம் எடுக்க வந்த போது 'கலைஞரின் எழுத்துக்கள் என்னை கவர்ந்ததில்லை' எனக்கூறி என்னைப் பேச வைத்தீர்கள். பின்பு வந்த நாட்களிலும் 'கண்ணதாசன் கவிஞனா?" எனக் கேட்டு பதற வைத்தீர்கள். வகுப்புகள் பல வாக்குவாததிற்கே போனது. நமக்குள் வந்த முரண்பாடுகள் "இவருக்கு என்ன தெரியும் என எண்ண வைத்தது?"., எப்போதும் சிரித்து கொண்டு வகுப்பெடுக்கும் தன பாக்கியம் மிஸ்ஸூடனும்., வகுப்பிற்கு தாமதமாக வரும் மணவிகளைப் பார்த்து " அம்மா., உங்களைப் பார்த்து கோபம் வரவில்லை., ஒரு மலை அடிவாரத்தில் நடந்து கொண்டிருக்கும் போது கால்களில் குத்திவிடுமோ என்று பாதம் சுழித்து நடக்க வைக்கும் 'பரல்கற்களைப்' பார்க்கும் போது வரும் எரிச்சல் வருகிறது” என்று தன் எரிச்சலைக்கூட சுவையாய் கூறும் அருணா மிஸ்ஸூடனும் ஒப்பிட்டுப் பார்த்த நாட்கள் முடிவுக்கு வந்தது., "பாரதி கண்ணம்மா" என்ற புனைப் பெயரில் படைப்புகள் தருவது, நீங்கள்தான்! என்று தெரிந்த பின்னர். பிறகு வந்த நாட்கள் இனிமையானவை. அந்த சமெஸ்டர் நிறைவான போது முதலில் பாடம் எடுத்த சிஸ்டர் வந்து விட நீங்கள் விடை பெற்றீர்கள்.

அப்புறம் வருடங்கள் கழித்து ஒரு நாள், கல்லூரி அலுவலக வாசலில் உங்களைச் சந்தித்தேன். மிகுந்த மகிழ்வுடன் கைகளைப் பற்றிக் கொண்டீர்கள். எங்க?.. எப்பிடி இருக்கிறிங்க? கேட்டதும் ஒரு குழைந்தைக்குத் தாயாக இருக்கிறேன் என்று பூரிப்புடன் சொன்னீர்கள். உங்கள் உடலும் நம்ம **** மிஸ்தானா? என்று நினைக்கும் வண்ணம் பருத்திருந்தது. காதல் திருமணம் என்றும் மிகவும் சந்தோசமாக இருப்பதாகவும் கூறினீர்கள்.

அதற்குப் பிறகு ஒரு நாள் நான் எங்கோ சுற்றி விட்டு பேருந்திற்கு காத்திருக்கும் சமயம், நெடுநேரம் பேருந்து வராத காரணத்தை இருவர் பேசிக் கொண்டிருந்தனர்., "யாரோ ******** லெக்சரராம்பா... தற்கொலை பண்ணிக்குச்சாம்., அதக் கொலைன்னு சொல்லி, கல்லூரிப் பிள்ளைங்க ஊர்வலம் போராங்க அதுதான்'. ‘திக்’கென்று அதிர்ந்த மனதுடன் நம் கல்லூரி நோக்கி வந்த வழியில் தெரிந்தது அது நீங்களென்று. எத்தனையோ பேரிடம் பழகுகின்றோம் துக்க முகம் மறைத்து வாய் கொள்ளாச் சிரிப்பு முகம் காட்டி., ஏன் மறைக்கிறோம் பெண்கள் இப்படி?. ஏன் அமைதி காத்தீர்கள்., "அஞ்சுவது அஞ்சாமை பேதமை" என்று சொல்லிக் கொடுத்த உங்கள் வாய் அமிலத்தால் கழுவப்படும் வரை?. "ரொம்ப சந்தோசமா இருக்கம்பா...!" உங்கள் குரல் இன்னும் ஒலித்துக் கொண்டிருக்கிறது காதினில்.


