Tuesday, September 27, 2005

பிறர் மனம் புகா....

தங்கர், குஷ்பு, கற்பு இதெல்லாம் பத்தி நம்ம கருத்து சொல்றதுக்கு என்னா இருக்கு?., அப்புறம் ஏன் இந்தப் பதிவுன்னு கேட்கிறிங்களா?., எனக்கு குஷ்பு சொன்னதவிட கடந்த 3 நாட்களாக நம்ம வலைப்பதிவு நண்பர்கள், தோழிகள் எழுதுவதுதான் பெருத்த அதிர்ச்சியாய் இருக்கிறது. பலர் குஷ்புவுக்கு ஆதரவாய் எழுதியிருந்தார்கள். தங்கர் பிரச்சனையில் குஷ்புவின் அதீத கொந்தளிப்பு... இப்படிப்பட்ட அரசியலில் முடிந்திருக்கின்றது. இதைப் பற்றிய கருத்தென்று ஒரு மண்ணும் எனக்குக் கிடையாது. ஆனால் குஷ்பு கூறியிருப்பதை மெய்ப்பிக்கும் விதம் பல சகோதரர்கள் 'கற்பென்ற' ஒன்றில்லை என எழுதியிருக்கிறீர்கள். கற்பை நான் கண்ணில் கண்டதில்லை கடவுளைப் போல... உங்களில் எத்தனை பேர் நீங்கள் கூறியதன் பொருள் புரிந்து உண்மையாக எழுதியிருக்கிறீர்கள்?. உங்கள் வாழ்க்கையென்று வரும் போது எத்தனை பேர் 'கற்பென்பதை' மனதால் ஒதுக்குவீர்கள்?.

பேருந்தில் ஏறிவிட்டாலே போய்விடுகிறது... காலத்தின் வளர்ச்சி... முற்போக்கு எண்ணம்...கண்ணகி., மாதவி... எல்லாம் சரிதான். நமது சமுகத்தில் சிறிய குழைந்தைக்குகூட வன்முறை நிகழ்கின்றது. எங்கில்லை அத்துமீறல்கள்? அச்சங்களில் ஆரம்பித்து... ஆண்டவன் மடாலயத்தில் கூட நடக்கின்றது. ஒரு பெண்ணை முடக்க குற்றமுள்ள ஆண்கள் கையிலெடுப்பது 'கற்பென்ற' ஒரு கல். இதை எறிந்தால் போதும் சுருண்டு விழாத பெண்ணே இல்லை. அதற்காக?. இதை போலியாக ஏன் பொதுமைப் படுத்துகிறீர்கள்?.

சென்னை 'டிஸ்கோ'களில் ஆடும் பெண்கள் என்ன அனைத்துப் பெண்களுக்குமான அடையாளமா?., குஷ்பு சொன்னதை ஆமோதிப்பவர்கள்., தவறு செய்பவர்களை அங்கிகரீக்கின்றீர்கள். படித்த ஆண்கள் கற்பை பொருட்படுத்தவில்லை என்பது உண்மையாகிவிட்டால் கள்ளப் பேச்சில் உள்ளம் மயக்கும் கயவர்களுக்கு சாதகமல்லவா செய்கின்றீர்கள்?. ஏற்கனவே நீங்கள் எல்லாம் கூறியது போல் கற்பை போலியாகப் போர்த்திக் கொண்டிருக்கும் சமூகத்திற்கு குளிர் விட்டல்லவா போய்விடும்?. தாயைப் போற்றிக் கொண்டிருக்கும்... ஒருபுறம் மனைவியை சந்தேகப் பேய்பிடித்து அடித்து கொண்டிருக்கும்., சமூகம் என்றால் நாலும் இருக்கும். நல்லதை பொதுமைப் படுத்துங்கள். வறுமைக்குத் தன்னைக் கொடுக்கும் சகோதரி., விபத்தில் சிக்கிய சகோதரிகள் குற்றவுணர்வு கொள்வது அவசியம் அல்ல. கயவனை கணவன் எனக் கொண்டவர்கள் மீண்டு வர கைகொடுங்கள் வணங்குவேன். தெரிந்தே சிக்கலில் மாட்டிக்கொண்டு... பெண்ணுரிமை பேசுவதால்... பெண்ணுரிமை புண்ணுரிமையாகிவிட்டது... பார்லிமெண்டில் இட ஒதுக்கீடு கேட்டால் கூட பெண்களுக்கு பரிகாசமே பரிசாகக் கிடைக்கிறது.


