Tuesday, November 29, 2005

வலைபதிவுகள்

டிசே தமிழன்.,
இத்தனை சிறிய வயதில் எத்தனை தெளிவு? என என்னை இவரது ஒவ்வொரு பதிவும் வியக்க வைக்கும். அம்பை, சாரு நிவேதிதா, பாமா, ப.சிங்காரம், ஜெய மோகன், சால்மா மற்றும் புலம் பெயர்ந்த எழுத்தாளர்கள் ஜேசுதாசன் உள்ளிட்டோர், ஈழ எழுத்தாளர்கள் ஷோபா சக்தி, சி.புஷ்பராஜா சுமதி ரூபன், காலஞ் சென்ற க்ஷ்தூரி, சிவரமணி போன்றவர்களைப் போல் இவரிடம் தன் படைப்பால் மாட்டிக் கொண்டவர்கள் ஏராளம். (நிறைய பேர்கள் விடுபட்டிருக்கலாம்., இவர் வாசித்தவர்களை எழுதினால் இந்தப் பதிவு பத்தாது). டி.சே ஒரு தேர்ந்த விமர்சகர், சிறந்த ரசிகர், நல்ல படிப்பாளி மற்றும் படைப்பாளி. இரண்டு வலைப் பதிவுகளில் டி.சேயின் எண்ணங்கள் வண்ணக்கோலங்களாய் வருகின்றன.

இவரது பரந்துபட்ட வாசிப்பனுபவம்., இசை இரசனை, திரைப் படத் திறனாய்வு போன்றவை முன்னதில் நிரம்பிக் கிடக்கின்றன. சில பதிவுகள் அவரைப் பற்றியும், ஈழ மண்ணில் கொண்ட நேசமும் அதன் நினைவுகளுமாய்.... எவ்விதப் பாசாங்குமின்றி தன் வயதுக்குரிய தேடலில் இருந்து அனைத்தையும் முன்வைக்கிறார். பின்னதில் படங்காட்டல்தான்., பயமுறுத்தலும் உண்டு "சுந்தர ராமசாமி -நினைவஞ்சலிக் கூட்டமும், தேவையில்லாச் சில குறிப்புக்களும்" இப்படி.
//பெண்ணுக்கு சமுகம் வழங்கும் மட்டுபடுத்தப்பட்ட சுதந்திரம், சாமர்த்திய வீடுகள், விதவைகள் வாழ்வு எனப்பல பெண்ணிய மனநிலையில் இருந்து ஒரு தசாப்பத்திற்கு முன் எழுப்பப்பட்ட கேள்விஅலைகள் இன்னமும் அதிர்ந்து கொண்டே இருப்பது நமது சமுகத்தின் சோகம்//
//உறவொன்று முகிழ்வதற்கு
காரணங்கள்
நூறு அரும்பவேண்டும்
ஒரேயொரு சறுக்கல் போதும்
நாம் யாரோ என்றுஎல்லாம் உதறிப் போவதற்கு.//
சி.புஸ்பராஜா எழுதிய, 'ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்'
//சி.புஸ்பராவாவின் இந்த நாவல், எமது போராட்டத்தின் பல சிடுக்குகளை இழைகளாகப் பிரித்துபோட்டிருக்கிறது. சுயவரலாற்று நாவல்கள் பலவற்றிற்கு உள்ள மிகப்பெரிய குறைபாடு என்னவென்றால், எழுதுபவர் தன்னை வரலாற்றில் நேர்மை உள்ளவராகக் காட்ட அதீதமாக முனைவதுதான். அந்தக்குறைபாடுடன் தான் இந்த நூலையும் வாசிக்கவேண்டியிருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.//
வரிகள் பேசின.... டிசேவைப் பற்றி...
icarus prakash
மூத்த வலைப்பதிவாளர்(சண்டைக்கு வரப் போகிறார்). ரொம்ப பெரிய ஆள்., பேட்டி எடுத்திருக்கிறார். இவருடைய கதைகள் கல்கில வந்திருக்கு., நெடுநாள் வலைபதிபவர்களுடன் நீடித்த தொடர்பு கலந்துரையாடல், அப்புறம் குறும்பட பட்டரை அப்படி, இப்படின்னு கலக்கிட்டு இருக்கிறார். இவருடைய பதிவுகள் இங்கே.
இவருடைய பதிவிலும் விமர்சனங்கள் கட்டுரை, கதை, கவிதை மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என விரிகின்றன.