அடுத்து., நீ! என்னுடன் ஒரே பள்ளியில் படித்தாய். நான் தமிழ் வழியும் நீ ஆங்கிலத்திலும். தமிழ் மற்றும் ஆங்கில வகுப்புக்கள் சேர்ந்தே நடக்கும். நாம் ஒரே வகுப்பரையில் தான் அமர்ந்திருப்போம். நீதான் வகுப்புத் தலைவி. ஆங்கில வழியில் படித்தாலும் உன் தமிழ் அறிவும், ஆர்வமும் வியக்கத்தக்கது. வகுப்புத் தலைவியாக நீ இருந்த சமயம் உன் கட்டளைக் குரலையும், ஒழுங்கு படுத்தும் திறனையும் கண்டு பலமுறை வியந்திருக்கிறேன். பள்ளி படிப்பு முடிந்ததும் நீ வேறு கல்லூரியிலும் நான் வேறு கல்லூரியிலும் சேர்ந்தோம். படிப்பு முடிந்ததும் உனக்கு மணமாகிவிட்டது. ஒரு கல்லூரி விரிவுரையாள நண்பர் ஒருவர் வீட்டிற்கு வரும் வழியில் உன்னை அப்படிப் பார்த்தேன். இருபுறமும் வீடுகள் இல்லா.. ஒற்றயடிப் பாதையில் யாரோ அழும் சத்தம்... சற்றுத் தயக்கத்துடன் விரைந்து வந்து பார்த்தால் நீதான் அழுது கொண்டு நடந்து வந்தாய் உனக்குப் பக்கத்தில் ஒரு பெரியவர் ஏதோ ஆறுதல் கூறியபடி வந்து கொண்டிருந்தார். பள்ளியில் பார்த்தபோது இருந்ததில் பாதி உருவமாய் மாறிவிட்டாய். அங்கங்கு நின்று கொண்டும்., பேசியபடி அழுது கொண்டும் வந்தாய்., என்னை கடந்த போது உன்னையே பார்த்துக் கொண்டு நின்ற என்னைப் பார்த்து, தடுமாறி புன்னகைத்து, நிற்க நினைத்து., சட்டென தலையை குனிந்து கொண்டு கடந்து விட்டாய். பின்னால் ஒரு தோழியின் மூலம் உன் வாழ்க்கையறிந்தேன். அன்று உனக்கு என்ன துக்கமடி? வெகு நாட்கள் கழித்துப் பார்த்தும் ஏன் சென்றாய் அப்படி?.

திருமணம் ஆனதும் நட்பை., ஆண்கள் இரண்டாம், மூன்றாம் இடத்திற்கு (இது சிலர்தான்!) தள்ளினால்... நாம் மூலையில் தள்ளி விடுகிறோம். நம் கவனம் பறிக்கவும், நம்மை கவலை கொள்ளச் செய்யவும் ஆயிரம் சொந்தங்கள் வரிசை கட்டி வருகின்றன. பல காலம் பழகிய, உறவினும் மனதிற்கு நெருக்கமாய் இருந்தவளை, எங்கோ பேருந்து நிலையத்திலும், காய்கறி மார்க்கெட்டிலும் பார்த்து விட்டு., இருக்கும் சிறிது நேரத்திலும் கணவனைப் பற்றி, பிள்ளைகளை பற்றி பேசி, அவள் வாழ்க்கைக்கு நம் வாழ்க்கை சற்றும் குறைந்ததில்லையென காட்டிவிட்டு கையசைத்து வந்துவிடுகிறோம். உண்மையாய் நமக்கு நேர்கின்ற துக்கங்களை எத்தனை பேர் பகிர்ந்து கொண்டிருப்போம்?. போபாலில் சிறையில் இருக்கும் நண்பனை மீட்க., பெங்களுரில் இருந்து விமானம் ஏற தோழமை உணர்வுள்ள ஒரு ஆணால் முடிகிறது (நம்ம இளவஞ்சி அவர்கள்தான்!). இப்படி பெண்களில் எத்தனை பேர் செய்வோம்?.

நாம் தேர்ந்தெடுத்தவன் தவறானவன் என்றால் நம் மனமே ஒத்துக் கொள்ள மறுக்கிறதே?. எத்தனை போராட்டங்கள், கண்டனங்கள், கேலிகள் தாங்குகிறோம்., ஒரு தகுதியற்றவனின் கைபற்ற? நம் மனம் மயங்கியிருந்த ஒரு காலத்தில் ஏற்பட்ட தோழமை... ஆழமாக நாம் நினைப்பதால்தான் அர்த்தம் பெறுகிறது. காலத்தின் ஓட்டத்தில் அவன் கயமை முகத்தை நாம் கண்டுகொண்டாலும் கண்ணை மூடிக் கொள்கிறோம், நாம் தேர்ந்தெடுத்தவன் என்றோ., நம் குழந்தைக்கு அப்பன் என்றோ, சமூகம் பழிக்குமென்றோ. அலுவலகத்தில் ஊழல் செய்து மாட்டிய கணவனை., 'அவர் தப்பே செய்யவில்லை' என பெற்றோரிடம் அழுத ஒருத்தியைப் பார்த்து பரிதாபமே தோன்றியது. கணவன் என்பவனின் சின்ன செய்கை ஏன் உன் தன்மானத்தை பாதிக்க வேண்டும்?. நீயா தவறு செய்தாய்?. தானும் அவனும் வேறல்ல என நினைக்கும் வெகுளிகளுக்கு ‘அவர்கள்’ அளிக்கும் பரிசு இதுதான். மனைவியை தன்னில் காண்பவன் தப்பு வழி எப்படி செல்வான்?.

