Thursday, December 29, 2005

**நாடகம் என்பது....**

நாடகம் என்பது? நடிப்பும் பாட்டும் மட்டுமல்ல அதனுடன் கூடிய இசையும் ஆகும். எங்கள் ஊரில் உள்ள சாமியை நாங்கள் எப்படிக் கும்பிடுவோம் தெரியுமா? அது கும்புடுவதல்ல, கொண்டாடுவது. நான் படித்தது 'பெரியார் மணியம்மை பெண்கள் பள்ளியில்'. நாம்தான் வாய் நிறையப் பேசுவோமா? காலையில் அனைவரும் கூடியிருக்கும் 'அசெம்ப்ளியில்' (?!) 'கடவுள் இல்லை., கடவுள் இல்லவேயில்லை '., 'கடவுளை மற... மனிதனை நினை' என அய்யாவின் பொன்மொழிகளை வாசிக்க (ஒலிப்பெருக்கியில்) சொல்வார்கள். மாலை வீட்டுக்கு வந்தால்... எங்காளு யாராவது மஞ்சப் பையோட மெதுவா வீட்டைத் தேடிக்கிட்டே வருவாரு., எதுக்கு வருவாரு தெரியுமா?., "ஊர்ல சாமி சாட்டியிருக்காக... சொல்லிட்டு வரச் சொன்னாக, எல்லாரும் பொறப்புட்டு வந்துருங்க!". ங்கிற இந்த ஒரு வரி செய்தியச் சொல்ல. நம் மண் சார்ந்த தெய்வங்கள் தெய்வங்களாக பர்ப்பதை விட., நம்மினும் மூத்த உறவாகப் பார்ப்பதே வழக்கம்.. அப்புறம் என்ன? கிளம்பிருவம்ல?. அடுத்த நாள் நாங்க சோடிச்சு, கீடுச்சு போய் இறங்குனா., ஊரே பளிச்சுன்னு இருக்கும்., சுண்ணாம்படிச்சு, வாசல்படிகளில் ஒரு முறை சுண்ணாம்பு பட்டை பிறகு செம்மண் பட்டை இப்படி மாறி, மாறி அடிச்சு பார்க்கவே ரொம்ப அழகா இருக்கும் ஊரு. வீட்டு முன்புறம் மாவிலை கட்டி., பூலாம் பூக்கள் (சிறிய வெள்ளை நிறப் பூக்கள்) சொருகிவைத்து அலங்கரித்து, வாசலில் கோலமிட்டு அதன் நடுவில் பூசணிப் பூ வைத்து கலக்கியிருப்பார்கள். நம் கிராமங்களின் வறுமையை மட்டுமே காட்டும் ஊடகங்கள் இது போன்ற பொழுதெல்லாம் தூங்கப் போயிரும் போல!). கோவிலில் பாட்டுச் சத்தம் கேட்டுக் கொண்டிருக்கும். எம்.எஸ். சுப்புலட்சுமியின் பாடல்கள் என நினைப்பீர்களேயானல் மன்னிச்சுக்கங்க! 'சித்தாட கட்டிகிட்டு.... சிங்காரம் பண்ணிகிட்டு... மத்தாப்பு...' ங்கிற பாட்டுதான் தவறாமல் கேட்கும். அப்புறம் நாமெல்லாம் கோவிலுக்குப் போகும்போது 'பொட்டு வைத்த ஒரு வட்ட நிலான்னு...' நல்ல பாட்டெல்லாம் போடுவாங்க....!
