Tuesday, October 11, 2005

அரசு ஊழியர்கள் - பகுதி - 2.

அப்பா அரசு ஊழியர் சங்கத்தில் மாநில பொருளாளராகவும்., திருச்சி மாவட்டத் தலைவராகவும் இருந்த சமயம்., அவரை நாங்கள் பார்ப்பதே அரிதாக இருக்கும். இரவில் நாங்கள் தூங்கிய பிறகு வீட்டிற்கு வந்து, எழும் முன் சென்று விடுவார். வீட்டில் இருக்கும் சனி, ஞாயிறுகளிலும் வீட்டில் அவரைப் பார்க்கக் கூடும் கூட்டத்தால்... அருகில் செல்லவே முடியாது. என் 'அப்பா' எனக்கொரு அற்புதம். ஒரு சாதரண கிரமத்தில்.. (ம்கூம்.. குக்கிராமம்) பிறந்து., தன் முயற்சியில் படித்து. (எங்க கூட்டம் படிப்பை ஒரு விதயமாகவே மதிக்காத கூட்டம்., அட., எழுதப் படிக்கத் தெரிஞ்சாப் போதுமப்பா!.,) ஒரு நிலைக்கு வந்தார். திருச்சியில் பெயர் சொல்லும் அதிகாரியாக இருந்தார். என் திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவரைப் பார்க்க அப்பாவுடன் சென்றபோது அவர் "இவருக்கு பெண்ணாய் பிறக்க... நீ..கொடுத்து வைத்திருக்க வேண்டுமம்மா..." என்றார். இது போன்ற வாழ்த்துக்களும்., நல்ல சில மனிதர்களின் உள்ளங்களுமே அப்பா உண்மையாய் ஈட்டியது.
  • **********************
தன்னிறைவு பெற்ற வாழ்க்கை வாழும் ஒரு அரசு அலுவளர்., நேர்மையாக இருப்பதை பார்த்து ஆச்சர்யப் படலாம்., அதிசயப் பட ஒன்றுமில்லை. ஆனால் ஏழ்மை நிலையில் உள்ள ஒரு அலுவலக உதவியாளர் (பியூன்) ஒருவர் அப்படியிருந்தார். அவர் பெயர் சந்தானம். திருச்சியிலிருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் உள்ள ஒரு ஊர். அந்த ஊர் பஞ்சாயத்து யூனியன் அலுவளகத்திற்கு எப்போது போனாலும் சந்தானத்தைப் பார்க்கலாம். சந்தானத்திற்கு வீடே அந்த அலுவளகம்தான். மிகுந்த சுய மரியாதை உள்ளவர்.

யூனியன் ஆபிஸ் முன்புறம் ஒரு ஆதரவற்ற மூதாட்டி ஒருவர் வசித்து வந்தார். தான் வாங்கும் சொற்ப வருமானத்தில்., ஆதரவற்ற அவருக்கு உதவி செய்து வந்தார் சந்தானம். அம்மூதாட்டி இறந்தவுடன்... அவருடைய காரியங்களை செய்ததும் அவர்தான்.

சந்தானத்திற்கு மனைவி, மகன், மருமகள் கொண்ட சிறிய குடும்பம் உண்டு. அவருக்கு வயதாகி வருவதாலும், அவரது சீரிய பணியைக் கருத்தில் கொண்டும்., நல்லவர்கள் சிலர் அவரது மகனிற்கு ஓட்டுனர் வேலை போட்டுக் கொடுத்தனர். ஒரு முறை அரசு அதிகாரிகள் சிலர் திருப்பதூர் செல்ல... வண்டியோட்டிச் சென்ற சந்தானத்தின் ஒரே மகன் விபத்தில் மறைந்தார். லஞ்சம் வாங்காததால் குடும்பத்தில் குழப்பம், மகனின் பிரிவு, அவரது குடும்பத்தையும் சேர்த்து சுமக்கும்... எத்தனையோ சோகங்கள்... அத்தனையும் மறைத்தபடி "ஐயா... இதோ.. வர்றங்கய்யா!" என்று அதிகாரியின் அழைப்பு மணிக்கு ஓடும் சந்தானம்... எனக்கு வாழ்க்கையைப் போதித்த ஆசான்.

13 comments:

யாத்திரீகன் said...

இப்படிப்பட்டவர்களை தக்க விதத்தில் நாம் அடையாளப்படுத்தி கவுரவப்படுத்தாததால் தான் கையூட்டு வாங்காதவர்கள் அறிவிலிகள் என்ற தவறான எண்ணம் பரவுகின்றது..

கையூட்டு வாங்குபவர்களை சபிப்பவர்கள், அதில் ஒரு சதவிகிதமாவது இப்படிப்பட்டவர்களை பாராட்ட முன்வரவேண்டும்... அதுவே மாற்றத்திற்கு வழி வகுக்கும்..

நல்ல கருத்து...

அப்டிப்போடு... said...

நன்றி செந்தில்.

Priya said...
This comment has been removed by a blog administrator.
அப்டிப்போடு... said...

பிரியா., காவலர்கள் பற்றியும் எழுதுவேன். அடுத்தது அதுதான்.

யாத்திரீகன் said...

நல்ல பார்வை ப்ரியா,
ஆனால் சில தவறான தகவல்களும் உள்ளன.. , மற்ற நாடுகளைப்பற்றி தகவல் எனக்கு தெரியவில்லை, ஆனால் அமெரிக்காவில் காவலர்களுக்கு அதிகமான சம்பளம் கிடையாது..