அடாவடி ஆண் (எல்லோரும் அல்ல!) எப்போதும் அவனாகவே இருக்கிறான். அம்மா, அக்கா, தங்கைகளிடம் காட்டும் அடாவடிகளின் தொடர்ச்சி மனைவில் அதிகமாகிறது. அடங்கும் பெண் தந்தையிடம் வளைய ஆரம்பித்து... கணவனிடம் உடையும் நிலை. ஆண்கள் இல்லாத உலகம் சாத்தியமில்லை (அடப்பாவி., உன்னைய பேச விட்டா எங்களையெல்லாம் காலி பண்ணுருவ போலங்கிற கூக்குரல் கேட்கிறது!). ஆனால் அவனிடமிருந்து முழுவதுமாக நம்மை மீட்டெடுக்க நம்மால் முடியும். நம்மை நாம் உணர்தல் முக்கியம்.
***
பெண்ணின் சுதந்திரம் என்பதை வெறும் பாலியலில் அடைத்து விடக் கூடாது. சித்தாளுக்கு 50 ரூ கொத்தனாருக்கு 150ரூ வில் தொடங்கி நடிகனுக்கு கோடி நடிகைக்கு லட்சமென உழைப்புச் சுரண்டல்., ஒரு ஆண் பேசினால் செய்தி, அதே பெண் பேசினால் கேலி என உரிமைச் சுரண்டல் என ஆயிரம் சுரண்டல்கள் இருக்க., உணர்வு சுரண்டல்களைப் பற்றியே பேசுவதும் அது பற்றிய கருத்துக்கள் மட்டுமே முக்கியத்துவம் பெருவதும் ஏன்?. மற்றுமொன்று நம்ம நாட்டைவிட ஜப்பானில் பெண்ணடிமைத் தனமும், பெண்ணிற்கு இழைக்கப்படும் அநீதிகளும் மிகவும் அதிகமாம். அங்கிருப்பவர்கள் யாராவது இதைப் பற்றி பதிவு செய்தால் முழுமையாகத் தெரிந்து கொள்ளலாம் (மேற்கூரிய செய்தி ஒரு ஜப்பான் பெண்மணி., (இங்கு இருப்பவர்) சொன்னதுதான்).
***

26 comments:

துளசி கோபால் said...

போட்டாயே ஒரு போடு
கேட்டாயே ஒரு கேள்வி!

பத்மா அர்விந்த் said...

இதற்கும் முந்தைய பதிவிற்குமான என் எண்ணங்களை தனியே எழுதுகிறேன். நன்றி

நிலா said...

//இப்படி பெண்களில் எத்தனை பேர் செய்வோம்?.//


அப்படியே பெண் செய்ய நினைத்தாலும் சமூகம் விடுகிறதா? ஓய்வு பெற்ற பின்னரும் தோழியிடம் தொலைபேசியில் பேசக்கூட அனுமதி பெற வேண்டிய பெண்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

நல்ல பதிவு, வாழ்த்துக்கள்

சமீபத்தில் நானும் சுதந்திரம் குறித்த என் அனுபவங்களைப் பதிந்தேன். முடிந்தால் பாருங்கள்:

http://nilaraj.blogspot.com/2005/12/blog-post_24.html

dondu(#4800161) said...

"பள்ளியில் பார்த்தபோது இருந்ததில் பாதி உருவமாய் மாறிவிட்டாய். அங்கங்கு நின்று கொண்டும்., பேசியபடி அழுது கொண்டும் வந்தாய்., என்னை கடந்த போது உன்னையே பார்த்துக் கொண்டு நின்ற என்னைப் பார்த்து, தடுமாறி புன்னகைத்து, நிற்க நினைத்து., சட்டென தலையை குனிந்து கொண்டு கடந்து விட்டாய். பின்னால் ஒரு தோழியின் மூலம் உன் வாழ்க்கையறிந்தேன். அன்று உனக்கு என்ன துக்கமடி? வெகு நாட்கள் கழித்துப் பார்த்தும் ஏன் சென்றாய் அப்படி?."
என்னை மிகவும் பாதித்த வரிகள். அதே சமயம் உங்கள் மேலும் கோபம் வந்தது. அந்தப் பெண்தான் ஏதோ தயக்கத்தில் உங்களைப் பார்த்து தலையை குனிந்து கடந்து சென்றாள் என்றால், "என்னடி விஷயம்" என பதறிப்போய் கேட்டிருக்க வேண்டாமா நீங்கள்? உங்களைத் தடுத்தது எது?

உங்களை யாராவது ஏதாவது சொல்லி விடுவார்களே என்ற பயமா? அப்பெண்ணே நீ யார் என்ற ரேஞ்சில் பேசிவிடுவாள் என்ற தயக்கமா? அப்படியே கேட்டிருந்தாலும் அப்பெண் ஏதேனும் கூற மறுத்து விடுவாள் என்று நினைத்துவிட்டீர்களா? எது தடுத்தது உங்களை?

ஏன் இந்த இரட்டை நிலை? ஆண் தன் நட்பை விடாது இருக்கும்போது பெண்கள் மட்டும் ஏன் அப்படி இருக்க வேண்டும்? கடித்ங்கள், தொலைபேசிகள் எல்லாம் எதற்கு இருக்கின்றன? கணவனோ அவன் வீட்டினரோ ஏதேனும் கூறிவிடுவார்களோ என்று கற்பனையாகவோ நிஜமாகவோ ஏன் பயப்பட வேண்டும்? ஏன், ஏன் என்று இப்படிப் பல கேள்விகள்.

இப்பின்னூட்டத்தின் நகல் என்னுடைய தனிப்பதிவிலும் பின்னூட்டமாக நகலிடப்படும். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஜெயந்தி சங்கர் said...

மிகவும் நல்ல பதிவு,
வாழ்த்துக்கள்.
நன்றி
அன்புடன்,
JeyanthiSankar

அப்டிப்போடு... said...