வீடே உறவினர்களால் நிறைந்திருக்கும். எனக்கு யாருன்னே தெரியாத பிள்ளைகல்லாம் கூட எங்க ஆயா மடியில படுத்திருக்குங்க. வீட்டு முன்னாடி முழவு(கொம்பு?), உருமி, தப்படித்துக் கொண்டிருப்பார்கள். வீட்டிற்குள் ஒருவர் பேசுவது இன்னொருவருக்குக் கேட்காது., கத்தி, கத்திதான் பேச வேண்டும். அந்த ரண களத்துலயும்., சிலபேர் போர்வைய மூடி படுத்திருக்குங்க!. நான் முன்பு பார்திராத ஒரு அம்மா காய் நறுக்கிக் கொண்டிருக்கும்., எங்க அண்ணிகள் ஒரு புறம் சாதம் வைத்து, வைக்கோல் போட்டு அதன் மேல் வெள்ளைத் துணி விரித்து (ஹாட்பேக்?), அதன் மேல் சாதத்தைக் கொட்டி கொண்டிருப்பார்கள். இதில் ஒரு விதயம் என்னவென்றால்., எங்க அண்ணிகளின் தம்பிகள் இந்த மாதிரி கொண்டாட்டங்களுக்கு தவறாமல் வந்துவிடுவார்கள்., அவர்களுடைய அக்காவிற்கு உதவி செய்ய. நம்ம இது எல்லாத்தையும் ஓரக் கண்ணால பார்த்துகிட்டு., வந்திருக்கிற பெருசுகளப் பார்த்து கும்பிடு போட்டுவிட்டு., அவங்க 'பெரிய பாப்பவா?., எத்தானாவது படிக்கிற?' ஏதோ கேட்கனுமேன்னு கேட்க... 'பதினாலாவதுன்னு' அவங்களுக்குப் புரியற மாதிரி கத்திச் சொல்லி., ஒரு புன்னகையப் போட்டுட்டு ரூம்குள்ள போனா., அங்க நாம எப்படா வருவம்னு உட்காந்திருக்குங்க என் அண்ணன் பிள்ளைங்க. அண்ணாச்சிகளுந்தான். காலையில் சாமி பெயரில் உள்ள பெரிய மலையை சுற்ற வேண்டும். சுற்றி களைத்து (இப்பிடிச் சொல்லக் கூடாது, சாமி கோவிச்சுக்கும்.) உக்கார்ந்திருப்பார்கள். அப்புறம் அரட்டைதான். போன முறை பார்த்ததிலிருந்து இந்த முறை பார்க்கும்வரை என்னென்ன நடந்துன்னு பேசிப்போம். அதற்குள் எல்லோரும் வேல் எடுக்க கிளம்பி விடுவார்கள். (வேல் எடுப்பது என்பது ஒரு வேண்டுதல்., இப்படி வேண்டிக்கொண்டவர்கள்., கூட்டமாகச் சென்று, ஒரு தோட்டத்தில் வேல்களுக்குப் பூசை செய்து வாத்தியங்கள் முழங்க அதை எடுத்துக் கொண்டு வந்து கோவிலில் நட்டு வைப்பார்கள்). வேலெடுத்து முடிந்தவுடன்., நட்டநடு மத்தியானத்தில் பெண்கள் அனைவரும் முன்புபோல் வாத்தியங்கள் முழங்க பொங்கல் தூக்குவார்கள். பொங்கலுக்கு வேண்டியவற்றை எடுத்துக் கொண்டு கோவிலுக்குச் சென்று., கோவிலுக்கு முன்புறம் அடுப்பு அமைத்து பொங்கல் செய்வார்கள். பொங்கிய பொங்கல் பானைகளை மஞ்சள் இலை கட்டி, பொட்டுவைத்து அலங்கரித்து கோவிலுக்குள் வைப்பார்கள். எல்லாப் பொங்கல் பானையிலிருந்தும் பொங்கல் எடுத்து சாமிக்குப் படைக்கப்படும். (இதில் எவ்வித பாகுபாடும் இல்லை). இது முடிந்தவுடன்., மஞ்சத் தண்ணி ஊற்றி..... விளையாட மாட்டோம்., ஆட்டுக்கு தெளித்து... பிறகுதான் என்ன பண்ணுவோம்னு உங்களுக்குத் தெரியுமே?. சாமி கும்பிட்டுட்டு., கொஞ்ச நேரம் அங்கிருப்பவர்களுடன் பேசிக் கொண்டிருந்தால், ஆட்டங்கள் ஆரம்பமாகும்.

