Monday, September 19, 2005

வந்து விட்டேன்

எங்கயோ தெலைஞ்சு போய்ட்டனோன்னு... கவலை கொண்டவர்களுக்கும்... மகிழ்கின்றவர்களுக்கும்.... இதோ.. வந்துவிட்டேன்.

இரண்டு வாரம் சிகாகோ போய்ட்டு வரலாம்னு குடும்பத்தோட கிளம்புனமா? (என்னா பெரிய குடும்பம்?., 2 முழு டிக்கட்டு 1 அரை டிக்கட்டு).... அது அங்க சுத்தி, இங்க சுத்தி மூணு வாரமாச்சா?...அப்புறம் வந்து... ஓய்வு ஒரு வாரம்.

இந்தப் பயணத்தில கணணிய தொடவே கூடாதுன்னு நம்மாளு அன்புக் கட்டளை (அதிகாரமாச் சொன்னா என்னாகும்னு அவருக்குத் தெரியும்...!). இருந்தாலும் கிடைத்த நேரத்தில் சில பதிவுகளை படிப்பதுடன் நிறுத்திக் கொண்டேன். அப்புறம் இந்த சிகாகோவுக்கும்... எனக்கும் முற்பிறவில என்ன ஏழரையோ தெரியல....இதுவரை மூன்று முறை அங்கு சென்று இருக்கிறேன். மூன்று முறையும்.. போகும்போது இருக்கும் மகிழ்ச்சி., திரும்பி வரும்போது இருக்காது.

இந்த முறை 'மகிழ்வுந்துல' (கார்ல) போலம்னு ஒரு நல்ல... முடிவ எடுத்தோம்... போகும்போது 'பிட்ஸ்பெர்க்' போய்ட்டு வெங்கிக்கு ஒரு 'வணக்கம்...(ஹாய்க்கு தமிழ்?) போட்டுட்டு, அப்பிடியே அங்க தங்கிட்டு, மறுநாள் கிளம்பி சிகாகோ... போகும்போது எல்லாம் நல்லத்தான் இருந்தது. அப்பிடியே சும்மா 90-95 ல கார ஓட்டிட்டு.... காத்துல போற மாதிரி போய்ட்டு இருந்தேன் (லோக்கல் ரோட்டுல மட்டும்தான் நம்மாளுகிட்ட கொடுக்கிறது... பாவம்... ஓய்வெடுக்கட்டும்னு). 'இண்டியானா' வந்ததும்.. சரி எதாச்சும் கொறிச்சுட்டுப் போகலாம்னு ஒரு 'ரெஸ்ட் ஏரியாவில' நிறுத்துனேன். சரியான ஏழரை., முன் பக்க 'டயர்' ஒண்ணு போச்.... அப்புறம் 'AAA' கூப்புட்டு., டயரை மாத்தி சிகாகோ போய்ச்சேர்ந்தோம். வேகத்தில 11/2 மணிநேரம் மிச்சமாச்சுன்னு நினைச்சா., இந்தப் பிரச்சனை 2 மணி நேரத்தை எடுத்துக்குச்சு.

அங்க போய் 'ஹாலிடே இன்ல' வாசம். போன உடனே 'டி.வி' யத் தட்டுனா.,குய்யோ., முறையோன்னு ஒரே சத்தம்., 'கத்திரீனா' ஆடுன ஆட்டத்துல சனங்க பரிதவிச்சதப் பார்த்து... மனது கனத்து விட்டது. 'விஸ்கான்சின்' சுத்தி பாக்கலாம்னு போட்ட திட்டமெல்லாம் கைவிட்டு, சிகாகோவ மட்டும் திரும்பத் திரும்பச் சுத்திட்டு திரும்பினோம்.