துளசி அக்கா., நன்றி

//இதற்கும் முந்தைய பதிவிற்குமான என் எண்ணங்களை தனியே எழுதுகிறேன்//
பத்மா., எழுதுங்கள் படிக்க ஆவலாக உள்ளேன்.

//அப்படியே பெண் செய்ய நினைத்தாலும் சமூகம் விடுகிறதா? ஓய்வு பெற்ற பின்னரும் தோழியிடம் தொலைபேசியில் பேசக்கூட அனுமதி பெற வேண்டிய பெண்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்//.

நிலா., 100% உண்மை.

டோண்டு அவர்களே., அப்போது வெகு நாட்கள் கழித்துப் பார்த்தேன். அருகில் ஒரு பெரியவர் வேறு., அவள் நிற்பாள் என நினைத்த எனக்கு., கடந்து செல்லவும் அவர் முன் மறைக்கிறாள் என நினைத்தேன். எனினும் என்னுள் எழுந்த குற்ற உணர்வே இதை எழுத வைத்தது.

ஜெயந்தி, வாங்க!., உங்கள் எழுத்தின் இரசிகை நான். பின்னூட்டத்திற்கு நன்றி.

Pot"tea" kadai said...

'கண்ணதாசன் கவிஞனா?"
"இவருக்கு என்ன தெரியும் என எண்ண வைத்தது?".,
எங்க?.. எப்பிடி இருக்கிறிங்க?
உங்கள் உடலும் நம்ம **** மிஸ்தானா?

உட்பட பல கேள்விகள் இருந்தாலும் "அப்பிடிபோடு" அக்கா கேட்ட கேள்விகள் மொத்தம் 11.

//துக்க முகம் மறைத்து வாய் கொள்ளாச் சிரிப்பு முகம் காட்டி., ஏன் மறைக்கிறோம் பெண்கள் இப்படி?. ஏன் அமைதி காத்தீர்கள்., "அஞ்சுவது அஞ்சாமை பேதமை" என்று சொல்லிக் கொடுத்த உங்கள் வாய் அமிலத்தால் கழுவப்படும் வரை?.//

//அன்று உனக்கு என்ன துக்கமடி? வெகு நாட்கள் கழித்துப் பார்த்தும் ஏன் சென்றாய் அப்படி?.//

//இப்படி பெண்களில் எத்தனை பேர் செய்வோம்?.//

//நாம் தேர்ந்தெடுத்தவன் தவறானவன் என்றால் நம் மனமே ஒத்துக் கொள்ள மறுக்கிறதே?.எத்தனை போராட்டங்கள், கண்டனங்கள், கேலிகள் தாங்குகிறோம்., ஒரு தகுதியற்றவனின் கைபற்ற?//
//கணவன் என்பவனின் சின்ன செய்கை ஏன் உன் தன்மானத்தை பாதிக்க வேண்டும்?. நீயா தவறு செய்தாய்?. //
//மனைவியை தன்னில் காண்பவன் தப்பு வழி எப்படி செல்வான்?.//
//உணர்வு சுரண்டல்களைப் பற்றியே பேசுவதும் அது பற்றிய கருத்துக்கள் மட்டுமே முக்கியத்துவம் பெருவதும் ஏன்?//

இது துளசியக்காவுக்காக சும்மா தமாசு!

//சித்தாளுக்கு 50 ரூ கொத்தனாருக்கு 150ரூ வில் தொடங்கி நடிகனுக்கு கோடி நடிகைக்கு லட்சமென உழைப்புச் சுரண்டல்//.

இது முற்றிலும் சரியான தகவல் அல்லவே என்று கருதுகிறேன்.
ஆனால் சித்தாள்களில் பாலின பேதம் உண்டு என்பதை நான் நன்றாக அறிவேன்.
பெண் சித்தாள் - 60 ரூ/நாள்
ஆண் சித்தாள் - 90 ரூ/நாள்
கொத்தனார்- 150 (அது கைதேர்ந்த வேலை என்பதனால்)

ஆனால் நான் ஆண் / பெண் இருவருக்கும் சரிசமமாக 75 ரூ/நாள் என்று கொடுத்த அனுபவம் உள்ளது. இதனால் ஆண்கள் பணிக்கு வராததும் வெறும் பெண் சித்தாள்களை மட்டுமே வேலைக்கு அமர்த்திய நாட்களும் உண்டு. உண்மையில் பெண் சித்தாள்கள் ஆண் சித்தாள்களை விட அதிகமாகவும், விரைவாகவும் வேலை செய்யக் கூடியவர்கள்.
இவ்வகையான பாலின பேதம் வளர்ந்த நாடுகளில் கிடையாது என்று நினைக்கிறேன். அனைவருக்கும் சரி சமமான ஊதியமே கொடுக்கப்படுகிறது.

நடிக நடிகைகளுக்கான பேதங்கள் வேறு அடிப்படையிலானவை.
I reserve the comments. I am sorry, i have to accept that iam an MCP!:-)

முத்து(தமிழினி) said...

கருத்து சொல்றதுக்கு இப்போதைக்கு ஒண்ணுமில்லை..ஆனால் நல்ல பதிவு

ramachandranusha said...