'பிறர் மனம் புகா கற்பு வேண்டும்' என்று மிகுந்த ஆணாதிக்கச் சிந்தணையுடன் சொன்னார்கள். அந்தப் பய ஒன்னையப் பார்த்தாலே போச்... எப்படி மிரட்டி வச்சுருந்தாங்க நம்மள?., அத்தனையும் தாண்டி இன்று முற்போக்கு சிந்தணையுடன் எல்லாத் துறைகளிலும் முன்னேறி வரும் பெண்களைப் பார்க்கச் சிலிர்க்கிறது உள்ளம். ஆனால் 'கீரீன் கார்டு'க்காகத்தான் திருமணம்., அது கிடைத்தவுடன் டாட்டா காட்டும் நமது பெண்களைப் பார்க்கிறேன். ஒரு சீனப் பொண்ணு இங்க யுனிவர்சிட்டில படிக்குது., அப் பெண்ணின் கணவருக்கு இங்கு வர விசா கிடைக்கவில்லை., விவாகரத்து பண்ணிவிட்டு வேறு ஒருவருடன் குடும்பம் நடத்துகிறது. அந்த பையன் பண்ணிய தவறென்ன என்று மனோகரா கண்ணாம்பா மாதிரி 2 நாளு நம்மாளப் போட்டு பிராண்டிக்கிட்டு இருந்தேன். நம்ம ஊரு பொண்ணு ஒரு கரீபீயனிடம் மாட்டிக் கொண்டு கதறியது., பார்ப்பாருமில்லாமல், கேட்பாருமில்லாமல். 3 வது பிரேக்கப் பார்ட்டி வைத்த நம் பெண் (தெரியாதவர்களுக்காக : ஆண் நண்பர்களைப் பிரிவதற்கு வைக்கும் பார்ட்டி பிரேக்கப் பார்ட்டி). ஒரு ஸ்பானிஷ் பொண்ணு இந்தியனை நண்பனாகக் கொண்டு., அவனின் தாய் திருமணத்திற்கு சம்மதிக்காததால் பிரிந்து, அவளை விட 9 வயது முதிர்ந்த ஒருவரைத் (அவரும் ஸ்பானிஷ்) திருமணம் செய்து கொண்டாள்., வெள்ளிக்கிழமைகளில் அவர் இவளுக்கு தொலைபேசி 'ஐ லவ் யூ' என்றாலே அழுது விடுவாள். ஏனென்றால் 'பார்ட்டி' அன்று இரவு வீட்டிற்கு வராது என்று அர்த்தம். எத்தனை ஏமாற்றங்கள்? ' Why you do this to me?' காயப்பட்ட மனிதிலிருந்து வரும் கண்ணீர் கேள்விகள். 'you cheat me for 2 years?' அதிர்ந்த மனதில் இருந்து இயலாமையும், ஆத்திரமுமாய் இணைந்து வெளிப்படும்.

அப்பன் பணத்துல ஆங்கிலப் படம் பார்த்துவிட்டோ., வெளிநாட்டைச் சுற்றி விட்டோ...வெளிநாட்டு மோகத்தில் 'டிஸ்கோ'., திருமணத்திற்கு முன் உறவு... சர்வேய சர்ப்போர்ட் பண்ணி, தப்பில்ல... நோய் வராம பாத்துக்க.... என்னா தத்துவமுத்து?... (தவறை சுட்டிக்காட்டினால் பண்ணாதவங்களக் காட்டுங்கன்னு எகத்தாளம்...) இதை வருடங்கள் கழித்து அவரது வாரிசிடம் சொல்லுமா அவரது வாய்?.

21 comments:

முகமூடி said...

ஒரு வேளை உங்கள் கேள்விக்கு இங்கு பதில் இருந்தாலும் இருக்கலாம்

அப்டிப்போடு... said...

முகமூடி., படித்தேன், நடிகர் சங்கமே "சங்க உறுப்பினர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதை தவிருங்கள்" என்று கூறியிருக்கின்றது.

பத்மா அர்விந்த் said...

