Friday, October 28, 2005

அரசு ஊழியர்கள் - பகுதி - 3.

அந்தநாள்., விடிந்தால் தீபாவளி. நான் எடுக்கும் தீபாவளி புத்தாடைகளை ரசித்து, ரசித்து முதல் நாள் வரை பார்த்துக் கொண்டிருப்பேன் (தோழிகளை அழைத்து காட்டி., அதுங்க வயித்தெருச்சலைக் கொட்டி. என்னா சந்தோசமான பொழுதுகள்?). தீபாவளிக்கு முதல் நாள் மாலை ஒரு சந்தேகம் வரும். இத விட அந்தப் புள்ள(தங்கை) எடுத்தது நன்றாக இருக்கில்ல?., இப்படி ஒரு எண்ணம் வந்தா அம்புட்டுத்தான்... அப்புறம் அதை நியாயப் படுத்தியே பல எண்ணங்கள் வரும். நம்ம ட்ரஸ்ஸ எல்லாரும் பார்த்திட்டாங்க., இதை மாத்திட்டம்னா நாளைக்கு வேறு போட்டு ஷாக் குடுக்கலாம். சரி... இது என்னா இதுக்குபோயி தீவீர சிந்தனை வேண்டிக் கிடக்கு?., குடுன்னா குடுத்திட்டுப் போவுது?. மொதுவாக என் தங்கை அருகில் சென்று "இங்க பாரு., உனக்கு உன் டிரஸ் கலர்., டிஸைன் பிடிக்கலைன்னா என்னோடத எடுத்துக்க என்ன?" பட்டுன்னு ஒரு ஊசி வெடியக் கொழுத்திப் போடுவேன். இந்த ஊசி வெடியிலேயே அங்கிருந்து டி.ஆர்.ராஜகுமாரிய பார்க்கும் கண்ணாம்பா பார்வை ஒன்று பறந்து வரும். "ம்... எல்லாம் எனக்கு பிடிச்சுருக்கு......" ஒரு இழுவை இழுக்கும்போது " எனக்கு அதுதான் பிடிச்சுருக்கு., நீ இத எடுத்துக்க" லெஷ்மி வெடிய எறிவேன். "ம் ... பிடிக்கலைன்னா... கடைல போயி எடுத்துக்க...." "நீ போய் எடுத்துக்க" சண்டை இப்படியே போய் எங்க அப்பா கிட்டப் போகும் பிரச்சனை., அவர் ஒரு அருமையான தீர்ப்பு சொல்லுவார் என் தங்கையைப் பார்த்து "அது (நம்மளத்தான்!) சொன்னாக் கேட்கிற ஆளாடா?., உனக்கு எது போட்டாலும் நல்லாருக்கும் செல்லம். அதை நீ போட்டுக்க" என்று கூறிவிட்டு., அவள் நகர்ந்ததும்., என்னைப் பார்த்து "ம்... தப்புடா!" என்பார். "எங்களுக்கு தப்புன்னு தெரியாதாக்கும்னு " நினைச்சுகிட்டே ஒரு ஹி! ஹி!!. இப்படி நம்ம தீபாவளி அடாவடி வெற்றித் தீபாவளியா இருக்கும்.
அன்று இரவும் ஏதோ வாக்குவாதம் நடந்து கொண்டிருக்க., வெளியில் காவலர் விசில் ஊதும் சத்தம் கேட்டது., நான் முதலில்., சின்னப் பசங்க விளையாடிட்டு இருக்காங்கன்னு நினைச்சுட்டு இருக்கும் போது ஒரு எண்ணம் விடிஞ்சா தீபாவளி., பட்டாச, கிட்டாச வெடிக்காம., இது என்ன?ன்னு நினைச்சுக்கிட்டே வெளிய வந்து பார்த்தா உண்மையிலேயே போலீஸ் பட்டாளம்தான். எங்க ஏரியா மிக அமைதியான ஏரியா. எதுக்கு வந்திருக்காங்கன்னு பார்த்திட்டு இருக்கும் போதே ரெண்டு பேர் எங்க வீட்ட நேக்கி வந்தாங்க. எங்க பக்கத்து வீட்டுல., ஒரு குடும்பம் வாடகைக்கு இருந்தார்கள். நம்ம வீட்டுலயே சத்திரம் மாதிரி ஆளுக இருக்கறதுனால பக்கத்து வீட்டயெல்லாம் கவனிச்சதே இல்ல. ஆனா., அந்த வீட்டுல சமீபத்தில் ஒரு திருமணம் நடந்தது தெரியும். வந்த காவலர்கள் கேட்டார்கள் "பாப்பா... உங்க வீட்டுல ஏதாவது திருடு போயிருக்கா?"., "இல்லங்க., என்ன ஆச்சு?"