மரம் அல்லது அப்படிப் போடு! மொததல்ல பேர ஒழுங்கா மாத்துங்க :-) கூப்பிட கஷ்டமா இருக்கு!
நான் பார்த்தவரையில் பெண்கள் தாங்களே போட்டுக் கொண்ட விலங்குகள்தான் அதிகம், அதை அவர்களே கழற்றினால்தான் உண்டு. உரிமை கொடு என்றோ, கொடுங்கள் என்று கெஞ்சிக் கொண்டு இருக்காமல், நியாயமான உரிமைகளை தாங்களே எடுத்துக் கொள்ள வேண்டும்.
சும்மா, அழுதுக் கொண்டும், புலம்பிக் கொண்டும் இருப்பதை முதலில் நிறுத்த வேண்டும். சமூகம், உற்றார் உறவினர்கள் என்ன
சொல்வார்களொ என்று பயப்படாமல் இருந்தாலே மூக்காலே மூணு சதவீத பிரச்சனைகள் தீரும்.படிப்பறிவில்லாத பெணகளுக்கு
இருக்கும் தைரியம் கூட படித்த பெண்களுக்கு எங்கே போனது?
நிறைய பேசலாம், ஆனா வேலை இருக்கு. வரேன் அப்படி போடு :-))

தாணு said...

மரம்,
பெண்களின் நட்பு ஒரு காலகட்டத்தில் தேய்ந்து மறைந்துவிடுவது, அநேகமாக ஆணாதிக்கத்தால்தான். அதுவும் தவிர இளநிலை வகுப்புடன் பிரிந்துவிடும் நட்பில் அவ்வளவு முதிர்ச்சி இல்லை என்பது என் எண்ணம். முதுகலை வரை இணைந்துசெல்லும் நட்புகள் ஓரளவு தேறி விடுகிறது. நாங்கள் கல்லூரியிலிருந்து வெளிவந்து 25 வருடங்கள் ஆகிவிட்டன. என் தோழியருக்கு பேரன் கூட வந்தாச்சு. ஆனாலும் எங்கள் வகுப்புத் தோழியரின் நட்பு வட்டம் இன்றும் நெருக்கமாகவே உள்ளது. பார்த்துக் கொள்வதே இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒருமுறைதான், ஆனாலும் பகிர்ந்து கொள்ளுதல் அடிக்கடி. ஏதேனும் மனச் சங்கடம் என்றாலும் அருகிலுள்ள கணவரிடம் சொல்வதைவிட தோழியரிடம் பகிர்ந்துகொள்வது அடிக்கடி வாடிக்கை. ஒவ்வொருவரின் கணவரும் ஒவ்வொரு `விதம்’தான். கல்லுரிப் பருவத்தில் நம் நட்பு எத்தைகையது என்பதுதான் அடிப்படை. என் தோழி ஒருத்தி மனநிலை பேதலித்த நிலையில் இருந்தபோது, சுழற்சி முறையில் ஒவ்வொருவராக அவளைச் சந்தித்து விபரீத முடிவுக்குள் செல்லாதவாறு பார்த்துக் கொண்டோம். இந்த வாரம்கூட மன உளைச்சலுக்குள்ளான என் தோழி ச்ட்டென்று கிளம்பி வந்து என்னுடன் இரண்டுநாள் தங்கியிருந்து சென்றாள், மனத் தெளிவுடன். இன்னும் நிறைய உண்டு. ஆண்களின் நட்பைவிட பெண்களின் நட்பு குறைந்ததல்ல!

பத்மா அர்விந்த் said...

இவ்வகையான பாலின பேதம் வளர்ந்த நாடுகளில் கிடையாது என்று நினைக்கிறேன். அனைவருக்கும் சரி சமமான ஊதியமே கொடுக்கப்படுகிறது--இது தவறான கருத்து. என் பதிவொன்றில் எந்த எந்த வேலைகளுக்கு ஆண்கள் ஊதியம் பெண்கள் ஊதியம் எவ்வாறூ பாடுபடுத்த படுகிறது என்று எழுதி இருந்தேன். அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த பாகுபாடு மிக அதிகம் அது தேர்ந்த வல்லுனராக இருந்தாலும் மணிக்கூலியாக இருந்தாலும்.

Dharumi said...

பெண்களின் நட்பு ஒரு காலகட்டத்தில் தேய்ந்து மறைந்துவிடுவது, அநேகமாக ஆணாதிக்கத்தால்தான். - தாணு சொல்லியது இது. முற்றிலுமாக மறுக்கிறேன். பெண்கள் தங்கள் வாழ்க்கையில் போட்டுக்கொள்ளும் வட்டங்களே காரணம். உரிமைகள் கொடுக்கப்படவேண்டியவையல்ல; எடுக்கப்பட வேண்டியவைகள்.

அப்டிப்போடு... said...

//பெண் சித்தாள் - 60 ரூ/நாள்
ஆண் சித்தாள் - 90 ரூ/நாள்//

பொட்டிக்கடை., அடடா., சின்ன விச்கயத்துல கோட்ட விட்டுட்டன் பாருங்க., எங்க வீட்டு 4, 5 காண்டராக்டர்ஸ் இருக்காங்க. ஆண் சித்தளுல்ல?.