திரும்பும் போது முதல்ல மிதமான வேகத்துல வந்துட்டு இருந்தேன். அதே 'இண்டியானா' வந்திச்சு., கொஞ்சம் விரட்டலாமேன்னு நினைச்சு 87ல்ல (70 அனுமதிக்கப் பட்ட வேகம்) வந்தேன். இத்தனைக்கும் கண்ண நல்லா முழிச்சு நாலபுரமும் 'மாம்ஸ்' யாரும் இல்லைன்னு உறுதிப் படுத்திக்கிட்டுதான் மிதிச்சேன். நம்ம பின்னாடி அப்பிடியே ஜெக ஜோதியா வெளிச்சம். 'பிடிச்சுட்டாய்ங்கய்யா.... பிடிச்சுட்டாய்ங்கன்னு' நினைச்சுக்கிட்டே ஓரங்கட்டினேன். மாமா வந்தாரு., உள்ள ஒரு பார்வை பார்த்தாரு., உரிமத்தை ('லைசன்ஸ்')., வாங்கி பாசமா அவரு சட்டையில குத்திகிட்டு., 'Do you know the speed limit?' ந்னு கேட்டாரு., நம்ம ஊரா இருந்தா 'ம்.. 70 என்னா இப்ப?., யார சாய்ச்சோம்?னு எகிறி இருக்கலாம்., லைசன்ஸ்தான?., தாரளாமா வச்சுக்கங்க சார்' ந்னு இருக்கலாம். இல்லன்னா ஒரு '50' '100' ., இப்படி நினைச்சுக்கிட்டே '70'ன்னு சொன்னேன்., 'You drive...' அவர் முடிப்பதற்குள்ளேயே, '87' என்றேன்., என்னை ஆழமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, ' Careful.. ok...?' என்றார். நானும் தலைய ஆட்டினேன்., பின்பு அவரது வாகனத்துக்கு சென்று விட்டார். பக்கத்துல நம்மாளு அப்பிடியே மகிழ்ச்சித் தாண்டவமாட 'ரிலாக்ஸ்டா' ந்னு சொல்லிக்கிட்டு இருந்தாரு. (பின்ன அவர நா கொஞ்ச, நஞ்சமா வாரியிருக்கேன்?. இவ்வளவு காலம்., ஒரு பாயிண்ட் கூட இல்லன்னு பெருமை பேசியிருக்கிறேன்.. இந்த சம்பவம் நடக்கிறதுக்கு 1/2 மணி நேரம் முன்னாடி, ரொம்ப நேரமா ஓட்டுற 10 நிமிஷம் நின்னுட்டுப் போகலம்னு அவர் அக்கரைல சொன்னதுக்கு கூட சத்தாய்ப்பா.... "ம்..ஆமா... தம்முக்கு ஒரு சாக்குன்னு?" பாய்ஞ்சு... அமைதிப் படுத்தினேன். மகிழ்ச்சி இருக்காதா என்ன?. அப்புறம் காவலர் என்னுடைய உரிமத்துடன்., நான் கட்ட வேண்டிய தொகையை (fine) தெரியப்படுத்தும் படிவங்கள் சிலவற்றை என்னிடம் கொடுத்துவிட்டு சென்றார்., 130$., அக்டோபர் 12 ந்தேதிக்குள்ள கட்டணுமாம். 'பாயிண்ட்' இருந்தா 'காப்புத் தொகை' வேறு அதிகமாகிவிடும் என்று நினைக்கிறேன்.

இதுல என்னான்னா, போகும்போது 90ல யாரும் பிடிக்கவில்லை. எதுவாக இருந்தாலும், தவறு என்னுடையது. அதற்குப் பிறகு., நான் என்னா மிதிச்சாலும்., 65 த் தாண்டி கார் போக மறுத்தது. பட்டுத் திருந்துற ஆளுக நம்மெல்லாம் (எல்லாரையும் கூட்டு சேர்த்துக்கிட்டா தெம்பாத்தான் இருக்குது.). வந்தவுடன் எடுத்த முடிவு இனிமே கார்ல நெடும்பயணம் செல்வதில்லை என்பது. இவ்வளவு உறுதியாச் சொலறனே., எவ்வளவு காலத்துக்குன்னுதானே யோசிக்கிறிங்க...அனேகமா அடுத்த கோடை வரை.. அதுக்கப்புறம்தான் இதெல்லாம் மறந்து போயிருமே?. அதே ஊருக்கு மீண்டும் போனாலும் ஆச்சிரியப் படுவதற்கில்லை.