காவடியாட்டம்’., கழுத்தில் காவடி வைத்து அதை சுழற்றி, சுழற்றி விழாமல் ஆடிக் கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு முன்னால் புலிவேட்மிட்டுக் கொண்டு கையில் சிலம்புடன் ஒருவரை ஒருவர் சிலம்பால் அடிப்பதும்., தன் மேல் அடிவிழாமல் தடுத்தும், சிலம்பு சுற்றியும் ஆடும் ‘சிலம்பாட்டம்’ ஆடிக் கொண்டு போவார்கள். மாலையானதும் விருந்து பரிமாறுவோம்., சுற்றி உள்ள கிரமங்களில் உள்ள தெரிந்தவர்களை எல்லாம் அழைத்திருப்போம்., நான் எனது கல்லூரித் தோழிகளையும் அழைத்துத் செல்வதுண்டு. எங்க வீட்டுல உள்ள நண்டு, சிண்டெல்லாம் பரிமாறிக் கொண்டிருக்கும்.

சிறிது இருட்டியவுடன் ‘கரகாட்டம்’., பொன்னமராவதிப் பார்ட்டி., சாமிக்கு முன்னால் சிறிய குடத்தில் நீர் நிரப்பி அதன் மேல் மஞ்சள் குங்குமத்தால் அலங்கரித்த தேங்காய் வைத்து, நையாண்டி, உருமி மேளம், தவில், நாதஸ்வரம் இசைக்க ஆடுவார்கள். இசை அதிகரிக்க, அதிகரிக்க அதிகமாக ஆடுவார்கள். ‘பொய்க்கால் குதிரை’ (புரவையாட்டம்) இராஜ ராணி போல் வேடமிட்டு நன்கு அலங்கரிக்கப்பட்ட பொய்கால் (இவர்களே கட்டையை காலில் கட்டியிருப்பார்கள்) குதிரையுடன் ஆடிக் கொண்டு வருவார்கள். இது தவிர 'தேவராட்டம்' தான் நிற்குமிடத்தை விட்டு நகராமல்., கையில் ஒரு துணியை வைத்து சுற்றிக் கொண்டு குனிந்து, நிமிர்ந்து ஆடிக்கொண்டிருப்பார்கள். மற்றும் 'கும்மி' சுற்றி நின்றோ., இப்புறமும் அப்புறமும் சரிசமமாக நின்று கொண்டு ஆடிக்கொண்டே வரும்போது இசைக்குத் தக்கவாரு தன் கைகளை தட்டுவார்கள். தேவராட்டமும்., கும்மியும் எப்போதாவது நடக்கும். பரமசிவன், பார்வதி, முருகன், பிள்ளையார் குடும்பம் ஒரு மாட்டு வண்டியில்., இராமர், லக்ஷ்மணர், சீதை அனுமார் ஒரு வண்டியில் என வேட மிட்டுக் கொண்டு வரும் வேடு பரி இதை பேச்சு வழக்கில் பாரி வேட்டை என்பார்கள். (எப்போவுமே ஆகாரத்தை சேர்த்துக்குவாங்க (நாங்களும்தான்... ஆகாரத்த சேர்த்துக்காம யாரவது இருப்பாங்களாங்கிறிங்களா?., அட இது வேறங்க) அதாவது ஆலம்பட்டி புதூர் என்பதை ஆலாம்பட்டி புதூர்ம்பாங்க., பரி வேட்டய பாரி வேட்டைம்பாங்க...). இந்த வேடுபரி நிறையக் கோவில்களில் நடக்கும்.