குஷ்புவின் செவ்வியை படிக்காத காரணத்தால் அதை பற்ரி பேச ஒன்றூம் இல்லை.
33% கேட்டால் பரிகாசம் செய்கிறார்கள். ஆனால் தொடர்ந்து கேட்டால் நாளாஇ நடக்கும். முதலில் படிக்க செல்வதே பெரும்பாடாய் இருந்தது. இப்போது ச்கஜமாகி விட்டது. அதுபோல தொடர்ந்து பேசுவதும் உழைப்பதும் மாற்றத்தை தரும்.
வன்புணார்வு ஒரு நிகழ்வே, உங்கள் மீது தவறு என்றூ நினைக்காதீர்கள் என்று தொடர்ந்து சொல்வதாலும் மறக்க பல மன பயிற்சிகள் தருவதாலும் வாழத்தொடங்கிய பெண்களும், வன்முறைக்கு எதிராக பெண்களை விடுவித்து அவர்கள் மகிழ்வுடன் வாழ வழி செய்ததும் உண்டு. இவர்கள் மனதில் கற்பு பறீபோய்விட்டது, இனி உயிர் வாழ்ந்து என்ன பயன் என்ற வெறுப்பு மேலோங்கி இருக்கிறது.
ஒரு வாரத்திற்கு மூன்றூ முறை மாலை என் உதவிகேட்டு அழைப்பு வரும். வன்முறாஇ, வன்புணார்வு என்று. இவர்கள் தைரியத்துடன் மறுவாஅழ்வு வாழவேண்டியது அவசியம். அதற்கு கற்பு போன்பின் தற்கொலை செய்து கொண்டவர்களை போற்றும் சமூகம் மாறாவேண்டும்.
இப்போது அப்படி நிலைமை இல்லாமல் இருக்கலாம். இதை பற்றீபேசி என்ன ஆகப்போகிறது என்றிருப்பாரேயானால் பாரதியும் பெரியாரும் பேச தொடங்கி இருக்க மாட்டார்கள்.சிந்தனை மாற, மாற அன்னையின் ஜாதகத்தை அனுப்பி இவள் ஒழுக்கமானவளா என்றூ சொல்லுங்கள் என்றூ கேட்கும் பிள்ளை கள் மாறக்கூடும்.

அப்டிப்போடு... said...

பத்மா.,
//இதை பற்றீபேசி என்ன ஆகப்போகிறது என்றிருப்பாரேயானால் பாரதியும் பெரியாரும் பேச தொடங்கி இருக்க மாட்டார்கள்//.

தங்கர்.. குஷ்பு விவகாரம் குறித்து நான் என்ன சொல்வது என்று குறிப்பிட்டேன்., இது குறி வைத்து செய்யப்படும் அரசியல். எனவே அதைப் பற்றி என்ன சொல்வது எனக் கேட்டேன். குஷ்புவின் கருத்து எதிர்க்கப் பட வேண்டியது. ஆனால் கற்பென்பதை போலி என்று சொல்லிக் கொண்டு... போலியாக., பெண்கள் மணத்திற்கு முன்னான வாழ்வை கனவாகக் கொள்ள உண்மையில் எத்தனை ஆண்களால் முடிகிறது?. சென்னைப் பொண்ணா 'அது அடிவாங்கியிருக்கும்' என்று சொன்ன ஐ.ஐ.டிக்களை அறிவேன் நான். சமுதாயத்தில் இருக்கும் போலித்தனங்களை புறம்தள்ள பலருக்கு முடிகின்றது இப்போது., முடியாதவர்களை மீட்டெடுக்க சமூக நலன் சார்ந்த அமைப்புகள் உதவுகின்றன. ஆனால் முற்போக்கு என்ற பெயரில் உள்ள போலித்தனங்களை ஆதாரிப்பது ஆபத்தானது.

குழலி / Kuzhali said...

//முற்போக்கு என்ற பெயரில்
//

http://kuzhali.blogspot.com/2005/09/blog-post_28.html

குழலி / Kuzhali said...

//முற்போக்கு என்ற பெயரில்
//

http://kuzhali.blogspot.com/2005/09/blog-post_28.html

பத்மா அர்விந்த் said...

முற்போக்கு என்ற போலித்தனம் தெரிந்தால் ஆதரிப்பது தவறு. ஆனால் போலியாக இருக்கலாம் என்று அனுமானிக்க நமக்கென்ன உரிமை இருக்கிறது. நீங்கள் சொன்ன ஆண்களை நான் சந்தித்தும் இருக்கிறேன். ஆனால் மாற்றம் வேண்டும் என்று சிந்திக்கும் சிலரை ஊக்குவித்தல் 1% உண்மையாயிருக்குமானாலும் சரியே. நான் பலவகை ஆண்களை, அமெரிக்காவந்தும், கை நிறைய சம்பாதிக்கும் மனைவியை கார் நிறுத்துமிடத்தில் அறையும் ஆண்களை சந்தித்திருக்கிறேன், சந்திக்கிறேன். மாற்றம் ஒரு நாள் வரும் அப்போது நம்பிக்கை வரும். மற்றபடி குழலி சொல்வதுபோல குஷ்பு தங்கர் விவகாரம் இன்னும் ஆழமாயிருந்திருக்க வேண்டும். நான் அறியேன்.