//நம்முடைய வாழ்க்கையின் அடிப்படையை அசைத்துப் பார்க்கும் விஷயங்களைத் தவிர்த்து விட்டு, சும்மா சலனம் ஏற்படுத்தக் கூடிய விஷயங்களை மட்டுமே , தன்னுடைய பாணியில் விமர்சனம் செய்யும் கட்டுரைகள் அடங்கிய தொகுதி இது// - இப்படி கறரான விமர்சன பார்வை.
கலைஞர் கருணாநிதி பேட்டியொன்றில்.,
//கல்கி : உங்களுக்கு கார் ஓட்டத் தெரியுமா?
கலைஞர் : இல்லை. அந்த முயற்சியில் நான் ஈடுபடாமல் இருப்பது, மக்கள் மீது எனக்கு உள்ள அன்பைக் காட்டுகின்றது //- இப்படிப் பட்ட இரசனை.
//பாரதியும், செல்லம்மாவும் ஒன்றாக வாழ்ந்த அந்த காலகட்டத்துலே?
எல்லார் மாதிரியும் தரையில நடக்காம, இவர் மட்டும் ஏன் இப்படிவானத்துல பறக்கறார் ன்னு அவங்க செல்லம்மா நெனைச்சிருக்க துளி கூட வாய்ப்பே இல்லீங்களா?//
- இப்படி நகைச் சுவை.
//ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு திசையில் இருந்தார்கள். எலக்ட்ரானிக்ஸ் படித்தவன், தமிழ் நாடு போலீஸில் சப்.இன்ஸ்பெக்ட்டராக இருக்கிறான். பிஎச்டி செய்ய ஆசைப்பட்டவள், ஹோம் மேக்கராக இருக்கிறாள்.கம்ப்யூட்டரே வேணாம் என்று ஓடி, எம்பிஏ செய்தவன், ஸா•ட்வேர் கம்பனி வைத்திருக்கிறான். வருஷா வருஷம் முதல் மார்க்கு வாங்கும் தீனா, சூரியன் எ•ப்எம்மிலே ரேடியோ ஜாக்கி. இன்னொரு கேஸ், ஏபிஎன் ஆம்ரோவிலே எக்ஸிக்யூட்டிவ்,. என் கதையைக் கேக்கவே வேணாம் :-)// – இப்படி ஒரு நகைமுரண்.
//எந்த ஒரு விஷயத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றாலும், அதற்கு தகுந்த புத்தகம், ஆங்கிலத்தில் உண்டு. மோட்டார் சைக்கிள் மெக்கானிஸத்தில் இருந்து முதலாளித்துவத்த்தின் சாதகபாதகங்கள் வரை, புகைப்பட இயலில் இருந்து, புத்தப்பதிப்புக் கலை வரை, ஆர்னித்தாலஜியில் இருந்து அமெரிக்க கலாசாரம் வரை என்று பலதும் ஆங்கிலத்தில் உண்டு. தமிழில்?// – இப்படியொரு (என்னுடையதும் இது) ஆதங்கம்.
//இணையத்தில் எழுதத் துவங்கி, இணையத்தில் மட்டுமே எழுதிக் கொண்டிருக்கும் மற்ற நண்பர்களான பாஸ்டன் பாலாஜி, ஹரன்பிரசன்னா, பி.கே.சிவக்குமார், பத்ரி, மூக்கு சுந்தர், கே.வி.ராஜா, மஸ்கட் சுந்தர், மதி, மீனாக்ஸ், காசி, பவித்ரா, சுவடு ஷங்கர், போன்றவர்களும், இணையத்தில் எழுதுவதன் கூடவே, அச்சுப் பத்திரிக்கைகளில் எழுதி, தமிழ் இலக்கியத்தில் ஒரு புதிய தலைமுறை தோன்ற காரணமாக இருக்க வேணும் என்பது என் ஆவல்//. -இப்படியொரு நேச ஊக்குவிப்பு.