நன்றாக இருட்டிய உடன் நாடகம் ஆரம்பிக்கும். தோட்டம் செய்யும் 'தொட்டிய நாயக்கர்கள்' (காட்டு நாயக்கர்கள் எனவும் அழைப்பதுண்டு)., இதை ஒரு தொழிலாகச் செய்யாமல்., விவசாயமில்லா ஓய்வுக் காலங்களில் இந்த நாடகங்களை செய்கிறார்கள். 'வள்ளி திருமணம்'., 'பாசு பதக் கணை', 'அர்ஜூனன் தவசு', 'பொன்னர் சங்கர்' போன்ற நாடகங்கள் நடக்கும். வள்ளி திருமணம் நடக்கும்போது பாடும் 'மேயாத... மான்...' என இராகம் மாற்றி, மாற்றி ஒரு மணி நேரம் பாடுவது மிகப் பிரபலம். 'பொன்னர் சங்கர்' போன்ற நாடகங்கள் நடக்கும் போது., நடிப்பவர்கள் விரதமிருந்து நடிப்பார்கள். மாகாமுனி வேடமேற்று நடிப்பவர்கள் முதலில் மேடையில் தோன்றுபோதே அவர்களுக்கு அருள் வந்துவிடும் பின்பு ஒரு கோழியை கடித்து உணர்வு பெற்று நடிப்பார்கள். பெரியக் காண்டியம்மன் மூங்கில் மரத்தின் மேல் தவம் புரிவதை சொல்ல.. உண்மையிலேயே மூங்கிலின் உச்சிக்கு ஏறி நடிப்பார்கள். அந்த மரம் பின்பு ஏலம் விடப்படும். குழந்தைக்காய் காத்திருப்பவர்கள் ஏலத்தில் எடுப்பார்கள் அல்லது தற்போதுதான் மழலை கேட்பவர்கள் அம் மூங்கிலில் தொட்டில் கட்டி., குழந்தையை தூங்க வைப்பார்கள். சில சமயம் சமூக நாடகங்களும் நடப்பதுண்டு "அரியலூரு ரயிலு வண்டி கண்ணம்மா... என் அங்கமே பதறுதடி பொன்னம்மா..." என்று பாடி மக்களை அழ வைப்பதும் நடந்திருக்கிறது. நாடகம் முடிய காலையாகிவிடும். திருவிழாவும் நிறைவுறும். இதில் சில விதயங்களை விடப் பட்டிருக்கலாம் என்றாலும் இப்பதிவை நான் எழுத நினைத்தது வேறு காரணத்திற்காக....., இப்படி அருமையாக கொண்டாடப்பட்டன திருவிழாக்கள். சினிமா....வந்துச்சு. பஞ்சாயத்து டீ.வி வந்துச்சு., இப்போ கேபிள். ஏர் பூட்டி சேற்றில் உழன்ற கால்கள்., டிராக்டர் மேல் கம்பீரமாக அமர்ந்த போது கவலை கொள்ளவில்லை. ஆனால் என்னவோ வள்ளி திருமணமும்., அர்ஜூனன் தவசும்., 'நாட்டாமை'யாகவும்., 'எஜமானாகவும்' மாறும் போது மகிழமுடியவில்லை. எத்தனை கலைகள் நம்மிடையே?., பொறக்கும் போது தாலாட்டு... போகும் போது கூட ஒப்பாறி., 'ஒயிலாட்டம்'னு., பாட்டும்., ஆட்டமுமே தன் மகிழ்ச்சி மற்றும் துக்கத்தின் வெளிப்பாடாக கொண்டிருக்கிறோம் நாம். சின்னக் குழந்தை கையிலிருக்கிற பொம்மையை திருப்பி, திருப்பி பார்க்கிற மாதிரி., இதோ மீண்டும் சொல்றேன் பாருங்களேன்., தப்பாட்டம், காவடியாட்டம், சிலம்பாட்டம், கரகாட்டம் (இதில் பல வகையிருக்குது சட்டிக் கரகம், ஆட்டக் கரகம் இப்படி), தேவராட்டம், குரவையாட்டம், கும்மி, ஒயிலாட்டம் (மாடு, மயில் மாதிரி ஆடுவது., தப்புடன், கொம்பும் கலந்த இசை இதற்கு) இதில்லாம தமிழ் நாட்டோட பல பகுதிகளில் பொம்மலாட்டம்., கூத்து., வில்லுப் பாட்டு மற்றும் நாடகங்கள். எவ்வளவு செல்வங்கள்?., கேரளாவில் கூட அவர்களது பாரம்பரிய கலைகளான கதகளி, மோகினியாட்டம், ஒட்டந்துள்ளல், செண்டு மேளம், சாக்கியர் கூத்து, கோடியாட்டம், கும்மி(இங்குமுண்டு)., படயாணி, தேய்யம், திரா போன்றவை பல பயிற்சிப் பட்டறைகளாலும்., அம்மக்கள் தங்கள் கலைகளின்பாற் கொண்ட அன்பாலும் காப்பற்றப் பட்டு, வரும் தலைமுறைக்கு கற்றுக் கொடுக்கப் பட்டு வருகிறது. இங்கும் கூத்துப் பட்டறை., அறிவொளி இயக்கத்தின் அரசு திட்டத்தை விளக்கும் நாடகங்கள் (இப்போதும் உள்ளதா?)., பிரளயன் அவர்களின் வீதி நாடகங்கள் ஆகியன நாடகத்தின் தொய்வை சிறிது சரிசெய்கிறது., ஆனால் மற்ற கலைகள்?., சிலர் எங்கள் பக்கம் நடத்துகிறார்கள். திண்டுக்கல், வடமதுரைப் பக்கம் நாடகங்களையே பிழைப்பாக கொண்ட நாடக கம்பெனிகள் இருந்தன., தற்போது என்னவானதோ?.
இங்கு வெர்ஜினியாவில் ‘Willamsburg’ என்றொரு இடம் உண்டு., 200 வருடங்களுக்கு முன்னார்., எப்படி ஐரோப்பியர்கள் இங்கு வந்தார்கள்., என்னென்ன உபயோகித்தார்கள்?., அவர்கள் உபயோகப் படுத்திய துப்பாக்கிகளிலிருந்து... சோப்பு... சீப்பு வரை இங்கு வைத்திருக்கிறார்கள். கிணற்றுடன் கூடிய வீடுகள் அங்குண்டு., அங்கு வேலையில் இருப்பவர்கள்., 200 வருடங்களுக்கு முன்னால் இருந்த ஐரோப்பியர்கள் போல உடையணிந்திருப்பர். இப்படி அந்த ஊரை ஒரு நினைவிடமாகவே காப்பாற்றி வருகின்றனர். அவர்கள் வந்து இங்க பண்ணுனாங்க?., செவ்விந்தியர்களை விரட்டியும்., போர் புரிந்தும்., தான் ஒடும் வரை உள்ள நிலம் அனைத்தும் எங்களுக்கு சொந்தம் என்று கூறி செவ்விந்தியர்களை ஏமாற்றினார்கள். பாருங்கப்பா.... அடுத்தவன அடிச்சுப் புடுங்குனத., 200 வருடமா நினைவுல வச்சு கொண்டாடுறாங்க... நம்ம முன்னோர்களால்... நாம் மகிழ்ச்சியாக இருக்க ஏற்படுத்தப் பட்ட., இயற்கையோடு இயைந்த கலைகளை அறிவியல் பூதத்தின் வாய்க்குள் திணித்துவிட்டு.... எப்படியிருந்த நாம....இப்ப 'மன்மத ராசா'க்களை சகித்துக் கொண்டிருக்கிறோம்!!!.