19 comments:

டிசே தமிழன் said...

வாருங்கள்...வாருங்கள்! பயணத்தின் இடைநடுவில் தடஙகள் இருந்தாலும், விடுமுறையை அமைதியாகக் கழித்திருப்பீர்கள் என்று நம்புகின்றேன். பத்தொன்பதாம் திகதி எழுதிய பதிவும் இரண்டு நாள் 'ஓய்வெடுத்துத்தான்' இன்றைக்கு வெளியே வருகின்றது போல :-).

Thangamani said...

லொள்ளு!!
நல்லா இருங்க!

அப்டிப்போடு... said...

நன்றி டிசே, தங்கமணி.

டிசே., 19 அன்று எழுத ஆரம்பித்து, இன்றுதான் பதிவிட முடிந்தது. ஒரு காலத்துல நான் உண்டு., என் குடை உண்டு., கைப்பை உண்டுன்னு அவ்வளவு சுதந்திரமா இருந்தேன். இப்ப.. பிக்கல், பிடுங்கல்... ம்... இன்னும் 2, 3 வருடங்கள் கழித்து சுதந்திரமாக பதிவுகளையும், விமர்சனங்களையும் அளிக்கும் இதே டிசேவைப் பார்க்க முடியுமா?. (பார்க்க வேண்டும் என்பதே., என் ஆசை). குடும்பம் என்பது சுகமா?., சுமையா என்று ஒரு புத்தகம் எழுத ஆசை. ஆமா., படத்துல இருக்கிற அந்தப் புள்ள யாரு?.

பத்மா அர்விந்த் said...

கட்டணத்தை தபாலில் அனுப்பாமல் நேராக நீதிமன்றம் சென்று நீதிபதியிடம் வருந்துகிறேன் என்று சொன்னால், கட்டணம் குறைக்கப்படும் என்பதோடு உரிமத்தில் பாயிண்ட்ஸ் வராது. நீதிமன்றம் செல்லும் போது நல்ல business suit போட்டு கொண்டு சென்றால் இன்னும் மரியாதை. நான் சில நீதிபதிகளிடம் பேசியதில் தெரிந்து கொண்டவை.(I have not got one, but if I do, I can get it waived!!)

துளசி கோபால் said...

வாங்க வாங்க. ஆளைக்காணோமேன்னு நினைச்சேன்.
( நினைச்சுரக்கூடாதே?.....)

நல்லவேளை இதுவரை நான் 'மாட்டிக்காமத் தப்பிச்சுட்டேன்'( டச் வுட்)தொடு மரம்னு சொன்னா நல்லா இருக்குமா? அப்புறம் அதுல உங்க பேருவெற வருது.

கோபால்தான் இதுவரை ஃபைனா அழுதிருக்கறது.

அப்டிப்போடு... said...

பத்மா!, முதன் முதலாக என் பதிவிற்கு வந்திருக்கிறீர்கள். தகவல்களுக்கு நன்றி.,

அப்டிப்போடு... said...

தூளசி அக்கா!., இவ்வளவு காலம் நானும் மாட்டுலயே?., அன்னைக்கு பார்த்து செப் 11., காரோட நம்பர் 'என் மகளின் பெயர்'. நம்மள எதிர்பார்த்துதான் காவலர் காத்துகிட்டு இருந்திருக்காரு போல ('வேற ரேஸ்'). அவங்காவங்க 100 ல போய்ட்டு இருந்தாங்க... முன்னாடி பலியாடா நான் போய்ட்டேன்., அதுதான் விஷயம். எப்பவுமே ஹை-வேயில் வேகமா போகனும்னா வேகமா போய்ட்டு இருக்கிறவங்களப் பிடிச்சு பின்னாடியே போய்கிட்டு இருக்கனும். ஏன்னா முதல்ல போறவங்கதான் அநேகமா மாட்டுவாங்க., அப்பிடியே மாட்டுற மாதிரி தெரிஞ்துன்னா., லேன் மாத்தி வேகத்தை குறைச்சுட்டம்னா சில பேர் விட்டுருவாங்க. பொதுவாகவே, வேகமாக சென்று கொண்டிருக்கும்போது, லேன் மாற்றி., மாற்றி ஓட்டுவதுதான் சிறந்த வழி, கண்டுபிடிக்க முடியாது. அடிக்கடி நியுஜெர்சிக்கு., அட்லாண்டிக் சிட்டிக்குன்னு ஓட்றதால அத்தன 'டகால்ட்டியும்' தெரியும்.... இதைவிட குறைவான வேகம்தான் எல்லாவற்றிலும் நல்லது என்பதும் தெரிகிறது. அது கார் நிக்கிறவரைதான். நகர்ந்தால் வேகம்தான்.