முத்து நன்றி.

//நியாயமான உரிமைகளை தாங்களே எடுத்துக் கொள்ள வேண்டும்//.

உஷா., நானும் இதையே எப்போதும் வலியுருத்தி வருவேன். ஆனால் எல்லோருக்கும் உரிமைகளை எடுத்துக் கொள்ளும் சாத்தியமிருக்கிறதா., விரிவாக இதைப் பற்றி எழுதுகிறேன் பாருங்கள்.

//ஆண்களின் நட்பைவிட பெண்களின் நட்பு குறைந்ததல்ல//
பெரும்பாலான பெண்களைப் பற்றியே எழுதியிருக்கிறேன். திருமணத்திற்கு பிறகு நட்பை நாம் சிறிது தள்ளித்தான் வைக்கிறோம். எனக்கு நிறைய தோழிகள் உண்டு., என் திருமணத்திற்கு அழைப்பிதழ் அனுப்பாமலேயே., வேறோருவர் மூலம் கேள்விப் பட்டு மலேஷ்யாவிலிருந்து வந்த தோழி உண்டு. இதில பெரும்பான்மை பற்றியே எழுதியிருக்கிறேன். துக்கத்தை பகிர்தல் என்பது குறைவு அல்லது அத்துக்கம் அவர்களை விழுங்கும் வரையில் வெளியே தெரியாது வைப்பது அதிகம்.

அப்டிப்போடு... said...

//அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்த பாகுபாடு மிக அதிகம் அது தேர்ந்த வல்லுனராக இருந்தாலும் மணிக்கூலியாக இருந்தாலும்//,

உண்மை.

//ஏன் இந்த இரட்டை நிலை? ஆண் தன் நட்பை விடாது இருக்கும்போது பெண்கள் மட்டும் ஏன் அப்படி இருக்க வேண்டும்? கடித்ங்கள், தொலைபேசிகள் எல்லாம் எதற்கு இருக்கின்றன?//

//முற்றிலுமாக மறுக்கிறேன். பெண்கள் தங்கள் வாழ்க்கையில் போட்டுக்கொள்ளும் வட்டங்களே காரணம்//

தொலைபேசிகள் இருக்கின்றன., ஆனால் அமெரிக்காவில் வந்து வேலை பார்க்கும் பெண்ணை (பொறியியளாளர்)., அவளுடைய சொந்த அக்காவுடன் பேசக்கூடாது (அவரும் இங்குதான் இருக்கிறார்) என அடக்கி வைத்திருக்கும் ஆணை எனக்குத் தெரியும். ஆணை மீறி ஒன்றை எடுத்துக் கொள்ள., ஒரு பெண்ணிற்கு அரை நொடி போதும். ஆனால் நீங்கள் சொல்லுகிறீர்களே வட்டம்., அந்த வட்டத்தில் நிற்பதற்கு அவனைத் தாண்டிய காரணங்கள் பெண்ணிற்கு உண்டு. தன் குடும்பம் (அம்மா, அப்பா), பிள்ளைகள் இப்படி. ஆண்களின் அடக்குமுறைகள் அர்த்தம் பெறுவது பெண் என்பவள் அதற்கு கொடுக்கும் மதிப்பால். குடும்பத்திற்குள் இருந்து கொண்டு 'பெண்ணியம்' பேசும் ஒவ்வொரு பெண்ணும் அடக்கு முறையை சந்தித்துக் கொண்டுதான் பேசுகிறோம்., இதை யாராலும் மறுக்க முடியாது. விரிவாக எழுதுகிறேன் பிரிதொரு சமயம்.

ramachandranusha said...

//குடும்பத்திற்குள் இருந்து கொண்டு 'பெண்ணியம்' பேசும் ஒவ்வொரு பெண்ணும் அடக்கு முறையை சந்தித்துக் கொண்டுதான் பேசுகிறோம்., //
:-)

கல்வெட்டு (எ) பலூன் மாமா said...

மரமா இல்ல அப்படிப்போடா? நமக்கு ஒன்னுமே புரியல. என்னங்க நீங்க...ரொம்ப கொயிப்புறீக.


//நான் பார்த்தவரையில் பெண்கள் தாங்களே போட்டுக் கொண்ட விலங்குகள்தான் அதிகம், அதை அவர்களே கழற்றினால்தான் உண்டு. உரிமை கொடு என்றோ, கொடுங்கள் என்று கெஞ்சிக் கொண்டு இருக்காமல், நியாயமான உரிமைகளை தாங்களே எடுத்துக் கொள்ள வேண்டும்.சும்மா, அழுதுக் கொண்டும், புலம்பிக் கொண்டும் இருப்பதை முதலில் நிறுத்த வேண்டும். சமூகம், உற்றார் உறவினர்கள் என்ன சொல்வார்களொ என்று பயப்படாமல் இருந்தாலே மூக்காலே மூணு சதவீத பிரச்சனைகள் தீரும்.படிப்பறிவில்லாத பெணகளுக்கு இருக்கும் தைரியம் கூட படித்த பெண்களுக்கு எங்கே போனது?//

உஷா சொன்னதில் எனக்கு முழு உடன்பாடு உண்டு.