15 comments:

ramachandranusha said...

+

ramachandranusha said...

தமிழ் மணத்துல லிஸ்ட் ஆவலையாம் இல்லே, அப்புறமா வந்து குத்துரேன் :-)

துளசி கோபால் said...

ஆமாம்.இப்படிச் சொல்லிக்கிட்டேப்ப்போனா, எனக்கு கொசுவர்த்தி வாங்கியே காசு தீந்துரும்லெ?

மு. சுந்தரமூர்த்தி said...

மரம்,
படிக்க சுவாரசியாமாக உள்ளது. ஊரில் இருக்கும்போது எப்போடா இந்த ஊரை காலி செய்துவிட்டுப் போகலாம் என்றிருந்தது. வெளியேறிய பின் பழைய ஏக்கங்கள் மனதைப் பிடுங்குகிறது. எனக்கும் என் கிராம வாழ்க்கை அனுபவங்களை எழுத பல முறை நினைத்து விட்டதுண்டு. இந்த மாத உயிர்மையில் 'வெளி' ரங்கராஜன் புரிசை கூத்துத் திருவிழாவைப் படித்தபிறகு 'தெருக்கூத்து' அனுபவங்களை எழுத ஆரம்பித்தேன். பாதியில் நிற்கிறது.

Priya said...
This comment has been removed by a blog administrator.
வசந்தன்(Vasanthan) said...