Thangamani said...

திராவிடக் கட்சிகளின் (பெரியாருடையதல்ல) பெண்ணிய நம்பிக்கைகளையே நீங்கள் பேசுவதாக அஞ்சுகிறேன்.

அப்டிப்போடு... said...

பத்மா.,
//சிலரை ஊக்குவித்தல் 1% உண்மையாயிருக்குமானாலும் சரியே//

கயவனை கணவன் எனக் கொண்டவர்கள் மீண்டு வர கைகொடுங்கள் வணங்குவேன். என்பதே என் கருத்தும். ஆனால் பொய்யை ஊக்குவிக்க முடியாது பத்மா.,

//ஆனால் போலியாக இருக்கலாம் என்று அனுமானிக்க நமக்கென்ன உரிமை இருக்கிறது//.

நான் அனுமானிக்கவில்லை., உறுதியாகவே கூறுகின்றேன். நடுத்தரவர்க்கத்தின் ஒழுக்க மதிப்பீடுகளை கண்டு வளர்ந்த எவரும்... மலான் சொன்னதுபோல் கூட்டத்தில் நின்று கல் எறியாமல் மனசாட்சிப் படி எழுதட்டும்.

உங்கள் வாழ்க்கையென்று வரும் போது எத்தனை பேர் 'கற்பென்பதை' மனதால் ஒதுக்குவீர்கள்?. எத்தனை வறுமையிலும் நன்கு படித்து எந்த ஒழுக்க மதிப்பீட்டையும் புறந்தள்ளாது இன்று சாதித்திருக்கும் நீங்கள் எழுதுகிறீர்கள் கற்பென்பதை அதிகாரத்தை காட்ட ஒரு ஆயுதம் என்று (வன்முறைக் குள்ளானவர்களிடம் கற்பைப் புனிதப் படுத்த வேண்டாம்., ஆனால் வரும் தலைமுறையினர் ஒழுக்கத்தை ஒதுக்க., சந்தர்ப்பவாதிகள் சாதகமாகக் கொள்ள நம் எழுத்து இடம் தர வேண்டாம். இப்படிக் கொள்வோமே., ஒழுக்க மதிப்பீடுகளே இல்லாத ஒரு சமுகத்தில் ஒரு பெண்ணிடம் வன்முறை புரிபவனை., குற்றம் செய்தான் என்று எவ்வாறு சொல்லுவீர்கள்) . உங்கள் பக்கத்துவீட்டுப் பெண் வன்முறைக்கு ஆளாகக் கூடாது என்று வீட்டை மாற்றாது இருந்த உங்கள் தாய் எந்த மதிப்பீட்டையும் தள்ளவில்லை (தள்ளவில்லை என்பதை மறுக்கவில்லை என்ற அர்த்ததில்தான் எழுதுகிறேன்). இங்கு கூட " Still iam a virgin" என்று பெருமையாக பெண்கள் சொல்வதைக் கேட்டதில்லையா? ஒழுக்கம் எல்லா வகையிலும் பெண்ணிற்கு பாதுகாப்பு. நோய் வராமல் பார்த்துக் கொள் என்று மேதாவித் தனமான அறிவுரையைவிட ஒழுக்கமாக இரு என்று கூறும் பழைய காலத்தை நான் மதிக்கிறேன். அதுவே என் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் தருகிறது., குற்றவுணர்வில் வீழாமல் என்னைத் தடுக்கின்றது. நான் கற்பையோ., ஒழுக்கத்தையோ புனிதமாக நினைக்கவில்லை. ஆனால் 'டிஸ்கோ' களிலோ., திருமணத்திற்கு முன்னான உறவினிலோதான் என் பெண்ணுரிமை இருக்கிறதென்றால் அப்படிப்பட்ட உரிமையை என்னளவில் புறக்கணிக்கவே விரும்புகிறேன். உங்கள் எழுத்தை மேற்கோள் காட்டவே இங்கு எடுத்திருக்கின்றேன் பத்மா.