., விதயம் இதுதான் அந்த வீட்டில் மணமாகி வந்த மாப்பிள்ளை., எங்கையாவது ரோட்டுல அனாமத்தா கிடக்கிற, அல்லது யார் வீட்டுலயாவது பயன்படுத்தாம இராத்திரில நிக்கிற ஹீரோ ஹோண்டா., யமாஹா போன்ற வாகனங்களை பத்திரமா அவர் வீட்டுல கொண்டு வந்து வச்சுக்குவாராம். இதுல ஒரு ஆச்சரியம் என்னன்னா., எங்க வீட்டுக்கும் அவங்க வீட்டுக்கும் இடையில் இருக்கும் சந்தில்தான் என் தம்பி எப்போதும் அவனுடைய யமஹாவை வைத்திருப்பான். அவரைப் பிடிக்க வந்த பட்டாளம் அவருடைய மனைவியின் குடும்பத்தை கேள்வியால் துளைத்துக் கொண்டிருந்தார்கள். அந்தப் புது மணப்பெண் அழுத அழுகை மனதை என்னவோ செய்தது. ஆனால் விதயம் தெரிந்து மாப்பிள்ளை எஸ்கேப். அவரைப் பிடிக்க வந்த காவலர்கள்., அந்தக் காவலர் கூட்டத்திலேயே ஒல்லியாக, நிற்க சத்தில்லாத நிலையில் இருந்த இரு கவலர்களை பார்த்து "வந்தா விட்றாதிங்கய்யா!" என்று கூறிவிட்டு கலைந்து சென்றார்கள்.
அந்த இரு காவலர்களும் இரவு 7.30 மணியிலிருந்து 10 மணி வரை சாலையிலேயே நின்று கொண்டிருந்தார்கள். வானம் வேறு தூறிக்கொண்டிருந்தது. எங்கோ சென்று விட்டு வந்த என் அப்பாவிடம் எல்லாவற்றையும் விளக்கினோம்., அவர் இரண்டு நாற்காலி மற்றும் டீ அவர்களுக்கு தரச் சொன்னார். நள்ளிரவு 1.30 மணிவரை அவர்கள் இருந்ததைப் பார்த்தோம். பின்பு படுக்கச் சென்று விட்டோம். காலை நாற்காலிகள் எங்கள் வீட்டின் முன் இருந்தது எப்போது சென்றார்கள் என்பது தெரியவில்லை. அவர்களுடைய அந்தத் தீபாவளி எப்படி இருந்திருக்கும்? காவலர்களுக்கு குடும்பம்., குழைந்தைகள் இருக்குமல்லவா., அவர்கள் மனநிலை எப்படியிருந்திருக்கும்?.
ஊடகங்களில் அதிகம் தாக்கப்படுபவர்கள்., கேலிக்குள்ளாக்கப் படுபவர்கள் காவலர்களே., ஒரு அரசியல்வாதி ரோட்டில் பவனி வர 2, 3 மணிநேரம் இவர்கள் வெயிலில் காயவும், மழையில் நனையவும் வேண்டியிருக்கிறது. அரசியல் கொலைகளில் பலியான முகம் தெரியாத காவலர்கள் எத்தனை பேர்?., அரசியல்வாதிகளின் பாதுகாப்பு என்ற பெயரில் இவர்கள் சந்திக்கும் சிக்கல்கள்..., எல்லாவற்றுக்கும் மேலாக குற்றவளிக்களுக்கும் பாதுகாப்பு பணிபுரிய வேண்டிய நிலை.
அடாவடிகள் காவல்துறையில் அதிகம்தான். இல்லையென்று சொல்லவில்லை., ஆனால் அவர்கள் செய்கின்ற பணிகளை தியாக மனப்பான்மையுடன் நாம் பார்க்கின்றோமா?. நம்மை அவர்களிடத்தில் பொருத்திப் பார்க்கிறோமா?., ஒரு முறை எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் கும்பகோணம் சென்று இரவில் திரும்பிக் கொண்டிருந்தோம்., எங்க சித்தப்பா கரை ஓட்டிக் கொண்டு வந்தார். திடீரென்று வழிமறித்த ஒரு காவலர் "யோவ்... நிறுத்துய்யா...!., எங்க போயிட்டு வாறிங்க?., ஓராமா நிறுத்து..." என்று மரியாதை கிலோ என்ன விலை?ங்கிற தோரணையில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் அடைந்த கோபத்திற்கு அளவேயில்லை. ஆனால் அந்தக் காவலன் பட்ட காயங்களே வார்த்தைகளாக வெளிவந்ததை நான் உணர்ந்தேன். காவல் துறை நம் நண்பன். ஆனால் ஒரு காவலனுக்கு திருமணம் செய்ய பெண் கிடைக்காது. அவர்களை குற்றவாளிகளைவிட கொடுமையானவர்களாகப் பார்ப்பதே சமூக எதார்த்தம்.
அப்பா... தொடரையும் எழுதியாச்சு., அதோட நம்ம தீபாவளி பத்தியும் சொல்லியாச்சு.