நல்ல பதிவு.
எனக்குக் கூத்துக்களென்றால் கொள்ளைப் பிரியம்.
இப்போதெல்லாம் விடிய விடியக் கூத்துக்கள் நடப்பதில்லை. காலத்திற்கேற்ப மாறிவருகின்றன.
மக்களிடம் கருத்தைச் சொல்ல, சிந்திக்க வைக்க சிறந்தவடிவம் வீதிநாடகம்(வன்னியில் 'தெருக்கூத்து' என்ற சொல் மறைந்து, 'வீதிநாடகம்' என்ற சொல் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுவிட்டது.). அன்பேசிவம் படத்தில் சிறுகாட்சியொன்று வரும்.

போர்க்காலத்தில் மக்களைச் சோர்வடையாமல் வைத்திருப்பதற்கும், பரப்புரைக்கும், ஆட்சேர்ப்புக்கும் இவ்வடிவம் வன்னியில் அதிகம் பயன்படுத்தப்பட்டது. ஒலிவாங்கி, ஒலிபெருக்கிகளென்று எந்த சாதனங்களுமின்றி மக்களோடு நேரடியாகப்பேசும் கலையிது.
ஆனாலும் பொருளாதார வர்க்கங்களைப் பொறுத்தே கலைகளும் இருக்கின்றன என்பது உண்மை.

அப்டிப்போடு... said...

உஷா, நன்றி.

//கொசுவர்த்தி வாங்கியே//

:-))

//எனக்கும் என் கிராம வாழ்க்கை அனுபவங்களை எழுத பல முறை நினைத்து விட்டதுண்டு//
சுந்திர மூர்த்தி., எப்போதாவது விடுமுறைக்கு கிராமங்களை எட்டிப் பார்க்கும் நாங்கள் எழுதுவதை விட நீங்கள் எழுதுவது மேலானதாக இருக்கும். எழுதுங்கள். //'தெருக்கூத்து' அனுபவங்களை எழுத ஆரம்பித்தேன்//., முழுமையாக, எழுதிப் பதியுங்கள். வெறும் தியரிகளை எழுதிக் கொண்டிருப்பதை விட உண்மையான நம் அனுபவங்களை எழுதுவது அதிக பயன் கொடுக்கும். அந்த அனுபவங்கள் நமக்கு நேர்ந்ததாலேயே அதைச் சொல்லும் உரிமை நமக்குண்டு. ஆவலாக எதிர் பார்க்கிறேன் உங்கள் 'தெருக்கூத்து' பற்றிய அப்பதிவை.

அப்டிப்போடு... said...

ப்ரியா எப்படி இருக்கீங்க அம்மணி?. உங்கள் பின்னுட்டம் புரிந்து கொள்ள முடியவில்லை. யுனிக்கோடு இல்லயாட்டம் இருக்கு.

//எனக்குக் கூத்துக்களென்றால் கொள்ளைப் பிரியம்//.

வசந்தன் நிசம்தானா வுக்கு நீங்க கொடுத்த பின்னூட்டத்தில்., வசந்தனுக்குப் பிடித்ததும் வரும் என இதைத் தானப்பு சொன்னேன்.

Priya said...

மரம், மிக அருமையான பதிவு. கிராமங்கள் அடையாளமிழக்க மிக முக்கியமான காரணமான கேபிள் டிவியும், அதன் விளைவான திரைப்படமோகமும் கிராம வாழ்க்கையில் இனி பிரிக்கவே முடியாத அங்கங்களாகி விட்டன. இந்நிலை மாறும்வரை நமது பாரம்பரியக் கலைகளை வளர்த்தெடுக்கும் சாத்தியம் மிகக் குறைவே! :-(

நன்றாக இருக்கிறேன் மரம். அதிக வேலை, உடல்நிலை காரணமாக இந்தப் பக்கம் வரமுடியவில்லை.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

மணியன் said...

கலக்கலான, கலங்கவைக்கும் பதிவு. எங்கே போகிறோம் ?

அப்டிப்போடு... said...