அப்டிப்போடு... said...

//:-)//

உஷா., சிரிப்பு ஒத்துக் கொண்டா., இல்லையென்றா?.,

அப்டிப்போடு... said...

கல்வெட்டு நன்றி.

பத்மா அர்விந்த் said...

ஆனால் நீங்கள் சொல்லுகிறீர்களே வட்டம்., அந்த வட்டத்தில் நிற்பதற்கு அவனைத் தாண்டிய காரணங்கள் பெண்ணிற்கு உண்டு. தன் குடும்பம் (அம்மா, அப்பா), பிள்ளைகள் இப்படி. ஆண்களின் அடக்குமுறைகள் அர்த்தம் பெறுவது பெண் என்பவள் அதற்கு கொடுக்கும் மதிப்பால்.-இது மிகச்சரி. நான் சில CEOக்கள் ஒருவித ஆதிக்கத்தில் சிக்கி கொண்டு தவிப்பதை கண்ணுற்றிருக்கிறேன். ஆனால் எல்லோருமே ஒருவித ஆதிகத்திற்கு உட்பட்டு இருக்கிரோம் என்று சொல்வதோடு எனக்கு உடன்பாடில்லை. நான் விருப்பட்டு தன்மேலுள்ள ஆதிக்கத்தை அனுபவிக்கும் பெண்களையும் சந்தித்திருக்கிறேன். தன்னிச்சையாக சக நண்பராக வாழும், முடிவெடுக்கும் திறனுடன் மகிழ்ச்சியுடன் குடும்பம் என்ற ஒரு அமைப்பில் வாழும் பெண்களையும் பார்த்திருக்கிறேன்

அப்டிப்போடு... said...

//எல்லோருமே ஒருவித ஆதிகத்திற்கு உட்பட்டு இருக்கிரோம் என்று சொல்வதோடு எனக்கு உடன்பாடில்லை//

பத்மா, நான் சொல்லும் ஆதிக்கம் வேறு., ஆதிக்கம் என்றால் என் மீது அதிகாரம் செய்வது அல்ல. எந்த அதிகாரமும் செய்யாமலேயே நம்மை ஒருவன் காயப்படுத்தலாம். நான் சொன்னது 'தட்டையாக' நிறைய பேருக்குப் பட்டிருக்கலாம். முடிவெடுக்கும் உரிமை... நிறையப் பெண்களுக்கு உண்டு. அது வேறு. அதவது நான் ஒரு பதிவெழுதிக் கொண்டிருக்கிறேன் ., என் கணவர் வந்து., கொஞ்சம் கம்பியூட்டர் கொடு (அவருக்கும் நான் எழுதுவது முக்கியம் எனத் தெரியுமென வைப்போம்)., என்று கேட்டு 'கார்ட்ஸ்'(சீட்டு ) விளையாடுகிறார் என் வைத்துக் கொள்ளுங்கள். இதை விட என்னை ஒருவன் அவமானப்படுத்த முடியாது எனறே நான் நினைப்பேன். இருவர் இருக்கும் குடும்ப அமைப்பு இதில் நண்பர்கள் போல் வாழ்பவர்கள்., என்றாலும் எங்காவது ஒரு மீறல் இருக்கவே செய்யும். தங்கமணி ஒருமுறை சொன்னார்., சுதந்திரம் என்பது தன்னந்தனியான இருப்பைக் கோருகிறது என்று. தன்னந்தனியான இருப்பு., உன்னை முழுவதுமாக விட்டு விடுதலையாக்குவது சாத்தியாமா? நான் தனியான(தனியான என்றால் தனியாக இருப்பதல்ல., அப்படி உணர்வது) உணர்வுடன் செய்யும் செய்கை அடுத்தவன்மீது ஆதிக்கமாய் விழுந்தால்....? குழப்பம்தானே. ஒவ்வொருவரும் தனக்கான உலகத்தை விட்டு வரத்தேவையில்லை என்றால் நம்மைச் சார்ந்திருக்கும் குழந்தைகளுக்கு பாதிப்புதானே?., எனவே ஆதிக்கம்... அராஜகமாகும்வரை பொறுத்துப் போகிறார்கள். இதைச் சரி என வாதிடவில்லை. எனக்கு குடும்ப அமைப்பின்மீது நம்பிக்கையில்லையென்றால் அதை விட்டு வெளியேறும் துணிச்சல் இருக்கிறது., ஆனால் என் குழந்தையின் வாழ்க்கை கருதி அதைச் செய்ய மாட்டேன். ஒவ்வொரு அடிமைத்தனமும் இப்படி ஒன்றின் மீது ஒன்றாக பின்னப்பட்டதுதான். இதற்குள் இருந்து கொண்டே என்னை முடிந்தவரை ஆதிக்கத்திலிருந்து விடுவித்துக்கொள்வது (முற்றாக அல்ல அது முடியாதது. முற்றாக வேண்டுமென்றால் பையத் தூக்கிட்டு என் வீட்டுக்குப் போவதோ., அல்லது தனியான வேறிடத்தில் என் பயணத்தை துவங்குவதோதான் சிறந்தது., ஆனால் அப்போதும் சுற்றியிருக்கும் சக்திகளை என்ன செய்ய?) என்பது மட்டுமே எனக்குத் தெரிந்த தீர்வு. ஆனால் இதை பேய்களிடம் மாட்டிக்கொண்டிருக்கும் தேவதைகளுக்கு பரிந்துரைக்க மாட்டேன்.