தங்கமணி.,
//திராவிடக் கட்சிகளின் (பெரியாருடையதல்ல) பெண்ணிய நம்பிக்கைகளையே நீங்கள் பேசுவதாக //

பத்மா அவர்களுக்கு எழுதிய பதிலே உங்களுக்கும். படித்த ஆண்கள் கற்பை பொருட்படுத்தவில்லை என்பது உண்மையாகிவிட்டால் கள்ளப் பேச்சில் உள்ளம் மயக்கும் கயவர்களுக்கு சாதகமல்லவா செய்கின்றீர்கள்?. ஏற்கனவே நீங்கள் எல்லாம் கூறியது போல் கற்பை போலியாகப் போர்த்திக் கொண்டிருக்கும் சமூகத்திற்கு குளிர் விட்டல்லவா போய்விடும்?. கற்பு என்ற வார்த்தை எரிச்சல் படுத்தினால்., ஒழுக்க மதிப்பீடுகள் என்று வைத்துக் கொள்வோம். ஒரு பெரிய ஹோட்டல் முதலாளி., ஒரு சிறிய(வயதில் சொல்கிறேன்) பெண்ணிற்காக கொலை செய்யும் அளவிற்கு இறங்குகிறான்., ஒழுக்க மதிப்பீடுகளை போலியாகவெனினும் வைத்திருகின்ற ஒரு சமூகத்தில். ஒழுக்க மதிப்பீடுகளைக் குப்பை கூடையில் கொட்டிவிட்ட ஒரு சமூகத்தில் அவன் இருந்திருந்தால் என்ன செய்திருப்பான்?. 'டிஸ்கோ' களிலோ., திருமணத்திற்கு முன்னான உறவினிலோதான் ஒரு பெண்ணின் பெண்ணுரிமை இருக்கிறதா? இருக்கின்றதனில் அது பெண்ணின் பாதுகாப்பிற்கு உகந்ததா? இதற்கு பதில் சொல்லுங்கள் தங்கமணி. உங்கள் அச்சம் சரியா எனச் சொல்கிறேன்.

மதி கந்தசாமி (Mathy) said...

மரம்,

உங்களின் பதிவில் ஓரிரு விதயங்களில் ஒத்துப்போகிறேன்!

மற்றவற்றில் முக்கியமாக கற்பென்பதை பெண்ணுக்கு மட்டும் வைப்பதை என்னால் கடைசிவரைக்கும் ஒத்துக்கொள்ள முடியாது. நாளைக்கு விவரமாக எழுதுகிரேன்.

-மதி

மதி கந்தசாமி (Mathy) said...

and about kushboo's interview: could somebody please scan the whole interview and post it?

Thanks.

[am going to post this request in asmany blogs as I can. ie. blogs which have talked about kushboo's interview.

-Mathy

பத்மா அர்விந்த் said...

ஆனால் 'டிஸ்கோ' களிலோ., திருமணத்திற்கு முன்னான உறவினிலோதான் என் பெண்ணுரிமை இருக்கிறதென்றால் அப்படிப்பட்ட உரிமையை என்னளவில் புறக்கணிக்கவே விரும்புகிறேன் - எனக்கும் இவற்ரில் விருப்பமோ ஆர்வமோ இருந்ததில்லை. முடியுமானால் உங்களை சந்திக்க வேண்டும்.

அப்டிப்போடு... said...

மதி., கற்பென்பதை பொதுவில் வைக்க வேண்டும் என்பதே என் விருப்பமும். என் பார்வையில் பதிவு இருப்பதால், ஒரு சார்பாக இருப்பதாக தோன்றுகின்றது. நானும் இவற்றைப் பற்றி விரிவாக பதிவிடுவேன். குஷ்பு பேட்டியைப் பற்றி தெரிந்தபோது ஊருக்கு தொலைபேசி என் தங்கை படிக்கக் கேட்டேன். அப்புறம் நெய்வேலி வலைப்பூவில் பின்னூட்டம் அளித்த நண்பர் அன்பு,

"ஒரு பெண் திருமணம் ஆகும்போது அவள் கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணங்களில் இருந்து நமது சமூகம் விடுதலையாக வேண்டும்.

கல்வி பெற்ற எந்த ஆண் மகனும் தான் திருமணம் செய்யப் போகும் பெண் கன்னித் தன்மையோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டான். ஆனால், திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்ளும்போது கர்ப்பமாகாமலும் பால்வினை நோய்கள் பரவி விடாமலும் பெண் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்".


என்று கூறிருப்பதாக (இந்தியா-டுடேவைப் படித்துவிட்டு) எழுதியிருக்கிறார்.

*********
பத்மா!, உங்களைச் சந்திப்பது என் மகிழ்வு. சந்திப்போம்.

மதி கந்தசாமி (Mathy) said...

thanks maram. i've forwarded you the scanned articles(thanks to Stationbench Ramki). Do check your mailbox. have sent you someother mails too.

-Mathy

Thangamani said...

ஒழுக்கமதிப்பீடுகள் குற்றத்தைத் தடுப்பதாக நீங்கள் சொல்வது வியப்பளிக்கிறது. அப்படித்தான் சமூகமும், சட்டமும் சொன்னாலும் அது ஒரு ஆணாதிக்க, நிலவுடமைச்சமூகக் கருத்தாகும். சுதந்திரமும், மனித உரிமையுமே குற்றம் எதுவென்பதை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கவேண்டும்.