//கிராமங்கள் அடையாளமிழக்க மிக முக்கியமான காரணமான கேபிள் டிவியும், அதன் விளைவான திரைப்படமோகமும் கிராம வாழ்க்கையில் இனி பிரிக்கவே முடியாத அங்கங்களாகி விட்டன//

உண்மை பிரியா., என்ன ஆச்சு? உடல் நிலையில் கவனம் கொள்ளுங்கள்.

//எங்கே போகிறோம்?//
மணியன், இதற்கான விடை தேடல் முக்கியம்.

குமரன் (Kumaran) said...

நல்லா எழுதுறீங்க அக்கா. இந்தப் பதிவப் படிச்சதும் எங்காளுக ஆடுற தீபகேளிக் கோலாட்டம் தான் நினைவுக்கு வந்துச்சு. ஆம்பளைங்க தான் ஆடுவாங்க. ஒரு குத்துவிளக்கை எல்லாப் பக்கமும் திரி போட்டு ஏத்திவச்சு ராத்திரி ஒம்போது மணிக்கு ஆரம்பிச்சாங்கன்னா காலைல அஞ்சு மணியாகும் ஆடிமுடிய. முக்காவாசி கண்ணனைப் பத்தித் தான் பாடுவாங்க. விஜயலக்ஷ்மி நவநீதகிருஷ்ணன் குழுவினர் நடத்துற கலைநிகழ்ச்சிகள்லயும் அந்த கோலாட்டத்தைப் பாத்திருக்கேன். அப்புறம் எங்க வீட்டு பக்கத்துல இருக்கிற கிருஷ்ணன் கோவில்ல எந்த மாசம்னு நினைவில்ல, ஏதோ ஒரு மாசத்துல ஒரு வாரம் 'பசவண்ணா'ன்னு ஒன்னு கொண்டாடுவாங்க. பொம்பளைப் புள்ளைங்களை மட்டும் தான் அந்த ஒரு வாரமும் கோவிலுக்குள்ள விடுவாங்க. அவங்க கோலாட்டம் ஆடுவாங்கன்னு எங்க வீட்டு புள்ளைங்க சொல்லித் தெரியும். அப்ப அவங்க அலங்கரிச்சுக்கிட்டுப் போறதைப் பாக்கணுமே.

Thangamani said...

//எங்கள் ஊரில் உள்ள சாமியை நாங்கள் எப்படிக் கும்பிடுவோம் தெரியுமா? அது கும்புடுவதல்ல, கொண்டாடுவது.//

இந்த வரியே அசத்தல் மரம். கொடுத்த காசு போச்சு :)

வழிபாடு என்பது கொண்டாட்டம் என்பதாக இருந்த போது உண்டான கலைகள் வேறு தன்மையானவை.

அவைகள் மனிதனின் உள்ளுறைந்த உரத்தை, ஆளுமையை அங்கீகரித்து தெய்வ நிலைக்கு உயர்த்தும் ஆன்மீகக் கூறுகளைக் கொண்டிருந்தன. அப்படியான கலைகள், விழாக்களில் இருந்து வழிபாடு பிரிந்து (பிரிக்கப்பட்டு) வெறும் புரியாத பூசனைகள், அச்சமும், புற ஒழுங்கும் நிறைந்த உபாசனைகள், மடத்தனமான சடங்குகள், வேள்விகள் என்று ஆன போது மனிதன் சிறுமைப்பட்டு போய்விட்டான். அவனது கலைகள் ஆன்மீகப் பக்கத்தை இழந்து வெறும் திரைக்கூச்சல்களாக மாறிவிட்டன.

எல்லா மக்கள் கலைகளையும்

மு. சுந்தரமூர்த்தி said...
This comment has been removed by a blog administrator.
மு. சுந்தரமூர்த்தி said...

மரம் வளர்ந்து விண்ணைத் தொட்டுடிச்சி போலிருக்குது. நேற்று இந்த மரமண்... oops.. எனக்கு உறைக்கவில்லை. இன்று தமிழ்மணத்தில் எங்கே பார்த்தாலும் மரம் முளைத்துள்ளதைப் பார்த்தபிறகு தான் தலைப்புகளில் இந்தப் பக்கம் இரண்டும் அந்தப் பக்கம் இரண்டுமாக இருக்கும் குறிப்பான்கள் உணர்த்தின.