என இவர் பதிவில் எனக்குப் பிடித்ததை சொல்லிக் கொண்டே போகலாம்.
அறிமுகம்
'' வருமானம் போனாலும் தமிழ் மானம் போகக்கூடாது '' என்பதை உயிர்மூச்சாய் கொண்டு இயங்கும் இலட்சியக் கவிஞர் அறிவுமதி அவர்களுக்காக அவரது அபிமானத் தம்பிகளால் துவங்கப் பட்டிருக்கிறது இவ்வலை தளம். . அறிவுமதி பற்றிய திரைத் துறையினரின் கருத்துக்கள், அவரது 'நீலம்' குறும்படம் பற்றிய செய்தி, அவருடன் நேர்காணல், அவரே சாரல் நீர், காற்று, பூத்த நெருப்பு என அனைத்தும் அறிவுமதி பற்றிதான்.
நடிகர்களுக்கான வலைதளம் பார்த்திருக்கிறேன். இங்கு ஒரு கவிஞனுக்கு துவங்கியிருக்கிறார்கள். வரவேற்கிறேன்., அறிவுமதி அவர்களைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ளும் ஆர்வம் உள்ளதினால்.

Sunday, November 27, 2005

கலைஞர் கருத்து

கலைஞர் வாயைத் திறந்தார் டிக்கிடி., டிக்கிடின்னு தமிழ் மணத்துல மூணு பதிவு. பொறுங்க! நான் அதை குறையெல்லாம் சொல்லல!!. எங்கூரு மிதக்குது.!, எனக்கு அதுக்கு நேரமுமில்ல. எனக்குத் தோணுன கேள்விகள மட்டும் கேட்டுட்டுப் போயிட்டு வாரேன்.

1. அது ஏன் கலைஞரைப் பற்றி பேசும் போது மட்டும்., எப்பவும் ஆரம்பத்துல இருந்தே தொடங்குறிங்க?. கல்கி அவர்களின் வரலாற்று நாவல் மாதிரி..., திரும்பத் திரும்ப எம்.ஜி.யார மலையாளின்னது., அவர கட்சியவிட்டு வெளியேத்துனது., இவ்வளவு காலம் கழித்தும் இந்த விதயத்துக்கு, நேத்துதான் நடந்த மாதிரி உணர்ச்சிவசப் படுகிறீர்களே அது எப்படி? என்னாத்துனால?

2. கலைஞர் கருத்து சொன்ன இந்த விவகாரம் அவர் சொன்ன 'ரூட்ல' போகணும்னுதான., வேண்டாத பெரியாரை... வம்படியா துணைக்கு அழைச்சாங்க..... குஷ்புவின் நிலை கண்டு கொதித்தவர்கள். நம்ம நாட்டுல பெண்களைப் பற்றியும்., பெண் சுதந்திரத்தைப் பற்றியும் பேசாத தலைவர் யாரு? ஆனா பெரியாரை மட்டும் துணைக்கழைத்து ஒரே கல்லுல என்னாத்த அடிக்கப் பாத்தாங்க?.

4. 1977ல தி.மு.க தோற்றது இப்ப நினைத்து பெரு மகிழ்ச்சி அடைகிறீர்கள். 1950 ல வந்த வாதம் இப்ப எடுபடாது., இந்த வாதத்த கிளப்புனியோ உன் அரசியல் வாழ்வு அம்புட்டுதான்னு பயமுறுத்துகிறீர்கள். சமன்பாடுகளை சமன் செய்து வெளியிட்டு எதை நிரூபணம் செய்கிறீர்கள்?

5. பஞ்சம் வந்தப்ப., மக்கள் பட்டினி கிடந்தபோதெல்லாம் ஆயிரம் அறிக்கைகளை கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டு இருக்கிறது. அதெற்கெல்லாம் இவ்வளவு முக்கியம் கொடுத்து பதிவிட்டிருக்கிறீர்களா?

6. திருச்சில வெள்ளம் கரை புரண்டு மக்கள் அவதி டி.வியில் காணச் சகிக்காததாய் கண்ணீர் வர வைக்கிறது. அதைவிட இந்த விதயம் அவ்வளவு முக்கியமானதா?. குஷ்புவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தால்., அதிரடி படைக்கு எதிரா ஆர்ப்பாட்டம் பண்ணுனிங்களா?ன்னு டக்கு, டக்கு கேள்விகேட்குற நீங்க இதைக் கொஞ்சம் யோசிச்சுப் பாப்பிங்களா?
பின்குறிப்பு : உணர்ச்சிவயப் படாமல்., ஆரோக்கியமான முறையில் மட்டுமே பின்னூட்டம் இடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Thursday, November 24, 2005

அஞ்சலி

மொத்தக் கட்டுரை இங்கே : http://www.charuonline.com/kp172.html

கிர்கிஸ்தான் என்ற தேசத்தில் அஸ்க்கர் அக்காயேவ் என்ற பெயர் கொண்ட ஒரு எழுத்தாளர் இறந்து போனார் என்ற செய்தியைப் பத்திரிக்கையில் படிக்கும்போது எப்படி உணர்வேனோ அந்த அளவில்தான் சுராவின் மரணம் என்னுள் பதிந்தது.