டிஸ்கோக்களுக்குப் போவதில் பெண்ணுரிமை இல்லை என்ற முடிவுக்கு எப்படி இத்தனை இலகுவாக வருகிறீர்கள்? இதை முடிவு செய்ய எந்த அளவுகோலை பயன்படுத்துகிறீர்கள்? இதைத்தான் நான் திராவிடக் கட்சிகளின் பெண்ணியக் கருதுகோள்கள் என்கிறேன். நீங்கள் பெரியாரை (இப்படி பெரியாரைச் சொல்வது விடுதலை பற்றிய கருத்துக்களை, பார்வையை மொத்தமாக குறிப்பிட ஒரு வசதி என்ற அளவில்) மறுக்கிறீர்களா? இல்லையா?

இது எனக்கு உங்கள் தளம் எது என்பதை அறிவதற்காக மட்டுமே! மற்றபடி பெரியாரை கட்டாயமாக ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியமாகச் சொல்லப்படுவது அல்ல.

அப்டிப்போடு... said...

தங்கமணி,

//ஒழுக்கமதிப்பீடுகள் குற்றத்தைத் தடுப்பதாக நீங்கள் சொல்வது வியப்பளிக்கிறது//. -

தடுக்கின்றது அல்ல குறைக்கின்றது.

//அப்படித்தான் சமூகமும், சட்டமும் சொன்னாலும் அது ஒரு ஆணாதிக்க, நிலவுடமைச்சமூகக் கருத்தாகும்.//

பெண்ணை அடிமைப் படுத்தும் முதன்மைக் கருத்தும் கூட., ஆனால் அது முடிந்தவரை எம்மை வேதனையில் இருந்து தப்பிவிக்கின்றது. குற்றவுணர்வில்லாமல் காக்கின்றது. நோயிலிருந்து தொலைவுப் படுத்துகிறது.

//சுதந்திரமும், மனித உரிமையுமே குற்றம் எதுவென்பதை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கவேண்டும்//.

அருமை! அப்படித்தான் இருக்கவேண்டும், பெண்சுதந்திரத்தையும், மனித உரிமையையிம் மதிக்கும் சமூகத்தில் நீங்கள் சொல்வது சரி. அது இல்லாத (அல்லது குறைந்திருக்கின்ற) நமது சமூகத்தில்?.

//டிஸ்கோக்களுக்குப் போவதில் பெண்ணுரிமை இல்லை என்ற முடிவுக்கு எப்படி இத்தனை இலகுவாக வருகிறீர்கள்?//

இதில் பெண்ணுரிமை இல்லை எனச் சொல்லவில்லை., இந்தப் பெண்ணுரிமையில் பெண்ணின் பாதுகாப்பு குறித்தே கேட்டேன். இதுதான் உண்மையான பெண்ணுரிமையா?. உலக அளவில் சாதனை படைக்கும் பெண் கூட., நடை, உடை என்று ஆயிரம் கேலிகளையும், வேலிகளையும் தாண்ட வேண்டியிருக்கின்றது இந்த நூற்றாண்டிலும். சாதிப்பிற்கு பின்னானது களிப்பு... இன்னும் சாதித்தலே நடக்கவில்லையென்கிறேன் நான். ஆடும் ஆட்டமும், போடும் உடையும்தான் பெண்ணுரிமை என்பதை நான் நம்பவில்லை. ஆனால், ஊடகங்கள் இதையே முன்னிறுத்துகின்றன.

//நீங்கள் பெரியாரை (இப்படி பெரியாரைச் சொல்வது விடுதலை பற்றிய கருத்துக்களை, பார்வையை மொத்தமாக குறிப்பிட ஒரு வசதி என்ற அளவில்) மறுக்கிறீர்களா? இல்லையா? //