ஆனா உங்க ஊருல பிரதமரையே 'வேகத்திற்காக' தண்டிப்பார்கள்., என பதிவிட்டு இருக்கிறீர்கள். இப்படியே மாட்டாம ஓட்டுங்க!.

பத்மா அர்விந்த் said...

பொதுவாகவே மாற்று மாநில ரெகிஸ்ட்ரஷன் இருந்தால் பிடிபடுவது சுலபம். இதில் நிற, இன வேற்றுமை எல்லாம் கிடையாது. உண்மையில் எல்லா இனத்தவரைவிட அதிக பணம்/கப்பம் கட்டுவது காகேஸியன் அமெரிக்கர்கள். கலிபோர்னியா பக்கம் இந்த நிற பாதிப்பு நிறைய உண்டு. நீங்கள் அதை சொன்னால் ஒப்பு கொள்ளலாம். மற்றபடி வேகம் அதுவும் 90 மைல் தவறுதானே. என் நண்பர் ஒருவர் ஆப்பிரிக்க அமெரிக்கர். அவருடைய மனைவி காகேஸியன். யாராவது சாதாரணமாக கெள்வி கேட்டாலே கூட என் இனத்தை கேலி செய்கிறாயா எனக்கு வெள்ளை மனைவி இருக்க கூடாதா என்பார். தயவு செய்து அதை காரணம் காட்டாதீர்கள். பொதுவாகவே காவலர்கள் வேகத்தீற்காக நிறூத்துவதைவிட இவ்வளவு வேகம் எதனால் என்ற காரணத்தீற்காகத்தான் நிறுத்துகிறார்கள். சொல்லி கொடுப்பதே எல்லா வேகமாக செல்லும் வாகனத்திலும் 10 ற்கு 1 ஒரு கைதாவது மாட்டும் என்பதுதான். நான் அதிகமாக காவலர் பயிற்சிக்கெல்லாம் செல்வதால் இதன் நெளிவு சுளிவு தெரியும். மனிதமனமே முதலில் வேற்றுமையை நினைத்து அதை காரணம் காட்ட முயல்கிறது எல்லா ஊரிலும்.

குழலி / Kuzhali said...

வாங்க அப்படிபோடு, விடுமுறையை நன்றாக கழித்திருப்பீர்கள், மீண்டும் வந்ததில் மகிழ்ச்சி.

அப்டிப்போடு... said...

பத்மா., நான் குறுகிய கண்ணோட்டத்தில் சொல்லவில்லை.