என்னை அவரிடம் இருந்து தூர விரட்டியது மனித உறவுகளில் அவருக்கு இருந்த 'வர்த்தக' அணுகுமுறை.

சுராவைப் போன்ற ஒரு பலஹீனமான எழுத்தாளரை தங்கள் ஆதர்ஸமாகக் கொண்ட எழுத்தாளர்கள் எப்படி ஒரு காத்திரமான படைப்பை உருவாக்க முடியும்?.

சுந்திர ராமசாமியின் மரணத்தினால் பதற்றமுறாத நான், தமிழ் எழுத்தாளர்கள் அவரது மரணத்தை எதிர்கொண்ட விதத்தைக் கண்டு மிகுந்த பதற்றமடைந்தேன்.

உண்மையில் சுராவின் மரணம் ஜெயமோகனின் விஷ்ணுபுரம் வெளிவந்தபோதே நிகழ்ந்துவிட்டது. ஜெயமோகனின் பூதாகரமான காபாலிகச் செயல்பாடுகள் சுரா போன்ற British Gentleman ஐ நிலை குலையச் செய்து விட்டன.

ஒரு கட்டத்தில் மம்மி தனது பூதாகரமான வாயைத் திறக்கும் போது லட்சக்கணக்கான தேனீக்கள் அதன் வாயிலிருந்து புறப்பட்டு வரும். ஜெயமோகனுக்குச் சொற்கள்.
மூக்கைப் பிடித்துக் கொண்டு... பின் நவீனத்துவ சாக்கைடைகளுக்குள் நுழைந்தால்... இப்படிப் பட்ட பூக்களையும் பார்க்கலாம் போல. ஆனால்... சாருவின் அடிமட்ட மக்களுக்கான குரல் எப்போதும் தெளிவாகவே ஒலிக்கிறது, அவர் பார்க் ஷெரட்டனில் (டீக்கடயாமப்பா...!) தண்ணியடித்தாலும்.
ஜெயமோகனின் அஞ்சலி இங்கே : http://www.thinnai.com/ar1118052.html
"இந்த லாப்டர் இன நாய்கள் இயற்கையிலே அற்புதமான படைப்பு. மனிதனின் மன நிலைகளை இத்தனை நுட்பமாக உள் வாங்கிக் கொள்ளக் கூடிய, ஊணர்வு ரீதியாக இத்தனை ஆழமாக நம்முடன் இணையக் கூடிய இன்னொரு உயிர் பூமியில் இல்லை. கரடி போன்ற கரிய உடலும், ஒளிரும் மனிதக் கண்களுமாக அது உள்ளே வந்து வாலாட்டி....."

இரண்டு நாட்கள்... இழப்பில் பாதிக்கப் பட்டு தூங்காத ஆள்., இவ்வளவு இழப்பிலும் ஒரு நாயைப் பார்த்து., அதன் உருவத்தை, பிரியத்தை நினைத்து புலாங்கிதம் அடைய முடியுமென்றால் அது எழுத்தாளன் என்ற சிறப்பு பிறவிக்கு மட்டுமே முடியும். உன்னை மாதிரி மரணத்தை கேலி செய்யும் மண்டால் இது முடியுமா? என்று என் மனசாட்சி வேறு என்னைக் கொல்கிறது.
சரி., இதைப் போல எங்கள் ஊருக்குப் பக்கத்தில் ஒருவர் இறந்த போது. கதறித் துடித்து அழுத ஒருவரைப் பார்த்து (இறந்தவருக்கு கடன், கிடன் கொடுத்திருப்பாரோ?) இவ்வளவு அழுகின்றாரே என நினைத்து., அவர் கொஞ்சம் ஆசுவாசமானபின்., சரி... விடுங்க... அவர் இன்னைக்கு ... நம்ம நாளைக்கு... என என் தத்துவத்தை ஆரம்பித்த போது சொன்னார்., "எப்படியோ போக இருந்தவன கரையேத்தி விட்டாரு., சொந்தமில்ல... பந்தமில்ல... பொட்டிக் கடை வையிடான்னு வழிகாட்டி வாழ வச்சவருன்னு மீண்டும் அழ ஆரம்பித்தார். வெறும் வாய் வார்த்தை தந்த வாழ்க்கை. தூக்கி விட்டவர்கள் போனதும் சூட்டோடு புத்தகம் எழுதி காசு பார்க்கும் புத்திசாலித் தனமில்லா, உண்மையான நேசமும், பாசமும் இன்னும் சாகாமல்தான் இருக்கிறது. ஆனால் அது தாளில் 'மை' ஊற்றி அச்சடிக்கப் பட்டு அல்ல.