பெரியார் பேசிய பெண்ணுரிமை, மாறுபட்டது ஏன் கொஞ்சம் முரட்டுத்தனமானது. அடிப்படை பெண்சுதந்திரமே மறுக்கப்பட்ட கால கட்டத்தில் எழுந்த சிந்தணைகள். அப்போது அத்தகைய காட்டம் தேவைப்பட்டது. குடும்ப அமைப்பில், ஒழுக்க மதிப்பீடுகள் தவிர்க்க முடியாதது. ஏன் பெரியார் கூட திருமணம் என்ற ஒன்றை மறுக்கவில்லை., அது ஆண்டான், அடிமை போல் இல்லாமல் இருவரும் சம உரிமை பெற்ற ஒப்பந்தமாக இருக்க வேண்டுமென்றார். ஆண், பெண் இருவருக்கும் ஒரே மாதிரி உடுத்தவும், தத்தமது வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுக்கவும் அறிவுருத்தினார். அவருடைய மைய நோக்கம் சமுதாய ஏற்றத் தாழ்வு ஒழித்தல். பெரியாருக்கு, தங்கமணி அவர்களுக்கு நிலவுடமையுடன், ஆதிக்க சக்திகளுடன், சாதிய அமைப்புகளுடன் (தொடர்புடையதுதான் என்றாலும்) விவாதிக்கப் படகூடிய விதயமாய் பெண்ணுரிமையும் (இருந்தது) இருக்கின்றது. என்னுடைய அச்சம் என்னவென்றால் இன்று பாதிக் கிணறு தாண்டிய நிலை. படிக்கின்றோம், வேலை பார்க்கின்றோம், எங்கள் கருத்துக்களை எழுத, பேச துணிகின்றோம், உலகலாவிய சாதனைகள் நிகழ்த்துகின்றோம். ஆனால் அடுப்படியில் காலம் முழுதும் கிடந்த எங்கள் பாட்டி, எந்த அச்சுருத்தலும் இல்லாமல், வன்முறைகளை எதிர்கொள்ளாமல் (பெரும்பான்மையாக) பாதுகாப்பாக இருந்தாள். அந்தப் பாதுகாப்பிற்கு நாங்கள் ஏங்குகின்றோம். பாதுகாப்பில்லாத உரிமையை, உரிமை என்று சொல்லவே கூசுகின்றது. எங்கள் சாதனைகளைப் பார்க்காமல் அதற்கு என்ன விலை கொடுத்திருப்போம் என்று சிந்திக்கும் கூட்டம்., பேசுகின்ற எதுவுமே வெற்று உரைநடை, சட்டம் செய்து சுவற்றில் மாட்டிவைக்கின்றோம். நெஞ்சங்களில் முடியாது.

Thangamani said...

நன்றி அப்படிப்போடு.

அப்டிப்போடு... said...

தங்கமணி., உங்கள் நன்றி சுடுகிறது. நான் பொதுவாக என் ஆதங்கத்தை எழுதினேன்.

Thangamani said...

அப்படிப்போடு, நான் உங்கள் கருத்தை படித்ததைக் குறிப்பிடவே நன்றி எனக்குறிப்பிட்டேன்.

உங்கள் கருத்துகளை முற்றிலும் புரிந்து கொள்ள முடிந்தது. பல கருத்துகள் உண்மைதான்.

//அடுப்படியில் காலம் முழுதும் கிடந்த எங்கள் பாட்டி, எந்த அச்சுருத்தலும் இல்லாமல், வன்முறைகளை எதிர்கொள்ளாமல் (பெரும்பான்மையாக) பாதுகாப்பாக இருந்தாள். அந்தப் பாதுகாப்பிற்கு நாங்கள் ஏங்குகின்றோம். பாதுகாப்பில்லாத உரிமையை, உரிமை என்று சொல்லவே கூசுகின்றது. எங்கள் சாதனைகளைப் பார்க்காமல் அதற்கு என்ன விலை கொடுத்திருப்போம் என்று சிந்திக்கும் கூட்டம்.//

இந்த இடத்தில் நான் ஒன்றைக் குறிப்பிடவிரும்புகிறேன். பாதுகாப்பும் (பிறரிடமிருந்து கிடைக்கும்) உரிமையும் முரண்கொள்ளக்கூடியது. சுதந்திரம் என்பதே உலகில் மிக ஆபத்தானது. ஏனெனில் அது தன்னந்தனியான இருப்பைக் கோருகிறது. ஒருவரது முழு இருப்பையும் ஒருவர் முற்று முழுதாக உணரும் போதே அவரது விடுதலை சாத்தியப்படுகிறது. விடுதலை என்பது ஒரு கட்டத்துக்குப்பிறகு சமூக செயல்பாடல்ல. இதை எப்படி எழுதுவது என்று எனக்கு இப்போது தெரியவில்லை. ஆனால் உங்களால் அதை நிச்சயம் ஒருநாள் புரிந்துகொள்ளமுடியும் என்று நம்புகிறேன். உங்கள் எழுத்துக்களில் வாழ்க்கையின் மீதான நம்பிக்கையும், வாழ்வை நகைச்சுவையாக அணுகும் தன்மையும், நம்பிக்கைகளைத் தாண்டிச்செல்ல தைரியமும், ஒரு வித நேர்மையும் இருப்பதைப் பார்க்கிறேன். அதுதான் முக்கியமானது. அது உங்களை உங்களிடத்தில் சேர்க்கும்.