//வேகம் அதுவும் 90 மைல் தவறுதானே //

தவறு என்று என் பதிவிலேயே சொல்லியிருக்கிறேனே?. ஆனால்
அன்று செப் 11., மற்றும் அவர் என் மகள் எட்டிப் பார்த்தாள் பெல்ட் நன்றாக போட்டிருக்கின்றீர்களா என்று கேட்டர்., பதிவுக்கு சம்மந்தமில்லை என்று நான் எழுதவில்லை. அந்த விதயத்தில் நானும் சரி., என் கணவரும் சரி., மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்போம். அவள் உயரத்திற்கு., அவள் பின்புற கண்ணாடி வழியாக எட்டிப்பார்ப்பது சாத்தியமில்லாதது., இதே போல் முன்பு ஒரு முறை நியுஹாம்ஷ்ஃபியர் செல்லும்போது எங்கள் நண்பர் ஒருவர் ஓட்டிக் கொண்டு வந்தார் கிட்டதிட்ட 120 மைல்(கிட்டத்தட்ட 20 வருடமாக கார் ஓட்டுகிறார்). வேகம் இருக்கும் என்று நினைக்கிறேன். இதேபோல் மாட்டினோம். ஆனால் அன்று பிடித்த காவலர்., அறிவுரை வழங்கிவிட்டு., 89 மைல்ஸ் என்று போட்டுக் கொடுத்து விட்டு சென்றார். அவர் இந்தியரல்ல. (அதற்காக் இவரும் அப்படி செய்ய வேண்டும் எனக் கூறவில்லை)., அன்று (செப் 11) எங்கு பார்த்தாலும் வித்தியாசம் தெரிந்தது உண்மை பத்மா. குறிப்பாக 'இண்டியானா' 'ஒகாயோ' தாண்டும்போது., 'ஃபிலடெல்ஃபியாவுல' இல்லை.

//மனிதமனமே முதலில் வேற்றுமையை நினைத்து அதை காரணம் காட்ட முயல்கிறது//

அக்காவலரின் மனித மனம் வேற்றுமையாக நினைத்திருக்காது என 100% நம்புகிறீர்களா?. ஓரு ஆப்பிரிக்கன் அமெரிக்கன் சொல்லும் 'ரேஸிசத்திற்கும்' ., நாம் சொல்வதற்கும் வேறுபாடு இல்லையா?., என்னிடம் எவ்வித 'காம்லெக்ஸூம் இல்லை பத்மா., நான் தவறு செய்தேன். அதை ஒப்புக்கொண்டு கட்டணம் செலுத்துவேன். இடையில் நான் உணர்ந்ததைப் பகிர்ந்து கொண்டேன் அவ்வளவே.

குழலி., நன்றி.!

கொழுவி said...

ம். வருக வருக.
உங்களுக்காக ஒரு பதிவேபோட்டிருந்தேன்.

வரும்போதே கலகத்தோட தான் வந்திருக்கிறியள்.

கொழுவி said...

ம். வருக வருக.
உங்களுக்காக ஒரு பதிவேபோட்டிருந்தேன்.

வரும்போதே கலகத்தோட தான் வந்திருக்கிறியள்.

அப்டிப்போடு... said...

அட கொழுவி., எங்களையெல்லாம் தேடியிருக்கிறீர்கள் நன்றி.

//மரம் (யாராவது தறித்துவிட்டார்களோ?)//

நம்மளத் தறிக்க முடியுமா?., அப்படியேயானாலும் நாங்க தறிக்கத் தறிக்க தழைப்போமில்ல?.

பத்மா அர்விந்த் said...

எல்லோரும் வேற்றுமையை நினைப்பது உண்டு. ஆனால் காவலர்கள் பெரும்பாலோர் அப்படி நினைப்பது இல்லை. சமீபத்தில் நியுஜெர்ஸியில் சுதந்திர விழாபோது தொலைபேசி கப்புகளில் அனுமதி இல்லாமல் கொடி கட்டிவிட்டு, கைது செய்தபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரேசிசம் என்றார்கள். ஆனால் எங்குமே அனுமதி கேட்டதற்கு தாக்கங்கள் இல்லை. கடைசியில் நீதிமன்றத்தில் குற்றம் என்று சொல்லி மன்னிப்பு கேட்டு கப்பம் கட்டினார்கள். இடையில் அந்த நேர்மையான காவலர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்கள். அது அவர்களின் பணி ரெக்காரடுகளில் செல்கிறது. இதுபோல நியுஜெர்ஸியில் நடக்கும் (இந்தியர் மூலமாக) ரேஸிச பழியையும் பாதிக்கபட்ட அமெரிக்கர்களையும் நான் அறிவேன். நீதிமன்ற தாக்கங்களையும் பார்த்திருக்கிறேன். ரேஸிஸம் எங்கே வேண்டுமானாலும் யார் ரூபத்திலும் வரக்கூடும்.இந்தியரிடமிருந்து அமெரிக்கருக்கு அண்ட் Viceversa.
சில சமயம் நீங்கள் டிக்கெட் வாங்காவிட்டாலும், எச்சரிக்கை செய்வதும் உங்கள் ரெகார்டுகளில் சேர்கிறது. முதல் முறை மன்னிப்பும் அடுத்த முறை குறவான மதிப்பீடும் வழங்கப்படும். குழந்தைகள் இருப்பின் நீண்ட நேரம் காத்திருத்தல் தவிர்க்கப்படும். விரிவாக ஒரு நாள் எழுதுகிறேன்.( உங்கள் பெயர் என்ன அப்படிப்போடு?)