Wednesday, November 16, 2005

அது ஒரு கனாக் காலம்

அது ஒரு கணணி பயிற்றுவிக்கும் ஒரு பயிற்சி நிறுவனம்., ஒரு புகழ் பெற்ற(?!) நிறுவனத்தின் franchise (இதுக்குத் தமிழ் உண்மையாவே தெரியலை!) எடுக்கப் பட்டது. திடீரென ஒரு நாள் சென்னையிலுள்ள மண்டல அலுவலகத்திலிருந்து ஒரு சந்திப்பு (மீட்டிங்) ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. மேலாளர் என்ற முறையில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டுமென்று எனக்கு கடிதம் வந்திருந்தது. சென்னையில் மூன்று இடங்களில் உள்ள அலுவலகங்கள், திருச்சி(நாங்கள்), மதுரை மற்றும் சில ஊர்களில் உள்ளவர்களும் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் அப்பொழுது பார்த்துதான் எங்கள் அலுவலகத்தில் உள்ள எல்லோரும் பெங்களூர் டூர் செல்வதாக இருந்தோம். ச்சே., எல்லாரும் பெங்களுர் போகும்போது நம்ம மட்டும் சென்னைக்குப் போகணுமேன்னு 'உம்'ன்னு இருந்தேன். எங்கள் நிறுவன உரிமையாளர் கூறினார்., " எங்களோட வந்திட்டு அப்படியே சென்னைக்குப் போயி மீட்டிங் அட்டன் பண்ணிட்டு வா!". அப்பாடா!ன்னு எங்க மக்களோட பெங்களுருக்கு போயிட்டு., இரண்டு நாள் கழிச்சு எல்லாரும் இஞ்சி தின்ன நம்ம தாத்தா மாதிரி முகத்த வச்சிகிட்டு கிளம்ப...(எல்லாரும் அடுத்த நாள்ல இருந்து ஆபீஸ் போகனுமில்ல?) நானும் என்னுடன் சென்னை வரும் அலுவலகத் தோழியும், எல்லாருக்கும் மகிழ்ச்சியான முகத்தோட டாட்டா சொல்லிட்டு, அல்சூரில் உள்ள ஒரு நண்பர் வீட்டில் தங்கினோம்.
அன்று இரவு KPNனில் நெல்லூர், சித்தூர் வழியாக ஆந்திராவையும் 'டச்' பண்ணி ( சரி.. சரி... இளவஞ்சி, ராகவன் போன்றவர்கள் கிண்டல் செய்யாதீர்கள்!., அப்படித்தான் சென்னைக்கு வர முடியும்!) சென்னைக்கு பயணமானோம். வெள்ளிக் கிழமையாதலால் சனி, ஞாயிறு இரண்டு நாட்கள்., சென்னையிலிருக்கும் நம்ம வா..... கூட்டங்களை சந்திக்கணும்., யார் தலையில 'லன்ஞ்' செலவக் கட்டணும்னு வேடிக்கையா நினைச்சு சிரிச்சுக்கிட்டே போனேன்... அங்க ஒரு ஏழரை எனக்காக கைகொட்டி சிரிச்சு காத்துகிட்டு இருக்கிறது தெரியாம....