டிசே தமிழன் said...

மரம், உங்களின் இந்தப்பதிவும், பத்மா, தாணு போன்றவர்களின் பின்னூட்டங்களும் நிறைய யோசிக்கவைக்கின்றன. நன்றி.

ramachandranusha said...

சூப்பரா போகுது அப்படி போடு!
குடும்பம் என்ற அமைப்பில் சேர்ந்து வாழும் இருவருமே விட்டுக் கொடுத்தால்தான் சக்கரம் ஓடும். தன் உரிமையைக்கூட
கெஞ்சி கேடபது ஏன் என்று எனக்கு புரிவதில்லை. உதாரணத்திற்கு அமெரிக்காவில் இருந்து தாய்க்கு, மாதம் ஒரு முறையேனும்
பேச ஏன் கேட்டுக் கொண்டு நிற்க வேண்டும். இன்னொரு எக்ஸ்ட்ரீம் ,வீட்டில் இருந்து தன் தாயுடன் பேச பயப்பட்டு, வெளியில் இருந்து குசலம் விசாரிக்கும் கணவன்கள்!
ஆரம்பத்திலேயே கணவனோ மனைவியோ அவரவர் சொந்த விஷயத்தில் எதிராளி அதிகமாய் மூக்கை நுழைக்க அனுமதிக்கக்கூடாது.
அவரவர் தனிப்பட்ட விஷயங்களில் - தவறான செய்கைகளை சொல்லவில்லை- விட்டுக் கொடுக்கக்கூடாது. இதனால் மனம்
காயம் அடைகிறது என்ற டயலாக் எல்லாம் வரும், அதையும் காதில் போட்டுக் கொள்ளக்கூடாது :-)

அப்டிப்போடு... said...

//நிறைய யோசிக்கவைக்கின்றன//
டி.சே வருங்காலங்கள்., நீங்கள் யேசிப்பதே எங்கள் நோக்கம்.

//ஆரம்பத்திலேயே கணவனோ மனைவியோ அவரவர் சொந்த விஷயத்தில் எதிராளி அதிகமாய் மூக்கை நுழைக்க அனுமதிக்கக்கூடாது//
ஆரம்பத்திலேயே... அதைச் சொல்லுங்கள். ஆரம்பத்தில் விட்டுவிடும் பிரச்சனைகள்தான் பின்பு பூதாகரமாகின்றன.

பத்மா அர்விந்த் said...

குழந்தைகளும் வயதான பெற்றோர்களும் பெண்களைன் முடிவை ஒருவிதத்தில் கட்டுப்படுத்துகிறார்கள் என் பதிவில் கூறியபடி. உங்கள் சிந்தனை புரிகிறது. உஷா சொன்னபடி ஒவ்வொருவர் கொள்கையிலும் பிடித்தங்களிலும் அடுத்தவர் முடிவெடுக்க கூடாது என்பது என் விருப்பமும். அப்படி நட்போடு இருக்கும் ஆண்களை நான் சந்தித்திருக்கிறேன். இதில் பலர் தங்கள் அன்னை பட்ட கஷ்டம், எரிந்துபோன அக்கா என்று ஒரு சோகத்தை கொண்டு மாறியவர்கள். நன்றி உஷா, மரம். டீசே: நிறைய ஆண்கள் வலையில் சிந்திப்பதும் ஆரம்பித்திருப்பதுமே சுகமான நம்பிக்கைதரும் செய்தி

தாணு said...

நான் நட்பு வட்டத்தை maintain பண்ணும்விஷயத்தில் மட்டுமே கருத்து சொன்னேன். பொதுவான விஷயங்களில் உங்கள் கருத்து சரிதான். குழந்தைகள் ,குடும்பம், சமுதாய ஏற்பு போன்ற பல விஷயங்களுக்காக நாமாக விட்டுக் கொடுத்தே வாழும் நிலையை ஒருவித அடிமைத்தனமாகவே ஆக்கிக் கொள்வது `நம்மவர்’களின் வாடிக்கை. சூழ்நிலைக் கைதிகள்தான் நாம், ஆனாலும் நாமாக விருப்பப்பட்டு போட்டுக் கொள்ளும் விலங்கு என்பதை உணரும் அறிவு முதிர்ச்சி கூட அற்றவர்கள்தான் இந்த ஆண்கள். நமது விலங்குகள் உடைக்கப்படும்போது சிதறிப் போவது இவர்கள்தான் என்பதைக் கூட அறியாத பேதைகள். `Weaker sex’இன் பலமான அஸ்திவாரத்தில்தான் இவர்களின் வறட்டு ஜம்பக் கோட்டையே நிற்கிறது. இதைக்கூறு போட்டு பேச ஆரம்பித்தால் உங்கள் பதிவே பத்தாது!

அப்டிப்போடு... said...

நன்றி பத்மா, தாணு.