Go.Ganesh said...

வாங்க வாங்க

Go.Ganesh said...

உங்க பேர வீ.எம் கூட காணவில்லை பட்டியலில் சேர்க்கலைங்க

டிசே தமிழன் said...

//ஒரு காலத்துல நான் உண்டு., என் குடை உண்டு., கைப்பை உண்டுன்னு அவ்வளவு சுதந்திரமா இருந்தேன். இப்ப.. பிக்கல், பிடுங்கல்... ம்... இன்னும் 2, 3 வருடங்கள் கழித்து சுதந்திரமாக பதிவுகளையும், விமர்சனங்களையும் அளிக்கும் இதே டிசேவைப் பார்க்க முடியுமா?. (பார்க்க வேண்டும் என்பதே., என் ஆசை). குடும்பம் என்பது சுகமா?., சுமையா என்று ஒரு புத்தகம் எழுத ஆசை.//
அது சரி, முந்தி கைப்பையும் குடையும் உங்கள் வசம் இருந்தது. இப்போது யாருக்கு எல்லாம் துரத்தி துரத்தி எறிகின்றீர்களோ யாருக்குத் தெரியும் :))).
....
நாய் வாலை நிமிர்த்த முடியுமா என்ன?? டிசே எப்பவும் இப்படி சோம்பாலாய்த்தான் இருப்பான், ஆனால் வருகின்ற புள்ளதான் பாவம். இதையெல்லாம் முன்னதாய் சொல்லியிருக்கக்கூடாதா என்று உங்களைப் போன்றவர்களை நோக்கித்தான், குடை, கைப்பை, ஆலவட்டம் எறியப்போகின்றா கவனம் :-).
//ஆமா., படத்துல இருக்கிற அந்தப் புள்ள யாரு?//
இந்தப் புள்ள என கனவுக்காட்டுக்குள்ள என்னைக் கைவிடமாட்டேன் என்று தினம் கையடிச்சு சத்தியம் செய்யும் மலையாளச் சேச்சி.

அப்டிப்போடு... said...

பத்மா., பெயரை மறைக்க ஒரு வார்த்தை., அது கொஞ்சம் 'நச்'ன்னு இருந்த நல்லாயிருக்கும்னு. அதென்ன 'நச்' ந்னு கேட்டுறாதிங்க.

நன்றி கோ.கணேஷ்., வீ.எம் ரொம்ப நாளா காணதவர்களை மறந்துவிட்டு, கொஞ்ச நாளா காணாம போனவங்களைத் தேடியிருக்கிறார். ஆனாலும் ஜூலை 26 ந் தேதி வெளிவந்த என் பதிவுக்கு., ஆகஸ்ட் 1 ஆந் தேதி பின்னுட்டமிட்டு நம்மை தேடியிருக்கிறார். ஆனால் நாந்தான் விடுமுறையால பார்க்கவில்லை. எல்லாரும் பாசமான புள்ளைங்கதான்.

அப்டிப்போடு... said...

டிசே., நான் துரத்தி எறிய கைப்பையெல்லாம் தேடுறது இல்ல இப்ப!, அதான் வசதியா கரண்டி., பூரிக் கட்டையெல்லாம் இருக்குதே?., உங்க ஆளு வந்தவுடனே ஒரு call லப் போட்டுறேன்., கவலைய விடுங்க!.

ஓ!., சேச்சியோ?., இந்தப் புள்ள 'பிசின்' மாதிரியில்ல உங்க எல்லார் மனசிலயும் ஒட்டியிருக்குது?