பூந்த மல்லி ஹை வேல இருக்கிறது அலுவலகம்., எப்பவும்... நாங்க தங்குறது எங்க தெரியுமா? போரூர்ல.... (அந்த மாதிரி அலும்பெல்லாம்... இனி ஜென்மத்துக்கும் பண்ண முடியாது...). மீட்டிங்ன்னா.... யாராவது ஒருத்தர் பேசுவாரு., எல்லாரும் உக்கார்ந்து கேட்டுட்டு... எழுந்திருச்சு வந்திரலாம்னு நினைச்சுகிட்டு போனேன். போனனா?... உள்ள போனவுடன் திருச்சி....ன்னு இழுத்தவுடனே. சரி...இங்க உக்காருங்கன்னு வரவேற்பெல்லாம் பலமாத்தான் இருந்துது. அப்புறம் கூப்பிட்டு அனுப்பினாரு நம்ம ரீஜினல் மேனேஜர்., என் முன் ஒரு பில்லக் காமிச்சு இது என்ன?ன்னு கேட்டார். நாங்க இந்த நிறுவனத்தின் franchise நிறுவனம்தான் என்றாலும்., எங்களிடம் பயிற்சிக்காக வருபவர்கள் கட்டணத்தைப் பார்த்து மிரண்டு., பின்னங்கால் பிடரியில் பட ஓடுகிறார்கள் என்பதால் (லோக்கலா உள்ள) எங்கள் கம்பெனியில் சேர்த்துக் கொள்வோம்... கொஞ்சம் கூடக் குறைய வகுப்புகள் எடுத்து... எங்கள் நிறுவனத்தின் பெயரிலேயே பில்., சர்டிபிகேட் எல்லாம் தந்திருவோம். அதாவது நம்மிடம் கணணி பயிற்சிக்காக வருபவர்களை வெளியில் (வேறு நிறுவனத்திற்கு) விட்டுவிடக்கூடாது என்பதாலும்.(திருச்சில... டீக்கடைய விட கணணி பயிற்சி நிறுவனங்கள் அதிகம். என்னத்துக்குத்தான் ஆரம்பிப்பாங்களோ?...) franchise நிறுவனத்து பயிற்சிக் கட்டணங்கள் மிக அதிகம் என்பதாலும் அப்படிச் செய்தோம். அப்படி எங்களிடம் படித்த ஒரு புத்திசாலி ., நீட்டா நாங்க குடுத்த லோக்கல் சென்டர் பில்ல இங்க அனுப்பி வச்சு.... விளாண்டு இருக்கு. மூச்சு நின்னு போச்சு எனக்கு... பேசாம பார்த்துகிட்டு இருந்தேன். Are you a manager?., you must be ashamed...… you know this is a breach of our agreement...… and how dare you allow this….... அவர் பாட்டுக்கு பேசிக் கொண்டே போனார்... இதில் கொடுமை என்னன்னா அந்த பில்லை நான் தரவில்லை எனக்கு முன்னால இருந்த மானேஜர் தந்திருக்கிறார். இருந்தாலும் என்னால் ஒன்றும் பேச முடியவில்லை... பேசவும் கூடாதல்லவா?., சமாளித்துக் கொண்டு "இது ஏன் நடக்கிறதென்று பாருங்கள். உங்கள் கட்டணம் மிக அதிகம்., திருச்சி போன்ற சிறு நகரங்களில் வசிக்கும் மாணவனுக்கு கூடுதலானது., வேலை உத்திரவாதத்துடன் நடக்கும் கோர்ஸ் கூட இதை விட கட்டணம் குறைவுதான். அதே போல் நீங்கள் ஒழுங்காக நோட்ஸ் அனுப்புவதில்லை. முடித்தவர்களுக்கு உடனே சான்றிதழ் அளிப்பதில்லை. என நானும் என் பங்கிற்கு குறைகளை அடுக்கிவிட்டு... வந்துவிட்டேன்...