அனைவருக்கும் மனம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள். அமைதி தீபம் என்றும் உங்கள் அனைவரது மனதிலும் ஒளிவீச வேண்டுகிறேன்.

4 comments:

துளசி கோபால் said...

மரம்,

சாதாரணக்காவலர்கள் கொஞ்சம் பாவம்தான்.

ஹேப்பி தீபாவளி.

Priya said...

மரம். எப்படி படிக்கத்தவறினேன்னு தெரியலை. எப்பவும் முகப்புப் பக்கத்தில இல்லைன்னானும் தமிழ்க்குடும்பம்னு தட்டிட்டு வந்து படிப்பேன்.

நீங்க சொல்றது சுடும் உண்மை. திருடனுக்குப் பொண்ணு குடுக்க யோசிக்கிறாப்புலதான் காவலர்களுக்கும் பொண்ணு குடுக்க யோசிக்கிறாங்க.

ஒண்ணு சொல்லியே ஆகணும், உங்க தீபாவளி அடாவடி பத்திய முதல் பத்தி அட்டகாசம். பாவங்க உங்க தங்கச்சி! ;-)

அப்டிப்போடு... said...

என் திருமணத்திற்கு சுற்றங்கள் பரிசளித்த அனைத்துப் புடவைகளையும் தற்போது உடுத்திக் களிப்பது அம்மணிதான். நம்மள ப்ளைட் ஏற்றி அனுப்பிவிட்டுட்டு கொண்டாடுறாங்க!

யாத்திரீகன் said...

இதுக்கு பொதுவா காவலர்களை மட்டும் குற்றம் சொல்லி பயன் இல்லை..

நம்ம வளர்ப்பு அப்படி,

இப்போ பொதுவா இந்த நாட்டை எடுத்துக்கொங்களேன்.. (ஹைய்யோ எதுக்கெடுத்தாலும் அயல்நாட்டோட ஒப்பிடுறேன்னு நினைக்க வேணாம்)

சிறு குழந்தைகள் முதற்கொண்டு,எந்த சின்ன விஷயமானாலும் நன்றி, மன்னிக்கவும்னு சொல்லி வளர்ராங்க, காரணம் பெற்றோர்களும் அப்படி நடந்துகுறாங்க, இதுவே அவுங்க வாழ்க்கை முறையிலும் படிந்து விடுகின்றது...

நாமலும் இப்படி எதாவது முயற்சி பண்ணனும்...