ஆசிய நாடுகளில் இருந்து வரும் கணினி பொறியாளர்களுக்கு கிடைப்பதுதான், அமெரிக்காவில் மனித உழைப்புக்கு () கிடைக்கும் குறைந்த சம்பளம் ஆகும்..

அமெரிக்காவில், சம்பந்தப்பட்ட மற்ற எந்த சாதரண வேலையாயினும் அதற்கு மணிநேர சம்பளம் மிகவும் அதிகம்.. அது புல்வெட்டுவதாயினும், குழாய் சரிபடுத்துவதாயினும், கார் பழுதுபடுத்துவதாயினும் சரி.. மணி நேரத்துக்கு குறைந்தபட்ச சம்பளமே அதிகம்..

அவைகளோடு ஒப்பிடுகையில் இங்கே காவலர்களுக்கு குறைந்த சம்பளமே...

என்ன ஒரு அனுகூலம் () என்றால் இந்த நாட்டு பணத்துக்கு சக்தி அதிகம்.. ஆகவே இங்கே மிடில் கிளாஸ் வாழ்க்கையே நம் நாட்டு உயர் மிடில் கிளாஸ் () வாழ்க்கைக்கும் மேல்..

இங்கே காவல் துறையினரின் ஒவ்வொரு நடவடிக்கையும் ஓர் 911 எனப்படும் மத்திய அமைப்பு மூலம் கண்காணிக்கப்படுகின்றது, ஒவ்வொரு வாகனத்திலும் கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டு, அது மத்திய கண்காணிப்பு அலுவலகத்தில் கண்காணிக்கப்படுகின்றது, மக்களுக்கு சிறிது பொருப்புணர்வு உள்ளது..

எல்லாவற்றிலும் மேல்.. மக்கள்தொகை இங்கே குறைவு..

இங்கே காவலர்களின் செயல்பாட்டு முறை பற்றி தனியே வலைப்பூத்தொடரே பதியலாம்..

யாத்திரீகன் said...

மனித உழைப்புக்கு = MAN POWER

Priya said...

சரியாகச் சொன்னீர்கள் செந்தில். நான் அதிக ஊதியம் என்று சொன்னது ஒப்புமைப் படுத்தி மட்டுமே. நீங்கள் சொல்வது போல, ஒரு மென்பொருள் வல்லுநரை விட என் வீட்டுக் குழாய் சரிசெய்பவர் (plumber) அதிகமாக ஊதியம் பெறுகிறார். மனித உழைப்பு தேவைப் படுகிற எந்த வேலைக்கும் இங்கு ஊதியம் அதிகமாகவே உள்ளது - மக்கட்தொகை குறைவாக இருப்பதால். அதே சமயம் வேற்று நிறத்தவர்க்கான ஊதியம் குறைந்தே உள்ளது - (கழிவறைப் பணியாளர், உணவகங்களில் தட்டு கழுவுபவர் போன்ற வேலை செய்பவர்களுக்கு)

நேற்று msn.com இல் படித்த ஒரு கணக்கெடுப்பின் படி மிகவும் மதிப்பு மிக்க பணிகளாக மருத்துவர், செவிலியர் மற்றும் காவலர் பணிகள் குறிப்பிடப் பட்டுள்ளன.

அது போன்ற மதிப்பு நமது நாட்டில் இருக்கிறதா இந்தப் பணிகளுக்கு? இல்லை, ஏனெனில் கண்காணிப்பு இல்லை அல்லது கண்காணிப்பவரும் கையூட்டுப் பெறுகிறார். கையூட்டு பெறும் காரணம் என்ன என்று பார்க்கையில் விலைவாசியும் பணவீக்கமும் முதலில் நிற்கின்றன.
அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் உள்ள அநேக கீழ் நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்க்கை நமது நாட்டின் நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்க்கையை விட மேம்பட்டதாகவே உள்ளது. இவர்களது வறுமையைப் பற்றிப் பேசப் போனால் தனிப் பதிவே போடவேண்டியிருக்கும்.

இங்கு காவலர்களின் வண்டியில் கண்காணிப்புக் கருவி இருப்பினும் அவர்களது மேற்பார்வையாளர் கையூட்டுப் பெறாதவராக இருக்கும் வரை மட்டுமே பணிச் சீர்மை சாத்தியம்.

அமெரிக்காவின் காவல்துறை ஊழல்களை பற்றிக் கூறவும் எவ்வளவோ விடயங்கள் உள்ளன.
ஆனால், சதவீதப் படி பார்க்கையில் நமது காவல்துறை மீதான இந்தக் குற்றச்சாட்டு ஒரு சீழ் பிடித்த புண்ணாகவே உள்ளது.

மரம், உங்களுடைய அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

வீ. எம் said...

very good posting appidipodu

அப்டிப்போடு... said...

தகவல்களுக்கு நன்றி செந்தில், பிரியா. வீடு மாற்றம் செய்ததால் வலைத் தொடர்பு வர 1 வார காலமாயிற்று. அடுத்த பதிவை உடனே எழுதுகிறேன்.
நன்றி வீ.எம்.

வசந்தன்(Vasanthan) said...

Thodarnthu eluthunkal.

துளசி கோபால் said...

மரம்,

மிக நல்ல பதிவு. இப்படி இருக்கும் ஆட்களை நாம கவுரவிக்கணும்.

வீடு மாறி செட்டில் ஆயாச்சா?

வாழ்த்துக்கள் புது வீடு போனதுக்கு.

Priya said...

Good to see you back Maram. Congrats on moving to the new place.

ENNAR said...

தாங்கள் கூறுவது திருவெறும்பூர் என நினைக்கிறேன் சரியா? ஆனால் ஓ ஏ சந்தானத்தை எனக்கு தெரியவில்லை