பிறகுதான் கவனித்தேன்., நான் சொன்ன அனைத்திலும் உண்மையிருப்பதை. எங்கோ பூனாவிலும், மும்பையிலும் அமர்ந்து கொண்டு கோர்ஸ் செட் பண்ணுகிறார்கள். நாம் எப்படி திருச்சியில் பிசினஸ் பண்ண வேண்டுமென்று அங்கிருந்து அறிவுருத்துகிறார்கள். ஒரு விளம்பரம் கூட அங்கிருந்து வர வேண்டும் (கொடுமை... எத்தனை சதுர அடி ஹோர்டிங் வைக்க வேண்டும் என்று கூட சில சமயம் வரும்). ஒரு அதிகாரி நம்ம சென்டருக்கு விசிட் பண்ணுகிறார் என்றால்... அவருக்கு டிக்கெட்டிலிருந்து... ஹோட்டல் ரூம் வரை நாங்கள் புக் பண்ண வேண்டி வரும். (சில பேர் நம்ம இடத்திலிருந்து வட நாட்டிலிருக்கும் அல்லது ஆந்திரா, கேரளாவில் இருக்கும் அவரது சொந்தங்களுக்கு எஸ்.டி.டி பண்ணி பேசுவர்). உள்ளுரில் எங்கு செல்ல வேண்டுமென்றாலும் 'கார்' கொடுக்க வேண்டும் இப்படி பல இம்சைகள். சரி இதெல்லாம் செய்து, நாம் என்ன பிஸினஸ் பண்ணி இருக்கிறோம் என்று பார்த்தால் ஒன்றுமில்லை.
அடுத்து ஆரம்பித்தேன் நம்ம இன்னிங்ஸ., அவர்கள் கொடுத்த விளம்பர யுத்திகளைத் தூக்கி குப்பையில் போட்டுவிட்டு., நிறுவன விளம்பரத்துடன் கூடிய பாக்கெட் டைரி அடித்து அத்தனை காலேஜ்க்கும் வினியோகித்தோம். வெறும் 1000 ரூ. செலவழித்து., 5000 ரூ செலவழித்து ஹோர்டிங் வைத்ததை விட அதிக மாணவர்களைப் பெற்றுத் தந்தது. ஹோர்டிங்ஸ் பதிலா துணி பேனர் கட்டி விட்டோம். ஒரே ஒரு இடத்தில் (இந்த இடத்துக்கு நாய் படாத பாடு படணும்) வைக்கும் ஹோர்டிங்கை.. விட 10 இடத்தில் கட்டி வைத்த இந்த துணி பேனர் நிறைய ஆட்களை அள்ளி வந்தது. நோட்டிஸ் அடித்து நாளிதழ்களில் வைத்தோம். அவர்கள் 'செட்' செய்த கோர்ஸை கண்மூடித் தனமாக கற்பிக்காமல்., ஒவ்வொரு நிறுவனங்களுக்கு ஏற்றார் போல் மாற்றினோம்... அதாவது வங்கி ஊழியர்களுக்கு அவர்களது வேலையுடன் சம்பந்தப் பட்ட மாதிரி... இப்படி... ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் சென்று உதாரணம் இரயில்வே., இராணுவ முகாம், துப்பாக்கித் தொழிசாலை போன்று... அங்கு என்ன செய்கிறார்கள் என்று பார்த்து., அதற்கேற்றார் போல் கோர்ஸ் செட் பண்ணி., டெமோ.. அது ..இது என்று படங்காட்டினோம். கல்லூரிகளில் வளாகத் தேர்வு(கேம்பஸ் இன்டர்வியூ) வைத்தோம் (வேலை கொடுக்கிறோமோ இல்லையோ இது நல்ல ஒரு விளம்பர உத்தி., யாரும் திட்ட வராதீர்கள்., நாங்கள் வேலையும் கொடுத்தோம்). எங்களுடைய விளம்பர உத்திகளை அந்த நிறுவனத்திற்கு அனுப்பச் செய்தோம்., (காங்கிரஸ் கட்சி மாதிரி இருக்கமா இருக்காதிங்க... சுய ஆட்சி குடுங்கய்யான்னு சொல்லத்தான்). இதெல்லாத்தையும் விட நம்ம கிட்ட படிக்கிற புண்ணியவான்களுக்கு மண்டல அலுவலகம் மற்றும் முதன்மை அலுவலக முவகரி தெரியாமப் பார்த்துக்கிட்டோம். இப்ப வலை பரவலாயிருச்சு.... பாவம் எத்தன பேர் எதிர்காலத்துல இதே பதிவப் போடுவாங்களோ?....