நன்றி!

dondu(#4800161) said...

அப்பிடிப்போடு அவர்களே,
உடல் இச்சை என்பது இருபாலருக்கும் பொதுவானது. இதில் ஆணுக்கு பூரண சுதந்திரம், பெண்ணுக்கு பூரணக் கட்டுப்பாடு. இரண்டுக்கும் சமுதாயம் சார்ந்த பலக் காரணங்கள் உண்டு. இது சம்பந்தமாக நான் போட்டப் பதிவுகள் இதோ. பார்க்க:
1. http://dondu.blogspot.com/2005/10/1_11.html
2. http://dondu.blogspot.com/2005/10/2_14.html
3. http://dondu.blogspot.com/2005/10/3.html

"ஆனால் அடுப்படியில் காலம் முழுதும் கிடந்த எங்கள் பாட்டி, எந்த அச்சுருத்தலும் இல்லாமல், வன்முறைகளை எதிர்கொள்ளாமல் (பெரும்பான்மையாக) பாதுகாப்பாக இருந்தாள். அந்தப் பாதுகாப்பிற்கு நாங்கள் ஏங்குகின்றோம்."
உங்கள் பாட்டிகாலப் பெண்கள் பாதுகாப்புடன் வாழ்ந்ததைக்கூட பெரும்பான்மை என்ற டிஸ்க்ளைமருடனுடனேயே எழுத வேண்டியிருக்கிறது என்பதைப் பார்த்தீர்களா. 7 வயதுகூட நிரம்பாத சிறுவயது விதவைகள் பருவமடைதபின் வாழ்ந்த கொடூர வாழ்க்கையைப் பற்றி நீங்கள் அறிவீர்களா? இது வெறும் சிறை காக்கும் காப்புதானே? இப்போது நீங்கள் நோஸ்டால்ஜியாவுடன் பார்க்கும் அக்காலம் மறுபடியும் வரவே வேண்டாம்.

பெண்களின் காம உணர்ச்சி என்பது இயற்கையின் நியதி. இதில் என்ன தவறு இருக்க முடியும்? இதை மனு உணர்ந்துகொண்டதால்தானே சிறு வயது திருமணங்கள் புழக்கத்துக்கு வந்தன? பருவமடைந்த பெண்ணுக்கு அவள் தகப்பன் திருமணம் செய்து வைக்கவில்லையென்றால் அவளே தன் கணவனைத் தேடிக் கொள்ளலாம் என்று மனு கூறியதற்கும் இதுதான் முக்கியக் காரணம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அப்டிப்போடு... said...

டோண்டு அவர்களே.,

நான் பழைய காலம் மீண்டும் வர வேண்டும் எனச் சொல்லவில்லை. அத்தகைய (சிறை காக்கும் காப்பு) கூட வெளியே சுற்றித் திரியும் போது இல்லை. தங்க மெடல்., இந்தியாவிற்கு கவுரவம் வாங்கிக் கொடுத்தால் கூட உடையைப் பற்றிய விமர்சனத்தை தாங்க வேண்டியிருக்கின்றது. பெண்ணின் சுதந்திரம் என்பதை வெறும் பாலியலில் அடைத்து விடக் கூடாது. சித்தாளுக்கு 50 ரூ கொத்தனாருக்கு 150ரூ வில் தொடங்கி நடிகனுக்கு கோடி நடிகைக்கு லட்சமென உழைப்புச் சுரண்டல்., ஒரு ஆண் பேசினால் செய்தி, அதே பெண் பேசினால் கேலி என உரிமைச் சுரண்டல் என ஆயிரம் சுரண்டல்கள் இருக்க., உணர்வு சுரண்டல்களைப் பற்றியே பேசுவதும் அது பற்றிய கருத்துக்கள் மட்டுமே முக்கியத்துவம் பெருவதும் ஏன்?. மற்றுமொன்று நம்ம நாட்டைவிட ஜப்பானில் பெண்ணடிமைத் தனமும், பெண்ணிற்கு இழைக்கப்படும் அநீதிகளும் மிகவும் அதிகமாம். அங்கிருப்பவர்கள் யாராவது இதைப் பற்றி பதிவு செய்தால் முழுமையாகத் தெரிந்து கொள்ளலாம் (மேற்கூரிய செய்தி ஒரு ஜப்பான் பெண்மணி., (இங்கு இருப்பவர்) சொன்னதுதான்).