Thursday, November 03, 2005

அரசு ஊழியர்கள் - பகுதி - 4.

ஊர் துறையூர்., காலம் - சாந்தா ஷீலா நாயர் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த காலம். இடம் - பஞ்சாயத்து யூனியன் அலுவலகம். அவர்- 5 வேளை தவறாமல் தொழுகை செய்யும் ஒரு இஸ்லாமிய சகோதரர். அந்த பஞ்சாயத்து யூனியனின் ஆணையர். அந்த நாள் - மாவட்ட வருவாய் (ரெவின்யூ) அலுவலகத்தின் கணக்கு வழக்குகள் பார்க்கும் சடங்கு (ஜமாபந்தி) அங்குள்ள இடப் பற்றாக்குறையால் பஞ்சாயத்து யூனியனில் நடந்து கொண்டிருந்தது. எனவே பஞ்சாயத்து யூனியன் ஊழியர்கள் மற்றும் ரெவின்யூ ஊழியர்களையும் சேர்த்து ஜே ஜே என்று இருக்கின்றது அலுவலகம்.

அலுகத்தின் முன்புறம் திடீரென்று சர.. சர வென சில கார்கள் வந்து நிற்க்கின்றன. அதிலிருந்து இறங்குகிறார் அவ்வூர் எம்.எல்.ஏ. விடு, விடுவென ஆணையரின் அறைக்குச் சென்றார் சில பல அவரது கைத்தடிகளுடன். ஒரு டெண்டர் விசயமாக பலத்த வாக்குவாதம் நடந்தது. அரசாணையை மீறி செய்யமாட்டேன் என ஆணையரும்., எம்.எல்.ஏ சொல்கிறேன் செய்ய வேண்டுமென எம்.எல்.ஏவும். வாக்குவாதம் முற்றி எம்.எல்.ஏ ஆணையரின் மீது அடிக்கப் பாய்ந்து அவரது உடையைப் பற்றி வெளியே இழுத்து வந்தார். அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த அனைவரும் அதிர்ச்சியுடன் பார்த்து கொண்டிருந்தனர். பின்பு சுதாரித்து., ஒரு எம்.எல்.ஏ எப்படி எங்கள் ஆணையர் மீது கைவைக்கலாம்? என அலுவலகத்தை பூட்டிவிட்டு வெளியே வந்து வேலை நிறுத்தம் செய்தனர். பாதிக்கப் பட்டவர் நேராக திருச்சி கலைக்டர் அலுவலகம் வந்து., தனக்கு நேர்ந்த அவமானத்தால் இனி அந்த அலுவலகத்துக்கு செல்ல முடியாதென்றும்., தனக்கு விடுப்பளிக்குமாறும் கேட்டுக் கொண்டார். ஆணையரின் நேர்மைக்கு ஒரு சான்றை மட்டும் கூறுகிறேன். ஊழியர் சேமிப்பு பணத்திற்கு (PF) வரும் வட்டியைக் கூட வாங்கிக் கொள்ளாதவர். அவருடைய சேமிப்பிற்கு அரசு தரும் வட்டியைக் கூட வாங்கிக் கொள்ள மறுக்கும் நேர்மையாளர்.

அப்போதே சிலர் இதைப் பற்றி காவல் துறையிடம் புகார் செய்யலாம் என கூறியுள்ளனர். ஆனால் இவரோ நான் ஆண்டவனிடம் முறையிட்டு விட்டேன். வேறு எங்கும் முறையிட்டுப் பயனில்லை என்று கூறி அமைதிப் படுத்தி விட்டார்.

ஆனால் மாவட்ட ஆட்சித்தலைவர் இதைப் பற்றிய விசாரணைக்கு உத்தரவிட்டு, நடந்த விசாரணையில் இதைப் பற்றி காவல்துறையில் புகார் உள்ளதா என கேட்கப் பட்டது. இவர் ஆண்டவனிடம் முறையிட்டேன் என்று சொல்ல அனைவரும் நகைத்துவிட்டு., எம்.எல்.ஏ வை அழைத்து இருவரும் சமசரசமாகப் போகும்படி அறிவுருத்தி இருக்கிறார்கள்.

ஆனால் இதே காலத்தில் அந்த எம்.எல்.ஏ மீது மற்றுமொரு வழக்கு நடந்தது. அதாவது அவர் தான் மலைவாழ் இனத்தைச் சேர்ந்தவர் என பொய்யாக பிறப்புச் சான்றிதழ் வாங்கி, (மலை வாழ் மக்களுக்கான தொகுதியில்) எம்.எல்.ஏ ஆனார் என வழக்கு. வழக்கு நிறுபிக்கப் பட்டு அந்த எம்.எல்.ஏ அவரது பதவியை இழந்தார்.

*******************

எங்கள் காலனியில் வசித்த, அப்துல் ஜப்பார் என்பவர் வருடா வருடம் தீபாவளிக்கு, அவருடைய வீட்டில் பலகாரங்கள் செய்ய வைத்து, விழி இழந்தோர் பள்ளிக்கும்., திருச்சி, மத்திய சிறைச்சாலை கைதிகளுக்கும் அளிப்பார். சிறையில் அவர் கொண்டு செல்லும் உணவுப் பண்டங்களை பரிசோதித்து முடிக்கும் வரை அங்கிருந்து, காவலர்கள் " சரி எல்லோருக்கும் தருகிறோம்" என்று சொன்னவுடன்தான் வீடு திரும்புவார்.


அனைவருக்கும் எனது இனிய ரமலான் நல்வாழ்த்துக்கள். ரமலான் அன்று நீங்கள் செய்யும் பிரியாணியின் மணம் போல்., எட்டுத்திக்கிலும் உங்கள் புகழ் பரவ வேண்டுகிறேன்.